பட்டுப்போன அத்திமரம்
(செப்டம்பர் 29, 1889ஆம் ஆண்டு, மெட்ரோபாலிடன் டாபர்நாகிள், நியுயிங்டன் என்கிற இடத்திலே, கர்த்தருடைய நாளின் காலையிலே, சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அளித்த தியானத்தின்(2107) சாராம்சம்)
Translation into Tamil by Vinotha Surendar
“அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார். காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார். உடனே அத்திமரம் பட்டுப் போயிற்று. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். ” மத் 21:17-20.
இது ஒரு அற்புதம் கலந்த உவமையுமாகும். அற்புதங்களைக் குறித்த புத்தகங்கள் நம்மிடம் உண்டு, அதேபோல உவமைகளைக் குறித்த புத்தகங்களும் உண்டு. இந்த சம்பவத்தை நாம் இவற்றுள் எதோடு சேர்க்கலாம் என்று கேட்டால் இரண்டிலும் சேர்த்துக் கொள்ளுங்கள் என நான் பதிலளிப்பேன். தனிப்பட்ட வகையில் இது ஒரு அற்புதமான சம்பவம். அத்தோடுகூட மனதில் பதியும் உவமையுமாகும். ஒரு பொருளை மாதிரியாகக் கொண்டு நமது கர்த்தர் வெளிப்படுத்திய உவமை. மனிதரின் கண்களுக்கு முன்பாக அவர் கொண்டுவருகிற இந்த உண்மையை, அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதியும்படி செய்கிறார். இதை ஒரு உவமையாகவே நான் உங்களுக்கு முன்பாக அதிகமாக எடுத்துக் காண்பிக்கவிருக்கிறேன். அவ்விதமாக நீங்கள் இந்த சம்பவத்தைப் பார்க்கவில்லையானால், அதைத் தவறாக விளங்கிக் கொண்டுவிடுவீர்கள். வேதாகமத்தைக் காட்டிலும் நாம் ஏதோ அதிக புத்திசாலிகள் போல எண்ணிக் கொண்டு, அதை சீர்தூக்கிப் பார்க்க நம்மால் முடியும் என்பது போன்ற அலட்சிய மனப்பான்மையோடே வேதாகமத்தை கையாளுபவர்கள் அல்ல நாம். மனிதனுடைய ஆவியைக் காட்டிலும் பரிசுத்தஆவி மிக உயர்ந்தது என நம்புகிறவர்கள் நாம். மேலும், எது சரி எது நல்லது என்பதை எந்த மனிதனைக் காட்டிலும் சிறப்பாகத் தீர்மானிக்கக் கூடியவர் நமது கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசுக்கிறிஸ்து என்பதையும் விசுவாசிக்கிறவர்கள் நாம். நாம் இருக்க வேண்டிய இடம் அவர் பாதத்தின் அருகே: நாம் குற்றம் கண்டுபிடிக்கிறவர்கள் அல்ல, நாம் அவரைப் பின்பற்றுகிறவர்கள். இயேசு எதை செய்தாலும், என்ன கூறினாலும் அதை ஆழ்ந்த மரியாதையோடு கவனிப்பவர்கள். அவர் கூறுபவைகளிலிருந்து நம்மால் கூடியமட்டும் அதிகமாக அறிந்து கொள்ளவேண்டும் என்பதே நமது பிரதானமான வாஞ்சையாகும். அவருடைய எளிமையான செயல்களில் நாம் அபூர்வமானவைகளைக் காண்கிறோம். அவருடைய எளிமையான வார்த்தைகளில் நாம் ஆழமான போதனைகளைப் பெற்றுக் கொள்கிறோம். அவர் எதையாவது சொன்னாலோ அல்லது செய்தாலோ, மோசே முட்செடியின் அருகில் நின்ற வண்ணமாக, நாமும் பரிசுத்த பூமியில் நிற்பதைப் போல உணருகிறோம்.
பொறுப்பற்ற மனிதர்கள் இந்த சம்பவத்தைக் குறித்து சிறிதும் ஞானமில்லாத வகையில் நம் முன் பேசியிருக்கிறார்கள். நமது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பசியடைந்ததின் நிமித்தமாக, தனது பசியை ஒன்றிரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டுத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிற நோக்கில், தவறுதலாக எண்ணி அந்த அத்திமரத்தண்டையில் சென்றுவிட்டார் என்பது போல அவர்கள் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். அது அத்திப்பழக் காலமாயிராதபடியினால் அவர் அதில் பழத்தை எதிர்பார்ப்பதும் சரியில்லாததோடு, அவர் வெறுத்துப் போய், மரத்திற்கு ஏதோ பொறுப்பு இருப்பது போல அதை சபித்துப் போடுகிறார் என்பார்கள்.
இந்த சம்பவத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்காததினால்தான் அவர்கள் இப்படிப்பட்ட எண்ணங் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறுவது சரியல்ல. எருசலேமின் அழிவைக் குறித்து நமது கர்த்தர் தமது சீஷர்களுக்குக் கற்பிக்க விரும்பினார், எருசலேமில் அளிக்கப்பட்ட வரவேற்பானது அவருக்கு பல நன்மைகளை வாக்களிப்பது போலத் தோற்றமளித்தது. ஆனால் முடிவில் ஒன்றுமில்லாத நிலைதான் ஏற்பட்டது. ஓசன்னா என்கிற அவர்களுடைய ஆர்ப்பரிப்பு முடிவில், “அவனை சிலுவையில் அறையுங்கள்” என்கிற கூச்சலாக மாறிற்று.
எருசலேம் நகரம், நேபுகாத்நேச்சரால் முற்காலத்தில் அழிக்கப்பட்ட போது, தீர்க்கசரிசிகள் அதைக் குறித்து எச்சரித்துப் பேசியதோடு மாத்திரமல்லாமல், ஜனங்களை உணர்த்தக்கூடிய விதமான அடையாளங்களையும் உபயோகித்தார்கள். நீங்கள் எசேக்கியேல் புத்தகத்தைத் திறந்து வாசித்தீர்களானால் அதில் பலவிதமான அடையாளங்களையும் மாதிரிகளையும் வரப்போகிற அழிவுக்கு முன்னடையாளமாக பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த அடையாளங்கள், எதைக் குறிக்கிறதென்று அறிந்து கொள்ளும் ஆவலை மக்களுக்குத் தூண்டின, கவனத்தை ஈர்த்தன, சாதாரண மக்களின் மத்தியிலும் அவர்களின் இருதயத்திலும் தீர்க்கதரிசன எச்சரிப்புகளை வழங்கின. இப்போது, மீண்டுமாக கடவுளின் நியாயத்தீர்ப்பு, குற்றம் நிறைந்த அந்தப் பட்டணத்தின் வாயிலுக்கு வந்தது. வார்த்தைகள் – இயேசுக் கிறிஸ்து மொழிந்த வார்த்தைகள் – யாவும் விழலுக்கு இறைத்த நீராயிற்று. சிந்திய கண்ணீர் – இரட்சகரின் கண்ணீருங்கூட – வீணாயிற்று. அடையாளம் கொடுக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று – அழிவைக் குறித்ததான அடையாளம். “கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப் பண்ணினேன் என்று வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் தெரியவரும்” என்று எசேக்கியேல் மூலமாக உரைக்கப்பட்டது. நமது கர்த்தர் இதே காட்சியைத்தான் இங்கு உபயோகித்திருக்கிறார். இயற்கைக்கு மாறான ஒரு அத்தி மரத்தை நமது கர்த்தர் காண்கிறார். இலைகள் தோன்றுகிற சமயம் அதுவாக இல்லாதபோதும், அம்மரம் இலைகளால் மூடப்பட்டிருந்தது. ஒரு காரியத்தை கற்பிப்பதற்கு இது ஒரு அருமையான சாதனமாக இருப்பதை நமது கர்த்தர் காண்கிறார். ஆகவே அவர் தமது சீஷர்களை அழைத்துக் கொண்டு அங்குபோய், அதில் இலைகளோடு சேர்ந்து அத்திப்பழங்களும் இருக்கிறதா எனப் பார்க்கச் செல்கிறார். அதில் ஒன்றுமில்லாதிருந்ததை அவர் கண்டு, அந்த மரமானது ஒருபோதும் கனிகொடுக்கக் கூடாதபடிக்கு அதை சபித்துப் போடுகிறார். உடனடியாக அந்த மரம் பட்டுப்போகத் தொடங்கிற்று. நமது கர்த்தர் அந்த மரத்தை வேறு காரணங்களுக்காக உபயோகித்துதக் கொள்ளும்படியாகக் கூறியிருக்கலாம். அதனை எரிபொருளாக்கி, குளிர்ந்துபோன கை கால்களுக்கு அணல் தர உபயோகித்துக் கொள்ளுங்கள் என கூறியிருக்கலாம். ஆனால் அவரோ, குளிர்ந்து போன இருதயங்களில் அணல் மூட்டுவதற்கு அதை உபயோகித்திருப்பது அதைக் காட்டிலும் மேலானதாயிருக்கிறது. இங்கு எந்த மனிதனுக்கும் யாதொரு கெடுதலும் செய்யப்படவில்லை. இங்கு சற்றும் உபயோகமில்லாத ஒரு மரம்தான் இருக்கிறது. அதற்கு துன்பம் ஏதும் விளைவிக்கவில்லை. கோபமாக செயல்படவில்லை. ஒரு காட்சிப்பொருளாக உபயோகித்து சொல்லப்பட்டதாகிய இந்த விளக்கத்தில் கர்த்தர், “இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது” என்று மாத்திரமே சொல்கிறார். உடனே அந்த மரம் பட்டுப்போயிற்று. சாதாரணமான ஒரு பொருளை உபயோகித்து நமது கர்த்தர் சகல காலங்களிலும் உள்ளவர்களுக்கு ஒரு பெரிய காரியத்தைக் கற்றுத் தந்திருக்கிறார். மரம் பட்டுப்போனது அநேக ஆத்துமாக்கள் உணர்வடைய ஏதுவாயிற்று. அப்படி இல்லையென்றால், கனி கொடாத ஒரு மரம் பட்டுப் போவதால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லையே. ஒரு பெரிய போதகர், மரத்தை அழிப்பதைக் காட்டிலும், சத்தியத்தை விளக்குவதற்கும், நற்காரியங்களை விதைப்பதற்கும் அதை ஒரு காட்சி-விளக்கமாக உபயோகிப்பார் அல்லவா. அற்புதமான ஒரு விளக்கத்தைத் தருவதற்கு செய்து காண்பித்த இந்த சம்பவத்தில் நமது கர்த்தர் மீதே குற்றம் கண்டுபிடிக்கத் துணிகிற அற்பமானவர்கள், இதையே வேறு ஏதாவதொரு போதகர் சொன்னால் ஆகா ஓஹோ எனப் புகழத் தயங்க மாட்டார்கள்.
பட்டுப்போன இந்த அத்திரமானது யூதர்களின் நிலமையை விளக்கும் ஒரு பொருத்தமான விசேஷித்த உருவகமாக காணப்பட்டது. அந்த தேசமானது தேவனுக்கு பெரிய காரியங்களை வாக்களித்திருந்தது. மற்ற தேசங்கள் இலைகளற்ற தேசங்களாக காணப்பட்டது. உண்மையான கடவுளோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்களாக அவர்கள் இருக்கையிலே, யூதர்களோ பலவிதங்களில் பக்திமார்க்கத்தில் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். வேதபாரகர், பரிசேயர், ஆசாரியர், ஜனத்தின் மூப்பர்கள் ஆகிய அனைவரும் நியாயப்பிரமாணத்தை ஆதரிப்பவர்களாகவும், ஒரே கடவுளை தாங்கள் ஆராதிப்பதில் பெருமை கொண்டவர்களாகவும், அவருடைய கட்டளைகளை விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பவர்களாகவும் பறைசாற்றிக் கொண்டனர். “தேவாலயம், தேவாலயம், தேவாலயம்” என்பதுதான் அவர்களது நிரந்தரமான நோக்கமாயிருந்தது. “நாங்கள் ஆபிரகாமின் சந்ததி” என்கிற வார்த்தை எப்போதும் அவர்கள் வாயிலிருந்தது. அவர்கள் இலைகளால் நிறைந்த அத்திமரம் போன்றவர்கள். ஆனால் அவர்களில் கனி இல்லை. ஏனென்றால் அவர்கள் பரிசுத்தமாக இல்லை, நீதியாக இல்லை, உண்மையாக இல்லை, தேவனிடம் விசுவாசமாக இல்லை, அயலானை நேசிக்கிறவர்களாக இல்லை. யூத ஆலயமானது ஆவிக்குரிய ஜீவனை ஆதாரமாகக் கொண்டிராமல் வெறும் கவர்ச்சிகரமான தோற்றத்தை மாத்திரம் கொண்டிருந்தது. நமது கர்த்தர் தேவாலயத்தை உற்றுப் பார்த்தார். ஜெபவீடு, கள்ளர் குகையாக மாறியிருப்பதைக் கண்டார். யூத ஆலயத்தை ஜீவனற்றதாகவும், கனியற்றதாகவும் இருக்கும்படியாக சபித்துப் போட்டார். அது அப்படியே ஆயிற்று. ஜெபஆலயங்கள் திறந்திருந்தது. ஆனால் அதன் போதனைகள் உயிரற்றவையாக ஆனது. பல ஆண்டுகளாக இஸ்ரவேலுக்கு எந்த செல்வாக்கும் இல்லாமற் போனது. பல நூற்றாண்டுகளாக யூத சந்ததி பட்டமரமாகவே இருந்தது. கிறிஸ்து வந்தபோதுகூட அங்கே பக்தியின் தோற்றம் மாத்திரமே காணப்பட்டது. அந்த பக்தி மார்க்கமானது பரிசுத்த நகரத்தை கூட காப்பாற்ற வல்லமையற்றதாக இருந்தது. கிறிஸ்து, யூதர்களின் மத அமைப்பை அழித்துப் போடவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டார். ரோமர்கள் வந்து மேற்கொள்ளுமட்டும் அவர்கள் அடிமரத்திலிருந்து பட்டுப்போய்க் கொண்டிருந்தார்கள். ரோம சேனையாகிய கோடாரியைக் கொண்டு கனியற்ற அதன் அடிமரத்தையும் அவர் நீக்கிப் போட்டார்.
தேசங்களுக்கு இது என்னவொரு அருமையான பாடம்! தேசங்கள் செழிப்பாகக் காணப்படலாம், பக்தி வழிகளை எல்லோரும் காண்கிறவிதத்தில் நடத்துகிறவர்களாக இருக்கலாம், இருந்தாலும் ஒரு தேசத்தை உண்மையாக உயர்த்தக்கூடிய நீதியான முறைகளில் தவறுகிறவர்களாக இருக்கக் கூடும். தேசங்கள் கலாச்சாரங்களினால் அலங்கரிக்கப்படிருக்கலாம். கலைகளிலும், வளர்ச்சியிலும், பக்திமார்க்கத்திலும் சிறந்து விளங்கினாலும், அதில் உள்ளான தேவபக்தியோ, நீதிக்கேற்ற கனிகளோ காணப்படாவிட்டால், அவை சிலகாலம் செழித்திருந்து, பிறகு பட்டுப்போய்விடும்.
சபைகளுக்கும் இது என்னவொரு அருமையான பாடம்! எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் பிரசித்தி பெற்ற அநேக சபைகள் இருந்தன. ஆனால் விசுவாசம், அன்பு, பரிசுத்தம் ஆகியவைகள் பாதுகாக்கப்படாததால், கனிகளற்ற விதத்தில் பக்திவேஷம் போடும்படியாக, பரிசுத்தஆவியானவர் அவைகளை விட்டுப் போய்விட்டார். சபை நிர்வாகத்தை மாத்திரம் கொண்டிருக்கிற அடிமரங்களாக அவ்வித சபைகள் நின்றுகொண்டிருக்கின்றன. அதன் கிளைகளும் அதிக தொலைவிற்கு நீடித்திருக்கிறது. ஆனால் அது செத்த மரமாயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அவைகள் இன்னும் அதிகமதிகமாக அழுகிப் போய்க்கொண்டேயிருக்கின்றன. சகோதரரே, இன்று நம் மத்தியிலுங்கூட அம்மாதிரியான சபைகள் இருக்கின்றன. இந்த சபை அப்படி ஆகாதிருப்பதாக! வசனத்தைக் கேட்பதற்கு அதிகமான ஜனங்கள் நம்மிடையே வரலாம். அநேகம் ஆண்களும் பெண்களும் மனமாற்றம் அடைந்ததாகக் கூறலாம். இருந்தாலும், மிக முக்கியமான தேவபக்தியானது அவர்கள் மத்தியில் இல்லையென்றால் சபைகளும் கூட்டங்களும் என்னத்திற்கு? நாம் அதிக பிரயோஜனமுள்ள ஊழியத்தை செய்து கொண்டிருக்கலாம், ஆனால் தேவனின் ஆவி இல்லையென்றால் இது என்னவாகும்? நமக்கு அதிக காணிக்கை வரலாம், வெளி ஊழியங்களை அதிகமாக நாம் ஒருவேளை செய்யலாம். ஆனால் ஜெபஆவி இல்லாமலும், விசுவாச ஆவி இல்லாமலும், கிருபையின் ஆவியும் பரிசுத்தமாகுதலும் இல்லாமல் என்ன பயன்? மிதமிஞ்சிய பக்தியை உடையவர்கள் போலத் தோற்றமளித்தாலும், உள்ளத்தில் பரிசுத்தமும், கிறிஸ்துவோடு ஐக்கியமும் இல்லாதவர்களாயிருந்து, அதனால் தேவனின் பார்வையில் ஆகாதவர்களாகக் காணப்படும்படியான மரமாக நாம் ஆகிவிடக் கூடாதேயென்று அஞ்சுகிறேன். அம்மரம் உண்மையில்லாமலும், கேலிக்கூத்தாகவும், மாயையாகவும் வானத்தை எட்டும் வகையில் இருப்பதைக்காட்டிலும், கோடாரியானது அம்மரத்தின் அடிச்சுவடுகூட இல்லாமல் வெட்டிவிடுவதே நல்லது.
இந்த வசனத்தின் மூலமாக நாம் கற்றுக் கொள்கிற பாடம் இது. ஆனால், அது தேசங்களைக் குறித்தும் சபையைக் குறித்தும் மாத்திரம்தான் கூறுகிறது என்று நீங்கள் எண்ணிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இந்த வசனம் கூறும் கருத்துக்கள் முழுவதையும் நாம் விவரமாகப் படித்து அறிந்து, நீங்கள் அந்த சிந்தனையை உங்கள் இருதயத்தில் கொண்டவர்களாக வீடுதிரும்ப வேண்டுமென்பதே எனது விருப்பம். இந்த காலை வேளையிலே கர்த்தர்தாமே உங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் தனிப்பட்ட விதத்தில் பேசுவாராக! நான் இந்த பிரசங்கத்தை தயாரித்த வேளையிலே என் இருதயத்தை அதிகமாகப் பரிசோதித்துக் கொண்டேன். கேட்கிறவர்களாகிய நீங்களும் அதேவிதமாக பரிசோதித்தறிய வேண்டுமென ஜெபிக்கிறேன். தேவபக்தியை பிறர் அறியும் வண்ணமாக வெளிவேஷமாகத் தரித்துக் கொண்டிருப்பவர்களாக மட்டும் காணப்பட்டு, அதற்கேற்ற கனிகள் இல்லாதவர்களாக நாம் இருந்துவிடாதபடிக்கு பயந்து நடக்க வேண்டும். பரிசுத்தவான்கள் என்றழைக்கப்படுகிறவர்கள் பரிசுத்தமாக நடந்து கொள்ளாவிட்டால், அது பரிசுத்த மனிதர்களுக்கே இழுக்காக இருக்குமானால் பரிசுத்தமே உருவான கடவுளுக்கு அதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழாதவர்கள் உண்மையில் பொய்யர்கள். தேவனுக்கும் மனிதர்களுக்கும் அருவருப்பானவர்கள். சத்தியத்தை அவமதிப்பவர்கள். மதத்திற்கு இழிவுண்டாக்குபவர்கள். பட்டுப்போகின்ற சாபத்தை அடையும்படிக்கு முன்னோக்கிச் செல்பவர்கள்.
இந்த செய்தியை மிகுந்த பயபக்தியோடும் வல்லமையோடும் நான் இன்று பிரசங்கிப்பதற்கு பரிசுத்தஆவியானவர்தாமே எனக்கு உதவி செய்வாராக!
இதில் நாம் கவனிக்கும் முதலாவது காரியம் – முதன்மையாயிருக்க விரும்புகிற, ஆனால் அதற்கேற்ற கனிகளில்லாதவர்கள் அநேகர் இவ்வுலகில் உண்டு. நாம் இரண்டாவதாக பார்க்கப் போவது – இவர்களை சோதித்து அறியப் போவது கிறிஸ்து ராஜா. மூன்றாவதாக நாம் காணவிருப்பது – அந்த சோதனையின் முடிவு மிகவும் பயங்கரமானதாயிருக்கும். பரிசுத்தஆவியானவரே, எங்களுக்கு உதவி செய்யும்!
1. முதன்மையாயிருக்க விரும்புகிற, ஆனால் அதற்கேற்ற கனிகள் இல்லாதவர்கள் அநேகர் இவ்வுலகில் உண்டு.
நாம் கூறுகின்றதான இப்படிப்பட்டவர்கள் ஒன்றும் பார்ப்பதற்கு அரிதானவர்கள் அல்ல. ஏராளமானவர்கள் இப்படி இருக்கிறார்கள். சக மனிதர்களைக் காட்டிலும் அவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாகக் காணப்படுவார்கள். நம்பிக்கையூட்டுபவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வெளிப்பிரகாரமான நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் இருக்கும். அவர்கள் கனிதரும் மரங்களைப் போலத் தோற்றமளிப்பார்கள். உயர்தரமான அநேகம் கனிகளை கூடை கூடையாக அவர்கள் விளைவிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அவர்கள் தங்கள் பேச்சினாலும், நடவடிக்கைகளினாலும் உங்களைக் கவர்ந்து கொள்ளுவார்கள். நாம் அவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு, நம்மை நாமே நொந்து கொள்ளுவோம். இந்தவிதமாக நம்மையே கடிந்து கொள்ளுவது நம்மை பாதிக்காது. ஆனால் மாய்மாலக்காரர்களைப் பார்த்து பொறாமை கொள்ளுவது பிற்காலங்களில் தீமையையே விளைவிக்கும். அவர்களுடைய மாய்மாலம் கண்டுபிடிக்கப்படும்போது, நாம் அவர்களை மாத்திரமல்ல பக்தியையே வெறுக்கக் கூடியவர்களாக ஆகிவிடுவோம். எல்லாம் உடையவர்கள் போலக் காணப்பட்டாலும், உண்மையில் எதுவுமில்லாதவர்களான மனிதர்களை நீங்கள் அறிவீர்களா? என்ன பரிதாபம்! நாம் அவர்களைப் போல இல்லையா? அந்த மனிதனைப் பாருங்கள் அவன் விசுவாசத்தில் பலமாக இருக்கிறான், துணிகரத்திலுந்தான். நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கிறான், ஆனால் அலட்சியமானவனாகவும் இருக்கிறான். அன்பின் ஆவியைக் கொண்டிருக்கிறான், அதோடு சத்தியத்தைக் குறித்த கவலையற்றிருக்கிறான். எவ்வளவு சரளமாகப் பேசுகிறான்! வேதாகமக் கருத்துகளை எவ்வளவு ஆழமாக யூகிக்கிறான். இருந்தாலும் அவன் மறுபிறப்பின் மூலமாக தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசித்தவன் அல்ல. கடவுளைக் குறித்து அவன் அறிந்திருக்கவில்லை. சுவிசேஷம் அவனுக்கு வார்த்தையாக மாத்திரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தஆவியின் கிரியையை அவன் அறியாதவனாயிருக்கிறான். அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? பாரம்பரிய முறைகளை ஆதரிக்கிறவர்கள் போலக் காணப்பட்டாலும், தங்கள் சொந்த நடவடிக்கைகளில் சமயப்பற்றில்லாமையை வெளிப்படுத்துகிறவர்களாக இருப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் அல்லவா? தங்கள் வாயினால் சொல்வது போல, தங்கள் வாழ்க்கையில் செயல்படாத ஆண்களையும் பெண்களையும் நாம் அறிவோமல்லவா? அப்படிப்பட்டவர்கள் இருப்பதை நாம் நிச்சயமாக அறிவோம். எல்லா திராட்சைத் தோட்டங்களிலும், பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில், இலைகளால் நிறைந்திருக்கிறதான அத்திமரங்கள் காணப்படுகிறது. இருந்தாலும் நமது கர்த்தருக்குக் கனிகளைத் தருகிறவைகளாக அவை இல்லை.
அப்படிப்பட்ட ஜனங்கள் காலத்துக்கு மாறானவர்களாக இருக்கிறார்கள். அது அத்திப்பழ காலமாயிருக்கவில்லை. இருந்தாலும் அந்த மரமானது இலைகளால் மூடப்பட்டிருந்தது. பழுத்த பழங்கள் இருப்பதை அறிவிக்கும் வண்ணமாகவே வழக்கமாக இலைகள் தோன்றும். நான் அடிக்கடி பார்த்திருக்கிறதான காட்சியை நீங்களும் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் – அத்திமரத்தில் முதலாவது கனிகள் ஏற்படும், அதன் பிற்பாடுதான் இலைகள் உருவாகும். வருடத்தின் ஆரம்பத்தில் கிளைகளின் நுனிகளில் பச்சையான முடிச்சு போன்றவைகள் உருவாவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகள் பெரிதாகி பச்சை நிற அத்திக்கனிகளாக மாறும். அதன் பிற்பாடுதான் இலைகள் உண்டாகும். மரம் முழுவதும் இலைகளால் நிறைந்து காணப்படும் வேளையிலே அத்தியானது நன்றாகப் பழுத்து, உண்ணக்கூடிய நிலையில் இருக்கும். அத்திமரம் முழுவதும் இலைகளால் நிறைந்து காணப்படுமானால் நீங்கள் அங்கு அத்திப்பழத்தை எதிர்பார்க்கலாம். அதில் இலைகள் இல்லையென்றால் அந்தப் பருவத்தில் அத்திப்பழம் விளையாது. இந்த அத்திமரமானது தன் பருவத்திற்கு முன்பாக அதிகமான இலைகளை உருவாக்கிற்று. ஆகவே தன் காலத்திலுள்ள மற்ற அத்திமரங்களைக் காட்டிலும் மேலானதாகத் தோன்றியது. உண்மைதான், ஆனால் அது இயற்கைக்கு மாறானது. அது உண்மையான வளர்ச்சியின் ஆரோக்கியமான விளைவல்ல. இப்படி இயற்கைக்கு மாறானவைகள் திராட்சைத் தோட்டங்களிலும் காடுகளிலும் ஏற்படுவதுண்டு. அவை போன்றவைகள் ஆவிக்குரிய உலகிலும் தோன்றுவதுண்டு. சில ஆண்களும் பெண்களும் தங்களைச் சுற்றிலும் இருப்பவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தவர்களாகக் காணப்படுவதுண்டு. தங்களுடைய விசேஷித்த குணங்களினால் நம்மை பிரமிக்கச் செய்வதுண்டு. சிறந்தவர்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தவர்களாகக் காணப்படுவார்கள். உயர்ந்தோரைக் காட்டிலும் மிக உயர்ந்தோராக காணப்படுவார்கள் – வெளிப்பிரகாரமாகவாவது. சுற்று சூழலினால் குளிர்ந்து போகாதவர்களாக மிகுந்த ஆர்வத்தோடிருப்பார்கள். அவர்களுடைய ஆத்துமாவானது தங்களுக்குள்ளாக ஒரு அணலை உருவாக்கி வைத்திருக்கும். பரிசுத்தவான்களின் பின்வாங்குதலோ, பாவிகளின் பொல்லாத தன்மையோ அவர்களுக்கு இடறலாக இராது. தங்களுடைய சூழ்நிலைகளால் பாதிப்படைந்துவிடாதபடிக்கு மிகுந்த மனோபலம் வாய்ந்தவர்கள். இந்த அத்திமரம் இலைகளால் நிறைந்து காணப்பட்டதைப் போல அவர்களும் நற்குணங்களால் நிறைந்து காணப்படுகின்ற உயர்ந்தவர்கள்.
அவர்கள் இயல்பாக அடையவேண்டிய வளர்ச்சியை மீறி வளர்ந்தவர்கள் என்பதை கவனியுங்கள். நான் முன்னரே சொன்னபடி, முதலாவது அத்திக்கனி, அதன் பிறகு அத்தி இலைகள் வருவதுதான் இயற்கை. ஆனால் சில பேர் தங்களிடம் கொஞ்சமாவது கனி உருவாவதற்கு முன்பாகவே பக்தியாய் இருப்பது போல பகிரங்கமாகக் காண்பித்துவிடுகிறார்கள் என்பதைப் பார்த்தோம். நமது இளம் பிராயத்தினர், கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது, முதலாவது, வீட்டிலே பரிசுத்தமாக நடந்து கொள்வதின் மூலமாகவும், வெளியிலே தேவபக்தியின் மூலமாகவும் தங்களுடைய விசுவாசத்தை நிருபித்து, அதன் பின்னர் முன்னே வந்து கர்த்தராகிய கிறிஸ்துவில் தாங்கள் விசுவாசம் வைத்திருப்பதை பகிரங்கமாக அறிக்கையிடுகிறவர்களாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். முதலாவது பரிசுத்த மனிதனாகவும், பின்னர் பகிரங்கமாக அறிவிக்கிறவனாகவும் நடந்து கொள்வது தெளிவாகவும் இயற்கையாகவும் இருக்கும். முதலாவது விளக்கு ஏற்றப்பட வேண்டும், அடுத்ததாக அது பிரகாசிக்க வேண்டும். முதலாவது மனந்திரும்புதலும் விசுவாசமும் அடைந்தபின்னர் அடுத்ததாக தனது மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் வேதபூர்வமாக அறிக்கையிடும் விதமாக கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெறவேண்டும். ஆனால் இந்த ஜனங்களோ இருதயத்தை ஆராய்வது அவசியமற்றது போல எண்ணுகிறார்கள் – இந்த காரியத்தின் மிகவும் அத்தியாவசியமான பகுதியை அவர்கள் ஒதுக்கித் தள்ளத் துணிகிறார்கள். அவர்கள் எழுப்புதல் கூட்டங்களில் பங்குபெற்றுவிட்டு, தங்களுடைய இருதயமானது புதுப்பிக்கப்படாமலேயே, விசுவாசத்தையோ மனந்திரும்புதலையோ அடையாமலேயே, தங்களை இரட்சிக்கப்பட்டவர்களாக அறிவித்துக் கொள்ளுகிறார்கள். உணர்ச்சிவசப்படுகிற நிலையை வைத்து உறுதிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். தீர்மானம் மட்டுந்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தோடு பூரணமடைந்து விட்டோம் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட மாற்றத்தை அடைந்த உடனேயே உபதேசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தான் அடைந்திருக்கிற புதிய நிலையை பரிசோதனைக்கோ ஆய்வுக்கோ உட்படுத்தாமல், தன்னை மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகக் காண்பிக்கத் தொடங்கிவிடுகிறான். மனமாற்றத்தினால் விரைவான வளர்ச்சி ஏற்படக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை. உண்மையாகவே அப்படி இருக்குமானால் அதை நான் மிகவும் போற்றுவேன். ஆனால் அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் கனிகளைப் பார்ப்பதற்கு முன்பாக நான் தீர்மானித்து விடமாட்டேன். அவனுடைய குணாதிசயத்தில் ஏற்பட்ட மாற்றம் தெளிவாகவும் உண்மையாகவும் தோன்றுமானால், எவ்வளவு விரைவாக அந்த செயல் அவனில் நடைபெற்றது என்பதைக் குறித்து நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த மாற்றத்தை நாம் காண வேண்டும். மாவானது பதமடைவதற்கு குறிப்பிட்ட கால அவகாசமும் சற்று வெப்பமும் அவசியம். நண்பர்களே, நீங்கள் ஒருபோதும் கனிகொடுப்பதை விட்டுவிட்டு, நேரிடையாக இலைகளை உருவாக்க வந்துவிடாதீர்கள். இந்த கட்டடத் தொழிலாளி கூறுவதைப் போல இருக்காதீர்கள்: “கடின உழைப்பையும், மிகுந்த பொருட்களையும் ஏன் அஸ்திபாரம் கட்டுவதற்கு செலவிட வேண்டும்? அதுதான் வெளியில் தெரியவே போவதில்லையே. நான் சிறிது நேரத்தில் ஒரு வீட்டையே கட்டி முடித்து விடுவேன். நான்கு சுவர்களும், அதன் கூரையும் கட்டுவதற்கு எவ்வளவு காலம் ஆகப்போகிறது?”. உண்மைதான், ஆனால் அத்தகைய வீடு எவ்வளவு நாளைக்கு நிற்கும்? அஸ்திபாரம் இல்லாமல் வீடு கட்டுவது சரிதானா? அஸ்திபாரத்தை விட்டுவிட்டீர்களானால், முழு வீட்டையுமே கட்டுவதை விட்டுவிடலாமே! மனிதர்கள் மதவெறியர்களாகவோ அல்லது கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவோ இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தேவபக்தியானது மக்களிடையே காளானைப் போல ஒரு இரவிலே தோன்றி மறு இரவிலே மடிந்து போகிற நிலை காணப்படவில்லையா?
பாவத்தைக் குறித்து சரிவர உணர்த்தாவிட்டால் அது அழிவை ஏற்படுத்திவிடாதா? மனந்திரும்புதல் மேம்பூச்சாகவும், விசுவாசம் போலியாகவும், மறுபிறப்பு பொய்யானதாகவும், தேவபக்தி நடிப்பாகவும் இருக்குமானால் அது அழிவையல்லவா ஏற்படுத்தும்! பிரியமானவர்களே, இது ஒருபோதும் சரியானதாக இராது. நாம் இலைகளை காண்பிக்கும் முன்னதாக அத்திப்பழங்களை உருவாக்க வேண்டும். பகிரங்க அறிவிப்பிற்கு முன்னால், உள்ளான மாற்றங்கள் தோன்ற வேண்டும். ஞானஸ்நானத்திற்கு முன்னதாக விசுவாசம். சபையோடு ஐக்கியப்படுவதற்கு முன்பாக கிறிஸ்துவோடு ஐக்கியம். இயற்கையின் வழிமுறைகளை மீறிக் கொண்டு நீங்கள் தாண்டிச் செல்ல முடியாது. கிருபையின் செயல்பாட்டை நீங்கள் தள்ளிவிட முடியாது. அப்படி செய்தீர்களானால் கனிகளற்ற உங்களது இலைகள் குணப்படுத்த முடியாதபடி சாபமாகிப்போகும்.
இந்தவிதமான மக்கள் பொதுவாக மற்றவர்களின் கவனத்தைக் கவருவார்கள். அந்த அத்திமரத்தை நமது ஆண்டவர் “தூரத்திலிருந்தே” பார்த்தார் என்று மாற்கு குறிப்பிடுகிறார். மற்ற மரங்கள் எல்லாம் இலைகள் இல்லாமல் இருந்தது. ஆகவே அவர் எருசலேமுக்கு சமீபமாய் மலையில் ஏறி வந்தபோது இந்த ஒரு மரத்தை வெகுதொலைவிலிருந்தே பார்த்தார். அத்திமரமானது முழுவதும் இலைகளால் நிறைந்து காணப்படுகின்ற வேளையிலே அது தொலைவிலிருந்தே கண்டுகொள்ளக்கூடிய வகையில் மிகவும் செழுமையாகத் தோற்றமளிக்கும். பெத்தானியாவிலிருந்து நகரத்துக்குப் போகின்ற வழியில் அது இருந்தது. வழிப்போக்கர்கள் யாவரும் அதைக் காணும்படியாகவும், அது மாத்திரம் அந்தப் பருவத்தில் இலைகளுடன் செழிப்பாகக் காணப்படுவதைக் குறித்து ஆச்சரியப்படும்விதமாகவும் அது இருந்தது. பொய்யான பக்தியைக் கொண்டிருக்கிற மனிதர்கள் அநேகமாகத் தனித்து தென்படுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அடக்கத்தோடோ அமைதியாகவோ நடந்து கொள்கிற பண்பு இருக்காது. தங்களை முதன்மையாகக் காட்ட விரும்புவார்கள். மேலான ஊழியத்தை நாடுவார்கள். தங்களை தலைமைப்பதவிக்கு உயர்த்திக் கொள்ள முயற்சிப்பார்கள். அவர்கள் கடவுளோடு தனித்து நடந்திருக்க மாட்டார்கள். தனிப்பட்ட பக்தியில் கவனம் செலுத்த மாட்டார்கள். மனிதர்கள் மத்தியில் காணப்படுவதையே விரும்புவார்கள். அது அவர்களுக்கு பலவீனமும் கண்ணியுமாயிருக்கிறது. பிரபலமாயிருப்பதால் வருகின்ற சிறிய கஷ்டநஷ்டங்களை ஏற்றுக் கொண்டாவது அதை அடைவதற்கு பேராசைப்படுவார்கள். அதனால் அவர்கள் இன்னும் அதிகமான கவனத்தை ஈர்ப்பார்கள். இதிலுள்ள தீமை இப்படியாயிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் ஆவிக்குரியவிதத்தில் தவறும்போது அது பலபேர் அறியக்கூடியதாகிவிடுகிறது. அவர்களுடைய பாவமானது, அவர்கள் ஊழியம் செய்வதற்கு ஒப்புக்கொண்ட கர்த்தருடைய நாமத்திற்கு மிகுந்த அவமரியாதையை உண்டாக்குகிறது. கனிகளில்லாமல் ஆலயத்திற்குப் போகிற பொதுவழியில் இருப்பதைக் காட்டிலும், காட்டின் ஒரு மூலையில் மறைந்து இருப்பது மேலானது.
இந்தவிதமான மனிதர்கள் பிறர் கவனத்தை ஈர்ப்பது மாத்திரமல்லாமல், நல்லோர்களின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மற்ற மரங்களைக் காட்டிலும் முன்னதாகவே கனியைக் கொடுக்கின்ற மரத்தை நோக்கி நாம் போவதைக் குறித்து யார் குற்றம் சொல்ல முடியும்? நல்லவர்களாகத் தென்படுகிறவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ள விரும்புவது சரியானதுதான் இல்லையா? நமது இரட்சகரும் அவருடைய சீஷர்களும் இலைகளுள்ள அந்த அத்திமரத்தை நோக்கிப் போகிறார்கள். அந்த மரமானது அவர்கள் கவனத்தைக் கவர்ந்தது மாத்திரமல்ல, அவர்களைத் தன்னருகே வரவழைத்தது. கர்த்தருக்குள் சகோதரனாகவும், மற்றவர்களைக் காட்டிலும் பக்தியுள்ளவர்களாயும், பலரைக் காட்டிலும் கடவுளுக்கு பயந்தவராகவும் தோன்றுகிற ஒருவருடைய வசீகரிக்கும் குணாதிசயங்களால் நாம் கவரப்படுவோமல்லவா? யெகூ போல, “நீ என்னோடேகூட வந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்தி வைராக்கியத்தைப் பார்” என்று ஒருவன் கூறினால் நாம் சந்தோஷத்தோடே அவனுடைய இரதத்தில் ஏறிவிடுவோமல்லவா? அவன் பக்தியுள்ளவனாகக் காணப்பட்டான், தாராளமனப்பான்மையும் தாழ்மையும் கொண்டவனாகத் தோன்றினான். உபயோகமானவனாகவும் இருந்தான். அவனைப் பார்த்து, அவனோடு சகவாசம் வைத்துக் கொள்வது நல்லது என ஆசைப்பட்டோம். புதிய விசுவாசிகளும், தேவனைத் தேடுகிறவர்களும் இப்படித்தான் செய்வார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு ஆபத்து வரும்போது அது மிகவும் சோகமாகத்தான் போய்விடுகிறது.
யாராவது முதன்மையானவர்களாகத் தென்பட்டு, தைரியத்தோடு பகிரங்கமாக செயல்படுவதைக் காணும்போது அவர்களைக் குறித்து நாம் என்ன நினைக்க வேண்டும் எனக் கேட்டால், அவர்களை நியாயந்தீர்க்காதிருங்கள் என்று கூறுவேன். யாரையுமே நம்பக்கூடாதென்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய கர்த்தர் தூரத்திலேயே நின்று, “அந்த மரம் பிரயோஜனமற்ற ஒன்று” என்று கூறிவிடவில்லை. அவர் தமது சீஷர்களோடு அதனருகே சென்று அதை கவனமாக ஆராய்ந்து பார்த்தார். ஒருவேளை அப்படி முதன்மையாகத் தென்படுகிறவர்கள் தெய்வீகக் கிருபையின் அற்புதமாயிருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டுமென நம்பிக்கை வைத்து அவர்களுக்காக நாம் ஜெபிப்போம். கர்த்தரும் அவரின் அன்பும் அவர்களுக்குள் பெருகுவதாக! குளிர்காலத்திலும் கனிகொடுக்கக் கூடிய தமது அத்திமரங்களை கடவுள் வைத்திருக்கிறார். மற்றவர்களின் அன்பு தணிந்து போகும் வேளையிலும், நற்செயல்களை செய்யக்கூடிய தமது பரிசுத்தவான்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். கர்த்தர் தமது சத்தியத்திற்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கும்படியாக சிலரை எழுப்புகிறார். யுத்தத்தில் முன்நிற்கிற பலவான்கள் இவர்கள். வாலிப வயதினருக்கு நல்ல முதிர்ச்சியைத் தர கர்த்தரால் கூடும். புது விசுவாசிகளை அவர் உபயோகிக்கவும் கூடும். “சிலபேர் பிறக்கும்போதே தாடியுடன் பிறக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி கூறுவதுண்டு. கர்த்தர் சில பேருக்கு அதிகமான கிருபைகளை வழங்கி, அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி வேகமாகவும் உறுதியாகவும் ஆகும்படியாக செய்யலாம். ஆகையால் முதன்மையாயிருக்கும் சகோதரர்களைக் குறித்து சந்தேகப்பட நமக்கு உரிமையில்லாதபடிக்கு கடவுள் இப்படியாக அடிக்கடி செய்திருக்கிறார். எனவே இப்படியான கிருபைகளை ஒருவேளை தேவன் அவர்களுக்கு வழங்கியிருக்கலாம் என்றுதான் நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். அவர்களிடத்தில் கிருபையின் அடையாளங்களையோ, விசுவாசத்தின் அத்தாட்சியையோ நாம் மிகுந்த மனவருத்தத்தோடே காண நேரிடாதவரைக்கும், கடவுளின் கிருபை வரங்களில் மகிழ்ச்சி கொண்டவர்களாக, நன்மையே நடக்கும் என்கிற உறுதியுடையவர்களாக சந்தோஷத்தோடே இருப்போமாக. நாம் சந்தேகப்பிராணிகளாக இருப்போமாகில் நமது சந்தேகத்தை நம்மைக் குறித்தே திருப்புவோமாக. நம்மை நாமே சந்தேகித்துக் கொள்வதாவது ஆரேக்கியமான நிலைக்கு வழிவகுக்கும். மற்றவர்களை சந்தேகிப்பது கொடூரமானது. நாம் நியாயாதிபதிகள் அல்ல. அப்படியே நினைத்துக் கொண்டாலும், அதை நமது சொந்த நியாயஸ்தலத்திற்குள் வைத்துக் கொண்டவர்களாக, நமது நியாயசனத்தில் அமர்ந்து, நமது சொந்த ராஜ்ஜியமாகிய நம் இருதயத்திற்குள்ளாகவே நியாயந்தீர்த்துக் கொள்வதே நல்லது.
முதன்மையாக இருப்பவர்கள் போல காணப்படுகிறவர்கள் தாங்கள் காட்சியளிப்பது போலவே உண்மையிலும் இருப்பார்களானால் அது மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும். அன்று காலையிலே அந்த அத்திமரத்திலே அத்திப்பழங்கள் இருந்திருக்குமானால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அந்த பசுமையான பழங்கள் அவருக்கு ருசிக்கக் கிடைத்திருக்குமானால் அது நமது இரட்சகருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும். முதன்மையான நிலையில் இருப்பவர்களை கர்த்தர் பரிசுத்தத்திலும் முதன்மையை அடையச் செய்யும்போது, அப்படிப்பட்டவர்கள் சபைக்கும், குடும்பத்திற்கும், அயலகத்தாருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்படியாகச் செய்வார். அவர்கள் முழு உலகத்திற்கும்கூட ஆசீர்வாதமாகக் காணப்படுவார்கள். கர்த்தர் நட்ட செடிகள் யாவற்றிற்கும் அவர் தமது கரத்தினால் தண்ணீர் ஊற்ற வேண்டுமென நாம் ஜெபிக்க வேண்டும். வேறுவிதமாக சொல்வோமானால், தமது வலக்கரமாக செயல்படும்படிக்கு, தாம் பலப்படுத்தியதான அந்த மனிதர்களை, அவர்தாமே தமது கிருபையினால் தாங்க வேண்டுமென நாம் ஜெபிக்க வேண்டும்.
ஆனால் இன்றைக்கு நாம் இந்த வசனத்தை நம் இருதயத்தில் சிந்தித்தவர்களாக வீட்டுக்குச் செல்லும்போது, மற்ற எல்லாரையும் குறித்து இவ்விதமாகவே எண்ணிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம்மில் அநேகர் பல ஆண்டுகளாகவே, வெளிப்படையான தோற்றத்திலும் பக்திமார்க்கத்திலும் இந்த அத்திமரத்தைப் போன்றே கவர்ச்சிகரமான நிலையில் இருக்கிறவர்கள். அதைப் பொறுத்தமட்டில் வெட்கப்பட ஒன்றுமில்லை. இருந்தாலும் நம்மைக் குறித்துதான் இந்த உவமையானது பேசுகிறது என்பது நிச்சயம். ஏனென்றால் நாமும் நமது நிலையை பகிரங்கமாக அறிவிக்கிறவர்களாகவும், எல்லோரும் “தூரத்திலிருந்தே” பார்க்கக் கூடியதான பாதையில் இருப்பவர்களாகவும் காணப்படுகிறோம். நம்மில் அநேகர் தைரியமாக பகிரங்க அறிக்கை செய்கிறவர்களாகவும் இருக்கிறோம். மனிதர்கள் முன்பாகவும் தூதர்களுக்கு முன்பாகவும் நமது அறிக்கையை திரும்பத் திரும்ப சொல்வதற்கு நாம் வெட்கப்பட மாட்டோம். ஆகவேதான் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது: நாம் அதில் உண்மையாக இருக்கிறோமா? நம்மிடமே காணப்படாத ஒரு விசுவாசத்திற்காக நாம் வாதாடிக் கொண்டிருக்கிறவர்களாக இருந்தோமானால் என்ன பயன்? நம்மில் அன்பின் ஜீவன் இல்லாமலிருந்து “சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும்” இருந்தோமானால் அதனால் என்ன நன்மை? கிரியை எதுவும் இல்லாமல் வெறுமனே பேசுகிறவர்களாகக் காணப்பட்டோமானால்? வேதாகமக் கொள்கைகளை பேசுகிறவர்களாக இருந்து அதைக் கடைப்பிடிக்கிறவர்களாக் காணப்படாமல் இருந்தோமானால்? பரிசுத்தம் இல்லாதவர்களாக இருந்தோமானால்? அப்படியானால் நாம் ஒருபோதும் கர்த்தரை தரிசிக்க மாட்டோம். இந்த அற்புத-உவமையில் என்ன பயங்கரமான கருத்து அடங்கி இருந்தாலும், அது நம்மில் அநேகரோடே சம்பந்தப்படுவதாகத்தான் இருக்கிறது. பிரசங்கியான எனக்கு அது எவ்வளவு சம்பந்தமுடையதாயிருக்கிறதென்பதை நான் உணருகிறேன். அதே ஆவியினால் நான் மேலும் சிந்திக்கிறேன்: இந்த சபையின் ஒவ்வொரு கண்காணியும், ஒவ்வொரு மூப்பரும், ஒவ்வொரு அங்கத்தினரும், உங்கள் மத்தியிலிருக்கிற ஒவ்வொரு ஊழியரும் தங்கள் இருதயத்தை பலமாக ஆராய்ந்து பார்ப்பீர்களா என்று மிகுந்த கவலையுடன் எதிர்பார்க்கிறேன். இன்று காலையிலே இவ்விடத்திலே வந்திருக்கிற கிறிஸ்துவின் ஒவ்வொரு ஊழியரும் தங்கள் இருதயத்தை ஆராய்ந்து, “ஆம் கர்த்தாவே, நானும் இந்த அத்திமரத்தைப் போலவே முதன்மையான நிலையிலும் பகிரங்க அறிவிப்பிலும் ஈடுபட்டிருக்கிறேன். இந்த மரத்தைப் போல கனிகள் இல்லாத நிலையில் நான் காணப்படாதபடிக்கு எனக்கு அருள் செய்தருளும்” என்று வேண்டிக் கொள்வீர்களாக.
2. இவைகள் ராஜாவாகிய இயேசுவால் பரிசோதிக்கப்படும்.
அவர், அவர்களின் அருகிலே வருவார். அவர்களின் அருகிலே வரும்போது அவர்களில் ஏதேனும் கனி அகப்படுமோ என்று பார்ப்பார். முதலாம் ஆதாம் இலைகளுக்காக அத்திமரத்தை நாடி வந்தார். ஆனால் இரண்டாம் ஆதாமோ கனிகளுக்காக வருகிறார். அவர் நமது குணாதிசயங்களைத் துருவித்துருவி ஆராய்கிறார். உண்மையான விசுவாசம் காணப்படுகிறதா, உண்மையான அன்பு இருக்கிறதா, ஜீவனுள்ள நம்பிக்கை, ஆவியின் கனியாகிய சந்தோஷம் காணப்படுகிறதா? சுயவெறுப்பு, இடைவிடாத ஜெபம், கடவுளோடு இணைந்து நடத்தல், பரிசுத்தஆவி உள்ளத்தில் வாசமாயிருப்பது முதலானவைகள் நம்மிடம் காணப்படுகிறதா என்று அவர் பரிசோதிக்கிறார். இவைகளில் எதுவும் காணப்படாமல், நாம் ஆலயத்திற்குப் போவதாலோ, சபைக்கு போவதாலோ, ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதாலோ, திருவிருந்தில் கலந்து கொள்வதாலோ, பிரசங்கம் கேட்பதாலோ, வேதவாசிப்புகளினாலோ அவர் திருப்தியடைந்துவிடப் போவதில்லை. ஏனென்றால் இவைகள் யாவும் வெறும் இலைகளால் சூழப்பட்டிருப்பதற்கு சமம். ஆவியின் கனிகள் நம்மில் காணப்படாவிட்டால், அவர் நம்மைக் குறித்து திருப்தியடையப் போவதில்லை. அவருடைய பரிசோதனை நிராகரிக்க முடியாத உயரிய அளவில் இருக்கும். உங்களுடைய வார்த்தைகளையோ, உங்களுடைய தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ இயேசுக்கிறிஸ்து கவனிப்பதில்லை என்பதை அறியுங்கள். உங்களுடைய உண்மையான மனநிலையையும், உள்ளான விசுவாசத்தையும், கடவுளின் ராஜ்ஜியத்திற்கேற்ற கனிகளை உருவாக்கும்படியாக பரிசுத்தஆவியானவரை நீங்கள் சார்ந்து இருப்பதையுமே அவர் நோக்குகிறார்.
கனிகளை எதிர்பார்ப்பதற்கு நமது கர்த்தருக்கு உரிமை இருக்கிறது. அவர் அந்த அத்தி மரத்தினிடம் சென்ற போது அதனிடமிருந்து கனிகளை எதிர்பார்ப்பதற்கு அவருக்குக் காரணம் இருந்தது. ஏனென்றால் இயற்கைவிதியின்படி அத்திமரத்தில் இலைகள் உருவாவதற்கு முன்பாக கனிகள் தோன்றியிருக்க வேண்டும். இலைகள் வந்துவிட்டதானால் அதில் நிச்சயம் கனிகள் இருக்கும். அது அத்திப்பழக் காலமில்லை என்பது உண்மைதான். அது அத்திப்பழக் காலமில்லையென்றால் இலை உருவாவதற்கும் அது காலமல்ல. ஏனென்றால் அத்திப்பழம்தான் முதலில் உருவாக வேண்டும். இந்த மரமோ, பழங்கள் இருப்பதற்கு அடையாளமான ஏராளமான இலைகளை தன்னில் கொண்டிருப்பதின் மூலமாக தன்னிடம் அத்திப்பழங்களும் இருப்பதுபோல் விளம்பரப்படுத்தியது. காலம் எவ்வளவு மோசமானதாக போனாலும், நாம் காலத்தையல்ல, என்றும் மாறாத ஒரே சத்தியத்தையே பின்பற்றுவோம் என அறிவிக்கிறவர்களாக இருக்கிறோம். மனிதர்களிடையே நாம் மீட்கப்பட்டவர்களாகவும், கோணலும் மாறுபாடுமான இந்த சந்ததியினின்று மீட்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் கிறிஸ்தவர்களாகிய நாம் அறிவிக்கிறோம். உலகத்தையும் அதன் மாறுதல்களையும் தனக்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற மனிதர்களிடமிருந்து கர்த்தர் கனிகளை எதிர்பார்க்க மாட்டார். தனது வார்த்தைகளை விசுவாசிக்கிற விசுவாசிகளிடமிருந்து கனிகளை எதிர்பார்ப்பார். பிரசங்கியிடமிருந்தும், ஞாயிறு பாடசாலை ஆசிரியரிடமிருந்தும், சபை ஊழியர்களிடமிருந்தும், வேதவகுப்புகளை நடத்துகிற சகோதரிகளிடமிருந்தும், தன்னைச் சுற்றிலும் அமர்ந்திருக்கிற இளைஞர்களுக்கு சுவிசேஷ வழிகாட்டியாக இருக்கிற சகோதரனிடமிருந்தும் இயேசுக்கிறிஸ்து கனிகளை எதிர்பார்ப்பார். சுவிசேஷ ஒழுங்கிற்கு தம்மை ஒப்புவித்திருக்கிற அனைவரிடமிருந்தும் அவர் கனிகளை எதிர்பார்ப்பார். இலைகளால் சூழப்பட்டிருக்கிற அத்திமரத்திடமிருந்து அவர் கனிகளை எதிர்பார்த்தது போலவே, அவரைப் பின்பற்றுகிறவர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்கிற அனைவரிடமும் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார்க்க அவருக்கு உரிமை இருக்கிறது. ஓ! இந்த விஷயம் ஒரு பிரசங்கியை எவ்வளவாக அசைத்து நடுங்கச் செய்ய வேண்டும்! அதேவிதமாக அது உங்கள் ஒவ்வொருவரிலும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமல்லவா?
கர்த்தர் கனிகளையே ஆவலுடன் தேடுகிறார். இரட்சகர் மரத்தினருகில் வந்தபோது, இலைகளின் மீது அவருக்கு ஆர்வம் இல்லை. ஏனென்றால் அவர் பசியாக இருந்ததாக நாம் வாசிக்கிறோம். மனிதருடைய பசியை அத்திமரத்து இலைகளால் போக்க முடியாது. ஒன்றிரண்டு அத்திப்பழங்களை சாப்பிட ஆவலாயிருந்தார். நம்மிடமிருந்தும் அவர் கனிகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். நமது பரிசுத்தத்தின் மீது அவர் பசியாயிருக்கிறார். அவர் நம்மில் சந்தோஷங் கொள்வதால் நமது மகிழ்ச்சி பரிபூரணமாகும்படிக்கு அவர் ஆவலோடிருக்கிறார். அவர் இந்த சபையிலுள்ள ஒவ்வொருவரிடமும் வருகிறார். அதிலும் முக்கியமாக சபையின் தலைவர்களிடம் வருகிறார். தமது ஆத்துமாவுக்குப் பிரியமான கனிகள் ஏதேனும் உங்களிடத்தில் இருக்கிறதா என்று பார்க்கிறார். அவரை நாம் நேசிக்கிறோமா என்று பார்ப்பார். சகமனிதர்களிடம் நமக்கு அன்பு இருக்கிறதா என்று பார்ப்பார். வெளிப்படுத்தப்பட்டிருப்பவைகளில் உறுதியான விசுவாசம், ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாகப் போராடுதல், ஜெபத்தில் இடைவிடாமல் வேண்டுதல், நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியாயும் மிகவும் கவனத்தோடு வாழுதல் போன்ற காரியங்கள் நம்மில் இருக்கிறதா என்று பார்ப்பார். கடவுளின் கட்டளைகளுக்கும் பரிசுத்தஆவியானவரின் ஒப்புதலுக்கும் ஏற்ற விதத்தில் நமது செயல்பாடுகள் இருக்கிறதாவென எதிர்பார்ப்பார். இவைகளை அவர் நம்மில் காணாவிட்டால், அவருடைய பங்கை அவர் பெறவில்லை என்றுதான் அர்த்தம். தமது ஜனங்களை பரிசுத்தமானவர்களாக மாற்றுவதற்கேயல்லாமல் வேறு எதற்காக அவர் மரித்தார்? தமக்கென நற்காரியங்களை செய்வதற்கு வைராக்கியமுள்ள ஒரு ஜனத்தை சுத்திகரிப்பதற்கேயல்லாமல் வேறு எதற்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்? இரத்தத்தின் பெருந்துளிகளான வியர்வையும், ஐந்து காயங்களும், மரணவேதனையும் கிரயமாக செலுத்தியது நம்மை தமக்கென சொந்தமாக்கிக் கொள்வதற்கேயல்லாமல் வேறெதற்காக? நாம் அவரை மகிமைப்படுத்தவில்லையானால் அவர் பாடுபட்டு அடைந்தவைகளை நாம் பறித்துக் கொள்வதைப் போன்றது. நமது பரிசுத்தமும் வைராக்கியமுமான தேவபக்தி நிறைந்த வாழ்க்கையின் மூலமாக அவரது புகழை அறிவிக்கவில்லையானால் பரிசுத்தஆவியானவரை துக்கப்படுத்துகிறவர்களாய் இருப்போம்.
இதை கவனியுங்கள். கிறிஸ்து ஒரு ஆத்துமாவிடம் வரும்போது, அவர் அதை மிகுந்த கவனத்துடன் பரிசோதிக்கிறார். அவர் தம்மை பரிகாசம் செய்ய விடமாட்டார். அவரை ஏமாற்ற முடியாது. அத்திமரமாக இருந்துகொண்டு இலைகளை மாத்திரம் கொண்டிருப்பது இயற்கைக்கு விரோதமான தவறுதல் என நான் நினைத்தேன். ஆனால் நமது கர்த்தர் அப்படி ஒருபோதும் தவறாக நினைத்துவிட மாட்டார். அப்பொழுதுதான் முளைத்துக் கொண்டிருக்கிற இளம் அத்திமரத்தைகூட அவர் கவனியாமல் இருக்க மாட்டார். அது எந்த வயதில் இருந்தாலும் ஆவியின் கனி அதில் இருக்கிறதா என்பதை அவர் அறிவார். சரளமாக பேசுவதையெல்லாம் இருதயத்திலிருந்து வருவதாக அவர் தவறாக எண்ணிவிட மாட்டார். வெறும் உணர்ச்சிவசப்படுதலை உண்மையான நற்பண்பென நினைத்துவிட மாட்டார். பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து உங்களுடைய உண்மை நிலையை பரிசோதிக்க வருகையிலே நீங்கள் சரியான நபரிடம்தான் பரிசோதனைக்கு உட்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சகமனிதர்கள் உங்களைக் குறித்து அவசரமாக தீர்ப்பு சொல்லிவிடுவார்கள். அவர்கள் குற்றம் கண்டுபிடிப்பவர்களாகவோ அல்லது பாரபட்சம் காட்டுபவர்களாகவோ இருப்பார்கள். நாம் என்ன நிலமையில் இருக்கிறோம் என்பதை அவர் மிகச் சரியாக அறிவார். அவர் வெளிப்படையான தோற்றத்தின்படியாக அல்ல, உண்மையின்படியே நியாயந்தீர்ப்பார். ஓ! இன்றைக்கு பரலோகத்தை நோக்கிய நமது விண்ணப்பம் இப்படியாக இருப்பதாக: “ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, வாரும், வந்து உம்முடைய கண்களால் என்னைப் பரிசோதித்தருளும். நான் உமக்கேற்கும் விதத்தில் வாழ்கிறேனா இல்லையா என்பதை ஆராய்ந்தருளும்! என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காகவும், கிருபையால் போஷிக்கப்படும்படிக்கும், நீர் பார்க்கிறவண்ணமாகவே நானும் என்னைக் காண கிருபை செய்யும். நான் அறிக்கையிடுகிறவிதமாக நடந்து கொள்ளச் செய்யும். நான் அப்படி இல்லையென்றால், எனது பாவநிலையை எனக்கு உணர்த்தி, என்னுடைய ஆத்துமாவில் கிரியை செய்யத் தொடங்கும். நான் உம்முடையவனாக இருப்பேனாகில், உமது பார்வையில் சரியானவனாகக் காணப்படுவேனாகில், அன்போடு உறுதிப்படுத்துகிற உம்முடைய வார்த்தையை அனுப்பி எனது பயத்தை மீண்டுமாக நீக்கிப் போடும். நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன் என்று நான் மிகவும் களிகூருவேன்.”
3. முதன்மையாகத் தென்பட்டும் கனியற்றவர்களாயிருக்கிறவர்களிடத்தில் கிறிஸ்து வருவதின் விளைவு மிகவும் பயங்கரமானதாக இருக்கும்.
பரிசோதிக்கிறவர் கனிகளை எதிர்பார்த்து வந்தபோது இலைகளையன்றி வேறொன்றையும் காணவில்லை. இலைகளையன்றி வேறொன்றும் இல்லையென்றால், பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அர்த்தம். மிகவும் கடூரமாக சொல்வது போல இருக்கிறதா? நான் விசுவாசி என்று சொல்லிக் கொண்டு, என்னிடத்தில் விசுவாசமே இல்லையென்றால் அது பொய்யில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? நான் மனந்திரும்பிவிட்டதாக கூறிக் கொண்டிருந்தாலும், மனந்திரும்பாதவனாக இருந்தால் நான் கூறுவது பொய்தானே? கடவுளின் ஜனங்களோடு நான் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தும் இருதயத்தில் கடவுள் பயமற்றவனாக இருந்தால் அது பொய்தானே? நான் கர்த்தருடைய பந்தியில் வந்து அப்பத்திலும் பாத்திரத்திலும் பங்கு பெற்றாலும், அவருடைய சரீரத்தைக் குறித்து ஒருபோதும் நிதானித்து அறியாதவனாக இருந்தால் அது உண்மைக்குப் புறம்பானதுதானே? நான் எனது சீரழிந்துபோன நிலையை ஒருபோதும் உணராமலும், ஒருபோதும் உறுதியான அழைப்பைப் பெறாமலும், கடவுளால் நான் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேனா என்பதை ஒருபோதும் அறியாமலும், ஒருபோதும் மீட்பின் இரத்தத்தை சார்ந்திராமலும், பரிசுத்தஆவியினால் ஒருபோதும் புதுப்பிக்கப்படாமலும் இருந்தேனாகில், கிருபையின் கோட்பாடுகளைக் குறித்து நான் வாதிடுவது பொய் அல்லவா? இலைகளையன்றி ஒன்றுமில்லையென்றால் பொய்யைத் தவிர வேறு எதுவும் இல்லை, அதை நமது இரட்சகர் காணவும் செய்கிறார். கனிகளற்று வெறும் செழுமையான இலைகளை மாத்திரம் கொண்டிருப்பது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். கிருபையைப் பெறாமல் விசுவாசி போல நடப்பது, செத்த ஆத்துமா நடத்துகிற நாடகக் காட்சியாகும். பரிசுத்தமில்லாமல் பக்திவேஷமிடுவது அசுத்தங்களை போட்டு எரிப்பதில் உருவாகின்ற வெளிச்சத்திற்கு ஒப்பானது. நான் பயப்படுத்தும் வார்த்தைகளைத்தான் பேசுகிறேன். நான் அச்சமுற்றிருக்கையில் எப்படி பயமின்றி பேசமுடியும்? நீங்களும் நானும் உயிரோடிருக்கிறவர்கள் என்று பெயர் பெற்றிருந்தாலும் செத்தவர்களாகக் காணப்படுவோமானால் நாம் எவ்வளவு பயங்கர நிலையிலிருப்போம்! நமது நிலைமை அழிவைக் காட்டிலும் மேலானது. அது அழிவின் அழிவு. பாவநிலையிலேயே இருந்து கொண்டு பக்திமான்கள் போலக் காண்பிப்பது, சாணத்தின் மீது வாசனைத் திரவியத்தை தெளித்து அதை அப்படியே விட்டுவிடுவதற்கு சமம். பிசாசின் குணாதியங்களைக் கொண்டிருக்கிற ஒரு ஆவிக்கு தேவதூதனின் பெயரை அளிப்பது பரிசுத்தஆவியானவருக்கு விரோதமாக செய்யும் பாவத்தைப் போன்றதாகும். நாம் மனமாற்றத்தை அடையாமலிருந்தோமானால், தேவஜனங்களோடே நமது பெயரும் எழுதப்பட்டிருப்பதில் பிரயோஜனம் உண்டா?
அதில் கனிகள் இல்லையென்பதை நமது கர்த்தர் கண்டுகொண்டுவிட்டார். அது மிகவும் பயங்கரமானது. அடுத்தபடியாக அவர் அம்மரத்திற்கு ஆக்கினைத் தீர்ப்பளிக்கிறார். அவர் அதற்குத் தீர்ப்பளித்தது சரிதான் அல்லவா? அவர் அதை சபித்தாரா? அது ஏற்கனவே ஒரு சாபமாக நின்றது. பசியுள்ளவர்களுக்கு ஆசை காண்பித்து அவர்களைத் தங்கள் வழியை விட்டு விலகிவரச் செய்து அவர்களை ஏமாற்றும்படியான நோக்கத்தில் அந்த மரம் இருந்தது. ஏழைகளையும் தேவையுள்ளவர்களையும் பரியாசம் பண்ணுவதற்கு தேவன் விடமாட்டார். வெறுமையான பக்திவேஷம் சாபத்தில் முடியும். அப்படிப்பட்டவை சத்தியத்தின் தேவனிடமிருந்து தண்டனை பெற வேண்டாமா? அந்த மரமானது தான் இருந்த இடத்திற்குத் தகுந்தபடி உபயோகமாக இல்லை. எந்த மனிதனுக்கும் அது புத்துணர்ச்சியை அளிக்கவில்லை. ஒரு விசுவாசி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். ஆனால் கனியற்ற தன்மையுடையவனோ உண்மையில், தீமையான விளைவுகளைத்தான் மற்றவர்களுக்கு அளிக்கக் கூடியவனாக இருக்கிறான். கடவுளின் கிருபையை அவன் பெற்றிருக்காவிட்டால், அவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவன் ஒரு சாபமாகக்கூட இருப்பான். தமது ஜனத்திற்கு வெற்றியை அளிக்கக் கூடாதபடிக்கு, கர்த்தருக்கு விசனத்தை உண்டுபண்ணுகிறவனாக கூடாரத்தில் இருந்த ஆகானைப் போல இருப்பான்.
அந்த அத்திமரத்தைப் பட்டுப்போகச் செய்ததின் மூலமாக நமது கர்த்தர் அதை ஒரு நல்ல நோக்கத்திற்கு உபயோகித்துக் கொண்டார். வீணான மாய்மாலக்காரர்களுக்கு அந்த மரம் ஒரு அடையாளமாகவும் எச்சரிப்பாகவும் ஆனது. தேவபக்தியற்றவர்கள் விசுவாசிகளைப் போல தோற்றமளித்துவிட்டு, வழிவிலகிப் போகும்போது, அதன் மூலமாக மற்றவர்கள் படிப்பினையைப் பெற்றுக் கொள்கிறார்கள். தேவனுடைய வழிகளில் சரிவர நடக்காதவர்களின் அழிவை அவர்கள் காணும்படியாக நேரிடுகிறது. அவர்கள் ஞானமுள்ளவர்களாக இருந்தால் அதை தவறாகக் கருதமாட்டார்கள். பிரபலமான பக்திமான்கள் ஒவ்வொருவரும் அழிவை அடையும்போது கடவுள் அதை அப்படியாகத்தான் காண்பார்!
இரட்சகர் அதை நியாயந்தீர்த்த பிற்பாடு அதற்குரிய தண்டனையை அளிக்கிறார். என்ன தண்டனை? “இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது.” அம்மரத்தின் நிலமையை உறுதிப்படுத்துகிறதான வாக்குதான் இது. அந்த மரம் இதுவரை கனி கொடுக்கவில்லை. இனிமேலும் கொடுக்காது. ஒரு மனிதன் கடவுளின் கிருபையைப் பெற்றுக் கொள்ளாமலேயே, அதைப் பெற்றுக் கொண்டவனைப் போல இருக்க மனதுள்ளவனாக இருந்தால், அந்த நியாயாதிபதி, “கிருபை இல்லாமலேயே இரு” எனக் கூறிவிடுவார். கடவுளை விட்டு விலகி இருப்பவர்களைப் பார்த்து கடைசியில் அந்த மேன்மையான நியாயாதிபதி சொன்ன ஒரே வார்த்தை, “என்னை விட்டு அகன்று போங்கள்” என்பதுதான். அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் விலகிப் போய்க்கொண்டேயிருந்தார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய குணம் அழியாமல் அவர்களோடே ஒட்டிக் கொண்டு வந்துவிட்டது. கிருபையற்ற நிலையை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால், கிருபையற்ற நிலையில் தொடர்ந்து இருப்பதே உங்களுடைய முடிவாகும். “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்”. கர்த்தராகிய ஆண்டவர் உங்களில் ஒருவருக்கும் இந்தவிதமான தீர்ப்பை ஒருபோதும் கூறாதிருப்பாராக. நாம் மனந்திரும்பும்படியாக அவர் நம்மைத் திருப்பி, அவருடைய நாமத்திற்கு மகிமையும் புகழ்ச்சியும் உண்டாகும்படிக்கு நம்மில் நித்தியஜீவனை ஏற்படுத்துவாராக.
அதன் பிற்பாடு அந்த மரத்தில் ஒரு மாறுதல் உண்டானது. அது உடனடியாக பட்டுப்போகத் தொடங்கினது. அதில் அதிர்ச்சி ஏதேனும் ஏற்பட்டதை சீஷர்கள் பார்த்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்த வழியாகப் போகையிலே அது வேரோடே பட்டுப்போயிருந்ததாக மாற்கு தமது சுவிசேஷத்தில் எழுதுகிறார். அதன் இலைகள் மாத்திரம் வாடித் தொங்கவில்லை. அடிமரத்தின் பட்டையானது மாத்திரம் காய்ந்து உரிந்து போயிருக்கவில்லை. அதன் முழு உருவமும் சீர்குலைந்து போயிருந்தது. வித்தியாசமான விதத்தில் கிளைகள் உருவாகின்ற அத்திமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இலைகளற்ற அதன் கிளைகள் வித்தியாசமான விதத்தில் தோற்றமளிக்கும். இந்த அத்திமரம் ஒரு எலும்புக்கூடு போலத் தோற்றமளித்திருக்கும் என நான் எண்ணுகிறேன்! அது இரண்டு தரம் செத்துப் போனது. வேரோடே செத்துப் போனது. இந்தவிதமாகத்தான் கள்ள விசுவாசியும் அழிவை அடைகிறான். எரிகிற சூளையின் அடிப்பாகத்திலே விழுந்த பொருள் தனது தன்மையை எல்லாம் இழந்து காய்ந்து கருகிப் போவது போல ஆகிறான். அந்த மனிதன் இனி ஒருபோதும் முன்னைப் போல ஆவதில்லை. அவனுடைய மகிமையும் அழகும் அவனைவிட்டு முற்றிலுமாக நீங்கிப் போயிற்று. அந்த மரத்தை ஒரு கோடாரி வெட்டவில்லை, அதற்கு நெருப்பு வைக்கப்படவில்லை. ஒரு வார்த்தை மாத்திரமே சொல்லப்பட்டது. அந்த வார்த்தையானது அம்மரத்தை வேரோடே பட்டுப்போகச் செய்தது. ஒரு காலத்தில் தைரியமான விசுவாசியாகக் காணப்பட்டவன், இடிமுழக்கங்களோ கொள்ளை நோயோ இல்லாமல், சடுதியில் காயீன் அடைந்த தீர்ப்பைப் பெற்றான். அது ஒரு பயங்கரமான தீர்ப்பு. தோட்டக்காரன் கையில் கோடாரியோடே வந்து, “மரமே, கனி கொடு. இல்லையானால் வெட்டி எறியப்படுவாய்” என்று கூறுகிற நிலமை ஏற்படாதபடிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வித எச்சரிப்பு பயங்கரமானது. ஆனால் எதுவும் கூறாமல் தானே பட்டுப்போய் அழியும்படிக்கு விட்டுவிடுவதைப் பார்க்கிலும் இவ்வித எச்சரிப்பைப் பெறுவது ஒருவிதத்தில் நல்லது.
இப்பொழுது நான் என் பாரத்தைக் கூறிவிட்டேன். உங்களைக் காட்டிலும் எனக்குத்தான் அது அதிக பாரமாக இருக்கிறது. ஏனென்றால் நான்தான் இங்கே எல்லோரின் முன்னிலையிலும் நிற்கிறேன். உங்களில் அநேகரைக் காட்டிலும் நான் அதிகமாக விசுவாசத்தை வெளிப்படுத்துகிறவனாக காட்சி அளிக்கிறேன். அவருடைய கிருபையானது என்னோடேகூட இல்லாவிட்டால், செழிப்பானவனாக என்னைப் பார்த்தறிந்த உங்கள் அனைவருடைய கண்களுக்கு முன்பாகவும் நான்தான் வேரோடே பட்டுப்போக நேரிடும். அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக கனி கொடுக்காதவர்களைக் குறித்து கர்த்தர் காண்பித்த என்னவொரு பயங்கரமான உதாரணம்!
இதமான சில வார்த்தைகளைக் கூறி இந்த செய்தியை முடிக்க விரும்புகிறேன். எந்த மனிதனும், “இது மிகவும் கடுமையானது” என்று சொல்லாதிருப்பானாக. சகோதரரே, நாம் நம்புகிற காரியங்களில் நாமே உண்மையாக இருக்க வேண்டியது என்ன கடினமானதா? நமது கர்த்தர் செய்கிற எதுவும் கடுமையானது என்று எண்ணாதிருங்கள் என வேண்டிக் கொள்கிறேன். அவர் மிகவும் சாந்தமும் இளகியமனதும் உடையவர். அவர் அழித்த ஒரே காரியம் இந்த அத்திமரத்தை மாத்திரந்தான். எலியா தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து மனிதர்களை அழித்தது போல அவர் எந்த மனிதனையும் அழிக்கவில்லை. எலிசா தீர்க்கதரிசி காட்டிலிருந்த கரடிகளைக் கொண்டு பிள்ளைகளை அழித்தது போல அவர் யாரையும் அழிக்கவில்லை. கனி கொடுக்காத ஒரு மரத்தை மாத்திரமே அவர் பட்டுப்போகும்படி செய்தார். அவர் மிகுந்த அன்பும் இளகியமனமும் கொண்டவர். நீங்கள் பட்டுப்போவதை அவர் விரும்பவில்லை. நீங்கள் உண்மையோடு நடந்து கொண்டீர்களானால் அப்படி ஆகவும் மாட்டீர்கள். நீங்கள் சொல்லுவதின்படி நடந்து கொள்கிறீர்களா என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். நீங்கள் மாய்மாலக்காரர்களாய் இராதேயுங்கள் என்று அவர் கூறினால் நீங்கள் அதற்கு எதிர்த்து நிற்கிறீர்களா? அவருடைய கடிந்து கொள்ளுதலை நீங்கள் வெறுத்துத் தள்ள ஆரம்பித்தீர்களானால், நீங்கள் இருதயத்தில் உண்மையற்றவர்களாகக் காணப்படுவீர்கள். அதற்கு மாறாக, தாழ்மையோடு அவர் பாதத்தில் விழுந்து வணங்கி, “கர்த்தாவே, இந்த தெய்வீகமான செய்தி எனக்கு பொருந்துமானால், என் பாவத்தின் வல்லமையை நான் உணரும்படியாகவும், எனது இரட்சிப்பிற்காக உமதண்டை ஓடி வரும்படியாகவும் நான் எனது மனசாட்சியில் அதனை உணரும்படியாகச் செய்தருளும்” என்று கெஞ்சிக் கேட்க வேண்டும். இந்த விதமாக அநேக மனிதர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் – இத்தகைய கடுமையான, ஆனால் உண்மை நிறைந்த காரியங்கள் பல மனிதர்களை, அவர்கள் தவறுதலாக நம்பிக் கொண்டிருந்தவைகளிலிருந்து, கிறிஸ்துவுக்கும் தங்களுடைய ஆத்துமாவுக்கும் உண்மையோடு நடந்து கொள்ளும்படியாக அழைத்து வந்திருக்கிறது.
சிலர் இப்படியாகக் கூறுவார்கள், “நான் என்ன செய்ய வேண்டுமென எனக்கு இப்போது தெரிகிறது. ஆளை விடுங்கள். நான் பகிரங்கமாக என் விசுவாசத்தைக் காண்பிக்கப் போவதேயில்லை. நான் இலைகளை உடையவனாக இல்லாமலே இருந்து விடுகிறேன்” என்பார்கள். சிநேகிதனே, அதுவும் கோபத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற எதிர்ப்பின் ஆவிதான். அதற்கு பதிலாக நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்றால், கர்த்தாவே, என்னுடைய இலைகளை எடுத்துப் போட்டுவிடும் என்று நான் கேட்கவில்லை. என்னில் கனிகளை உருவாக்கும் என வேண்டுகிறேன். இலைகள் இல்லாமல் கனிகள் நன்றாகப் பழுக்காது. இலைகள் மரத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியம். மரத்தின் ஆரோக்கியம் கனிகள் பழுப்பதற்கு அவசியம். விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துவது அவசியம், அதை மறுக்கக் கூடாது. கர்த்தாவே நான் ஒரு இலையையும் இழக்க மாட்டேன்.
“கர்த்தரை சொந்தமாக்கிக் கொள்ளவோ,
அவருக்கென உழைக்கவோ வெட்கப்படேன்.
அவரது வார்த்தையையும்
சிலுவையின் மகிமையையும் போற்றுவேன்.”
கர்த்தாவே, நான் ஒரு மூலையில் அமர்ந்திருக்க விரும்பவில்லை. எனது நல்நடக்கையை மனிதர்கள் பார்க்கும்படியான இடத்திலிருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். அதைக் கண்டு அவர்கள் பரலோகத்திலிருக்கிற என் பிதாவை மகிமைப்படுத்துவார்களே. என்னை எல்லோரும் பார்க்க வேண்டுமென நான் கேட்கவில்லை. ஆனால் அப்படி பார்ப்பதைக் குறித்து நான் வெட்கப்பட மாட்டேன். ஆனால் கர்த்தாவே, பிறர் பார்க்கும்படியாக என்னைத் தகுதிப்படுத்தும். ஒரு சேனைத் தலைவன், படைவீரனிடம், “இங்கே உறுதியாக நில். வெற்றுத் துப்பாக்கியால் சுடாதபடிக்கு, உன் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி ஆயத்தமாயிரு” என்று கூறும்போது அதற்கு பதிலாக அவன், “இவ்வளவு முக்கியமான இடத்தில் என்னால் நிற்க முடியாது. நான் வேண்டுமானால் கடைசி வரிசையில் நின்று கொள்கிறேன்” என்று கூறுவானாகில் அது சரியான பதிலாக இருக்குமா? கோழையே! நீ போலியானவனாக இருக்கக் கூடாது என்பதற்காக உன் தலைவன் உன்னை எச்சரிக்கிறான். நீயோ உன் உண்மை நிலையை வெளிப்படுத்துகிறாய். இங்கிருக்காதே. ஓடிப் போ! நீ நிச்சயமாக தீமை விளைவிப்பவன்தான். கர்த்தரின் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களெல்லாம் நிச்சயமாக அவருடையவர்கள் அல்ல. இத்தகைய தெய்வீக உண்மைகள் நம்மை விலகிப் போகச் செய்யாதிருக்கட்டும். அதற்கு பதிலாக நாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, “கர்த்தாவே, என்னுடைய அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் நான் உறுதிப்படுத்திக் கொள்ள உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். நீர் எதிர்பார்க்கிற கனிகளை நான் கொடுக்கும்படிக்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய கிருபை அதை நடப்பிக்கும்.”
நமது இயல்பாகிய கனி கொடாத தன்மையை நமக்கு உணர்த்தும்படிக்கு இங்குள்ள ஒவ்வொருவரும் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாட வேண்டுமென நான் புத்தி கூறுகிறேன். நாம் சிறிதளவு கனி கொடுக்கிறவர்களாயிருந்தாலும் அதன் போதாத நிலையை உணர்ந்து துக்கப்படும்படியாக கர்த்தர் அருள் செய்வாராக. உங்களைக் குறித்து நீங்களே திருப்தியடைவது ஆபத்தானது. நீங்கள் பரிசுத்தமாகவும், குற்றமில்லாதவர்களாகவும் இருப்பதாக நினைத்துக் கொள்வது பெருமைக் குழியின் விளிம்பில் நிற்பதற்கு சமம். நீங்கள் உங்கள் தலையை மிகவும் நிமிர்த்திக் கொண்டு நடந்தீர்களானால் வாசல்நிலையில் இடித்துக் கொள்வீர்கள். உயரமான போலி மரக்கால்களை வைத்துக் கொண்டு நடந்தீர்களானால் கீழே விழுந்துவிடுவீர்களென நான் அச்சம் கொள்வேன். அதற்கு பதிலாக நீங்கள் இவ்விதமான எண்ணம் உடையவர்களாக இருந்தால் பத்திரமாக இருப்பீர்கள்: “கர்த்தாவே, நான் உமக்கு ஊழியம் செய்கிறேன். நான் ஏமாற்றுக்காரனல்ல. நான் உம்மை நேசிக்கிறவன். நீர் உமது ஆவியின் கிரியைகளை என்னில் நடப்பிக்கிறீர். ஆனாலும், நான் எவ்விதமாக இருக்க விரும்புகிறேனோ அந்த அளவிற்கு நான் இல்லை. நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. நான் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறேன். அதை அடைவதற்கு எனக்கு உதவி செய்யும். கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கி, கொத்தி, எரு போட்ட பிறகும் நான் இவ்வளவு குறைவான கனிகளைத் தருகிறவனாக இருக்கிறேனே என்பதை நினைக்கும் போது மண்ணின் தூசியைப் போல உணருகிறேன். என்னை ஒன்றுமில்லாதவனாக கருதுகிறேன். கர்த்தாவே என் மேல் இரக்கமாயிரும் என்று கெஞ்சுகிறேன். நான் எல்லாவற்றையும் செய்திருந்தாலுமே அப்பிரயோஜனமான ஊழியக்காரனாகக் கருதுவேன். அப்படியிருக்க இவ்வளவு குறைவாக செய்திருக்கின்ற நிலமையில் நான் எப்படி என் அவமானத்தை மறைப்பேன்?”
இந்த அறிக்கையை நீங்கள் செய்த பின்பு, கர்த்தரும் அதைக் கேட்ட பிற்பாடு, வேதாகமத்திலிருந்து ஒரு அடையாளத்தை நீங்கள் மனதில் பதித்துச் செல்ல விரும்புகிறேன். ஒரு வேளை இந்த செய்திக்கு பிற்பாடு, நீங்கள் உங்களைக் குறித்து மிகவும் பிரயோஜனமற்றவர்களாகவும், ஜீவனற்றவர்களாகவும், கனிகளற்றவர்களாகவும் உணர்ந்து, கடவுளுக்கு செய்ய வேண்டிய அளவுக்கு ஊழியம் செய்யவோ, அதிக கிருபைக்காக ஜெபிக்கவோகூட திராணியற்றவர்களாக நினைத்தீர்களானால், இதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இந்த பன்னிரெண்டு கோல்களைப் போன்றவர்கள். அவைகள் மிகவும் காய்ந்ததும், உயிரற்றவையுமாய் இருந்தது. அவைகள் கோத்திரத் தலைவர்களின் கையிலிருந்த கோல்கள். அதை அவர்கள் செங்கோல்களைப் போல உபயோகித்திருந்தனர். அந்த பன்னிரெண்டு கோல்களும் கர்த்தரின் சந்நிதியில் வைக்கப்பட்டன. அதில் ஒன்று ஆரோனின் கோல். அதுவும் மற்றவர்களுடைய கோல்களைப் போலவே காய்ந்ததாயும் உயிரற்றதாயும் இருந்தது. கர்த்தரின் வாசஸ்தலத்திலே அந்த பனிரெண்டு கோல்களும் வைக்கப்பட்டன. அடுத்த நாள் காலையிலே நாம் அவைகளைப் பார்க்கிறோம். அதில் பதினொரு கோல்கள் காய்ந்தவண்ணமாகவே இன்னும் காணப்பட்டது. ஆனால், ஆரோனின் கோலைப் பாருங்கள்! என்ன ஆயிற்று? அது செத்ததாக காய்ந்து இருந்ததே. பாருங்கள் அதில் துளிர் விட்டிருக்கிறது. மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது! மேலும் பாருங்கள், அதில் பூ பூத்திருக்கிறது! அதில் வாதுமைப் பூக்கள் காணப்படுகிறது. அவை இளஞ்சிவப்பாகவும் வெண்மையாகவும் காணப்படுமென்பதை நீங்கள் அறிவீர்கள். வெகு அற்புதம்! மேலும் கவனியுங்கள், அது வாதுமைப் பழங்களைத் தந்திருக்கிறது! பச்சை நிற வாதுமைப்பழங்களின் உள்ளே உடைத்துப் பார்த்தால் வாதுமைக் கொட்டைகளும் இருக்கின்றன. அந்த காய்ந்து போன கோல்களின் மீது தெய்வீக வல்லமை வந்து இறங்கியதால் அது துளிர்விட்டு, பூ பூத்து, வாதுமைப் பழங்களைத் தந்திருக்கிறது. ஜீவனும் தயையும் இருப்பதற்கு அடையாளமாக கனிகள் தோன்றுகிறது. கர்த்தாவே, இந்த காலை வேளையிலே இந்த காய்ந்து போன குச்சிகளை எடுத்து அவைகளைத் துளிர்க்கச் செய்யும். கர்த்தாவே இதோ நாங்கள் ஒரு கட்டாக இங்கே இருக்கிறோம். நீர் அன்று நடப்பித்த அந்த அற்புதத்தை, ஆயிரக்கணக்கான எங்கள் மத்தியிலே நடப்பியும். நாங்கள் துளிர் விட்டு, பூ பூத்து, கனி கொடுக்கும்படியாகச் செய்யும். உமது தெய்வீக வல்லமையோடு வந்து, விறகுக் கட்டையாக இருக்கிற இந்தக் கூட்டத்தாரை செழிப்பான தோட்டமாக மாற்றியருளும். காய்ந்திருக்கிற இந்த கோல்களிலிருந்து இன்றைக்கு நமது கர்த்தர் சில அத்திப்பழங்களைப் பெற்றுக் கொண்டாரானால் எவ்வளவு நலமாயிருக்கும்! “கர்த்தாவே, பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்” என்று சொல்கிற ஒரு அத்திப்பழம்! “கர்தாவே, விசுவாசிக்கிறேன், என் அவிசுவாசம் நீங்கச் செய்யும்” என்று கூறுகிற மற்றொரு அத்திப்பழத்தில் இருக்கிற சுவை! “அவர் என்னை அடித்தாலும், நான் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” என்று கூறுகிற இன்னொரு அத்திப்பழம்! – இப்படியான அத்திப்பழங்கள் இருந்தால் ஒரு கூடை நிறைய கனிகள் நமது கர்த்தருக்குக் கிடைக்குமே. அதன் சுவையில் நமது கர்த்தர் மகிழுவார். எங்கள் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக, இன்றைக்கு எங்களிடத்திலே கனிகளை உருவாக்கும்படியாக வாரும் பரிசுத்தஆவியானவரே! ஆமேன், ஆமேன்!
இத்தியானத்திற்கு முன்பாக வாசிக்கக் கூடிய வேதபகுதி – மத் 21:12-32