Skip to content

“பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்? பாகம் – 3

(டிசெம்பர் 23, 2007ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)

Translation into Tamil by Vinotha Surendar

You Must Be Born Again: The Reason the Son of God Appeared Was to Destroy the Works of the Devil—Why do we need to be born again? Part -3 delivered on December 23, 2007 By John Piper

1 யோவா 3:1-10
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். பாவஞ்செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும், தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

கிறிஸ்து பிறப்பு ஏன் நிகழ்ந்தது
1யோவா 3:1-10 வரையுள்ள வசனங்களுக்குள், கிறிஸ்துவின் பிறப்பு ஏன் நிகழ்ந்தது என இரண்டு முறை நமக்குக் கூறப்பட்டுள்ளது. பரலோகத்தின், பரிசுத்தமான தேவகுமாரன் எதற்காக இந்த உலகத்தில் மனிதனாக வந்தார் என கூறப்பட்டிருக்கிறது. 5ஆம் வசனத்தில், “அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து கிறிஸ்துவின் பாவமற்ற தன்மை நிருபணமாகிறது – “அவரில் பாவமில்லை!”. அவர் எதற்காக வந்தார் என்பதும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது – “பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார்”.
அடுத்தபடியாக 8ஆம் வசனத்தின் பின்பகுதியிலே, “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” என்று யோவான் கூறுகிறார். “பிசாசின் கிரியைகள்” என்று யோவான் குறிப்பிடும்போது, சாத்தான் உருவாக்குகின்ற பாவங்களையே அவர் முக்கியமாக கருத்தில் கொண்டு கூறுகிறார். இதை 8ஆம் வசனத்தின் ஆரம்ப பகுதியில் பார்க்கிறோம்: “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். ஆகவே, இயேசு அழிக்கும்படியாக வந்த பிசாசின் கிரியைகள் பாவத்தின் கிரியைகளே.
இயேசுவின் பிறப்பை யோவான் இரண்டு முறை குறிப்பிடுகிறார் – தேவகுமாரன் மனிதனாக வெளிப்பட்டது – பாவத்தை நீக்கிப் போடும்படியாக, அல்லது பிசாசின் கிரியைகளாகிய பாவத்தை அழிக்கும்படியாகவே. அதற்காகவே இயேசுக்கிறிஸ்து பரிசுத்தஆவியின் மூலமாக கன்னி மரியாளிடத்தில் பிறந்தார் (மத் 1:18,20), ஞானத்திலும் வளர்த்தியிலும் தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் (லூக் 2:52). தனது வாழ்க்கையிலும், ஊழியத்திலும் பாவமில்லாமலும், பூரணமான கீழ்ப்படிதலோடும், சிலுவையின் மரணபரியந்தமும் தம்மைத் தாழ்த்தி வாழந்தார் (பிலிப் 2:5-8, எபி 4:15) – பிசாசின் கிரியைகளை அழித்து, பாவத்தை நீக்கிப் போடுவதற்காக அப்படி வாழ்ந்தார்.

இயேசுவின் பிறப்பும் நமது மறுபிறப்பும்
மறுபிறப்பைக் குறித்த தொடர்தியானத்தை நாம் செய்துகொண்டு வருகிறோம். நமது மறுபிறப்பிற்கும் இயேசுவின் பிறப்பிற்கும் என்ன சம்பந்தம்? இயேசு அவதரித்ததற்கும் நமது மறுபிறப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன? என்கிற கேள்வியை நான் இன்று உங்களை நோக்கிக் கேட்கிறேன். அதற்கு பதில் கூறுவதற்காக, சென்ற தியானத்தில் நாம் கேட்ட செய்திக்கும் இன்றைக்கு நாம் எடுத்துக் கொண்டிருக்கிற 1யோவா 3:1-10 வசனங்களுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்க முயற்சிக்கிறேன்.
கடந்த தியானத்திலே, ஏன் நாம் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம் என்கிற கேள்வியை எழுப்பின போது, நம்மையே திரும்பிப் பார்த்து நமது நிலமை பாவத்தினாலும் அக்கிரமத்தினாலும் எவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து விடை கண்டுபிடித்தோம். அல்லது வரவிருக்கும் ஆசீர்வாதங்களை எண்ணிப்பார்த்து, மறுபிறப்பு இல்லையானால் எவற்றையெல்லாம் இழந்து போக நேரிடும் என ஆராயும்போது, உதாரணமாக பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாமற் போகும் என விளங்கிக் கொண்டோம். அதன் காரணமாக நாம் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொண்டோம். மறுபிறப்பு ஏன் தேவை? மறுபிறப்பின்றி நமது நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற ரீதியில் பத்து விடைகளை பார்த்தோம். மறுபிறப்பு இல்லையானால் நாம் எவைகளையெல்லாம் பெற்று அனுபவிக்க மாட்டோம் என்கிற ரீதியில் ஐந்து விடைகளைப் பார்த்தோம்.

கடவுளின் பெரிதான அன்பு
கடந்த தியானத்தின் செய்திக்கும் இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் வசனபகுதிக்கும் இடையில் பாலமாக இருப்பது கடவுளின் பெரிதான அன்பாகும். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயும், தேவனுக்கு விரோதிகளாயும், அவருடைய பிள்ளைகளாயிராமலும் இருந்தவர்களிடத்தில் இந்த தேவஅன்பானது வந்து அவர்களை உயிர்ப்பித்தது. எபே 2:4-5ல் இவ்வாறாகப் படிக்கிறோம்: “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்”. கடவுளின் பெரிதான அன்பு இங்கு விஸ்தரிக்கப்படுகிறது. கடவுளிடம் கொஞ்சமும் உரிமை பாராட்ட இயலாதவர்களுக்கு, அவர் ஆவிக்குரிய ஜீவனை அளித்து, மறுபிறப்பை வழங்கியதில் அவருடைய அன்பின் மகத்துவம் விளங்குகிறது. நாம் ஆவிக்குரியபிரகாரமாக மரித்துப் போன நிலமையில் இருந்தோம். அந்த மரித்த நிலையில் கடவுளின் பிரதான விரோதியாகிய சாத்தானோடு கைகோர்த்துக் கொண்டு நடக்கிறவர்களாயிருந்தோம் (எபே 2:2). அந்த நிலமையிலேயே நாம் நித்தியமாக அழிந்து போயிருந்தோமானால் கடவுளின் நீதி நம் மீது சரியானபிரகாரமாக செலுத்தப்பட்டது எனலாம். ஆதலால், நமது மறுபிறப்பு – நம்மை அவர் உயிர்ப்பித்தது – அவருடைய அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் சின்னமாக இருக்கிறது. “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்”. உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதன் சகல விளைவுகளுக்கும் கடவுளின் அந்த மகத்தான அன்பிற்கு நீ கடன்பட்டிருக்கிறாய்.
இதுதான் இன்றைய வசனபகுதிக்கு பாலமாக இருக்கிறது. 1யோவா 3:1-2ஐப் பாருங்கள். கடவுளின் மகத்தான அன்பை யோவான் எப்படி விஸ்தரிக்கிறார் என்பதை என்னோடுகூட சேர்ந்து சிந்தியுங்கள்.
“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிள்ளைகளே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்”. (1யோவா 3:1-2)
1யோவா 3: 1-2இல் நான்கு குறிப்புகள்:
எபே 2:4ல் நாம் பார்க்கிற கடவுளின் மகத்தான அன்பிற்கும், 1யோவா 3:1-2 வசனத்திற்கும், கடந்த தியானத்தில் நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும் என கேட்ட கேள்விக்கும் இடையிலுள்ள சம்பந்தத்தை நான்கு குறிப்புகளின் வாயிலாக பார்ப்போம்.

குறிப்பு #1: கடவுளின் பிள்ளைகளானோம்.
முதலாம் வசனத்தில், நாம் தேவனுடைய பிள்ளைகளென்று “அழைக்கப்படுவதினாலே” என்று இருப்பதை கவனியுங்கள். நாம் ஏற்கனவே கடவுளுடைய பிள்ளைகளாய்தான் இருந்தோம், ஆனால் நாம் அப்படி அழைக்கப்படவில்லை, இப்போதுதான் தமது பிள்ளைகள் என்று அழைக்கிறார் என நாம் எண்ணிக் கொள்வதற்கு இங்கு இடமில்லை. நாம் கடவுளின் பிள்ளைகளாகவே இல்லை என்பதுதான் இங்கு சொல்லப்படுகிறது. உலகம் அவரை அறியாதிருந்தது என முதலாம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிலமையில்தான் நாமும் இருந்தோம். நாம் மரித்தவர்களாகவும், தேவனுடைய குடும்பத்திற்கு புறம்பாகவும் இருந்தோம். அதன்பின் தேவன் நம்மை பிள்ளைகள் என்று அழைக்கிறார். ஆகவே நாம் தேவனுடைய பிள்ளைகளானோம். 2ஆம் வசனத்தில், “இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்” என்று கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே . . இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்” என முதல் இரண்டு வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை கவனிக்கலாம். கடவுள்தாமே நம்மை அவருடைய பிள்ளைகளாகும்படி செய்தார் என்பதை இதில் கவனிக்க வேண்டும். இதுதான் மறுபடியும் பிறத்தல். கடவுள் நம்மை உயிர்ப்பித்தார்.

குறிப்பு #2: கடவுளின் பெரிதான அன்பு
கடவுளின் குடும்பத்திற்குள்ளாக மறுபிறப்பு அடைதல், கடவுளின் சொல்லிமுடியாத அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எபே 2:4-5 வசனங்களில் கூறப்பட்டிருப்பது போலவே இதுவும் இருக்கிறது. “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்”. ஆம்! இது ஆச்சரியப்படத் தக்கது. பவுல் அப்போஸ்தலன் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனது போலவே யோவானும் தேவனின் அன்பை உணர்ந்து வியந்து நிற்கிறார். நாமும் இதை உணர்ந்து ஸ்தம்பிக்க வேண்டும். எதிர்த்து நிற்கிறவர்களாகவும், விரோதிகளாகவும், மரித்தவர்களாகவும், உணர்வற்றவர்களாகவும், பாவத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருந்த நம்மை அவர் உயிர்ப்பிக்கிறார். மறுபடியும் பிறக்கிறோம், கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். இந்த அதிசயத்தை நீங்களும் உணர்ந்து கொள்ளும்படியாக யோவான் விரும்புகிறார்.

குறிப்பு #3: நமது பூரணத்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளது
மரித்த நிலையில் இருந்த நமக்கு உயிர் கொடுத்து, நம்மை மறுபடியும் பிறக்கச் செய்து, கடவுளுடைய குடும்பத்திற்குள் கொண்டு வந்த கடவுளின் ஆச்சரியமான அன்பானது, கடைசியில் கடவுளுக்கு முன் நாம் எப்போதும் பரிபூரணராய் இருக்கும் நிலையை உறுதி செய்கிறது. கடவுளின் அன்பையும், நமது தற்கால நிலமையையும், நாம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிற நமது வருங்கால நிலையையும் 2ஆம் வசனம் எப்படி தொடர்புபடுத்திக் காண்பிக்கிறதென்று பாருங்கள். “பிரியமானவர்களே, (கடவுளின் ஆச்சரியவிதமான அன்புக்குரியவர்களே) இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்”.
நாம் இப்போது இருக்கிற நிலைக்கும், கிறிஸ்து வரும்போது நாம் அடையப்போகும் நிலைக்கும் உள்ள உறுதியான தொடர்பை யோவான் காண்கிறார். அதை, “அறிந்திருக்கிறோம்” என்கிற வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார். “இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. (கிறிஸ்துவுக்கு ஒப்பாகிற நமது பூரணமான மறுரூபமாகுதல் கிறிஸ்துவின் வருகைக்காக காத்து வைக்கப்பட்டிருக்கிறது). ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்”. வேறுவிதமாக சொல்வோமானால், நமது பூரணமான புத்திரசுவீகாரம் வரவேண்டியதாயிருக்கிறது. அது வரும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் எப்படி? இப்போது நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால், இந்த புத்திரசுவீகாரத்தில் மீதியாய் இருக்கும் மறுரூபநிலையைப் பெறுதலை, இயேசுவை முகமுகமாய் சந்திக்கும்போது நாம் அடைவோம். கிறிஸ்துவின் பிரசன்னம் அதை கடவுளுடைய பிள்ளைகள் எல்லாரிடத்திலும் நிறைவேற்றும். “இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்”

குறிப்பு #4: மறுபிறப்பின் அவசியம்
இதுவரை நாம் கூறிக்கொண்டு வந்தவைகளை இக்குறிப்பு இன்னும் சற்றுத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. இயேசுவின் பிரசன்னத்தில் வருங்காலத்தில் நாம் பூரணமடைந்து என்றென்றுமாக வாழ்வதற்கு மறுபிறப்பானது மிகவும் அவசியமான முன்நிபந்தனையாகவும், உறுதிமொழியாகவும் இருக்கிறது. அல்லது இயேசு கூறியவிதமாகவே கூறுவோமானால், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”. நீ மறுபடியும் பிறந்தாயானால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காண்பாய் – நீ கிறிஸ்துவைக் காண்பாய். முடிவிலே பூரணமடைந்து, அவருடைய பிரசன்னத்திலே நித்தியமாக சந்தோஷத்தோடே இருப்பாய்.

ஏன் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும்
நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதற்கு யோவானிடமிருந்து நமக்கு பதில் கிடைக்கிறது. யோவான் சொல்லுகிறார்: நீ மறுபடியும் பிறவாவிட்டால் இயேசுக்கிறிஸ்துவை ஒருநாளிலே முகமுகமாய் தரிசிக்க முடியாது, கண்ணிமைக்கும் நேரத்திலே அவருக்கு ஒப்பாக மறுரூபமடைய முடியாது. யோவா 3:36ல் இயேசுக்கிறிஸ்து கூறுவதுபோல, கடவுளின் கோபாக்கினையை அடைவாய். இதையே ஊக்கப்படுத்தும் விதத்தில் சொல்ல வேண்டுமானால், கடவுளின் அளவிட முடியாத அன்பு, உன்னை மறுபடியும் பிறக்கச் செய்து, உன்னை இயேசுவோடு இணைக்கிறதான புதியஜீவனைக் கொடுக்குமானால், இயேசுக்கிறிஸ்துவின் வருகையின்போது, நீயும் அவரைப் போலவே மறுரூபமடைவாய் என்பதை நீ அறிந்து கொள்ளுவாய். மறுபிறப்பின் காரணமாக நீ தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பாய். அதனால்தான் நாம் மறுபிறப்பை அடைய வேண்டும்.

இயேசுவின் பிறப்பும் நமது மறுபிறப்பும்
நாம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு விடையளிக்கும் தறுவாயில் இருக்கிறோம். இயேசுவின் பிறப்புக்கும் நமது மறுபிறப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? இயேசு அவதரித்ததற்கும் நாம் “உயிர்ப்பிக்கப்படுவதற்கும்” இடையேயுள்ள சம்பந்தம் என்ன? கடவுள், தமது குமாரனை இவ்வுலகத்திற்கு அனுப்பாமலேயே, பாவிகளை மறுபடியும் பிறக்கச் செய்து, முடிவில் அவர்களை தமது குணாதிசயங்களைப் பெறும்படியாக மறுரூபமாக்கி, மோட்சத்தில் சேர்த்துக் கொண்டிருக்க முடியாதா? குமாரன் இவ்வுலகில் அவதரிக்க வேண்டிய அவசியம் என்ன? சிலுவையின் மரணபரியந்தம் அவர் தம்மைத் தாழ்த்தி கீழ்ப்படிய வேண்டிய தேவை என்ன? இதே அதற்கு பதில்: மறுபிறப்பு, அதனால் ஏற்படும் விளைவுகளாகிய விசுவாசம், நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தப்படுத்தப்படுதல், கடைசியில் கிறிஸ்துவுக்கு ஒப்பாக மோட்சத்தில் மறுரூபமாக்கப்படுதல் ஆகிய யாவும் கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் ஆகியவை இல்லாமல் நடந்திருக்கவே முடியாது. அதாவது கிறிஸ்துவின் பிறப்பின்றி நடந்திருக்காது. 1யோவா மூலமாக நாம் இதில் ஒரு பகுதியைப் பார்ப்போம். அப்படிக் காண்பதினால், கிறிஸ்துவின் மீதும் அவருடைய வருகையின் மீதும் கொண்டிருக்கும் உங்களுடைய அன்பு மேலும் பெருகட்டும்.
மறுபிறப்பின் முதலாவது நோக்கமே, உலகில் வந்து அவதரித்த இயேசுக்கிறிஸ்துவின் மீது விசுவாசம் ஏற்படுத்துவதற்காகத்தான். விசுவாசிப்பதற்கு இயேசுக்கிறிஸ்து என்பவர் இல்லையென்றால், மறுபிறப்பு நிகழவே நிகழாது. 1யோவா 5:1ஐப் பாருங்கள்: “இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்”. அதாவது, நாசரேத்தூரில் யூதமனிதனாகப் பிறந்த இந்த இயேசுவே கடவுளால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தெய்வீகமான மேசியா என விசுவாசித்தல். அதாவது, தெய்வீக மனிதனாகிய இயேசுக்கிறிஸ்துவின் மீது விசுவாசம் ஏற்படும்படியாக, பரிசுத்தஆவியானவர் ஜனங்களை உயிர்ப்பிக்கிறார் என்பதே இதன் அர்த்தமாம். (1யோவா 4:2-3 வரை பாருங்கள்). மறுபிறப்பின் நோக்கம் அதுதான். ஆகவே, இயேசுக்கிறிஸ்துவின் மீது விசுவாசம் தோன்றியிருப்பதே மறுபிறப்பை அடைந்திருக்கிறோம் என்பதற்கு முதலாவது அடையாளம். “இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்”. மறுபிறப்பு அடைந்திருப்பதற்கு முதலாவது அடையாளம் விசுவாசம்.
இயேசுக்கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்த காரணம், மறுபிறப்பு அடையச் செய்வதற்காக மாத்திரம் அல்ல – இயேசுவின் மீது விசுவாசம் ஏற்படுத்த வேண்டும் என்பது மாத்திரம் மறுபிறப்பிற்கு காரணமாயிருக்கவில்லை. உயிர்ப்பிக்கப்படுவதின் மூலமாக நாம் பெற்றுக் கொள்கிற புதியஜீவனானது, மனிதனாக அவதரித்த இயேசுவின் ஜீவனோடு இணைக்கப்பட்ட ஒன்றாய் இருக்கிறபடியால், தேவகுமாரன் மனிதனாக இவ்வுலகில் அவதரிக்க வேண்டியது அவசியமாயிற்று. “நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவஅப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான். நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் மாம்சமே” (யோவா 6:51) என்று இயேசுக்கிறிஸ்து சொல்லுகிறார். என்றென்றைக்கும் பிழைக்கும்படியாக இயேசுவோடு இணைந்து நாம் பெற்றுக் கொள்கிற புதியஜீவனானது, இயேசுக்கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்து, சரீரத்தில் மரணம் அடையும்படியாக பெற்றுக் கொண்ட அவருடைய ஜீவனேயாகும்.
1யோவா 5:10-12 வாசித்துப் பாருங்கள். இவ்விடத்தில் நாம் தேவகுமாரன் என்று வாசிப்பது, மனிதனாக அவதரித்த தேவகுமாரனைக் குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். “தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்த சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். . . . தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்த சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”
இன்னொருவிதமாக சொல்வோமானால், நம்மை இயேசுக்கிறிஸ்துவோடு ஆவிக்குரியபிரகாரமாக இணைப்பதின் மூலமாக மறுபிறப்பானது, நமக்கு புதியஜீவனை அளிக்கிறது. அவரே நமது ஜீவனாகிறார். அவருடைய புதிய ஜீவன் நம்மில் ஏற்படுத்துகின்றதான அனைத்து மாற்றங்களும்தான் நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது. மனிதனாக அவதரித்த இயேசுக்கிறிஸ்துவின் ஜீவன்தான் நமக்குள் ஏற்படுகின்ற புதியஜீவன். “அந்த வார்த்தை மாம்சமாகி . . . நமக்குள்ளே வாசம் பண்ணினார். . . . அவருடைய பரிபூரணத்தினால் (மனிதனாக அவதரித்தவரின் பரிபூரணத்தினால்) நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்” (யோவா 1:14, 16) – இதுவே மறுபிறப்பு, புதியஜீவன்.

இயேசு மானிடனாக அவதரிக்காவிடில் மறுபிறப்பும் இல்லை
இயேசு மனிதனாக பிறக்கவில்லையென்றால் – கிறிஸ்து பிறப்பு இல்லையென்றால் – மறுபிறப்பும் இல்லை என்பதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம்: 1) இயேசு மனித அவதாரம் எடுக்கவில்லையென்றால், நாம் விசுவாசிப்பதற்கு இயேசுக்கிறிஸ்து என்கிற மனிதஅவதாரம் இருந்திருக்க மாட்டார். மறுபிறப்பின் நோக்கமே அவரை விசுவாசிக்கச் செய்வதுதான். ஆகவே, இயேசுவின் மனிதஅவதாரம் இல்லையென்றால் மறுபிறப்பிற்கு வழியில்லை. 2) இயேசுவின் மனிதஅவதாரம் இல்லையென்றால், நமக்கும் மனிதஅவதாரமாகிய இயேசுக்கிறிஸ்துவுக்கும் இணைப்பு ஏற்பட வழியில்லை. புதியஜீவன் உருவாவதற்கு ஆதாரம் இல்லாதபடியால், புதியஜீவனானது உருவாகாமலே போய்விடும்.
கிறிஸ்தவம் என்பது பல மதங்களில் காணப்படுகின்ற உருவற்ற ஒரு பக்திநிலை போன்றதல்ல. அது இயேசுக்கிறிஸ்து என்கிற நபரின் மீது வேரூன்றுவதாகும். ஆகவேதான் வேதவாக்கியம் சொல்லுகிறது: “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1யோவா 5:12). “குமாரனைக் கனம் பண்ணாதவன், அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்” (யோவா 5:23). “. . என்னை அசட்டை பண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான்” (லூக் 10:16) என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிடுகிறார். இயேசு மனிதனாக அவதரிக்கவில்லையென்றால் நமக்கு அவரோடு இணைப்பு ஏற்பட முடியாது. அதனால் பிதாவோடும் இணைக்கப்பட முடியாது. நாம் உயிர்ப்பிக்கப்படுதலும் நடக்காது. நமக்கு இரட்சிப்பும் கிடையாது.

மனிதஅவதாரமும், பரிசுத்தப்படுத்துதலும்
மேசியாவாகிய தேவகுமாரன் மானுடனாக அவதரித்திருக்காவிட்டால், உயிர்ப்பிக்கப்படுதலோ, இரட்சிக்கும் விசுவாசமோ இருக்காது. அத்தோடுகூட நீதிமானாக்கப்படுதலும், பரிசுத்தப்படுத்தப்படுதலும் இருக்காது. இவை யாவும் இல்லையானால் இறுதியாக இரட்சிப்பும் இருக்காது. 1யோவா 3:3-5 வசனங்களைப் பாருங்கள்: “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும் (வேறுவிதமாக சொல்வோமானால், இயேசுக்கிறிஸ்து வெளிப்படும்போது, அவர் இருக்கிறவண்ணமாகவே இருப்போம் என்கிற நிச்சயத்தை பெற்றிருக்கிற தேவனுடைய பிள்ளை), அவர் சுத்தமுள்ளவனாயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை”.
நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தப்படுத்தப்படுதல் ஆகிய இரண்டுமே இதில் அடங்கியிருக்கிறது. பரிசுத்தப்படுத்தல் வெளிப்படையாகத் தெரிகிறது. நீங்கள் மறுபிறப்பை அனுபவிக்கிறவர்களாயிருந்தால், இயேசுக்கிறிஸ்து வெளிப்படும் நாளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறவர்களாக காணப்படுவீர்கள். ஏனென்றால் அந்நாளில்தானே நீங்கள் அவருடைய ரூபத்துக்கு ஒப்பாக மறுரூபமாக்கப்படுவீர்கள் என்பதால் வாஞ்சையோடு எதிர்பார்த்திருப்பீர்கள் என்று யோவான் குறிப்பிடுகிறார் (2ஆம் வசனம், “அவர் வெளிப்படும்போது . . . அவருக்கு ஒப்பாயிருப்போம்” என கூறுவதை கவனியுங்கள்). மேலும் 3ஆம் வசனத்தில், “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்” என்கிறார் யோவான். அதாவது, தான் முற்றிலும் சுத்தமாகப்போகிற அந்த கடைசி நாளை விரும்புகிற எவனும், இன்றே பரிசுத்தத்தை விரும்புவான். அசுத்தத்தை இப்போதே வெறுக்கத் தொடங்குவான். பாவத்தோடு இப்போதிருந்தே போராடுவான்.
அதாவது, மறுபிறப்பானது, விசுவாசத்தை உயிர்பெறச் செய்வதோடு, பரிபூரணமாக சுத்திகரிக்கப்படப் போகிற அந்த மகா பெரிய நாளின் மீது நம்மை ஆவல் கொள்ள வைக்கிறது. சுத்திகரித்துக் கொள்ள போராட வைக்கிறது. இயேசு மனிதனாக பிறக்காவிட்டால் நமது மறுபிறப்புக்கு வழியில்லை. ஆகவே இப்போதைய சுத்திகரிக்கப்படுதலோ, முடிவில் அடையும் கிறிஸ்துவைப் போன்ற பரிபூரண சுத்திகரிப்போ நடைபெறாமல் போகும். இயேசுவின் பிறப்பு இல்லையானால் இவை எதுவும் இருக்காது.
கிறிஸ்தவம் என்பது, பல மதங்களில் உயர்ந்த தன்மையை அடைவதற்குச் செய்கின்ற செயல்திட்டம் போல் அல்ல. மறுரூபம் அடைகிறதான அந்த மாபெரும் மாறுதல், இயேசுக் கிறிஸ்துவாகிய நபரின் மீது வரலாற்றுபூர்வமாக வேரூன்றியிருக்கிறது. மறுபிறப்பானது, அவர் மீது விசுவாசத்தை ஏற்படுத்துகிறது. மனிதனாக அவதரித்த அவர், நமது முற்றிலுமான சுத்திகரிப்பை உறுதிசெய்கிறார். அவரில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டவர்களாக நாமும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல நம்மை சுத்திகரித்துக் கொள்ளுகிறோம்.

மனிதஅவதாரமும் நீதிமானாக்கப்படுதலும்
இயேசுக்கிறிஸ்து செய்த இன்னொரு மகத்தான காரியத்தை நாம் கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இதைக் குறித்து 1யோவா 3:4-5ல் காண முடிகிறது. மறுபிறப்பை அடைந்தவர்கள், முடிவில் கிறிஸ்துவைப் போன்ற மறுரூபநிலையை அடைவோம் என்கிற நம்பிக்கையை உடையவர்களாக தங்களை சுத்திகரித்துக் கொள்ளத் தொடங்குவார்கள் என்று சொல்லிக் கொண்டு வந்த யோவான், திடீரென்று பாவத்தைக் குறித்துப் பேசத் தொடங்குகிறார். “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை”.
“நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” ஆகவே எல்லாப் பாவங்களுமே நியாயப்பிரமாணத்தை மீறுவதே என்று அவர் திடீரென நம்மிடம் கூறக் காரணமென்ன? அது மாத்திரமல்ல, “பாவங்களை சுமந்து தீர்க்கும்படியாக” இயேசுக்கிறிஸ்து வெளிப்பட்டார் என்றும் ஏன் குறிப்பிடுகிறார்? ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து செய்திருக்கும் மகத்தான காரியத்தை நமக்கு விளங்கப் பண்ணவே அப்படி சொல்லுகிறார் என்று நான் நினைக்கிறேன். அதாவது. இயேசுக்கிறிஸ்து நம்மைப் பாவத்திலிருந்து இரட்சித்திருக்கும் மகத்தான காரியமானது, வெறுமனே நம்மை சுத்திகரித்தல் மாத்திரமல்ல என்பதை காண்பிக்க நினைக்கிறார். எல்லா பாவமும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறதாயிருக்கிறது என்கிற பயங்கரமான பெரிய உண்மையை நாம் சரிவர விளங்கிக் கொள்வதற்கு, சுத்திகரித்தல், பரிசுத்தப்படுத்துதல் என்கிற வார்த்தைகளின் பொருளாழம் போதாது. நாம் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டிய அசுத்தமான நிலைமைக்கு ஆளானவர்களாக இருப்பது மாத்திரமல்ல, மன்னிக்கப்பட வேண்டிய குற்ற நிலைமையில் இருப்பவர்களாகவும், கோபாக்கினையை நிவர்த்தி செய்ய வேண்டியவர்களாயும், தேவநீதியற்று அதை பெற்றுக் கொள்ள வேண்டியதான நிலையிலும் இருக்கிறோம்.
ஆகவேதான் யோவான் 4-5 வசனங்களில் கூறுகிறார்: “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்” “பாவத்தை சுமந்து தீர்த்தல்” என்பது வெறுமனே சுத்திகரித்தல் மாத்திரம் அல்ல. பாவத்தின் காரணமாக உண்டாயிருக்கும் குற்றத்தையும், பாவத்தின் மீது செலுத்தப்பட்டிருக்கும் தேவகோபத்தையும் கிறிஸ்து சுமத்தலாகிய கிரியையும் இதில் உள்ளது. அதை இயேசுக்கிறிஸ்து எவ்விதமாக செய்தார்? அவர் மனிதனாக அவதரித்ததின் மூலமும், அவர்தம் வாழ்க்கை, மரணத்தின் மூலமுமாக அதை செய்து முடித்தார். இதைக் குறித்து யோவான் கொண்டிருக்கும் எண்ணத்தை கீழ்காணும் இரண்டு வசனபகுதிகளின் மூலமாக அறியலாம்.
முதலாவதாக, 1யோவா 4:10 – “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது”. தேவன், தமது குமாரனை அனுப்பினார். அதாவது, மனிதனாக அவதரிக்கச் செய்தார். நமக்கு பதிலாக மரிப்பதற்காக கிறிஸ்துவை அனுப்பினார். அதன் மூலமாக தேவனுடைய கோபாக்கினையை கிறிஸ்து ஏற்றுக் கொண்டார். நமது பாவங்களுக்காக கிறிஸ்து கிருபாதார பலியாக ஆனார்.
இரண்டாவதாக, 1யோவா 2:1 – “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுக்கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்”. நமது பாவங்களின் காரணமாக பிதாவிடம் பரிந்து பேசுகிறவர் எனக் குறிப்பிடப்படுகிற இயேசுக்கிறிஸ்துவை, “நீதிபரர்” என்ற விசேஷித்த அடைமொழியால் கூறுவது ஏன்? ஏனென்றால் பிதாவினிடத்தில் பரிந்து பேசுவது இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமல்ல, அவருடைய நீதியுந்தான். ஆகவேதான் யோவான் அப்போஸ்தலன் 1யோவா 3:5ல், “அவரிடத்தில் பாவமில்லை” என்று கூறுகிறார். நம்மிடத்தில் இல்லாத பரிபூரணத் தன்மையை இயேசுக்கிறிஸ்து தருகிறார். நாம் அடைய விரும்பாத தண்டனையை இயேசுக்கிறிஸ்து ஏற்றுக் கொண்டார்.

கிறிஸ்துபிறப்பு அத்தியாவசியமானது
அவர் இவ்வுலகில் பிறந்ததால்தான் இவை யாவும் நடந்தேறியது. அவர் மனிதனாக அவதரித்தார். அவர் தெய்வீக-மனிதன். அவர் இவ்வுலகில் பிறந்திராவிட்டால், உயிர்ப்பிக்கபடுதலுக்கு வழியில்லை. விசுவாசம் இருந்திருக்காது. நீதிமானாக்குதல் நடந்திருக்காது. பரிசுத்தப்படுத்துதல் இராது. முடிவான மகிமையைப் பெற்றுக் கொள்ள இயலாது. ஆகவே கிறிஸ்துபிறப்பு மிகவும் அத்தியாவசியமானது. ஆகவே இரக்கத்தில் மிகுந்த ஐசுவரியமுள்ளவராய், அக்கிரமங்களினால் மரித்த நிலையிலிருந்த நம்மேல் மிகுந்த அன்பு கொண்டவராய், தேவன், தமது குமாரனை பாவமற்றவராக இவ்வுலகிலே வாழ்ந்து, நாம் மரித்திருக்க வேண்டிய இடத்திலே நமக்கு பதிலாக மரிக்கும்படியாக அனுப்பினார். எவ்வளவு பெரிதான அன்பை பிதா நமக்குக் காண்பித்திருக்கிறார்! எவ்வளவு பெரிதான கீழ்ப்படிதலையும் தியாகத்தையும் இயேசுக்கிறிஸ்து நமக்காக செலுத்தியிருக்கிறார்! விசுவாசத்திலும் நித்தியஜீவனிலும் பங்குபெறும்படியாக நம்மை உயிர்ப்பிக்கிறதான எவ்வளவு மகத்தான பணியை பரிசுத்த ஆவியானவர் நம்மில் நிறைவேற்றுகிறார்! ஆமேன்.

“Copyright 2011 John Piper.  Used by permission. www.desiringGod.org

%d bloggers like this: