Skip to content

இரண்டு மனிதர்களும் இரண்டு வீடுகளும் (மத் 7:24-27)

Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran

The Two Men and the Two Houses (Matthew 7:24-27)

 

தன்னையே ஏமாற்றிக்கொள்ளுதலைக் குறித்த போதனை

தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் பேராபத்திற்கு இது இன்னொரு உதாரணம்: வேத புத்தகத்தில் திரும்பத்திரும்ப இதைக்குறித்த எச்சரிக்கைகள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். தன்னையறியாமல் கபடமாக செயல்படுபவர்களைக் குறித்து இதற்கு முந்தின தியானக் கட்டுரையில் படித்தோம். அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று உறுதியாக நம்பினார்கள். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளில்தான், “நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்ற தங்களைப்பற்றிய பயங்கரத் தீர்ப்பைக் கேட்பார்கள் என்று படித்தோம். இதேவிதமான பாடந்தான் இதுவும். ஆனால் இதில் சில புது அம்சங்கள் அடங்கியிருக்கிறது.

இதில் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் காட்சியை நன்றாக விளங்கிக்கொள்ள, இதற்குமுன் தொடர்ச்சியாகக் கூறப்பட்ட இரண்டு காட்சிகளையும் மனதில் கொண்டு, இந்தக் காட்சியை (உதாரணத்தை) இந்தத் தொடர்ச்சியின் மூன்றாவதாகக் கருதி தியானிப்பது:

(1)  வசனங்கள் 15-20 கள்ள தீர்க்கதரிசிகளைக் குறித்துப் படித்தோம். இதன் மூலம் வெளிப்பார்வையினால் வஞ்சிக்கப்படுதலைக் குறித்த எச்சரிப்பு விளக்கப்பட்டது. வெளித்தோற்றத்தில் கபடமில்லாது தோன்றினாலும் உண்மையில் அவர்கள் ஆட்டுத்தோலில் மறைந்திருக்கும் பட்சிக்கிற ஓநாய்கள் போன்றவர்கள் என்று படித்தோம். அதையும் தவிர இவர்களை வெளிப்பார்வையில் கண்டுபிடிக்க முடியாதென்றும் அவர்களை அவர்களுடைய கனியைக் கவனமாகக் கவனிப்பதின் மூலம் மட்டுந்தான் கண்டு பிடிக்க முடியும் என்றும் தெரிந்துகொண்டோம்.

(2)  இரண்டாவது காட்சியில் (வசனங்கள் 22, 23) “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று கூறுபவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்ந்துவிடலாம் என்று கருதுவது எவ்வளவு தவறு என்று விளங்கிக்கொண்டோம். நம்முடைய உற்சாகம், ஆர்வம், நடவடிக்கைகள் முதலியவைகளைக் கொண்டு மட்டும் ஆண்டவருடைய காரியத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நம்பிவிடுதல் எவ்வளவு ஆபத்தானது என்ற எச்சரிப்பை இந்த உதாரணத்தில் விளங்கிக்கொண்டோம்.

(3)  மூன்றாவதாக ஆண்டவர் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரும் ஆபத்து, நமக்கு அநேக ஆசீர்வாதங்களும் இரட்சிப்பும் கிடைப்பதற்கு, நமக்குள் இயற்கையாக என்ன இருக்கிறதோ அவைகளைக் கொண்டு மட்டும், அவைகளின் வாயிலாக அந்த ஆசீர்வாதங்களை அடைந்துவிட முயற்சிப்பதும் விரும்புவதுமேயாகும். இதில் கவனிக்க வேண்டியது, இந்த எச்சரிப்பு யாருக்கு உரியது? என்பது. இது மோட்சத்தின்மேலோ, அல்லது இரட்சிப்பைக் குறித்தோ எந்த வித விருப்பு, வெறுப்பு இல்லாதவர்களுக்கு எழுதப்படவில்லை. அதற்கு மாறாக இவைகளைக் குறித்த உபதேசங்களைக் கேட்பவர்களுக்கும், கேட்க ஆசைப்படுகிறவர்களுக்கும் பயன்படத்தக்கதாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு உண்மை கிறிஸ்தவனுக்கும் கிறிஸ்தவனாகத் தன்னை பாவித்துக் கொண்டிருக்கிறவனுக்கும் அல்லது ஒரு மறுபிறப்பின் அனுபவத்தை உண்மையாகப்  பெற்று தேவனுடைய பிள்ளையாய் ஜீவிக்கும் ஒருவனுக்கும் அவ்வித அனுபவங்கள் யாதும் இல்லாது அவ்வித அனுபவங்கள் அடைந்த மாதிரி பாவித்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குவதற்காக இந்த மூன்றாவது காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக,

இந்த இருதரப்பார்களுக்குமுரிய ஒற்றுமைகள்

இந்த இரண்டு வித மனிதரும் ஒரு வீடு கட்டி அதில் குடும்பத்தோடு வசதியாக ஜீவிக்க விரும்பியவர்கள். இவ்விஷயத்தில் இருவர் விருப்பமும் ஒன்றாய் இருந்தது; அவர்களுடைய திட்டமும் ஒன்றாய் இருந்தது; தவிர, அவர்கள் விருப்பப்படி ஒருவருக்கொருவர் அருகாமையிலேயே வீடு கட்டிக்கொண்டனர். இரு வீடுகளுமே ஒரே விதமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இரண்டு வீடுகளுக்கும் அஸ்திபாரத்தைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது. வெளிப்பார்வைக்கு இரண்டும் ஒன்றுபோல்தான் இருந்தது. அந்த வீடுகளை ஒரு இடத்திலிருந்து நின்று பார்த்தால் யாதொரு வித்தியாசமும் இல்லாமல் இருந்தது கவனிக்கத்தக்கது.

இவர்களுக்குள் இருந்த வேற்றுமைகள்

இதைக்குறித்து சொல்லுமிடத்து, முதலாவதாக கவனிக்க வேண்டியது, இவற்றின் வேற்றுமைகள் பார்வைக்கு வெளியரங்கமாயிராது. பொதுவாக யாரும் நினைப்பது, ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கும் ஒரு பேர் கிறிஸ்தவனுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்குமென்று. ஆனால் கர்த்தர் இங்கு கூற விரும்புவது அப்படி இல்லாமலும் இருக்கக்கூடும் என்ற கருத்து. தவிர, அவைகள் கண்டுபிடிக்க வெகு நுட்பமானதாகத்தான் (subtle) இருக்கும் என்கின்ற உண்மையை தெளிவாக விளங்கிக்கொள்ளாவிட்டால், இதில் அடங்கியுள்ள ஆழமான கருத்தை விளங்கிக்கொள்ளத் தவறிவிடுவோம். ஒவ்வொரு இடத்திலும் கர்த்தர் இந்த நுட்பமான ஆனால் வெகு முக்கியமான காரியத்தை வலியுறுத்திக்கொண்டே போகிறார். உதாரணமாக ஆட்டுத்தோலை போர்த்தி வரும் ஓநாய் போன்ற கள்ளப்போதகர்; இவர்களைக் கண்டுபிடிக்க சன்னமான, நுட்பமான பல சோதனைகள் தேவைப்படும். இவற்றை பகுத்தறிந்து, உபயோகித்து கண்டுபிடிக்க உலக ஞானம் போதாது. பரிசுத்த ஆவியின் உதவி தேவைப்படும். இந்த மூன்றாவது உதாரணத்தில் குறிப்பிட்டிருக்கும் இருவரின் வித்தியாசமான உண்மை நிலை இவர்கள் சந்திக்கவிருக்கும் ஒரு பயங்கர பிரச்சனையின்போதுதான் வெளிப்படுகிறது. ஆனால் அதை சரிப்படுத்திக்கொள்ள, அதினால் பாதிக்கப்பட்டவனுக்கு அவகாசம் இல்லாமல் போகிறது. அப்படி இருப்பதால்தான், ஆண்டவர் இந்த முக்கிய குறைபாட்டை (தவறை) சரிசெய்துகொள்ள முடியாத அழிவு வரும் முன்னரே கண்டு பிடித்து சரி செய்துகொள்ள வேண்டிய அவசியத்தை இந்த உதாரணத்தைக் கொண்டு நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். இதையும் விளங்கி செயல்பட நம் கண்களுக்கு கலிக்கம் (eyesalve) போடுவது அவசியம் [பரிசுத்தாவியின் உதவி]

லூக்கா சுவிசேஷம் 6:48ல் அந்த புத்தியுள்ள மனிதன், “ஆழமாய்த் தோண்டி அஸ்திபாரம் போட்டான்” என்றிருக்கிறது. ஆனால் புத்தியில்லாத மனிதன் அவ்வித சிரமம் எடுத்து, செய்ய வேண்டிய முக்கிய காரியமான அஸ்திபாரம் போடவில்லை.

புத்தியில்லாத மனிதனின் குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.

அவனுக்கு எதையும் ஆழ்ந்து நிதானமாகச் செய்யும் பழக்கமில்லை. எதையும் சீக்கிரமாய்ச் செய்துவிட வேண்டுமென்ற குணமுடையவன். அதிக சிரமப்படாமல் குறுக்கு வழியில் எதையும் செய்துவிட வேண்டுமென்ற மனப்பான்மை படைத்தவன். முறையாக செய்யும் வழி வகைகளை கேட்கவோ தெரிந்துகொள்ளவோ சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டான். ஒரு வீடு கட்டுவதைக் குறித்த விதிகளைக் குறித்து சிறிதும் கவலைப்படமாட்டான். ஒரு வீடு கட்டுவது என்பதில் எவ்வளவு முக்கிய காரியங்கள் கவனிக்க வேண்டியது என்பதும் அது ஒரு சாமானிய காரியமில்லை என்பதும் அவன் மனதில் தோன்றாது.

புத்தியுள்ள மனிதன், அவனோடு ஒப்பிடும்போது அதிக வித்தியாசமாய்க் காணப்படுகிறான். நீதிமொழிகளில், “பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்” 16:16 என்று எழுதியிருப்பதைப் படிக்கிறோம். பவுல் அப்போஸ்தலன் அஸ்திபாரத்தைக் குறித்து குறிப்பிடுகையில், “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுக் கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது” (1 கொரி 3:11) என்று எழுதியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒயிட் ஃபீல்ட் (White field)ம் வெஸ்லி (Wesley) முதலியோரும் மக்களை சபையில் அங்கத்தினராய் சேர்க்கையில் அதை மிக கவனத்தோடு செய்வார்களாம். அவ்விதமே ஸ்காட்லாந்து சர்ச்சும் (Church of Scotland). வேல்ஸ் நாட்டிலுள்ள பிரிஸ்பிடேரியன் சர்ச்சும் (Presbyterian Church) முதல் நூறு ஆண்டுகளில் அவ்விதமாக மிக கவனத்துடன் அங்கத்தினரை சேர்த்தார்கள் என்று கேள்விப்படுகிறோம்.

ஆனால் இக்காலங்களில் உண்மையான கிறிஸ்தவர்களும் போலி கிறிஸ்தவர்களும் சர்வ சாதாரணமாக சபையில் அங்கத்தினராய் இருப்பதைக் காண்கிறோம். கள்ளத் தீர்க்கதரிசிகளும் போலிக்கிறிஸ்தவர்களும் சபைக்கு வெளியில் இருப்பவர்களல்ல. அவர்கள் சபையிலேயே இருப்பவர்கள். சபை காரியங்களில் மும்முரமாக பங்கெடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தவிர இந்த பேர்க் கிறிஸ்தவர்கள், உண்மையான கிறிஸ்தவர்களைப் போலவே ஆவிக்குரிய காரியங்களில் ஆவலும் அக்கறையும் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களும் பாவ மன்னிப்பின் தேட்டமும் அவசியமும் உணர்ந்திருப்பார்கள். அவர்களும் எல்லா கூட்டங்களிலும் பங்கெடுப்பார்கள். தெய்வீக சமாதானத்தை விரும்புகிறவர்கள் மெய்யான கிறிஸ்தவர்கள் மட்டுந்தான் என்று நினைப்பது பெரும் தவறு. இவ்வித சமாதானத்தை நாடித்தான் இந்த பேர்க்கிறிஸ்த்வர்களும் சபை ஆராதனைக்கு வருவார்கள். ஆனால் என்ன பயன்? பிரசங்க சமயத்தில் வெளியே தெரியாமல் தூங்கிவிடுவார்கள். ஆனால் அந்த சபை கூடும் கட்டிடமும், அங்குள்ளவர்களோடு கூடியிருப்பதிலும் அவர்களுக்கு ஒரு அலாதி சமாதானம், ஒரு ஆறுதல். இன்னும் சொல்லப்போனால் அந்த ஆவிக்குரிய வல்லமை தங்களுக்கும் இருந்தால் நலமாயிருக்குமே என்றுகூட அவர்களுக்கு இருக்கும். அப்படித்தான் மாய வித்தைக்காரனான சீமோன் கூட மோட்சம் செல்ல உண்மையாகவே ஆசைப்பட்டான். சபைக்கு வெளியே இருப்பவர்களில் கூட பலருக்கு மோட்சம் செல்ல ஆவல் இருக்கும் என்பதைக்குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.

சபைக்கு வெளியே இருக்கும் ஒரு அஞ்ஞானிக்கே மோட்சம் செல்வது போன்ற ஆவிக்குரிய காரியங்களில் ஒரு வாஞ்சை இருக்குமானால் ஒரு சபைக்குள்ளாகவே இருந்துகொண்டிருக்கும் போலிக் கிறிஸ்தவனுக்கு (பேர்க்கிறிஸ்தவனுக்கு) இவைகளில் தேட்டமும் ஆர்வமும் இருப்பதில் ஆச்சரியப்பட முடியுமா? இந்த இரண்டு விதத்தினரிடையே பல ஒற்றுமைகள் இருக்கும் நிலையை மறந்துவிடக் கூடாது. அவர்களிடையே இருக்கும் விருப்பங்கள்கூட ஒன்றுபோல் இருக்கிறது. ஆகவேதான் இது மிகுந்த அதிர்ச்சி தரும் காரியமாக நமக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முந்தின உதாரணத்திலுங்கூட இன்னொரு விதத்தில் இதே விதமான அதிர்ச்சி தரும் நிலைமையை ஆண்டவர் காண்பிக்கிறார். அதாவது அந்த இரண்டாவது உதாரணத்தில் கூறப்பட்டிருக்கும் போலி விசுவாசி கடைசிவரை, தான் நியாயத்தீர்ப்பின்போது அடையவிருக்கும் நிர்ப்பந்தமான நிலையை சிறிதும் உணரவில்லையே! அதையும் தவிர, அவனை ஒரு போலி விசுவாசியென்று மற்ற அனேகரும் கூட நினைக்கவில்லையே; அவனும், நியாயத்தீர்ப்பின் நாள்வரை தன் நிலையை அறியாதிருந்திருக்கிறானே! ஆனாலும் அவன் ஒரு போலி கிறிஸ்தவன் என்று ஒரு நாளும் ஒருவராவது அவன் மரிப்பதற்குள் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடும் என்பதும் தவறுதலான எண்ணம். அது சுலபமாக வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவனின் சுயரூபத்தை திட்டமும் தெளிவுமாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஒரு அனுபவமுள்ள விசுவாசி, அவனுங்கூட சற்று கூர்ந்து கவனித்தால் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த அவசர மனநிலை (hasty mentality), எச்சரிப்புகளை சிறிதும் காதில் போட்டுக்கொள்ளாத தன்மை, வழி வகைகளைக் குறித்து சிறிதும் கவலைப்படாத குணம், தனக்குத் தெரிந்ததுபோதும், அது தன்னுடைய தேவைக்குப் போதுமானது என்ற முரட்டுத் துணிவுடன் செயல்பட ஆரம்பிப்பது முதலிய துர்அதிர்ஷ்டமான குணாதிசயங்களை உடையவனாய் இருத்தல் இப்படிப்பட்டவைகளை மனிதர்களிடையே பார்க்கலாம். இதைத்தான் அஸ்திபாரம் இல்லாமல் வீடு கட்டின புத்தியில்லாத மனிதனுடைய உதாரணத்தில் ஆண்டவர் அருமையாக எச்சரிக்கிறார்.

இதனுடைய சாராம்சத்தை கேள்வி ரூபமாக எடுத்துச் சொல்லக் கூடுமானால், இக்கேள்விகள் பின்வருமாறு:-

(1)  உன்னுடைய பிரதான ஆவல் என்ன? கிறிஸ்தவத்தில் உள்ள இரட்சிப்பு, ஆசீர்வாதங்கள், மற்றும் இவ்வாறான வசதிகள் முதலியவற்றை பெற்றுக்கொள்வதா அல்லது மிக உன்னதமானதும் ஆழமானதுமான ஆவிக்குரிய காரியங்களை பெற்றுக்கொள்வதா? உன் இருதயத்தின் ஆழத்தில், உன்னையே உண்மையாக தற்சோதனை செய்துகொண்டால், உன்னுடைய விருப்பங்கள் சரீரப் பிரகாரமான காரியங்களில் இருக்கிறதா அல்லது கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளுதல் அல்லது கிறிஸ்துவைப்போல் பரிசுத்தத்தில் அதிகமதிகமாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதுபோன்ற ஆவிக்குரிய காரியங்களில் இருக்கிறதா? கடவுளுக்கடுத்த (தெய்வீக) நீதியின் பேரில் பசியும், தாகமும், ஏக்கமும் உன்னில் இருக்கிறதா?

இரண்டு மனிதர்களும் இரண்டு வீடும் என்ற உதாரணத்தின் மூலம் கர்த்தர் அற்புதமான சத்தியத்தை சொல்லித்தருகிறார். “வருமுன் காப்போன்” என்ற சொல்லுக்கேற்ப கேடு வருமுன், முன் எச்சரிக்கையோடு ஆவிக்குரிய காரியங்களில் நடந்துகொண்டால், நியாயத்தீர்ப்பை சந்திக்க தேவன் தக்க பெலத்தை அருளுவார் என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.

____________________________________

மொழி பெயர்ப்பு விவரம்:
This article “The Two Men and the Two Houses (Matthew 7:24-27)” translated by Gnana Bhaktamitran includes excerpts from Chapter 27 of Vol 2 (pp 546-555). From: “Studies in the Sermon on the Mount” By Dr. D. Martyn Lloyd-Jones
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.

One Comment leave one →
  1. SHANMUGANATHAN permalink
    August 23, 2014 4:30 pm

    இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிரயோஜனமாகவும், என் நிலைமையை அறிந்து உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. மொழிபெயர்த்து வெளிட்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
    நாதன், மதுரை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: