Skip to content

விசுவாசம்: மறுபிறப்பின் பிரத்தியேகமான விளைவு

(பிப்ரவரி 17, 2008ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)

Translation into Tamil by Vinotha Surendar

Faith: Unique and Fruitful Effect of the New Birth, delivered on February 17, 2008 By John Piper

யோவான் 1: 1-14
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல. அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்திலே இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

நான் கடந்த வாரத்தில், விஷால் மங்கல்வாடி என்பவருடைய “From Bach to Cobain,” என்கிற சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது, மினஸோட்டா பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய “சூரியன் மேற்கில்தான் அஸ்தமிக்க வேண்டுமா?” என்கிற தொடர் சொற்பொழிவின் ஒரு பாகம். அந்த சொற்பொழிவில் அவர் கிழக்கத்திய மதங்களில் உபயோகிக்கப்படுகின்ற மந்திரங்களைக் குறித்து சுருக்கமாக கூறினார். அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, ஓய்வுநாள் பிரசங்கத்தில் நான் கூறப்போகிற கருத்துக்கு அது முக்கியமான விதத்தில் உதவிசெய்யப் போவதாக நினைத்தேன். அதாவது, மறுபிறப்பு ஏற்படுவதற்கு “வார்த்தை” எவ்விதத்தில் செயல்படுகிறது என்பதைக் குறித்த கருத்துக்கு உதவியாயிருக்கும் வகையில்.

கடந்த வாரத்தில் நாம் பார்த்த 1பேது 1:23க்கும், இந்த வாரத்தில் நாம் தியானிக்கப் போகிற யோவா 1:12-13க்கும் இடையிலுள்ள தொடர்பை நாம் கவனிக்கையில் இத்தகைய மந்திரமானது எப்படி சுவிசேஷத்திலிருந்து வேறுபட்டதாயிருக்கிறது என்பதைக் காணப் போகிறோம். இணையதளங்களில் காணப்படுகின்ற பலவிதமான பக்திமார்க்கங்கள், மந்திரம் என்பதை பின்வரும் யோவான் சுவிசேஷத்திலுள்ள 1ஆம் அதிகாரத்தின் 1ஆம் வசனத்தோடு இணைத்துக் காண்பிப்பது ஆச்சரியத்தை வருவிக்கிறது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது”. அவர்கள் சொல்லுகிற கருத்து என்னவென்றால், உண்மையானது உணர்த்தப்பட சப்தம் அவசியம். சில புனிதமான சப்தங்களை இடைவிடாமல் தொடர்ந்து எழுப்புவதன் மூலமாக அடிப்படையான மெய்மையை அடைந்து கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து. ஆகவேதான் மந்திரங்கள் உருவாயிற்று.

மந்திரங்கள்: அர்த்தங்களில்லாத, வாய்மொழியான சப்தங்கள்
மந்திரங்களைக் குறித்து ஒரு இணையதளம் இவ்வாறாகக் கூறுகிறது: “நாம் விளங்கிக் கொள்ள முடியாத நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதின் மூலமாக அவைகளை விளங்கிக் கொண்டுவிடலாம். நாம் காணமுடியாத நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டேயிருந்தால் அதைக் கண்டுவிடலாம்”. வேறுவிதமாக சொல்வதானால், மந்திரங்கள் செயல்படும் விதமாவது, அவைகளின் அர்த்தத்தைத் தெளிவாக சொல்வதாலோ அல்லது அதன் அர்த்தமானது எவ்விதமாக உண்மையோடு சம்பந்தமுடையது என்பதை விவரிப்பதாலோ அல்ல. மாறாக, அர்த்தமுடைய சொற்களாக இல்லாமல், வாய்மொழியான சத்தங்களாகவே மந்திரங்கள் இருக்கின்றன. கருத்துக்களைத் தெளிவுபடுத்துவது மந்திரங்களின் நோக்கமாக இல்லை. கருத்துக்களை மறையச் செய்வதே அதன் நோக்கமாக இருக்கிறது. அதன் பலனாக மூல ஆதாரமான மெய்மையை உடனடியாக பெற்றுவிடலாம் என்கிற நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது.

இவ்விஷயத்தில் உங்களுடைய நிலமை என்ன என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. கடவுள் தங்களுடைய மனதோடு எப்படி தொடர்பு கொள்கிறார் என்பதைக் குறித்த தங்களுடைய விசுவாசத்தை சரிவர அறிந்திராத சில கிறிஸ்தவர்கள், இம்மாதிரியான கீழைத் தேசத்தாரின் மதக்கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்துவோடுள்ள தொடர்பை தாங்களே அறுத்துக் கொள்வதை உணராதவர்களாய் இருக்கிறார்கள்.
சுவிசேஷம்: இயேசுவைக் குறித்து மனதினால் அறிவுபூர்வமாக உணரக்கூடிய செய்தி

நாம் கடந்த வாரத்தில் பார்த்த 1பேது 1:23 சொல்கிறது: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”. இந்த வாக்கியமானது மிக மிக முக்கியமானது. நாம் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, பரிசுத்த ஆவியானவராலே, வசனத்தைக் கொண்டு நாம் இயேசுக்கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டதால், இயேசுவின் உயிர்த்தெழுந்த நித்தியமான புதிய ஜீவனில் நாமும் பங்கு கொள்கிறவர்களாகிறோம். இந்த அற்புதமானது, மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாற்றப்படுகிற இந்த சம்பவமானது, தேவனுடைய வசனத்தின் மூலமாகவே நடைபெறுகிறது.

கடவுளுடைய வார்த்தையானது மந்திரம் போல உபயோகிக்க ஏற்பட்டதா? அல்லது, இயேசுக்கிறிஸ்து என்கிற நபரைக் குறித்து அறிவுபூர்வமான, சரித்திரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் உண்மையாக இருக்க ஏற்பட்டதா? மேலும் அவரை நம்புகிறவர்களுக்கு அந்த வார்த்தை எவ்விதத்தில் பலனை அளிப்பதாயிருக்கிறது?
என்பதை நீங்கள்தான் சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும். தெய்வீக உண்மையோடு – மறுபிறப்பின் மூலமாக கடவுளோடு – நாம் எவ்விதத்தில் இணைக்கப்படுகிறோம்? புனித மந்திரங்களை இடைவிடாமல் ஓதுவதின் மூலமாக, நமது மனதை சிந்திப்பதிலிருந்து விடுவித்துக் கொள்பவர்களாக, அடிப்படை உண்மையை உடனடியாக அடைந்துவிடுகிறவர்களாக ஆகிவிடுகிறோமா? அல்லது, சரித்திரபூர்வமாக இவ்வுலகில் வந்து மரித்து உயிரோடு எழுந்த இயேசுக்கிறிஸ்து நமக்காக என்ன செய்துமுடித்திருக்கிறார் என்பதை அறிவுபூர்வமாக உணர்த்துகின்ற கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு விசுவாசிப்பது நம்மை, தெய்வீக உண்மையோடு – சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவோடு – இணைப்பதாயிருக்கிறதா?

1பேது 1:23ல் “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே” நாம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறிய பின்னர் பேதுரு 25ஆம் வசனத்திலே, “உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே” என்கிறார். வேறுவிதமாக சொல்வோமானால், எந்த வார்த்தையின் மூலமாக நாம் மறுபடியும் பிறந்தோமோ அதுவே “உங்களுக்கு சுவிசேஷமாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம்”. அது என்ன? அந்த சுவிசேஷம் அல்லது நற்செய்தியானது என்ன? அது இதுதான்:

அன்றியும் சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்த பிரகாரமாய் நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார் – 1 கொரி 15:1-5.

சுவிசேஷம் என்பது செய்தி
அதாவது சுவிசேஷம் என்பது செய்தியாகும். நீங்கள் கண்களால் காணக்கூடிய, தொட்டு உணரக்கூடிய, மனதால் சிந்திக்கக் கூடிய, வாயினால் சொல்லக்கூடியதான நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியதே சுவிசேஷமாகும். இயேசுக்கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலைப் பற்றிய சரித்திர செய்தி அது. “வேதவாக்கியங்களின்படி . . . உயிர்த்தெழுந்து” என்று பவுல் கூறுவது இதைத்தான்.

இந்த செய்தியை நாம் விசுவாசித்தபடியினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று 2ஆம் வசனத்தில் பவுல் குறிப்பிடுகிறார். நாம் அதைக் கேட்டு, மனதிலே விளங்கிக் கொண்டிருக்கிறபடியினாலே நாம் விசுவாசிக்கிறோம். பவுல் இந்த வசனபகுதியை முடிக்கும்போது 11ஆம் வசனத்தில், “ஆகையால் . . இப்படியே பிரசங்கித்து வருகிறோம். நீங்களும் இப்படியே விசுவாசிக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டு முடிக்கிறார். ரோம 10:17ல் “விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” என்று கூறுகிறார். மேலும் கலாத் 3:2,5 ஆகிய வசனங்களில், “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? . . . உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ எதினாலே செய்கிறார்?” என்று கேட்கிறார்.

வேறுவிதமாக சொல்வதானால், “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே நாம் ஜெநிப்பிக்கப்படும்போது”, “விசுவாசத்தினாலே கேட்க” ஆரம்பிக்கிறோம். சுவிசேஷம் – இயேசுவைப் பற்றிய செய்தி – பிரசங்கிக்கப்படுகிறது, நாம் அதைக் கேட்கிறோம், அதன் மூலமாக நாம் மறுபடியும் பிறக்கிறோம். அதாவது, விசுவாசமானது உருவாக்கப்படுகிறது. “அவர் சித்தங்கொண்டு, தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மை சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்” யாக் 1:18.

சுவிசேஷமானது மந்திரமல்ல
இந்த சத்திய வசனம், என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனம். சுவிசேஷம், ஒரு மந்திரமல்ல. அது ஒரு மந்திரத்தைப் போல செயல்படுவதுமில்லை. புனிதமான ஒலிகளை திரும்பத்திரும்ப எழுப்புவதன் மூலமாக கிரியை நடப்பிக்காது. இயேசுக்கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததால் என்ன நிகழ்ந்தது என்பதை அறிவுபூர்வமாக உணர்த்தும் சத்தியமாக இருப்பதால்தான் அதினால் பலாபலன் விளைகிறது. தேவனுடைய குமாரன் யாரென்பதையும், அவர் பாவிகளை இரட்சிப்பதற்காக என்ன செய்தார் என்பதையும் நாம் அறிந்து விசுவாசிப்பதின் மூலமாக அவருடைய குமாரன் மகிமைப்பட வேண்டுமென்பதே கடவுளின் சித்தமாக இருக்கிறபடியால்தான் அது பலனை விளைவிக்கிறது.

1பேது 1:23 (என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனம், அதாவது சுவிசேஷம்) மூலமாக நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் மந்திரங்களை ஆதரித்து முழுஉலகமும் கூறும் கருத்து தவறானதே. அது சரித்திரத்தில் வேர் கொண்டிருக்கவில்லை. அது இயேசுக்கிறிஸ்துவில் வேர்கொண்டிருக்கவில்லை. சரித்திர உண்மைகளை அறிவுபூர்வமாக கூறுவது அதன் அஸ்திபாரமாக இல்லை. இயேசுக்கிறிஸ்துவின் உபதேசங்களை ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டிய மனித மனதின் பொறுப்பு அதற்கு வேராக இல்லை. இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை ஆத்துமாவானது கண்டு விசுவாசிக்க வேண்டியதான கடமையை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை.

சுவிசேஷமானது யோகா அல்ல
ஓ, நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறவர்களாகவும், வேதாகமத்தினால் நிறைந்தவர்களாகவும், பகுத்தறிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென நான் எவ்வளவாக விரும்புகிறேன். உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள யோகா வகுப்புகளில் பெயர் கொடுத்துவிட்டு, நீங்கள் செய்வதென்னவென்றே அறியாதவர்களாய் இராதேயுங்கள். மந்திரங்கள் வாயோடு சம்பந்தப்படுவது போல. யோகாவானது சரீரத்தோடு சம்பந்தமுடையதாக இருக்கிறது. இவை இரண்டும் ஒரே அணுகுமுறையைக் கொண்டவைகள். மினப்போலிஸ் (Minneapolis) YWCA இணையதளத்திற்குச் சென்று “உடற்தகுதி வகுப்புகள்” என்கிற இணைப்பிற்குள் சென்றீர்களானால், அதில் நீங்கள் யோகாவைக் குறித்த 22 விதமான இணைப்புகளைக் காண்பீர்கள். ஆரம்ப யோகா, உயர்நிலை யோகா, இளைஞர்களுக்கான யோகா, இளைஞரின் நடனமும் யோகாவும், அனைவருக்குமான யோகா போன்ற பல ஆலோசனைகளைக் காண்பீர்கள்.

யோகா மந்திரத்தைக் குறித்து ஒரு விளக்கம் இவ்வாறாகக் கூறப்படுகிறது: “ஒரு வார்த்தையையோ அல்லது வார்த்தைக் கோர்வையையோ ஒருவர் மனதிலும் உணர்விலும் பரவச நிலையை அடையும்வரைக்கும் இடைவிடாமல் கூறிக் கொண்டே வரவேண்டும். அப்படி செய்துவருகையில் ஒரு உன்னதமான உணர்வு கண்டடையப்படுகிறது”. யோகாவைக் குறித்து இவ்வாறாக விளக்கப்படுகிறது:

மனதிற்கும் சரீரத்திற்கும் இடையே இசைவை ஏற்படுத்துவதுதான் யோகாவின் நோக்கம். யோகாவின் தத்துவங்கள் இந்தியாவின் இயற்கை-வேதாந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தது. யோகா என்கிற வார்த்தை சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியது. அதற்கு ஐக்கியம் அல்லது இணைத்தல் என்று அர்த்தம். இந்த சித்தாந்தத்தின் நோக்கம், மனதிற்கும் சரீரத்திற்கும் இடையில் சரியான இசைவைக் கண்டுணர்ந்து அதன் மூலமாக சுய அறிவொளியைப் பெற்றுக் கொள்வதேயாகும். இதை அடைவதற்கு யோகாவானது, அசைவுகளையும், சுவாசத்தையும், தேகம் நிற்கும் நிலையையும், ஓய்வெடுத்தலையும், தியானத்தையும் உபயோகித்துக் கொள்கிறது. அதன் காரணமாக வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், ஜீவனோடும் எதிர்கொள்ள வழிவகுக்கிறது.

நீங்கள், என்றென்றைக்கும் நிற்கிறதும் அழியாததுமாகிய தேவவசனத்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். சிலுவையில் மரித்து உயிரோடெழுந்த இயேசுக்கிறிஸ்துவைக் குறித்த சுவிசேஷ வசனம் இது. வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பாதிருங்கள். வேறொரு சுவிசேஷம் இல்லையே. தேவனிடம் செல்வதற்கு வேறொரு வழியும் இல்லை. இறுதியான நன்மையை அடைவதற்கு, இயேசுக்கிறிஸ்துவைக் குறித்த அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டு, உணர்ந்து, விசுவாசிப்பதைத் தவிர்த்து வேறு வழியுமில்லை.

வார்த்தை மாம்சமானது
யோவா 1:1ல் “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்பதை நாம் படிக்கும் போது, அதை அத்தோடு நிறுத்திக் கொண்டுவிடப் போவதில்லை. அதன் அர்த்தம் விளங்காதவர்களாக, உலகத்தாரைப் போல மந்திரங்கள் யோகா மூலமாக மாம்சத்தில் பக்திப்பரவச நிலையை எய்தும்படிக்கு நாம் முயற்சி செய்யப் போவதில்லை. நாம் தொடர்ந்து 14ஆம் வசனம் வரைக்கும் அதைக் கடந்துங்கூட படிக்கப் போகிறோம்: “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது”.

ஆகவேதான், நாம் மறுபடியும் பிறப்பதற்குக் காரணமாயிருந்த அந்த வார்த்தையானது வெறும் மந்திரமாக இருக்க முடியாது. அந்த வார்த்தை மாம்சமானது. நமக்குள்ளே வாசம் பண்ணினார். குற்றமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். தேவனுடைய கோபத்தை சுமந்தவராக நமக்கு பதிலாக மரித்தார். சரீரப்பிரகாரமாக மீண்டும் உயிரோடே எழுந்தார். இப்போது சரித்திரபூர்வமான செய்தியாகிய சுவிசேஷ வடிவில் நம்மிடையே வருகிறார். அந்த வார்த்தை தேவனாயிருந்தது. ஆனால் அந்த வார்த்தை மாம்சமானது. இரட்சிப்பின் சரித்திரமாகிய சுவிசேஷம், அதாவது தேவனுடைய வார்த்தையின் வழியாய் இயேசுக்கிறிஸ்துவாகிய வார்த்தை நம்மிடம் வந்து, நம்மை உயிர்ப்பித்து, புதுப்பிக்கின்றது. நாம் இந்த வார்த்தையைக் கேட்கிறோம். அவருடைய கிருபையால் நாம் அதை விளங்கிக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்கிறோம். இப்படியாக இந்த வார்த்தையின் மூலமாக நாம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுகிறோம். இந்த வார்த்தைகளை நாம் மந்திரங்களின் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ நமது மனதிலிருந்து வெளியேற்றுவதை ஒருபோதும் முயற்சிக்கக் கூடவே கூடாது.

மறுபிறப்பிற்குக் காரணமாயிருப்பது
யோவா 1:11-13 வசனங்களில் சற்று கவனம் செலுத்துவோம்.

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்.

இந்த வசனபகுதி, 1பேது 1:22-23 வசனங்களைப் போலவே அமைந்துள்ளது. 12ஆம் வசனத்தில், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவர் நாமத்தின்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்கே தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரங் கொடுக்கப்படுகிறது. தேவனுடைய பிள்ளைகளாவது என்பது விசுவாசத்தோடு தொடர்புடையதாயிருக்கிறது. அந்த தொடர்பு எப்படி ஏற்படுகிறதென்று சொல்லப்படவில்லை – எது எதை உருவாக்குகிறதென்பது கூறப்படவில்லை – அவைகளுக்கிடையேயுள்ள தொடர்பை மாத்திரம் அது விவரிக்கிறது. நீங்கள் இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டீர்களானால், நீங்கள் அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தீர்களானால், நீங்கள் தேவனுடைய பிள்ளை. அதாவது, நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாகி, என்றென்றைக்குமாக தேவனுடைய குடும்பத்திற்கு சொந்தமாகிறீர்கள். ஆகவே தேவனுடைய பிள்ளைகளாவது, நமது விசுவாசத்தோடு தொடர்புடையதாயிருக்கிறது. இது 1பேது 1:22க்கு ஒத்ததாயிருக்கிறது.

அடுத்தபடியாக 13ஆம் வசனம், மறுபடியும் பிறப்பதென்பது நாம் விசுவாசிப்பதினால் ஏற்படுவதல்ல, அது தேவன் பிறப்பிப்பதாலேயே ஏற்படுகிறது. “அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்”. மறுபிறப்பு ஏற்படுவதற்கு மனிதன் காரணமாக இருப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதே 13ஆம் வசனத்தின் நோக்கமாகும்.

இரத்தத்தினாலோ, மாம்ச சித்தத்தினாலோ, புருஷசித்தத்தினாலோ அல்ல
இதில் மூன்று காரியங்கள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது: இரத்தத்தினால்(சரியான வார்த்தையின்படி இரத்தங்களினால்) அல்ல, மாம்ச சித்தத்தினால் அல்ல, புருஷசித்தத்தினால்(அதாவது, ஆணினால் அல்லது கணவனால்) அல்ல. வேறுவிதமாக சொல்வதானால், ஒருவன் கடவுளின் குடும்பத்தில் இருப்பதற்கும், எந்த மனிதனுடைய குடும்பத்திலோ அல்லது யூதகுலத்திலோ இருப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது. ஒருவன் இரண்டாவது முறை பிறப்பதென்பது, அவனை முதலில் பெற்றெடுத்தவர்களைப் பொறுத்ததல்ல.

“இரத்தங்களினால் அல்ல” – வெவ்வேறு இரத்தசம்பந்தமுடைய இரண்டு பேர் கூடி வருவதினால் எந்த பயனும் இல்லை என்று அர்த்தமாம். அவர்கள் ஒன்றுசேர்வது கடவுளுடைய பிள்ளையை பிறப்பிக்காது.

“மாம்ச சித்தத்தினால் அல்ல” என்பதற்கு மனிதஅவதாரத்தினால்(மாம்சத்தினால்) தேவனுடைய பிள்ளையை உருவாக்க முடியாது என்று அர்த்தம். யோவா 3:6ல் இயேசு, “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்” என்று கூறுகிறார். மாம்சத்தினால் அதை மட்டுந்தான் பிறப்பிக்க முடியும். மாம்சத்தினால் கடவுளுடைய பிள்ளையை உருவாக்க முடியாது.

“புருஷ சித்தத்தினால் அல்ல” என்பதற்கு, எவ்வளவுதான் பரிசுத்தமுள்ள புருஷனாக இருந்தாலும் அவனால் கடவுளுடைய பிள்ளையை உருவாக்க முடியாது என்று அர்த்தம்.

. . . ஆனால் தேவனால் முடியும்
அப்படியானால் யாரால்தான் முடியும் என்பதற்கு கடவுளால் மாத்திரமே முடியும் என்பதே பதில். வச 13: “அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்”. தேவனாலே பிறந்தவர்கள். மனித இரத்தத்தையும், மனித சித்தத்தையும், மனித கணவர்களையும் கடந்து அவர்கள் தேவனாலே பிறக்கிறார்கள். அதாவது, இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்கள் தேவனாலே பிறந்தவர்கள். அவர்களே மறுபடியும் பிறந்தவர்கள்.

யோவா 1:12-13 கூறுகிற முக்கியமான கருத்து, மறுபடியும் பிறப்பதென்பது கடவுளின் கிரியையேயழிய மனிதனுடையது அல்ல. நமது செயலாகிய விசுவாசத்திற்கும் கடவுளின் செயலாகிய பிறப்பித்தலுக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தை யோவான் எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்? கடவுள் பிறப்பிப்பதால் நமக்கு விசுவாசம் ஏற்படுகிறதா? அல்லது நமக்கு விசுவாசம் ஏற்பட்டதால் கடவுள் பிறப்பிக்கச் செய்கிறாரா? மறுபடியும் பிறப்பது விசுவாசத்தை உருவாக்குகிறதா, அல்லது விசுவாசம் மறுபிறப்பை உருவாக்குகிறதா? இந்த வசனங்கள் காண்பிக்கிற முக்கியத்துவம்: மாம்ச சித்தத்தினால் அல்ல, தேவனாலே. அதாவது மனிதனுடைய விசுவாசம் அல்ல, தேவனாலே பிறப்பிக்கப்படுவதே மறுபிறப்பை தீர்மானிக்கிறது.

தேவனுடைய பிறப்பித்தலே நமது விசுவாசத்திற்குக் காரணமாயிருக்கிறது
இதை 1யோவா 5:1ல் யோவான் தெளிவாகக் குறிப்பிடுகிறார். விசுவாசத்திற்கும் மறுபிறப்பிற்கும் உள்ள சம்பந்தத்தைக் குறித்து மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிற புதியஏற்பாட்டு வசனம் இதுவாகும். இதை நான் வாசிக்கையில் இதிலுள்ள இலக்கணத்தை கவனமாகக் கேளுங்கள்: “இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்”. ஜான் ஸ்டாட் (யோவானின் நிருபங்கள் என்ற புத்தகத்தில் பக்கம் 175இல்) இவ்வசனத்தைக் குறித்து இவ்வாறு கூறியிருப்பவற்றை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன்:

நிகழ்காலத்தில் உள்ள (விசுவாசிக்கிற எவனும்) என்பதும், நிறைவுபெற்ற காலத்தில் உள்ள (பிறந்திருக்கிறான்) என்பதும் கலந்து இங்கே எழுதப்பட்டிருப்பதை கவனிப்பது மிகவும் அவசியமானது. விசுவாசம் என்பது மறுபிறப்பின் விளைவேயொழிய அது மறுபிறப்பிற்குக் காரணமாயிருப்பதல்ல. நிகழ்காலத்தில் நாம் தொடர்ந்து விசுவாசிக்கிறவர்களாக இருப்பது, கடந்தகாலத்தில் நாம் மறுபிறப்பின் மூலமாக தேவனுடைய பிள்ளைகளாக ஆகியதின் பலனேயாகும். ஆகவே இதுவே மறுபிறப்பிற்கு அத்தாட்சியாகவும் இருக்கிறது.

கடந்த வாரத்திலும் இந்த வாரத்திலும் பார்த்த செய்திகளின் சாராம்சத்தைக் காண்போம்: ஆவிக்குரிய மரித்த தன்மையும் அவிசுவாசமுமாக இருந்த நிலமையிலிருந்து, கடவுளின் செயல்பாடாகிய மறுபிறப்பினால் ஒரு விசுவாசி சிருஷ்டிக்கப்படுகிறான். மறுபிறப்பில் ஒரு விசுவாசி சிருஷ்டிக்கப்படுகிறான் என்று சொல்வதற்குக் காரணம், இந்த மறுபிறப்பானது தேவனுடைய வார்த்தையினாலே ஏற்படுவதால்தான் (1பேது 1:23, யாக் 1:18) – அதாவது சுவிசேஷத்தின் மூலமாக சிருஷ்டிக்கப்படுகிறான். குருட்டுத்தனமும், அவிசுவாசமும் இருந்த இடத்தில், இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷமானது, பரிசுத்த ஆவியின் வல்லமையினால், ஆவிக்குரிய அறிவையும் விசுவாசத்தையும் உருவாக்குகிறது. சரித்திரபூர்வமான நிகழ்வுகளை விவரிப்பதின் மூலமாக இது நடைபெறுகிறது – அதாவது சிலுவையும் உயிர்த்தெழுதலும் – இயேசுக்கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது (2கொரி 4:4-6). இந்த சரித்திரமானது மறுபிறப்பு ஏற்படுவதற்கும், விசுவாசத்தை உயிர்ப்பிப்பதற்கும் தேவபெலனாயிருக்கிறது (ரோம 1:16).

சுவிசேஷத்தினால் இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள்
ஆகவே, மறுபிறப்பானது மந்திரங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ ஏற்படாது. மறுபிறப்பானது, சரித்திரபூர்வமாக வந்த இயேசுக்கிறிஸ்துவை இரட்சகராகவும், கர்த்தராகவும், வாழ்வின் பொக்கிஷமாகவும் ஏற்றுக் கொள்வதும் கடவுளால் அருளப்படுவதும், தெளிவானதும், அறிவுபூர்வமான ஏற்றுக் கொள்ளுதலுமாயிருக்கிறது. அதனால்தான் நான் உங்களை கேட்டுக் கொள்ள முடிகிறது – கேட்கவும் செய்கிறேன் : சுவிசேஷத்தின் மூலம் இயேசுக்கிறிஸ்துவைப் பாருங்கள். அவருடைய மகிமையையும் அவருடைய சத்தியத்தையும் காணுங்கள். அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய நாமத்தில் விசுவாசம் வையுங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாவீர்கள்.

1 விசுவாசம் தேவனிடத்திலிருந்து வருகின்ற ஈவு என்பதற்கு மேலும் இவ்வசனங்களைப் பாருங்கள்: 2தீமோ 2:25-26, எபே 2:8, பிலிப் 1:28, அப் 5:31, 16:14, 13:48, 18:27.

“Copyright 2011 John Piper.  Used by permission. www.desiringGod.org

%d bloggers like this: