முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும்
(மார்ச் 12, 1891ஆம் ஆண்டு, மெட்ரோபாலிடன் டாபர்நாகிள், நியுயிங்டன் என்கிற இடத்திலே, வியாழக்கிழமை மாலையிலே, சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அளித்த தியானத்தின்(2221) சாராம்சம்)
Translation into Tamil by Vinotha Surendar
“ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்” -மத் 19:30.
“இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்” – மத் 20:16.
நாம் கர்த்தருக்கு சேவை செய்ய வேண்டுமானால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். இரட்சிப்படையாத நிலையில் கடவுளுக்கு சேவை புரிய முடியாது. “மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள்.” தேவனுக்குப் பகைஞராக இருந்து கொண்டு அவருக்கு ஊழியம் செய்வதால் பிரயோஜனமில்லை. அவரது விரோதிகள் அவருக்கு பணிபுரிவதில் அவருக்கு விருப்பமில்லை. அடிமைகள் அவரது சிங்காசனத்தை அலங்கரிப்பதில் அவருக்குப் பிரியமில்லை. நாம் முதலாவதாக இரட்சிப்பைப் பெற வேண்டும். இரட்சிப்பு கிருபையாகக் கிடைக்கிறது. “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். அப்படியாக இரட்சிக்கப்பட்ட பிற்பாடு, இந்த இரட்சிப்பின் பலனாக, நாம் அவருக்கு ஊழியம் செய்கிறோம். முதலில் இரட்சிக்கப்படுகிறோம் – பிறகு ஊழியம் செய்கிறோம். இரட்சிக்கப்படுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள். அதன் பிற்பாடு ஒரு பிள்ளையைப் போல தனது தகப்பனின் வீட்டில் வேலை செய்கிறார்கள். அந்த ஊழியமும்கூட கிருபையினால் வருவதே. இந்த ஊழியம் உடன்படிக்கையின் பிரகாரமானதல்ல. “இதை செய். அப்போது பிழைப்பாய்” என்கிறபடியான பழைய உடன்படிக்கையின் கீழாக அவன் இல்லை. கிருபையின் கீழாக அவன் இருக்கிறான். ஆகவே, பாவம் அவன் மீது அதிகாரம் செலுத்துவதில்லை, கிருபையே அவன் மீது அதிகாரம் செலுத்துகிறது. ஆகவே அவன் தன் வாழ்நாள் முழுவதுமாக கர்த்தருக்குப் பணி செய்து அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறான். நாம் அவருக்கு பணி செய்வதற்காகவே இரட்சிப்பை அடைந்திருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தேவனுக்கு ஊழியராய் இருப்பதற்காகவே நாம் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். “கர்த்தாவே, நான் உமது அடியேன். நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன். என் கட்டுகளை அவிழ்த்து விட்டீர்” என்று தாவீது கூறுகிறார். நமது கட்டுகள் அவிழ்க்கப்பட்டபடியால், நாம் வேறுவிதமான கட்டுகளுக்குள்ளாக இருக்கிறோம். அவை அன்பின் கட்டுகள். உன்னதமானவருக்கு சேவை செய்யும்படியாக அன்பின் கட்டுகளால் கட்டப்பட்டிருக்கிறோம்.
அந்தவிதமாக அவருக்கு ஊழியம் செய்ய வரும்போது, நாம் இரட்சிக்கப்பட்ட ஆண்களும் பெண்களுமாய் இருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. நம்முடைய திறமையினால் நம்மால் ஆத்தும ஆதாயம் செய்ய முடியும் என நாம் கற்பனை செய்து கொண்டிருந்தோமானால், உரிமையைக் கோருகிறவர்களாக காணப்படுவோம். கடவுளிடம் உரிமை கேட்டு சட்டம் பேசுகிறவர்கள், அவருக்கு முன்பாக தங்களுடைய உண்மை நிலையை இழந்து போய் விடுவார்கள். “நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல, கிருபைக்குக் கீழானவர்கள்” என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களை மீட்டுக் கொண்டதற்காக மாத்திரமல்ல, உங்களுடைய தற்போதைய நிலமைக்கும், உங்களுக்கு சொந்தமானவைகளுக்காகவும், நீங்கள் செய்கின்ற யாவற்றிற்காகவும் நீங்கள் எவ்வளவாக கர்த்தருக்குக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறக்கத் தொடங்கிவிட்டீர்களானால், நீங்களும் புத்தியில்லாத கலாத்தியரைப் போலத்தான் காணப்படுவீர்கள். ஆவியினாலே ஆரம்பம் பண்ணின அவர்கள் மாம்சத்தினாலே முடிவு பெறும்படியாக நாடினதைப் போல ஆவீர்கள். “என்னிடத்தில் இன்னும் என்ன குறைவுண்டு?” என்று கேட்ட வாலிபனைப் போல இருப்பீர்கள். “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே. எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று உரிமை கோரிய பேதுருவைப் போலிருப்பீர்கள். காலையிலிருந்து மாலை வரைக்கும் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து விட்டு, ஒரு மணி நேரம் மாத்திரம் வேலை செய்தவர்கள் பெற்றதாகிய ஒரு பணத்தையே தாங்களும் பெற்றதற்காக முறுமுறுத்த வேலையாட்களைப் போல காணப்படுவீர்கள். தனது ஊழியர்கள் இவ்விதமான ஆவிக்கு அடிமைப்பட்டவர்களாக இருப்பதை கிறிஸ்து ஏற்றுக் கொள்வதில்லை. அவ்விதமான மனப்பான்மையை அவர் எங்கெல்லாம் காண்கிறாரோ உடனடியாக அதை கண்டிக்கிறார். ஊழியமும் அதற்கு வருகின்ற வெகுமதியும் ஆகிய எல்லாமே கிருபையினால் கிடைக்கிறது. கடவுள்தாமே ஊழியத்தை நமக்குக் கொடுக்கிறார். தாம் அளித்த வேலைக்குரிய வெகுமதியையும் அவரே தருகிறார். இதை கிருபையின் மிக உன்னதமான நிலை என்றுதான் நாம் கூறவேண்டும். கடவுள் நமக்கு சிறந்த ஊழியத்தைத் தருகிறார். அவரே கொடுத்த அந்த வேலைக்காக அதற்கு வெகுமதியையும் பிற்பாடு அவரே தருகிறார். ஆகவே முதலில் இருந்து கடைசி வரைக்கும் எல்லாமே கிருபையினால் கிடைப்பதுதான். அதை நியாயப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பார்க்கக் கூடாது. இதை மனதில் கொண்டவர்களாக நாம் இந்த தியானத்தைத் தொடருவோம்.
மேற்கூறிய வசனத்தின் பேரில் நீங்கள் பிரசங்கங்களைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அதோடு தொடர்புடையவைகளை ஒருவேளை கேட்டிருக்க மாட்டீர்கள். இந்த வசனம் என்னுடைய இருதயத்திற்கு எதைப் பிரசங்கித்ததோ அதை நான் உங்களுக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். இந்த வசனத்திற்கு முன்னால் வரும் வசனங்களையும் அதற்குப் பின்னால் வரும் வசனங்களையும் சேர்த்துப் பார்த்து அதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன கற்றுத் தருகிறாரோ அதைக் கற்றுக் கொள்ளலாம்.
1. கர்த்தருக்கு செய்யும் ஊழியம் கிருபையாகக் கொடுக்கப்படுகிறது
மேலோட்டமாக பார்த்தால் இவ்வசனத்தில் இந்த கருத்து தென்படவில்லை. ஆனால் மற்ற வசனங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கையில் அது விளங்குகிறது. நமது கர்த்தருக்கு செய்யும் ஊழியத்தில் இலவச கிருபை வெளிப்படுகிறது. இக்கருத்தை சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்வது கிருபையாக அருளப்பட்டிருக்கிறதென்பதை சிந்தியுங்கள்.
ஏனென்றால், அவருக்கு ஊழியம் செய்வது நம் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. வெகுமதி கொடுக்கப்பட்டாலுங்கூட, அது நமது கடமை. நியாயப்பிரமாணத்தின்படி நாம் கர்த்தரில் முழு இருதயத்தினாலும், முழு ஆத்துமாவினாலும், முழுமனதினாலும், முழுபெலத்தினாலும் அன்பு செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கு மேற்பட்டது எதுவுமில்லை. நாம் அவருக்காக எதையாவது செய்வதற்கு முடியுமானால் அதை செய்வதற்கு நாம் ஏற்கனவே கடமைப்பட்டவர்களாகத்தான் இருக்கிறோம். அவசியமானவைகளுக்கு மேலாக எந்த கிரியையும் செய்வதற்கு நியாயப்பிரமாணத்தில் இடமில்லை, ஏனென்றால் அது எல்லா பரிசுத்தத்தையும் உள்ளடக்கியுள்ளது. அது சகல பாவங்களையும் கண்டிக்கிறது. நாம் சகலத்தையும் செய்து முடித்தவர்களாயிருந்தாலும் நாம் அப்பிரயோஜனமான வேலையாட்கள்தான். கடமையை மாத்திரமே நாம் செய்து முடித்தவர்களாயிருப்போம். ஆகவே சகோதரரே, ஏதாவதொரு ஊழியம் செய்யும்படிக்கு நாம் அழைக்கப்பட்டிருப்போமானால், அதற்கு ஒரு வெகுமதியும் உண்டென்று வாக்களிக்கப்பட்டிருக்குமானால் அது நிச்சயமாக கிருபையால் கிடைத்த ஊழியமாகவே இருக்கும். அதைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை. சுவிசேஷத்திற்குக் கீழாகவும் அப்படித்தான் இருக்கிறது. நாம் செய்யக்கூடியவைகள் யாவுமே, அவருக்கு செய்வதற்கு நாம் ஏற்கனவே கடமைப்பட்டவைகளாகத்தான் இருக்கிறது. “நீங்கள் உங்களுடையவர்கள் அல்ல, கிரயத்திற்குக் கொள்ளப்பட்டிருக்கிறீர்களே.” உங்கள் சிந்தனை, செயல், பெலன், திறமை, குணம் போன்ற அனைத்துமே கிறிஸ்துவினால் விலைக்கிரயம் செலுத்தப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது. அவர் மீட்டுக் கொள்ளாத எதுவுமே உங்களிடம் கிடையாது. ஆகவே உங்களிடமுள்ள அனைத்தும் கிறிஸ்துவுக்கே சொந்தம். உங்களை நேசித்தபடியால் தமது சொந்த இரத்தத்தை சிந்தி உங்களை மீட்டுக் கொண்ட இயேசுவுக்காக சந்தோஷத்தோடும் மிகுந்த நன்றியோடும் உங்களால் முடிந்த யாவற்றையும் செய்வதற்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். சுவிசேஷகர்களின் ஆர்வம், இரத்தசாட்சிகளின் பொறுமை, மன்னிப்பு கோருபவர்களின் விசுவாசம், தேவபக்தர்களின் பரிசுத்த வாழ்வு ஆகிய அனைத்துமே நியாயமாக கிறிஸ்துவுக்கு சேரவேண்டிய உரிமையாகும். ஆகவே அதற்காக அவர்களுக்கு வெகுமதி கிடையாது. அவர்களின் நடவடிக்கை, செயல் யாவுமே அவர்கள் கிறிஸ்துவுக்கு செலுத்த வேண்டிய கடமையாகும். நாம் அவருக்காக செய்கிற எதற்காகவது வெகுமதி கொடுக்கப்பட வேண்டுமானால், நாம் செய்கிற அந்த செயலே நமக்குக் கிருபையாக கிடைத்திருக்கிற வெகுமதியாகும். அதின் மூலமாக நாம் கிருபையை பெறுகிறோம்.
நமது ஊழியம் எதுவுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் செய்கிற எந்த காரியமும் பலவீனமாகவும், குறைவுள்ளதாகவும், களங்கப்பட்டதாகவும்தான் இருக்கிறது. ஆகவே எதற்காகவும் நாம் அவரிடம் வெகுமதியை எதிர்பார்க்க வழியில்லை. யோபு, தாழ்த்தப்பட்ட தறுவாயில் இதை உணர்ந்து கொண்டார். “நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும். நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சி கொடுக்கும். நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன். என் ஜீவனை அரோசிப்பேன்” என்று சொல்லுகிறார். நமது திறமையைக் கொண்டு நாம் அவர் முன்பாக நின்றோமானாலும், அவருக்கு முன்பாக நாம் தேவமகிமையை இழந்தவர்களாகத்தான் காணப்படுகிறோமென்று நமக்கே தெரியும். பல விஷயங்களில் நாம் குற்றவாளிகளாகக் காணப்படுவதால், நமது நீதி அனைத்தும் அழுக்கான கந்தைகளாக, எறிந்து விடப்பட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. நமது மிகச் சிறப்பான செயல்கள் கூட அவர் பார்வையில் அழுக்கான கந்தைகள்தான். “எனக்கு லாபமாயிருந்தவைகள் எவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். . . நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும் . . எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்” என்று பவுல் சொல்லுகிறார். நமது தோல்விகளையும், மீறுதல்களையும், கீழ்ப்படியாமையையும் குறித்து நமக்கு குற்றஉணர்வு இருக்கிறது. அவைகளுக்காக தேவனிடம் மன்னிப்பை வேண்டி, இரக்கத்திற்காக கெஞ்சி நிற்கிறோம். நம்மிடம் இருப்பதாக நினைக்கின்ற மிகச் சிறந்த குணத்திலுங்கூட பாவம் தென்படுவதை உணர்ந்து அதை அவரிடம் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படியிருக்கையில் அவருக்கு செய்கின்ற ஊழியமும் கிருபையினால் வருவதாயிருக்க, நமக்கு வெகுமதி கிடைத்ததானால் அது கிருபையால் கிடைப்பதைத் தவிர்த்து வேறு எப்படி இருக்க முடியும்?
கடவுளுக்கு சேவை செய்ய முடிவதுகூட கடவுளின் கிருபையினால் பெறும் வெகுமதியே. இதை மீண்டுமாக சிந்தித்துப் பாருங்கள். அறிவை உபயோகித்து செய்கின்ற சேவையை மாத்திரம் நான் இவ்விடத்தில் குறிப்பிடவில்லை. கடவுளின் சேவைக்காக தாராளமாக பொருளுதவியை அளிக்கக் கூடிய திறனுடையவர்களையும் சேர்த்துதான் கூறுகிறேன். சிந்திக்கும் ஆற்றலையும், பிரசங்கிக்கும் வல்லமையையும் கடவுள் தருவது போல பணம் சம்பாதிக்கக் கூடிய திறமையையும் கடவுளே கொடுக்கிறார். அப்படியிருக்க “உங்களுக்கு உள்ளவைகளில் நீங்கள் பெற்றுக் கொள்ளாதது என்ன?” இங்கிருப்பவர்களில் யாராவது தங்களது தாலந்துகளைக் கொண்டு கடவுளுக்கு சேவை செய்தார்களென்றால், அதுவும் தங்களுக்கு அருளப்பட்டதால்தான் அதை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுவேன். யாரும் தாலந்துகளை சம்பாதித்துக் கொள்ள முடியாது. அல்லது யாராவது தாங்கள் சம்பாதித்த பொருட்களினால் கடவுளுக்கு ஊழியம் செய்தீர்களென்றால், அந்த பொருளை சம்பாதிக்கக் கூடிய திறனைத் தந்ததும் கடவுள்தான். அவரிடமிருந்தே எல்லா நல்ல ஈவுகளும், பரிபூரணமான எந்த நன்மையும் வருகிறது. ஆகவே கடவுளுக்கு ஊழியம் செய்யக்கூடிய திறன், கிருபையாகக் கிடைக்கும் வெகுமதியாகும்.
பிரியமானவர்களே, எந்த விசேஷித்த விதத்திலாவது, கடவுளுக்கு சேவை செய்யும்படி அழைப்பு பெற்றீர்களானால் அதுவும் கிருபையினால் வருவதே. ஊழியத்திற்கு நாம் அழைப்புப் பெறுவோமானால், பவுலின் முன்மாதிரியை கவனிப்போமாக: “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார். நமது இராஜாங்க நாணயத்திலே, “கடவுளின் கிருபையினாலே” என்று ஆட்சியாளர்கள் அச்சடித்துக் கொள்கிறார்கள். இருக்கட்டும், நல்லதுதான். ஆனால் நாம் அதை நமது வாழ்க்கையிலே செயல்படுத்துவோம். “ஞாயிறு பாடசாலை ஆசிரியர் – கடவுளின் கிருபையினாலே”, “தெருப்பிரசங்கிகள் – கடவுளின் கிருபையினாலே”, “கல்லூரி மாணாக்கர்கள் – கடவுளின் கிருபையினாலே”, “சுவிசேஷ ஊழியர்கள் – கடவுளின் கிருபையினாலே” என்பதே நமது எண்ணமாயிருக்கட்டும். தேவன்தாமே நம்மை பலவிதமான நல்ல பணிகளுக்கென அழைக்கிறார். நமக்கு ஒரு பணி நியமிக்கப்படுகிறதென்றால் அதை நியமிப்பவர் ஆத்துமாக்களின் பிரதான மேய்ப்பரே. அவர் யாரை அனுப்ப வேண்டுமென தீர்மானித்திருந்தாரோ அவர்களைத் தம்மிடமாக மலை மீதினில் ,அழைத்து, அவர்களை முதலாவதாக உலகத்தில் அனுப்பினார். அவர்களை விட்டுச் செல்வதற்கு முன்பாக, அவர்களுக்கு அந்த பிரதான கட்டளையைக் கொடுத்தார். அந்தக் கட்டளையானது அவரைப் பின்பற்றுகிற அனைவருக்கும் இன்றைக்கும் பொருத்தமானது. “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” எந்த வகையிலாவது ஊழியம் செய்யும்படி அவர் நம்மை நியமிப்பது அவருடைய கிருபைதான். அவருக்காக எதையாவது செய்யக்கூடுமானால் அது எவ்வளவு பெரிய கிருபை! அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு நாம் பாத்திரவான்கள் அல்ல. அவருடைய பாதரட்சைகளை சுமக்கவும் பாத்திரமானவர்கள் அல்ல. ஒரு தாழ்வான வேலையைப் போல இருந்தாலும், கிறிஸ்துவுக்கு செய்கிற எந்த வேலையும் அது ராஜாவுக்கு செய்கிற பணிவிடை. சமையலறையில் பாத்திரங்களைக் கழுவுகிற வேலையாக இருந்தாலும், அவருக்காக பணிவிடை செய்ய நியமிக்கப்பட்டேனென்றால் அவருக்கே ஸ்தோத்திரம். அந்த சமயலறை, அரண்மனையில் அல்லவா இருக்கிறது. கிறிஸ்துவின் அரண்மனைப் பணிப்பெண்கள் மரியாதைக்குரியவர்கள். கடவுளுக்குப் பணிவிடை செய்கிறவன், ஆளுகிறவனாயிருக்கிறான். பூலோகத்திலே அவருக்கு சேவை செய்வது புகழப்படத்தக்கது. பரலோகத்திலே அவருக்கு பணிவிடை செய்வது நமது நித்தியமான மகிமையில் ஒரு பகுதி. இதெல்லாம் கிருபையினால்தான் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கர்த்தருக்கு சேவை செய்வதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பமும் கிருபையே. உடல்நலக் குறைவின் காரணமாக பிரசங்கம் செய்ய முடியாமல் போய், பிற்பாடு சரீரசுகம் கிடைத்தபின் மீண்டுமாக பிரசங்கமேடையில் நிற்பதற்கு வாய்ப்பு கிடைக்கிற தருணங்களில் அதை கடவுளிடமிருந்து கிடைக்கப் பெற்ற பெரும் கிருபையாக நான் நினைப்பேன். ஒருவருக்கு பேனாவைக் கரங்களில் பிடிக்க முடியாதபடி சுகவீனம் ஏற்பட்டு, எழுதமுடியாத நிலையை அனுபவித்தபிறகு, மீண்டுமாக எழுதக்கூடிய நிலை வரும்போது அதை கிருபையாக கிடைத்ததென கருதுகிறோம். சிலரிடம் மிகவும் நெருக்கமாக பேசக்கூடிய வாய்ப்புகளை கடவுள் உங்களுக்கு அளிப்பதும் கிருபை என்றுதான் எண்ணுகிறேன். சிறுபிள்ளைகள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும்படியாக அவர்களை ஞாயிறுபடாசாலைக்கு அழைத்து வருவதும் கடவுளின் கிருபையே. நாம் விழிப்புள்ளவர்களாக இருந்தால், உபயோகித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் நம்மைச் சுற்றிலும் நாள் முழுவதும் இருப்பதைக் காணலாம். அப்போது, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தமது அனாதி தீர்மானத்தின்படியாக, அவருக்கு சிறுசிறு சேவைகள் செய்யக்கூடிய நிலையில் என்னை வைத்திருப்பதற்காக ஸ்தோத்திரம். அவருடைய நாமம் புகழப்படும்படியான பலனை அவர் விளைவிப்பதற்காக ஸ்தோத்திரம்” என்று துதிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். எல்லாமே கிருபையினால் வருவது. அவருக்கு சேவை செய்யும்படியான வழிகளைத் தருவது, அவைகளை நாம் பிரயோஜனப்படுத்திக் கொள்ளும்படியான எண்ணத்தையும், பெலனையும் அளிப்பது ஆகிய யாவுமே கடவுளிடமிருந்து வரும் வெகுமதிகள்தான்.
கடவுளுக்கு சேவை செய்வதற்கான சரியான மனப்பாங்கை பெறுவதும் கிருபையினால்தான். நீங்கள் அவருக்கென ஒரு வேலையை செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுவதும், அழைப்பைப் பெறுவதும் கிருபையினால்தான். இருந்தாலும் அதை செய்யக்கூடிய சரியான மனநிலையைக் கொண்டிருப்பதும் கிருபையே. நீங்கள் எவ்வளவோ நேரங்களில் சுறுசுறுப்பில்லாமலும் உற்சாகமில்லாமலும் இருந்ததில்லையா? பரிசுத்தஆவியானவர் உங்களைத் தட்டி எழுப்பாவிட்டால் நீங்கள் அப்படியேதானே இருப்பீர்கள்? பல சமயங்களில் நீங்கள் குளிர்ந்து போய், உறைந்த பனிக்கட்டியைப் போல விறைத்துப் போனவர்களாகக் காணப்படுவதில்லையா? பரிசுத்தஆவியானவர் உங்களை அனல் மூட்டி விடாவிட்டால் உங்கள் உள்ளத்திலிருந்து ஜீவஊற்று புறப்படுமா? சகோதரரே, விடுதலை பெற்ற பெண்மானைப் போல கர்த்தர் உங்களை சுதந்திரமாக செயல்பட வைத்த கிருபையுள்ள அநேக சந்தர்ப்பங்களுக்காக நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துவதில்லையா? கிருபை பொருந்திய நல்வார்த்தைகளை நீங்கள் பேசியது யாரால் வந்தது? அந்த வல்லமை யாருடையது? நீங்களாக பேசும்போது, ஓ, அது எவ்வளவு கீழானதாக இருந்திருக்கிறது! ஆனால், கடவுள் உங்கள் மூலமாக பேசும்போது, ஓ, அது எவ்வளவு மேன்மையானதாக இருந்திருக்கிறது! இவை யாவும் கிருபையின் செயல்பாடு என்பது உங்களுக்கு விளங்குகிறதா? மனிதரை கிறிஸ்துவிடம் வரும்படியாக அழைப்பு விடுத்து பேசுகிற பிரசங்கியாரின் ஒவ்வொரு கண்ணீர் துளியும், அந்த ஆத்துமாவின் நிமித்தமாக அவர் படுகிற அங்கலாய்ப்பும் வேதனையும், கிருபையை உணர்ந்திருக்கிற ஊழியர் அனுபவிக்கிற உணர்வுகள் யாவும் கிருபையினால் வருவதே. அதற்காக கடவுளுக்கே மகிமையை செலுத்த வேண்டும். நாம் நியாயப்பிரமாணத்தின் கீழாக வேலை செய்கிறவர்கள் அல்ல. ஏனென்றால் நியாயப்பிரமாணம் பெலனைத் தருவதில்லை. கிருபைதான் நம்மை சேவை செய்ய வைக்கிறது. ஏனென்றால் அதுவே சேவை செய்வதற்கு வேண்டிய பெலனை நமக்குத் தருகிறது. “தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்: வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.” நீர் அவனவனுடைய தேவைக்குத் தக்க பெலத்தைத் தருகிறீர். அந்தந்த வேலைக்கேற்ற வழிநடத்துதலையும் அளிக்கிறீர். இதுவும் கிருபைதான், இல்லையா?
பரிசுத்த ஊழியத்தின் வெற்றி முழுவதும் கர்த்தராலேயே வருகிறது. இந்த கருத்தை நீங்கள் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ஒத்துக் கொள்வீர்கள். விதைத்ததும், தண்ணீர் ஊற்றியதும் நாங்கள்தான் எனத் துணிகரமாக நாம் சொன்னாலும்கூட, விளையச் செய்தது நாங்கள்தான் என்று யாரும் துணிந்து கூறமாட்டோம் என நினைக்கிறேன். “நான் விதைத்தேன்” என்று கூறிய பவுல், “அப்பெல்லோ நீர் பாய்ச்சினான். தேவனே விளையச் செய்தார்” என்று குறிப்பிடுகிறார். பரிசுத்தஆவியானவர் ஒரு மனிதனின் இருதயத்தில் கிரியை செய்து, அவனுடைய பாவங்களை அவனுக்கு உணர்த்தி, அவனை மனந்திரும்பச் செய்யாவிட்டால், நமது அறிவுரைகளில் ஒன்றையாவது அவன் ஏற்றுக் கொள்வானா? இயேசுக்கிறிஸ்துவை, அவர் அருளும் வெளிச்சத்தில் காணாத ஒருவனின் மனக்கண்களை நமது பலவீனமான பிரசங்கத்தினால் திறந்துவிட முடியுமா? கடவுளின் ஆவியானவர் நம்மிடம் இல்லாமல், இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு நம்மால் ஆறுதல் அளித்துவிட முடியுமா? சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை கூற முடியுமா? கட்டப்பட்டிருப்பவர்களின் கட்டுகளை அவிழ்க்க இயலுமா? நாம் சுவிசேஷத்தை அறிவித்தாலுங்கூட, கடவுளின் கிரியை அதில் இல்லாவிட்டால் அது மண்ணில் விழுவது போல விழுந்து வீணாய்த்தானே போகும்? அவரே நம் மூலமாகவும் நம்மைக் கொண்டும் கிரியை செய்கிறார், நாம் அவரோடு சேர்ந்து வேலை செய்கிற வேலையாட்கள். நமது கரத்தை உயர்த்துகிறோம், அதில் அவர் தமது கரத்தை உயர்த்துகிறார். நாம் பேசுகிறோம், அவர் நம் மூலமாகப் பேசுகிறார். நாம் மனிதருடைய இருதயத்தைத் தொடும் விதத்தில் பேசுகிறோம், ஆனால் அவர்தான் அவர்களைத் தொடுகிறார். அவர்களை அழுகிறவர்களாக கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறோம், ஆயினும் அவரே அவர்களைக் கிறிஸ்துவிடம் அழுகிறவர்களாக வரப்பண்ணி அவர்களை இரட்சிக்கிறார். அவருடைய நாமத்திற்கே துதி உண்டாவதாக! அவருடைய நாமத்தினால் அநேக ஆண்டுகளாக தீர்க்கதரிசனம் உரைத்து வந்தாலும், உலர்ந்த எலும்புகளுக்கு உயிர் கொடுத்ததாக யாராவது துணிந்து சொல்ல முடியுமா? கலியாண விருந்துக்கு அநேக நாட்களுக்கு முன்பாகவே அழைப்பு கொடுத்திருந்தாலும், அவர்களில் யாரையாவது கடவுளுடைய உதவியில்லாமல் நம்மால் வரவழைக்க முடியுமா? இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு நாம் காரணமாயிருந்ததாக பெருமை கொள்ள இயலுமா? அது துணிகரம், அது தேவதூஷணம். அப்படிப்பட்ட பாவத்தை நாம் செய்யாமல் இருப்போமாக. நமது ஊழியம் வெற்றி அடைந்ததானால், அது சிறந்த ஊழியமாக இருந்ததானால் அதற்கு கடவுளின் கிருபையே காரணம்.
கிறிஸ்துவின் நிமித்தமாக பாடுபடுதலும் ஒரு விசேஷித்த வெகுமதியாயிருக்கிறது. பிரியமானவர்களே, உங்களில் யாராவது கிறிஸ்துவுக்காக துன்பப்படுவதற்கு அழைக்கப்பட்டிருந்தால் அது மிகவும் விசேஷமானது. உங்களை யாராவது தூஷித்தார்களென்றால், உங்களுடைய அந்தஸ்த்தை இழந்தீர்களானால், கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக மரிக்க நேர்ந்ததானால், “கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிப்பதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். “களிகூறுங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்”. ஆனால், அதற்குரிய புகழ்ச்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். பாடுபடக்கூடிய அந்த நிலைமைக்கு நீங்கள் உயர்த்தப்பட்டீர்கள். உங்களை அந்நிலைக்குக் கொண்டுவந்தது உங்கள் ராஜாவாகிய கர்த்தர். பெரும் பாடுகளைக் கடந்து செல்லும்படியாக அவர் உங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே நீங்கள் உங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து வெளுத்தவர்களாயிருந்தால் அந்தப் பாடுகளெல்லாம் உங்களுக்கு ஒன்றுமேயில்லை. உங்களுடைய பொறுமை, தைரியம், உறுதி இவற்றுக்கெல்லாம் கடவுளின் ஆவியே காரணம். அவர் உங்களைக் கைவிட்டிருந்தாரானால், நீங்கள் மனுஷருக்கு பயந்து, விலகியோடி இருப்பீர்கள். அது உங்களுக்கு கண்ணியாயிருந்திருக்கும். சத்தியத்திற்கும் கர்த்தருக்கும் துரோகம் செய்திருப்பீர்கள். உண்மையாக நடக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் உண்மையாக நடந்து கொள்ளும்போது, அது உங்களால் ஏற்படுவதல்ல. அவரே தம்முடைய கிரியையை நம்மில் நடப்பிக்கிறார். அதற்காக புகழப்படத்தக்கவரும் அவரே. “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசைப்படுங்கள்”. முழு முயற்சியாக உழையுங்கள். அதில் எந்த குறைவும் வைக்காதீர்கள், “ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி, விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். “நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.” கடவுள் உங்களுக்கு வெகுமதியளிப்பார். ஆனால் உங்களுடைய உறுதியும், சுறுசுறுப்பும், பொறுமையும் ஆகிய இவைகளெல்லாம் கடவுளின் கிருபையினால் உண்டான கிரியைகள். அது உங்களுக்கும் தெரியும். அவைகள் உங்களுக்கு இருந்ததானால், கடவுள்தான் அவை உருவானதற்குக் காரணம் என்று உணர்ந்து நன்றி செலுத்த வேண்டும்.
மேற்கூறிய கருத்துக்கள் எதையும் ஆவிக்குரிய மனிதர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத வகையில் எடுத்துக்கூறி விட்டதாக நினைக்கிறேன். அதாவது, கடவுளுக்கு செய்கின்ற ஊழியத்தில் இலவசமான கிருபையே பிரதானமாக இருக்கின்றது. இந்த கருத்துக்களை விளங்கிக் கொண்டபின் நாம் அடுத்த தலைப்பிற்குச் செல்லலாம்.
2) நமது சேவையை அவர் தமது அளவுகோலினால் அளவிடுகிறார்
இதை நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்த வேலையாட்கள் உவமையில் காணலாம். அவர்களுடைய எஜமானன், அவர்கள் செய்த வேலையை தமது அளவுகோலின்படியாக அளவிடுகிறார். ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கூலி என்கிற கணக்கின்படியாக அவர் அளவிடவில்லை. கிருபையின்படியாக அளவிடுகிறவரான அந்த எஜமானன், ஒரு மணி நேரத்திற்கும் ஒரு பணம், பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் ஒரு பணம் என்கிற அவருடைய கணக்கின்படி அளவிடுகிறார். கடைசியையும் முதலாவதையும் அவர் சமமாகவே பார்க்கிறார். ஆகவேதான், “பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும்” என்கிறார். சட்டத்தின்பிரகாரமாக சம்பளம் கொடுக்கிற ஒரு எஜமானனை அல்ல, கிருபையின்பிரகாரமாக செயல்படுகிற கடவுளை இவ்விடத்தில் காண்கிறோம். அவர் நமது ஊழியத்தை நாம் அளவிடுகிற பிரகாரமாக அல்ல, தமது அளவின் முறைப்படி அளவிடுகிறார். அந்த ஊழியமும் அவர் கிருபையாக நமக்கு அளித்ததேயாகும்.
ஒவ்வொரு ஊழியனுக்கும் அவர் வெகுமதி அளிப்பார். ஆனால் நாம் தீர்மானிக்கிறபடியாக அல்ல. கிருபையில் வல்லவரான அவர், யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டார். “சிநேகிதனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே” என்று சொல்லக்கூடியவராகத்தான் அவர் இருப்பார். அவர் தமது ஊழியக்காரர் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டார். அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு அநியாயம் செய்ய மாட்டார். அது நிச்சயம். ஆனாலும், “என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?” என்று அவர் பதில் அளிப்பார். தமது ராஜரீக அதிகாரத்தையும் அதே வேளையில் தயாளகுணத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அவர் தமது ஊழியருக்கு வெகுமதி அளிப்பார்.
ஆகவே, எவ்வளவு நேரம் செலவிடப்பட்டது, எவ்வளவு பரப்பளவில் ஊழியம் செய்யப்பட்டது என்பதை கணக்கில் கொண்டு அவர் வெகுமதி அளிப்பதில்லை. சிலபேர் முப்பது நாற்பது ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் முதலாவதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமலும் இருக்கலாம். எவ்வளவு காலம் நீங்கள் ஊழியம் செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. அதிக காலம் ஊழியம் செய்தால் நல்லதுதான். அதனால் கடவுளுக்கு லாபம். சிலபேர் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவிடம் வந்து, ஓராண்டுக்குள்ளாகவே மரித்து பரலோகம் போயிருக்கலாம். ஆனால் அந்த குறுகிய காலப்பகுதியிலும் அவர்கள் தங்கள் எஜமானனுக்கு பெரும் புகழ்ச்சி ஏற்படக்கூடியவர்களாக வாழ்ந்திருப்பார்கள். அதிக ஆண்டுகள் நீங்கள் ஊழியப்பணியில் ஈடுபட்டிருந்தீர்களா என்பது முக்கியமல்ல, எவ்வளவு அதிகமான இடங்களில் சென்று பணியாற்றினீர்கள் என்பதும் முக்கியமல்ல. சிலபேர் உலகமெங்கிலும் சென்று அதிகமான இடங்களில் ஊழியம் செய்கிறார்கள். ஆனால் கடவுள் அதைக் கொண்டு அளவிடுவதில்லை. நேரத்தையோ, தூரத்தையோ அவர் கணக்கில் எடுப்பதில்லை. அப்படி எடுப்பது சட்டப்படி நியாயமானதாக இருக்கலாம். ஆனால் தயவு பொருந்தினவராகிய அவருடைய அளவிடுதல் அப்படிப்பட்டதல்ல.
நமது திறமையை கணக்கில் கொண்டு அவர் வெகுமதி அளிப்பதில்லை. நமது புத்திசாலித்தனமோ, கருத்தாழமோ, சந்தர்ப்பங்களோ ஊழியத்திற்கு உதவலாம் – இவைகளைக் கொண்டு அவர் அளவிடுவதில்லை. அப்படி அளவிட்டாரானால் சிலபேருக்கு திரளான வெகுமதியும், சிலருக்கு சொற்பமான வெகுமதியும்தான் கிடைக்கும். ஆனால் நமது எஜமானன் அப்படியாக அளக்கிறவரல்ல. ஒருவனுக்கு அவர் பிரசங்கிக்கும் வரத்தை அருளுகிறார், வேறொருவனுக்கு வேதவசனங்களை ஆழமாகப் பகுத்தாராயும் வரத்தைத் தருகிறார். சிலபேருக்கு அவர் அனுபவங்களைத் தருகிறார். என்றாலும் அவர் தரப் போகின்ற வெகுமதி, அவரவர் கொண்டிருக்கிற வரத்தை அடிப்படையாகக் கொண்டிராது. அவர் வேறுவிதமான சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்.
சகமனிதன் தீர்மானிக்கிறபடியாக அந்த வெகுமதி இருக்காது. ஒரு சகோதரன் கடவுளுக்கு ஊழியம் செய்கிறான். மற்ற சகோதரர்கள் அவனைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொள்கிறார்கள். அவனை சபையில் ஒரு ஊழியக்காரனாக நியமிக்கிறார்கள். மூப்பனாகவோ, உதவிக்காரனாகவோ நிர்ணயிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஊழியவாய்ப்பு கிடைப்பது நல்ல வெகுமதிதான். கடவுளுக்கு உபயோகமாக அநேக ஊழியங்கள் செய்வதற்கு அதில் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். ஆனால் நமது இறுதி வெகுமதி, நாம் எவ்வளவு பெரிய பதவி வகித்தோம் என்பதைப் பொறுத்துக் கிடைக்கப் போவதில்லை. கிறிஸ்து ஆளுகை செய்கின்ற ராஜ்ஜியத்தில் அந்தவிதமான விதிமுறையில்லை.
மனிதர் தமக்குத்தாமே தீர்மானித்துக் கொள்கிற விதமாக அவர்கள் அளவிடப்படுவதில்லை. தங்களுக்கு பெரிய வெகுமதி கிடைக்கும் என்று நினைக்கின்ற சில நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்கள் பாவத்திற்கு நீங்கியிருக்கிறார்கள். அவர்கள் பரிபூரணராக இருப்பதாக சொல்கிறார்கள். தாங்கள் சொல்வது உண்மையா இல்லையா என்பதை தங்கள் எஜமானன் அறிவார் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர், “நான் இதை செய்தேன், அதை செய்தேன்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். நீங்கள் செய்ததாக சொல்லுகின்ற காரியங்களைக் கொண்டு எஜமானன் உங்களுக்கு வெகுமதி அளிக்கப் போவதில்லை. சிலபேர் தாங்கள் செய்த காரியங்களைப் பட்டியலிட்டு பறைசாற்றிக் கொள்வார்கள். அவர்கள் தங்களையே உயர்த்திக் கொள்வதால், அவர்களுடைய சகோதரரும்கூட அவர்களைப் பற்றி அதிக உயர்வாக எண்ண மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். தங்களுடைய திறமையையும், தங்களுடைய உபயோகத்தையும் குறித்து மிகவும் குறைவாக மதிப்பிடுபவர்களே கடவுளுடைய பரிசுத்தவான்களின் மத்தியிலே அதிக மதிப்பைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். நம்மை நாமே பாராட்டிக் கொள்வது, நம்மை உயர்த்தி பேசுவது, பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்தமாக சொல்லிக் கொள்வது இவை போன்ற காரியங்களைக் கொண்டு நமது வெகுமதி தீர்மானிக்கப்படுவதில்லை. அப்படி தீர்மானிக்கப்பட்டிருக்குமானால், “பகலின் கஷ்டத்தையும், வெயிலின் உக்கிரத்தையும் சகித்தோமே” என்று சொன்னவர்களுக்கு இரண்டு பணமாவது அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்குமே. பதினோராம் மணி வேளையிலே வந்து வேலை செய்தவர்களுக்கு சமமாகவே எஜமான் அவர்களையும் நடத்துகிறார்.
மற்ற மனிதர்களைக் கவரும் விதத்தைப் பார்த்து வெகுமதி அளிக்கப்படுவதில்லை. நமது வயதும், நமக்கு ஆதரவு அளிப்பவர்களும், சுற்றுசூழ்நிலைகளும் நமக்கு அனுகூலமாக இருக்கலாம். சில மனிதர்களின் பெயர் மிகவும் பிரபலமடைந்து அடுத்த தலைமுறையினரையும் சென்றடையும். ஆனால் சிலரோ புகழ் பெறுவதில்லை. சிலமனிதர்களின் வாழ்க்கை சரித்திரம் எழுதப்பட்டு, எங்கும் பிரசித்தமாகி உலகின் பல்வேறு பகுதிகளையும் சென்றடையும். சிலரோ, தங்களது குடும்ப வட்டாரத்துக்குள் மாத்திரம் அறியப்பட்டவர்களாக வாழ்வார்கள். ஆனால், கடவுள் யாரையும் இதைக் கொண்டு அளவிடுவதில்லை. நான்கு அல்லது ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான ஒரு இல்லத்தரசி, தனது பிள்ளைகளை கடவுளின் வழியில் நடக்கும்படியாக தனது வீட்டிலேயே அளிக்கின்ற பயிற்சியினிமித்தமாக, அவள் கடவுளின் பார்வையிலே முதலாவதாகக் கருதப்படுவாள். ஆனால் பிரசங்க மேடையிலே வல்லமையாய்ப் பிரசங்கிக்கிற பிரசங்கியின் வாயிலே வருகின்ற வார்த்தைகளைக் கேட்பதற்காக ஆயிரம் பேர் கூடி வருகிறதாயிருந்தாலும், அந்தப் பிரசங்கி கடவுளால் கடைசியானவராகவும் கருதப்படலாம். மனிதர்களுடைய சேவையை நிறுத்துப் பார்ப்பதற்கு கடவுள் அவருடைய சொந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறார்.
நமது வெற்றியைப் பொறுத்தும் அவர் வெகுமதி அளிப்பதில்லை. சில மனிதர்கள் அதிகமான வெற்றியை அடைகிறார்கள். அந்த வெற்றியானது உண்மையில் அவர்களுடையதல்ல. அது மற்றவர்களின் உழைப்பினால் விளையும் கனி. ஒரு மனிதர் அதிகக் கண்ணீரோடு அநேக காலம் உபதேசிக்கிறார். ஆனால் அவர் வெகு சொற்பமான பலனையே காண்கிறார். அதன்பின் அவர் இறந்து போகிறார். அவருக்குப் பின்பாக, ஆவியில் உற்சாகமுள்ள இன்னொருவர் எழும்பி, முன்குறிப்பிட்ட மனிதரின் வழிமுறைகளை பின்பற்றி அதிகமாக ஆத்தும ஆதாயம் செய்கிறார். முந்தின மனிதர் விதைத்தார். அடுத்தவர் அவரது வேலையைத் தொடர்ந்தார். யாருக்கு வெகுமதி கொடுக்கப்படும்? அதிகமான பலனைப் பெற்றவர் போலக் காணப்படுகிறவர் அந்த வெற்றிக்குக் காரணமல்ல. ஒரு பழங்கால கதை உண்டு. அது ஒரு பெரிய உண்மையை அறிவிக்கிறது. ஒரு சகோதரன், மிகவும் வல்லமையாகப் பிரசங்கித்து, கிறிஸ்துவுக்காக அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினார். ஒரு நாள் இரவிலே கனவின் மூலமாக அவருக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது. அவர் செய்தவைகளுக்காக அவருக்கு பரலோகத்தில் வெகுமதி ஒன்றுமில்லையென்று கண்டார். அதற்குண்டான வெகுமதிகளெல்லாம் யாருக்குக் கொடுக்கப்படும் என்று அந்த சகோதரர் கேட்டார். பிரசங்க மேடையின் படியிலே அமர்ந்து கொண்டு, அந்தப் பிரசங்கிக்காக ஜெபித்து வந்த ஒரு வயதான மனிதனுக்கே அந்த வெகுமதிகளெல்லாம் கொடுக்கப்படும் என்று ஒரு தேவதூதன் சொன்னானாம். ஒருவேளை அவர்கள் இருவருமே தங்களுடைய எஜமானனால் புகழப்படுவார்கள் என்று நாம் கருதலாம். நமக்கு வெற்றியாகத் தோன்றுவதை பொறுத்து நமக்கு வெகுமதி அளிக்கப்படுவதில்லை என்பதை இதினால் அறிந்து கொள்ளலாம்.
அதுபோலவே, நாம் வெற்றி அடையவில்லை என்பதற்காக கடவுள் நம்மைக் கடைசியில் வைக்கவும் மாட்டார். மனிதர்கள், வெற்றி எனப்படுவதற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வகுத்திருக்கின்ற விதிமுறையின்படியாக, கடவுள், சிலமனிதர்களை வெற்றியடைய விடுகிறதில்லை. அவர் தமது ஊழியனாகிய ஏசாயாவை மக்களின் மத்தியிலே அனுப்பியது, ஜனங்களின் இருதயம் கடினப்படும்படியாகவும், காதுகள் மந்தமாகும்படியாகவும் செய்யும்படிக்கே. அவர் தமது ஊழியனாகிய எரேமியாவை, ஒரு தேசத்திற்காக புலம்பி அழும்படிக்கு அனுப்பினார். எரேமியாவின் கண்ணீர் மக்களிடம் மனந்திரும்புதலையோ சீர்திருத்தத்தையோ ஏற்படுத்திவிடவில்லை. ஒருவேளை தேவன் உங்களை நோவாவைப் போல அனுப்பக்கூடும். நூற்றி இருபது வருஷங்கள் பிரசங்கித்தும், தனது குடும்பத்தாரைத் தவிர்த்து ஒரு ஆத்துமாவைக்கூட பேழைக்குள் கொண்டுவர முடியாமல் போகலாம். ஆனால், நீங்கள் உண்மையாக நடந்து கொண்டீர்களானால் அதுவே அவருடைய கண்களுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும். அதில்தான் கடவுளின் சந்தோஷம் இருக்கிறது. வாழ்நாள் எல்லாம், உழுதல் அனைத்தையும் நீங்களே செய்தும், விதைப்பு முழுவதையும் நீங்களே செய்தும் உங்களுடைய கைகளில் எந்த அறுவடையும் இல்லாமல் போகும் என்று நான் கூறவில்லை. அப்படியே ஆனாலும்கூட, நீங்கள் கடைசிவரைக்கும் கடவுள் கொடுத்த ஊழியத்தில் தேவனுக்கு முன்பாக உத்தமமாக நடந்து கொண்டீர்களானால், உங்களுக்கு வெகுமதி கிடைக்காமல் போகாது என்று சொல்லுகிறேன். மனிதன் வெற்றியை அளக்கிறபிரகாரமாக அளக்கப்பட்டு உங்கள் வெகுமதி நிர்ணயிக்கப்படுவதில்லை.
கடவுளின் விதிமுறை: அது எப்படியிருக்கும் என நான் நினைப்பதை உங்களுக்குக் கூறுகிறேன். அது பல கிளைகள் அடங்கிய விதிமுறை. சில மனிதர்கள் முதலாவதாக வருவதற்குக் காரணம் அவர்களுடைய உறுதியான ஆர்வம். அவர்களால் முடியுமானால் அவர்கள் மக்களை இரட்சித்து விடுவார்கள். மக்களைக் கிறிஸ்தவர்களாக்க அவர்களால் கூடுமானால் அதை செய்துவிடுவார்கள். அதை செய்வதற்குத் தங்கள் உயிரையும் இழக்கத் தயாராக இருப்பார்கள். கேட்பவர்கள் இரட்சிப்பை அடையும்படிக்கு தங்கள் இருதயத்திலிருக்கும் ஆர்வம் முழுவதையும் வெளிப்படுத்திப் பேசுவார்கள். மக்களிடம் அவர்கள் பேசும்போது அவர்களுடைய ஆத்துமாவே அவர்கள் வாயிலிருந்து பேசும். அவர்களுடைய ஆர்வத்தைக் கடவுள் அறிவார். அவர்களுடைய ஆர்வத்தை அவர் கணக்கில் எடுத்துக் கொள்கிறார். ஆகவே “பிந்தினோர் முந்தினோராகிறார்கள்”.
கடவுள், ஒருவனிடம் இல்லாததின் அடிப்படையில் அல்ல, உள்ளதின் அடிப்படையில் அளவிடுகிறார். ஒரு சகோதரனிடம் ஒரு தாலந்து மாத்திரமே இருக்கிறது. ஆனால் அவன், பத்து தாலந்துகளைப் பெற்றவன் செய்யக்கூடிய அளவு சேவையை செய்கிறான். ஆனாலும் அவனுக்கு அதில் திருப்தியில்லை. தான் கொஞ்சம்தான் செய்வதாக அவன் எப்போதும் குறைவுபட்டுக் கொள்கிறான். தான், கடலின் அடிவாரத்தில் வாழுகின்ற பவளப் பூச்சியைப் போல இருப்பதாக நினைக்கிறான். தன்னால் சிறிதளவே பவளத்தை உருவாக்க முடிகிறது, அது ஒருபோதும் கடலின் மேற்பரப்பிற்கு வரப்போவதில்லை என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். ஆனால் ஒரு பெரிய பவளப்பாறை அல்லது பவளத்தீவின் ஒரு சிறு பகுதி உருவாக, தான் காரணமாயிருப்பதும், அது பிற்பாடு ஒரு பெரும் பவளத்திட்டாக கடலின் மேற்புறத்தில் காணப்படப் போகிறது என்பதும் அறியாமல் இருக்கிறான். ஒருவனிடம் இல்லாததின் அடிப்படையில் நமது கடவுள் அவனை அளவிடப் போவதில்லை. அவனிடம் என்ன இருக்கிறது என்பதையே அவர் பார்க்கப் போகிறார்.
இன்னொரு சகோதரன், அவனிடம் வேறு எதுவும் இல்லாவிட்டாலும், உற்சாகமுள்ள நல்ல ஆவி மாத்திரம் இருக்கிறது. அவன் மிகுந்த இரக்கமுள்ளவன். அவன் கடவுளுக்காக காத்திருப்பவன். கர்த்தரின் வசனத்திற்கு நடுங்குகிறவன். தன் முழுமனதினாலும் மிகுந்த மரியாதையோடும், மிகவும் மென்மையாகவும் பேசுகிறவன். கர்த்தர் தன்னை மௌனமாக இருக்கும்படி செய்தால் மௌனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவான். அவர் தன்னை பேசும்படி ஏவுகிற சந்தர்ப்பங்களில் மாத்திரம் பேச விரும்புவான். கர்த்தருடைய சித்தத்தை மாத்திரமே நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். தன்னை ஒரு பொருட்டாக யாரும் எண்ணாவிட்டாலும் பரவாயில்லை, அவர் சித்தம் மாத்திரமே நடைபெறுவதில் மிகுந்த திருப்தி அடைவான். “ஒன்றுமில்லாவிட்டாலும், கர்த்தாவே, உமது பாதபடியில் நான் அமர்ந்திருந்தாலே போதுமானது” என்பதே அவனுடைய ஜெபமாக இருக்கும். இப்படிப்பட்ட மனிதனை கடவுள் ஒருவேளை முதலாவதானவனாக வைக்கலாம். அதே சமயத்தில் தன்னில்தானே நிறைவுள்ளவனாக, கடவுளின் ஊழியத்தை உத்தமமாக செய்து கொண்டிருந்தவனுங்கூட கடைசி இடத்திற்குப் போக நேரிடலாம்.
இன்னொருவன், தான் எந்த வேலையை செய்தாலும் அதை மிகவும் சரியாக செய்து முடிப்பவன். அவன் பல காரியங்களை செய்வதற்கு முயற்சிக்க மாட்டான். ஆனால், ஒன்றை மாத்திரமே செய்தாலும் அதை பழுதின்றி செய்து முடிப்பான். அவனால் ஒரு பணியை மாத்திரம்தான் செய்ய முடியும். என்றாலும் தனது முழு மனதையும் கவனத்தையும் செலுத்தி அந்தக் காரியத்தை செம்மையாக செய்வான். ராஜ அரண்மனையில் ராஜாவின் ஓவியத்தை வரைவதற்கு ஓவியன் எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்வானோ அந்த அளவுக்கு கவனமாக தன் பணியை செய்வான். தனது வாழ்க்கை முழுவதையும் தான் எடுத்துக் கொண்ட சேவையை செய்வதில் கவனமாக செலவிடுவான். அதை தேவன் தமது கணக்கில் முதலாவதாக எடுத்துக் கொள்வார். வேறொருவன், சோம்பலாகவும், அரைகுறையாகவும் அநேக காரியங்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான். தான் அதிகமான வேலைகளை செய்வதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால் அவனுடைய பணிகள் நிராகரிக்கப்படும். ஏனென்றால் அவன் செய்தவைகள் ராஜாவின் தரத்துக்கு ஏற்றவிதத்தில் இல்லாததால், அவை அவரது அரண்மனையை அலங்கரிக்க முடியாது.
கடவுளைக் குறித்த சிந்தை மாத்திரம் கொண்டவர்களாக நாம் என்ன சேவையை செய்கிறோமோ அதையே அவர் தமது கணக்கில் எடுத்துக் கொள்வார் என நான் நினைக்கிறேன். நாம் செய்பவற்றை அவருக்கு செய்வோமானால், அவருக்காகவே நாம் எல்லாவற்றையும் செய்தோமானால் அதை அவர் விரும்புவார். நமது சிநேகிதர்களுக்கென்றோ, நமது சொந்த நலனுக்கென்றோ இராமல், கடவுளை மாத்திரமே மனதில் கொண்டவர்களாக நாம் செய்கின்ற பணியை அவர் கனப்படுத்துவார். தம்மைக் குறித்த சிந்தை மாத்திரம் உள்ளவர்களை அவர் முதலாவது இடத்தில் வைப்பார். மற்றவர்களை அவர் கடைசியில் வைப்பார். “என்னை கனம் பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.
அதிலும் நாம் அவர் மீதுள்ள அன்பில் மூழ்கினவர்களாக அவருக்கு சேவை செய்யும்போது அது மிகுந்த மதிப்பைப் பெறும். அதிக விலையேறப்பெற்றதான நளதைலத்தை எடுத்து வந்து, இயேசுவின் சிரசில் ஊற்றின அந்தப் பெண்ணின் அன்பை நினைத்துப் பாருங்கள்! அவள் நிச்சயம் முதலாவதாக எண்ணப்படுவாள். எங்கெல்லாம் சுவிசேஷம் சொல்லப்படுமோ அங்கெல்லாம் இவள் செய்ததும் கூறப்படும் என்று கிறிஸ்துவே அவளைக் குறித்து விசேஷமாக சொன்னார். அதிகமான ஊழியம் செய்தவர்களில் சிலபேர்கூட கடைசி இடத்திற்குப் போக வேண்டியதிருக்கும். ஏனென்றால் இயேசுவின் மீது இந்த ஸ்திரீ கொண்டிருந்த அளவுக்கு, அதிகமான அன்பு அநேகரிடத்தில் காணப்படுவதில்லை.
சில பேர் மிகுந்த விசுவாசம் உடையவர்களாக கடவுளுக்கென பணி செய்கிறார்கள். விசுவாசத்தோடு நாம் அவருக்கு வேலை செய்வதைக் காண்பதே அவருக்குப் பிரியமாக இருக்கிறது. அவிசுவாசத்தோடு அதிகமான வேலைகளை செய்வது குறைவுள்ள பணியாகவே கருதப்படும். ஏனென்றால் விசுவாசம் இல்லாமல் ஜெபிக்கின்ற ஜெபம் கேட்கப்படாதது போலவே, அவிசுவாசத்தோடு செய்கின்ற பிரசங்கங்களும் உபதேசங்களும் பலனளிக்காமல் போய்விடும். நீங்கள் செய்யும் சேவையை விசுவாசத்தோடு செய்யுங்கள். அப்போது நீங்கள் முந்தினோரின் இடத்தில் இருப்பீர்கள்.
நமது ஊழியத்திற்காக எவ்வளவு ஜெபித்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அவர் நம்முடைய வேலையை அளவிடுவார். ஒருவேளை அது ஒரு நல்ல பிரசங்கமாக இருக்கலாம். அதைப் பிரசங்கித்தவர் மிகவும் கருத்தோடு அதைத் தயாரித்திருக்கலாம். அதன் வாக்கியங்களை அவர் எவ்வளவு சிறப்பாக அமைத்திருக்கிறார் என்பதை நீங்கள் காணக்கூடும். அழகாக சொல்லக்கூடிய விதத்தில் சொற்சாதூரியங்களை அவர் உபயோகித்திருக்கலாம். ஆனால் அதற்காக ஜெபிக்கப்படவேயில்லை என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ளக்கூடும். வெறுமனே தயாரிக்கப்பட்டு அல்லது நகல் எடுக்கப்பட்டு, அல்லது பரிசுத்த ஆவியானவரின் உதவியில்லாமல் மனிதனின் மனதில் தோன்றின கருத்துக்களை வைத்து தயாரிக்கப்பட்ட பத்தாயிரம் பிரசங்கங்களைவிட, நன்றாக ஜெபிக்கப்பட்டதான பிரசங்கம் மேலானது. பிரசங்கம் தயாரிக்கும்போது அதற்காக எப்போதும் ஜெபித்தவர்களாக, ஜெபசிந்தையோடு, கடவுளை சார்ந்து கொண்டு அதை தயாரிக்க வேண்டும்.
நாம் கொடுப்பதில் எந்தவித மனநிலை கொண்டிருக்கிறோம் என்பதை நமது கர்த்தர் கவனிப்பார். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைக் கொண்டு அவர் அளவிடாமல், நமக்கு எவ்வளவு மீதியாக இருக்கிறது என்பதைத்தான் அவர் தமது அளவுகோலில் அளவிடுவார் என நான் நினைக்கிறேன். தனக்கு உரியதையெல்லாம் கொடுத்து விட்ட அந்த பெண்மணி, மற்ற செல்வந்தர்கள் கொடுத்ததைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்தாள் என்று இயேசு குறிப்பிடுகிறார். ஏனென்றால் அவளுக்கு மீதியாக எதுவுமில்லை. தனது ஜீவனத்துக்கு உண்டாயிருந்த அனைத்தையும் அவள் கொடுத்தவிட்டபடியால் அவள் முதலாம் இடத்தைப் பிடித்தாள். ஒருவர் ஆயிரம் பணம் கொடுக்கிறார், அதற்காக நாமும் அவருக்கு அதிக மரியாதை செலுத்துவோம். ஆனால் அவர் கடவுளின் அளவுகோலின்படி பிந்தின இடத்தைதான் பெறுகிறார். ஏனென்றால் அவருக்கு மீதியாக இருப்பது அதிகமாக இருக்கிறதே.
தாங்கள் செய்த சேவைக்காக எந்த வெகுமதியும் பெறாதவர்கள், முதலிடத்தை அடைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நாம் விருந்து செய்யும்போது குருடரையும், செவிடரையும், சப்பாணிகளையும் அதற்கு அழைக்கும்படியாக நமது கர்த்தர் சொல்லுகிறார். ஏன்? அப்போதுதான் அவர்களால் பதிலுக்கு செய்ய முடியாமல் போகும். மேலும், அவர் பரிசேயர்களைக் குறிப்பிட்டு கூறுகிறார்: “அவர்கள் தங்கள் பலனை அடைந்தாயிற்று என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” உங்கள் சேவைக்காக இரண்டு முறை உங்களுக்கு பலன் கிடைக்காது. நீங்கள் கிறிஸ்துவுக்காக ஏதோ ஒரு பணியை செய்திருக்கிறீர்கள். உதாரணமாக விசுவாசத்திற்காக வாதாடியிருக்கிறீர்கள். அதன் காரணமாக உங்களை எதிர்த்து குற்றப்படுத்துகிறார்கள். தூற்றுகிறார்கள். நீங்கள் நல்லதைத்தான் செய்தீர்கள். ஆனால் அதற்கு பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. வெகுமதி கிடைக்கப்பெறாத சேவைகளுக்கெல்லாம் பிரதியுபகாரம் செய்யப்பட வேண்டியது மீதியாக இருக்கிறது. கடவுளின் ஞாபகப்புத்தகத்திலே நீங்கள் செய்தவைகள் சட்டத்தின்படியாக அல்ல, அவருடைய கிருபையின்படியாக குறித்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த பாக்கியமானது. ஒருவேளை நீங்கள் ஏழை ஒருவனுக்கு ஏதாவது உதவி செய்திருக்கலாம். ஆனால் அவனோ அதற்காக நன்றியுள்ளவனாயிருக்கவில்லை. அவன் நன்றிகெட்டதனமாக நடந்ததற்காக நீங்கள் நன்றியோடிருங்கள். ஏனென்றால் அவன் உங்களுக்குத் தனது நன்றியைக் காண்பித்திருந்தானென்றால், அப்போதே நீங்கள் ஒருவேளை உங்களுடைய பலனை அடைந்ததாயிருக்கலாம். உங்களால் உதவியைப் பெற்றவர்கள், உங்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தி, உங்களைப் புகழ்ந்து பேசி, உங்களுக்கு கைம்மாறாக வேறு ஏதாவது விதத்தில் உதவி செய்தார்களானால் அது நல்லதுதான். ஆனால், நீங்கள் செய்ததின் பலனை நீங்கள் அடைந்துவிட்டீர்கள். ஆனால் யாராவது நன்மை செய்தும் பாடு அனுபவிக்கிறவர்களாயிருந்தால், சிறப்பானதை செய்தும் தீமையையே பலனாகப் பெறுகிறவர்களாயிருந்தால், அன்பு செலுத்தியும் அன்பைப் பெறாதவர்களாயிருந்தால் அவர்களைக் குறித்துதான் கர்த்தர் சொல்லுகிறார்: “இவர்கள் பிந்தினோராய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் முந்தினோர் ஆவார்கள்” என்று. மனிதரின் அபிப்ராயத்தில் முதலாவது இடத்தைப் பிடித்து, பிரதியுபகாரங்களைப் பெற்றுக் கொண்ட அநேகம் பேர் கடைசி இடத்திற்குத்தான் செல்வார்கள்.
3. ஊழியக்காரராகிய நாம் என்னவித ஆவியை கொண்டிருக்க வேண்டும்
இந்த தலைப்பில் நடைமுறைக்கு உதவும் சில ஆலோசனைகளைக் கொடுக்க விரும்புகிறேன். நமது ஊழியம் கிருபையினால் வந்தது. அந்த ஊழியத்தை அவர் தமது அளவுகோலின்படியாக அளவிடுகிறார். அது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதல்ல. அவருடையது கிருபையின் அளவுகோல். அப்படியிருக்கையில் நாம் இரண்டு காரியங்களை கவனிக்க வேண்டும். முதலாவது நாம் பெருமை உடையவர்களாய் இருக்கக் கூடாது. இரண்டாவது, நாம் சோர்ந்து போய்விடக் கூடாது.
பெருமை அடையவே அடையாதீர்கள். ஏனென்றால் முதலாவது இடத்திலிருக்கிற அநேகர் கடைசி இடத்தில்தான் இருப்பார்கள். ஒருவேளை சகோதரரே, நீங்கள் உண்மையாகவே கர்த்தருக்கென்று அருமையாக உழைக்கிறவராக இருந்து, முதலாவதான இடத்தில் இருந்தீர்களென்றால், அதைக் குறித்து நீங்கள் பெருமை அடைவீர்களா? எப்படி அடைய முடியும்? நீங்கள் இன்னும் அதிகமாகவல்லவா அவருக்கு கடன்பட்டிருக்கிறீர்கள்! நீங்கள் இன்னும் அதிகமாக அவருடைய ராஜ்ஜியத்திற்காக உழைக்கும்படியாக நியமிக்கப்பட்டிருப்பதால், அவர் உங்களுக்கு அளித்திருக்கும் அந்தக் கிருபைக்காக நீங்கள் இன்னும் அதிக கடமைப்பட்டிருக்கிறீர்களே. கர்த்தரின் பாதத்தில் தாழ விழுந்து பணிந்து கொண்டு தாழ்மையாயிருங்கள்.
அடுத்தபடியாக, ஒரு வேளை நீங்கள் உங்களை முதலாவதாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் கடைசியாகத்தான் இருப்பீர்கள். உங்களைக் குறித்து நீங்களே மதிப்பிட்டுக் கொள்வது சரியான மதிப்பீடாக இருக்காது. உங்களைக் குறித்து நீங்கள், “ஐசுவரியவான் என்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லை என்றும்” எண்ணிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் கடவுளின் பார்வையில் நீங்கள், “நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாய்” இருக்கிறீர்கள். உங்களுடைய ஊழியமானது மிகப் பெரிய வைக்கோல் போரினாலும், அதிக அளவு புல் கட்டினாலும், குவித்து வைக்கப்பட்ட கட்டைகளாலும் செய்யப்பட்டதாக இருக்கலாம். ஆனால் கடவுள் அதை பரீட்சைக்கு உட்படுத்தும்போது, அவை யாவும் எரிந்து ஒரு கைப்பிடி அளவு சாம்பல் மட்டுமே மிஞ்சக்கூடும். ஆனால், உங்களுடைய சகஊழியன் ஒருவனைக் குறித்து, அவன் மிகச் சிறிய அளவே கர்த்தருக்கு ஊழியம் செய்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் அவனோ பொன்னினாலும், வெள்ளியினாலும், விலையேறப்பெற்ற கற்களாலும் கட்டியிருந்தான் என்பதை பிற்பாடு காண்பீர்கள்.
நாம் ஒருவேளை உண்மையாகவே முந்தினவர்களின் பட்டியலில் இருப்பவர்களாக இருந்தாலும், நாம் அதைக் குறித்து பெருமை அடைந்தோமானால், நமது பெயர் பிந்தினவர்களின் பட்டியலுக்குப் போய்விடும். ஓ! கடவுளின் ஊழியக்காரர்களில் எத்தனைபேர் மாயையைப் பற்றிக் கொண்டு பெருமைக்காரர்களாக மாறியிருந்திருக்கிறார்கள்! அவர்கள் பலவீனராய், தாழ்மையானவர்களாய், கடவுளின் பெலனையே சார்ந்தவர்களாக வாழ்ந்த வரைக்கும் அவர் அவர்களை ஆசீர்வதித்திருந்தார். ஆனால் அவர்கள் பெலனடைந்து, தங்களுடைய சொந்த பெலனை சார்ந்து வாழ ஆரம்பித்தபோது, அவர்கள் பயங்கரமான தோல்வியைத் தழுவ ஆரம்பித்தார்கள்.
ஒன்று மட்டும் மிகவும் நிச்சயம். நீங்கள் முதலாவதாய் இருந்தால், நீங்கள் கடைசியில் இருப்பதாகத்தான் நினைப்பீர்கள். தன்னை கேவலமாக எண்ணிக் கொள்பவன்தான் சிறந்தவன். ரோமர் ஏழாம் அதிகாரத்தில் பவுல் தன்னைக் குறித்து என்னவிதமான விளக்கம் தருகிறார்! பவுல் இந்த அதிகாரத்தை எழுதியபோது அவர் இரட்சிக்கப்படாத நிலையில் இருந்ததாக சிலபேர் சொல்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர் இதை எழுதும்போது அவர் மூன்றாம் வானத்திற்கு சென்ற அனுபவத்தை அடைந்திருந்தார். அந்நாட்களில் வாழ்ந்தவர்களில், பவுல் மாத்திரமே கிறிஸ்துவுக்கு ஒத்த குணாதிசயங்களைக் கொண்டவராக இருந்தார். ஒருவேளை யோவானும் அப்படி இருந்திருக்கலாம். அவர் மிகுந்த பரிசுத்தநிலையில் இருந்திருக்காவிட்டால், இப்பேர்பட்டதான பயங்கர வேதனையை அவர் எழுத்தில் காண்பித்திருக்க முடியாது: “நிர்பந்தமான மனுஷன் நான். இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என அங்கலாய்க்கிறார். தன்னை பரிசுத்தவானாக எண்ணிக் கொள்பவன் ஒருபோதும் பரிசுத்த கடவுளைக் காண்பதில்லை. ஒருவேளை அவன் கடவுளைக் கண்டுவிட்டானென்றால், அவனும் யோபைப் போல, “என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” என்றுதான் சொல்லுவான். கடவுளுடைய மகா பரிசுத்தத்தையும், இயேசுக்கிறிஸ்துவின் பரிபூரணமான முன்மாதிரியையும் ஒருவன் உணர்ந்து கொண்டுவிட்டானென்றால், அவன் தனது சுயபெருமையை விட்டுவிட்டு தன்னை ஒன்றுமில்லாதவனாக எண்ணுவான். தன்னை கடைசியாக எண்ணிக் கொள்வதற்கு விருப்பம் உடையவனே உண்மையில் முதலாவதாக இருப்பவன். பவுல், மற்ற அப்போஸ்தலர்களைக் காட்டிலும் சற்றும் குறைந்தவர் அல்ல. இருந்தபோதிலும், அவர் தன்னை அப்போஸ்தலரெல்லாரிலும் மிகவும் சிறியவன் என்று குறிப்பிடுகிறார். பாவிகளில் பிரதான பாவி என தன்னை அழைத்துக் கொள்கிறார். பிரியமானவர்களே! தேவன் தம்முடையவர்களில் சிறந்தவர்களைக் குறிக்கும் அடையாளக் குறியீடுகளில் ஒன்று, அவர்கள் தங்களைக் குறித்த தாழ்வான எண்ணம் கொண்டிருப்பதுதான். ஆகவே பெருமையாக இராதேயுங்கள்.
அடுத்தபடியாக, நீங்கள் கடைசியாக இருப்பதாக நினைத்தீர்களானால் சோர்ந்து போகாதிருங்கள். கடவுள் அளப்பது உங்கள் அளவின்படியாக அல்ல. கடைசியில் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒருவேளை அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார். “நான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்ல” என்று நினைத்தாலும் அப்போஸ்தல ஊழியத்திற்கு தகுதியானவன்தான் என அவர் நினைக்கக்கூடியவர். தகுதியைக் குறித்த உனது எண்ணத்திற்கும் கடவுளுடைய எண்ணத்திற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. அவருடைய மதிப்பீடுதான் சரியானதாக இருக்கும்.
நீங்கள் கடைசியானவராக இருந்தாலும், “அவர் அதிகமான கிருபையை அளிக்கிறவர்.” நாம் ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் அல்ல, அதை “இன்னும் அதிகமாக” தருவதற்காக கிறிஸ்து வந்திருக்கிறார். உங்களிடம் இருப்பது போதுமானது என எண்ணாதீர்கள். இன்னும் அதிகமான வரங்களை நாடித் தேடுங்கள். “நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாகவே” நமக்குத் தருவதற்கு அவர் வல்லவராய் இருக்கிறார். அவரிடம் மேன்மையான காரியங்களைக் கேளுங்கள். “உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள். நான் அதை நிரப்புவேன்” என்று கர்த்தர் சொல்லவில்லையா? விசுவாசமுள்ள ஜெபம் வளரும் ஜெபமாயிருக்கிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக கேட்கிறீர்களோ அவ்வளவு அதிகமாகப் பெற்றுக் கொள்வீர்கள். கிடைக்க கிடைக்க இன்னும் அதிகமாகக் கேட்டுக் கொண்டே போவீர்கள். அவரிடமிருந்து பெறப் பெற அதிகமதிகமாக நிரப்பப்படுவதை உணர்வீர்கள். நாம் கடைசியானவர்களாக இருந்தால் தேவன்தாமே இவ்விதமாக நம்மை நிரப்புவாராக!
கர்த்தருக்கென மிகவும் கொஞ்சமாகத்தான் உங்களால் சேவை செய்ய முடிகிறதென்றாலும் சரியான மனப்பாங்கை உடையவர்களாய் இருந்தீர்களானால், அந்த சொற்ப ஊழியமே மிகவும் விலையேறப்பெற்றதாகி அந்தக் குறைவை சரிசெய்து விடும். உங்களால் பெருமளவில் ஊழியம் செய்ய முடியாவிட்டால், அதை விரும்பாதீர்கள். ஒரு இளம் ஊழியர், வயதான ஊழியரிடம் “ஐயா, நான் நூறு பேருக்கு மாத்திரம்தான் பிரசங்கம் செய்கிறேன். ஆயிரம் பேருக்கு பிரசங்கிக்கக் கூடிய இடத்தில் நான் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்று கூறினார். அதற்கு அந்தப் பெரியவர், “இளைஞனே, நீ நூறு பேருக்கு கணக்கு ஒப்புவித்தால் போதுமானது. அவர்கள் அத்தனை பேருடைய ஆத்துமாவுக்கும் வேண்டியவைகளை நீ உண்மையாக செய்யக் கூடுமானால் அதுவே போதுமானதாயிருக்கும்” என்று கூறினார். மிகப்பெரும் கூட்டத்தில் அனைவருடைய ஆத்துமாவுக்கும் ஏற்றவைகளைக் கொடுக்க உன்னால் முடியுமானால் நீ பெருமளவில் ஊழியம் செய்ய ஆசைப்படு. தற்போது உள்ளவைகளில் உத்தமமும் உண்மையுமாக நடந்து கொள்வது மாத்திரமே, அதிலும் அதிகமானவைகளை செய்வதற்கேற்ற பயிற்சியாக இருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு நான் கடைசியாக சொல்வது: நாம் முந்தினவர்களாயிருந்தால் என்ன, பிந்தினவர்களாயிருந்தால் என்ன? நாம் அதைக் குறித்து அதிகமாகக் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மகிமையை நாம் அனைவருமே பகிர்ந்து கொள்ளப் போகிறோம். நாம் மனந்திரும்பியபோது, கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமானோம். நாம் கிருபையில் பெருகும்போது, நல்ஆவி அந்த சரீரத்தில் ஊடுருவுகிறபோது, அந்த சரீரத்தின் எந்த அங்கத்தினர் கனமடைந்தாலும், “இது எங்களுக்கு கிடைக்கும் கனம்” என்று சொல்லக் கூடியவர்கள் ஆகிறோம். எந்த சகோதரனாவது கர்த்தரால் அதிக கனத்தைப் பெற்றானென்றால், அவனது கனத்தால் நானும் கனமடைவதை உணருகிறேன். கர்த்தர் உங்கள் சகோதரனை ஆசீர்வதித்து, அவனை உங்களைக் காட்டிலும் பத்து மடங்கு உபயோகமுள்ளவராகச் செய்தாரென்றால், அது உங்கள் சகோதரனுக்கு மாத்திரம் கிடைத்த ஆசீர்வாதமல்ல, உங்களுக்கும்தான் அது ஆசீர்வாதமாயிருக்கும். என் கை ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டிருக்கும்போது, என் கால் அதைப் பார்த்து, என்னிடம் அந்தப் பொருள் இல்லையே என்று சொல்லுமா? சொல்லாது. என் கையில் இருக்கும் பொருள் காலுக்கும் உரியதுதான். அது சரீரம் முழுவதற்கும் சொந்தமானது. என்னுடைய வாய் சாப்பிடுகிறது. ஆனால் அது வாய்க்காக மாத்திரம் சாப்பிடுவதில்லை. அது எனது மூளைக்காகவும், கைக்காகவும், முதுகெலும்புக்காகவும், சரீரத்திலுள்ள எல்லா அங்கங்களுக்காகவும்தான் சாப்பிடுகிறது. அது போலவே, நீங்கள் கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தை உணரும்போது, அவருடைய ஜனங்களோடுள்ள ஐக்கியத்தை உணரும்போது, உங்களுக்குத் தோன்றும் எண்ணமெல்லாம்: “கர்த்தர் மகிமைப்படுவாராக. அவரே மேன்மை அடைவாராக. நான் முதலாவதாக இருப்பதோ கடைசியில் இருப்பதோ பெரிய விஷயமல்ல” என்றுதான் இருக்கும். “போன வாரத்தில்தான் கர்த்தரை ஏற்றுக் கொண்ட அந்த சகோதரன், கர்த்தரின் கரத்திலிருந்து வெகுமதியைப் பெற்றிருக்கிறான். அதைக் குறித்து எனக்கு சந்தோஷம்தான்” என்று எழுந்து நின்று சொல்லக்கூடியவர்கள் ஆவீர்கள். இதோ, இன்னொரு சகோதரன். இவன் கர்த்தருக்கென்று பெரிதாக எந்த சேவையும் செய்துவிடவில்லை. ஆனால் இவனும் கர்த்தரிடமிருந்து வெகுமதியைப் பெற்றிருக்கிறான். கர்த்தர் இவனுக்கும் அருளிச் செய்ததற்காக ஸ்தோத்திரம் என்று சொல்லுவீர்கள். அவனும் கர்த்தருடைய குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறானே. கிடைக்கும் வெகுமதிகள் யாவும் ஒருவரிடமிருந்தே வருகிறது. அவை யாவும் அந்த ஒரே குடும்பத்திற்கே வருகிறது. நாம் அனைவரும் ஒரு பெரிய கடையின் வெவ்வேறு தளங்களில் பணிபுரிகின்ற வேலையாட்கள் போல இருக்கிறோம். பெண்கள் வரக்கூடிய இடத்தில் ஒருவன் பணிபுரிகிறான். அவனிடம் அதிகமான பொருட்கள் வாங்குகிறார்கள். அந்நாளில் அவன் அதிக பணத்தை வசூல் செய்கிறான். கடையின் பின்புறத்தில் இன்னொருவன் சாமான்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் அதிகக் கடினமான வேலையை செய்து கொண்டிருக்கிறான். அவனிடம் பணம் எதுவும் வசூலாவதில்லை. கடையின் எஜமானன், யார் அதிக பணத்தை வசூல் செய்தது என்பதின் அடிப்படையிலா வேலையாட்களைப் புகழுவான்? கடையின் பின்புறத்தில் சாமான்களை இறக்கி ஏற்றும் வேலைகளை செய்தவனும், கடையின் முன்புறத்தில் பணம் வசூலித்துக் கொண்டிருந்தவனைப் போலவே சுறுசுறுப்போடு வேலை செய்து கொண்டிருந்தபடியால் அவனும் தன் எஜமானின் பார்வையில் தகுந்த ஊழியனாகக் காணப்படுவான். ஒருவேளை அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்களானால், அந்நாளின் முடிவிலே ஒன்றாக அமர்ந்து என்னென்ன வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன, எவ்வளவு பணம் வசூலாயிற்று என்பதைக் குறித்துதான் அனைவரும் சந்தோஷமாகப் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால் அவை யாவும் ஒரே குடும்பத்திற்கு செல்கிறது. அனைவரின் உழைப்பின் பலனைப் பெறுவதும் அக்குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும்தான். ஆகவே சகோதர சகோதரிகளே, நீங்கள் சென்று கிறிஸ்துவுக்காக உழையுங்கள். ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கர்த்தருக்காக சேவை செய்யும் இந்தக் கிருபையில் எவ்விதத்திலாவது பங்குபெற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்.
இன்னும் ஒரு காரியத்தை நான் கூற வேண்டும். நான் இதுவரைக்கும் கடவுளுடைய பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். இரட்சிக்கப்பட்ட நிலையில் இல்லாத மற்றவர்களாகிய நீங்கள் கடவுளுக்கு சேவை செய்ய முடியாதாகையால் இந்தக் கிருபையைக் குறித்து அவர்களுக்குப் பிரசங்கித்தேன். என்னவொரு பரிதாபமான நிலைமையில் நீங்கள் இருக்கிறீர்கள்! சேவை செய்யக் கூடாத நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவிடம் வரும்வரைக்கும் கடவுள் உங்களிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார். மகா பிரதான ஆசாரியராகிய இயேசுக்கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே எந்த பலியும் செலுத்தப்பட வேண்டும். “நீங்கள் மனந்திரும்பி, சிறுபிள்ளைகளைப் போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது.” நீங்கள் ஊழியராகவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டீர்கள். நான் இதுவரைக்கும் சொல்லிக் கொண்டுவந்த கிருபையை நினையுங்கள். கிறிஸ்து என்னை இரட்சித்துவிட்டார், அவருடைய கிருபையில் எனக்கும் பங்களித்திருக்கிறார், தனது ராஜ்யத்தின் சேவைக்காக என்னையும் உபயோகிக்கிறார் என்று கூறும் வரைக்கும் ஓயாதிருங்கள். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.