Skip to content

3. இளைஞர்களுக்கு பொதுவான அறிவுரைகள்

இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS

3. இளைஞர்களுக்குரிய பொதுவான அறிவுரைகள்

இளைஞர்களுக்கு சில பொதுவான அறிவுரைகளைக் கூறவும் விரும்புகிறேன்.

i) பாவத்தின் தீமையைக் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்

இளைஞர்கள் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இளைஞனே, பாவம் என்பது என்ன என்பதையும், அது என்னவெல்லாம் செய்யும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தாயானால், நான் எதற்காக இப்படி புத்தி சொல்லுகிறேன் என்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட மாட்டாய். பாவத்தின் உண்மையான தோற்றம் என்னவென்பதை நீ அறியாமல் இருக்கிறாய். அதன் பயங்கரத்துக்கு உனது கண்கள் அடைக்கப்பட்டிருப்பதால்தான், நான் ஏன் உன்னைக் குறித்து இவ்வளவு கவலைப்படுகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று கூறி சாத்தான் உன்னை மேற்கொண்டுவிடாதபடி காக்கப்படுவாயாக.

பாவத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை சற்று ஆராய்வோம்:

() உயிரோடிருக்கிற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுபாவத்திலேயே பாவமுடையவர்களாய் இருக்கிறார்கள்
ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியில் இல்லை (பிர 7:20).
எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகி . . .(ரோம 3:23)

() பாவமானது, நமது எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும் விடாமல் தொடர்ந்து கெடுத்துக் கொண்டேயிருக்கிறது.
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது . . . அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே (ஆதி 6:5)
இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும் (மத் 15:19)

() பாவமானது, பரிசுத்ததேவனுக்கு முன்பாக நம்மைக் குற்றமுள்ளவர்களாகவும், அறுவெறுக்கத் தக்கவர்களாகவும் நிறுத்தியிருக்கிறது.
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல் இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையைப் போல் இருக்கிறது. . . (ஏசா 64:6)
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே (ஆப1:13)

() நம்மையே நோக்கிப் பார்க்கும்போது, இரட்சிப்படையும் நம்பிக்கை அற்றவர்களாக பாவம் நம்மை ஆக்கியிருக்கிறது
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும் (சங் 143:2)
. . . எந்த மனுஷனும் நியாயப்பிரமானத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை (ரோம 3:20)

() பாவமானது, இந்த உலகவாழ்க்கையிலே அவமானத்தையும், மறுஉலக வாழ்க்கையிலே மரணத்தையும் கொடுப்பதாக இருக்கிறது
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்திலே உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. பாவத்தின் சம்பளம் மரணம் (ரோம 6:21,23)

இவைகளைக் குறித்து நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். அறியாமையினாலே அழிந்து போன மனிதர்களைக் காட்டிலும், உயிரோடே இருந்து இன்னமும் அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்.

பாவமானது நம் ஒவ்வொருவரிலும் என்ன பயங்கரமான மாறுதல்களை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவன் பூமியின் மண்ணிலிருந்து எடுத்து உருவாக்கிய முதலாம் மனிதனைப் போல இன்று யாருமே இல்லை. அவன் கடவுளின் கரத்திலிருந்து பாவமே இல்லாதவனாக உருவாக்கப்பட்டிருந்தான். “இதோ, தேவன் மனுஷனை செம்மையானவனாக உண்டாக்கினார். அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்” (பிர 7:29). அவன் படைக்கப்பட்ட நாளிலே, மற்ற எல்லா சிருஷ்டிகளையும் போலவே, அவனையும் தேவன் “மிகவும் நல்லது” என்று கண்டார்(ஆதி 1:31). ஆனால் மனிதனின் நிலமை இப்போது எப்படியிருக்கிறது?

  • விழுந்துபோன ஒரு சிருஷ்டிப்பாக, அழிக்கப்பட்டவனாக, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சீர்கேடுகளையே காண்பிக்கிறவனாக அவன் மாறிப் போனான்.
  • அவனுடைய இருதயம், நேபுகாத்நேச்சரைப் போல, மகிமையிழந்ததாகவும், மண்ணுக்குரியதாகவும், மேலே பார்க்கக்கூடாமல் கீழானவைகளையே நோக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
  • அவனுடைய மனநிலை, எஜமான் இல்லாததால் ஒரே குழப்பமும், கட்டுப்பாடற்ற தன்மையுமாக இருக்கிற ஒழுங்கில்லாத வீட்டைப் போல ஆகிவிட்டது.
  • அவனுடைய அறிவு மங்கி எரிகிற விளக்கைப் போல முழுவதும் அணைந்துவிடுகிறதான நிலையில் இருக்கிறது. அந்த வெளிச்சம் அவனை வழிநடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறியக் கூடாதவனாக அவன் இருக்கிறான்.
  • அவனுடைய விருப்பங்கள், சுக்கான் இல்லாத கப்பலைப் போல அலைக்கழிக்கப்படுவதால், பலவிதமான ஆசைகளின் இடையே போராடிக் கொண்டிருக்கிறான். கடவுளின் வழிவகைகளைத் தவிர்த்து தனது சுயசித்தத்தின்படியான சகலவிதமான ஆசை இச்சைகளை நோக்கியே அவனது முழு கவனமும் இருக்கிறது.

அந்தோ! என்ன பரிதாபம்! எப்படி இருந்திருக்க வேண்டிய மனிதன் இன்று எப்படி இருக்கிறான்? மனிதனின் நிலையை ஆவியானவர் பல வார்த்தைகளால் விளக்க வேண்டியதாயிருக்கிறது: குருடன், செவிடன், நோயுற்றவன், நித்திரையடைந்தவன், மரித்துப் போனவன் − இப்படியாக அவனது நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நிலையை அவனில் ஏற்படுத்தியது பாவம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பாவிகளான இவர்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு என்னவிதமான பரிகார பலி தேவைப்பட்டது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய சர்வ மகிமை பொருந்திய குமாரன் இந்த உலகத்திலே வர வேண்டியதாயிருந்தது; அவர் நம்மைப் போன்ற பாவ மனுஷ சாயலைத் தரித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது; நம்மை சாபங்களிலிருந்து மீட்க, நமது மீட்புக்கான ஒரு விலையை செலுத்துவதற்காக குமாரன் இவ்வுலகிலே மனிதனாக அவதரிக்க நேர்ந்தது. அவர் ஆதிமுதலாய் பிதாவோடு இருந்தவர். அவர் மூலமாகவே சகலமும் உருவாக்கப்பட்டதான மகிமையுள்ள நிலையில் இருந்தவர். பாவத்தினிமித்தமாக பாடுபடவும், அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ள அவர் துயரப்படவும், பரலோகத்திற்கான பாதை திறக்கப்படுவதற்காக குற்றமில்லாத அவர் குற்றவாளியைப் போல மரிக்கவும் வேண்டியதாயிற்று. தேவனுடைய குமாரனாகிய இந்த இயேசுவை, பாவிகளாகிய மனிதர்கள் அசட்டை பண்ணினார்கள். அவரைப் புறக்கணித்தார்கள், வாரினால் அடித்தார்கள், பரிகாசம் பண்ணினார்கள், அவமதித்தார்கள். அவர் கல்வாரி சிலுவையிலே இரத்தம் வடிய தொங்கினதை நினைத்துப் பாருங்கள். வேதனையோடு, “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சத்தமிட்டதை சற்று யோசித்துப் பாருங்கள். அந்தக் காட்சியைக் காண சகிக்காமல் சூரியன் இருளடைந்ததையும், பூமி அதிர்ந்ததையும் பாருங்கள். அப்படியானால் பாவத்தின் அகோரம் எவ்வளவு கடுமையானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஏற்கனவே பாவம் பூமியில் எதை நடப்பித்திருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆதாமையும் ஏவாளையும் கடவுளின் பிரசன்னத்திலிருந்து துரத்தி விட்டிருந்தது. பழைய உலகத்தை வெள்ளத்தினால் அழித்துப் போட்டது. சோதோம் கொமாராவின் மேல் அக்கினியையும் கந்தகத்தையும் வருவித்து அழித்துப் போட்டது. பார்வோனையும் அவனுடைய சேனையையும் செங்கடலிலே அமிழ்த்திப் போட்டது. கானானில் இருந்த ஏழு பொல்லாத தேசங்களை அழித்தது. இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணியது. இதற்கெல்லாம் மூலகாரணம் பாவம் மாத்திரமே.

மேலும், பாவம் ஏற்படுத்தின, ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் துன்பங்களையும் துயரங்களையும் யோசித்துப் பாருங்கள். வலி, வியாதி, மரணம் − விரோதம், சண்டை, பிரிவுகள் − பகை, பொறாமை, வெறுப்பு − சூது, ஏமாற்று, வஞ்சகம் − கொடூரம், அடக்குமுறை, திருட்டு − சுயநலம், அன்பில்லாமை, நன்றியற்ற தன்மை − இவை யாவும் பாவம் பிறப்பித்திருக்கும் கனிகள். இவைகளைப் பெற்றெடுத்தது பாவமே. கடவுளின் உன்னத சிருஷ்டிப்பைக் கெடுத்து சிருஷ்டிப்பின் முகத்தில் கரியைப் பூசியிருப்பது இந்த பாவமே.

வாலிபரே, இவைகளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். பிறகு நாங்கள் ஏன் பிரசங்கிக்க வருகிறோம் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். நீங்கள் மாத்திரம் இவைகளை நன்றாக சிந்தித்து அறிந்து கொண்டுவிட்டீர்களானால், பாவத்தை ஒருபோதும் உங்கள் அருகில் வருவதற்கு விடவே மாட்டீர்கள். விஷத்தோடு விளையாடுவீர்களா? நரகத்தோடு விளையாட முடியுமா? உங்கள் கரங்களில் நெருப்பை எடுத்துக் கொண்டு செல்வீர்களா? உங்களுடைய மிகப்பெரும் விரோதியை உங்கள் மார்போடு அணைத்துக் கொள்வீர்களா?  உங்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டால் என்ன, மன்னிக்கப்படாவிட்டால் என்ன என்கிற அலட்சியப் போக்கோடு தொடர்ந்து வாழுவீர்களா? பாவம் உங்களை மேற்கொள்ளுவதோ அல்லது நீங்கள் பாவத்தை மேற்கொள்ளுவதோ உங்களுக்கு பெரிய காரியமில்லையா? ஓ! பாவத்தின் அகோரத்தையும் பயங்கரத்தையும் குறித்ததான உணர்ச்சியை அடையும்படிக்கு விழித்துக் கொள்ளுங்கள். சாலமோனின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: “மூடர் பாவத்தைக் குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள்”(நீதி 14:9).

இன்றைக்கு நான் உங்களை வேண்டிக் கொள்வதை கவனியுங்கள்: பாவத்தின் உண்மையான அகோரத்தைக் காண்பிக்கும்படியாக கடவுளிடம் ஜெபியுங்கள். உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்பட்ட பின்னால் எழும்பி அதற்காக நன்றி செலுத்தி ஜெபியுங்கள்.

ii) கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

இளைஞர்கள் இயேசுக்கிறிஸ்துவோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்

மதத்தின் முக்கிய கொள்கையே இதுதான். கிறிஸ்தவத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது இயேசுவோடுள்ள தொடர்பு. இதை நீங்கள் உணர்ந்து கொள்ளாவிட்டால், என்னுடைய எச்சரிப்புகளும், அறிவுரைகளும் பிரயோஜனமற்றது; நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணானது. ஒரு கடிகாரத்தில் முக்கியமான பாகம் இல்லாவிட்டால்கூட அதை சரிசெய்து விடலாம். ஆனால் இயேசுக்கிறிஸ்து இல்லாத மதத்தை சரிசெய்யவே முடியாது.

நான் கூறுவதைத் தவறாக விளங்கிக் கொண்டுவிடாதீர்கள். இயேசுக்கிறிஸ்து என்கிற ஒருவரை பெயரளவில் தெரிந்து வைத்திருப்பதை நான் குறிப்பிடவில்லை. அவருடைய இரக்கத்தையும், கிருபையையும், வல்லமையையும் அறிந்து கொள்ளுதலைக் குறிப்பிடுகிறேன். மேலும் வெறுமனே காதுகளால் கேட்பது மாத்திரமல்ல, இருதயத்தில் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். அவரை நீங்கள் விசுவாசத்தினாலே அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். பவுல் கூறுவது போல, “. அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகும்படி” என்கிற விதத்தில் அவரை அறிந்து கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். அவரே என்னுடைய சந்தோஷம், என் பெலன், என் ஜீவன், என் ஆறுதல், அவரே என்னை குணமாக்குபவர், என் மேய்ப்பர், எனது இரட்சகர், எனது கடவுள் என்று நீங்கள் சொல்லத்தக்கவர்களாக வேண்டுமென விரும்புகிறேன்.

ஏன் நான் இதை முக்கியமாகக் கூறுகிறேன் தெரியுமா? ஏனென்றால் கிறிஸ்துவில்தான் “சகல பரிபூரணமும் வாசமாயிருக்கிறது” (கொலோ 1:19). நமது ஆத்துமாவுக்குத் தேவையான சகல காரியங்களும் அவரில்தான் நிறைந்து இருக்கிறது. நாமோ ஒன்றுமில்லாத பூஜ்யங்கள். ஏதுமற்ற ஜந்துக்கள். நீதியோ சமாதானமோ சற்றும் இல்லாதவர்கள். பெலனோ, ஆறுதலோ அற்றவர்கள். தைரியமில்லாதவர்கள். பொறுமை இல்லாதவர்கள். இந்த பாவஉலகில் நிற்பதற்கோ தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கோ திடனற்றவர்கள். கிறிஸ்துவில் மாத்திரமே மேற்கூறிய அனைத்து காரியங்களும் நிறைந்து காணப்படுகிறது. கிருபை, சமாதானம், ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு ஆகிய எல்லாம் கிறிஸ்துவில் உண்டு. அவரை நாம் எவ்வளவுக்கு சார்ந்து வாழுகிறோமோ அவ்வளவுக்கு உறுதியான கிறிஸ்தவர்களாக இருப்போம். நாம் ஒன்றுமேயில்லை, கிறிஸ்துதான் என் நம்பிக்கை என நாம் வாழும்போதுதான் நாம் மகத்தான காரியங்களை செய்ய முடியும். அப்போதுதான் வாழ்க்கைப் போராட்டத்துக்குரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகக் காணப்பட்டு அதை மேற்கொள்ளுவோம். அதுதான் நமது வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும். ஆவிக்குரிய முன்னேற்றத்தின் இரகசியத்தை நான் கூறவா? கிறிஸ்துவில் வாழுங்கள், கிறிஸ்துவிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள், அவருடைய பெலத்தினாலே எல்லாவற்றையும் செய்யுங்கள், எப்போதும் கிறிஸ்துவையே மாதிரியாக கண்ணோக்கினவர்களாக இருங்கள். “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப் 4:13) என்று பவுல் சொல்லுகிறார்.

இளைஞர்களே, உங்களுடைய ஆத்துமாவின் பொக்கிஷமாக இன்று நான் உங்களுக்கு முன்பாகக் கிறிஸ்துவையே வைக்கிறேன். அவரிடம் செல்லும்படியாக நான் உங்களை அழைக்கிறேன். கூடுமானால் விரைந்து ஓடி அவரிடமிருந்து நன்மையானவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்துவிடம் செல்ல வேண்டும் என்பதே உங்களுடைய முதல் படியாக இருக்கட்டும். ஆலோசனை கேட்கத் தக்க நல்ல நண்பன் வேண்டுமா? இயேசுவே மிகவும் நல்ல நண்பர். “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவனும் உண்டு” (நீதி 18:24)

உன்னுடைய பாவங்களின் காரணமாக நீ அவரிடம் வரத் தகுதியற்றவன் என நினைக்கிறாயா? பயப்படாதே. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கிறது. “உங்கள் பாவங்கள் சிவேரென்றிலுந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசா 1:10) என அவர் கூறியிருக்கிறார்.

நீங்கள் மிகவும் பலவீனமாகவும் அவரைப் பின்பற்ற முடியாதவர்களாகவும் இருப்பதாக நினைக்கிறீர்களா? அஞ்ச வேண்டாம். நீங்கள் அவருடைய பிள்ளைகளாக ஆவதற்கு அவர் பெலனைக் கொடுப்பார். உங்களிடத்திலே வாசமாயிருப்பதற்குத் தமது பரிசுத்தஆவியைத் தந்து, தம்முடையவர்களாக முத்திரையிடுவார். உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களில் ஒரு புதிய ஆவியையும் வைப்பார்.

தளர்ந்து போன ஆவியை உடையவர்களாக இருப்பதாக எண்ணிக் கலங்குகிறீர்களா? பயம் வேண்டாம். இயேசுக்கிறிஸ்துவால் துரத்தி விட முடியாத எந்த கெட்ட ஆவியும் இல்லை; அவரால் குணப்படுத்த முடியாத எந்த ஆத்துமவியாதியும் இல்லை.

உங்களுக்கு சந்தேகங்களும் பயங்களும் ஏற்படுகிறதா? அவைகளைத் தள்ளிப் போட்டுவிட்டு இயேசுவிடம் வாருங்கள். “என்னிடம் வருபவனை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை” என்று அவர் கூறுகிறார். இளைஞர்களின் இருதயத்தை அவர் நன்றாகவே அறிவார். உங்களுக்கிருக்கும் சோதனைகளையும் உங்கள் கஷ்டங்களையும் அவர் அறிவார். உங்களுடைய எதிரிகளையும், துயரங்களையும் அவர் நன்கு அறிவார். அவர் மாம்சத்தில் இவ்வுலகில் இருந்த நாட்களில் அவர் உங்களைப் போலவே வாலிபனாக நாசரேத்து என்னும் ஊரிலே வாழ்ந்தார். இளைஞர்களின் மனது எப்படியிருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். உங்களுடைய பலவீனங்களைக் குறித்து அவர் பரிதபிக்கிறவராய் இருக்கிறார். ஏனென்றால் அவரும் சகலவிதமான சோதனைகளாலும் சோதிக்கப்பட்டு பாடுபட்டார். “அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்”(எபி 2:18). “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்” (எபி 4:15). இப்படிப்பட்டதான இரட்சகரையும், நண்பனையும் விட்டு நீ விலகிப் போவாயானால் நீ எந்த சாக்குப் போக்கும் சொல்ல முடியாது.

வாலிபனே, என்னுடைய அறிவுரையைக் கேள்: நீ நல்ல ஜீவனை விரும்பினாயானால், இயேசுக்கிறிஸ்துவோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்.

iii) ஆத்துமாவைக் காட்டிலும் முக்கியமானது வேறொன்றுமில்லை

இளைஞர்களே ஆத்துமாதான் மிகவும் முக்கியமானது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்

உங்கள் ஆத்துமா நித்தியமானது. அது என்றைக்கும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்த உலகமும் அதிலுள்ளவைகள் யாவும் அழிந்து போகும். உலகமும் அதிலுள்ளவைகளும் எவ்வளவுதான் உறுதியாகவும், அழகாகவும், திடமாகவும் இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு. “. . பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்து போகும்” (2பேது 3:10). நாட்டை நிர்வகிக்கிறவர்களின் திறமைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், நல்ல ஓவியங்கள், சிறந்த கட்டிடங்கள் யாவுமே கொஞ்ச காலத்திற்குத்தான் இருக்கும். ஆனால் உங்கள்ஆத்துமாவோ அதைக் காட்டிலும் அதிக காலம் வாழக்கூடியது. “இனி காலம் செல்லாது” (வெளி 10:6) என்று
தேவதூதனுடைய சத்தம் ஒரு நாள் அறிவிக்கும். அதாவது காலத்துக்கு ஒரு முடிவு உண்டு. ஆனால் உங்கள் ஆத்துமாவைக் குறித்து அப்படி சொல்லப்படவில்லை.

உங்கள் ஆத்துமாவுக்காகவே நீங்கள் வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளும்படியாக வேண்டிக் கொள்கிறேன். அது உங்களில் இருக்கிறது. நீங்கள் அதற்கே முதலாவது இடத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம். உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்துகிறதான எந்த இடமோ, வேலையோ உங்களுக்கு நல்லதல்ல.

உங்கள் ஆத்துமாவை அலட்சியப்படுத்துகிற எந்த நண்பனோ, உறவோ நம்ப தகுந்தவர்களல்ல. உங்களையும், உங்கள் சொத்துக்களையும், உங்கள் மனதையும் புண்படுத்துகிறவர்கள் தற்காலிகமான தீங்கைத்தான் உங்களுக்கு விளைவிக்க முடியும். ஆனால் உங்கள் ஆத்துமாவைக் கெடுக்கிறவனோ உண்மையான எதிரியானவன்.

நீங்கள் இந்த உலகத்திற்குள் எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், மாம்சத்துக்கு சந்தோஷம் அளிக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்காகவும் அல்ல; அருமையாக உடுத்திக் கொண்டு உலா வருவதற்காகவும் அல்ல; மாம்சம் எப்படியெல்லாம் உல்லாசமாக செயல்பட நினைக்கிறதோ அதன் வழிகளில் சென்று கேளிக்கைகளில் மூழ்கியிருப்பதற்கு அல்ல. அல்லது வேலை பார்ப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், கதைபேசிச் சிரித்து சந்தோஷமாக நேரத்தை செலவிட்டு, எதைக் குறித்தும் சிந்திக்காமல் வாழ்ந்து முடிப்பதற்காக அல்ல. இவைகளைக் காட்டிலும் மேலான, சிறந்த ஒரு நோக்கத்திற்காக நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். நித்திய வாழ்க்கைக்குப் பயிற்சி பெறுவதற்காக நீங்கள் இவ்வுலகில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். அழியாத ஆவிக்கு இவ்வுலகில் ஒரு இருப்பிடம் தேவை என்பதற்காக மாத்திரமே உங்களுக்கு ஒரு சரீரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சரீரத்தை ஒடுக்கி அதை ஆத்துமாவுக்கு அடிமையாக்குவது உங்கள் வேலை. சரீரமானது ஆத்துமாவை ஆளும்படியாக விடக்கூடாது. சரீரத்திலிருந்து உங்கள் ஆத்துமா தேவனைத் துதிக்க வேண்டும். நமது வினாவிடைப் புத்தகத்தில் காணப்படும் முதலாவது வினாவிடை மிகவும் போற்றக்கூடியதாக இருக்கிறது. மனிதனுடைய முக்கியமான நோக்கம் என்ன? என்கிற கேள்விக்கு கடவுளை மகிமைப்படுத்துவதும், அவரில் எப்போதும் சந்தோஷமாயிருப்பதுவுமே என்கிற விடை அளிக்கப்பட்டிருக்கிறது.

வாலிபரே, கடவுள் மனிதர்களின் முகத்தைப் பார்த்து அவர்களை மதிக்கிறவரல்ல. ஒருவனுடைய விலையேறப் பெற்ற அலங்காரமான உடையோ, அவனுடைய பணமோ, அவனுடைய பதவியோ, தகுதியோ அவருக்கு ஒரு பொருட்டல்ல. மனிதர் பார்க்கும் விதமாக அவர் பார்ப்பதில்லை. மிகவும் பணக்காரனாகிய ஒரு பாவி தனது மாளிகையில் மரிப்பதைக் காட்டிலும், ஏழையான ஒரு பரிசுத்தவான் தனது குடிசையிலே மரிப்பது அவர் கண்களில் உயர்வாகக் காணப்படும். கடவுள் ஒருபோதும் ஐசுவரியத்தையோ, பட்டங்களையோ, உலக கல்வியையோ, அழகையோ, இதுபோன்ற எந்தக் காரியங்களையோ பார்ப்பவரல்ல. கடவுள் நம்மிடம் பார்க்கிறதான ஒரே காரியம் என்றும் அழியாததான ஆத்துமாவையே. எல்லா மனிதரையும் அவர் ஒரே அளவுகோலினாலே, ஒரே தராசினாலே, ஒரே விதமான பரீட்சையினாலே, ஒரே நிபந்தனையினாலேதான் அளவிடுகிறார்: அவனுடைய ஆத்துமாவின் நிலை என்ன என்பதையே அவர் நோக்குகிறார்.

இதை மறக்காதீர்கள். காலையிலும் மதியத்திலும், இரவிலும் உங்கள் ஆத்துமாவைக் குறித்ததான சிந்தனையே உங்களில் இருக்கட்டும். ஒவ்வொரு நாளின் காலையிலும் எழும்போது, இன்றைக்கு இன்னும் முன்னேற வேண்டும் என்று வாஞ்சியுங்கள். அன்று இரவிலே படுக்கு முன்பாக இன்று முன்னேறியிருக்கிறேனா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ழங்ன்ஷ்ண்ள் என்கிறவர் மிகவும் பிரபலமான கிரேக்க ஓவியர். இவர் தமது
ஒவ்வொரு ஓவியத்தையும் மிகவும் சிரமம் எடுத்து வரைவார். ஏன் இவ்வளவு சிரமம் எடுத்து வரைகிறீர்கள் என்று கேட்பவர்களிடம், “எனது ஓவியங்கள் நித்தியத்துக்கும் அழியாமல் இருக்க வேண்டுமென்பதற்காக” என பதில் சொல்வார். அவரைப் போல இருப்பதற்கு வெட்கப்படாதீர்கள். அழியாததான உங்கள் ஆத்துமாவை எப்போதும் உங்கள் மனக் கண்களின் முன்னால் நிறுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இந்தவிதமாக வாழுகிறீர்கள் என்று கேட்டால், “நான் என்னுடைய ஆத்துமாவுக்காக அப்படி வாழுகிறேன்” என்று சொல்லுங்கள். தங்கள் ஆத்துமாவைக் குறித்து மனிதன் கவலைப்படும் நாள் விரைந்து வருகிறது. அன்றைக்கு அவன் கேட்கப் போகும் ஒரே கேள்வி, ‘என்னுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அழிந்து விட்டதா?’ என்பதே.

iv) இளைஞர்களும் கடவுளுக்கு சேவை செய்யக்கூடும்

இளைஞர்களே நீங்களும் தேவனுக்கு ஊழியம் செய்யலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்

இந்தக் கருத்துக்கு விரோதமாக சாத்தான் அநேக தடைகளைக் கொண்டுவருவான் என்பதில் சந்தேகமில்லை. வாலிபவயதில் உண்மையான கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்கிறதான வீணான சிந்தனைகளை உங்கள் மனதில் நிரப்புவான். இந்த வஞ்சனையில் சிக்கிக் கொண்டவர்கள் அநேகர் என்பதை அறிவேன். உலகத்தார் சொல்லுவார்கள்: “வாலிபபிராயத்தினரிடம் பக்தியை எதிர்பார்ப்பது அளவுக்கதிகமன்றோ? வாலிபவயதில் பக்தி வழிகளில் தீவிரமாக இறங்கக் கூடுமோ? எங்களுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிகவும் உறுதியானவை. நீங்கள் எதிர்பார்ப்பது போல அவைகளையெல்லாம் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம். கடவுள் எங்களை சந்தோஷமாயிருக்கும்படிக்கே படைத்திருக்கிறார். வயதாகும்போது நாங்களும் பக்தி வழிகளில் சிறிது சிறிதாக ஈடுபடுவோம்.” இது மாதிரியான பேச்சுகளை உலகத்தார் மிகவும் ஆதரிக்கிறார்கள். உலகம் வாலிபவயதினரின் பாவங்களை கண்டுகொள்வதில்லை. அதற்கு உடந்தையாகக்கூட இருக்கிறது. “இதெல்லாம் வயசுக்கோளாறுகள்; வயது ஏறினபின் சரியாகிவிடும். இதிலெல்லாம் அடிபட்டுத்தான் இளைஞர்கள் வரவேண்டும்” என்று கூறி உலகத்தார் அவர்களுடைய பாவநிலையைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள்.

இளைஞர்கள் பக்தியாக இருக்க வேண்டியதில்லை, அவர்களால் கிறிஸ்துவை இப்போது பின்பற்ற முடியாது என்கிற ரீதியில் பிரச்சனைக்குத் தீர்வு சொலலிவிடுகிறார்கள். இளைஞர்களே, நான் உங்களை ஒரு எளிமையான கேள்வி கேட்கிறேன். கர்த்தருடைய வேதத்தில் எங்காவது இந்த மாதிரியான கருத்து தென்படுகிறதா? உலகம் சொல்லுகிற காரணங்களை ஆதரிக்கும் விதமாக வேதாகமத்தில் எந்த புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைக் கூறுங்களேன். வேதாகமம் இளைஞர், முதியோர் என்கிற வித்தியாசமில்லாமல் எல்லாரோடும்தானே பேசுகிறது? இருபது வயதில் செய்தாலும், ஐம்பது வயதில் செய்தாலும் பாவம் பாவம்தானே. நியாயத்தீர்ப்பின் நாளிலே, “ஆம் கர்த்தாவே, நான் பாவம் செய்தேன். ஆனால் அதை எனது இளவயதில் அல்லவா செய்தேன்” என்று கூறி தண்டனைக்குத் தப்ப வழி இருக்கிறதா? உங்கள் அறிவை உபயோகித்து இந்தவிதமான வீணான கருத்துக்களையெல்லாம் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எது சரி, எது தவறு என்பதை நீங்கள் அறியத் தொடங்கிய நாளிலிருந்து, கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

இளைஞர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறதென்பதையும் நான் அறிவேன். ஆனால் சரியான பாதையில் போவதென்பது சுலபமானதல்ல என்பதை வேதாகமம் சுட்டிக் காண்பிக்கிறது. பரலோகத்திற்குப் போகிற பாதை எப்போதும் குறுகலானது. இளைஞருக்கும் முதியோருக்கும் அது குறுகலானதே. பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும், அவைகளை மேற்கொள்ள தேவன் தமது கிருபைகளை அளிக்கிறார். கடவுள் ஒரு கொடூரமான எஜமானன் அல்ல. பார்வோனைப் போல, வைக்கோலைத் தராமல் செங்கலை அறுக்கும்படி சொல்ல மாட்டார்(யாத் 5:16). நீங்கள் நடக்கின்ற பாதை அளவுக்கதிகமாக கடினமானதாக இருக்கும்படி விடமாட்டார். மனிதனால் நிறைவேற்ற முடியாத கட்டளைகளை ஒருபோதும் கொடுக்க மாட்டார். அவனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வார். “மனுஷனுக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத் தக்கதாக, சோதனையோடேகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரி 10:13).

பிரச்சனைதான்! ஆனால் இதுவரைக்கும் எத்தனையோ இளைஞர்கள் அவைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆகவே உன்னாலும் முடியும். மோசே உங்களைப் போலவே ஆசைகள் நிறைந்த வாலிப வயதில் இருந்திருக்கிறார். அவரைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதைப் பாருங்கள்: “விசுவாசத்தினாலே, மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்து கொண்டு, இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” (எபி 11:24-26). பாபிலோன் தேசத்தில் தானியேல் கடவுளுக்கு சேவை செய்ய ஆரம்பித்தபோது இளைஞனாகத்தான் இருந்தார். அவரைச் சுற்றிலும் பலவிதமான சோதனைகள் இருந்தன. அவரை ஆதரிப்பவர்களைக் காட்டிலும் விரோதிகள்தான் அதிகமாக இருந்தனர். இருந்தாலும் தானியேலின் வாழ்க்கையானது தொடர்ந்து குற்றமற்றதாகவே காணப்பட்டது. விரோதிகளால்கூட ஒரு தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்தில் குற்றப்படுத்தும் முகாந்திரத்தைக் கண்டுபிடித்தாலொழிய வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது” (தானி 6:5) என்று கூறினார்கள். இப்படிப்பட்டவர்கள் ஏதோ இங்கொருவரும் அங்கொருவருமாக இல்லை. மேகம் போன்ற திரளான மக்கள் இவர்களைப் போல இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் விவரமாக சொல்லப் போனால் நேரம் போதாது. நீங்களே படித்துப் பாருங்கள். வாலிபனாகிய ஈசாக்கு(ஆதி 22), வாலிபனாகிய யோசேப்பு(ஆதி 39), வாலிபனாகிய யோசுவா(யாத் 17:9−14), இளம் சாமுவேல்(1சாமு 2:18−3:21), இளைஞனாகிய தாவீது(1சாமு 16,17), வாலிபனாகிய சாலமோன்(1ராஜா 3:4−9), இளைஞன் அபியா(2நாளா 13), இளைஞனாகிய ஒபதியா(1ராஜா 18:3), இளைஞன் யோசியா(2நாளா 34,35), வாலிபனாகிய தீமோத்தேயு(அப் 16:1−3). இவர்களெல்லாம் தேவதூதர்கள் அல்ல. உங்களைப் போலவே சரீரத்தையும் இருதயத்தையும் கொண்டிருந்தவர்கள். அவர்களும் தடைகளை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. இச்சைகளை அழிக்க வேண்டியதாயிருந்தது. சோதனைகளை சகிக்க வேண்டியதாயிருந்தது. உங்களைப் போலவே கடினமானவைகளை நிறைவேற்ற வேண்டியதாயிருந்தது. தாங்கள் இளைஞராக இருந்தாலும், கர்த்தருக்கு சேவை செய்ய முடியும் என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். அது முடியாத காரியம் என்று நீங்கள் கூறுவீர்களானால், அவர்கள் அனைவரும் நியாயத்தீர்ப்பின் நாளிலே எழும்பி உங்களை குற்றம் சொல்ல மாட்டார்களா?

இளைஞர்களே கர்த்தருக்கு சேவை செய்ய முயற்சியுங்கள். அதெல்லாம் நடக்காது என உங்கள் காதுகளில் ஓதுகின்ற சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். முயற்சி செய்யுங்கள். வாக்குத்தத்தங்களின் தேவன் உங்கள் முயற்சியைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய பெலனைக் கொடுப்பார். அவரிடம் வருவதற்கு பிரயாசம் எடுக்கிறவர்களை சந்திக்க அவர் ஆவலுள்ளவர். உங்களுக்குத் தேவையான பெலனை, முயற்சி எடுக்கிற உங்களை சந்தித்து, அவர் தருவார். ஜான்பனியன் எழுதின மோட்சபிரயாணம் வாசித்திருக்கிறீர்களா? மோட்சப்பிரயாணியாகிய கிறிஸ்தியான் விளக்கம் கூறுபவரின் வீட்டில் சில காட்சிகளைக் காண்பான். அதில் ஒரு மகிமையான அரண்மனையின் உள்ளே நுழைய ஆசைப்படுபவர்களின் பெயர்கள் வாசலில் இருப்போனால் எழுதப்படும். ஆனால் அப்படி நுழைய முற்படுபவர்களை அடித்து விரட்ட, ஆயுதந்தரித்த பலவான்கள் அநேகர் அங்கு காணப்படுவதால் பலரும் பயந்து போய் தயங்கி நிற்பர். அப்போது ஒரு மனிதன் துணிந்து போய், “என் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்” என்று கூறியவுடனே அவனுக்கு ஒரு பட்டயம் கொடுக்கப்படும். அதைக் கொண்டு அவன் அந்த பலவான்களை மேற்கொண்டு வெற்றிகரமாக அரண்மனையில் பிரவேசிப்பான். அவனைப் போல நீங்களும் தைரியமுள்ளவர்களாக முயற்சி செய்யுங்கள். “தேடுங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்” ( மத் 7:7) என்கிற நம்முடைய கர்த்தரின் வார்த்தை உண்மையுள்ளது. பலரும் இந்த வார்த்தையை அர்த்தமற்று உபயோகிப்பதை நான் கேட்டிருந்தாலும், இது உண்மையுள்ள வாக்குத்தத்தம். மலை போன்ற பிரச்சனைகள் யாவும், வாலிபரே, பனியைப் போல உருகிப் போய்விடும். தூரத்திலே கொடிதான அரக்கனைப் போலக் காட்சியளிக்கும் தடைகளெல்லாம், நீங்கள் துணிந்து முன்னேறும்போது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். வழியிலே எதிர்ப்பட்ட சிங்கத்தைப் பார்த்து பயந்தது, தொடர்ந்து முன்னேறும்போதுதான் தெரியும் அவை சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறது என்பது. கடவுளின் வாக்குத்தத்தங்களை மனிதர்கள் அதிகமாக நம்ப ஆரம்பித்தார்களென்றால், தங்களுடைய கடமைகளைக் குறித்து பயப்பட மாட்டார்கள். நான் உங்களுக்கு சொல்லித் தரும் ஒரு சிறிய வாக்கியத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சாத்தான் உங்களிடம் வந்து, “இளம் வயதிலுள்ள உன்னால் கிறிஸ்தவனாக வாழ முடியாது” என்று கூறினால், நீங்கள்,”எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, கடவுளின் உதவியோடு நான் முயற்சி செய்வேன்” என்று சொல்லுங்கள்.

v) வேதாகமமே உன் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருக்க உறுதிகொள்

இளைஞர்களே வாழ்நாள் முழுவதும் வேதமே உங்களுக்கு வழிகாட்டட்டும்

பாவக்கறை படிந்த மனிதனின் ஆத்துமாவுக்கு கடவுள் கொடுத்திருக்கும் நல்லதொரு சாதனம் வேதாகமம் ஆகும். அவன் நித்தியஜீவனை அடைந்துகொள்ள வேண்டுமானால், வேதாகமத்தை வழிகாட்டியாகக் கொண்டு தனது வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். மெய்யான சமாதானத்தையும், பரிசுத்தத்தையும், சந்தோஷத்தையும் அடைவதற்கு வேண்டிய வழிவகைகள் யாவும் வேதாகமத்தில் நிறைந்து காணப்படுகிறது. தனது வாழ்க்கையை எப்படி சரியானவிதத்தில் ஆரம்பிப்பது என இளைஞர்கள் அறிய விரும்பினால் தாவீது சொல்வதைக் கேளுங்கள்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே” (சங் 119:9).

இளைஞர்களே வேதத்தை தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாள்கூட அந்தப் பழக்கத்தைத் தவறவிடாதிருங்கள். நண்பர்கள் கேலி செய்கிறார்களே என்பதற்காகவோ, நீங்கள் வாழுகின்ற குடும்ப சூழ்நிலை சரியாக இல்லை என்பதாலோ வேதம் வாசிக்கும் பழக்கத்தை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். உங்களுக்கென தனியாக ஒரு வேதப்புத்தகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்., அதை வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். வேதாகமம், ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளுக்கும், வயதான பெண்களுக்கும்தான் உரியது என யாரும் உங்களை நம்பப் பண்ணுவதற்கு சற்றும் இடங்கொடாதீர்கள். அந்த புத்தகத்திலிருந்துதான் தாவீது ராஜா ஞானமும் அறிவும் பெற்றுக் கொண்டார். அந்தப் புத்தகத்தை தீமோத்தேயு தமது இளம்பிராயம் முதல் அறிந்து வைத்திருந்தார். அதைப் படிப்பதற்கு ஒருபோதும் வெட்கப்படாதிருங்கள். “திருவசனத்தை ஒருபோதும் அவமதிக்காதீர்கள்” (நீதி 13:13).

ஆவியானவர்தாமே கிருபையாக அதிலுள்ளவைகளை விளங்கப்பண்ண வேண்டுமென்கிற ஜெபத்தோடு வாசியுங்கள். ஆவியின் கிருபையைப் பெறாதவர்களாக வேதாகமத்தைப் படிப்பது, குருடர் வாசிக்க முயற்சிப்பது போல்தான் இருக்கும்.

வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, தேவனுடைய வார்த்தை என்கிற பயபக்தியோடு வாசியுங்கள் − வேதாகமம் சரியென்று சொல்லுகிறவைகள் யாவும் சரிதான் என்றும், அது தவறு என்று கண்டிக்கிறவைகள் தவறுதான் என்கிற முழுநிச்சயத்தை உடையவர்களாக அதை வாசியுங்கள். வேதாகமம் ஒப்புக் கொள்ளாத எந்தக் கொள்கையும் தவறுதான் என்கிற நிச்சயமுடையவர்களாயிருங்கள். இக்காலங்களில் பலவிதமான கொள்கைக் கோளாறுகள் பெருகி வருகின்ற நேரத்திலே, வோதாகமம் ஒப்புக் கொள்கிற கொள்கைகளை மாத்திரம் நீங்கள் நன்றாக அறிந்து வைத்துக் கொண்டால், நீங்களும் அந்தக் கோளாறுகளில் அலைபட்டு குழப்பமடையாமல் இருப்பீர்கள். வேதாகமத்துக்கு விரோதமான எந்த செய்கையும் உங்களிடத்திலே காணப்படுமானால் அது பாவமாகும். அதை உடனடியாக விட்டு விலகுவது மிகவும் அவசியம். அப்போதுதான், மனசாட்சி எழுப்பும் பலவிதமான கேள்விகளுக்கு பதில் கூறவும், பலவித சந்தேகங்களை அவிழ்க்கவும் முடியும். கர்த்தருடைய வார்த்தையை வித்தியாசமான கோணங்களில் பார்த்த இரண்டு ராஜாக்களைக் குறித்து அறிவீர்களா? யூதரின் ராஜாவாகிய யோயாக்கீம் என்பவன் கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து, அதை உடனடியாகக் கிழித்து எரிகிற நெருப்பிலே போட்டான்(எரே 36:23). அவனுடைய இருதயமானது அந்த வசனங்களுக்கு விரோதமாக இருந்தபடியினால், அவைகளுக்குக் கீழ்ப்படியக்கூடாது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான். மற்றொரு ராஜாவாகிய யோசியா என்பவனும் கடவுளுடைய வார்த்தைகளை வாசித்தான். அவன் உடனடியாக தனது வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, கர்த்தரிடத்தில் அழுது புலம்புகிறான்(2நாளா 34:19). ஏனென்றால் அவனுடைய இருதயம் நொறுங்குண்டதாக இருந்தபடியால் கீழ்ப்படிதல் உடையவனாக காணப்படுகிறான். வேதாகமம் கட்டளையிடுகிற எந்தக் காரியத்தையும் செய்வதற்கு அவன் தயாராக இருந்தான். நீங்களும் யோசியாவைப் போல கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அதைப் பின்பற்ற வாஞ்சையுள்ள இருதயத்தை உடையவர்களாயிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்!.

வேதாகமத்தைத் தொடர்ந்து படியுங்கள். வசனங்களில் வல்லமைப் பெறுவதற்கு இது ஒன்றே வழி(அப் 18:24). வேதாகமத்தை எப்போதாவது அங்கும் இங்குமாகப் புரட்டி வாசிப்பது நல்ல பலனைத் தராது. அப்படி படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் அந்த பொக்கிஷத்தின் மகிமையை உணர மாட்டீர்கள். பிரச்சனை வரும் நேரங்களில் ஆவியின் பட்டயம் உங்கள் கையில் இல்லாததால் திகைத்து நிற்பீர்கள். தீவிரமாக வேதவசனங்களைப் படித்து, அவைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள். அப்போது அதன் வல்லமையையும் மதிப்பையும் உணர்ந்து கொள்ளுவீர்கள். சோதனை ஏற்படும் நேரத்தில் தகுந்த வசனங்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். சந்தேகம் ஏற்படும் சமயங்களில் வேதவசனம் நினைவில் நின்று சரியானதை செய்ய உங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கும். மனசோர்வுகளுக்கு ஆளாகும்போது வாக்குத்தத்தங்கள் நினைவில் வந்து உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். அப்போது தாவீது கூறிய வார்த்தையில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அனுபவிப்பீர்கள்: “நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங் 119:11) என்கிறார். சாலமோனும் “நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும். நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும். நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாμக்கும்“( நீதி 6:22) என்று சொல்லுகிறார்:.

நான் இதை மறுபடியுமாக வலியுறுத்திக் கூறுகிறேன். ஏனென்றால் இக்காலங்களில் வாசிப்பதற்கு பலவிதமான புத்தகங்கள் காணப்படுவதால் வேதத்தை வாசிப்பதின் அவசியத்தைக் கூறுகிறேன். புத்தகங்களை உண்டு பண்ணுவதற்கு ஒரு முடிவே இல்லை. அவைகளில் ஒரு சிலவே நல்ல புத்தகங்களாக இருக்கின்றன. கண்டகாரியங்களையும் பிரசுரிப்பது அதிகமாகிக் கொண்டுபோகிறது. உலகில் பலவிதமான பத்திரிகைகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளில் காணப்படும் அசுத்த காரியங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவை அளவில்லாமல் பிரசுரிக்கப்படுவதைக் காண்கையில் ஜனங்களின் ரசனையும் மனநிலையும் இக்காலங்களில் எந்த அளவில் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆபத்தான புத்தகங்கள் வெள்ளம் போல பெருகிக் கொண்டிருக்கிற இவ்வேளையிலே, என்னுடைய எஜமானனின் புத்தகத்தைப் படிக்கும்படியாக நான் உங்களைக் கெஞ்சுகிறேன். அதுதான் உங்கள் ஆத்துமாவுக்குரிய புத்தகம் என்பதை மறந்து விடாதீர்கள். தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் எழுதியவைகளைத் தள்ளி வைத்துவிட்டு, தினசரி பத்திரிகைகளையும், கதைப்புத்தகங்களையும், காதல்கதைகளையும் படிப்பதில் நேரத்தை செலவிடாதீர்கள். உணர்ச்சிகளைத் தூண்டுகிற விரசமான புத்தகங்கள் உங்கள் கவனத்தைக் கவருவதாயிருக்க வேண்டாம். ஏனென்றால், பக்தியையும் பரிசுத்தத்தையும் ஏற்படுத்துகிற புத்தகத்திற்கு உங்கள் மனதில் இடமில்லாமல் போய்விடும்.

இளைஞனே, நீ வாழ்கிற ஒவ்வொரு நாளும் வேதாகமத்திற்குரிய மரியாதையை அதற்குக் கொடு. நீ வேதாகமத்தை முதலாவது படி. தீய புத்தகங்களைக் குறித்து எச்சரிக்கையாயிரு. அம்மாதிரியான புத்தகங்கள் இன்று ஏராளமாகக் காணப்டுகின்றன. நீ எதை வாசிக்கிறாய் என்பதைக் குறித்து கவனமாயிரு. மக்கள் அனைவரும் ஒவ்வொரு அபிப்ராயம் வைத்திருக்கலாம். வாய்வழியாக வெளிப்படுத்தும் அபிப்ராயங்களைவிட எழுத்து மூலமாக கொடுக்கப்படும் விஷயங்களே ஆத்துமாவுக்கு அதிக ஆபத்துக்களை வருவிக்கிறது என நான் நம்புகிறேன். எந்தப் புத்தகத்தையும் வேதவசனங்களின் கோணத்திலே ஒப்பிட்டுப் பார். வசனத்திற்கு ஒத்ததான கருத்துக்கள் அந்த புத்தகத்தில் காணப்படுமானால் நல்லது. வசனத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்தப் புத்தகத்தில் காணப்பட்டதானால் அது மிகவும் மோசமான புத்தகமாகும்.

vi) கடவுளை ஏற்காதவனோடு நெருங்கிய தோழமை கொள்ளாதே

இளைஞனே, கடவுளின் விரோதி உனக்கும் விரோதியே

சாதாரணமான நட்பைக் குறித்து நான் சொல்லவில்லை. உங்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படி நாம் ஒரு வரையறை வகுத்துக் கொள்வது இவ்வுலகத்தில் நடக்க முடியாத காரியம்; அப்படி இருப்பதும் விரும்பத்தகுந்ததல்ல. அப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது கிறிஸ்தவத்துக்குப் புறம்பானது.

ஆனால், உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து கவனமாயிருங்கள் என்று புத்தி சொல்லுகிறேன். ஒருவன் புத்திசாலியாகவும், ஒத்துப் போகிறவனாகவும், நல்ல சுபாவமுடையவனாகவும், சந்தோஷம் நிறைந்தவனாகவும், அன்பாகவும் இருக்கிறான் என்பதற்காக அவனிடம் உங்கள் மனதிலுள்ள எல்லா காரியங்களையும் ஒளிவுமறைவில்லாமல் சொல்லி விடாதீர்கள். அந்த மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அதுவே பரிபூரணமானது அல்ல. உங்களுடைய ஆத்துமாவுக்கு உதவாத எந்தவிதமான நட்பிலும் திருப்தியடைந்துவிடாதீர்கள்.

இந்த புத்திமதியைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். பக்தியற்ற நண்பர்களால் விளையக்கூடிய தீங்குகளை உங்களுக்கு சொல்லுவதால் தவறொன்றும் இல்லை. மனிதனுடைய ஆத்துமாவைக் கெடுத்துப் போடுவதற்கு சாத்தான் உபயோகிக்கும் சிறந்த சாதனங்களில் இதுவும் ஒன்று. இந்த சாதனத்தை மாத்திரம் அவனுக்குக் கொடுத்துவிட்டால் போதும், அவனுக்கெதிராக உங்களிடம் வேறு எந்த நல்ல ஆயுதம் இருந்தாலும் அவன் கவலைப்படுவதேயில்லை. சிறந்த கல்வி, சிறுவயதிலிருந்தே பழகிக் கொண்ட நல்ல பழக்கவழக்கங்கள், பிரசங்கங்கள், புத்தகங்கள், நல்ல குடும்பச் சூழ்நிலை, பெற்றோர் அனுப்பும் கடிதங்கள் − இவை எதுவாக இருந்தாலும் அவைகளெல்லாம் உங்கள் மேல் மிகக் குறைந்த ஆதிக்கமே செலுத்தும் என்பதை அவன் நன்கு அறிவான். ஏனென்றால் நீங்கள் பக்தியற்ற நண்பர்களின் சகவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பதால், உங்களுக்கு இருக்கும் அநேக நல்ல சாதனங்களைக் காட்டிலும், இவர்களின் கருத்துதான் உங்களை அதிகமாக ஆக்ரமிக்கும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். பகிரங்கமாக வருகின்ற பல சோதனைகளை நீங்கள் மேற்கொண்டுவிடலாம். வெளிப்படையாகத் தெரிகிற கண்ணிகளுக்குத் தப்பிவிடலாம். ஆனால் நீங்கள் தவறான ஒருவனோடு நட்பு கொண்டுவிட்டீர்களானால், அது போதும் சாத்தானுக்கு. அம்னோன் என்கிறவன் தாமரிடம் பொல்லாப்பாக நடந்து கொண்டதை விவரிக்கிற கர்த்தருடைய வார்த்தைகள் இப்படி ஆரம்பிக்கிறது: “அம்னோனுக்கு . . யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி ” (2சாமு 13:3). பிறர் செய்வதைப் பார்த்தே செய்யும் பழக்கமுடையவர்கள் நாம் என்று நான் முன்னர் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அநேக கட்டளைகள் நமக்கு நல்ல பாடம் கற்பிக்கலாம். ஆனால் வாழ்வில் காண்கிற உதாரணங்கள்தான் நம்மை அதிகமாகக் கவர்ந்திழுக்கும். நாம் யாருடன் வசிக்கிறோமோ அவர்களுடைய வழிமுறைகளில் விருப்பம் கொள்வது அநேகமாக எல்லோரிடமும் இருக்கிறது. அதுவும் நமக்கு அவர்களைப் பிடித்துப்போனதென்றால் இன்னும் அதிகமான ஈடுபாடு அவர்கள்மேல் ஏற்படுகிறது. நம்மை அறியாமலேயே நாம் அவர்களுடைய விருப்பங்களுக்கும் கருத்துக்களுக்கும் ஒத்துப் போகிறவர்களாக ஆகிவிடுகிறோம். மெதுவாக நாமும் அவர்களுக்கு விருப்பமில்லாததை விட்டுவிடுகிறோம், அவர்கள் விரும்புவதையே நாமும் பற்றிக் கொள்ளுகிறோம். அவர்களிடமுள்ள நட்பை மேலும் அதிகப்படுத்திக் கொள்வதற்காக அப்படி ஆகிறோம். இதில் மிகவும் மோசமான காரியம் என்னவென்றால், நாம் அவர்களிடமுள்ள நல்லவைகளைக் கற்றுக் கொள்வதைவிட தீயவைகளை வெகு விரைவாகக் கற்றுக் கொண்டுவிடுகிறோம். யோசித்துப் பாருங்கள், ஆரோக்கியமானது மற்றவரைத் தொற்றிக் கொள்வதில்லை; ஆனால் வியாதியோ சுலபமாகத் தொற்றிக் கொள்கிறது அல்லவா! அணலை ஏற்படுத்துவதைவிட குளிரப்பண்ணுதல் சுலபம். ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியை ஏற்படுத்திக் கொண்டு வளர்வதைக் காட்டிலும், இருக்கிற பக்தியையும் தேய்ந்து போகச் செய்வதே எளிதான காரியமாக இருக்கிறது.

இளைஞர்களே, இந்தக் காரியங்களை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நிரந்தரமான ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ளும் முன்னதாக, உங்கள் காரியங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ளும் முன்னதாக, கஷ்டநேரங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் நாடிச் செல்ல ஆரம்பிக்கும் முன்னதாக மேற்கூறியவைகளையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு கேள்வியை உங்கள் மனதிலே கேட்டுக் கொள்ளுங்கள்: “இந்த நட்பு எனக்கு உபயோகமாக இருக்குமா? இருக்காதா?”

மோசம் போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (1கொரி 15:33). இந்த வார்த்தைகள் ஒவ்வொருவரது இருதயத்திலும் எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என நான் நினைப்பேன். நமக்குக் கிடைக்கும் நல்ல ஆசீர்வாதங்களில் நல்ல நண்பர்கள் கிடைப்பதும் ஒன்றாகும். பாவங்களில் ஈடுபடாதபடிக்கு அவர்கள் நம்மைத் தடுப்பார்கள்; நம்மை ஊக்கப்படுத்துவார்கள். தக்க நேரத்தில் தேவையானதைக் கூறுவார்கள். நம்மை தொடர்ந்து, முன்னேறும்படியாகச் செய்வார்கள். ஆனால் தீயநண்பர்களோ துரதிர்ஷ்டந்தான். அவர்கள், நம்மை கீழானவைகளை நோக்கி இழுக்கிறவர்களாகவும், இந்த உலகத்தோடு கட்டிப் போடுகின்ற பாரமான சங்கிலியாகவும் இருப்பார்கள். பக்தியற்றவனோடு சிநேகம் கொண்டால் முடிவில் அவன் உங்களையும் பக்தியற்றவனாக மாற்றிவிடுவான். அந்தமாதிரியான நட்புகள் பொதுவாக அவ்வித விளைவுகளையே ஏற்படுத்தும். நல்லவன்தான் தீயவனாக மாறுவானே தவிர, தீயவன் நல்லவனாக மாறமாட்டான். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல தீயவனோடு சகவாசம் வைத்திருக்கிற நல்லவன் எவ்வளவுதான் உறுதியோடு இருந்தாலும், கடைசியில் தன் உறுதியை இழந்து தீயவனைப் போலவே ஆகிவிடுவான். உலகப் பழமொழிகள் இதை நன்றாகக் கூறுகின்றன: “உன் ஆடையும், உனது நட்பும் உனது குணத்தைக் காண்பித்துக் கொடுக்கும்”. “ஒருவனின் நண்பர்கள் யாரென்று சொல், நான் அவன் எப்படிப்பட்டவன் என்பதை சொல்லிவிடுவேன்”.

நான் இந்தக் கருத்தைக் குறித்து அதிகமாகக் கூறுகிறேன். ஏனென்றால் பொதுவாக பார்க்கும் போது இது அவ்வளவு ஒன்றும் முக்கியமில்லாதது போலத் தோன்றினாலும், உனது வாழ்க்கையின் வெற்றிக்கு
இவைகளை அறிவது மிகவும் அவசியம். ஏனென்றால், நீங்கள் திருமணம் செய்து கொள்ள உத்தேசிக்கும்போது, உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலிருந்துதான் பொதுவாக உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பீர்கள். யோசபாத்தின் மகனாகிய யோராம் ஆகாபின் குடும்பத்தோடு சகவாசம் வைக்காமல் இருந்திருந்தால் அவன் ஆகாபின் மகளை விவாகம் செய்திருக்க மாட்டான்(2நாளா 18:1, 21:6). சரியான துணையை விவாகத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொண்டிருப்பவன் யார்? பழங்காலத்தில் கூறுவார்கள், “திருமணம் ஒன்று அவனை வாழ வைக்கும் அல்லது அவனைக் கொல்லும்”. உங்களுடைய உலகவாழ்க்கையும், மறுஉலக வாழ்க்கையும் சந்தோஷமாக அமைவது திருமணத்தைப் பொறுத்தும் இருக்கிறது. உங்கள் ஆத்துமா பாதுகாக்கப்பட உங்கள் மனைவி உதவலாம். அல்லது அவள் அதை அழியப்பண்ணலாம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை எதுவுமில்லை. உங்கள் இருதயத்தில் பக்திவிருத்தி ஏற்படுவதற்கு அவள் உதவியாயிருப்பாள். அல்லது, இருக்கிற அணலிலும் நீரைத் தெளித்து அதைக் குளிரப் பண்ணிவிடுவாள். அவள் பறக்க உதவும் சிறகாகவும் அமையலாம் அல்லது தடை செய்கிற சங்கிலியாகவும் இருக்கலாம். உனது பக்திக்குத் தூண்டுகோலாகவும் இருக்கலாம் அல்லது அதை அடக்கி ஆளவும் செய்யலாம். இவைகள் அவளுடைய குணத்தைப் பொறுத்து நடைபெறும். நல்ல மனைவியைக் கண்டடைகிறவன், “நன்மையானதைக் கண்டடைகிறான்” (நீதி 18:22). இந்த மாதிரியான மனைவியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிற விருப்பம் சிறிதளவாவது உனக்கு இருந்தால், உனது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இரு.

என்ன மாதிரியான நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது என நீ என்னைக் கேட்பாயானால் நான் பின்வரும் காரியங்களைக் கூறுவேன். உன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்கிற நண்பர்கள்; நீ உண்மையாகவே மரியாதை செலுத்தக்கூடிய நண்பர்கள்; உன் மரணப்படுக்கையில் அருகில் இருக்க வேண்டுமென நீ விரும்புகின்ற நண்பர்கள்; வேதத்தின்படி வாழுகின்ற நண்பர்கள்; வேதத்தைக் குறித்து பேசுவதற்கு ஒருபோதும் தயங்காத நண்பர்கள்; இயேசுக்கிறிஸ்துவின் வருகையின்போதும், நியாயத்தீர்ப்பிலும் எந்தவிதமான ஆட்களைக் குறித்து நீ வெட்கப்பட மாட்டாயோ அந்தவிதமான நண்பர்கள். இம்மாதிரியான ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்து நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். தாவீது உங்களுக்கு வைத்திருக்கிற முன்மாதிரியை கவனித்துக் கொள்ளுங்கள். “உமக்கு பயந்து, உமது கட்டளைகளை கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்” (சங் 119:63). சாலமோன் சொல்வதையும் கருத்தில் கொள்ளுங்கள்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” (நீதி 13:20). இப்போதுள்ள கெட்ட நண்பர்களைப் பொறுத்து, பிற்காலங்களில் மேலும் அதிகக் கேடான நண்பர்கள் வந்து சேருவார்கள்.

%d bloggers like this: