Skip to content

மறுபிறப்பில் மனிதன் என்ன செய்கிறான்

(பிப்ரவரி 10, 2008ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)

Translation into Tamil by Vinotha Surendar

You Must Be Born Again: You Must Be Born Again: What Man Does in the New Birth delivered on February 10, 2007 By John Piper

1பேது 1: 13-25
ஆகையால் நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுக்கிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால் இங்கே பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிகாலங்களில் வெளிப்பட்டார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் இருக்கிறது. புல் உலர்ந்தது. அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்படுவருகிற வசனம் இதுவே.

உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, கிளாரென்ஸ் தாமஸின் சுயசரிதையான “என் தாத்தாவின் மகன்: ஜீவியசரித்திர சுருக்கம்” (My Grandfather’s son: A Memoir) என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டவர். வொர்செஸ்டர், மாஸாசுசெட்ஸில் உள்ள (Worcester, Massachusetts) ஹோலி கிராஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இருந்த காலங்களில் அவர் சிலகாலம் சபையை விட்டு விலகியிருந்தார். ஆனால் எப்பொழுதுமாக அல்ல. இதோ அவர் கூறிய கருத்து:

ஹோலிகிராஸில் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் நான் அங்குள்ள சபை ஆராதனைக்கு முதலும் கடைசியுமாக போனேன். எதனால் பாதிப்படைந்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை பழக்கவழக்கமாயிருக்கலாம் அல்லது குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், நான் பிரசங்கத்தின் நடுவிலேயே எழுந்து வெளியேறிவிட்டேன். என்னை ஆக்ரமித்திருக்கிற சமுதாயப் பிரச்சனைகள் அதற்குக் காரணமில்லை, மாறாக சபையின் பிடிவாதமான கொள்கைகளே காரணம். சற்றும் சம்பந்தமில்லாதவைகளாக அவைகள் எனக்குத் தோன்றிற்று. (51)

உண்மையான சம்பந்தம்—நீங்கள் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும்
போதகராக இருக்கின்ற நான் சம்பந்தத்தைக் குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதாவது, நான் கூறுவதை ஏன் மற்றவர்கள் கவனித்துக் கேட்க வேண்டும்? சம்பந்தம் என்பது தெளிவான அர்த்தமுடைய வார்த்தை அல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட அர்த்தங்களை அது குறிக்கலாம். ஒரு பிரசங்கமானது கேட்பவர்களின் மனதைத் தொட்டு, அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் போலத் தோன்றினால் அந்த பிரசங்கம் அவர்களோடு சம்பந்தமுடையது என்கிற அர்த்தம் கொள்ளலாம். அல்லது, அப்பிரசங்கமானது அவர்கள் அறிந்தோ அறியாமலோ அவர்கள் வாழ்வில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துமானால், அப்பிரசங்கம் அவர்களோடு சம்பந்தம் கொண்டிருக்கிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம். இந்த இரண்டாவது வகையான சம்பந்தமே எனது பிரசங்கங்களை வழிநடத்துகிறது. வேறுவிதமாக சொல்வதானால், உங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான விஷயங்களை, அவைகளை நீங்கள் அறிந்து கொண்டாலும் அறியாமற் போனாலும் சொல்ல விரும்புகிறேன். ஏன் அப்படி செய்கிறேனென்றால், எது நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது என்று கடவுள் தமது வார்த்தைகளின் மூலமாக சொல்லியிருக்கிறாரோ அதையே முக்கியமானதாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேனே ஒழிய, வசனத்தைத் தவிர்த்து, நமக்கு முக்கியமாகத் தோன்றுகிற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது எனது வழிமுறையல்ல.

இம்மாதிரியான ஒரு ஆராதனைக் கூட்டத்தில் தாமஸ் கிளாரன்ஸைப் போன்ற பல இளம் இலட்சியவாதிகள் வந்திருக்கக் கூடும். அவர்கள் சமுதாயப் பிரச்சனைகளைக் கண்டு உள்ளம் கொதித்துக் கொண்டிருப்பார்கள். இன வேறுபாடு, பூலோகம் வெப்பமயமாகுதல், கருக்கலைப்பு, குழந்தைகளின் சுகாதாரக்கேடு, வீடில்லாத நிலை, வறுமை, ஈராக்கின் யுத்தம், படித்தவர்களும் செய்கிற குற்றங்கள், மனித கடத்தல், முழுஉலகையும் பாதிக்கிற பால்வினை நோய்கள், தகப்பனில்லாத பிள்ளைப்பிறப்பின் பெருக்கம், கடன் பிரச்சனைக்குக் காரணமான பேராசைகள், சட்டத்திற்கு விரோதமாக தேசத்திற்குள் வந்தவர்களை நடப்பிக்கும் விதம், சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வரும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்ற காரியங்களினால் கோபங் கொண்டவர்களாக அவர்கள் இங்கு வந்திருப்பார்கள். நானோ, ஒரு மனிதன் எப்படி மறுபடியும் பிறப்பதென்பதைக் குறித்து இன்று பேசப் போவதாக அறிவிப்பு கொடுப்பதை அவர்கள் கேட்பார்கள். ஒருவேளை அவர்களும் தாமஸ் கிளாரன்ஸைப் போல, உலகம் இப்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கும் இவர் சொல்லப் போவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நினைத்தவர்களாக இந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே போய்விடக்கூடும்.

மறுபிறப்பின் மிகுந்த சம்பந்தம்
அப்படி நினைத்து வெளியே போனவர்கள் தவறு செய்கிறார்கள் – இருமடங்கான தவறு செய்கிறார்கள். முதலாவதாக, மறுபிறப்பைக் குறித்து இயேசு சொல்வதற்கும் இன்றைக்கு உலகிலே காணப்படுகிறதான இனவெறி, புவி வெப்ப மயமாகுதல், கருக்கலைப்பு, சுகாதாரக்கேடு போன்ற பிரச்சனைகளுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது என்பதை அவர்கள் காணத் தவறுகிறார்கள். மறுபிறப்பின் கனியானது எப்படியிருக்கும் என்பதை நாம் வரும் வாரங்களில் தியானிப்போம்.

இரண்டாவதாக அவர்கள் செய்கிற தவறு, இந்தவிதமான பிரச்சனைகள்தான் வாழ்க்கையிலேயே பெரும் பிரச்சனைகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இல்லை. அப்படியில்லை. அவைகள் ஜீவ-மரணப் போராட்டங்கள்தான். என்றாலும் அவைகள் அதிமுக்கியமான பிரச்சனைகள் அல்ல. அவைகளுக்குத் தீர்வு காண்பதென்பது, உலகில் வாழப்போகிற சொற்ப காலத்துக்கு பெறப்படும் தீர்வுதான். ஆனால் அதற்குப் பின்பாக நித்திய காலத்துக்கும் உண்டாயிருக்கப் போகிற பிரச்சனைகளிலிருந்து தீர்வுகாண அவைகளால் இயலாது. இவ்வுலகில் வாழும் ஜீவிய காலமான ஏறக்குறைய எண்பது ஆண்டுகளை எப்படி பிரச்சனைகளில்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதைக் குறித்துதான் அவர்களால் சிந்திக்க முடியுமே தவிர, எண்பது கோடி கோடி ஆண்டுகள் கடவுளின் பிரசன்னத்தில் எப்படி சிறப்பாக வாழலாம் என்பதைக் குறித்து அவர்களால் தீர்மானிக்க முடியாது.

கடவுளின் பிரதிநிதியாக வாரா வாரம் இங்கு நிற்கிற என்னுடைய வேலை, மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி, வேதாகமத்தின் மூலமாக கடவுள் வெளிப்படுத்தியுள்ள அவருடைய சித்தத்தை விட்டு சற்றும் விலகாமல், (இவைகளை நீங்களே உங்கள் வேதத்தில் பார்க்கும்படியாக) அவைகளைப் பகிர்ந்தளிப்பதே. அத்தோடு, இங்கு வந்திருக்கும் கிளாரென்ஸ் தாமஸைப் போன்று ஆத்திரமுற்றிருக்கும் இளம் இலட்சியவாதிகளும், மற்ற எல்லோருமே, கடவுள் மிகவும் முக்கியமானது என்று சொல்கிற பிரச்சனையின் ஆழத்தை கடவுளின் கிருபையினாலே கண்டு உணரும்படியாக ஜெபிப்பதுமே எனது பணி.

இயேசுவின் மகிமையைப் பார்ப்பதும் அனுபவிப்பதும்
“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசுக்கிறிஸ்து யோவா 3:3ல் கூறுகிறார். காணமாட்டான் என்றால் அவருடைய ராஜ்ஜியத்துக்குப் புறம்பே இருப்பான் என்று அர்த்தம். மத் 8:11-12 வசனங்களில் இயேசுக்கிறிஸ்து, கடவுளுடைய ராஜ்ஜியத்துக்கு வெளியே இருள் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறார்: “இருளிலே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்”. அவர் அதை “நித்திய ஆக்கினை” (மத் 25:46) என்று குறிப்பிடுகிறார். இதற்கு எதிர்மாறானது, அண்டசராசரங்களிலேயே மிகவும் உயர்ந்தவரோடு, அழியாத சந்தோஷத்தை, சதாகாலமும் தேவனுடைய ராஜ்ஜியத்திலே அனுபவிப்பதாகும் (யோவா 17: 24 ).

இயேசுக்கிறிஸ்துவின் மகிமையை அவரவர் தனிப்பட்ட விதத்தில் உணர்ந்து கொள்வதையும், அவருடைய நாமத்தினாலே கூடுகிற ஜனங்கள் அனைவரோடும் சேர்ந்து அவருடைய ராஜ்ஜியத்தில் அனுபவிப்பதைக் காட்டிலும் முக்கியமான விஷயம் வேறு எதுவும் இல்லை. கடலானது தண்ணீரால் நிரப்பப்பட்டிருப்பது போல, அப்போது முழு உலகமும் சமாதானத்தினாலும் நீதியினாலும் நிறைந்திருக்கும். எனவே, உங்கள் ஆத்துமாவின் நிமித்தமாகவும், உலகத்தின் நிமித்தமாகவும் நீங்கள் வெளியே எழுந்து போக மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மறுபிறப்பில் நமது பங்கு : விசுவாசம்
மறுபிறப்பைக் குறித்த இந்த ஒன்பதாவது தியானத்தில் நாம் எழுப்புகிற கேள்வி : நமது பங்கு என்ன? மறுபிறப்பின் நிகழ்வில் நாம் செய்ய வேண்டியதென்ன? அதை நடப்பிப்பதில் நாம் எவ்விதத்தில் பங்குபெறுகிறோம்? வேதாகமத்தில் காணப்படுகிற இதற்கான பதிலை நான் முதலில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். அதன் பின்னர் அதை வேதத்தில் எங்கே காணலாம் என்பதை கூறுகிறேன்.

மறுபிறப்பில் உங்களுடைய பங்கு விசுவாசிப்பதே – மரித்து, உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராகவும், கர்த்தராகவும், உங்கள் வாழ்க்கையின் பொக்கிஷமாகவும் விசுவாசிப்பதே உங்கள் பங்கு. மறுபிறப்பில் நீங்கள் செய்வது கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பது. கிறிஸ்து உண்மையிலேயே யாரென்பதை உணர்ந்து, அவரை மிக உயர்ந்த பெருமதிப்புள்ள இரட்சகராகவும், கர்த்தராகவும், அண்டசராரசரங்களின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் கருதி ஏற்றுக் கொள்வதே மறுபிறப்பை நடப்பித்தலில் உங்களுடைய பங்காகும்.

மறுபிறப்பும், விசுவாசமும் ஒரே நேரத்தில்
நமது கேள்விக்கு விடை இவ்வாறாகத் தொடர்கிறது. உங்களுடைய பங்காகிய விசுவாசிப்பதும், கடவுளின் பங்காகிய மறுபிறப்படையச் செய்வதும் ஒரே நேரத்தில் நிகழுகிறது. நீங்கள் ஒன்றையும் அவர் மற்றதையும் ஒரே சமயத்தில் செய்கிறீர்கள். மேலும் – இது மிகவும் முக்கியமானது – உங்கள் பங்கை நீங்கள் செய்வதற்குத் தீர்மானம் எடுப்பது அவர் செய்வதால்தான். அவர் உங்களை மறுபடியும் பிறக்கச் செய்வதுதான் நீங்கள் விசுவாம் அடைவதற்கு காரணமாக இருக்கிறது.
ஒரு காரியம் மற்றொன்று ஏற்படுவதற்குக் காரணமாக இருக்குமானால், இரண்டுமே ஒரே சமயத்தில் நிகழ்வதாக கூறுவது எப்படியென்கிற குழப்பம் உங்களுக்கு வருமானால், நெருப்பையும் உஷ்ணத்தையும் நினைத்துப் பாருங்கள். அல்லது நெருப்பையும் வெளிச்சத்தையும் கற்பனை செய்யுங்கள். நெருப்பு வந்த அந்த நொடியிலேயே அங்கு உஷ்ணம் தோன்றிவிடுகிறது. நெருப்பு ஏற்பட்டவுடனேயே வெளிச்சமும் ஏற்படுகிறது. உஷ்ணந்தான் நெருப்பைத் தோற்றுவித்தது என்று நாம் கூற மாட்டோம். அல்லது வெளிச்சம்தான் நெருப்பு ஏற்படக் காரணம் என்று கூற மாட்டோம். நெருப்பு, உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் பிறப்பித்தது என்று கூறுவோம்.

மறுபிறப்பில் நமது பங்கு என்னவென்ற கேள்விக்குரிய பதிலாக நான் இதைத்தான் வேதாகமத்தில் காண்கிறேன். இப்போது வேதத்திலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

“சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல்”
1பேது 1:22-23ஐ முதலாவதாகப் பார்ப்போம்: “நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே
ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”.

இதில் அநேக காரியங்களைப் பார்க்கலாம். இப்படி நடந்ததின் நோக்கம் அன்பு. “மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, . . சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டிருக்கிறவர்களாய் இருக்கிறபடியால். .”. எதற்காகவென்றால், மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாய் இருக்கும்படிக்கே. ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்வதால் சகோதர சிநேகம் உருவாகிவிடாது – இதுவரை இல்லை. ஆத்துமவை சுத்தமாக்குவது, “மாயமற்ற சகோதர சிநேகம் ஏற்படுவதற்காக”. “சகோதர சிநேகத்தின் முற்றுப் பெற்ற நிலை” அது. ஆவியின் கனியில் அன்பானது மிகவும் அடிப்படையானது. 22ஆம் வசனம், “மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து” என்று கூறும்போது, சகோதர சிநேகத்தைக் காட்டிலும் அடிப்படையான ஒன்றை குறிப்பிடுகிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “கீழ்ப்படிதல்” அன்பினால் ஏற்படும் கீழ்ப்படிதல் அல்ல. அன்பு செலுத்தும்படியான கீழ்ப்படிதலுக்கு நடத்திச் செல்வது. அப்படியானால் அது என்ன கீழ்ப்படிதல்? “சத்தியத்திற்கு” ஏற்ற விதத்தில் சரியாக நடந்து கொள்வது. “சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல்” (வச 22) என அது அழைக்கப்படுகிறது. அந்த சத்தியமாவது என்ன? இந்த பகுதியின்படி, சத்தியம் என்பது கடவுளின் வார்த்தையே. 23ஆம் வசனத்தில் “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனம்” எனக் காண்கிறோம். 25ஆம் வசனத்தில் இந்த கர்த்தருடைய வார்த்தையே நற்செய்தியாக சுவிசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது: “உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே”. சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல் என்று நாம் 22 ஆம் வசனத்தில் காண்பதற்கு அர்த்தம் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்பதே.

சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படி: இயேசுவை விசுவாசி
சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்றால் என்ன? இயேசுவை விசுவாசித்தல் என்பதே அதன் அர்த்தம். ஏனென்றால், “கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது . . இரட்சிக்கப்படுவீர்கள்” (அப் 16:31, 1கொரி 15: 1-2) என்று சுவிசேஷம் இலவசமாக அறிவிக்கிறது. முதலாவதும் அடிப்படையானதுமான கட்டளையாக சுவிசேஷம் கூறுவது, சகோதரரை நேசிக்கும்படியாக அல்ல. சுவிசேஷம் முதலாவதாக எதிர்பார்ப்பது விசுவாசத்தை. ஆகவே இந்த அடிப்படையான ஆரம்ப நிலையில் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்பது விசுவாசிப்பதேயாகும். இவ்வாறாகத்தான் பேதுரு மூன்றாம் அதிகாரத்தில் கூறுகிறார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்காத கணவன்மாரை அவர் அங்கு “திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்” என்று வர்ணிக்கிறார். “அந்தப்படி, மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து . . . ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்” (1பேது 3:1,2). திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் என்றால் அவர்கள் விசுவாசிகளல்ல என்று அர்த்தம். இதேவிதமாக 1பேது 2:8 (“திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து”), 4:17 (“சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்”) ஆகிய வசனங்களிலும் காணலாம். வசனத்திற்குக் கீழ்ப்படியாமை என்பது சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாமை. அதாவது விசுவாசியாமல் இருத்தல்.

பவுலும் இதேவிதமாக 2தெச 1:8ல் கூறுகிறார். “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை செலுத்தும்படிக்கு” கர்த்தர் வருகிறார் என்று பவுல் கூறுகிறார். வேறுவிதமாக சொல்வோமானால் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷம், விசுவாசிக்கும்படியாக அழைக்கிறது. அதற்கு ஜனங்கள் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். அவர்கள் விசுவாசிக்கவில்லை. “சத்தியவசனமாகிய சுவிசேஷத்தை” (எபே 1:13, கொலோ 1:6) அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

1பேது 1:22ல் பேதுரு, “நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து” என்று கூறும்போது அதை என்ன அர்த்தத்தில் கூறுகிறாரென்றால், “நீங்கள் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்தபடியினால் உங்களுடைய ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விசுவாசம்தான் உங்களை மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி செய்யும்” என்கிறார். விசுவாசம் அன்பின் கிரியைகளை ஏற்படுத்தும் (கலாத் 5:6). மாயமற்ற விசுவாசத்தினாலே அன்பு உருவாகிறது (1தீமோ 1:5).

விசுவாசித்தல்: மறுபிறப்பினால் ஏற்படும் கிரியை
யோவா 3:5, தீத்து 3:5 ஆகிய வசனங்களின் மூலமாக மறுபிறப்பில் சுத்திகரிக்கப்படுதல் சம்பந்தப்பட்டிருப்பதை பார்த்தோம் என்பதை நினைவில் வையுங்கள் – தண்ணீர், முழுக்கு ஆகிய உருவகங்கள் சொல்லப்பட்டுள்ளது. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன்” என்று இயேசுக்கிறிஸ்து கூறினார். பவுலும், “மறுஜென்ம முழுக்கினாலும் . . . நம்மை இரட்சித்தார்” என்று குறிப்பிடுகிறார். சத்தியத்திற்கு கீழ்ப்படிந்தபடியால் – அதாவது சுவிசேஷத்தை விசுவாசித்தபடியால், நமது ஆத்துமாவானது சுத்தமாக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக
சுத்திகரிக்கப்பட்டபடியால் அது நம்மை மாயமற்ற சிநேகத்திற்கு வழிநடத்துகிறது என்று பேதுரு கூறுகிறார். இந்த அன்பு சாதாரண அன்பல்ல. பேதுரு, சுத்தமாக்கப்பட்டதாகக் கூறுவது மறுபிறப்பினால் ஏற்படும் சுத்திகரிப்பையே கூறுகிறார் என நான் எடுத்துக் கொள்கிறேன். யோவா 3:5ல் தண்ணீரினாலும், தீத்து 3:5ல் முழுக்கினாலும் ஏற்படுகிறதான சுத்திகரிப்பே இதுவுமாகும். இதுவே மறுஜென்மம்.

“சத்தியத்திற்குக் கீழ்ப்படிதலே” மறுபிறப்பை ஏற்படுத்தும். அதாவது, மறுபிறப்பு இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிப்பதால் ஏற்படுவது. ஆகவேதான் நான் கூறுவதாவது, மறுபிறப்பில் நமது பங்கு விசுவாசிப்பதாகும். நாம் விசுவாசிப்பதின் மூலமாக மறுபிறப்பை அடைகிறோம்.

கடவுள் மறுபிறப்பை விளைவிப்பதால் நமக்கு விசுவாசம் ஏற்படுகிறது
மறுபிறப்பு என்கிற விதத்தில் பேதுரு இதை 23ஆம் வசனத்தில் விவரிக்கிறார். 22-23ஆம் வசனங்களைப் படித்து அதிலுள்ள தொடர்பைக் காண்போம். “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”. மறுபிறப்பில் நமது பங்கிற்கும் (வச22), மறுபிறப்பில் கடவுளின் நடப்பித்தலுக்கும் (வச 23) உள்ள சம்பந்தம், விளைவுக்கும், அவ்விளைவின் காரணிக்கும் உள்ள சம்பந்தத்துக்கு ஒத்ததாயிருக்கிறது. நமது செயலுக்கு அடிப்படை காரணம் கடவுளின் செயல்பாடுதான். சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்வதினால் மறுபிறப்பில் நமது பங்கை செயல்படுத்துகிறோம். ஆனால் கடவுள் நம்மை உயிர்ப்பித்தபடியினால்தான் நாம் அப்படி செய்யக் கூடியவர்களாகிறோம்.

மறுபிறப்பில் நமது பங்கை நிறைவேற்றுவதற்கு கடவுளின் செயல்பாடுதான் காரணமாயிருக்கிறது என்பதற்கு இந்த வசனபகுதியில் மூன்று குறிப்புகளைக் காணலாம்.

1) வரிசைக்கிரமம்: மறுபிறப்பு, விசுவாசம் அன்பு
இந்த வசனம் வரிசைப்படுத்திக் கூறியிருக்கும் காரியங்களை கவனியுங்கள்: 22ஆம் வசனத்தில் ஒரு கட்டளை காணப்படுகிறது: “சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்”. அப்படியான அன்பிற்கு ஒரு நிபந்தனையும் கூறப்பட்டுள்ளது. அதாவது, சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து நமது ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது. இவை இரண்டிற்கும் முன்நிபந்தனையாக இருப்பது கடைசியிலே 23ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் மறுபிறப்பை விளைவிப்பதால் நீங்கள் சத்தியத்தை விசுவாசிக்கவும், உங்கள் இருதயத்தை சுத்தமாக்கிக் கொள்ளவும், ஒருவரையருவர் சிநேகிக்கவும் முடிகிறது. ஆகவே நமது விசுவாசத்திற்கும், அன்பு செலுத்துதலுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதால்தான். விசுவாசமும் அன்பும் ஏற்பட அவரே காரணமாகிறார்.

2) கருவியாயிருப்பது: சுவிசேஷம்
நமக்கு விசுவாசம் ஏற்படும்படியாக கடவுள் நம்மில் மறுபிறப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாயிருப்பது அவருடைய வசனமே என்பது இரண்டாவது குறிப்பாகும். வச 23: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”. இங்கு அழிவில்லாத வித்து என்று கூறப்பட்டிருப்பதை சிலர் பரிசுத்த ஆவி என்று எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியும் கருதலாம் (1யோவா 3:9ஐப் பாருங்கள்). ஆனால் நான் “அழிவில்லாத வித்து” என்பதை “கர்த்தருடைய வசனமாக” எடுத்துக் கொள்ள எண்ணமுடையவனாயிருக்கிறேன். அந்த வித்தானது “அழிவில்லாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வசனமும், “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமாக” விவரிக்கப்பட்டுள்ளது. அவை இரண்டும் ஒன்றுதான். “அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்பதும் “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே (ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்)” என்பதும் ஒரே காரியத்தைக் குறிப்பிடுவதாக நான் கருதுகிறேன். 24. 25 ஆம் வசனங்களின் கவனம் முழுவதும் வசனம் என்பதில் இருக்கிறதேயொழிய ஆவியைக் குறித்து அது குறிப்பிடவில்லை என்பதால் மேற்கூறிய கருத்து நிருபணமாகிறது.

இதில் நாம் அறிவது என்னவென்றால், மறுபிறப்படைவதற்கு தேவன் தமது வசனத்தைக் கருவியாக உபயோகிக்கிறார். வசனமானது, விசுவாசத்தை உயிர்பெறச் செய்வதால் மறுபிறப்பு ஏற்படுகிறது. இதைத்தான் பவுல் ரோம 10:17ல் கூறுகிறார்: “விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்”. ஆகவே, மறுபிறப்பில் நமது பங்கு விசுவாசிப்பதாக இருக்குமானால், வசனமே விசுவாசத்தை ஏற்படுத்துமானால் (“வசனத்தின் மூலமாக” தேவன் நம்மில் விசுவாசத்தை ஏற்படுத்துகிறார் என்று 23ஆம் வசனம் கூறுகிறது) அந்த வசனத்திற்கும், விசுவாசத்திற்கும் பின்னால் தேவனுடைய முடிவெடுக்கும் கரம் இருக்கிறது. அதை யாக்கோபு கூறுகிறார், யாக் 1:18: “அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலனாவதற்கு நம்மை சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்”.

3) அனைத்திற்கும் ஆதிகாரணர்: கடவுள்
கடவுள் மறுபிறப்பை விளைவிப்பதே நமது விசுவாசத்திற்குக் காரணம் என்பதின் மூன்றாவது குறிப்பு, பேதுரு எருசலேம் ஆலோசனை சங்கத்தில், யூதர் மாத்திரமல்லாமல், யூதரும் புறஜாதியாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று கூறியதாகும். இதை அவர் சொல்லியிருக்கும் விதமாவது: “விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் (கடவுள்) சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி செய்தார்”. 1பேது 1:22ல் கூறியதைப் போலவே அவர் இங்கும் கூறுகிறார் “ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் . . .” அதாவது, “விசுவாசத்தினாலே உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் . . ” . அப் 15:9ல்தான் மிகவும் முக்கியமானதொன்றை அவர் குறிப்பிடுகிறார்: முடிவாக நமது விசுவாசத்தின் மூலமாக கடவுள் செய்கிறார். “விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் (கடவுள்) சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி செய்தார்”. அவர்களுடைய விசுவாசத்தைக் கொண்டு கடவுள் அவர்களுடைய இருதயங்களை சுத்தம் செய்தார். மறுபிறப்பில் நமது விசுவாசமும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கிறதென்பது இதனால் தெரிகிறது. ஆனால் அதுவே இறுதியானதல்ல. அது ஏற்படுவதற்கு அதுவே காரணமல்ல. கடவுள்தான் அதற்குக் காரணர்.

இதன் விளைவு என்ன
இதனால் உங்களுக்கு என்ன விளைகிறது? இதனால் நான்கு காரியங்கள் விளைகின்றன. நீங்கள் சந்தோஷத்தோடு அவைகளை ஏற்றுக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறேன்.
1) நீங்கள் இரட்சிப்படைவதற்கு விசுவாசிக்க வேண்டும். “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது . . இரட்சிக்கப்படுவீர்கள்” (அப் 16:31). மறுபிறப்பு, விசுவாசத்தின் இடத்தை எடுத்துக் கொள்வதில்லை. மறுபிறப்பு விசுவாசத்தையும் உள்ளடக்கியுள்ளது. மறுபிறப்பு என்பது விசுவாசத்தின் பிறப்பு.

2) உங்களை அப்படியே விட்டுவிட்டால் நீங்கள் விசுவாசிக்கவே மாட்டீர்கள். மரித்தவர்கள் தாங்களாகவே சுவாசிப்பார்கள் என்கிற நம்பிக்கை கிடையாது.

3) இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரும், மிகுந்த அன்புள்ளவரும், கிருபையில் வல்லமையானவருமாகிய கடவுளே உங்களில் விசுவாசம் உருவாவதற்குக் காரணமாயிருக்கிறார்.

4) 22ஆம் வசனத்தின்படி, மறுபிறப்படைந்த இருதயத்தின் கனி அன்பாகும். மறுபிறப்பு தொடாத காரியம் எதுவும் வாழ்க்கையில் இல்லை: இன வேறுபாடு, புவி வெப்ப மயமாகுதல், கருக்கலைப்பு, குழந்தைகளின் சுகாதாரக்கேடு, வீடில்லாத நிலை, வறுமை, ஈராக்கின் யுத்தம், படித்தவர்களும் செய்கிற குற்றங்கள், மனித கடத்தல், முழுஉலகையும் பாதிக்கிற பால்வினை நோய்கள், தகப்பனில்லாத பிள்ளைப்பிறப்பின் பெருக்கம், கடன் பிரச்சனைக்குக் காரணமான பேராசைகள், சட்டத்திற்கு விரோதமாக தேசத்திற்குள் வந்தவர்களை நடப்பிக்கும் விதம், சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வரும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள். மறுபிறப்பு இதில் எதையும் விட்டு வைக்காது. அது மாத்திரமல்ல, நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசித்து இயேசுவின் முகத்தை என்றென்றுமாக தரிசிப்பதான முக்கியமான நன்மையையும் அடைவீர்கள்

விசுவாசியுங்கள், விடுதலை பெறுங்கள்
இயேசுக்கிறிஸ்துவின் சார்பாக நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இயேசுக்கிறில்துவை விசுவாசியுங்கள். அவரை உங்களுடைய இரட்சகராகவும், கர்த்தராகவும், உங்கள் வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களே, நீங்கள் உங்களை கடவுளின் கிருபையின் கரத்தின்கீழே தாழ்த்துங்கள். தோல்வியுறாத, நித்தியமான தேவபிள்ளைகளாகிய நீங்கள் துன்பப்படுகிறவர்களை விடுவிப்பதற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அதிலும் முக்கியமாக நித்தியகால துன்பத்துக்காளானவர்களை விடுவியுங்கள்.

“Copyright 2011 John Piper.  Used by permission. www.desiringGod.org

%d bloggers like this: