பரிசுத்தமில்லாத ஒருவன் பரலோகம் செல்ல நேர்ந்தால் . . .
(ஜெ. சி. ரைல் அளித்த தியானத்தின் சாராம்சம்)
Translation into Tamil by Vinotha Surendar
Suppose An Unholy Man Went To Heaven
ஒருவேளை பரிசுத்தமில்லாத நிலையில் பரலோகத்திற்குள் நீங்கள் சிறிது நேரம் அனுமதிக்கப்பட்டீர்களானால் என்ன செய்வீர்கள்? அங்கு என்னவிதமான சந்தோஷத்தை நீங்கள் உணரக்கூடும்? எந்த பரிசுத்தவான்களின் கூட்டத்தில் நீங்கள் சேருவீர்கள்? யாருடைய பக்கத்தில் அமர விரும்புவீர்கள்? அவர்களுக்கு சந்தோஷமாக இருப்பது உங்களுக்கு சந்தோஷமாக இல்லையே, அவர்களுடைய இரசனை உங்களுடைய இரசனை அல்லவே. அவர்களுடைய குணாதிசயம் உங்களுடைய குணாதிசயம் இல்லையே. நீங்கள் பூலோகத்திலே பரிசுத்தமாக இருக்கவில்லையென்றால், நீங்கள் அங்கே எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? ஒருவேளை இப்போது நீங்கள் உல்லாசமாகவும், அஜாக்கிரதையாகவும், உலகப்பிரகாரமாகவும், இச்சிக்கிறவர்களாகவும், கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடுபவர்களாகவும், தேவபயமில்லாதவர்களாகவும், கடவுளை அவமதிப்பவர்களாகவும் இருப்பவர்களின் சகவாசத்தை விரும்புபவர்களாக இருக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்கள் யாரும் பரலோகத்தில் இருக்க மாட்டார்கள்.
இப்போது ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், கடவுளின் பரிசுத்தர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாகவும் பிரத்தியேகமானவர்களாகவும், கறாரானவர்களாகவும் இருப்பார்கள் என்று. அப்படிப்பட்டவர்களை தவிர்க்கப் பார்ப்பீர்கள். அவர்கள் மத்தியில் இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை. ஆனால், பரலோகத்தில் அப்படிப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கப் போவதில்லை.
ஜெபிப்பதும், வேதவசனத்தை வாசிப்பதும், பாடல்களைப் பாடுவதும் உற்சாகமற்றதாகவும், கஷ்டமானதாகவும், முட்டாள்தனமானதாகவும் இருப்பதாக ஒருவேளை நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். எப்போதாவது அவைகளை சகித்துக் கொள்ளாலாமே தவிர, அவைகளை சந்தோஷத்தோடு அனுபவிப்பது உங்களுக்கு இயலாத காரியமாகத் தென்படலாம். ஓய்வுநாள் உங்களுக்கு பாரமானதாகவும், அலுப்பைத் தருவதாகவும் நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். கடவுளைத் தொழுவதற்கு அந்நாளில் சிறிதளவு நேரத்திற்கு மேல் செலவிட விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் பரலோகத்திலோ முடிவேயில்லாத ஓய்வுநாளாக இருக்கப் போகிறது என்பதை நினைவில் வையுங்கள். அதன் குடிமக்கள், இரவும் பகலும் ஓய்வின்றி, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்” என்று கூறுவதோடு, ஆட்டுக்குட்டியானவரைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டேயும் இருப்பார்கள். பரிசுத்தமில்லாத ஒருவன் இப்படிப்பட்ட காரியங்களில் எப்படி சந்தோஷம் காண்பான்?
தாவீதும், பவுலும், யோவானும் கூறியிருப்பவைகளுக்கு விரோதமாக இவ்வுலகில் வாழ்ந்தவன் அவர்களை அங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவானா என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்களோடு அளவளாவினால், அவனுக்கும் அவர்களுக்குமிடையில் ஏதாவது பொதுவான விஷயம் இருப்பதாக உணர்வானா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசுக்கிறிஸ்துவை முகமுகமாக சந்திக்கும்போது அவனுக்கு சந்தோஷமாக இருக்குமா? எந்த பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தாரோ அவைகளையே பற்றிக் கொண்டிருந்துவிட்டு, அவருடைய விரோதிகளை சிநேகித்திருந்து, அவருடைய நண்பர்களை அலட்சியப்படுத்தி வாழ்ந்தவனுக்கு இயேசுவை சந்திக்கும்போது எப்படியிருக்கும்?
“இதோ, இவரே நம் தேவன். இவருக்காகக் காத்திருந்தோம் . . இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்” (ஏசா 25:9) என்று கூறுகிற கூட்டத்தாரோடே சேர்ந்து தைரியத்தோடே அவர் முன் நிற்பானா? பரிசுத்தமில்லாதவனின் நாவானது, வெட்கத்தினால் அவன் வாயின் மேற்புறத்தில் பேசமாட்டாமல் ஒட்டிக் கொண்டு, தன்னை அவ்விடத்திலிருந்து வெளியேற்றிவிட மாட்டார்களா என வாஞ்சிப்பான் என நீங்கள் நினைக்கவில்லையா? தனக்கு பழக்கமில்லாத இடத்திலிருக்கும் அந்நியனைப் போன்றும், கிறிஸ்துவின் பரிசுத்த மந்தையில் நுழைந்துவிட்ட கயவனைப் போன்றும் உணருவான். கேருபீன் சேராபீம்களின் சத்தமும், தேவதூதர் பிரதான தூதர்களின் பாடலும், பரலோகத்தின் கூட்டமும் அவனுக்கு விளங்காததாயிருக்கும். பரலோகத்தின் சூழ்நிலையிலே அவன் மூச்சுத் திணறிப்போவான்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த அளவில் பரிசுத்தமில்லாதவனுக்கு பரலோகமானது துக்கத்தைத் தரும் இடமாகத்தான் இருக்கும். வேறுவிதமாக இருக்கவே இயலாது. “பரலோகத்திற்கு செல்வோம்” என்று ஜனங்கள் கூறிக் கொண்டாலும், தாங்கள் என்ன சொல்லுகிறோம் என்பதை அறியாதவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். இந்த உலகத்தில் வசிக்கும்போதே நாம் பரலோக சிந்தையுள்ளவர்களாகவும், பரலோக ருசியை உணர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், இனி வரப்போகின்றதான பரலோக வாழ்க்கையில் நமக்கு இடமிருக்காது.
இதைக் குறித்து இன்னும் சொல்வதற்கு முன்பாக, நான் நடைமுறைக்கு உதவும் விதமாக சில வார்த்தைகளைக் கூறுகிறேன். 1) முதலாவதாக, இதை வாசிக்கிற உங்களைக் கேட்கிறேன், நீங்கள் பரிசுத்தமாக இருக்கிறீர்களா? நான் கேட்கிற கேள்வியை கவனமாக கேளுங்கள். நான் எந்தவிதமான பரிசுத்தத்தைக் குறித்துக் கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
நீங்கள் ஒழுங்காக சபைக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்களா, நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்களா, கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்கிறீர்களா, கிறிஸ்தவ பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்றெல்லாம் நான் கேட்கவில்லை. இவை எல்லாவற்றையும்விட பெரிதான ஒன்றைக் கேட்கிறேன்: நீங்கள் பரிசுத்தமாக இருக்கிறீர்களா, இல்லையா?
மற்றவர்களிடம் இருக்கும் பரிசுத்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா, பரிசுத்தவான்களின் வாழ்க்கை சரித்திரத்தைப் படிக்கிறீர்களா, பரிசுத்தமானவைகளைக் குறித்துப் பேசுகிறீர்களா, உங்கள் மேஜையின் மீது பரிசுத்த புத்தகங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்களா, பரிசுத்தமாக நடக்க வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கிறீர்களா, என்றாவது ஒரு நாளிலே பரிசுத்தமாக ஆகிவிடுவோம் என நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா என்றெல்லாம் நான் உங்களைக் கேட்கவில்லை. அதைவிட அதிகமானதைக் கேட்கிறேன்: இந்த நாளிலே நீங்கள் பரிசுத்தவான்களாக இருக்கிறீர்களா இல்லையா?
ஏன் இந்த கேள்வியை நான் கறாராகவும், உறுதியோடும் கேட்கிறேன் தெரியுமா? ஏனென்றால், வேதவசனம் கூறுகிறது, “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே”. இது என்னுடைய சொந்தக் கற்பனையல்ல, இது எழுதப்பட்டிருக்கிறது. இது வேதாகமம், எனது சொந்தக் கருத்தல்ல. இது தேவனுடைய வார்த்தை, மனுஷனுடையதல்ல: “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே” (எபி 12: 14).
ஐயோ, என்னவிதமான பரிசோதிக்கிற, சலித்தெடுக்கிற வார்த்தைகள் இவை! இவைகளை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என் மனதில் என்னவிதமான சிந்தனைகள் தோன்றுகிறது! நான் உலகத்தைப் பார்க்கிறேன், அதில் பெரும்பாலான பகுதி பொல்லாங்கில் மூழ்கிக் கிடக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கிறவர்களை கவனிக்கிறேன். அவர்களுடைய பெயரில்தான் கிறிஸ்தவம் இருக்கிறதேயொழிய, பெரும்பாலானவர்களிடம் கிறிஸ்தவத் தன்மையே இல்லை. வேதாகமத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். பரிசுத்தஆவி கூறுவதைக் கேட்கிறேன், “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை”.
நமது வழிகளை கவனித்துப் பார்க்கவும், நமது இருதயத்தை ஆராய்ந்து பார்க்கவும் வைக்கிறதான வசனம் இது. இவ்வசனம் நமக்குள் புனிதமான சிந்தனைகளை உருவாக்கி, நம்மை ஜெபத்திற்கு வழிநடத்த வேண்டும்.
இதைக் குறித்து எல்லாரைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக சிந்தித்து உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று கூறி, நீங்கள் என்னை மேற்கொண்டு பேசவிடாமல் செய்யலாம். அதற்கு எனது பதில்: “அப்படியல்ல, நரகத்திலுள்ள ஆத்துமாக்களும் இந்த அளவுக்கு முயற்சி பண்ணியிருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்பதல்ல கேள்வி. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே கேள்வி.”
நீங்கள் கூறுவதுபோல எல்லா கிறிஸ்தவர்களும் அந்த அளவுக்கு பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, அது பெரிய பரிசுத்தவான்களுக்கும், விசேஷித்த வரங்களைப் பெற்றவர்களுக்கும் மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒருவேளை நீங்கள் கூறலாம். அதற்கு எனது பதில், “வேதத்தில் நான் அப்படியொன்றும் பார்க்கவில்லையே. கிறிஸ்து மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும் தன்னை சுத்திகரித்துக் கொள்ளுகிறான்” (1யோவா 3:3). “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை.”
இந்த உலக கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டு அதே சமயத்தில் இவ்வளவு பரிசுத்தமாக நடப்பதென்பது இயலாத காரியம் என்று ஒருவேளை நீங்கள் கூறலாம். நான் சொல்லுகிறேன், “நீங்கள் தவறாக கருதுகிறீர்கள்”. அது நடக்கக் கூடிய காரியம்தான். கிறிஸ்து உங்கள் பக்கத்தில் இருந்தாரென்றால் இயலாத காரியம் என்று எதுவுமே இல்லை. பலர் அப்படி நடந்து காண்பித்திருக்கிறார்கள். தாவீது, ஒபதியா, தானியேல், நீரோவின் வீட்டு வேலையாட்கள் என்று பல உதாரணங்கள் அதை நிருபித்துக் காண்பிக்கிறது.
அவ்வளவு பரிசுத்தமாக நடந்தோமானால் நாம் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாகக் காணப்படுவோமே என்பீர்கள். இதற்கு நான் கூறும் பதில், “அது எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் இருக்க வேண்டிய விதம் அதுதானே. கிறிஸ்துவின் உண்மையான வேலையாட்கள் தங்களை சுற்றிலுமுள்ள உலகத்திற்கு நேர்மாறானவர்களாகவே எப்போதும் இருப்பார்கள் – பிரித்தெடுக்கப்பட்ட ஜாதி, விசேஷித்த ஜனம், நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால் நீங்களும் அப்படித்தானே இருக்க வேண்டும்!”
அப்படியானால் கொஞ்சம்பேர் மாத்திரந்தான் இரட்சிக்கப்பட முடியும் என்று கூறுவீர்கள். எனது பதில், “ஆம் எனக்கு அது தெரியும். மலைப்பிரசங்கத்தில் அதுதான் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.” 1800 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கர்த்தராகிய இயேசு இதைக் கூறிவிட்டார். “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத் 7:14). கொஞ்சம் பேர்தான் இரட்சிக்கப்படுவார்கள். ஏனென்றால் இரட்சிப்பைக் கண்டடைய சிலபேர்தான் பிரயாசைப்படுவார்கள். மனிதர்கள் தங்களுடைய பாவ சந்தோஷங்களையும் தங்கள் வழிகளையும் கொஞ்சமாவது வெறுத்து விலக மாட்டார்கள்.
இதெல்லாம் மிகவும் கடினமானவை. மிகவும் நெருக்கமான வழி என்று கூறுவீர்கள். அதற்கு என்னுடைய பதில், “ஆம் எனக்குத் தெரியும். மலைப் பிரசங்கமும் அதைத்தான் கூறுகிறது.” கர்த்தராகிய இயேசு 1800 ஆண்டுகளுக்கு முன்பே இதையும் கூறினார். தனக்கு சீஷர்களாக இருக்க வேண்டுமானால், மனிதர்கள் அனுதினமும் தங்கள் சிலுவையை சுமக்க வேண்டுமென்றும், கையோ காலோ வெட்டி எறியப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் எப்போதும் வலியுறுத்தினார். கஷ்டப்படாமல் லாபம் சம்பாதிக்க முடியாது என்பது உலகவாழ்க்கைக்கு மாத்திரமல்ல, ஆவிக்குரிய வகையிலும் பொருந்தும். விலையில்லாத பண்டத்திற்கு மதிப்பில்லை. – ஜெ.சி. ரைல்
சுலபமான விசுவாசத்திற்கு வழிவகுக்கிற இந்த நவீன காலத்தில், சபைகளும் சுவிசேஷகர்களும் கூறுவது – நீங்கள் கிறிஸ்தவர்களாவதற்கு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் “இயேசுக்கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக” ஏற்றுக் கொண்டுவிட்டால், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். அதற்கு பின் நீங்கள் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள். “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை” என்கிற வசனத்தை சற்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? “மாமிசப்பிரகாரமான கிறிஸ்தவன்” என்கிற நவீன சிந்தனைக்கே இது இடம் கொடுக்கவில்லை. தான் விசுவாசிப்பவன் என்று ஒருவன் சொல்லிக் கொண்டாலும், மாமிசப்பிரகாரமாக வாழ்கிறவன் நரகத்திற்குத்தான் போவான். நீங்கள் பரிசுத்தமாய் இருக்கிறீர்களா? – JSW