Skip to content

மறுஜென்ம முழுக்கின் மூலமாக

(பிப்ரவரி 3, 2008ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)

Translation into Tamil by Vinotha Surendar

You Must Be Born Again: Through the Washing of Regeneration delivered on February 3, 2007 By John Piper

தீத்து 3: 1-8
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. ஏனெனில் முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம் பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையருவர் பகைக்கிறவர்களுமாய் இருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும், மனுஷர் மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்தஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு நித்தியஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்து திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.

5ஆம் வசனத்தில் மறுஜென்ம என்கிற வார்த்தை இருப்பதை கவனியுங்கள்: “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் (கடவுள்) நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்”. மறுஜென்மம் என்கிற வார்த்தையானது மறுபிறப்பு, இரண்டாம் பிறப்பு, அல்லது உயிர்ப்பிக்கப்படுதல் ஆகியவைகளைக் குறிப்பிடுகிற மற்றொரு வார்த்தையாகும். இதைத்தான் நாம் இன்று தியானிக்கப் போகிறோம். அதாவது, மறுபிறப்பு அல்லது மறுஜென்மம்.

மறுபிறப்பு என்றால் என்ன என்பதைக் குறித்து நாம் பார்த்தோம். அது ஏன் அவசியம் என்பதைக் குறித்தும் தியானித்தோம். மேலும் இந்தத் தொடர் தியானத்தில், அது எப்படி நிகழ்கிறது என்பதையும் கடைசியாக தியானித்தோம். அதே கேள்வியை நாம் இன்றைக்கும் தொடரப் போகிறோம்: கடவுள் மறுபிறப்பை எவ்விதத்தில் நிகழச் செய்கிறார்? அதற்கு முன்னதாக, மறுபிறப்பு என்றால் என்ன, அது ஏன் அவசியம் என்பதைக் குறித்ததான சில விசேஷித்த புதிய செய்திகளை இவ்வசனங்களில் காணப்படுவதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
மறுபிறப்பைப் பற்றிய புதிய விசேஷித்த செய்தி
மறுபிறப்பு என்றால் என்ன என்பதைப் பற்றிய அபூர்வமானதொரு காரியத்தை நாம் கவனிப்போம். 5ஆம் வசனத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள மறுஜென்மம் என்கிற வார்த்தையானது முழுவேதாகமத்திலேயும் இன்னும் ஒரேயொரு முறை மாத்திரந்தான் உபயோகிக்கப்பட்டுள்ளது. (“மறுஜென்ம (அதாவது, கிரேக்க மொழியில் palingenesias) – முழுக்கினால் கடவுள் . . நம்மை இரட்சித்தார்”). அதே வார்த்தை மத் 19:28இல், இயேசுக்கிறிஸ்து தம்முடைய பன்னிரெண்டு சீஷர்களையும் பார்த்து கூறுவதிலும் காணப்படுகிறது: “அதற்கு இயேசு: மறுஜென்ம காலத்திலே ( கிரேக்க மொழியில் en te palingenesia என்கிற வார்த்தை) மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”. இது, சர்வசிருஷ்டிப்பும் மறுபிறப்படைவதைக் குறிப்பிடுகிற வசனபகுதி. ஏசா 65:17, 66:22 ஆகிய வசனங்களில், “புதிய வானமும், புதிய பூமியும்” என ஏசாயா குறிப்பிடுவதற்கு ஒத்தது.

1) சர்வசிருஷ்டியின் மறுபிறப்பு
மனிதர்கள் மாத்திரமல்ல, சர்வசிருஷ்டியும் மறுபிறப்பை அடையும் என்கிற விதத்தில் இயேசுக்கிறிஸ்து கூறுகிறார். வீழ்ச்சிக்குள்ளாகி, கறைபடிந்து, ஒழுங்கற்றுப் போனது மனிதர்கள் மட்டுமல்ல. முழு சிருஷ்டியுமே அந்த நிலமைக்கு ஆளானது. ஏன் அப்படி ஆனது? மனிதன் ஆதியிலே பாவம் செய்தபோது, பாவத்தின் கொடூரம் சகல சிருஷ்டிப்பிலும் வெளிப்படையாகப் பிரதிபலிக்கும்படியாக கடவுள் செய்தார். வியாதிகள், சீரழிவுகள், இயற்கையின் அழிவுகள் – இவை யாவுமே, பாவம் உலகத்தில் புகுந்து ஊடுருவி விட்டபடியால் பார்க்கும்படியாக, கேட்கும்படியாக, உணரும்படியாக ஏற்பட்டுவிட்ட விளைவுகள்.

இதைக் குறிப்பிடுகிற முக்கியமான வேதாகம பகுதி ரோம 8:20-23. இந்த தியானத்திற்கு அது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சிருஷ்டிப்பானது “மறுஜென்மம்” ஆகிய “உயிர்ப்பிக்கப்படுதலை” பெறுவதற்கு தவித்துக் கொண்டிருப்பதை குறித்து இயேசுவானவர் கூறுவதை இப்பகுதி உறுதிப்படுத்தி விளக்குகிறது.

அதேனென்றால், சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக் கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்த சிருஷ்டியானது (வெறும் மக்கள் மாத்திரமல்ல, சகலமும்!) சுயஇஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே (அதாவது கடவுளாலேயே! ஏனென்றால் கடவுள் மாத்திரமே சிருஷ்டியை நம்பிக்கையோடே மாயைக்குக் கீழ்ப்படுத்த முடியும்) மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. (பெரிதான மகிமையை அடையும் நாளிலே, சர்வசிருஷ்டியும் தேவனுடைய பிள்ளைகளோடுகூட சேர்ந்து மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக் கொள்ளும்). ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வசிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. (இயேசுக்கிறிஸ்து சொல்வதைப் போன்று இங்கே புதுஜீவன் உருவாவது தென்படுகின்றது) சிருஷ்டி மாத்திரமல்ல, ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவீகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

இவையெல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது, நமக்கு இப்படியாகத் தோன்றுகிறது: சகல சிருஷ்டிப்பும் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பது கடவுளின் நோக்கமாக இருக்கிறது. மாயைக்கும், களங்கத்திற்கும், வியாதிகளுக்கும், சீரழிந்து போனதற்கும், நாசத்திற்கும் ஆளாகிப் போன இந்த அண்டசராரசமானது முற்றிலும் புதிதான மாற்றத்தை அடைய வேண்டியதாயிருக்கிறது – அது புதிய வானமும் புதிய பூமியுமாகிய நிலைமையே. இதுவே சர்வசிருஷ்டியும் அடையப் போகிற மகிமையான புதுப்பிக்கப்படுதலாகும். சர்வசிருஷ்டியும் அடையப் போகிற மகிமையான மறுஜென்மம் ஆகும்.

தீத்து 3:5ல் பவுல் இந்த வார்த்தைகளை உபயோகிக்கையில், நமது மறுஜென்மமும் இதில் ஒரு பகுதிதான் என்பதை நாம் காணும்படியாக விரும்புகிறார். மறுபிறப்பின் காரணமாக நாம் இப்போது அடைகின்ற புதிதான ஜீவனானது, சர்வசிருஷ்டியும் புதுப்பிக்கப்படும் சமயத்தில் நாமும் நமது சரீரத்தில் அடையப்போகிற மகிமையான ஜீவனுக்கு முதற்பலனாக இருக்கிறது. இதையே பவுல் ரோம 8:23ல் “ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட (நாம் ஆவியினால் மறுபடியும் பிறந்திருப்பதால்) நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவீகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

ஆகவே நீங்கள் மறுபிறப்பைக் குறித்து சிந்திக்கும்போது, வரப்போவதின் முதற்பலனாக அது இருப்பதை உணருங்கள். உங்களுடைய சரீரமும், இந்த முழுஉலகமுங்கூட ஒரு நாளிலே இந்த புதுப்பிக்கப்படுதலிலே பங்குபெறும். நமது ஆத்துமாவை உயிர்ப்பித்து, தளர்ந்து போனதான ஒரு சரீரத்திலும், வியாதியாலும் நாசமோசங்களினாலும் பாதிக்கப்பட்ட ஒரு உலகத்திலும் வசிக்க வைப்பது கடவுளின் இறுதியான நோக்கமல்ல. புதுப்பிக்கப்பட்ட உலகமும், புதுப்பிக்கப்பட்டதான சரீரமும், புதுப்பிக்கப்பட்ட ஆத்துமாவும் உடையவர்களாக, புதுப்பிக்கப்பட்ட உணர்வோடு கடவுளைப் போற்றி புகழ்ந்து அவரை அனுபவிக்கும்படியாக அவற்றை நாம் உபயோகிக்க வேண்டுமென்பதே கடவுளின் நோக்கமாகும்.

மறுஜென்மம் என்கிற வார்த்தையை நீங்கள் தீத்து 3:5ல் வாசிக்கும்போது, அதில் இவ்வளவு பெரிய கருத்து அடங்கியுள்ளதை உணர்ந்து வாசியுங்கள். “நாம் செய்த நீதியின் கிரியைகளின் நிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்தஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்”. மறுஜென்மத்தின் நோக்கமென்ன என்பதை அவர் 6ம் வசனத்தில், “தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்தியஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படியே சுதந்திரராகத்தக்கதாக” என்று குறிப்பிடும்போது பரலோகத்தில் இருக்கின்ற எல்லாவற்றிற்கும் வாரிசுதாரர் ஆவோம் என்று அர்த்தப்படுத்துகிறார் – அதாவது புதிய வானம், புதிய பூமி, புதிய சரீரம், பூரணப்படுத்தப்பட்டதான புதிய உறவுகள், நன்மையும் மகிமையுமான பாவங்களற்ற புதிதான பார்வை – நாம் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவில் கடவுளில் மகிழுகின்றதான புதிய தன்மை ஆகிய அனைத்திற்கும் சுதந்திரராவோம் என்கிறார்.

மறுஜென்மத்தின் அசாதாரணமான விசேஷித்த அடையாளமாக இது இருக்கிறது: சர்வசிருஷ்டியும் முடிவில் புதுப்பிக்கப்படுவதின் முதற்கனியாக நமது மறுஜென்மம் இருக்கிறது.

2) புதுப்பிக்கப்படுதல் ஏன் நமக்கு அவசியம்
மறுஜென்மம் ஏன் தேவை என்பதற்கு தெளிவான குறிப்பு இங்கே நமக்கு இருக்கிறது. அதை 3ஆம் வசனத்தில் காணலாம்: “ஏனெனில் முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம் பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையருவர் பகைக்கிறவர்களுமாய் இருந்தோம்” படைக்கப்பட்ட சிருஷ்டிகளின் தன்மையை இது விவரிக்கவில்லை. மனிதனுடைய இருதயத்தின் தன்மையை இது விவரிக்கிறது. இவை யாவும் குணங்களில் காணப்படும் தீமையே தவிர, வெளிப்பிரகாரமான தீமையல்ல. புத்தியீனம், கீழ்ப்படியாமை, வழிதப்பி நடத்தல், பாவஇச்சைகளுக்கு அடிமை, துர்க்குணம், பொறாமை, பகைக்கப்படுதல், பகைத்தல். இவைகளிலெல்லாம் நாம் இருந்தோம்.

இந்த மாதிரியான இருதயத்தை கடவுள் தமது புதிய சிருஷ்டிப்பில் அனுமதிக்க மாட்டார் என்கிற காரணத்தினால்தான் நாம் மறுஜென்மம் அடைய வேண்டியதாக இருக்கிறது. இயேசு கூறுவது போல, நாம் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமுடியாது (யோவா 3:3). அதனால்தான் நாம் அனைவரும் மறுபடியும் பிறக்க வேண்டும்.

கிருபை என்பதின் அர்த்தம்: ஆனால் தேவனோ . . .
ஆனால் (But) என்கிற வார்த்தை ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பிலுள்ளது. வேதாகமத்தில் காணப்படுகின்ற முக்கியமான வார்த்தைகளில் இதுவும் ஒன்று. 4ஆம் வசனத்தில் அது உள்ளது. நாம் புத்தியற்றவர்களாயும், கீழ்ப்படியாதவர்களாயும், பாவஇச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்களாயும், துர்க்குணராயும், பொறாமையோடும், பகைக்கப்படுகிறவர்களாயும், பகைக்கிறவர்களாயும் இருந்தோம். ஆனால் “தேவனுடைய தயையும் மனுஷர் மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, . . .அவர் (கடவுள்) . . . நம்மை இரட்சித்தார்”.

இதேவிதமான அற்புதமான வரிசைக்கிரமத்தைதான் நாம் எபே 2:3-5 வசனங்களிலும் காண்கிறோம்: “நாமெல்லோரும் முற்காலத்திலே நமது மாம்சஇச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் – கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்”. நாம் மரித்த நிலையில் இருந்தோம். ஆனால், தேவனோ நம்மை உயிரோடே எழுப்பினார். கிருபை என்பதற்கு அர்த்தம் இதுதான். மரித்த நிலையில் இருப்பவன் தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொள்ள எதுவும் செய்ய இயலாது. ஆனால் தேவனோ . . .

இதையே நாம் தீத்து 3:3-5ல் காண்கிறோம். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்க முடியாத அளவிற்கு நாம் பாவஇச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டு கிடந்தோம். கடவுளை அறிந்து, அவரை நம்பி, நேசிக்க செய்ய இயலாதபடி மரித்த நிலையில் இருந்தோம். ஆனால் தேவனோ . . . வச 4-5: “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர் மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்”.

மறுஜென்மம் எவ்வாறு நிகழுகிறது?
நாம் இன்றைய கேள்விக்கு வருவோம்: கடவுள் அதை எப்படி செய்கிறார்? மறுபிறப்பு எப்படி ஏற்படுகிறது? யோவான் 3ஆம் அதிகாரத்தில் இயேசு கூறியதை நாம் பார்த்தது போலவே, பவுலும் மறுபிறப்பை சுத்திகரிக்கும் செயலாகவும் புதுப்பிக்கும் செயலாகவும் குறிப்பிடுகிறார். “மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்தஆவியினுடைய புதிதாக்குதலினாலும்” கடவுள் நம்மை இரட்சித்தார் என்று பவுல், தீத்து 3:5ன் கடைசி பாகத்தில் குறிப்பிடுகிறார். மறுஜென்மம் என்பது ஒருவிதமான சுத்திகரிப்பு. மேலும், மறுஜென்மம் என்பது ஒருவிதமான புதிதாக்குதல்.

“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான்” என்று இயேசுக்கிறிஸ்து யோவா 3:5ல் கூறியதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். யோவான் 3ல் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல் என்பது காணப்படுகிறது. தீத்து 3ல் மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்தஆவியினுடைய புதிதாக்குதலினாலும் என்கிற வார்த்தைகள் காணப்படுகிறது.

யோவான் 3ல் கூறப்பட்டிருக்கிற தண்ணீர், ஆவி என்கிற மொழிப்பிரயோகம் எசேக் 36:25-27ல் இருந்து வந்தது என்கிற வாதத்தை நான் உங்கள் முன் வைத்தேன். அங்கு தேவன் தமது ஜனங்களுக்கு வாக்குத்தத்தம் அளிக்கிறார்,

நான் உங்கள் மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களை சுத்தமாக்குவேன். நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு . . . உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்.

புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் வந்துவிட்டதென்று இயேசுக்கிறிஸ்து கூறுகிறார். என்னில் ஆவியினால் தொடர்பு ஏற்படுவதினாலே எசேக்கியேலின் வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது. ஆவியே உயிர்ப்பிக்கிறது (யோவா 6:63). நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவா 14:6). பரிசுத்தஆவியானவர் விசுவாசத்தின் மூலமாக உன்னை என்னிடம் இணைக்கும்போது நீ மறுஜென்மம் அடைகிறாய். இதை ஏறக்குறைய இரண்டு விதங்களில் பார்க்கலாம்: கடந்த காலத்திலுள்ளவை யாவும் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்காலத்திலுள்ளவைகள் புதுப்பிக்கப்படுகிறது.

சுத்தமும் புதியதும் ஆகிய இரண்டும்
பவுல் இங்கே 5ஆம் வசனத்தில், கடவுள் நம்மை, “மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலினாலும் இரட்சித்தார்” என்று கூறுகையில் அவரும் ஏறக்குறைய இதேவிதமாகத்தான் குறிப்பிடுகிறார்: புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் வந்துவிட்டது. தேவனுடைய ராஜ்ஜியம் இங்கே ஆரம்பமாகிவிட்டது. முடிவான பூரணமான “மறுஜென்மம்” ஆரம்பமாகிவிட்டது. நீங்கள் செய்த பாவங்கள் யாவற்றையும் மறுபிறப்பு சுத்திகரிக்கின்றது. பரிசுத்தஆவியினால் புதிய சுபாவத்தை உங்களில் அது சிருஷ்டிக்கிறது.

மறுபிறப்புக்குப் பிறகும் நீங்கள் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் இரண்டு மாறுதல் மாத்திரம் ஏற்படுகிறது: நீங்கள் சுத்தமாகிறீர்கள், நீங்கள் புதிதாகிறீர்கள். மறுபிறப்பு, மறுஜென்மம் என்பதற்கு இதுதான் அர்த்தம்.

கடவுள் அதை எப்படி நடப்பிக்கிறார்?

கடவுள் மறுபிறப்பை நடப்பிக்கிற விதத்தினாலேயே அது ஏற்படுகிறதே தவிர, நமது நீதியான நடக்கைகளின் மூலமாககூட அல்ல என்பதை பவுல் முக்கியமாக இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறார். வசனம் 4, 5 ஆகியவை கடவுளின் வழிவகையில் மூன்றை விவரிக்கிறது. மறுபிறப்பை அடைந்து கொள்ள நாம் செய்கிற எந்த முயற்சிக்கும் இவை நேர்விரோதமாக இருக்கிறதென்பதையும் இவ்வசனம் காட்டுகிறது. “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும், மனுஷர் மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்தஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்”.

இரட்சிப்பு என்பதுதான் இவ்வசனத்தில் அடங்கியுள்ள மாபெரும் கருத்து (வச 5:”நம்மை இரட்சித்தார்”). ஆனால் குறிப்பாக, அவர் அதை மறுபிறப்பின் மூலமாக நிகழச் செய்கிறார். பவுல் இவ்விரண்டையும் கடவுளின் “தயையிலும்”, “அன்பிலும்” (வச.4), அவருடைய “இரக்கத்திலும்” (வச.5) அடையாளங் காண்கிறார். கடவுள் பாவிகளை எவ்விதத்தில் மறுபடியும் பிறப்பிக்கிறார் என்பதற்கு பவுல் கூறுகிற முடிவான பதில் இதுதான். கடவுள் தயையுள்ளவர். கடவுள் அன்புள்ளவர். கடவுள் இரக்கமுள்ளவர்.

1) கடவுளின் தயையினால்
நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால் – நீங்கள் ஆவிக்குரிய மரித்த நிலையிலிருந்து எழுப்பப்பட்டிருந்தால், பார்க்கும்படியான கண்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், கேட்கும்படியான காதுகளைப் பெற்றிருந்தீர்களானால், இயேசுவே போதுமானவர் என்பதை ருசித்துப் பார்க்கிற ஆவிக்குரிய உணர்வை அடைந்திருந்தீர்களானால், அவரை விசுவாசிக்கிறதான ஒரு இருதயம் உங்களுக்கு இருக்குமானால் – அதற்கெல்லாம் காரணம் கடவுளின் தயையே. 4ஆம் வசனத்தில் காணப்படுகிற அந்த முக்கியமான வார்த்தையாகிய chrestotes என்பதற்கு தயை, அன்பு என்று அர்த்தம். இதை பவுல் எபே 2:6ல் உபயோகிக்கிறார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்திலே வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக (நம்மை . . . எழுப்பி . . .)

கடவுள் நம் மீது அன்பைப் பொழிய விரும்புகிறார். நீங்கள் எவ்வளவுக்குக் கடவுளை அறிந்திருக்கிறீர்களோ அவ்வளவுக்கு இது ஆச்சரியகரமானது. கடவுள் அண்டசராசரங்களையும் படைத்தவர். அவர் வானமண்டலங்களை பராமரித்து நடத்துகிறார். உலகில் நடக்கின்ற சகல நிகழ்வுகளையும், ஒரு பறவை கீழே விழுவது முதல் உங்கள் தலைமுடியின் நிறம் மாறுவது வரையுங்கூட அவர் ஆண்டு நடத்துகிறார். அவர் அளவிடமுடியாத வல்லமையும், ஞானமும், பரிசுத்தமும், நீதியும் உடையவர். அவர் தயையுள்ளவர் என்று பவுல் கூறுகிறார். அந்த தயையினால்தான் நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோம். நீங்கள் கிறிஸ்தவர்களாக ஜீவிக்கிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் பின்வருமாறு கூறட்டும்: கடவுள் உங்களிடம் தயை உள்ளவராயிருக்கிறார்.

2) கடவுளின் அன்பினால்
கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை பவுல் விளக்குகின்ற இரண்டாவது வார்த்தை “மனுஷர் மேலுள்ள அன்பு” என்பது. philanthropia என்கிற இந்த வார்த்தையானது மனிதர்கள் மேல் கொண்டுள்ள பிரியத்தை குறிப்பிடுவதாயிருக்கிறது. மனுக்குலத்தின் மீது அன்பு. கடவுளின் அன்பைக் குறிப்பிடுகிற சாதாரண வார்த்தை அல்ல இது. சொல்லப்போனால் புதியஏற்பாட்டில் இந்த ஒரு இடத்தில் மாத்திரந்தான் இவ்வார்த்தை காணப்படுகிறது. மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் கடவுளின் உள்ளத்தில் இருக்கிறது என்று பவுல் குறிப்பிடுகிறார். கடவுளை மகா தயாளர் என்று கூறலாம். ஆகவே பவுல் கூறுவதாவது, நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தால் அது மனுக்குலத்தை ஆசீர்வதிக்க தேவன் கொண்டிருந்த விருப்பத்தினாலேதான் நிகழ்ந்தது.

அத்தோடு அவர் மிகவும் அத்தியாவசியமானதும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதுமான இன்னொன்றையும் குறிப்பிடுகிறார். இந்த தயையும் மனுஷரை ஆசீர்வதிக்கிறதான விருப்பமும் “பிரசன்னமானபோது” என்று 4ஆம் வசனத்தில் பவுல் குறிப்பிடுகிறார். “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும், மனுஷர் மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது . . . மறுஜென்ம முழுக்கினாலே . . . நம்மை இரட்சித்தார்”. இதற்கு என்ன அர்த்தம்? கடவுளின் தயையும் அன்பும் பிரசன்னமாயிற்று. இவைகள் நமது மத்தியிலே வந்து மானுடனாக அவதரிக்காமல், கடவுளிடமே தங்கியிருந்திருந்தால், அவைகள் யாரையுமே இரட்சித்திருக்காது.

இயேசு: கடவுளின் அன்பும் மனுஷர் மேலுள்ள பிரியமுமான உருவாகத் தோன்றியவர்
அவைகள் எப்படித் தோன்றின? கடவுளின் தயையும் அன்பும் எவ்வாறு பிரசன்னமாயிற்று? 4ஆம் வசனத்தில் கடவுளை நமது இரட்சகராகக் குறிப்பிட்டிருக்கின்ற உண்மையை கவனிப்பதின் மூலமாக நாம் இதற்கான விடையைப் பெறுகிறோம். (“நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய . . . அன்பும் பிரசன்னமானபோது”). இயேசுக்கிறிஸ்துவை நமது “இரட்சகராக” 7ஆம் வசனம் குறிப்பிடுகிறது: “அவர் (கடவுள்) நமது இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்”. இன்னொருவிதமாக சொல்வோமானால், “நமது இரட்சகராகிய” கடவுள், இயேசுக்கிறிஸ்துவாகிய “நமது இரட்சகராய்” பிரசன்னமானார். நமது இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர் மேலுள்ள அன்பும் இயேசுவாக உருவெடுத்தது.

சரித்திரபூர்வமாக இயேசுக்கிறிஸ்து நடப்பித்தவைகளே நமது மறுஜென்மத்திற்குக் காரணம் ஆகும். இதை நாம் திரும்பத் திரும்ப பார்த்தோம். மறுபிறப்பானது, சரித்திரத்தோடு தொடர்பில்லாத, நிச்சயமற்ற ஆவிக்குரிய மாறுதல் இல்லை. அது பரிசுத்த ஆவியினால் நடப்பிக்கப்படுகிற சரித்திரபூர்வ நிகழ்ச்சி. அவர் நம்மை விசுவாசத்தின் மூலமாக, உலகத்தில் பிரசன்னமாகிய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவோடு இணைக்கின்ற சம்பவம். அதனால், சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்து இப்பொழுது பெற்றிருக்கிறதான ஜீவனை நாமும் பெற்றுக் கொள்ளும்படியாக இணைக்கப்படுகிறோம். கடவுளின் தயையும் மனுஷர்மேல் பிரியமுமாகிய இயேசுக்கிறிஸ்து இவ்வுலகத்திலே வந்து, நமது பாவங்களுக்காக மரித்து, உயிரோடெழுந்தபடியினால் மறுபிறப்பு நிகழுகிறது.

3) நமது கிரியைகளினால் அல்ல, கடவுளுடைய இரக்கத்தினால்
நமது மறுபிறப்பில் செயல்படுகிறதான கடவுளின் இயல்பில் மூன்றாவது அம்சத்தையும், அதற்கு எதிர்மறையான அம்சமாகிய நமது கிரியைகளைக் குறித்தும் கூறி இந்த தியானத்தை முடிக்கலாம். வச 5: “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்தஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.”

இரக்கம்! நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால் நீங்கள் கடவுளுடைய இரக்கத்திற்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். கடவுள் இரக்கமுள்ளவர். நாம் மறுபடியும் பிறப்பதற்கு தகுதியுள்ளவர்கள் அல்ல. நாம் கடினமனதுள்ளவர்களாயும், எதிர்க்கிறவர்களாயும், ஆவிக்குரிய மரணமடைந்தவர்களாயும் இருந்தோம். நம்மைத் தள்ளிவிடுதலே அவருடைய நீதியாக இருந்திருக்கும். ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் . . . அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். . . நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே 2:4-5). நமது புதிய ஜீவனுக்கும் – நமது புதிய பிறப்பிற்கும் – காரணமாயிருப்பது கடவுளின் இரக்கமே.

நமது சிறப்பான கிரியைகளும் சிறப்பான குறிக்கோள்களும் காரணம் அல்ல
கடவுள் அன்புள்ளவர். கடவுள் மனுஷர்மீது பிரியம் கொண்டிருக்கிறார். கடவுள் இரக்கமுள்ளவர். அதனால்தான் நாம் மறுபடியும் பிறக்கிறோம். கடவுள் அதை செய்கிறார். பவுல் இப்படி சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம். அதிலுள்ள சாதகமான பாகத்தை மாத்திரம் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. 5ஆம் வசனத்தில், “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம்” அவர் நம்மை இரட்சிக்கவில்லை என்றும் கூறுகிறார். நமது சுபாவத்தை அவர் அறிந்திருக்கிறார். நமக்கு ஏதாவது நல்லது நிகழ்ந்தால், நாம் நன்மையானதை செய்த காரணத்தினால்தான் அப்படி நடக்கிறது என்று நினைக்கக் கூடியவர்கள் நாம். நம்மைக் குறித்து பவுலுக்கும் தெரியும். ஆகவே அவர் நம்மை எச்சரிக்கிறார்.

மறுஜென்மத்தினாலே வருகிறதாகிய இரட்சிப்பைக் குறித்து இந்தவிதமான எண்ணங்கொள்ளாதீர்கள். அவர் எப்படி கூறவில்லை என்பதை கவனமாகப் பாருங்கள்: நீங்கள் சில சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தது இந்த இரட்சிப்புக்கு காரணமல்ல என்று பவுல் கூறவில்லை. உங்களுடைய நீதியின் கிரியைகள் உங்கள் இரட்சிப்புக்கும் – மறுபிறப்புக்கும் காரணமாயிருக்கவில்லை என்று பவுல் குறிப்பிட்டு சொல்லுகிறார். உங்களுடைய மோசமான கிரியைகளும், நோக்கங்களும் மாத்திரமல்ல, உங்களுடைய சிறப்பான கிரியைகளும் சிறப்பான நோக்கங்களுங்கூட மறுபிறப்பிற்குக் காரணமாக இல்லை என்பதையே அவர் வலியுறுத்திக் கூறுகிறார். அவைகள் நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கவில்லை. நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதே அவற்றிற்குக் காரணமாயிருக்கிறது.

ஞானஸ்நானம் அல்ல
வச. 5ல் கூறப்பட்டிருக்கிற “மறுஜென்ம முழுக்கு” என்பது ஞானஸ்நானத்தைக் குறிப்பிடவில்லை என்று நான் நினைப்பதற்கு இது ஒரு காரணம். நீதியின் கிரியைகள் மறுபிறப்புக்குக் காரணம் இல்லை என்று சொல்லுவதில் அடங்குவன பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும், புதியஏற்பாட்டின் ஞானஸ்நானமும். கடவுளின் தயவு, கடவுளின் அன்பு, அவருடைய இலவசமாக காண்பிக்கும் இரக்கம் ஆகியவைகளே நமது மறுபிறப்புக்கு காரணமாயிருக்கிறது. விருத்தசேதனமும் அல்ல, ஞானஸ்நானமும் அல்ல. நாம் நீதியாக செய்கிற எந்த கிரியைகளும் அல்ல. மறுபிறப்பு ஏற்படும்போது, அது தன்னோடு நீதியின் கிரியைகளை அழைத்துக் கொண்டு வருகிறது. நீதியின் கிரியைகளை செய்வதால் மறுபிறப்பு ஏற்படுகிறதில்லை.

கடவுளின் இரக்கத்திற்கு சந்தோஷத்தோடு கீழ்ப்படியுங்கள்.
நீங்கள் செய்த எந்த கிரியைகளினாலும் அல்லாமல், கடவுளின் இரக்கத்தினாலேயே நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதை உணர்ந்து கொள்வதே உங்களில் மிகுந்த தாழ்மையையும் மிகுந்த சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என்கிற உண்மையை அறியக்கூடிய கண்களை தேவன்தாமே உங்களுக்குக் கட்டளையிடுவாராக. அதற்குக் கீழ்ப்படியுங்கள். சந்தோஷம் அடையுங்கள்.

“Copyright 2011 John Piper.  Used by permission. www.desiringGod.org

%d bloggers like this: