Skip to content

உண்மைக்குப் புறம்பான சமாதானம் (மத்தேயு 7:21-23)

Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran

False Peace (Matthew 7:21-23)

இதில் கூறப்பட்டிருக்கும் வசனங்களையும் அதில் உள்ளடங்கிய கருத்துக்களையும் ஆராய்ந்து பார்த்தால், இதைவிட மனித உள்ளத்தை அசைக்கும்படியான கருத்துக்களை எந்த மனிதனும் கூறியதாக நமக்குத் தெரியவில்லை. மனிதன் மட்டுமில்லை தேவகுமாரனே கூறிய மாபெரும் கருத்துக்களில் இது ஒன்றாகத் தெரிகிறது. இது மாதிரி கருத்துக்களை ஒரு மனிதன் கூறியிருந்தானானால் உலகம் அவனை சும்மா விட்டிருக்காது. அவனை மிகவும் கண்டிக்கத்தக்கதான வகையில் விமரிசித்திருக்கும். ஆனால் இது ஒரு மனிதனுடைய கூற்றல்ல. தேவகுமாரனே கூறியதாகையால் வாயடைத்துப் போயிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதைக்குறித்து வெறுமனே ஆச்சரியமடைவதோடு நின்றுவிடாமல் இதைக்குறித்து மிக அதிகமான கவனம் செலுத்தவில்லையென்றால் மோசம் போய்விட நேரிடும்.

இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களின்பேரில் அடிக்கடி பிரசங்கங்கள் கேட்டிருக்கிறோமா? எனக்குத் தெரிந்தவரை இல்லையென்றுதான் சொல்லமுடியும். இதற்கு முக்கிய காரணம் போதிக்கிறவர்கள் பெரும்பாலும் தங்களைக் குற்றப்படுத்தாத வகையில் வசனங்களை பொறுக்கி எடுத்து பேச எத்தனிப்பதால்தான். இது ஆண்டவருடைய சித்தத்திற்கு முற்றிலும் விரோதமானது, ஏனெனில் அப்படி சில வசனங்களை விட்டுவிட்டு, சௌகரியப்படும் சில வசனங்களை மட்டும் பொறுக்கி எடுத்து பேச கடவுள் யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. இந்த முழு வேதாகமுமே கர்த்தருடைய வார்த்தை என்று வேதாகமுமே சாட்சி பகரும்போது எப்படி இந்த விதத்தில் சில வசனங்களை தேர்ந்தெடுக்கவும், நமக்கு ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத சில வசனங்களை விட்டுவிடவும், அல்லது அவற்றை விட்டுவிட ஏதாவது காரணங்களை உண்டுபண்ணிக்கொள்ளவும் கூடும் என்று சிந்தித்து பார்க்கவும்.

மேலே குறிக்கப்பட்ட வசனங்களிலுள்ள கருத்துக்கள் மிக உன்னதமானவைகள். இதன் முக்கியத்துவம் விளங்க வேண்டுமானால், இந்த உலகத்திற்கு நிச்சயமாக ஒரு முடிவு காலம் வரும் என்பதும், அச்சமயம் நாம் அனைவரும் தேவாதி தேவனின் நியாயத்தீர்ப்பை சந்தித்தாக வேண்டும் என்கின்ற இந்த இரு காரணங்களுக்காகத்தான் இந்த வசனங்களும் வேதாகமம் முழுவதுமே கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வசனங்களுக்கு முந்திய பத்தியில் கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டோம். இப்போது நாம் கவனிக்கப்போகும் இந்த வசனங்களிலும் எச்சரிப்பு என்ற காரியத்தை கர்த்தர் தொடருகிறார். முந்தின பகுதியில் கொடுக்கபட்ட எச்சரிப்பு போதாதென்று, இந்த பகுதியிலும் அதை தொடருவதென்றால் இவ்வித எச்சரிப்புகளின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை விளங்கிக்கொள்வது முக்கியம். இந்த பகுதியில் மட்டுமல்லாது, இதற்கு அடுத்தாற்போல் வரும் பகுதியிலும் இந்த எச்சரிப்பைத் தொடருகிறார் கர்த்தர். இதற்கு மற்றொரு காரணத்தையும் காணலாம்; அதாவது எவரும் இந்த எச்சரிப்பை சரியான பிரகாரம் விளங்கிக்கொள்ளத் தவறிவிடக்கூடாது என்ற அக்கறையினாலும் அல்லது இதைக்குறித்த தவறுதலான உபதேசத்தினாலே மோசம்போய்விடக் கூடாதே என்ற கரிசனத்தினாலும் இருக்கலாம்.

இதற்கு முன்பாக விளக்கப்பட்ட ஏமாறுதல் கள்ள தீர்க்கதரிசிகளால் ஏற்படுவதாகும். அவர்களை கண்டுபிடிப்பது லேசல்ல என்றும் பார்த்தோம். “அடுத்துக் கெடுப்பது” அல்லது “நய வஞ்சகம்” போன்ற பதங்களைத்தான் அதை விளக்க ஏற்றது, ஆனால் உலக காரியங்களில் அல்ல ஆவிக்குரிய காரியங்களில் என்று சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த தியானத்தில் கூறப்பட்டிருக்கும் எச்சரிப்பு வெளிப்படையாகவும் முந்தியதைவிட தெளிவாகவும் இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம், இதனால் ஏற்படக்கூடும் பயங்கர விளைவுகளை ஒளிவுமறைவில்லாமல் தெளிவுபடுத்துவதற்காக ஆண்டவர் கையாண்ட முறையாயிருக்கலாம்.

மற்றபடி, மலைப்பிரசங்கம் முழுவதிலுமே, ஆண்டவர், தியானத்திற்கான கருத்தை முதலில் கூறிவிட்டு அதன்பின்பு அதற்கான விளக்கங்களையும் உதாரணங்களையும் எடுத்துரைப்பதைப்போல் இந்த பாகத்திலும் அதே முறையை கையாளுகிறதைக் காணலாம். எடுத்ததுமே முதலாவது அவர் உறைப்பது “என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை; மாறாக, அங்குள்ள என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே அதில் பிரவேசிப்பான்.” இந்த கருத்தை கூறிவிட்டு அதன்பின் அதற்கான விளக்கங்களை, [உதாரணமாக “அந்நாட்களில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! . . . .”] ஆண்டவர் எடுத்துரைப்பதைக் காண்கிறோம்.

இந்த பாகத்தை போதிக்கையில் சிலர் செய்யும் பெருந்தவறு, 21வது வசனத்தை, அடுத்த இரண்டு வசனங்களிலுமிருந்து பிரித்து, அவற்றை தனித்து வியாக்யானம் செய்வது. மாறாக, 21ம் வசனத்தை 22, 23ம் வசனங்களோடு சேர்த்து ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், 21ம் வசனத்தின் மத்திய கருத்தையும், 22, 23 வசனங்கள் அதற்கு உதாரணமும் விளக்கங்களாகவும் ஆண்டவர் கையாளுவதை கவனிக்க முடியும். “முதற்கோணம் முற்றுங்கோணம்” என்ற பழமொழிக்கொப்பாக சிலர் 21ம் வசனத்தை தனித்து வியாக்யானம் செய்து, அது விசுவாசத்தைக் குறிப்பதாகவும் 22, 23 வசனங்கள் கிரியையைச் சுட்டிக்காட்டுவதாகவும் கற்பனை செய்து கொண்டு, இரட்சிப்பு ஒருவனின் கிரியைப் பொறுத்திருக்கிறது என்று தவறுதலாக விமர்சனம் செய்கிறார்கள். இது ஆண்டவருடைய வசனத்திற்கு முற்றுலும் புறம்பானது. இந்த தவறுதலான வியாக்யானத்திற்கு முக்கிய காரணம் இப்படி 21வது வசனத்தை 22, 23 வசனங்களோடு சேர்த்து பார்க்காமல் தனித்து உபயோகிப்பதாலாகும். இந்த மூன்று வசனங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது இது, விசுவாசத்திற்கும் கிரியைக்குமுள்ள சம்பந்தத்தையோ வேறு பாட்டையோ விமர்சிப்பதற்குக் கூறப்படாமல், நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளக்கூடிய பேராபத்து நம் உள்ளத்திலேயே இருக்கிறது என்ற நிலையை நாம் தவறாமல் உணர வேண்டும் என்பதற்காகவே அவ்வித எச்சரிப்பை இந்த மூன்று வசனங்களுக்குள்ளேயே அடக்கியிருக்கிறார் கர்த்தர் என்பதைக் காணலாம். இப்படிப்பட்டதான ஒரு எச்சரிப்புதான் இதற்கு முந்தின பகுதியிலும் விளக்கப்பட்டிருந்தது. அதில் அடங்கியுள்ள எச்சரிப்பு நமது நடுவில் நடமாடும் ஆட்டுத்தோலினால் மறைக்கப்பட்டிருக்கும் ஓநாய்க்கொப்பான கள்ள தீர்க்கதரிசிகளைக் குறித்தது; அவர்களுடைய தோற்றமும் போதனைகளும் மிகவும் போற்றத்தகுந்ததும் வசீகரமானதுமாகவும் இருக்குமென்று பார்த்தோம். அப்படிப்பட்டவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை உணர்ந்துகொள்வது அவ்வளவு லேசல்ல; மாறாக சற்று கடினம் என்றே சொல்லலாம். தவிர அது ஒரு விசுவாசிக்கு புறம்பே உள்ள ஆபத்து. ஆனால் இங்கு கூறப்பட்ட ஆபத்து ஒரு விசுவாசியினுள்ளேயே உள்ளது. மிக பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; அது தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் தன்மையுடையது. இதில் கர்த்தர் வலியுறுத்துவது, கடவுளுக்கு முன் உண்மையான பரிசுத்தமேயொழிய மற்ற எவ்வித நடிப்போ மாய்மாலமோ ஒருபோதும் செல்லுபடியாகாது என்பதே. “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே”, எபி 12:14. இந்த உண்மை, விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற போதனையிலுங்கூட தெளிவாயிருப்பதை ஒருவன் விளங்கிக் கொண்டிராவிட்டால் இரட்சிப்புக்கடுத்த போதனையில் அவன் அறிவு விருதா (பிரயோசனமில்லாதது) என்ற நிலையாகிவிடும். இவ்விதமான பரிசுத்தத்தைதான் கர்த்தரும் இவ்விடத்தில் ஒரு புது விதமாக அறிவுறுத்துகிறார். உண்மையான விசுவாசம் என்பது எத்தகையது என்பதையும் அது வெளிப்பிரகாரமான சுய நீதியில் (Human Legalism) பிரதிபலிப்பதில்லை என்பதையும் இந்த பகுதியில் சிறப்பாக விளக்கிக் கூறுகிறார். இதை வேறு விதமாக சொல்வோமானால்: இது நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டிய வெகு முக்கியமான எச்சரிப்பாக இருக்க வேண்டும். நாம் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நமக்குள் உண்மையான நீதியும் பரிசுத்தமும் இல்லாவிட்டால் நம் கிரியை யாவும் கடவுள் பிரசன்னத்தில் காயினின் பலியாகத்தான் முடியும்; இதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுவோமாக.

மேலும் இதில் கூறப்பட்டிருப்பது கர்த்தருடைய திருவாய் மூலமாகவே நமக்குக் கிடைத்திருக்கிறது. இதில் கர்த்தர், உண்மையான விசுவாசம் என்ன என்பதை ஒரு புது விதத்தில் விவரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தவறுதலான அடையாளங்களில் மனிதர் நம்பிக்கை வைத்திருக்கும் பிரச்சனையை இங்கு சுட்டிக் காட்டுகிறார். அவைகளை ஒன்றன்பின் ஒன்றாக கவனிப்போம்: ஒருவனின் ஆத்துமா கடவுள் பார்வையில் எவ்வளவு முக்கியம் என்ற அடிப்படை சத்தியத்திலேயே தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நிர்பந்தமான நிலைமை மனிதனுக்குள் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இரட்சிப்பைக் குறித்த நிச்சயத்தை தவறுதலான அடையாளங்களில் நம்பிக்கை வைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நிலைமை.

தவறுதலான அடையாளங்களில் நம்பிக்கை வைத்தல் என்பதற்குள்ள முதல் உதாரணத்தைக் கவனிப்போம். ஆச்சரிய விதமாக அது சரியான நம்பிக்கை/விசுவாசத்தில்தான் சார்ந்திருப்பதாகப்படுகிறது. வசனத்தில் கூறப்பட்டிருப்பது: “என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை; அங்குள்ள என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே அதில் பிரவேசிப்பான்” என்று கூறி அதை அடுத்து கர்த்தர் கூறுவது, அந்நாளில் அனேகர் என்னை நோக்கி: “கர்த்தாவே, கர்த்தாவே” என்று என்னை அழைத்து என்னிடம் சொல்லுவார்கள் என்றுக் கூறி, இறுதியில் ஆனாலும் “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்கிறார். இந்த பாகத்தை வெகு ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். இதில் நாம் கவனிக்க வேண்டியது, கர்த்தர் தன்னை “கர்த்தாவே, கர்த்தாவே” என்று கூறுவதை தவறு என்று சொல்லவில்லை. அப்படி கர்த்தரை குறிப்பிடுவது வசனத்தின்படி மிக பொருத்தமானதே. ஏனெனில் “கர்த்தர்” என்ற பதம் அவருடைய இயற்கையான பண்பை (குணாதிசயத்தை) விவரிக்கும் சொல். இந்த பண்பை அறிந்தவர்கள், அவரைத் தேடி அவரிடம் வருகிறவர்கள் அவரை இவ்விதமாய் அழைத்தனர். அதை ஆண்டவர் குற்றமாய் சொல்லவில்லை. அதற்கு மாறாக, அவரை அவ்விதம் கருதாதவன், அழைக்காதவன், ஒருநாளும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது என்பது நிச்சயம். இந்த விதத்தில் அடிப்படை சத்தியம் (Orthodoxy) ஒரு விசுவாசிக்கு இன்றியமையாதது. ஆனால் கர்த்தர் இங்கு தெளிவுபடுத்த விரும்புவது இந்த அடிப்படை சத்தியத்தின்மேல் மட்டும் நம்பிக்கை வைத்திருப்பவன் இரட்சிக்கப்பட வழியில்லை. உதாரணமாக, சரித்திரபிரகாரமாக இவ்வுலகில் அவதரித்த இயேசுவானவர் தேவனுடைய குமாரன்; அவர் பரிசுத்த திரித்துவ தேவனின் இரண்டாவது ஆளாக இருப்பவர்; இவர்தான் தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்ட கிறிஸ்து, உலகை மீட்க வந்தவர், இவர் இப்போது தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்; இவை முதலான உண்மைகள் அடிப்படை சத்தியத்தின் மூல கருத்துக்கள். இந்த சத்தியங்களை கிறிஸ்தவத்திலிருந்து பிரிக்க முடியாது; ஆகவேதான் ஒவ்வொரு விசுவாசியும் (கிறிஸ்தவனும்) கர்த்தாவே, கர்த்தாவே என்று இயேசு இரட்சகரை அழைக்கிறான். அது முற்றிலும் சரிதான்.

அப்படியிருக்க, இப்படி கர்த்தரை அழைக்கும் எல்லோருமே பரலோக ராஜ்யம் செல்லமுடியாது என்று கர்த்தர் கூறுகையில் அதை கேட்க உடல் நடுங்குகிறது. இதில் நாம் கவனிக்கும் விசித்திரமான காரியம் என்னவென்றால் அப்படி கர்த்தரை அழைக்காதவன் எவனும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது என்கின்ற உண்மையைத் தவிர அப்படி அழைப்பவனெல்லாம் பரலோக ராஜ்யம் பிரவேசிப்பதில்லை என்று இங்கு கர்த்தரே சொல்லுகின்ற போது இதன் விளக்கத்தை பயத்தோடும் நடுக்கத்தோடும் ஆராய்வது மிக அவசரமும் அத்தியாவசமுமாகும்.

இதைக்குறித்து யாக்கோபு நிருபத்தில் நாம் எச்சரிக்கைப்படுத்தப்படுவது, நாம் எந்த ஒரு உண்மையிலும் அதை விசுவாசிப்பதில் மட்டும் சார்ந்திருப்பது ஆபத்து என்பது. இது யாக்கோபு 2:19ல் சற்று அதிர்ச்சி தரும் வகையில் விமரிசிக்கப்பட்டிருக்கிறது. “பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன” என்று படிக்கிறோம். இப்படியொரு சந்தர்ப்பத்தை மாற்கு 1: 23-25ல் காண்கிறோம். இந்த அசுத்த ஆவி, “ஐயோ நசரேயனாகிய இயேசுவே . . . உம்மை இன்னார் என்று அறிவேன், நீ தேவனுடைய பரிசுத்தர்” என்று சத்தமிட்டது. ஆனால் இது இரட்சிப்புக்கடுத்த அறிக்கையில்லை. பல சமயம் நம்முடைய நிலைமையும் நம்முடைய விசுவாசமும் மாமிச அறிவோடு (Intellectual Assent) நின்றுவிடும் ஆபத்தில் இருக்கிறது. இவ்வித சோதனைகளில் விழும் ஆபத்தான நிலை சபைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அவர்கள் வேதாகமத்தை படித்தவர்கள்; அதிலுள்ள போதனைகளை ஏற்றுக்கொண்டவர்கள். அவர்கள் கர்த்தருடைய வார்த்தையின்பேரில் பிரசங்கம் கூட செய்தவர்களாயிருப்பார்கள்; கள்ளப்போதனைகளுக்கு எதிர்த்து வாதாடியிருப்பார்கள். ஆனாலும் அவர்கள் சொந்த வாழ்க்கையில், அவர்கள் விசுவாசிப்பதாகக் கூறும் உண்மைக்கும் அவர்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தம் இல்லாதிருக்கிறது.

இதை சிந்திக்க பயங்கரமாக இருக்கிறது. ஆனாலும் வேதாகமம் இப்படியும் சிலர் இருக்கக்கூடும் என்று போதிக்கிறது. உண்மையான மருபிறப்பின் அனுபவம் இல்லாமலே வேதாகமத்திலுள்ள போதனைகள் ஒரு தத்துவ சாஸ்திரி ரீதியாக, ஒரு மறைமுகமான உண்மையாக (Abstract Truth) ஏற்றுக்கொள்ளக்கூடும். எப்படிப் பார்த்தாலும் வேதாகம போதனைகள் அறிவுள்ளவர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத்தானே இருக்கிறது. ஆகவே அப்படி ஏற்றுக்கொண்டவர்கள் மெய்யான விசுவாசிகளாய் (கிறிஸ்தவர்களாய்) இல்லாமலுமிருக்கலாமல்லவா! கிறிஸ்து இல்லாமலே இப்போது பல சபைகள் உலகில் பெருகிக்கொண்டு போகிறது. பலபேர் அதிலுள்ள உண்மைகளை மறுக்க முடிவதில்லை. “இயேசுவானவர் தேவனுடைய குமாரன்” என்ற உண்மையை கிறிஸ்தவர்களாயிராதவர்கள் கூட ஏற்றுக்கொள்ளக்கூடும். அதை வாயினால் அறிக்கையிடவும் தயங்காமல் இருக்கலாம்; ஆனாலும் அவர்கள் மறு பிறப்பின் அனுபவம் இல்லாதவர்களாயிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் யாதொரு தயக்கமும் இல்லாமல் “கர்த்தாவே, கர்த்தாவே” என்று கூறலாம். ஆனால் இப்படிக்கொத்தவர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. சுருக்கமாய் சொல்வோமானால் இவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்காமல், போதனைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்; மறுபிறப்பின் அனுபவம் இல்லாமல், மறுக்கமுடியாத சில உண்மைகளில் தங்கள் நம்பிக்கையை வைத்து தங்களை கிறிஸ்தவர்களாக பாவித்துக்கொண்டிருக்கும் துர்அதிர்ஷ்டமான நிலைமையில் இருந்து கொண்டிருப்பதைக் காணலாம். “There is the danger of trusting your faith instead of Christ, of trusting your belief without really become regenerate.” சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த “ப்யூரிடன்ஸ்” என்ற சிறந்த கிறிஸ்தவ பக்தர்கள் எழுதிய நூல்களில் இந்த நிலைமையைக் குறித்து இவர்கள் கவலையோடு எழுதியிருக்கிறார்கள். அவைகளில் அவர்கள் உபயோகித்திருக்கும் ஒரு சொற்றொடர் “உண்மைக்கு மாறான சமாதானம்” (False Peace). இந்த பயங்கர நிலைமை பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. கிறிஸ்தவ குடும்பங்களிலும், கிறிஸ்தவ சூழ்நிலையிலும் பல காலங்களாக வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவ போதனைகளை சிறுவந்தொட்டு கேட்டிருப்பதால் இவைகளில் நல்ல பழக்கமேற்பட்ட காரணத்தால் அவர்கள் பேச்சிலும் வார்த்தையிலும் இந்த போதனைகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் இவர்களை கிறிஸ்தவர்களென்று கருதிவிடமுடியாது.

இதையும் தவிர, இவர்கள் இந்த போதகங்களில் அதிக பற்று நிறைந்தவர்களாகவும், மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவுங்கூட இருக்கலாம். தவிர, இவர்கள் இயேசுவின்மேல், ஒரு பெயர்பெற்ற சரித்திர கதாநாயகனைப்போன்று மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கலாம். இவைகளின் அடிப்படையில் இவர்களை கிறிஸ்தவர்கள் என்று மதிப்பிட்டுவிட முடியாது. இவர்களை வெறும் மாய்மாலமான விசுவாசிகளென்றும் கருதுவது கடினமாக இருக்கிறது; ஏனென்றால் இவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாயும் உணர்ச்சி மிகுந்தவர்களாயும் காணப்படுகிறார்கள். மற்றும், இவர்கள் ஆண்டவரைப்பற்றியும் பொருத்தமான காரியங்களை பேசுகிறார்கள். அப்படியிருந்தும் இவர்கள் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது. இதை எப்படி விளங்கிக்கொள்வதென்று கவனிப்போம்.

இந்த நிலைமையை கீழ்க்கண்டவாறு விளங்கிக் கொள்ளலாம்:-

கிறிஸ்தவத்தில் நாம் காண்கிற மிகக் கடினமான காரியங்களில் ஒன்று, உண்மையான ஆவியின் பிரகாரமான ஆர்வத்திற்கும் மாமிச பிறகாரமான ஆர்வத்திற்குமுள்ள வித்தியாசத்தை கண்டுபிடித்தல். ஒருவன் பிறவியிலேயே ஊக்கம் நிறைந்தவனாக இருக்கலாம். அவ்விதமே பேச்சிலும் இயற்கை வரம் பெற்றவனாக இருக்கலாம். இந்த காரியத்தில் நாம் மிகவும் கவனமாகவும் விழிப்புள்ளவர்களாயும் இருக்க வேண்டியது அவசியம். கடவுளால் அழைப்பு பெற்ற ஒரு போதகனுக்கு இயற்கை வரம் அத்தியாவசியம் இல்லை. ஆனால் அத்தியாவசியமாக தேவைப்படுவது, இயேசுக்கிறிஸ்துவின்மேல் உள்ள ஆழமான விசுவாசமும் மறுபிறப்பின் அனுபவமுமே. இங்கு ஆண்டவர் சொல்ல விரும்புவது, ஒருவன் தன்னுடைய மாமிச நிலையிலும் ஒரு ஆவிக்குரிய மனிதனுக்குரிய இயல்புகளைப்போல் நடக்க அல்லது நடந்துகொள்ள முடியும். இவ்வித இயல்பு உண்மையான விசுவாசிகளுக்குக் கூட சமயா சமயம் வரும் சோதனைக்கு அவர்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என்று தன்னுடைய அனுபவத்திலிருந்து உலகமறிந்த ஒரு பெரிய விசுவாசி மெக்செயின் என்பவர் (Robert Murray McCheyne, 1837) எச்சரிக்கிறார். இவர் தன்னுடைய டயரியில் குறிப்பிட்டிருப்பதை பிற்காலங்களில் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார்கள்; அதில் ஒரு குறிப்பில் எழுதியிருக்கிறார் இப்படி: “இன்று ஞாயிறு நான் சபைக்கு பேச விருந்த அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன். என்னை பேச விடாமல் தேவன் என் வாயை அடைத்துவிட்டார். ஏனெனில் நான் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை மகிமைப் படுத்தாமல் என் மகிமையைக் குறித்துப்பேச எத்தனித்ததினால்”. அவ்வாறு பிரசித்தி பெற்ற போதகரான மெக்செயினே இந்த பயங்கர சோதனையை சந்தித்திருப்பதைக் காண்கிறோம்; அதாவது இயேசுக்கிறிஸ்துவை மகிமைப்படுத்த மாமிச பெலவீனத்தினால் தவறிப்போகிறது. இதில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் – சரியான காரியங்களில் விசுவாசமும், எழுப்புதலும், உற்சாகமுமான ஆவி உடையவனாக இருந்து, அவைகளில் சுறுசுறுப்புடையவனாய் இருப்பதினால் மட்டும், அதை முன்னிட்டு உன்னை ஒரு கிறிஸ்தவன் என்று எண்ணிவிடும் ஆபத்துக்கு ஜாக்கிரதைப்பட வேண்டும் என்பதே.
(“Nothing is more dangerous than to rely only upon a correct belief, and a fervent spirit, and to assume that, as long as you believe the right things and are zealous and keen and and active concerning them, you are therefore of necessity a Christian.”)

இந்த பாகத்தில் ஆண்டவர் கிரியையைக் குறித்தும் பேசுகிறதைப் பார்க்கலாம். இதே தியானத்தில் சற்றுமுன் எச்சரித்தப் பிறகாரம், இதில் கிரியை, விசுவாசம் என்பவைகளைப் பற்றிய வேறுபாட்டை குறிப்பிடுவதற்காக ஆண்டவர் இதைக் கூறவில்லை. இதில் கூறப்பட்டவர்கள் ஆண்டவர் நாமத்தில் தீர்க்கதரிசனம் கூறிய கிரியை பழுதானது அல்ல. அந்த கிரியையே பழுதானது என்று விமர்சனம் செய்வதைத்தான் தவறு என்று கூறினேன். அதை இங்கு விவரிக்கிறேன்: முதலாவது தெரிந்து கொள்ள வேண்டியது இது கிறிஸ்துவுக்குப்பின் புதிய ஏற்பாட்டின் காலத்து நிகழ்ச்சி. இது நியாயத்தீர்ப்பின் நாளில் ஆண்டவர் ஏற்றுக்கொள்ளாத காட்சி. அவர் அதை ஏற்றுக்கொள்ளாததின் காரணத்தை இங்கு கவனிப்போம். புதிய ஏற்பாட்டின் காலத்தில் தீர்க்கதரிசனம் என்று குறிப்பிடப்படுவது அவர்கள் செய்த பிரசங்கங்களே. அப்போது புதிய ஏற்பாடு என்ற புத்தகம் எழுதப்படாத காலம். அக்காலத்தில் பிரசங்கங்கள் செய்ய சில பேருக்கு வாய்ப்பு இருந்தது. அவர்கள் அவற்றை பரிசுத்த ஆவியானவரின் உதவியால் செய்ய கற்பிக்கப்பட்டிருந்தனர். இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் கொரிந்திய சபைக்கு எழுதிய முதல் நிருபத்தில் காணலாம். இப்படியிருக்க, ஆண்டவர் குறிப்பிடும் இந்த பாகத்தில் அவர்கள் செய்த பிரசங்கங்களின் தரத்தைப் பற்றி (Quality of message) குறை கூறவில்லை. அவை யாவும் சரியாக இருந்திருக்கிறது. இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில்தான் பேசியிருக்கின்றனர். நாம் இப்போது உபயோகிக்கும் பதத்தைப்போல் அவைகள் உளருதலின் ஒரு நிகழ்ச்சி அல்ல. அந்த பிரசங்கங்களினால் பலர் நல்ல பயனும் அடைந்திருக்கலாம். அவைகளில் குறைவில்லை. ஆனால் அந்த பிரசங்கங்களை செய்தவர்கள் கிறிஸ்தவர்களாயில்லை என்ற அதிர்ச்சிதரும் தகவலைத்தான் இங்கு நமக்கு எச்சரிக்கையாகக் கொடுக்கிறார். இவைகளைக் குறித்து அப்போஸ்தலர் காலத்தில் பிரச்சனைகள் இருந்திருக்க வழி இல்லை. ஆனால் பிற்காலங்களிலும் நம்முடைய காலங்களிலும் இதை எச்சரிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒருனுக்கு முறைப்படியான doctrineபடி (வசனத்தின்படி) பிரசங்கங்கள் செய்கிற திறமை இருந்தாலும் அவன் ஒரு அவிசுவாசியாகவும் இருக்க வாய்ப்புண்டு என்கின்ற எச்சரிக்கை இதில் அடங்கியிருக்கிறது. இந்தக் கூற்று ஆண்டவர் வாயிலிருந்து வராமல் இதை ஒரு வேறு யாரொருவர் மூலமாகவாவது வந்திருந்தால் இதை ஏற்றுக்கொள்வது எளிதல்ல. அப்படிக் கூறியவர்களை கடுமையாக விமர்சிக்க இடமுண்டு. ஆனால் இதை ஆண்டவரே கூறியிருப்பதால் வாயடைத்துப்போய் நிற்கிறோம்.

இது வேதாகமத்தில் நாம் கவனிக்கும் ஒரு அபூர்வமான காரியமும் இல்லை. மாறாக, பல உதாரணங்களை குறிப்பிடலாம். பிலேயாம் (Balaam) கூறிய செய்தியில் குற்றம் ஒன்றுமில்லை. ஆனால் அவன் “கூலிக்காக செய்த வஞ்சகன்” என்று வேதத்தில் படிக்கிறோம். அந்த விதத்தில் சவுல் ராஜாவைக்கூட தேவன் தன் காரியங்களுக்கு பயன்படுத்தியிருப்பதை பார்க்கிறோமே. அவர் தீர்க்கதரிசனம் கூறினதாகவும் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டின் காலத்தில் இந்த ஆபத்து அதிமாயிருந்ததால்தான் பவுல் அப்போஸ்தலன், “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரி 9:27) என்று ஒரு அப்போஸ்தலனே கூறுவதைக் கேட்டு எச்சரிக்கை படுத்தப்படுகிறோம். ‘சரீரத்தை ஒடுக்கி’ என்று கூறும்போது, அவர் சில மாமிசத்துக்கடுத்த பாவங்களை மட்டும் குறிப்பிடுவதாக நினைப்பது தவறு; அவர் தன் முழு ஜீவியத்தைக் குறித்தும் இப்படி குறிப்பிடுகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவன் தன் சரீரத்தை பிரசங்க மேடையில் மட்டுமல்ல எல்லா நேரத்திலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

தவிர, 1 கொரி 13ல் நாம் பார்க்கும் மிக உன்னதமான சத்தியத்தை கவனிப்போம். “நான் மனுஷர் பாஷைகளையும் தேவ தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்” என்று எழுதியிருக்கிறதல்லவா! மேலும், “நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும் சகல அறிவையும் அறிந்திருந்தாலும் . . . அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” என்று எழுதியிருக்கிறதல்லவா! அப்போஸ்தலன் இங்கு கூறியிருப்பதை வேறு விதமாக கூறுவோமானால், ‘நான் ஒரு தேவ தூதனைப்போல் பிரசங்கம் செய்வேன், நான் பேசுவதில் சொற் சுருக்கமும், பொருட் பெருக்கமும், பேச்சு சாதூர்யமும் கொட்டும்படியாக இருக்கும்; உலகில் உள்ள மாபெரும் பேச்சாளர்களில் ஒருவனாக என்னை மக்கள் கருதுகிறார்கள் என்ற நிலை இருந்தாலும், கர்த்தருடைய வசனத்தை சரளமாக கையாளும் திறமை எனக்கு இருந்தாலும் கூட நான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கக் கூடாதவனாக இருக்க வாய்ப்பு உண்டு’ என்று கூறலாம். மேலும் பிலிப் 1:15 “சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும்,” கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூடும் என்று படிக்கிறோம். இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ளுகிறோம்? ஒருவன் கிறிஸ்துவை பிரசங்கித்தாலும் அவர்கள் தவறுதலான ஆவியில் பிரசங்கிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதையும் தவிர இப்படியான உதாரணங்களின் மூலம் நாம் படித்துக்கொள்ள வேண்டிய பாடம், ஒருவன் கர்த்தருடைய வசனத்தை முறையாக பிரசங்கித்தாலும் அவன் கர்த்தரால் அங்கீகரிக்கபடாதவனாக இருக்க வாய்ப்புண்டு. ஆண்டவர் கூறிய இன்னொரு காரியமும் நம் ஞாபகத்தில் வர வேண்டும். அவர் பரிசேயரைக் குறித்து, “நீங்கள் மனிதர் முன்பு உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார், மனிதருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது” என்கிறார்.

இவைகளையெல்லாம் நம் கருத்தில் கொண்டுவரும்போது நியாயத்தீர்ப்பின் நாளிலே நம்பக்கூடாத, அநேக எதிர்பாராத சம்பவங்களை நாம் காண நேரிடும்போல் தெரிகிறது. அதை நினைக்க பயங்கர நடுக்கம் ஏற்படுகிறது. புகழப்படும் அநேக பிரசங்கிமார் பரலோகத்தில் இல்லாதிருக்கும் நிலைமையை யோசிக்கும்போது வியப்பும் நடுக்கமும் ஏற்படுகிறது. இவர்கள் சரியான காரியங்களை பிரசங்கித்தனர். அவற்றையும் வெகு அழகாக எடுத்துக் கூறினர், ஆனால் மோட்சத்தை இவர்கள் இழந்த நிலையை யோசித்து பார்க்க முடியவில்லை; காரணம், இவர்கள் உள்ளான ஜீவியம் கடவுளால் அங்கீகரிக்கப்படாத நிலையில் (மாமிசரீதியில்) இருந்திருக்கிறது.

இதைவிட ஆச்சரியப்படத்தக்கது, இப்படிப்பட்டவர்கள் கர்த்தருடைய நாமத்தில் பிசாசுகளைக்கூட துரத்தியிருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் பிசாசுக்களை துரத்தினவர்களுங்கூட பரலோக ராஜ்யத்தை இழந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது. எப்படி இதை கூறமுடியும் என்று கேட்கலாம். பிசாசுகளை துரத்தியவர்களில் யூதாஸ் காரியோத்தும் ஒருவராக இருந்திருப்பது வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளுகிறோம் அல்லவா (லூக்கா 10:17). கடவுளால் ஒருவனுக்கு வல்லமை கிடைத்தும், அவன் அந்த வல்லமையினால் அநேக காரியங்களை செய்தாலும் அவன் மோட்சத்தை இழந்துபோகும் மோசத்தைக் குறித்த எச்சரிப்பு ஆண்டவரால் அருளப்பட்டது. ஆகவே அந்த எச்சரிப்பைக் குறித்து அலட்சியமாய் இருந்துவிடுவது புத்திசாலித்தனம் அல்ல.

முடிவில் உச்சக்கட்டமாக (climax) ஆண்டவர் கூறுவது: அந்நாட்களில் அநேகர் என்னை நோக்கி “கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே அநேக அற்புத அடையாளங்களைச் செய்தோம் அல்லவா?” என்பார்கள் இருந்தாலும் அவர்கள் மோட்ச ராஜ்யத்தை இழந்துபோவார்கள் என்கிறார் ஆண்டவர். இப்படி நடக்கக்கூடுமா? மோட்ச ராஜ்யத்தை இழந்துபோகிறவர்களால் அற்புத அடையாளங்களை செய்யக் கூடுமா என்ற கேள்வி எழலாம். இதைக்குறித்து நமக்கு ஞாபகத்திற்கு வர வேண்டியது, மோசேயின் காலத்தில் எகிப்து தேசத்தில் அநேக அஞ்ஞான மந்திரவாதிகளால் மோசே செய்த அற்புதங்களில் சிலவற்றை செய்ய முடிந்தது. அது மட்டுமல்லாமல் மத்தேயு 24:24ல் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்று ஆண்டவர் முன் உறைத்திருக்கிறார். மேலும் பவுல் அப்போஸ்தலன் 2 தெசலோ 2:9ல் “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானின் செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்” இருக்கும் என்றும், முடிவில் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அது அழிக்கப்படும் என்று எழுதியிருக்கிறது. இவ்விதமே அற்புத சுகமளிக்கும் காரியங்களும் நடைபெறலாம். கடவுளும் நம் புத்திக்கு எட்டாத வகையில் அவிசுவாசிகளுக்கும் ஒரு சில சமயங்களில் சில சக்திகளை கொடுத்து தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றிக்கொள்ளுகிறதைக் காண்கிறோம். ஆனால் அப்படி செய்கிறவர்களை அவர் பரலோக ராஜ்யத்தில் சேர்ப்பதில்லை. இன்னுமொரு உதாரணம் ஒரு அஞ்ஞான மன்னனாகிய கோரேசை அவருடைய சித்தம் நிறைவேற உபயோகிப்பதை எஸ்றா முதலிய புத்தகங்களிலிருந்து பார்க்லாம்.

இன்னொரு நல்ல உதாரணம் 2 கொரி 11:14ல் “அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே” என்றிருக்கிறதல்லவா! இந்த வேஷந்தரித்த சாத்தானை நம்பி கெட்டுப்போகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படி சாத்தானுடைய வஞ்சகத்தில் அகப்பட்டவர்களை, சாத்தான் தன்னுடைய சித்தத்தை நிறைவேற்ற உபயோகிப்பதில் ஆச்சரியம் இல்லையல்லவா! அவர்களிடம் “இயேசுவின் நாமத்தை உபயோகித்துக் கொண்டே நான் கட்டளையிடும் காரியங்களை செய்யவும்” என்று உத்தரவிட்டால், அவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தில் வருவதினால், அவன் சொற்படி கேட்காமல் போவார்களா? இப்படிப்பட்டவர்கள், நியாயத்தீர்ப்பில் இயேசுக்கிறிஸ்துக்கு முன்னால் நிற்கும்போது அவரிடம் மெச்சத்தகுந்த வார்த்தைகளையா கேட்பார்கள்! இப்படி ஏமாந்துபோகிறவர்களிடம் தவறுதலான விசுவாசத்தை கொண்டாவது, அல்லது சரியான விசுவாசத்தை தவறுதலான காரணங்களுக்கு உபயோகிக்கும்படியாகவாவது சாத்தான் ஏவும் கட்டளைகளுக்கு ஒருவன் கீழ்படிவானானால் அவனுக்கு அற்புத அடையாளங்கள் செய்யும் சக்தி சாத்தானால் சுலபமாக கொடுக்க முடியுமல்லவா! மனிதர்களை மோட்சம் செல்ல முடியாமல் தடுத்து, நரகத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இரவும் பகலும் முயற்சி செய்து கொண்டுவரும் சாத்தானுக்கு இவ்வித சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அதை தப்பவிடுமா?

இவைகளைப் பற்றிய விவரங்களை தீர்க்கதரிசனமாகவும், போதனைகளாகவும் வேதாகமத்தில் விவரமாக ஆண்டவர் கூறிவிட்டார். ஒரு சமயம் அவருடைய சீஷர்கள் அசுத்த ஆவிகளை வெற்றிகரமாக விரட்டியதைக் குறித்து ஆண்டவரிடம் சந்தோஷத்தோடு பகிர்ந்து கொண்டபோது ஆண்டவர் என்ன கூறினார் என்று ஞாபகப்படுத்தி பாருங்கள்: “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்று அவர்களை எச்சரித்தார் அல்லவா. அவர்களுக்கு அப்போது, மலை பிரசங்கத்தில், தான் கூறியதை இவ்வாறு ஞாபகப்படுத்தியிருப்பார். “நான் உங்களுக்கு அப்போது கூறவில்லையா, மோட்சம் செல்ல தவறியவர்கள் கூட இவ்வித காரியங்களை செய்ய முடியும் என்று. இவைகளைக் குறித்து பெருமிதமடைவதில் பிரயோசனம் இல்லை. உங்கள் இருதயத்தைச் சோதித்துப் பாருங்கள். உங்கள் பெயர்கள் மோட்சத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதைக் குறித்து அக்கறையாயிருங்கள். நீங்கள் என்னைச் சேர்ந்தவர்களாயிருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். அதற்கான பரிசுத்தம் உங்களுக்கு இருக்கிறதா? நான் கற்றுக்கொடுத்த நீதி என்னவென்று விளங்கிக் கொண்டீர்களா? என்னை நோக்கி “கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவனல்ல, பரலோகத்தில் இருக்கும் என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான்” என்பதாக அவர்களுக்கு புத்திமதி சொல்லியிருப்பாரல்லவோ. அதைத்தானே நாமும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று பார்க்கிறார்.

நாம் இதில் ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டியது: கண்முன்னால் தெரியும் காரியங்களை அல்ல, அற்புத அடையாளங்களை அல்ல, நாம் மலைப் பிரசங்கத்தில் காணும் பரிசுத்தம் ஆரம்பமாகியிருக்கிறதா, ஆவியில் தரித்திரராய் இருக்கிறோமா, உலகம் போகிறபோக்கைக் குறித்து வேதனைப்படுகிறோமா, இந்த அழிந்துபோகும் கூடாரத்தில் இருந்து எப்போது விடுதலையாவோம் என்ற அங்கலாய்ப்பு இருக்கிறதா என்பது போன்ற விழிப்புள்ள எண்ணங்கள் உள்ளத்தில் இருக்கிறதா என்று சிந்தித்து பார்க்கவும்.

இப்படி இல்லையே என்று மனது வாதித்தால் நமது பாவ நிலையை கடவுளிடம் அறிக்கையிட்டு, நீதியின்மேல் பசியும் தாகமுமுள்ளவர்களாய், இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அவரை கெஞ்சி மன்றாடுவோம். அவர் நிச்சயமாக உதவி செய்வார். ஏனெனில் அவர் நமக்குக் கொடுத்திருக்கும் வாக்காவது; “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்” என்பது.

End Notes:

இதில் குறிப்பிட்டிருக்கும் தலைப்பை “பொய்யான சமாதானம்” என்று மொழி பெயர்க்காததற்குக் காரணம், இதில் கூறப்பட்டவர்கள் துணிகரமாக, பொய் என்று தெரிந்தே இப்படி நடந்துகொள்ளவில்லை. அப்படிப்பட்டவர்களை இந்த தியானத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் இவர்கள் மனநிலை மிகவும் தவறுதலாயிருக்கிறது; இதை இவர்கள் சரி செய்துகொள்ள தாமதித்தால் இரட்சிப்பையே இழந்துபோக நேரிடும் அபாயம் உள்ளது என்ற முக்கியமான கருத்து இதில் அடங்கியிருக்கிறது காண்க.

இந்த தியானத்தில் Dr. மார்டின் லாய்ட் ஜோன்ஸ் குறிப்பிட்டிருக்கும் உலகமறிந்த மெக்செயின் என்பவர் எழுதிய பாட்டு Hymn “When the passing world is done” நான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். இது நம்முடைய பாட்டு புத்தகத்தில் கூடியசீக்கிரம் இடம் பெறும். அந்த பாட்டின் ஆரம்பம் “எந்தன் வாழ்க்கை ஓட்டந்தான்” என்பது.

இந்த தியானத்தை கடவுள் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் விசுவாசிகளை ஒருவரையொருவர் சந்தேகமனப்பான்மையில் குறைவாகத் தரப்படுத்தும் சோதனையில் யாரும் விழுந்து கடவுளின் கோபத்துக்கு ஆளாகாமல், ஒவ்வொருவரும் தன் தன் ஜீவன் தப்பத்தக்கதாக தங்கள் தங்கள் இருதயங்களை (மற்றவர்களை அல்ல) தற்சோதனை செய்வதற்காக மட்டுந்தான் கர்த்தர் நமக்கு இந்த தியானத்தை கர்த்தரின் தாசனாகிய Dr. லாய்ட் ஜோன்ஸ் என்ற மாபெரும் வேதாகம பண்டிதர் மூலமாக கிருபையாக அருளிசெய்திருக்கிறார் என்பதை மனதில் கொள்வோமாக.

____________________________________

மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘False Peace, Mt 7:21-23’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 24 of Vol 2 (pp 516-525), from: “Studies in the Sermon on the Mount”  By Dr. D. Martyn Lloyd-Jones.
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.

One Comment
  1. ranjith permalink
    December 9, 2011 6:44 am

    this is very good article ….

Comments are closed.

%d bloggers like this: