Skip to content

ராகாபின் விசுவாசம்

(மார்ச் 1, 1857ஆம் ஆண்டு, மியூசிக் ஹால், ராயல் சர்ரே கார்டன் என்கிற இடத்திலே, கர்த்தருடைய நாளில் ரெவ. சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அளித்த தியானத்தின்(0119)  சாராம்சம்)
(மொழிபெயர்ப்பு : விநோதாசுரேந்தர்)

A Sermon (0119) Delivered on Sabbath Morning, March 1st, 1857, by the REV C H SPURGEON
at the Music Hall, Royal Surrey Gardens.

விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்” எபி 11:31

ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் நீங்கள் பார்த்தீர்களானால், பலவிதமான வெற்றிவளைவுகளையும், ஜெயஸ்தம்பங்களையும் காண்பீர்கள். அவைகளில் இந்த தேசத்தின் வீரர்களும், ராஜாக்களும், இராணுவத் தலைவர்களும் ஆற்றிய வீரதீரச் செயல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அப்படியான ஒன்றில் நீங்கள் நெப்போலியன் போரிட்ட ஆயிரம் யுத்தங்களைக் குறித்த விவரத்தைக் காணலாம். வேறொரு இடத்தில் நெல்சன் அடைந்த வெற்றியானது சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கும். அப்படியிருக்கையில் மிகுந்த வல்லமை பொருந்தியதான விசுவாசத்திற்கென ஒரு ஜெயஸ்தம்பம் எழுப்பப்பட வேண்டியது மிகவும் நல்லதும் அவசியமானதுமாகும். அதன் மீது விசுவாச வீரர்களின் மகிமைப் பிரதாபங்களை பொறிக்க வேண்டியது மிகஅவசியமானது. அப்போஸ்தலனாகிய பவுல், அவ்விதமான ஜெயஸ்தம்பத்தை எழுப்புகின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் பிரம்மாண்டமானதொரு தூணை அவர் நிறுவியிருக்கிறார். அது விசுவாசத்தின் வெற்றிகளைப் பட்டியலிட்டுக் காண்பிக்கிறது. அதில் ஒரு விசுவாச வெற்றியைக் குறித்து ஆரம்பித்து, தொடர்ச்சியாக பல விசுவாச வெற்றிகளைப் பட்டியலிட்டுக் காண்பிக்கிறார். மரணத்தையே வென்றதான ஒரு விசுவாசத்தைக் குறித்து அதில் காண்கிறோம். ஏனோக்கு என்பவர், மனிதர் வழக்கமாகச் செல்லுகின்ற மரணத்தின் வழியாக செல்லாமல், வேறு வழியாக பரலோகத்தை அடைந்ததை அங்கு காண்கிறோம். காலத்தோடு போராடிய ஒரு விசுவாச வெற்றியை இன்னொரு இடத்தில் காண்கிறோம். 120 ஆண்டுகளுக்குப் பின்பாக நடக்கப் போகிற ஒரு சம்பவத்தைக் குறித்து தேவ எச்சரிப்பைப் பெற்று, அதைக் காணாமலேயே அதைக் குறித்த விசுவாசத்தை உடையவராக பேழையைக் கட்டிய நோவாவின் விசுவாசம், காலத்தோடு போராடிய விசுவாசம். நடக்க முடியாததாக நினைக்கத்தகும் காரியத்தைக் குறித்து விசுவாசம் பெற்று, அதனை நம்பி காரியத்தை செய்தபடியினாலே அவர் மனிதசிந்தனைகளின் மீது வெற்றி பெற்றார்; அத்தோடுகூட அநேக ஆண்டுகளுக்குப் பிற்பாடு நடக்கப்போகிற காரியத்தின்மீது விசுவாசம் வைத்தபடியினாலே காலத்தையுங்கூட வென்றார். இவருடைய விசுவாசமானது காலத்தையும், நடக்கவியலாத காரியங்களையும் வென்றது. வயோதிபத்தை வென்றதான இன்னொரு விசுவாசத்தையும் நாம் இதில் காண்கிறோம். வயது முதிர்ந்த பிராயத்திலே ஆபிரகாம் ஒரு குமாரனைப் பெற்றார். இயற்கையான பாசத்தையும் வெற்றி கொண்டதான ஒரு விசுவாசத்தையும் நாம் இந்தப் பட்டியலில் காண்கிறோம். கடவுளிடமிருந்து கட்டளை பிறந்தபடியினாலே, ஆபிரகாம் தனது ஒரே குமாரனென்றும் பாராமல், விசுவாசமுள்ளவராக மலையின் மீது ஏறி, கடவுள் நியமித்த ஸ்தலத்திலே தனது குமாரனை பலியிட கத்தியை ஓங்கிய சம்பவமானது பாசத்தையும் வென்ற விசுவாசமாகும். வயோதிப காலத்தின் கடைசிநேர போராட்டங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியிலும் செயல்பட்டதான விசுவாசமும் இங்கு பொறிக்கப்பட்டிருக்கிறது – “விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்”. ராஜரீக கவர்ச்சிகளை எதிர்த்துப் போராடி வென்றதானதொரு விசுவாசத்தையும் பார்க்கிறோம். “விசுவாசத்தினாலே மோசே . . இனிவரும் பலன்கள்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிகப் பாக்கியமென்று எண்ணினான்”. மோசே, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல், துன்பங்களைப் பொறுமையோடே சகித்தவராக, காணமுடியாத கடவுள் நேரில் இருப்பதுபோன்ற பாவனையோடு, எகிப்தைவிட்டுப் போனதில் விசுவாசத்தினுடைய உறுதி பிரகாசிக்கிறது. கடல்களைப் பிளந்த விசுவாசத்தை இதில் காண்கிறோம். மதில்களை இடிந்துவிழப் பண்ணின விசுவாசத்தையும் காண்கிறோம். மிகப் பெரிதான வெற்றியை இறுதிக்கட்டத்திற்காக வைத்திருப்பது போல, பாவத்தை வென்றதானதொரு விசுவாசத்தை முடிவில் காண்கிறோம். அநீதியோடு போராடி, வெற்றி சிறந்ததொரு விசுவாசமாக அது காட்சியளிக்கிறது. “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூட சேதமாகாதிருந்தாள்”. அந்தப் பெண்மணி விருந்தினரை உபசரித்தவள் மாத்திரமல்ல, அவள் ஒரு வேசியுங்கூட. இந்தப் பகுதியை வாசிக்கின்ற அனைவருக்கும் நான் இந்தக் கருத்தை மறைக்காமல் வலியுறுத்திக் கூறுவேன். அவள் ஒரு பாவியாக இருந்தாள் என்பதை வெளிப்படையாகக் கூறாத எவரும், இலவசமான கிருபையை மறுதலிக்கிறவர்களாகத்தான் நான் கருதுவேன்.

பாவவாழ்க்கையையும் மேற்கொண்டதான இந்த விசுவாசமானது, மற்ற விசுவாசத்திற்கு சற்றும் குறைவானதல்ல என்று நான் கருதுகிறேன். விசுவாசத்திற்கு சிறந்ததொரு மாதிரியைக் காண்பிக்கும்படி யாராவது என்னிடம் கேட்டால் இந்த விசுவாசத்தை நான் குறிப்பிடுவேன். என்ன! அசுத்தமான பாவகிரியைகளோடு விசுவாசம் போராடியதா? மனித இருதயத்திலிருந்து வெளிப்படும் காமவிகாரங்களோடும்கூட விசுவாசம் போராடி ஜெயிக்கிறதா? விசுவாசமே, உனது பரிசுத்தக் கரங்களால் சிற்றின்ப வெறியரையும், அசுத்தரையும் தொட்டு குணமாக்குவாயா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம், “ஆமாம்” என்று விசுவாசமானது புன்னகையோடு பதிலளிக்கிறது. “ஆமாம், பாவத்தின் இந்த அகோரத்தையுங்கூட நான் சந்திக்கிறேன். அறுவெறுப்பான துன்மார்க்க உளையினின்று நான் இந்தப் பெண்ணை விடுவித்தேன்; தந்திரமான வலைகளில் சிக்குண்டிருந்தவளை விடுதலையாக்கினேன்; மீறுதலின் தண்டனைகளுக்குத் தப்புவித்தேன். ஆம் அவளை காப்பாற்றி, மீட்டுக் கொண்டேன். அவளுக்குப் பரிசுத்தமான இருதயத்தைக் கொடுத்தேன். பரிசுத்தமான அழகை அவளில் புதுப்பித்தேன். ஆகவே, இப்பொழுது அவளுடைய பெயர் என்னுடைய விசுவாச வெற்றிவீரர்களின் பட்டியலில் இடம்பெறுகிறது. முற்றிலும் பாவமான நிலையில் இருந்த பெண்ணாக இருந்தாலும், விசுவாசத்தினால் அவள் மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறாள்”.

இந்தப் பெண்மணியின் விசுவாசமானது மிகவும் கவனிக்கத்தக்கது. பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இவளது விசுவாசமானது ஒன்றிலிருந்து மற்றதிற்கு வழிநடத்திச் செல்லுகிற முன்னேற்றப் பாதையை உடையதாயிருக்கிறது. நீங்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக இவளது விசுவாசத்தை பல பாகங்களாக நான் உங்களுக்குப் பிரித்துச் சொல்லப் போகிறேன். ராகாபின் விசுவாசமானது, (1)இரட்சிக்கும் விசுவாசம்;  (2)தனித்தவிசுவாசம்; (3)நிலையான விசுவாசம்; (4)தன்னையே வெறுக்கும் விசுவாசம்; (5)கருணையுள்ள விசுவாசம்; (6)பரிசுத்தப்படுத்துகின்ற விசுவாசம். முதலாவதான விசுவாசத்தை மாத்திரம் படித்துவிட்டு, நிறைவுள்ளவர்களாகப் போய்விடாதீர்கள். இவளது விசுவாசத்தின் எல்லாப் பரிமாணங்களையும் அறிந்து கொண்டீர்களானால்தான் அது எவ்வளவு மகத்துவமான விசுவாசம் என்பது உங்களுக்குப் புரியும்.

1. இரட்சிக்கும் விசுவாசம்!  இந்த அதிகாரத்தில் காணப்படுகின்ற மற்ற விசுவாச வீரர்கள் எல்லாருமே விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டவர்கள்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இந்தப் பெண்மணியைக் குறிப்பிட்டு சொல்லும்போது தனது விசுவாசத்தினாலே அவள் சேதமாகாதிருந்தாள் எனக் கூறப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கோ அவர்களுடைய அழிவைக் குறித்து கூறப்படவில்லை. எரிகோ பட்டணம் பிடிபட்டு எல்லாரும் அழிக்கப்படும் தறுவாயிலே இவள் மாத்திரம் தனது விசுவாசத்தினிமித்தமாக பாதுகாத்து வைக்கப்பட்டாள் என அறிகிறோம். அந்தப் பாதுகாப்பானது தற்காலிகமானதல்ல; பட்டயத்துக்கு விலக்கப்பட்ட வெறும் சரீர பாதுகாப்பு மாத்திரம் அல்ல. அவளுடைய ஆத்துமாவும் நரகத்துக்கு நீங்கலாக விடுவிக்கப்பட்டது. ஓ! விசுவாசந்தான் என்னவொரு மகிமையான காரியம். அது பாதாளத்துக்குப் போகின்ற ஆத்துமாவை விடுவிக்கின்றதே. பாவமானது பொங்கிப் பிரவாகிக்கிற நீர்ச்சுழலைப் போன்றிருக்கிறது. அதில் சிக்கி, அதல பாதாளத்தை நோக்கி அடித்துக் கொண்டு போகின்ற மனிதவர்க்கத்தை தமது கரங்கொண்டு தூக்கியெடுத்துக் காப்பாற்றுவதற்கு தெய்வாதீனமான கரங்களைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. பிரவாகித்து வருகின்ற தேவகோபமானது மிகவும் உக்கிரமானது. ஆத்துமாவை அழிவுக்கு நீங்கலாக்கி விடுவிக்கத் தக்கதான பாவபரிகாரமும் தெய்வீகமானது. இவை அனைத்தையும் செய்து முடிப்பதற்கு விசுவாசம் ஒரு முக்கிய கருவியாக விளங்குகிறது. பாவச்சுழலில் இருந்து விசுவாசமானது பாவியை விடுவிக்கிறது. பாவச்சுழலில் அடித்துச் செல்லப்பட்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிற பாவியை, பரிசுத்தஆவியின் துணையோடு அது மீட்டுக் கொள்கிறது. ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது எவ்வளவு பெரிய காரியமாயிருக்கிறது பார்த்தீர்களா? நீங்கள் உங்கள் வாழ்நாளில் யாராவது ஒருவரை மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்காவிட்டால் அது எவ்வளவு பெரிய காரியமென்று உங்களால் உண்மையாக உணர முடியாது. எரிந்து கொண்டிருக்கிற ஒரு வீட்டினுள்ளே நுழைந்து, உடைந்து கொண்டிருக்கிற மாடிப்படிகளைக் கடந்து, புகையின் நடுவிலே மூச்சுத் திணறி, மாடி அறைக்குச் சென்று, அங்கே கட்டிலில் படுத்திருக்கின்ற ஒரு குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு, ஜன்னல் அருகே செய்வதறியாது திகைத்து நிற்கும் ஒரு பெண்ணையும் தோளில் சுமந்து கொண்டு, தன் உயிரையும் பணயம் வைத்து, அவர்களைக் காப்பாற்றியிருக்கின்ற ஒரு இளைஞனிடம் விசாரித்துப் பாருங்கள். சகமனிதர்களை மரணத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவது எத்தனை பெரிய காரியம் என்பதை அவன் விவரிப்பான். ஆற்றின் நடுவிலே மூழ்கிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை காப்பதற்காக, ஒரு நொடியில் ஆற்றில் குதித்து, நீந்தி அவனிடம் சென்று, மூழ்குகின்றவனின் மரணபோராட்டங்களின் மத்தியில் அவனைத் தூக்கியெடுத்து கரை சேர்த்த வாலிபனிடம் விசாரித்துப் பாருங்கள். அவனும் சகமனிதனைக் காப்பாற்றுவது எத்துனை பெரிய காரியம் என்பதை விளக்குவான். ஆனால், ஒரு ஆத்துமாவைக் காப்பது எத்தனை மேலான காரியம் என்பதை யாராலும் கூற முடியாது. அதை சொல்லக்கூடியவர் நமது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து மாத்திரமே. ஏனென்றால் அவர் ஒருவர் மாத்திரமே பாவிகளின் ஆத்துமாக்களை காப்பாற்றுகிறவராய் இருக்கிறார். ஒரு ஆத்துமா காப்பாற்றப்படுவது எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை நீங்கள் அறிந்தால் மாத்திரமே விசுவாசத்தின் மேன்மை உங்களுக்கு விளங்கும். “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி . . சேதமாகாதிருந்தாள்”. ராகாப் உலகரீதியிலாக காக்கப்பட்டிருந்தாலுங்கூட அவள் சுவிசேஷரீதியாகவும் காக்கப்பட்டாள் என்றுதான் நான் நம்புகிறேன். அவள் வேவுகாரரைத் தன்னுடைய வீட்டிலே ஏற்றுக் கொண்டது, வசனத்தை இருதயத்திலே ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தென்படுகிறது. சிவப்பு நூலை பலகணியிலே அவள் கட்டித் தொங்கவிட்டிருந்தது அவளுடைய விசுவாசத்தை பறைசாற்றுவதாயிருக்கிறது. மீட்பராகிய இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசிப்பதை படம்பிடித்துக் காட்டுகிறவிதமாக அந்த சிவப்புநூல் காட்சியளிக்கிறது. இரட்சிப்பு – என்கிற வார்த்தையின் நீள, அகல, ஆழங்களை அளவிடக்கூடியவன் யார்? அவளை பூரண பாதுகாப்பிற்குள் கொண்டுவந்ததான மகத்தான காரியத்தை அந்த விசுவாசமானது நடப்பித்தது. பாவிகளே, நீங்களுங்கூட ஆறுதல் அடையலாம். ராகாபை இரட்சித்த அந்த விசுவாசமானது உங்களையும் இரட்சிக்கும். நீங்களும் ராகாபைப் போன்ற குற்றஉணர்வை உடையவர்களாக இருக்கிறீர்களா? கடவுள் உங்களுக்கும் மனந்திரும்புதலை அருளினாரென்றால் நீங்களும் அவளைப் போன்றே இரட்சிக்கப்படலாம். ஓ, பெண்ணே, உன்னை நீயே அறுவெறுக்கிறாயா? இந்த கூட்டத்தாரிடையே இன்று இருந்து, “ஓ, நான் இவ்விடத்தில் இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்; பரிசுத்தமும் உண்மையும் நிறைந்திருக்கின்ற இந்த ஜனங்களின் மத்தியிலே நான் இருப்பதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை” என்று மனம் வருந்துகிறாயா? நீ சென்றுவிடாமல் இங்கே தரித்திருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். ஆம், மீண்டுமாக இந்த கூட்டத்தாரின் மத்தியில் வா. இதை உன்னுடைய ஜெபவீடாக ஆக்கிக் கொள். நீ அழையா விருந்தாளி அல்ல. உன்னை நாங்கள் வரவேற்கிறோம். இரக்கத்தின் ஸ்தலத்திலே பிரவேசிப்பதற்கு உனக்கு தெய்வீக உரிமை இருக்கிறது. ஆம், உனக்கு புனிதமான உரிமை இருக்கிறது. ஏனென்றால் இங்கு பாவிகள் வரவேற்கப்படுகிறார்கள். நீயும் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருப்பதால் உனக்கும் வரவேற்பு உண்டு. கிறிஸ்துவை விசுவாசி. நீயும் ராகாபைப் போலவே, கீழ்ப்படியாதவர்களோடேகூட சேதமாகாமல், இரட்சிப்பை அடைவாய்.

இதோ, உங்களுக்கு முன்பாக ஒரு நற்செய்தி வைக்கப்பட்டிருக்கிறது. பாவிகளும், பொல்லாதவர்களும் வந்து பாதுகாப்பாக இருக்கும்படியான சரணாலயம் ஒன்று உங்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அது பாதுகாப்பளிக்கும் சரணாலயம் மாத்திரமல்ல, உங்கள் பாவங்களையும், நோய்களையும், குணப்படுத்துகிறதான ஒரு வைத்தியசாலையுங்கூட. சுவிசேஷத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக இருந்த அவர்களுடைய நிலை இனி நீடிப்பதில்லை. அவர்கள் முற்றிலுமாக குணப்படுத்தப்படுகிறார்கள். “கிறிஸ்துவிடம் வாருங்கள் – பிறகு உங்கள் பாவங்களிலேயே நிலைத்திருங்கள்” என்று கூறி நான் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. அப்படிக் கூறுவேனேயாகில் அது மிகவும் அபத்தமாயிருக்கும். அப்படி கூறுவது, ஒருவனுக்கு விடுதலையளிப்பதாகக் கூறிவிட்டு அவனை சங்கிலிகளால் பிணைத்து வைத்திருப்பதற்கு சமமாயிருக்கும். கிறிஸ்துவோ பாவியின் பாவங்களை மன்னித்து அவனுக்கு முற்றிலுமாக விடுதலையளிக்கிறவராக இருக்கிறார். மீண்டும் சொல்லுகிறேன். எப்பேர்பட்ட பாவியாக இருந்தாலும் கிறிஸ்துவிடம் வரலாம். பரிசுத்தவான்கள் உரிமையோடு அவரிடம் வருவது போல நீங்களும் வரலாம். எப்பேர்பட்ட பாவத்தையும் மன்னிக்கக்கூடியதான இரத்த ஊற்றானது வழிந்தோடுகிறது; நிர்வாணிகளுக்கென இயேசுக்கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரம் நெய்யப்பட்டிருக்கிறது; நோயுள்ளவர்களை குணமாக்க கல்வாரியின் தைலம் தயாராக உள்ளது. மரித்தவர்களை உயிர்ப்பிப்பதற்காக ஜீவனானது இவ்வுலகில் பிரவேசித்திருக்கிறது. அழிந்து கொண்டிருக்கிற, குற்றமுள்ள ஆத்துமாக்களே, ராகாபின் விசுவாசத்தை கடவுள் உங்களுக்குத் தருவாராக. நீங்களும் இரட்சிப்பை பெற்றுக் கொள்வீர்களாக. அவளோடுகூட சேர்ந்து நீங்களும் பரமராஜ்ஜியத்தில் காணப்படுவீர்களாக. தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் இடைவிடாமல் ஸ்தோத்திரம் செலுத்திக் கொண்டிருக்கின்ற, பரிசுத்தமான வெண்ணுடை அணிந்தவர்களின் மத்தியிலே நீங்களும் காணப்படுவீர்களாக.

2. தனித்தபடியான விசுவாசம்!  ராகாபின் விசுவாசம் தனித்தபடியான விசுவாசம் என்பதை கவனியுங்கள். எரிகோ பட்டணம் தாக்கப்படப் போகிறது. அந்தப் பட்டணத்திலே பல்வேறு பொருளாதார நிலையிலான மக்களும், வித்தியாசமான குணங்களைக் கொண்டவர்களும் இருந்திருப்பார்கள். அந்தப் பட்டணம் பிடிபட்டதானால் தாங்களும் அழிந்து போவோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  கொலை செய்யப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்களில் ஒருவராவது தங்களுடைய பாவத்தைக் குறித்து மனம் வருந்தவில்லை. யாருமே இரக்கம் காண்பிக்கும்படி கெஞ்சவுமில்லை. ஆனால் வேசியாக வாழ்ந்த இந்தப் பெண் மாத்திரமே அதைச் செய்தாள். அவள் மாத்திரமே மீட்கப்பட்டாள். ஆயிரக்கணக்கானவர்களின் மத்தியிலே இவள் ஒருவள் மாத்திரமே தனித்தபடியான இரக்கம் பெற்றாள். நாம் மாத்திரம் தனித்தபடியாக விசுவாசியாக இருக்க நேர்ந்தால் அது எவ்வளவு கடினமானது என்பதைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? உலகத்தில் எல்லோரும் நம்புவதை நாமும் நம்புவது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால் யாருமே நம்பாத ஒன்றை நாம் மாத்திரம் தனித்து நம்புவதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. நீங்கள் நினைக்கிறவிதமாக யாருமே நினைக்காவிட்டால் உங்களுக்கு சிரமம்தான். நீதியை நிலைநிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கானவர்களை எதிர்த்து, தனித்துப் போராடுவது கடினமானது. ராகாபின் விசுவாசமும் இப்படிப்பட்டதுதான். ராகாப் நினைத்ததைப் போல நினைக்கக்கூடியவர்கள் அங்கு ஒருவர்கூட இல்லை. அவளுடைய இருதயத்தின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அவளுடைய விசுவாசத்தை மதிக்கத்தக்கவர்கள் யாருமே அங்கு இல்லை. அந்தப் பட்டணத்தில் அவள் தனித்து நிற்கிறாள். யாவரும் அலட்சியப்படுத்துகிற சத்தியத்தை, தனி ஒருவராக பின்பற்றுவது மிகவும் மகத்தான காரியம். தனித்து நின்று போராடியவர்களைக் குறித்ததான சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகம் தங்களைப் பழித்தாலும், வசைபாடினாலும் தங்கள் நிலையில் அசையாமல் உறுதியாக தனித்து நின்று, தங்கள் பலவீனத்தையும் பெலனாக மாற்றிக்கொண்டு, உறுதியாக வாழ்ந்தவர்களை, அவர்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைந்த பிற்பாடு, அவர்களைப் பழித்த அதே உலகமே புகழ்ந்து போற்றிக் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறோம். உலகம் அவர்களுக்கு “மாபெருந்தலைவர்” என்கிற பெயரையும்கூட சூட்டிவிடும். ஆனால் அவர்களுடைய வெற்றி எதில் இருந்தது? புயல் போன்ற எதிர்ப்புகளின் மத்தியிலும் கலங்காது, அமைதியோடு தனித்து நின்று தமது கொள்கையிலிருந்து பின்வாங்காமல் இருந்ததிலேயே. அநேகர் வந்து எதிர்த்தாலும் தனித்து நின்று கடவுளுக்காக உறுதியோடிருந்ததே அவர்தம் வெற்றிக்குக் காரணம். நாம் சிறந்த வெற்றி வீரராக விளங்க வேண்டுமானால் நாம் தனித்து நின்று போராட வேண்டும். கிறிஸ்தவர்கள் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தக்கூடியவர்களாக விளங்க வேண்டும். செத்த மீன்தான் நீரோட்டம் செல்லும் போக்கிலேயே செல்லும். ஆனால் உயிரோடிருக்கிற மீனோ தண்ணீரை எதிர்த்து நீந்திச் செல்லும். உலகப்பிரகாரமான பக்தியையுடையவர்கள், மற்றவர்கள் செய்கிற மாதிரியே செய்து கொண்டு போவார்கள். அது ஒன்றும் பாராட்டத்தக்க காரியமல்ல. தனித்து நின்று செயல்படுவதே சிறந்தது. “நான் ஒருவன் மாத்திரமே மீதியாக இருக்கிறேன். என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்களே” என்று எலியா தீர்க்கதரிசி கூறினார். தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு மற்றவர்களின் துணை அவசியமில்லை. தனித்து நிற்க தைரியமில்லாத மனிதன் நேர்மையான மனிதனல்ல. நாகரீகத்தோடு ஒத்துப் போகவேண்டும் என்பதற்காக உங்களில் அநேகர் சக்திக்கு மீறி பணத்தை செலவழிக்கிறீர்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். நாகரீகத்தை மேற்கொள்ள உங்களுக்குத் தைரியமில்லை. நீங்கள் பழகுகின்ற வட்டாரங்களில் இருக்கின்ற சகமனிதர்களின் கருத்துக்களுக்கு மாறாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க உங்களுக்கு இஷ்டமில்லை. அதனால் கஷ்டங்களுக்கு ஆளாகிறீர்கள். நாகரீகம் என்கிற விலையுயர்ந்த துணியைக் கொண்டு உங்கள் கண்களை மறைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே தவறான காரியங்களையும்,  அது வழக்கத்தில் உள்ளது எனக்கூறிக் கொண்டு பொறுத்துப் போகிறீர்கள். ஆனால் தனித்தன்மையோடிருப்பதே சிறந்தது என்பதை உணர்ந்திருக்கின்ற மனிதன், துணிச்சலோடு தனித்து நிற்பான். அவன் அதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதில்லை, தனித்து நின்றுவிடுவான். ராகாபின் விசுவாசமோ அந்தவிதமான மகிமையின் கிரீடத்தை சூட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையற்ற மனிதர்களின் மத்தியிலே, பாவியாக இருந்தும், அவள் தனது விசுவாசத்தில் தனித்து நின்றவளாகக் காணப்படுகிறாள்.

ஒ, பாவியே, நீயும் இருதயம் நொறுங்குண்டவனாக இருந்தால், கடவுள் ஏன் உனக்கும் அவ்விதமான விசுவாசத்தை அருளிச் செய்யமாட்டார்? ஒருவேளை நீ, கர்த்தருடைய ஓய்வுநாளை மதிக்காதவர்களின் வீட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கலாம். பக்தியற்றவர்களோடு வசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உன்னுடைய இருதயத்தில் கிருபையானது இடைப்படுமானால் நீ நியாயமானதையே செய்வாய். கடவுள் நம்பிக்கையற்றவர்களின் மத்தியிலே நீ ஒருவேளை இருக்கலாம். உன்னுடைய மனசாட்சியின்பிரகாரமாக நீ அவர்களுக்கு உபதேசிக்க நேர்ந்தால், அவர்கள் உன் பேச்சைக் கேட்டு சீறுவார்கள். நீ அவர்களை விட்டு விலகினாலும் அவர்கள் உன்னைத் துன்பப்படுத்தலாம். போய் அவர்களிடம் தைரியமாகப் பேசுவாயா? உன்னால் அதைச் செய்ய முடியுமா என்று பார். நீ மனிதர்களுக்கு அஞ்சுவாயானால் நீ கண்ணியில் விழுவாய். அது உனக்குத் துயரத்தைக் கொண்டுவருவது மாத்திரமல்லாமல், உன்னை பாவத்துக்கும் ஆளாக்குகிறது. எப்பேர்பட்ட மிகக்கொடூரமான பாவியுங்கூட தைரியமுள்ள பரிசுத்தவானாகக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள். சாத்தானின் சேனையில் இருந்த மகா பொல்லாதவனான மனுஷனுங்கூட, அவனது மனமாற்றத்திற்குப் பிறகு, இயேசுவுக்கு உண்மையான வீரனாக ஜொலிக்க முடியும். பயங்கரமான பாவங்களிலிருந்துங்கூட கிருபையானது பரிபூரண விடுதலையைத் தருவதாயிருக்கிறது. கேளுங்கள், தேவன் உங்களுக்கும் அப்படிப்பட்ட உயர்ந்த, தனித்துவம் வாய்ந்த விசுவாசத்தைத் தந்தருளுவார்.

3. நிலையானவிசுவாசம்! இந்தப் பெண்மணியின் விசுவாசமானது பிரச்சனைகளின் மத்தியிலும் அசையாமல் உறுதியாக நின்ற விசுவாசம். ஒருமுறை ஒரு சபைப் போதகரிடம் அங்கத்தினர் ஒருவர் கூறினார்: “ஐயா, வெகு காலமாக மழை இல்லாமல் வறட்சி நிலவுகிறது. மழை வரும்படியாக வேண்டிக் கொள்ளுங்கள்”. அதற்குப் போதகர் பதில் கூறினாராம்: “சரி, வேண்டிக் கொள்கிறேன். ஆனால் அதினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை. இப்போதுதான் காற்று காலமாயிருக்கிறதே” என்று. இந்த மாதிரியான விசுவாசத்தை உடையவர்களாகத்தான் அநேகர் இருக்கிறார்கள். நடக்கக்கூடிய வாய்ப்பு தென்பட்டால் மாத்திரமே நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். வாக்குத்தத்தமும், நடைமுறை சூழலும் ஒன்றோடொன்று ஒத்துப் போகாது என்பது போலத் தோன்றினால், அவர்கள் உடனே வாக்குத்தத்தத்தை விசுவாசிப்பதை விட்டுவிட்டு, சூழ்நிலைக்கேற்றாற்போலத் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுகிறார்கள். “இப்படித்தான் நடக்கும்போலத் தோன்றுகிறது. ஆகவே நான் அதை நம்புவேன்” என்கிறவர்களாயிருக்கிறார்கள். அது காணாமல் விசுவாசிப்பதல்ல, கண்டு விசுவாசிப்பது. உண்மையான விசுவாசம் என்ன கூறுமென்றால், “நடப்பதற்கான வாய்ப்பே இருப்பது போலத் தோன்றவில்லை. என்றாலும் நான் விசுவாசிப்பேன்”. இதுதான் உண்மையான விசுவாசம். மலைகள் இருளில் மறைந்திருந்து பார்வைக்குத் தென்படாவிட்டாலும் அதை பகலில் பார்ப்பது போல நினைப்பதே உண்மையான விசுவாசம். மேகம் மறைத்தாலும் ஊடுருவிப் பார்க்கக் கூடியது உண்மையான விசுவாசம். கண்களால் கண்டு விசுவாசிப்பது விசுவாசமல்ல, விசுவாசக் கண்களால் சகலத்தையும் உணர்ந்து விசுவாசிப்பதே மெய்யான விசுவாசம். “நான் அவரைக் கண்டுபிடிக்காவிட்டாலும் அவரில் நம்பிக்கை கொள்ளுவேன். கடினமான பாறையில் நடப்பது போல கடல் மீது நடப்பேன், பயங்கரமான புயலின் நடுவேயும், வெயிற்காலத்தில் நடப்பது போல நடப்பேன். கொந்தளித்து, சீறி எழும்புகின்ற கடலின் மீதும், என் படுக்கையில் படுத்திருப்பது போன்ற அமைதியோடு படுத்திருப்பேன்” என்று மெய்யான விசுவாசம் கூறும். ராகாபின் விசுவாசம் மிகவும் சரியான விசுவாசமாக இருந்தது. ஏனென்றால் அது கடைசி வரைக்கும் உறுதியாகவும் நிரந்தரமாகவும் காணப்பட்டதே.

அவிசுவாசமானது ராகாபோடே சம்பாஷணை செய்தது போன்ற ஒரு சிறு கற்பனை பண்ணிப் பார்த்தேன். “ராகாபே, இஸ்ரவேலர் இங்கு வருவார்கள் என நீ நினைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனமாயிருக்கிறது? அவர்கள் யோர்தானுக்கு அப்புறத்திலிருக்கிறார்களே. அதைக் கடந்து வருவதற்கு ஒரு பாலமும் இல்லையே. எப்படி அவர்கள் வருவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இங்கு வருவதற்கு முன்பாக அவர்கள் பல பட்டணங்களைப் பிடிக்க வேண்டும். அதிலும் கானானியர் மிகுந்த பலமுள்ளவர்கள். இஸ்ரவேலரோ வேற்று நாட்டில் அடிமைகளாக இருந்தவர்கள்தானே. கானானியர் அவர்களைக் கண்டதுண்டமாக்கி விடுவார்கள். அத்தோடு அவர்களுக்கு முடிவு வந்துவிடும். ஆகவே நீ அந்த வேவுகாரர்களுக்கு அடைக்கலம் கொடுக்காதே. நடக்கமுடியாத ஒரு காரியத்துக்காக நீ ஏன் உன் வாழ்க்கையை அழித்துக்கொள்ள வேண்டும்?” “இல்லையில்லை. என்னுடைய விசுவாசம் யோர்தானுக்கும் அப்பாற்பட்டது. அப்படி இல்லாவிட்டால் என் விசுவாசம் வறண்டுபோன விசுவாசமாக அல்லவா இருக்கும்!” என ராகாப் பதில் கூறுகிறாள். உண்மையில் பார்த்தால், அவர்கள் விரைந்து யோர்தானைக் கடந்து வந்துவிட்டார்கள். அதனால் ராகாபின் விசுவாசம் இன்னும் வலுப்பெறுகிறது. “ஆ, இதோ, நெருங்கி வந்துவிட்டார்களே! இப்போதாவது அவர்களிடம் கருணை காட்டும்படி வேண்டிக்கொள்ள மாட்டீர்களா?” என மனதுக்குள் நினைக்கிறாள். அவளது அவிசுவாச அண்டைவீட்டாரிடமிருந்து வரும் பதில் என்னவாக இருக்கக்கூடும்? “அவசியமில்லை. எரிகோவின் மதில்கள் மிகவும் உறுதியானவை. பலவீனர்களான எதிரிகளால் அதை ஒன்றும் தகர்க்க முடியாது. பார். அந்த வீரர்கள் வெளியே வந்து என்ன செய்கிறார்கள்? தங்கள் கொம்புகளை எடுத்து எக்காள சத்தம் இடுகிறார்கள். இன்னுமா நீ நம்பிக் கொண்டிருக்கிறாய்? அவர்கள் செய்வது முட்டாள்தனமாயில்லை?” ஜனங்கள் பட்டணத்தை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவர்கள் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. முடிவில் சில ஆசாரியர்கள் எக்காளத்தை தொனிக்கச் செய்கிறார்கள். “இப்படி எங்காவது கேள்விப்பட்டதுண்டா? வெறும் எக்காள சத்தத்தினால் ஒரு பட்டணத்தைப் பிடிக்க முடியுமா?” முதலாம் நாள் இப்படி நடந்தது. ஒருவேளை அடுத்த நாளில் அவர்கள் பெரிய ஏணிகளைக் கொண்டுவந்து, அதில் ஏறி பட்டணத்தைப் பிடித்துக் கொள்வார்கள் என்று ராகாப் ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாளும் பட்டணத்தை சுற்றி வருதலும், எக்காளம் ஊதுதலும் மாத்திரமே நடந்தது. இப்படியாக ஏழு நாட்கள் சென்றது. அந்த நாட்கள் எல்லாம் அந்தப் பெண்மணி தனது ஜன்னலில் சிவப்பு நூலைக் கட்டியே வைத்திருந்தாள். தன் வீட்டிலே தனது தாயையும், தகப்பனயைம், சகோதர, சகோதரிகளையும் கூட்டிச் சேர்த்து அவர்களை வெளியே விடாமல் பாதுகாப்பாக வைத்திருந்தாள். ஏழாம் நாளிலே இஸ்ரவேல் ஜனங்கள் பலத்த முழக்கமாக சத்தமிடுகையில் எரிகோவின் அலங்கத்தின் மதில்கள் இடிந்து விழுந்தன. பெண்களுக்கே இயல்பாக இருக்கக்கூடிய பயந்த சுபாவத்தை அவளுடைய விசுவாசமானது மேற்கொண்டது. எரிகோவின் அலங்கமானது இடிந்து விழுந்தபோதிலுங்கூட அவள் பயமில்லாமல் அமர்ந்திருந்தாள். அவள் வீடு அலங்கத்தின் மதிலின் மீதிருந்தது. அலங்கமானது இடிந்து பெரிய சேதம் ஏற்பட்டபோதிலுங்கூட அவளுடைய வீடானது ஒரு சேதமும் இல்லாமல் தனித்து நின்றது. அவளும் அவளுடைய வீட்டாரும் பத்திரமாகக் காக்கப்பட்டார்கள். சேற்றிலே செந்தாமரை முளைக்குமென்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களா? ராகாபைப் போன்ற பாவியான ஒரு இருதயத்திலிருந்துங்கூட இப்படிப்பட்டதான திடவிசுவாசம் தோன்றக்கூடும் எனக் கனவிலும் நினைப்பீர்களா? ஆம், இங்கே கடவுள்தாமே விதைப்பின் எஜமானனாயிருக்கிறார். “என்னுடைய பிதா விதைக்கிறவர்” என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டிருக்கிறார். எந்த விவசாயியும் நல்ல நிலத்திலிருந்து நல்ல விளைச்சலைப் பெறுவான். ஆனால், கடவுளோ பாறையான இடத்திலும் கேதுருமரங்களை விளையச் செய்யக்கூடியவர். எதிர்பாராத இடங்களிலிருந்தும் மிகப் பெரிதான விசுவாசத்தை எழும்பச் செய்யக்கூடியவர். அவருடைய பெரிதான கிருபைக்கே மகிமை உண்டாவதாக. பாவிகளில் பிரதான பாவியுங்கூட மிகப்பெரிய விசுவாசியாக ஆகலாம். ஆகவே, பாவிகளே, சந்தோஷப்படுங்கள்! கிறிஸ்து உங்களை மனந்திரும்பச் செய்வாரானால், அவருடைய குடும்பத்தில் நீர் கீழானவராயிருப்பதில்லை. விசுவாச வீரர்களின் பட்டியலில் ஒருவேளை உங்கள் பெயரும் இடம்பெறலாம். விசுவாசத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறவராக நீங்கள் ஒருவேளை ஆகக்கூடும்.

4. தன்னைத்தானே வெறுக்கும்விசுவாசம்! இந்தப் பெண்மணியின் விசுவாசமானது தன்னையே வெறுத்த விசுவாசமாகும். அந்த வேவுகாரர்களுக்காகத் தன்னுடைய உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தாள். அவர்கள் தனது வீட்டில் இருப்பது தெரிந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்பது அவளுக்குத் தெரியும். வேவுகாரரைப் பாதுகாப்பது தேசவிரோதச் செயல். அவர்களைப் பாதுகாக்கக்கூடிய அளவுக்கு அவளுக்கு பெலன் இல்லாவிட்டாலுங்கூட, தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற தைரியத்தோடு அவர்களை மறைத்து வைத்ததில் அவளுடைய பெலன் வெளிப்படையாகத் தெரிகிறது. நம்மையே வெறுப்பதென்பது மிகவும் பெரிய காரியம். ஒருமுறை ஒருவர் சொன்னாராம்: “நான் மிகவும் நல்லதொரு மதத்தில் இருக்கிறேன். ஏனென்றால் இங்குதான் எனக்கு செலவே கிடையாது. ஒரு பைசாகூட நான் செலவழிக்காவிட்டாலும் என்னை எல்லாரும் பக்தியுள்ளவனாகத்தான் காண்கிறார்கள்”. அதைக் கேட்ட மற்றொருவர் கூறினாராம்:”இயேசுக் கிறிஸ்து உம்முடைய கஞ்சத்தனமான ஆத்துமாவை தமது மிகுந்த இரக்கத்தினால் மீட்டிருந்தாரானால், நீர் செலவைக் குறித்துக் கவலைப்படவே மாட்டீர்”. தன் செல்வத்தைக்கூட வெறுக்காதவனாயிருக்கிற அந்த மனிதனில் விசுவாசமே இல்லை என்றுதான் நான் கூறுவேன். கிறிஸ்துவுக்காக நாம் எதையும் தராவிட்டால், எதுவும் உழைக்காவிட்டால், கிறிஸ்துவுக்காக நம்மையே வெறுக்காவிட்டால் அடிப்படையிலேயே நம்மில் கோளாறு காணப்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். உங்களில் பலர் மாய்மாலக்காரர்களாயிருக்கிறீர்கள். நீங்கள், “இயேசுவுக்காய் ஒப்புவித்தேன், யாவையும் தாராளமாய்” என்று பாடுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் அவருக்காக ஒன்றும் செய்வதில்லை. இதை நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். யாவையும் என்ன, பாதியைக்கூட நீங்கள் தருவதில்லை. ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட அவருக்காக செலவிடுவதில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். நீங்கள் ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும் உங்களையே ஏழையாகக் கருதிக்கொள்கிறீர்கள். ஆகவே, “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” என்று சொல்லி, உங்களையே ஏழையாக பாவித்து அதை நீங்களே வைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் பக்தியை எப்படித்தான் நியாயப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ராகாப் என்ன நினைக்கிறாள்: “இந்த வேவுகாரரினிமித்தமாக நான் இறக்க நேர்ந்தாலும் நான் அதற்குத் தயார். இப்போதே எனக்கு கெட்ட பெயர்தான் இருக்கிறது. இதனிமித்தமாக என் பெயர் இன்னும் கெட்டுப் போனாலும் பரவாயில்லை. தேசத்துரோகியாக என்னைக் கைது செய்தார்களானாலும் பரவாயில்லை. என்னுடைய தேசத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக எனக்கு என்ன ஆபத்து நேரிட்டாலும் பரவாயில்லை. கடவுளுடைய சித்தம் மாத்திரமே இதில் நடைபெற வேண்டும். அதற்காக நான் ஆபத்துக்களையும்கூட சந்திப்பேன்”. சகோதரர்களே, சகோதரிகளே, நீங்கள் உங்களையே வெறுக்காவிட்டால் உங்கள் விசுவாசத்தைக் குறித்து சந்தேகப்படுங்கள். விசுவாசமும், தன்னைத்தானை வெறுத்தலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போன்றது. அவை ஒன்றாகப் பிறந்தவை. அவை ஒன்றாகவே வாழவேண்டும். இரண்டிற்கும் போஷாக்கைத் தருவது ஒரே உணவுதான். பாவியான இந்தப் பெண்மணி தன்னையே வெறுத்தவளாகக் காணப்படுகிறாள். விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை உடைத்து இயேசுவின் சிரசின்மேல் வார்த்த பாவியான மற்றொரு பெண்ணைப் போலவே இவளும் ஜீவனைப் பெற்றுக் கொண்டாள்.

5. கருணையுள்ள விசுவாசம்! இந்தப் பெண்மணியின் விசுவாசமானது இரங்குகின்ற விசுவாசம். அவள் தனக்காக மாத்திரம் விசுவாசிக்கிறவளாக இல்லை. தனது உறவினர்களும் கடவுளின் கருணையைப் பெற வேண்டுமென வாஞ்சிக்கிறாள். “நான் இரட்சிக்கப்பட வேண்டுமென ஆசைப்படுகிறேன். அந்த ஆசையே எனது தகப்பனும், தாயும், சகோதரர்களும், சகோதரிகளும்கூட காக்கப்பட வேண்டுமென்பதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது” என்று அவள் நினைக்கிறாள். எனக்கு ஒரு மனிதனைத் தெரியும். அவன் ஓய்வுநாள்தோறும் 7 மைல்கள் நடந்தே சென்று சுவிசேஷ செய்தியைக் கேட்க ஆலயத்துக்குப் போய்வருவான். ஒருமுறை ஆலயத்தில் சகமனிதனொருவன், “உன்னுடைய மனைவி எங்கே?” என்று கேட்டான். “மனைவி வீட்டில் இருக்கிறாள். அவள் எங்கும் போவதில்லை” என இவன் கூறினான். கேள்வி கேட்டவன் ஆச்சரியத்தோடு, “என்ன? நீ உன் மனைவி, பிள்ளைகளை சுவிசேஷம் கேட்பதற்கு அழைத்து வருவதில்லையா? நீ உன்னை கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயே. ஆனால் அதற்குரிய அடையாளம் உன்னில் காணப்படவில்லையே. நீ ஆயக்காரனைக் காட்டிலும் மிகவும் மோசமானவனாகக் காணப்படுகிறாயே. உன்னுடைய சொந்த வீட்டாரைக் குறித்துகூட நீ கவலைப்படுவதில்லையே. கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் சகமனிதர்களின் ஆத்துமாவைக் குறித்து கவலைப்படுவார்களே. ஆனால், உன்னில் அந்த குணம் காணப்படவில்லையே. ஆகவே உனது ஆத்தும நிலையைக் குறித்தும் சந்தேகமாகத்தான் இருக்கிறது” என்று கூறினாராம். நம்முடைய விசுவாசம் உண்மையானதாக இருந்ததானால் நாம் மற்றவர்களையும் அந்த விசுவாசத்திற்குள் அழைத்துவரப் பிரயாசைப்படுவோம். மதம் மாற்ற வேண்டுமென நீங்கள் சொல்லுகிறீர்களா எனக் கேட்பீர்கள். கிறிஸ்து, பரிசேயருக்குக் கூறின பதிலையே உங்களுக்கும் சொல்லுகிறேன். நீங்கள் ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி கடல், பூமி எங்கும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான பிறகோ அவனை உங்களிலும் அதிகமான கேட்டின் மகனாக ஆக்குகிறீர்கள்.

சரியான விசுவாசத்திற்குள் நமக்கு அருமையானவர்களைக் கொண்டுவர வேண்டும் என நினைப்பதே கிறிஸ்தவ ஆவியாகும். அவ்வித குணம் நம்மில் ஏற்பட வேண்டுமென நாம் வாஞ்சிக்க வேண்டும். ஒருவன், “நான் இன்னின்ன காரியங்களை நம்புகிறேன். ஆனால் அதை மற்றவர்களும் நம்ப வேண்டுமென நான் எதிர்பார்க்க மாட்டேன்” என்று கூறுவானாகில் அவன் பொய்யின் ஆவியை உடையவன். அவனே தான் நம்புகிற காரியத்தை உண்மையாக நம்பவில்லை. ஏனென்றால் ஒருவன் ஒரு விஷயத்தைத் தீவிரமாக நம்புவானாகில் அவன் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் விரும்புவான். அதிலும் இரட்சிப்பின் விலைமதிப்பை அவன் உண்மையாகவே உணருவானாகில், தனக்கு அருமையானவர்களும் அதனைப் பெற்றுக் கொள்வதில் அவன் அதிக அக்கறை செலுத்துவான். விட்ஃபீல்ட் என்கிற பிரசித்திபெற்ற பிரசங்கி சொன்னார்: “நான் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டவுடனே எனக்கு என்ன தோன்றியது தெரியுமா? நான் அறிந்த யாவரும் அந்த இரட்சிப்பை அடைவதற்கு நான் ஒரு கருவியாக இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். என்னோடுகூட சேர்ந்து சீட்டு விளையாடிய என்னுடைய நண்பர்கள், யாருடன் இணைந்து நான் பாவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்தேனோ அவர்கள், என்னோடு சேர்ந்து மீறுதலுக்குட்பட்டிருந்தவர்கள் ஆகியோரும் நான் அடைந்த இன்பத்தைப் பெறவேண்டுமென விரும்பினேன்.  முதலாவதாக நான் செய்தது, அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யலாம் என்று பார்த்தேன். அவர்களில் பெரும்பாலானோரை என் இரட்சகரிடம் அழைத்து வந்த சந்தோஷத்தை நான் அடையும் வரைக்கும் என்னால் ஓய்ந்திருக்கமுடியவில்லை”. இதுதான் ஆவியின் முதற்பலன். அது, புதிதாகப் பிறந்த கிறிஸ்தவனின் இயல்பு. அவன், தான் உணரும்விதமாகவே மற்றவர்களும் உணரவேண்டும் என்கிற ஆர்வமுடையவனாயிருப்பான். சென்ற வாரத்திலே எனக்கு ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்: “என்னோடு வேலை பார்க்கிற சகஊழியரும் இரட்சிக்கப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். அதற்காக ஜெபித்தும் வருகிறேன். ஆனால் இதுவரை ஒரு மாற்றமும் ஏற்படவில்லை”. இந்த மனிதனின் பக்தியை பெரிதாக எண்ணிக் கொள்ளாதேயுங்கள். நாம் ருசித்ததை மற்றவர்களும் ருசிக்கும்படியாக அவர்களுக்கு நாம் உணர்த்தாவிட்டால், செயல்படாவிட்டால் நாம் மனிதாபிமானமற்ற மாய்மாலக்காரர்களாக இருப்போம். அநேகர் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் ராகாபின் விசுவாசமோ மிகவும் உறுதியானதாக இருந்தபடியால் அவளோடுகூட அவள் வீட்டார் அனைவரும் பாதுகாக்கப்பட்டார்கள். இதோ, இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற இளம் வாலிபப் பெண்ணே, உனக்கு ஒரு தகப்பன் இருக்கிறார். அவர் இயேசுக்கிறிஸ்துவை வெறுக்கிறார். அவருக்காக நீ ஜெபம் பண்ணு. தாய்மார்களே, உங்கள் பிள்ளைகள் இயேசுக்கிறிஸ்துவை பரிகாசம் பண்ணுகிறார்கள். அவர்களுக்காகக் கதறி கண்ணீரோடு ஜெபம் பண்ணுங்கள். ஓ! என்னைப் போன்ற வாலிபர்களே, நமது பெற்றோர் நமக்காக எவ்வளவு தூரம் கதறி ஜெபித்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து நமக்கு கொஞ்சம்தான் தெரியும். நாம் அவர்களுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம். எனக்கு ஒரு நல்ல ஜெபிக்கும் தாயைக் கொடுத்ததற்காக நான் கடவுளுக்கு செலுத்தும் ஸ்தோத்திரங்கள் சற்றும் போதாது. ஆனால், அந்த சிறுபிராயத்திலே நான் அதை அறியாதவனாயிருந்தேன். அதை நான் தொந்தரவாகக்கூட நினைத்ததுண்டு. “கர்த்தாவே, எனது மகன் சார்லஸை இரட்சியும்” என்று என் தாய் அழுது ஜெபித்த சமயங்களில் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். வேறு யாராவது அப்படி எனக்காக ஜெபித்திருந்தால் நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருந்திருக்க மாட்டேன். அந்நேரங்களில் நானும் என் தாயோடுகூட சேர்ந்து உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க இயலாது. அத்தகைய உணர்வுபூர்வமான ஜெபத்திற்கு எதிர்த்து நிற்க இயலாது. ஓ! இதைக் கேட்கிற இளைஞனே, இதோ உன் தாய் மரணப்படுக்கையில் இருக்கிறாள். நீ இயேசுக்கிறிஸ்துவை வெறுத்து, அவமதிப்பதே அவளுடைய மரணப்படுக்கையை கசப்பானதாக ஆக்குகிறது. தாயின் உணர்வுகளை மதிக்காத மகனுடைய செய்கை மிகவும் கேடான அவபக்தியாயிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் ஒருவரும் இங்கே இருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். பக்தியுள்ள தாய் தகப்பன்மாரால் வளர்க்கப்பட்ட பாக்கியமுள்ளவர்கள் யாரேனும் இங்கே இருப்பீர்களானால் இந்த எச்சரிப்பைக் கவனத்தில் கொள்ளுங்கள் – தாய் ஜெபித்தும் குணப்படாதவர்களின் அழிவு மிகவும் பயங்கரமானது. தாயின் ஜெபம் ஒருவனை கிறிஸ்துவிடம் கொண்டுவராவிட்டால், நரகத்தில் அவன் நிலமை மிகவும் மோசமாக இருக்கும். எரிகிற தீயின் நடுவே சொட்டு சொட்டாக தலையின் மீது எண்ணெய் ஊற்றப்பட்டவிதமாக அது இருக்கும். தாயின் ஜெபத்தை அவமதித்து, அழிவை நோக்கி விரைந்து ஓடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்!

அதோ, அங்கே ஒரு வயதான பெண்ணின் கண்களில் கண்ணீர்! அவளுக்கும் குமாரர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களை நினைத்து அழுகிறாள். சென்ற வாரம் பிரசங்கத்திற்குப் பிறகு ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு சிறுவனை அவனுடைய தகப்பனார் கேட்கிறார்: அப்பா உன்னை ஏன் நேசிக்கிறார் தெரியுமா? என்று. அதற்கு அந்த சிறுவன், “நான் நல்ல பையனாக இருப்பதினால்தான்” என பதில் கூறினான். “ஆம், நீ நல்ல பையனாக இல்லாவிட்டால் அப்பா உன்னை நேசிக்க மாட்டார்” என்று அந்தத் தகப்பன் பதில் அளித்தார். நான் அந்தத் தகப்பனிடம் கூறினேன், “இல்லை அவன் கெட்ட பையனாக இருந்தாலும் நீங்கள் அவனை நேசிக்கத்தான் செய்வீர்கள்” என்று. அவர் அதை ஒத்துக் கொண்டார். உறவுகளின் நேசம் அவ்வளவு வலியது. இன்னொரு குடும்பத்தில் அந்தத் தாய் தன் மகன் மீது அவ்வளவு பாசம் வைத்திருப்பதைக் காண்கிறேன். அவள் எண்ணம் முழுவதும் மகன் மீதுதான். இப்படிப்பட்டதான அன்பை உங்களால் உதாசீனப்படுத்த முடியுமா இளைஞர்களே? இத்தகைய அன்பை நீங்கள் உதைத்துத் தள்ளினாலும் அது உங்களுக்கு எதிராக ஒரு தீமையும் செய்யாது. உங்களை இன்னும் அதிகமாக நேசிக்கும். அதோ, கூட்டத்திலே அங்கே ஒரு பெண் அழுகிறாள். அவள் இறந்து போன தன் தாயை நினைக்கிறாள். இவளோ ஒரு கொடூரமான மனிதனைக் கணவனாக அடைந்து, அவனும் இறந்துபோக இப்போது விதவையாக இருக்கிறாள். அவள் தனது இளம்பிராயத்தை நினைத்துப் பார்க்கிறாள். தன் தாயின் குடும்பத்திலே இருக்கும்போது, அந்தப் பெரிய வேதாகமத்தை எடுத்து வைத்துக் கொண்டு, எல்லோரும் சுற்றிலும் அமர்ந்து படித்ததை நினைக்கிறாள். அதன் பிறகு, “பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே!” என்று ஜெபித்ததையும் நினைவுகூர்கிறாள். இப்போது ஒருவேளை கடவுள் அவளுடைய இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறார். இப்போது 70 வயது நிரம்பிய போதிலும் தனது இரட்சகரில் அன்புகூர ஆரம்பிக்கிறாள். அவள் வாழ்நாளின் இந்தக் கடைசி கட்டத்தில் அவளுக்கு ஒரு புதியவாழ்க்கை ஆரம்பமாகிறது. இதுவே அவள் வாழ்நாளின் மிகச் சிறந்த காலமாக இருக்கப் போகிறது.

6. பரிசுத்தப்படுத்துகின்ற விசுவாசம்! ராகாபின் விசுவாசம் பரிசுத்தப்படுத்துகின்ற விசுவாசம். ராகாப் விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டபின் தொடர்ந்து வேசியாக இருந்தாளா? இல்லை. அந்த வேவுகாரர்கள் அவள் வீட்டுக்குச் சென்றபோதுகூட அவள் வேசியாக இருந்திருக்க மாட்டாள் என்றுதான் நான் நம்புகிறேன். ஆனால் அந்த கெட்டபெயர் அவளோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் பிறகு அவள் நிச்சயமாக வேசியாக இல்லை. ஏனென்றால் யூதா கோத்திரத்து இளவரசனாகிய சல்மோன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுடைய பெயரும் இயேசுக்கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. அதற்குப் பிற்பாடு அவள் ஒரு பக்தியுள்ள பெண்மணியாக வாழ்ந்தது தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கும் உயிருள்ள விசுவாசம் இருக்குமானால் அது உங்களை பரிசுத்தத்தில் நடத்தும். ஆனால், உங்களுக்குள் ஒருவேளை செத்த விசுவாசம் இருக்குமானால், அது உங்கள் ஆத்துமாவை அழித்துவிடும்.  ஒரு குடிகாரன் சொல்லுகிறான், “ஆம் போதகரே நான் சுவிசேஷத்தை மிகவும் நேசிக்கிறேன். இயேசுக்கிறிஸ்துவை  விசுவாசிக்கிறேன்” என்று. ஆனால் இந்தக் கூட்டம் முடிந்தவுடனே அவன் சாராயக்கடைக்குச் சென்று குடிபோதையில் ஆழப்போகிறான். இந்தவிதமாகக் கிறிஸ்துவை விசுவாசிப்பதால் எந்தவிதமான பயனும் இல்லை. “அது சரிதான்” என்று சொல்லுகிற வேறொருவன், இந்தக் கூட்டம் முடிந்ததும் வெளியேபோய் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசப் போகிறான். காமவிகாரமான வார்த்தைகளால்கூடப் பேசி, தான் முன்னிருந்த பாவநிலைமையிலேயே இருக்கிறான். இவனும் கிறிஸ்துவை விசுவாசிப்பதாகச் சொல்வது தவறு. மனிதனின் ஆத்துமாவை இரட்சிக்கிறதான உண்மையான விசுவாசம் அவனைப் பரிசுத்தப்படுத்தும். “கர்த்தாவே நீர் என்னுடைய பாவங்களை மன்னித்திருக்கிறீர். நான் இனிப் பாவம் செய்ய மாட்டேன். நீர் என்மீது மிகுந்த இரக்கம் பாராட்டியிருக்கிறீர். நான் என் குற்றங்களை விட்டுவிடுகிறேன். நீர் என்னை அன்பாக நடத்துகிறீர். என்னை அன்போடு அரவணைத்திருக்கிறீர். நான் மரிக்கும் வரைக்கும் உமக்கே சேவை செய்வேன். நீர் உமது கிருபையை எனக்கு அளித்து, நான் உம்மைப் போலவே பரிசுத்தமாக இருக்கும்படிக்கு எனக்கு உதவி செய்தருளும்” என்று உண்மையான விசுவாசத்தை உடையவன் ஜெபிப்பான். நீங்கள் பாவத்திலே தொடர்ந்து இருந்து கொண்டு விசுவாசமுள்ளவர்களாகவும் இருக்க முடியாது. விசுவாசிப்பதென்பது பரிசுத்தமாக வாழ்வதற்கே. இவை இரண்டும் சேர்ந்தே காணப்பட வேண்டும். கிருபையானது பெருகும்படிக்கு பாவத்திலேயே இருப்பதென்பது, கெட்டுப்போன நிலமையிலுள்ள செத்த விசுவாசம். ராகாப் பரிசுத்தமாக்கப்பட்ட பெண். இங்குள்ளவர்களில் சிலரை கடவுள்தாமே பரிசுத்தப்படுத்துவாராக. மனிதரை சீர்படுத்தும்படியாக உலகமானது பல்வேறு விதங்களில் முயன்று வருகிறது. ஆனால் அவர்களைச் சீர்படுத்த சுவிசேஷ பிரசங்கத்தினால் ஏற்படும் விசுவாசத்தினால் மாத்திரமே முடியும். ஆனால் இக்காலங்களில் பிரசங்கமானது அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் செய்தித்தாள்களை வாசிக்கிறீர்கள். புத்தகங்களை வாசிக்கிறீர்கள். பேராசிரியர்களின் பேச்சுக்களை கேட்கிறீர்கள். கட்டுரையாளர்களின் கட்டுரைகளை உட்கார்ந்து இரசிக்கிறீர்கள். ஆனால் பிரசங்கி எங்கே? பிரசங்கம் எங்கே? ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பிரசங்க நகல்களை எடுத்துக் கொண்டு, கர்த்தர்தாமே உங்கள் இருதயங்களைத் திருப்பும்படியாக ஜெபித்துவிட்டு, அதை வாசித்து முடிப்பது பிரசங்கமல்ல. அது வாசிப்பு!  ஒரு வயதானவர் சொல்லிய கதையன்று ஞாபகத்துக்கு வருகிறது. அவருடைய சபையின் போதகர் பிரசங்கத்தை அப்படியே படிப்பாராம். ஒருமுறை இந்த வயதானவருடைய வீட்டிற்கு அந்தப் போதகர் வந்தார். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” என்று போதகர் கேட்டாராம். “நான் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்று இவர் பதில் கூறினார். “என்ன? நீர் எவ்வாறு தீர்க்கதரிசனம் சொல்ல முடியும்?” எனப் போதகர் வினவினார். ” பிரசங்கத்தை படிப்பதை நீங்கள் பிரசங்கம் சொல்லுவதாகக் கூறுகிறீர்கள் அல்லவா? அதுபோல நானும் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் படிப்பதை தீர்க்கதரிசனம் சொல்லுவதாகக் குறிப்பிடுகிறேன்” என்றார் அந்த வயதானவர். அவர் சொன்னது சரிதான். பிரசங்கத்தில் நாம் வெளிப்படையாகப் பேச வேண்டியதாயிருக்கிறது. சத்தியத்தை கலப்படமின்றி தெரிவிக்க வேண்டியதாயிருக்கிறது. மனசாட்சியை உருவக்குத்த வேண்டியதாயிருக்கிறது. இவையெல்லாம் இல்லாவிடில், நிலைத்து நிற்கக்கூடியதான பெரிய மாற்றத்தை மனிதர்களில் எதிர்பார்க்க முடியாது. சிலருக்குப் பைத்தியமாகத் தோன்றுகின்ற சுவிசேஷமாகிய கடவுளுடைய வார்த்தையானது வேசிகளை சீர்ப்படுத்துகிறது; திருடர்களைத் திருத்துகிறது; மிகப்பாவியான மனிதனையும் கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறது. மனிதர்களிலேயே பொல்லாதவனைக்கூட நான் மறுபடியுமாக அன்போடு அழைக்கிறேன் “ஓ! பாவியே வா. கடவுளின் மகிமைக்குள் பிரவேசி. உண்மையான விசுவாசத்தோடும், உண்மையான மனந்திரும்புதலோடும் வா. கிருபையானது நம்மைக் கூட்டிச் சேர்க்கிறது. பணமுமின்றி விலையுமின்றி இயேசுக்கிறிஸ்துவிடம் வந்து பெற்றுக்கொள்”. உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். உன்னுடைய மீறுதல்கள் நினைக்கப்படமாட்டாது. ஆகவே நீ போய் இனி பாவம் செய்யாதிருப்பாய். உன்னப் புதுப்பிக்கின்ற கடவுள், கடைசிமட்டும் வழுவாமல் காப்பார். இயேசுக்கிறிஸ்துவினிமித்தம் தேவன் ஆசீர்வதிப்பாராக – ஆமேன்

%d bloggers like this: