Skip to content

அன்பு மகனின் நலம் குறித்த கவலையான விசாரிப்பு

(செப்டம்பர் 5, 1878ஆம்  ஆண்டு, மெட்ரோபாலிடன் டேபர்நாகிள் சபையில், நியுயிங்டன் என்கிற இடத்திலே, வியாழன் மாலை, ரெவ. சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அளித்த தியானத்தின்(1433)  சாராம்சம்)

Translation into Tamil by Vinotha Surendar

An Anxious Enquiry for a Beloved Son (No. 1433) A sermon suggested by the loss of the “Princess Alice,” Delivered on Thursday Evening, September 5th, 1878, by C. H. SPURGEON, at the Metropolitan Tabernacle, Newington

அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டான்” 2 சாமு 18:29.

இந்த வார்த்தைகள் ஒரு பெரிய போருக்குப் பின்பாக தாவீதால் சொல்லப்பட்டவை. அதில் அநேகர் மடிந்து போயிருந்தனர். அப்சலோம் நடத்திக் கொண்டு போன சேனையில் இருபதாயிரம் பேர்கள் விழுந்து போயினர். பட்டயம் மாத்திரமல்ல, காடும் அநேகரைப் பட்சித்துப் போட்டது. தோல்வியினால் முறிந்தோடிய படைவீரர்கள் பயத்தினால் மரங்கள் அடர்ந்த சன்னல்பின்னலான காட்டினுள் ஓடிச் செல்ல நேர்ந்தபோது அதில் மறைந்திருந்த செங்குத்தான மலைச்சரிவுகளும் இருண்ட குகைகளும் அநேகர் மடியக் காரணமாயிற்று. மகன் பொல்லாதவனாயிருந்தாலும், இன்னும் அவனை நேசிக்கிற தகப்பனுடைய கவலை தோய்ந்த கேள்வி, “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்பது. “எவ்விதமாக இவ்வெற்றி நமக்குக் கிடைத்தது?” என்று கேட்கவில்லை. ஆனால், “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்ற கேள்வி வந்தது. “என் சேனையின் மிகப் பெரும் பொறுப்பை சுமந்த யோவாப் உயிரோடிருக்கிறானா?” எனக் கேட்கவில்லை. ஆனால், “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” “நமது சேனைத்தலைவர்களில் எத்தனை பேர் விழுந்து போனார்கள்?” என விசாரிக்கவில்லை. ஆனால், “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” இவ்விடத்திலே தாவீது தன்னை ஒரு ராஜாவாக காட்டிக் கொள்வதைவிட ஒரு தகப்பனாகவே வெளிப்படுத்தியிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது- ஞானத்தைக் காட்டிலும் பாசம் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகமான அன்பில் மூழ்கியிருக்கும் ஒரு வயதான தந்தையைக் குறித்ததான சரியான கணிப்புதான் அது. இந்த விஷயத்தில் தாவீது அளவுக்கதிகமான இளகிய மன பலவீனத்தைக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சகோதரரே, அந்தவிதமான சூழ்நிலையில் இருக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை புரிந்து கொள்வதைவிட, அவரை குற்றப்படுத்துவதே நமக்கு லேசாக இருக்கும். நாம் ஒருபோதும் சந்தித்திராத ஒரு பிரச்சனையைக் குறித்து நியாயம் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும், அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்காக இரக்கப்படுவது புத்திசாலித்தனமானது என நான் கூறுவேன். நாம் ஒருவேளை அந்த நிலமையில் இருந்தோமானால், தாவீதைக் காட்டிலும் வேறுவிதமான உணர்ச்சியை அடைந்திருக்க மாட்டோம். இங்கே அமர்ந்திருக்கிறவர்களில் எத்தனை பேருக்கு, அவர்களுக்கு வேறு எவ்வளவோ பாரமான கவலைகள் இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக, “இளைஞன் பத்திரமாக இருக்கிறானா?, “என் மகன் சுகமாக இருக்கிறானா?, என் தந்தை நலமாக இருக்கிறாரா?, என் மனைவி பத்திரமாக இருக்கிறாளா?” என்கிற சிந்தனை தோன்றாமலிருக்கும்? சமீபத்தில் ஒரு படகு நூற்றுக்கணக்கான பயணிகளோடு ஆற்றில் மூழ்கிவிட்டது. நண்பர்களும் உறவினர்களும் கண்ணீரோடு தங்களுக்கு அருமையானவர்களின் சடலங்களை அடையாளங்காணும் நோக்கத்தில் பயத்தோடு இங்குமங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். விபத்து நிகழ்ந்த அந்த நேரத்திலிருந்து எந்தத் தகவலும் கிடைக்காத தங்களுடையவர்களைக் குறித்து ஏதேனும் செய்தி கிடைக்காதா என நடுக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் ஆற்றிலிருந்து மீட்கப்படும் சடலங்களிடையே அவர்களை அடையாளங்காண நேரிடுமோ என பயந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய இரவிலே மனதின் முன்னிலையில் நிற்கிற கேள்வி, “எனக்கு அருமையானவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா?” என்பதே. நீங்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டுவீர்களா? தங்களுடைய தினசரி வேலைகளை மறந்து, அன்றாடக கடமைகளை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்களென அவர்களை குற்றப்படுத்துவீர்களா? இந்த கவலை தோய்ந்த ஒரு கேள்வியில் நூற்றுக்கணக்கான மற்ற காரியங்கள் மறக்கப்பட்டுப்போகிறது. நீங்கள் அவர்களை குற்றப்படுத்துவீர்களா? உங்களால் குற்றம் சுமத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. அவ்வுணர்வு இயற்கையானது. ஆகவே அது நியாயமானதுங்கூட என நான் நினைக்கிறேன். அதற்குப் பிற்பாடு தாவீது பொறுமையில்லாமல், தேவனுக்கு விரோதமானவைகளை பேசிவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான் என்றாலும், ஒரு தகப்பனின் இருதயத்தை அறிந்தவன், வயதான அந்த தகப்பனைக் கண்டனம் செய்வதைக் காட்டிலும் அவரின் உணர்வை நியாயப்படுத்தவே பார்ப்பான். அந்த வயதான மனிதன் தன் மகனைக் குறித்து, “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்று கவலையோடு கேட்ட கேள்விக்கு, இல்லை என்கிற விடை தெரிந்த பின்பு, ராஜா மிகவும் கலங்கி, “என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக செத்தேனானால் நலமாயிருக்கும். அப்சலோமே, என் மகனே, என் மகனே” என்று சொல்லி அழுதான். நாம் ஒருவேளை அந்த இடத்தில் இருந்திருந்தோமானால், யோவாபைப் போன்று உள்ளே சென்று கடினமாக பேசியிருந்திருக்க மாட்டோம். மாறாக, இச்சம்பவம் நடந்திருக்க வேண்டியது தகும்தான் என்றாலும், புத்திரசோகத்தினால் பாதிக்கப்பட்டு அழுகிறவர்களின் அருகில் நாமும் சென்று உட்கார்ந்து, மிகுந்த இரக்கத்தோடு அவர்களுடன் சேர்ந்து நாமும் அழுது, அவர்களின் துயரத்திலிருந்து நாமும் ஏதாவது பாடம் கற்றுக் கொள்ள மாட்டோமா எனப் பார்ப்போம். நமது கவலைகளை நாம் வேறு திசையில் செலுத்தும்போது, துயரத்திலிருப்பவர்களும் பயன் அடையும்படியாக அவர்களது கவனத்தையும் தேவனுடைய நாமத்துக்கு மகிமை உண்டாகும்விதமாக வேறு திசையில் திருப்ப முனைய வேண்டும்.

இன்றைய இரவிலே, நாம் முதலாவதாக, கவலை நிறைந்த இந்தக் கேள்வியைப் பற்றியும், பிறகு அது உபயோகிக்கப்படுகின்ற சந்தர்ப்பம் என்பதையும் மூன்றாவதாக அதற்கு அளிக்கக்கூடிய பதில்கள் என்பதையும் பற்றி சிறிது சிந்திப்போம்.

1. இது ஒரு கவலை நிறைந்த கேள்வி – “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?”

இதில் நாம் கவனிக்கும் முதல் காரியம், ஒரு தகப்பன் தன் மகனைக் குறித்து கரிசனையோடு கேட்கும் கேள்வி இது. “அவன் சுகமாயிருக்கிறானா?” பெற்றோரின் கரிசனம் மிகவும் பெரியது. சில இளம்வயதினர் அதைக் குறித்து போதுமான அளவுக்கு அக்கறைப்படுவதில்லை. அக்கறை கொண்டார்களானால் அவர்கள் மிகுந்த நன்றியுடையவர்களாய் காணப்படுவார்கள். தங்களுடைய யோசனையற்ற நடவடிக்கைகளினால் பெற்றோரின் கவலையை இன்னும் அதிகப்படுத்தாமல் இருப்பார்கள். அநேகம் வாலிபர்களும் யுவதிகளும் வேண்டுமென்றே தங்களுடைய பெற்றோரைக் கவலைக்குட்படுத்தாவிட்டாலும், அவர்கள் கவலையில் மூழ்குவதற்குக் காரணமாக இருக்கிறார்கள் என்பது உறுதி. தெரியாமல் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்கிற கருத்தை எப்போதும் ஏற்பதற்கில்லை: கட்டுப்பாடற்ற தவறான நடக்கைகளால் தங்கள் நண்பர்கள் எவ்விதமான விளைவை சந்தித்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் பலபேர் தவறான வழியில் செல்கிறார்கள். தங்களை சுதந்திரப் பறவைகள் என அழைத்துக் கொள்கிற பல இளம் வயதினர், தங்கள் இஷ்டம்போல் நடந்து, தங்களைப் பெற்றவளின் உணர்வுகளை காலடியில் மிதிக்கிறார்கள். பெற்றோருக்கு தூக்கமில்லாத இரவுகளையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்துகிறார்கள். கடமையில் தவறாத பிள்ளைகளுக்கு விசேஷித்த வாக்குத்தத்தத்தையும், கலகமுண்டாக்குகிற பிள்ளைகளுக்கு விசேஷித்த சாபத்தையும் கொடுக்கிற தேவனுக்கு முன்பாக பதில் சொல்ல வேண்டிய பெரும்குற்றமாக அது இருக்கிறது. எல்லா பெற்றோருக்கும் கவலைகள் இருக்கும். தாயின் மடியில் வந்த எந்த குழந்தையும் வெறுமனே வருவதில்லை. அதனோடு சேர்ந்து தாய்க்கு கவனித்தலும், வேலையும், துயரமும், கவலையும் சேர்ந்துதான் வருகிறது. பெற்றோர் பிள்ளை உறவில் சந்தோஷங்களும் இல்லாமலில்லை. அதே சமயத்தில் இளம்பிராயம் முழுவதிலும் கவனித்து பாதுகாத்து வளர்க்க வேண்டிய அநேகம் கவலைகளும் பொறுப்புகளும் உண்டு. கடலில் அடிக்கிற ஆயிரக்கணக்கான அலைகள் உறுதியான கப்பலின் மீது வந்து மோதினாலும் அது கப்பலைத் தழுவிச் சென்று வீழ்ந்து விடும். ஆனால், இளம் வயது, சிறிய கிளிஞ்சல் படகில் வாழ்க்கைப் பிரயாணம் செய்வதைப் போன்றது. அத்தகைய அலைகள் வந்து மோதி கிளிஞ்சல் படகை மூழ்கடித்துவிடாதபடிக்கு கருத்தோடும் கவலையோடும் கவனிக்க வேண்டிய வேலை பெற்றோருக்கு இருக்கிறது. புதிதாக கொளுத்தப்படும் மெழுகுவர்த்தியை சுலபமாக அணைத்துவிடலாம் அல்லவா. ஆகவே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிக கவனத்தோடும் கரிசனையோடும் கஷ்டப்பட்டு கவனித்து வளர்க்கிறார்கள். ஆனால், நமது பிள்ளைகள் குழந்தையாயிருக்கும்போதும், பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும்போதும்கூட நமக்கு அதிக கவலையைக் கொடுப்பதில்லை. நாம் அவர்களை படுக்கைக்கு அழைத்துச் சென்று, முத்தம் கொடுத்துத் தூங்கச் செய்யும்போது எல்லாம் பத்திரமாக நடந்து கொண்டிருப்பதாக உணருகிறோம் – ஆனால் அதற்குப் பிற்பாடு வரும் வருடங்களில், அவர்கள் நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்கையில், தனிமையில் செல்கையில், தாங்களாகவே செயல்படும் நிலைமையில், வீட்டை விட்டு வெளியே செல்கையில், நமது கண்டிப்பைக் காண்பிக்க முடியாத தொலைவிடங்களுக்குச் செல்கையில், நமது அதிகார வரம்பிற்கு வெளியே இருக்கையில், நமது அன்புக்கும்கூட கட்டுப்படாதவர்களாக இருக்கையில் – அப்போதுதான் அநேக பெற்றோர்களுக்கு துயர காலம் ஆரம்பமாகிறது. “நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன். அவர்களோ எனக்கு விரோதமாக கலகம் பண்ணினார்கள்” என்கிற துயர தொனியோடே அநேகம் நரைமயிர்கள் பாதாளத்தில் இறங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அநேகம் தகப்பன்மாரும் தாய்மாரும் மரித்துப் போயிருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கத்தியினாலோ விஷத்தினாலோ அல்ல, தங்கள் மகனுடைய மகளுடைய அன்பற்ற வார்த்தைகளாலும், கொடூரமான செய்கைகளாலும் இறந்து போயிருக்கிறார்கள். தங்களுடைய நன்றிகெட்ட நடக்கையாலே அகாலமாக மரணத்தைத் தழுவின பெற்றோரின் கல்லறைகள், பல மகன்களின் மகள்களின் கண்ணீரினால் கழுவப்படுகிறது. பெற்றோர் உயிரோடிருக்கிறதான சிலாக்கியம் பெற்றவர்கள், நாம் எவ்வளவாக அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் செய்திருப்பவைகளுக்கு பிரதியுபகாரம் நம்மால் செய்ய முடியாவிட்டாலும், எப்படியாவது நமது நடக்கைகளின் மூலமாக அவர்களுக்கு ஆறுதலை அளித்து, அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிப்பதில் சந்தோஷங்கொள்ளுவோம். கடந்த காலங்களில் தாங்கள் கவலைப்பட்டதைக் குறித்து வருந்தாதபடிக்கு அவர்களுடைய இருதயம் நம்மில் மகிழுவதாக. உலகத்தில் இந்தவிதமான மகன்களையும் மகள்களையும் தாங்கள் கொண்டுவந்ததைக் குறித்து அவர்கள் இருதயம் பூரிப்பதாக. “பிள்ளைகள் சுகமாக இருக்கிறார்களா?” என்று நம்மைக் குறித்து கவலையோடிருக்கிற பெற்றோர்கள் நமக்கு இருந்தால், நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக. நம் மீது அக்கறை கொண்டிருக்கிறவர்களை அலட்சியப்படுத்துவதின் மூலமாக நாம் ஒருபோதும் கடவுளின் இரக்கத்தை குறைவுபடுத்துகிறவர்களாக  காணாதபடிக்கு இருப்போம்.

இரண்டாவதாக, தந்தையின் வீட்டை விட்டுச் சென்றுவிட்ட ஒரு மகனைக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி இது. “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” நான் ஏற்கனவே கூறியபடி, பிள்ளைகள் நம்மோடுகூட இருந்த, பள்ளிப் பருவத்திலெல்லாம் நாம் அனுபவிக்கிற கவலையைவிட, அவர்கள் நமது கட்டுப்பாட்டை தாண்டி சென்றுவிட்டபின் ஏற்படுகிற கவலைதான் அதிகமாயிருக்கும். அவர்கள் தங்களுக்கென சொந்த நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். தங்களுடைய விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். அவர்கள் நாம் இருக்கிற பிரதேசத்தில் இருந்தாலே நாம் அவர்கள் நலனைக் குறித்து அக்கறை உள்ளவர்களாக இருப்போம். அப்படியிருக்க அவர்கள் வேறு ஊரில் இருந்துவிட்டாலோ நமது கவலை இன்னும் அதிகமாக இருக்கும். உங்களில் பலபேருடைய மகனோ அல்லது மகளோ தூரதேசத்தில் இருக்கலாம். “என் மகன் எப்படியிருக்கிறானோ?”, “என் மகள் நலமாயிருக்கிறாளா?” என்கிற கேள்வி படுக்கையில் உங்களைத் துளைத்தெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவன் தூரதேசத்தில் இருக்கலாம், அல்லது கப்பலில் மாலுமியாக இருக்கலாம், வெளிநாட்டில் தனது ஜீவியத்திற்காக பொருள் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். அவன் உயிரோடிருக்கிறானா, நலமாக இருக்கிறானா என நீங்கள் கவலை கொண்டிருப்பீர்கள். அவன் கடற்பிரயாணத்தில் இல்லாமல் கரையில் ஒரு தேசத்தில் இருக்கிறானென்று அறிந்தீர்களானால், அவன் கர்த்தருடைய நாளில் தேவாலயத்திற்கு ஒழுங்காக போகிறானா என்பதில் அக்கறை காட்டுவீர்கள். மாலை வேளைகளை எங்கே செலவிடுகிறான் என கவலை கொள்வீர்கள். எந்தவிதமான நண்பர்களோடு சகவாசம் கொண்டிருக்கிறானோ, அவன் எஜமானன் எப்படிப்பட்டவனோ, கூட வேலை பார்ப்பவர்கள் யாரோ, தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டதோ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த விதமான கவலை நிறைந்த கேள்விகள் உங்கள் இருதயத்தின் ஆழத்தில் அடிக்கடி தோன்றும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இன்றைய இரவிலே நம்மிடையே சில இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். லண்டன் மாநகரமாகிய இப்பெரும் பட்டணத்திலே வசிக்கும்படியாக வந்திருக்கிறார்கள். உங்களைக் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு கரிசனையோடு எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளும்படியாக நினைப்பூட்டுகிறேன். உங்கள் தகப்பனும் தாயாரும் இந்த நேரத்திலே உங்களைக் குறித்து நினைத்தவர்களாக எவ்வளவு கரிசனையோடு உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை அன்புடன் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் இப்போது இங்கே இருப்பதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சில வேளைகளில் நீங்கள் உங்கள் மாலை நேரங்களை வீணாகக் கழித்துப் போடுவதையும், ஓய்வுநாளின் சில பகுதிகளை எங்கே செலவிடுகிறீர்கள் என்பதையும் அறிந்தால் வருத்தம் அடைவார்கள் அல்லவா? வீட்டில் கற்றுக் கொடுத்திருந்த நற்பழக்கங்களை மறக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை அறிந்தால் விசனமடைவார்கள் – தங்கியிருக்கும் அறையில் மற்ற நண்பர்கள் உறங்கிக் கொண்டிருப்பதால் தன் மகன் ஜெபிப்பதற்கு முழங்காற்படியிட அஞ்சுகிறான் – வேதத்தில் மகனுடைய பெயரை எழுதிக் கொடுத்த தாய்க்கு, தினமும் அதிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பேன் என்ற வாக்குறுதியை கொடுத்த மகன் அதை வாசிப்பதில்லை, ஆனால் அதற்கு பதிலாக அவ்விடத்தை தீமையான புத்தகங்கள் ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டன என்பதெல்லாம் அறிந்தால் வேதனை அடைவார்கள் அல்லவா.  இளம் நண்பர்களே, உங்களைக் காட்டிலும் வயதில் சற்று மூத்தவர்களாகிய எங்களில் சிலருக்கு, வீட்டை விட்டு வெளியே வருவதால் ஏற்படுகின்ற உங்களுடைய அனுபவங்கள்  தெரியும். அப்படி வந்த எங்களைத் தொடர்ந்து வந்த எங்கள் பெற்றோரின் கண்ணீரும் ஜெபங்களும் கேட்கப்பட்டதால், மிகுந்த மகிழ்ச்சியோடு பிற்பாடு வாழ்ந்திருந்த பெற்றோரைக் கொண்டிருந்த எங்களின் அனுபவங்களையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். உங்களுடைய வாழ்க்கையும் அப்படியே அமைவதாக. இல்லையென்றால் நீங்கள் அதிகக் கேடான நிலையை அடைந்து உங்கள் பாவங்களில் அழிந்து போவீர்கள். தாயின் ஜெபங்களையும் மீறி ஒரு இளைஞன் நரகத்தின் ஆழத்தில் அழிந்து போவதென்பது கடினமானதாகும். மகனின் இரட்சிப்புக்காக போராடி ஜெபித்துக் கொண்டிருக்கும் தாய் தகப்பனின் ஜெபங்களையும் மீறி உங்களை நீங்களே அழித்துக் கொள்வதற்கு மிகுந்த பலம் வேண்டியதாயிருக்கும். அப்படி தங்களை அழித்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அழிவுக்குட்படும்போது, பெற்றோரின் பராமரிப்பும் ஜெபங்களும் இல்லாமல் தெருக்களில் வளர்க்கப்பட்டு பாவத்தில் வீழ்ந்து அழிபவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையைக் காட்டிலும் அது அதிகமாக இருக்கும். ஓ! கர்த்தராகிய இயேசுவே, விதவையின் மகனை உயிரோடே எழுப்பினீரே. அக்கிரமங்களினால் பாவங்களினாலும் மரித்துப் போயிருக்கிற இந்த மகன்களை எழுப்பும். துன்மார்க்கமும் அசுத்தமுமாகிய கல்லறையில் புதைக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்படுகிறார்களே.

“பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்கிற கேள்வி, தங்கள் இல்லத்தைவிட்டு போய்விட்ட பிள்ளைகளைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ பெற்றோரின் கவலையை நமக்கு ஞாபகப்படுத்தும்.

ஆனால் இதில் மனதை உருக்கும் ஒரு காரியம் இருக்கிறது. தன்னையே எதிர்த்த மகனைக் குறித்து ஒரு தகப்பன் கேட்கிற கேள்வி இது. அப்சலோம் – பிள்ளையாண்டானாகிய அப்சலோம் – தாவீது ஏன் அவனைக் குறித்து கவலையாயிருக்க வேண்டும்? அவனுடைய கை தன் தகப்பனுக்கு விரோதமாக எழும்பவில்லையா? தகப்பனின் இரத்தத்தின் மீது அவன் தாகமாயிருக்கவில்லையா? தன் தகப்பனை கொன்று, ராஜ்யபாரத்தை தான் அடைந்து கொள்ளவேண்டுமென்கிற வெறியோடு, மிகப்பெரும் சேனைக்கு தலைமை தாங்கிச் சென்றவனில்லையா? ஏற்கனவே தலைமைப் பதவியை தந்திரமாக அபகரித்திருந்தானே. அப்படியிருக்க தாவீது ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் என சிந்தித்துப் பார்க்கிறேன். ஒருவேளை தாவீது,  “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் இறந்துவிட்டானா? அவன் சென்றுவிட்டானானால் என் ராஜ்ஜியத்தில் சமாதானம் இருக்கும். என்னுடைய போராட்டமான வாழ்க்கைக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்கிற நோக்கத்தில் கூறியிருப்பாரோ? இல்லை. தாவீது ஒரு தகப்பன். தகப்பன் தன் பிள்ளைகளை நேசிக்க வேண்டும். அங்கு பேசுவது ஒரு தகப்பன். தகப்பனின் அன்பு, மகனின் விரோதத்தை மேற்கொள்ளும். தன் இருதயத்தின் இரத்தத்தை மகன் அடையப் பார்த்தாலும் தகப்பனின் அன்பு சாகாது, அவன் நேசம் மாறாது. தாய் தகப்பனின் அன்பு எவ்வளவு வலியது! அது கடவுளின் அன்பில் ஒரு சிறு பகுதியை பிரதிபலிக்கிற தன்மையைக் கொண்டது. அதை நாம் எவ்வளவு மரியாதையோடு மதிக்க வேண்டும்! என்னவொரு அருமையான ஆஸ்தியை கடவுள் நமக்கு அருளிச் செய்ய சித்தங்கொண்டிருக்கிறார்! அதிலும் முக்கியமாக தங்கள் பிள்ளைகளின் மீது புனிதமான அன்பின் சுபாவத்தைக் கொண்டிருக்கும் தேவபக்தியுள்ள பெற்றோர் இருப்பது எத்தகைய சிலாக்கியம்!. அவர்களுடைய அன்பினை தேவன் உன்னதமான நோக்கத்தை அடையும்படிக்குப் பரிசுத்தப்படுத்துகிறார். நமது பிள்ளைகள் மிகவும் கொடிதான பாவத்தில் விழுந்துவிடக்கூடும், ஆனாலும் அவர்கள் நமது பிள்ளைகள்தான். நமது தேவனை அவர்கள் ஒருவேளை அலட்சியப்படுத்தலாம், தங்களுடைய துர்க்குணத்தினால் நமது இருதயத்தை சுக்குநூறாக உடைக்கலாம், அவர்கள் செய்கையை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளையில் அவர்களை நமது பிள்ளைகள் இல்லையென்று ஆக்கிவிட முடியாது. நமது இருதயத்திலிருந்து அவர்களை அழித்துப்போட இயலாது. நமது இருதயம் துடிக்கும் வரைக்கும் அவர்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டேயிருப்போம். கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்கிற சில பெற்றோர், “அந்தப் பெண் இனி ஒருபோதும் என் வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது” என்று கூறுவதை நான் சிலவேளைகளில் கேட்டிருக்கிறேன். அவர்கள் கிறிஸ்தவர்கள்தானா என்பதில் எனக்கு சந்தேகம். தங்கள் பிள்ளைகளோடு ஒப்புரவாக முடியாத தகப்பன்மாரை நான் சந்திக்கும்போது, அவர்கள் தேவனோடு ஒப்புரவாகவேயில்லை என்று எண்ணுகிறேன். நமது இருதயம் புதுப்பிக்கப்பட்டிருந்ததானால், நமது பிள்ளைகளையே விரோதிக்கிறதான உணர்ச்சி நம்மை ஆட்கொண்டிருக்க முடியாது. கர்த்தர் நம்மை மன்னித்து அவரது குடும்பத்துக்குள் ஏற்றுக் கொண்டிருந்தாரானால், நாமும் நமக்கு விரோதமாக எப்பேர்பட்ட குற்றம் செய்தவர்களையும் மன்னிக்க முடியும். அதிலும் நமது பிள்ளைகள் நமது இரத்தமும் மாமிசமுமாயிருப்பதால் இரண்டு மடங்காக அப்படி செய்ய முடியும். நமது பிள்ளைகளையே கைவிடுவதென்பது இயற்கைக்கு விரோதமானது. இயற்கைக்கு விரோதமானதை மதிக்கவியலாது. ஆயக்காரரும் பாவிகளும்கூட தங்கள் பிள்ளைகளை மன்னிக்கிறார்களென்றால், நாம் அதைக் காட்டிலும் அதிகமாக அப்படி செய்ய வேண்டும். கேள்விப்பட்டிராத பாவத்தின் எல்லைக்கே அவர்கள் சென்றிருந்தாலும், கடவுளின் இரக்கம் எப்போதும் நிலைத்திருப்பது போல, கிறிஸ்தவப் பெற்றோரின் அன்பும் நிலைத்திருக்க வேண்டும். “பிள்ளையாண்டனாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்று தாவீதே சொல்லக்கூடுமானால், அப்சலோமின் நடத்தையில் பாதி அளவிற்குகூட கொடுமையாக நடந்த பிள்ளைகள் எதுவும் நமக்கில்லையே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே நம்மை துயரப்படுத்தினவர்களை மன்னித்து அவர்கள் மீது அக்கறையோடு அன்பு செலுத்த வேண்டும்.

வீட்டில் இருப்பவர்களுக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிற இளம் பிராயத்தினருக்கு இந்த சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்: நீ இந்த விஷயத்தை சாதாரணமானதாகக் கருதுகிறாயா? பெற்றோரின் கவலை உனக்கு முட்டாள்தனமாகத் தோன்றுகிறதா? உன்னுடைய வாழ்க்கை உனக்கு விளையாட்டுத்தனமானதாகத் தோன்றினாலும், அது வீட்டிலுள்ளவர்களுக்கு மரணத்தைக் கொண்டுவருகிறது. உன் தாயாருக்காக உன் இருதயமானது வறண்டு போனதாக இருந்தாலும், உனது தாயின் உள்ளத்தில் இன்னமும் உன் மீது அன்பு பெருக்கெடுத்தோடுகிறது. அவளுடைய கண்ணீருக்கு நீ காரணமாக இருந்திருக்கிறாய் என்பது உனக்கு கேலிக்கிடமானதாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் கண்ணீர் உண்மையானவை, அவள் ஆத்தும பாரத்தை அது வெளிப்படுத்துகிறது. அந்த இளகிய மனதை நீ பரிகசிப்பாயா? பெற்றோரின் பக்தியைக் குறித்து கேலி பேசும் அளவுக்கு மிகவும் தாழ்ந்து போன சில இளம்பிராயத்தினரை நான் அறிவேன். அப்படி செய்வது மிகவும் பயங்கரமானது. அவ்வித குற்றமுடையவர்களுக்கு ஐயோ. இருந்தாலும் அநேகம் கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் அன்பற்ற தன்மையைப் பொருட்படுத்தாது அவர்களுக்காக ஜெபங்களை ஏறெடுப்பதிலும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதிலும் ஈடுபடுகிறார்கள். மேலும், தங்கள் பிள்ளைகளின் நிலையைக் கடவுளுக்கு முன்பாக எடுத்துரைத்து, அவருடைய மிகுந்த இரக்கத்தின் நிமித்தமாக தங்கள் பிள்ளைகளிடம் இரக்கம் காண்பிக்குமாறு வேண்டி நிற்கிறார்கள். தவறிழைத்துக் கொண்டிருக்கும் இளம்பிராயத்தினரே, உங்களில் இன்னமும் மனிதத்தன்மை இருக்கிறபடியால், அந்த இளகிய சுபாவத்தின் காரணமாக உங்களை கேட்டுக் கொள்ளுகிறேன், நீங்கள் உங்கள் பெற்றோரின் அந்த அற்புதமான அன்பை உதாசீனப்படுத்துவதைக் கைவிட்டுவிடுங்கள். அவர்கள் மிகுந்த பொறுமையுடன் உங்களை மன்னித்துக் கொண்டிருப்பதை அலட்சியப்படுத்தாதிருங்கள். “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்று தன் தகப்பன் கூறுவதை அப்சலோம் கேட்டிருந்தானாகில் அவன் நிச்சயமாக இந்த அளவுக்கு தகப்பனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணியிருக்க மாட்டான் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். இங்கிருப்பவர்களில் யாரும் அந்த விதமாக இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்கள்கூட தங்கள் பெற்றோரின் இருதயத்திலுள்ள ஆழமான அன்பை தெரிந்து கொண்டார்களானால், அவர்கள் தங்கள் பெற்றோருடன் ஒப்புரவாகி, மீதியான தங்கள் வாழ்நாள் முழுவதுமாக தங்களின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்வார்கள்.

மகன் பத்திரமாக இல்லாமல் இறந்து போயிருந்தானென்றால் அவனுடைய நிலை மிகவும் மோசமானதாயிருக்குமே என்கிற கவலை தோய்ந்த தகப்பனின் கேள்வியை நான் எடுத்துக் கொண்ட வசனம் பிரதிபலிக்கிறது. “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்று தாவீது மிகுந்த துயரத்தோடு கேட்பதற்குக் காரணம், அவன் இறந்து போயிருந்தானென்றால் அவனுடைய நிலமை மிகவும் மோசமானதாயிருக்கும் என்பதுதான். தகப்பனை எதிர்த்துக் கலகம் பண்ணியதில் அவன் இறந்து போயிருக்கிறான் – அவனுடைய குற்றமுள்ள ஆத்துமா எந்த நிலைமையில் பாதாளத்தில் இறங்கியிருக்கும்? அன்பானவர்களே, மரித்துப் போனவர்களைக் குறித்து கேட்கப்படும் பயங்கரமான கேள்வி அது. அவன் எங்கே இருக்கிறான்? அவன் ஆத்துமா பத்திரமாக இருக்கிறதா? சடுதியான மரணத்தைத் தழுவுபவர்கள் கடவுளின் பிள்ளைகளாயிருக்க வேண்டுமென்றும், பாவிகள் கிறிஸ்துவைக் கண்டு உணரும் வரைக்கும் மரணத்திற்குத் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் நான் வேண்டிக் கொள்ள ஆசைப்படுவேன். ஒரு நிலக்கரி சுரங்கத்தின் ஆழத்தில் சகமனிதன் ஒருவனோடு அகப்பட்டுக் கொண்ட ஒரு கிறிஸ்தவனைக் குறித்த சம்பவம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். மேலேயிருந்து ஒரு கூண்டு இறக்கப்பட்டது. அதில் ஒரே ஒருவர் மாத்திரம்தான் செல்ல முடியும்.  அந்தக் கூண்டு  கிறிஸ்தவனுக்குக் கிடைத்த போதிலும், அவன் சகமனிதனிடம், “என்னுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட்டிருக்கிறது. நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன். நீயோ விசுவாசியல்ல. நீ இறந்து போவாயானால் உனக்கு பெருத்த நஷ்டம். கூண்டில் ஏறித் தப்பிச் செல்” என்று கிறிஸ்தவன் கூறுகிறான். தன்னுடைய ஜீவன் போனாலும் பரவாயில்லை என்று கூறி, அந்த மனந்திரும்பாத மனிதன் தப்பிப் பிழைத்துக் கொள்ளும்படியாக விட்டுக் கொடுத்துவிட்டான்.  நாம் கிறிஸ்துவினுடையவர்களாய் இருந்தோமானால், இரட்சிக்கப்படாதவர்களுக்காக நாம் மரிக்கவும் தயாராக இருப்பதே கிறிஸ்துவைப் போல இருப்பதற்கு ஒப்பாகும். அப்போதுதான் நாம் தாவீதின் விருப்பத்தைக் கொண்டவர்களாகக் காணப்படுவோம் – “நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்.” மரணம் – கிருபையின் மூலமாக நல்ல நம்பிக்கையை அடைந்திருப்பவர்களுக்கு மரணத்தின் கசப்பு இல்லை. ஆனால் நம்பிக்கை இல்லாமல், கிறிஸ்து இல்லாமல், மோட்சம் இல்லாமல் மரிப்பவர்களுக்கு – அது மரணமேதான். உங்களுடைய மகனோ அல்லது மகளோ எதிர்பாராதவிதமாக திடீரென்று எடுத்துக் கொள்ளப்படுவதை நீங்கள் அறிந்தால், மிகவும் கவலையோடு, “அவர்கள் பத்திரமாக இருப்பார்களா?” என்கிற கேள்வியைக் கேட்பீர்கள் என்பதை என்னால் எண்ணிப் பார்க்க முடிகிறது. மனந்திரும்பாத ஆணோ அல்லது பெண்ணோ மரிக்கும்போது அவர்கள் இரண்டு முறை மரிப்பவர்களாவார்கள். இரண்டாவது மரணம் மிகவும் பயங்கரமானது. என் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களில் சிலர் இந்த ஆபத்தான நிலமையில் இருக்கிறீர்கள் அல்லவா? நண்பர்களே, இந்தக் கட்டடத்திற்குள்ளாக இப்போது மரணம் பிரவேசித்து உங்களை ஆட்கொள்ளுமானால் நீங்கள் எங்கே இருப்பீர்கள்? மரண அம்புகள் இப்போது உங்களை நோக்கி எய்யப்பட்டிருக்குமானால் நீங்கள் எங்கே இருப்பீர்கள்? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிறிஸ்துக்குள் நம்பிக்கை இல்லையென்றால், அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக பாவமன்னிப்பைத் தேடிக் கண்டடையும்படியாக தேவன்தாமே உங்களுக்கு உதவி செய்வாராக.

அந்தோ! இந்தக் கேள்வியானது, அது கேட்கப்பட்ட வேளையில் உண்மையில் இறந்து போயிருந்த மகனைக் குறித்து ஒரு தந்தையால் கேட்கப்பட்டது. அப்சலோமின் சுகத்தைக் குறித்து மிகவும் தாமதமாகக் கேட்கப்பட்ட கேள்வி இது. கலகம் செய்தவனாகிய அந்த மகனின் காரியம் யாவும் முடிந்து விட்டது. யோவாபின் கையிலிருந்த மூன்று வல்லயங்கள் அப்சலோமின் நெஞ்சிலே ஊடுருவிப் போயிருக்க அவன் தலைமயிர் கார்வாலி மரத்தில் மாட்டிக் கொண்டிருக்க அவன் சடலம் வானத்துக்கும் பூமிக்கும் நடுவாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவன் செய்திருந்த குற்றங்களுக்கு அவன் நியாயப்படியான தண்டனையை அடைந்திருந்தபோதும், அவனுடைய தகப்பன் கேட்கிறார், “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்று. நமது பிள்ளைகள் மரித்துப் போன பிற்பாடு அவர்களைக் குறித்து நலம் விசாரிப்பது மிகவும் தாமதமானது. தனது பிள்ளைகளைக் குறித்து தான் கவனமாக இருந்திருக்கவில்லை என்கிற எண்ணமானது தாவீதின் இருதயத்தில் பலமுறை குத்தி வருத்தத்தை விளைவித்திருக்கும். தாவீதின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களின் மூலமாக அது அடையாளமாகக் காட்டப்பட்டிருப்பது நம்மை பயத்தில் ஆழ்த்துகிறது. முழுவதுமாக ஏலியைப் போன்ற அளவுக்கு இல்லாவிட்டாலும், குடும்ப நிர்வாகத்தில் தாவீது மிகவும் கவனக்குறைவாகவே இருந்திருக்கிறார். மகன் கேட்பது எதுவாக இருந்தாலும் மறுக்காமல் அதை அனுமதித்த தகப்பனாக ஒரு மகனுடைய விஷயத்தில் செயல்பட்டதை நாம் வாசிக்கிறோம். தங்களுடைய மகன்கள் விஷயத்தில் இப்படியாக நடந்து கொள்கிற எந்த மனிதனையும் ஒரு நல்ல தகப்பனாக என்னால் கருத முடியாது. பலதார மணம் செய்யும் வழக்கம் ஒழுங்கான குடும்பம் உருவாவதை முற்றிலுமாக அழித்துவிடும். தாவீது இந்த விஷயத்தில் பெரும் தவறு செய்திருக்கிறார். மேலும் தாவீது அரசியல் விவகாரங்களில் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், அவருடைய பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாவீது இப்போது கேட்பது வீண்: “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” இந்தக் கேள்வி மிகவும் தாமதமாக, காலங்கடந்து கேட்கப்படுகிறது. உங்கள் மகன் துன்மார்க்கனாகவும் குடிகாரனாகவும் ஆன பிற்பாடு கைகளைப் பிசைந்து கொள்வதால் பிரயோஜனமில்லை. அவன் சிறியவனாக இருக்கும்போதே அவனை நல் ஒழுக்கத்துக்குட்படுத்துங்கள். அவன் பாலகனாக இருக்கும்போதே உங்கள் ஜெபத்தோடும் கண்ணீரோடும் அவனைக் கிறிஸ்துவிடம் கொண்டுவாருங்கள். தாய்மார்களே, சோதனை நிறைந்த இடங்களுக்கு உங்களுடைய மகள்களை நீங்கள் செல்ல அனுமதித்தீர்களானால், அவர்கள் உங்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் காலம் வருவதற்கு அதிகநாள் செல்லாது. நமது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களுக்குச் செய்யக்கூடியதை நாம் செய்துவிடுவோம். உலோகமானது உருகிய நிலையில் இருக்கும்போதுதான் அதை நமது இஷ்டப்படி வளைத்து நாம் விரும்பியவைகளை செய்ய முடியும். அது குளிர்ந்து கடினப்பட்டுவிட்டதானால், அதை எவ்வளவுதான் அடித்தாலும் நாம் விரும்பும் வடிவத்தைப் பெற இயலாது. ஓ, நமது பொறுப்பில் விடப்பட்டிருக்கும் பிள்ளைகளை அவர்கள் நடக்க வேண்டிய வழியிலே நடத்தும்படிக்கு கிருபை பெறுவோமாக. அப்போதுதான் அவர்கள் தங்கள் முதிர்வயதிலும் அதை விடாமல் கடைப்பிடிப்பார்கள். சிறிய செடியாக இருக்கும்போதே வளைத்துத் திருப்பினால்தான் உண்டு. பெரிய மரமான பிற்பாடு அதை உங்களால் வளைத்துத் திருப்ப முடியாது. இதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கும்போதே அதைப் பிடித்துக் கொள்ள விழிப்பாக இருங்கள். இல்லையென்றால் உங்கள் பிள்ளைகள் பாவத்தில் விழுந்தபின்போ அல்லது பாதாளத்தில் அழியும்போதோ “ஐயோ, எனக்கு ஐயோ” என்று ஆத்துமபாரத்தோடு புலம்பிக் கண்ணீர் வடிப்பதால் பிரயோஜனம் ஒன்றுமில்லை. கல்வியறிவில்லாத ஒரு ஏழைத் தாயின் துயரத்தை என்னால் ஒருபோதும் மறக்கவியலாது. அவரைக் கிறிஸ்துவிடம் நடத்துவதற்கு நான் கருவியாக இருந்தேன். கிறிஸ்துவுக்குள்ளாக அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு சிலகாலங்கள் இருந்ததை அறிவேன். ஆனால் சிலகாலம் கழித்து அவர் மிகுந்த துயரத்தோடும் ஆவியில் கட்டுண்டவராகவும் இருந்ததைப் பார்த்தேன். “உங்களை வருத்தப்படுத்துவது எது?” என்று கேட்டேன். அவர் கூறிய பதில், “என் பிள்ளைகள்! என் பிள்ளைகள். அவர்கள் எல்லோரும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். எல்லோரும் கடவுள் பக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். என் கணவர் ஐந்தாறு பிள்ளைகளோடு என்னை விட்டுவிட்டு இறந்து போய்விட்டார். நான் காலை முதல் இரவு வரை கடினமாக உழைத்தேன். இந்த பிள்ளைகளுக்கு உணவு உடை அளிக்க வேண்டுமானால் அப்படி உழைத்தால்தான் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? என்னால் முடிந்த அளவிற்கு அவர்களை நன்றாக வளர்த்தேன். ஆனால், ஐயோ, நான் அவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து எண்ணிப் பார்க்கவில்லையே. எப்படி என்னால் எண்ணிப் பார்த்திருக்க முடியும்? நான் என்னுடைய ஆத்துமாவைக் குறித்தே நினைத்துப் பார்த்ததில்லையே. நான் இப்போது இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களோ உலகப்பிரகாரமாகவும், கவலையீனமாகவும் இருக்கிறார்களே. இந்த நிலையை என்னால் மாற்ற முடியவில்லையே” என அழுதாள். தன் பிள்ளைகளின் மீதுள்ள பாசத்தினால் உந்தப்பட்டு, அவர்களிடம் சென்று அவர்களுடைய ஆவிக்குரிய நிலையைக் குறித்துப் பேசவேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டு, முதலாவதாக தனது மூத்த மகனுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறாள். அவனுக்கு இப்போது திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். அவனிடம் தனது மனந்திரும்புதலைக் குறித்து கூறி, தனது இரட்சிப்பையும், கர்த்தரில் அடைந்திருக்கும் மகிழ்ச்சியையும் பற்றி கூறத் தொடங்கும்போது, மகன் கொடூரமாக நகைத்து அவளை இகழ்ந்து பேசியது அவள் இருதயத்தை உடைத்துவிட்டிருக்கிறது. என்னால் இயன்ற அளவிற்கு அவளைத் தேற்றி ஆறுதல் அளிக்கத்தான் முடிந்தது. சிறுபிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிற வாலிபவயதுள்ளவர்களுக்கு நான் கூறுகிறேன், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள். தவறவிட்டீர்களானால் நீங்கள் பின்னாளில் கதறவேண்டி வரும் :”ஓ அப்சலோம், என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக செத்தேனானால் நலமாயிருக்கும். உன்னுடைய அநியாயத்தின் காரணமாக நீ விழுந்தாய். உன்னுடைய இரத்தப்பழி உன் பெற்றோரின் கையில் கேட்கப்படுகிறது.” இந்த கவலை நிறைந்த கேள்விக்குரிய பதில் பட்டயம் போலத் தாக்கிவிடாதபடிக்கு,  ஞானமுள்ள பெற்றோர் சரியான வேளையிலே இக்கேள்வியைக் கேட்டுக் கொள்ளும்படியாக கடவுள் அருள் செய்வாராக.

2. எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இக்கேள்வி பொதுவாக உபயோகப்படுத்தப்படும்? கேள்வி இன்னதென்று முதலில் பார்த்தோம். இரண்டாவதாக, அது கேட்கப்படும் சந்தர்ப்பங்களைப் பார்ப்போம். “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?”

இப்போது கேட்கப்பட்டிருக்கிகிற மாதிரி, சரீரப்பிரகாரமான நலனைக் குறித்தும் கேட்கப்படும். ஒரு பயங்கரமான அழிவு ஏற்பட்டு நொடிப்பொழுதில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்படைந்திருக்கையில் இந்தக் கேள்வி எல்லோருடைய வாயிலிருந்தும் வரும். சென்ற புதன்கிழமை காலையில் அநேக குடும்பங்கள் இந்தக் கேள்வியைத்தான் கேட்டிருப்பார்கள். தங்களுக்கு அருமையானவர்கள் வீடுதிரும்பாததால் இரவு முழுவதும் விழித்திருந்து காத்திருந்தவர்கள், காலையில் வெளியிடப்பட்ட அந்த பயங்கரமான பட்டியலில் இந்தக் கேள்வியோடுதான் தங்களுக்கு அருமையானவர்களைத் தேடியிருப்பார்கள். மகனுக்காகவோ, தகப்பனுக்காகவோ, மகளுக்காகவோ, தாய்க்காகவோ இப்படி காத்திருக்கும் இரவுகள் எவ்வளவு பயங்கரமானவை. காலையில் வரும் செய்திகள் எவ்வளவு துயரமானவை! என்னுடைய வீட்டிற்கு அருகாமையிலேயே ஒரு வீட்டார் அனைவரும் தங்கள் சிறுகுழந்தையை பணிப்பெண்ணின் பொறுப்பில் விட்டுவிட்டு, அந்த நாளை உல்லாசமாகக் கழிக்க வேண்டுமென்று சென்றிருந்தார்கள். அவர்களில் யாருமே வீடு திரும்பவில்லை. பணிப்பெண்ணை அனுப்பிவிடும்படிக்கும், அந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ளும்படிக்கும் யாருமே வரவில்லை. எஜமானனும், எஜமாட்டியும், மற்றவர்களும் திரும்ப வராத நிலையில், குழந்தையை காத்துக் கொண்டிருந்த அந்தப் பணிப்பெண்ணின் கவலையை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். இன்னொரு வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தையோடு மாடியில் படுத்திருக்கும் ஒரு தாய். வெளியில் சென்றிருந்த அவரது கணவனும்  மற்ற குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. இந்த மாதிரியான துயரங்கள் நமக்கு நேரிடாமல் இருப்பதாக! இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் பயத்தோடு அந்த கேள்வி கேட்கப்படுகிறது, “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?”

நோயின் கொடூரம் தாக்கும் காலங்களிலும்  இந்தக் கேள்வி கேட்கப்படும். இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. நான் முதன்முதலில் லண்டனுக்கு வந்தபோது, காலரா வியாதி எங்கும் பரவியிருந்தது. இரவும் பகலும் வீடுவீடாக செல்ல வேண்டிய கடமைக்கு உட்பட்டிருந்தேன். பார்க் தெருவில் என் நண்பர்களை சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும், “அவர் இறந்து விட்டார், அந்த அம்மாள் மரித்துப் போய்விட்டார்கள்” என்கிற துயர செய்தியைப் பரிமாறிக் கொள்வோம். அந்த துயரத்தினால் நான் நோய்வாய்பட்டுகூட போனேன். நமக்குத் தெரிந்தவர்களையும் உறவினர்களையும் குறித்து இம்மாதிரியான கேள்வி எழும்புவது இயற்கையே, “அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? அவர் சுகமாயிருக்கிறாரா?”

வருங்காலத்தில் இந்த மாதிரியான துயரங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கைப் பாதையில் சந்திக்க நேர்ந்தால், உங்களுக்கு அருமையானவர்களை இழந்துவிட்டதான பயம் தோன்றியதானால், நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கும்பட்சத்தில் அவ்வேளைகளில் விசுவாசத்தை இழக்காமல் கடவுளை சார்ந்து இருங்கள் என புத்தி கூறுகிறேன். உங்கள் மனம் குழம்பிப் போகும் அளவிற்கு நீங்கள் கவலை அடைந்தீர்களானால், ஆபத்துக் காலங்களில் உங்களால் ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பதை எண்ணிப் பாருங்கள். உங்கள் ஆத்துமாவில் நீங்கள் அமைதலைக் கொண்டிருந்தீர்களானால் நீங்கள் உபயோகமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஆனால் மனதின் கட்டுப்பாட்டை இழந்து, சூழ்நிலையின் பயங்கரத்தை எண்ணி மிகுந்த துயரத்திற்குள் ஆழ்வீர்களானால் உங்களால் எந்தப் பிரயோஜனமும் உதவியும் இருக்காது. பொறுமையோடு உங்கள் ஆத்துமாவைக் காத்துக் கொள்ளுங்கள். எப்படியும் உலகமானது கடவுளின் கரத்தில்தானே இருக்கிறது. கடவுள் பரலோகத்திலிருந்து தீர்மானித்திருக்காவிட்டால் பிள்ளையாண்டானாகிய அப்சலோம் இறந்திருக்க மாட்டான். உங்கள் பிள்ளைகள் உன்னதமானவரின் நடத்துதலுக்கு அப்பால் இல்லை. அவர்கள் உங்களுக்கு எவ்வளவுதான் அருமையானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும், ஆளுகிறவர் ஒருவர் இருக்கிறார். அவர் சகலத்தையும் ஆளுகிறார். பொறுமையில்லாமல் முறுமுறுப்பதைவிட அமைதலான ஜெபத்திற்கு அதிக வல்லமையுண்டு. உங்களுக்குப் பிரியமானவர்கள் இறந்துபோய்விட்டால், நீங்கள் விசுவாசத்தை இழப்பதன் மூலமாக அவர்களைத் திரும்பப் பெற முடியாது. அவர்கள் உயிரோடிருக்கையில் தேவையில்லாமல் நீங்கள் மனத்தளர்ச்சியாகவோ அவிசுவாசமாகவோ இருப்பது சரியல்ல. “அமர்ந்திருப்பதிலேயே உங்கள் பெலன் இருக்கிறது.” நீங்கள் ஒரு கிறிஸ்தவர்கள் என்பதை நினைவில் வையுங்கள். கடவுளற்ற மற்றவர்களைப் போல இல்லாமல், கிறிஸ்தவர்கள் நிதானத்தோடு தங்களை அடக்கி ஆளவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள். விசுவாசத்தினால் கிறிஸ்தவர்கள் பதட்டமின்றி செயல்படுவது மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். மற்றவர்கள் பதறிக் கொண்டிருக்கையிலே, கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் அமைதலோடு நடந்து கொள்வதைப் பார்க்கையில் “என்ன இது?” என்ற கேள்வி பிறருக்கு எழும். “கடவுளின் கரம் இதில் செயல்பட்டிருக்கிறது” என்பதை கிறிஸ்தவர்கள், தங்களை அறியாமலேயே பறைசாற்றுகிறவர்களாக காணப்படுவார்கள். ஆகவே நீங்கள் அந்த விசனமான கேள்வியை கேட்க நேரிடும்போது, கடவுள் மீதுள்ள விசுவாசத்தோடு, அமைதலாக உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஆனால் நண்பர்களே, சில வேளைகளில் நாம் இந்தக் கேள்வியை நமது நண்பர்களைக் குறித்தும் பிள்ளைகளைக் குறித்தும் அவர்களுடைய நித்திய வாழ்க்கை சம்பந்தமாக கேட்க வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் மரித்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக மரிக்கவில்லையென்று நாம் அச்சப்படுகிறோம். ஆகவே நாம், “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்கிறவிதமாக விசாரிக்கிறோம். கிறிஸ்தவ ஊழியக்காரரிடம் இந்தக் கேள்வியை கேட்கும்போது அது அவருக்கு மிகுந்த மனசங்கடத்தை வருவிக்கும். பெரும்பாலானவர்களின் நிலையைக் குறித்து அவரால் எதுவும்கூறக் கூடாமல் இருக்கும். மரித்தவரைக் குறித்து எதுவும் கூறும் அளவிற்கு அவருக்கு அநேகமாக மரித்தவரைப் பற்றி எதுவும் தெரியாமலிருக்கலாம். மரணப்படுக்கையில் இருந்த வேளையில் அவரை சந்திக்கச் சென்ற ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய சில வார்த்தைகள் வேண்டுமானால் உற்சாகத்தைத் தருவதாக இருக்கலாம். இருந்தாலும் அதைக் கொண்டு என்ன சொல்ல முடியும்? மரணத்தறுவாயில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதும், பிறரை ஏமாறச் செய்வதும் வெகு சுலபம். ஆகவே நாம் நியாயந்தீர்ப்பதையும் முடிவுகூறுவதையும் கடவுளின் கரத்திலேயே ஒப்புவித்துவிடுவது நல்லது. மரணப்படுக்கையிலிருந்தவரின் வாழ்க்கை முழுவதையும் நன்கு அறிந்திருந்தவரும், வியாதியின் தறுவாயில் அவரோடேகூடவே இருந்து அவரை மேலும் அறிந்திருந்தவர்கள் அவரது நிலையைக் குறித்து என்னவென்று தீர்மானிப்பது? இதற்கு நான் கூறும் பதிலாவது, முந்தைய காலங்களில் பக்தியாக இல்லாதவராக வாழ்ந்து, கடைசிகாலங்களில் மிகவும் தாமதமாக மனந்திரும்புதல் ஏற்பட்டாற்போலத் தோன்றினால், அதற்குரிய அடையாளங்களும் மிகவும் கொஞ்சமானதாகத்தான் தென்பட்டிருந்ததானால் – நம்பிக்கையிருந்தாலும், உண்மையின்படி தீர்மானித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அனுமதியுண்டு, ஆனால் அது உள்ளதின்படி உண்மையாயிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் சிலபேரிடம் காண்கிற அஞ்ஞானத்தைக் கைவிடுங்கள். தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடவுள் பயமின்றி வாழ்ந்து முடித்தவர்கள், தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் கிருபையின் அடையாளத்தை சிறிதளவாவது காண்பிக்காமல் வாழ்ந்து, மரணதறுவாயில் பக்தியின் அடையாளத்தை ஒன்றிரண்டு முறை காண்பித்துவிட்ட காரணத்தினால் அவர்களுடைய மகனையாவது, மகளையாவது, நண்பனையாவது அணைத்துக் கொண்டு அவருடைய ஆத்துமா சுகமாக இருப்பதாக ஆறுதலாகக் கூறுகிற அஞ்ஞானத்தை விட்டுவிடுங்கள். இஷ்டமானால் உங்களுக்குள் நம்பிக்கை கொண்டிருங்கள். ஆனால் நீங்கள் என்ன வார்த்தைகளைக் கூறுகிறீர்கள் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். கடவுள் பக்தியில்லாமல் வாழ்ந்த அதிகமான நாட்களின் பலனைக் காட்டிலும், மரணதறுவாயில் கூறிய சில வார்த்தைகளுக்கு நீங்கள் அதிகமான மதிப்பளித்தீர்களானால் அது மிகவும் முட்டாள்தனமானது. அவை அந்தக் குடும்பத்தில் மீதியாயிருப்பவர்களுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும். தங்கள் வாழ்நாள் முழுவதும் இஷ்டம்போல வாழ்ந்துவிட்டு, மரிக்கும்போது பரிசுத்தவான்களாக ஆகிவிடலாம் என்கிற எண்ணத்தை அது அவர்களுக்குள் ஏற்படுத்திவிடும். தன்னுடைய மகன் கடவுள் பயமின்றி வாழ்ந்துவிட்டு, மரித்துப் போகும்போது ஒரு தகப்பன் தன்னுடைய மற்ற பிள்ளைகளைக் கூட்டிவைத்து, “பிள்ளைகளே, மரித்துப்போன உங்கள் சகோதரனைக் குறித்த நம்பிக்கை எனக்கு இருக்குமானால் நன்றாக இருந்திருக்கும். அவன் தன் வாழ்நாள் முழுவதையும் கிறிஸ்துவனல்லாதவனாகக் கழித்துப் போட்டான். அவன் முழுவதுமாக அழிந்துவிட்டான் என்றுதான் அஞ்சுகிறேன். அவன் வாழ்ந்ததைப் போல நீங்களும் வாழாதபடிக்கு நான் உங்களை அன்போடு எச்சரிக்கிறேன். இல்லையென்றால் அவனைப் போலத்தான் நீங்களும் மடிந்து போவீர்கள்” என்று ஒரு தகப்பன் சொல்வானாகில் அவன் கூற்றில் இருக்கும் உண்மையைக் குறித்து நாம் பாராட்டலாம். அப்படிப்பட்ட தகப்பனைப் போல ஒருவேளை என்னால் சொல்ல முடியாவிட்டாலும், அவ்வார்த்தைகளின் உண்மையை நான் மேன்மையானதாகக் கருதுவேன். “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டியதாக இருந்தால், உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொள்ளும்விதமான நம்பிக்கையை அளிக்காதீர்கள். ஒருவனுடைய வாழ்க்கை முழுவதையும் அறியாதிருக்கும்பட்சத்தில் ஒருசில காரியங்களை வைத்துக் கொண்டு எதையும் தீர்மானித்துவிடாதிருங்கள். நிச்சயமிருந்தால்தான் எதையும் தீர்மானிக்க முடியும். ஏனென்றால், “அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறதே.

இளைஞர், முதிர்வயதானவர்களின் ஆவிக்குரிய நிலையைக் குறித்து அவர்கள் உயிரோடே இருக்கையிலேயே, நாம் கவலையுடன் கேட்கிற நடைமுறைக் கேள்வி “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?”.

“பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்பதற்கு அவன் எதிர்காலத்தில் சுகமாயிருப்பானா? என்பது அர்த்தம் – அதாவது இந்த உலகத்திலும் இனி வரப்போகும் உலகத்திலும் அவன் சுகமாயிருப்பானா என்பது. கடவுளை அறியும்படி விசாரித்துக் கொண்டு ஒருவன் வருவதை நாம் காண்கிறோம். தனது கவலைகளையெல்லாம் அவன் கூறுவதைக் கேட்கிறோம். அவனது கண்ணீரைக் காண்கிறோம். அதனால் அவன் பாதுகாப்பான நிலைக்கு வந்துவிட்டதாகக் கூற முடியுமா? இல்லை, அத்தோடு அவன் நிறுத்திக் கொண்டானாகில் பாதுகாப்பாக இல்லை. அதுமுதல் அவனை கடவுளின் ஆலயத்தில், நன்றாக கவனித்துக் கேட்கிறவர்களின் மத்தியில் இருக்கக் காண்கிறோம். பிரசங்கத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கவனிப்பதற்காக ஆசனத்தில் முன்னுக்கு வருகிறான். ஆம், அவன் கவனத்தோடு கேட்கிறான் என்பது நிச்சயம். இப்போது அவன் பாதுகாப்பாக இருக்கிறானா? அத்தோடு நிறுத்திக் கொண்டானாகில் அவன் பாதுகாப்பாக இல்லை. அவன் தேடுகிறவன்தான். அதைக் குறித்த சந்தேகமில்லை. அவன் இப்பொழுது வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கிறான். ஜெபத்தின் மூலமாக கடவுளிடம் வருவதற்கு முயற்சிக்கிறான். இல்லை, இதுவரைக்கும் வந்தால்கூட அவன் பத்திரமாக இல்லை. அவன் இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற நிலைக்கு வரவேண்டும். பரிகாரபலியாகிய அவரது இரத்தத்திற்கு தன்னை ஒப்புவிக்க வேண்டும். இல்லையென்றால் அவன் பாதுகாப்பாக இல்லை. ஞாயிறு பாலர் பள்ளியின் ஆசிரியர்களே, உங்கள் மாணாக்கர்களைக் குறித்து நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, அவர்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கிறார்களா? அவர்கள் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி திரும்பியதான நிலைக்கு வந்துவிட்டார்களா – சாத்தானின் பிடியிலிருந்து இயேசுக்கிறிஸ்துவின் கரத்துக்குள் வந்துவிட்டார்களா? “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறானா? என்பதுதான் விஷயம்.

கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரைக் குறித்து கேள்விப்படுகிறேன். இரட்சிக்கப்பட  விரும்புகிறவர்களை அவர்கள் தங்கள் அங்கத்தினராக ஏற்றுக் கொள்கிறார்களாம். அவர்களுடைய திட்டத்தை நான் நியாயந்தீர்க்கவில்லை, ஆனால் அதை பின்பற்ற நான் துணியமாட்டேன். இரட்சிக்கப்பட ஆசைப்படுதல் என்பது சாதரணமான விஷயம். விரும்புதல் வெகுசுலபம். இரட்சிக்கப்படுதல் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. அந்தக் கேள்வியின் மீதில்தான் நமது கவனம் முழுவதும் அதிகரிக்க வேண்டும். “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” – சுகமாக இருப்பதாக நம்பிக் கொள்வதாலோ, தூண்டுவதாலோ, அறிவிப்பதாலோ அல்ல, உண்மையில் “சுகமாயிருக்கிறானா?” அவன் கர்த்தருக்குள்ளாக நித்தியமான பாதுகாப்பைப் பெற்றிருக்கிறானா? இதை நீங்கள் அனைவரும் கேட்டு, உங்களுக்குள் பதில் கூறிக் கொள்ளுங்கள்.

3. “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” என்கிற கேள்விக்கு வரக் கூடிய பதில்கள்.

வேற்றூர்களிலிருந்து லண்டன் மாநகரத்திற்கு வந்திருக்கும் பிள்ளைகளைக் குறித்து இந்த கேள்வியைக்  கேட்கும் கடிதங்கள் அடிக்கடி வருகிறது – “என் மகன் ஹேரி சுகமாயிருக்கிறானா! என் மகன் ஜான் சுகமாயிருக்கிறானா?”. சிலவேளைகளில் அதற்கு பதில்: “இல்லை, அவன் சுகமாக இல்லை. அவன் மிகுந்த ஆபத்தில் இருக்கிறான் என வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்”. ஒருவன் பாதுகாப்பாக இல்லை என்பதை எப்போதெல்லாம் அறியலாம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவன் அப்சலோமைப் போல தன் தகப்பனுக்கு விரோதமாக செயல்படும்போது அவன் பாதுகாப்பாக இல்லாமலிருக்கிறான். அவன் ஆராதனைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறவனாய் இருக்கலாம். ஜெபிக்கிறவனாய் இருக்கலாம். கிறிஸ்தவன் என்கிற பெயரை உடையவனாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் தன் பெற்றோரை விரோதிக்கும்பட்சத்தில் அவன் பாதுகாப்பானவனாக இல்லை. அப்படி இருக்கவே முடியாது. வேதவசனம் கூறுகிறது, “தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” சகோதரன் என்கிற இடத்தில் தகப்பன் என்கிற வார்த்தையை வைத்துப் படித்தால் இவ்வசனம் இன்னும் வலிமையாக இருக்கும். பூலோகத்திலுள்ள தன் பெற்றோர் மீது அன்புகூராமலிருக்கிறவன், பரலோகத்திலிருக்கிற தன் பிதாவில் எப்படி அன்புகூருவான்? அப்படிப்பட்டவன் பாதுகாப்பான நிலையில் இல்லவே இல்லை.

“பிள்ளையாண்டான் சுகமாயிருக்கிறானா?” இல்லை. சமீபகாலங்களில் அவனை தீயநண்பர்களோடு பார்க்கிறோம். நல்லொழுக்கம் இல்லாத மற்ற இளைஞர்களோடு அவன் பழகிக் கொண்டிருக்கிறான். தரக்குறைவான பாடல்களும் பேச்சுவார்த்தைகளும் அதிகமாக இருக்கின்ற இடத்திலே அவன் தன் மாலைப்பொழுதுகளை செலவிட விரும்புகிறான். இளைஞனாகிய அப்சலோம் அவ்விடத்திலே பாதுகாப்பாக இல்லை. அவன் ஒருவேளை ஒழுக்கமுடையவனாக இருந்தாலும், இந்த மாதிரியான சகவாசத்தை நாடி அவன் போவானாகில் அவனது ஒழுக்கம் அதிக நாட்களுக்கு நீடிக்காது. நீங்கள் நிலக்கரி இருக்கும் இடத்திலே உட்கார்ந்தீர்களானால், அது உங்களை சுடாவிட்டாலும், அதன் கருப்பு நிறம் உங்கள் மீது ஒட்டிக் கொள்ளும். நீங்கள் தீயவர்களின் தோழமையை தேர்ந்தெடுத்தீர்களானால், ஒருவேளை நீங்கள் அவர்கள் அளவுக்குக் கெட்டுப் போகாவிட்டாலும் உங்களுடைய நற்பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். இங்கேயும் அப்சலோம் சுகமாயிருப்பதில்லை.

அப்சலோம் பத்திரமாயில்லாமற் போனதற்கு இன்னொரு காரணம் அவன் விலையுயர்ந்த பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டதுதான். “அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்குமுன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்” என்று வேதவசனம் குறிப்பிடுகிறது. இவ்விதமான ஆடம்பரம் தீங்குக்கு அடையாளமாயிருக்கிறது. தேவையில்லாதவைகளில் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிற இளைஞன் பாதுகாப்பாக இருப்பதில்லை. சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிற சில இளைஞர்கள் இந்த லண்டன் மாநகரத்திலே பணக்காரர்கள் போல நடந்து கொள்வதைப் பார்க்கையில் அதில் ஏதோ தவறு இருக்கிறது என்று நாங்கள் அஞ்சுகிறோம். எளியவர்களாய் இருந்தாலும் உண்மையையும் மரியாதையையும் உடைய இவர்களுடைய தகப்பன்மார் இவர்களை இவ்வளவு டாம்பீகமான ஆடைஅலங்காரத்தில் கண்டார்களானால் மகன்களை அடையாளங்கண்டு கொள்ள மாட்டார்கள். தங்களுடைய தகுதிக்கும் வரம்பிற்கும் மிஞ்சி இளைஞர்கள் பகட்டான வாழ்வை நாடி ஓடுவது தீமைக்கு அடையாளம். அவரவர் வருமானத்திற்கும் நிலமைக்கும் ஏற்ப செலவழிக்க மனிதனுக்கு உரிமையிருக்கிறது. பகட்டான வாழ்க்கை, தீமையை சுட்டிக்காண்பிப்பதாக இருந்தாலும், பதவியையும் பொக்கிஷத்தையும் பொறுத்து செல்வந்தர்கள் வாழுகின்ற முறையைக் குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. சில விடலைப் பருவத்தினர், படிப்பை முடிக்கும் தறுவாயிலிருப்பவர்கள், அவர்களின் கைச்செலவுக்குக் கொடுக்கப்படும் தொகை அவ்வளவு அதிகமாகவும் இல்லை. இருந்தாலும் அவர்கள் மிகவும் ஆடம்பரமாக சகலவிதமான உல்லாசங்களிலும் ஈடுபடுவதை நான் காணும்போது, இந்த “பிள்ளையாண்டானாகிய அப்சலோம்” சுகமாக இல்லை என்று நிச்சயமாக உணருகிறேன்.

இன்னொரு காரியம். ஒருவனுடைய தோற்றத்தை வைத்தே அந்தப் பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாக இல்லை என்பதை நீங்கள் கூறிவிடலாம். “இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்திரியமுள்ளவனும் மெச்சிக் கொள்ளப்பட்டவனும் இல்லை. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. அவன் தன் தலைமயிர் தனக்கு பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக் கொள்ளுவான். சிரைக்கும்போது அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும் ” என்று வேதவாக்கியம் கூறுகிறது. தங்கள் ஆடை அலங்காரத்திலும், முடியை அழகுபடுத்திக் கொள்வதிலும், தங்கள் தோற்றத்தைக் குறித்தும் வாலிபவயதினர் அளவுக்கு மீறி அக்கறை செலுத்தும்போது அவர்கள் பாதுகாப்பாக இல்லை. ஏனென்றால் பெருமைப்படுதல் ஆபத்தில் வந்து முடியும். இளைஞர்களும் யுவதிகளும் அவரவர் நிலைமைக்கேற்ப உடுத்திக் கொள்ளட்டும். அதற்காக நாங்கள் அவர்களைக் குற்றப்படுத்துவதில்லை. Mr. Jay என்பவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது, “பெண்களே உங்கள் வருமானம் எத்தனை காசு என்பதை எனக்குச் சொல்வீர்களானால், நீங்கள் எத்தனை ரிப்பன்களைக் கட்டிக் கொள்ளலாம் என்பதை நான் உங்களுக்குக் கூறுவேன்” என்றார். நானும் அப்படியேதான் கூறுவேன் என நினைக்கிறேன். தங்கள் அழகிலும், உடையிலும் வீணாகக் காலத்தை செலவிடுகிற இளம்வயதினர் பலவிதமான சோதனைகளுக்குள் அகப்படுகிறார்கள். அவர்களுடைய நற்குணங்களையும், நல்ல தீர்மானங்களையும் அரித்துப் போடுகிற புழுவாக அது அவர்களுடைய மூளையிலும் இருதயத்திலும் செயல்படுகிறது. அழகிய தோற்றத்தில் அதிகமாக அக்கறை செலுத்துகிற வாலிபவயதினர் பாதுகாப்பான நிலையில் இல்லை.

இளைஞனாகிய அப்சலோம் சுகமாக இல்லை என்பது அவன் துன்மார்க்க காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தபோது நமக்கு நிச்சயமாகத் தெரியும். அப்சலோம் என்ன செய்தான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதைக் குறித்து நான் விவரமாக பிரசங்கிக்க அவசியமில்லை.  அநேகமான இளைஞர்கள் வெளிப்பார்வைக்கு கெட்டவர்கள் போலத் தோன்றாவிட்டாலும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வழிவிலகிப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய இரகசியம் முழுவதையும் அம்பலமாக்கினால், சமுதாயத்தில் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கிற மரியாதைக்குரியவர்களின் அருகில் அமரவும் வெட்கப்படுவார்கள். அப்படிப்பட்ட பிள்ளையாண்டானாகிய அப்சலோம் பத்திரமானவனாக இல்லை.

“பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா?” “இல்லை, தாவீது, நாங்கள் கடைசியாக அவனைப் பார்த்தபோது, யுத்தத்தில் ஜனங்கள் அவனை சுற்றிலும் மடிந்து கொண்டிருக்கக் கண்டோம்.” ஆகவே அவன் சுகமாயில்லை. மற்றவர்கள் விழுந்து கொண்டிருக்கிறபோது அவன் எப்படி பத்திரமாக இருக்க முடியும்? ஆம், நான் ஒருமுறை இளைஞன் ஒருவனைக் கீழ்த்தரமான கேளிகை விடுதியிலிருந்து நள்ளிரவில் வந்துகொண்டிருக்கக் கண்டேன். “இந்த பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயில்லை” என நான் நினைத்துக் கொண்டேன். ஏனெனில் அங்கு செல்பவர்களில் அநேகர் அழிந்து போகிறார்கள். குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டிக் கொண்டிருக்கிறவனைக் காண்கிறேன். “இந்த பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயில்லை, ஏனெனில் அங்கு செல்கிற திரள்கூட்டத்தார் அழிந்து போகிறார்கள்” என நினைத்தேன். கட்டுப்பாடுகளற்ற விதத்தில் வாழ்கிற கூட்டத்தாரோடு ஒரு மாலையில் அவனைக் கண்டேன். நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், “இந்தப் பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயில்லை. விலைமதிப்பில்லாத வாழ்க்கையை வேட்டையாடுகின்ற கூட்டத்தால் இவன் சூழப்பட்டிருக்கிறானே.” மற்றவர்கள் விழுந்து போய்க் கொண்டிருக்கிறதான இடத்தில் நாம் இருப்பது நமக்கு ஒருபோதும் பாதுகாப்பானதல்ல. அவர்கள் அழியும்போது நாம் மாத்திரம் அழியமாட்டோமா? இதிலுள்ள ஆபத்தை நான் அவனிடம் சுட்டிக் காட்டியபோது அவன் அதிலுள்ள ஆபத்தைப் பாராமல் என்னிடம் கோபமாகப் பேசினான். தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று தனக்குத் தெரியும் என்றான். அவன் கூறுவதை சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவனைத் துன்மார்க்கனாய் ஆக்கக்கூடிய கீழ்த்தரமான கேளிக்கை விடுதிகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். அவன் கூறிக்கொள்வது: “தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத சில இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் என்னால் என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். நான் விரும்புகிற இடத்தில் என்னால் எல்லைக்கோடு போட்டுக் கொள்ள முடியும். நான் உல்லாசத்தை விரும்புகிறவன். ஆனால் நான் கெட்டவனல்ல. நான் சுதந்திரப்பறவை, நான் துன்மார்க்கனல்ல.” உண்மைதான் மகனே, ஆனால் எழுதப்பட்டிருக்கிறதே, “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் பத்திரமாக இல்லை” என்று. பத்திரமாக இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பதில் பாதியளவுகூட அவன் பத்திரமாக இல்லை. தன்னைக் குறித்து மிதமிஞ்சிய நம்பிக்கை கொண்டிருப்பது அதிக ஆபத்தானது. அதிலும் மற்றவர்கள் விழுந்து கொண்டிருக்கிற இடத்தில் தன்னால் ஜெயித்துவிட முடியும் என நினைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. இந்தப் பிள்ளையாண்டானாகிய அப்சலோம் பத்திரமாக இல்லை.

இன்று இரவிலே இங்கு வந்திருக்கிற இளைஞனைக் குறித்த விளக்கமே நமது கேள்விக்குரிய அடுத்த பதிலாகும். அவன் ஒரு நல்ல இளைஞன். எல்லோரும் அவனை அறிந்திருக்கிறோம். அவனை நேசிக்கிறோம். நம் மத்தியில் அவன் வருவதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அவன் சுவிசேஷத்தை மிகவும் கவனமாகக் கேட்பவன். சுவிசேஷத்தை நேசிப்பவன், ஆனால் அவன் இன்னும் முடிவெடுக்கவில்லை. கிறிஸ்துவை தனது கர்த்தராக அறிக்கையிட்டு, கடவுளின் ஜனங்களோடு சேர்ந்து இருப்பதைக் குறித்த முடிவுக்கு வரவில்லை. “கொஞ்சம் குறைய என்னைக் கிறிஸ்தவனாக சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என்று சொல்லுகிற நிலையிலே காணப்படுகிறான்.               ஆனால் இன்னும் அவன் சம்மதிக்கவில்லை. இந்த இளைஞன் பத்திரமாக இருக்கிறானா? இல்லை. நம்பிக்கையோடு இருக்கிறான். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! அவனுடைய பாதுகாப்பிற்காக நாமும் முடிந்த அளவு ஜெபிப்போம். ஆனால் அவன் இன்னும் பாதுகாப்பாக இல்லை. நதியில் மூழ்கிப்போன பிரின்ஸஸ் ஆலிஸ் என்கிற மரக்கலத்திலிருந்து மீட்டு எடுக்கப்பட்டாலும் அவர்கள் அனைவரும் மடிந்திருந்தனர். ஏறக்குறைய பாவத்திலிருந்து மீண்டுவிட்டேன் என்கிறவர்கள் அனைவரும் காணாமற் போனவர்களே. ஏறக்குறைய உயிரோடிருக்கிறேன் என்பீர்களானால் நீங்கள் மரித்தவர்களே. கொஞ்சங்குறைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதென்றால் நீங்கள் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டவர்கள். ஏறக்குறைய உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நினைத்தால் உயிர்ப்பிக்கப்படவேயில்லை. கொஞ்சங்குறைய கிறிஸ்தவன் என்றால் நீங்கள் கடவுளற்றவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள். நீங்கள் ஏறக்குறைய இரட்சிக்கப்பட்டவர்களாக மரித்தால் நீங்கள் மொத்தத்தில் நஷ்டத்திற்குள்ளாகவே இருப்பீர்கள்.

ஓ, எனதருமை இளம் சகோதரனே, “ஆம் இந்த பிள்ளையாண்டானாகிய அப்சலோம் பத்திரமாக இருக்கிறான். அவன் தீர்மானித்துவிட்டான். அவன் தன்னை இயேசுக்கிறிஸ்துவின் கரத்தில் ஒப்புவித்துவிட்டான். இயேசுக்கிறிஸ்து அவனைக் கடைசிமட்டும் காத்துக் கொள்ளுவார்” என்று உங்களைக் குறித்த கேள்விக்கு விடையளிக்க ஆசைப்படுகிறேன். பரிசுத்தஆவியானவர்தாமே இதற்கு உங்களை வழிநடத்துவாராக.

இன்னொரு சந்தோஷமான காரியம் மீதியாயிருக்கிறது. அந்தக் கேள்விக்கு மிகுந்த சந்தோஷமான விடையொன்றிருக்கிறது. அதை நான் கூறப் போகிறேன் “ஆம்.” பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறான்.

எப்படி? ஏனென்றால் அவன் கிறிஸ்துவில் ஒரு விசுவாசி. அவன் தன்னை இயேசுவுக்கு ஒப்புவித்திருக்கிறான். தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே கிறிஸ்து அவனை பாதுகாத்து இரட்சிக்கும்படியாக அவன் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறான். கிறிஸ்துவினுடையவனாக என்றென்றைக்கும் இருக்கும்படியாக அவன் தன்னை முழுவதுமாக கிறிஸ்துவின் கரத்தில் ஒப்படைத்திருக்கிறான்.

இந்த இளைஞன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான். ஏனென்றால் அவன் சுவிசேஷத்தை நேசிக்கிறான். வீணானவைகளைக் கேட்பதற்கு எங்கும் போகாமல், சுவிசேஷத்தைக் கேட்பதற்கு மாத்திரம் செல்கிறான். சத்தியத்தில் உறுதியாயிருக்கிறான். களங்கமில்லாத ஞானப்பாலை அறிந்திருக்கிறான். கள்ள உபதேசங்களினால் வஞ்சிக்கப்பட்டு வழிவிலகிவிட மாட்டான். ஏனென்றால் அவன் அதை வெறுக்கிறான். இங்கேயும் அங்கேயும் போய் பலகாரியங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதில் அவனுக்கு மகிழ்ச்சியில்லை. தனது ஆத்துமாவை இரட்சித்தது எதுவென்று அவனுக்குத் தெரியும். அந்த ஆரோக்கியமான உபதேசத்தை விடாமல் பற்றிக் கொண்டிருப்பான். இந்த இளைஞன் பத்திரமாக இருக்கிறான்.

இவன் பத்திரமாக இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவன் மிகுந்த தாழ்மையுள்ளவன். அவன் இன்னும் பூரணமடையவில்லை. அப்படி அவன் சொல்லிக் கொள்வதுமில்லை. தனது நிலையைக் குறித்து அவன் பெருமை கொள்வதில்லை. குழுவில் தன்னை முதன்மையானவனாகக் காட்டிக் கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை. உபயோகமாக இருக்கும்விதத்தில் எவ்விடத்திலிருந்தாவது செயல்பட ஆர்வமுள்ளவன். தான் ஒரு சரியான கிறிஸ்தவனா என்கிற கேள்வியை அடிக்கடி கேட்டு, தன்னை கிருபைக்கு ஒப்புவிக்கிறான். அவன் மிகவும் தாழ்மையுள்ள இளைஞன். ஆகவே அவன் பாதுகாப்பாக இருக்கிறான். அப்படிப்பட்டவனை கர்த்தர் பாதுகாக்கிறார்.

மேலும் தன்னைக் குறித்த அவநம்பிக்கை உடையவன்.   தவறான பாதையில் சென்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அடியெடுத்து வைக்க எப்போதும் தயங்குகிறவன். பாதை காட்டும்படியாக எப்போதும் முழங்காலில் நின்று மன்றாடுபவன். கடவுளின் நடத்துதலுக்காக காத்திருப்பவன். கர்த்தருடைய வசனமும் ஆவியானவரின் வழிநடத்துதலும் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்யத் துணிய மாட்டான். அவன் ஜெபிக்கிற மனிதன். ஆகவே அவன் பாதுகாப்பாக இருக்கிறான். கிருபாசனத்தண்டையிலே கிட்டிச் சேர்ந்தவனை யாரால் வீழ்த்த முடியும்? தினசரி வாழ்க்கையில் மிகவும் கவனத்தோடு நடக்கிறவன். கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்ப்படிய தன்னை ஒப்புவிக்கிறான். பரிசுத்தமாக நடப்பதற்கு முயற்சிக்கிறான். பரிசுத்தமாக இருப்பதே பாதுகாப்பானது.

உலகமக்கள் அவனை போலியானவன் என்றும் மாய்மாலக்காரன் என்றும் கூறுகிறார்கள். சகலராலும் இகழ்ந்து ஒதுக்கப்பட்ட மீட்பரின் சிஷ்யன் இவன் என்று முத்திரை குத்துகிறார்கள். அவன் ஒரு குணசாலி, இல்லையென்றால் அவனை இவ்வளவு துன்பப்படுத்த மாட்டார்கள். கடவுளின் ஜனங்களோ அவனை நேசிக்கிறார்கள். அவனும் அவர்களை        நேசிக்கிறான். அவன் அவர்கள் மத்தியில் தங்குகிறான். கடவுளின் ஆலயத்தைக் குறித்து அவன் கூறுவதாவது,

“இங்கேதான் எனக்கு அருமையான நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள்,

இங்கே தேவனாகிய என் மீட்பர் ஆளுகிறார்.”

இப்படிப்பட்ட இளைஞனைக் குறித்து அவனுடைய தகப்பனுக்கும் நண்பர்களுக்கும் எழுதுங்கள், “இந்த பிள்ளையாண்டான் சுகமாயிருக்கிறான்” என்று. அவன் கிறிஸ்துவில் இருக்கிறான். அவன் கிறிஸ்துவின் சபையில் இருக்கிறான். அவன் கடவுளுக்கு ஊழியம் செய்ய ஆவலாயிருக்கிறான். அவன் தனது எஜமானனுக்காக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டான். அவன் இயேசுவிடம் ஆத்துமாக்களை அழைத்துவர முயற்சிக்கிறான். பரிசுத்தஆவியானவர் தேவனுக்கு மகிமை வரும்படியாக அவனிலும் அவன் மூலமாகவும் கிரியை செய்கிறார். ஆம், அவன் தகுந்த பாதுகாப்பில் இருக்கிறான் “இயேசுவின் கைகள் காக்க” பத்திரமாக இருக்கிறான்.

இத்தியானத்தோடு வாசிக்கக்கூடிய வேதபகுதி – சங் 90

%d bloggers like this: