2. இளைஞர்களுக்குரிய ஆபத்துகள்
இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS
2. இளைஞர்களுக்குரிய ஆபத்துகள்
இளைஞர்களுக்கேயென சில விசேஷித்த ஆபத்துகள் உள்ளன. அவைகளைக் குறித்து எச்சரிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. எல்லா ஆத்துமாக்களுமே பயங்கர ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். வயது ஒரு காரணமல்ல; எல்லாருமே ஒரு பந்தயத்தை ஓடி முடிக்க வேண்டியதாயிருக்கிறது; எல்லோருக்குமே போராட வேண்டிய ஒரு போராட்டமிருக்கிறது; இருதயத்தைத் தாழ்த்த வேண்டியதிருக்கிறது; உலகத்தை மேற்கொள்ள வேண்டியதாயிருக்கிறது; சரீரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதிருக்கிறது; சாத்தானை எதிர்க்க வேண்டியிருக்கிறது – இதையெல்லாம் செய்ய யாரால் கூடும் என்று நாம் அனைவருமே அங்கலாய்ப்போம். இருந்தாலும் ஒவ்வொரு வயதுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றபிரகாரமான விசேஷித்த பிரச்சனைகளும், சோதனைகளும், கண்ணிகளும் உண்டு. அவைகளை நாம் அறிந்து வைத்திருப்பது நல்லது. முன்னெச்சரிக்கை செய்யப்படுபவனே தற்காத்துக் கொள்ளத் தன்னை பலப்படுத்திக் கொள்ளுவான். நான் சொல்லப் போகிற இந்த ஆபத்துகளுக்கு எச்சரிப்பாயிருக்க வேண்டியதின் அவசியத்தை நான் உங்களுக்கு உணர்த்தி விட்டேனென்றால் உங்கள் ஆத்துமாக்களுக்கு நன்மை செய்தவனாவேன்.
i) பெருமை
இளைஞர்கள் சந்திக்கும் ஒரு ஆபத்து, பெருமை
பெருமை உலகின் மிகப் பழமையான பாவம். உலகம் உருவாவதற்கு முன்னாலேயே இது இருந்தது என்றுகூட சொல்லலாம். சாத்தானும் அதன் தூதர்களும் விழக் காரணமாயிருந்தது பெருமையே. கடவுள் தங்களுக்கு கொடுத்த நிலை போதாது என்கிற அகங்காரத்தினால் வீழ்ந்து போனார்கள். பெருமையினாலே அவர்கள் நரகத்தின் முதல் குடிமக்களானார்கள்.
ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி விட்டதும் பெருமையே. தான் இருக்க வேண்டிய இடம் கடவுள் கொடுத்த இடத்தைவிட உயரத்தில் இருக்க வேண்டியது என நினைத்ததால் வந்த விளைவு. ஆதாமும் ஏவாளும் தங்களை உயர்த்த முயற்சித்ததால் விழ நேரிட்டது. உலகத்திலே பாவமும், வருத்தமும், மரணமும் பிரவேசிக்க பெருமை காரணமாயிற்று.
பெருமை நமது இருதயங்களில் சுபாவத்திலேயே குடிகொண்டிருக்கிறது. நாம் பெருமையிலேயே பிறந்தவர்கள். நம்மைக் குறித்தே நமக்கு சுயதிருப்தி! நமக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம்! அறிவுரைகளுக்கு செவிகளை அடைத்துக் கொள்ளுதல்! கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுத்தல்! அவனவன் தன்தன் வழியிலே செல்ல விரும்புதல்! பெருமையின் அவதாரங்களாகிய இப்பேர்பட்ட குணங்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் இளைஞர்களின் உள்ளத்தையே அதிகமாக ஆளுகை செய்கிறது.
அறிவுரைகளை வழங்கும்போது இளைஞர்கள் துடுக்குத்தனமாகவும், அகந்தையோடும், பொறுமை இழந்தவர்களாகவும் காணப்படுவது சர்வசாதாரணமாயிருக்கிறது. தங்களை பிறர் மதிக்காமலும், தங்கள் அருமையை உணராமலும் இருப்பதாக எண்ணங்கொண்டு அவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பேசி, மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதைக் காண்கிறோம். பெரியோர்கள் சொல்லும் புத்திமதியை அவர்கள் நின்று கேட்பதில்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள். தங்களுடைய சுயஞானத்தினாலே அவர்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வயோதிபரையும், தங்கள் உறவினரையும் முட்டாள்களாகவும், சிந்திக்கத் தெரியாதவர்களாகவும், விரைவான முடிவெடுக்கத் தெரியாதவர்களாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். தங்களுக்கு போதனையோ, அறிவுரையோ எதுவும் தேவையில்லை என்பதாகக் கற்பனை பண்ணிக் கொள்ளுகிறார்கள். எல்லாவற்றையும் தாங்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். எதையாவது குறித்து அவர்களுக்கு சொல்லப் போனால் சீற்றம் கொள்கிறார்கள். இளங்குதிரை கடிவாளத்தை வெறுப்பது போல, கட்டுப்பாடுகளை வெறுக்கிறார்கள். எங்களை எங்களுடைய வழியிலே சுதந்திரமாக விடுங்கள் என்கிறார்கள். யோபு சொல்வதைப் போல தாங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள்: “ஆம். நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்”. (யோபு 12:2).
இதைப் போன்றவன்தான் சாலமோனுடைய குமாரனாகிய ரெகோபெயாம் என்கிறவன். அவன் தனது தகப்பனுக்கு ஆலோசனைகூறி வந்த முதியோர்களுடைய யோசனையின்படி நடவாமல், அனுபவமற்ற தன் வயதொத்த இளைஞர்களுடைய ஆலோசனைக்கு செவி கொடுத்தபடியினால், அதனால் விளைந்த பலாபலன்களை அவன் அநுபவிக்க வேண்டியதாயிற்று. இந்த மாதிரியான முட்டாள்தனமான இளைஞர்கள் இன்று அநேகர் காணப்படுகிறார்கள்.
அவர்களில் இன்னொருவன் கெட்டகுமாரன் உவமையில் வருகின்ற இரண்டாவது குமாரன். தனக்கு வரவேண்டிய சொத்துக்களை உடனடியாகப் பிரித்துத் தரும்படி கேட்டவன். தகப்பனுடைய பாதுகாப்பின் கீழே அடங்கி வாழ மனதில்லாமல், தன் இஷ்டப்படி வாழ்வதற்காக தூரதேசத்திற்குப் போக விரும்பினவன். சிறிய குழந்தை தாயின் கையை விட்டுவிட்டுத் தனியே நடக்கப் பார்ப்பது போல நடந்து கீழே விழுந்தான். பன்றிகளின் தவிட்டைத் தின்ற போதுதான் அவனுக்கு அறிவு வந்தது. அப்படிப்பட்ட இளைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
அவர்களில் இன்னொருவன் கெட்டகுமாரன் உவமையில் வருகின்ற இரண்டாவது குமாரன். தனக்கு வரவேண்டிய சொத்துக்களை உடனடியாகப் பிரித்துத் தரும்படி கேட்டவன். தகப்பனுடைய பாதுகாப்பின் கீழே அடங்கி வாழ மனதில்லாமல், தன் இஷ்டப்படி வாழ்வதற்காக தூரதேசத்திற்குப் போக விரும்பினவன். சிறிய குழந்தை தாயின் கையை விட்டுவிட்டுத் தனியே நடக்கப் பார்ப்பது போல நடந்து கீழே விழுந்தான். பன்றிகளின் தவிட்டைத் தின்ற போதுதான் அவனுக்கு அறிவு வந்தது. அப்படிப்பட்ட இளைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
வாலிபர்களே, பெருமையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இந்த உலகத்திலே இரண்டு காரியங்களைக் காண்பது மிகவும் அரிதானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று, தாழ்மையுள்ள இளைஞன், இரண்டாவது திருப்தியுள்ள முதியவன். இது மிகவும் அப்பட்டமான உண்மையாயிருக்கிறதை நான் காண்கிறேன்.
உன்னுடைய திறமையைக் குறித்தும், உன்னுடைய பலத்தைக் குறித்தும், அறிவைக் குறித்தும், தோற்றத்தைக் குறித்தும், சாமர்த்தியத்தைக் குறித்தும் பெருமை கொள்ளாதே. உன்னைக் குறித்தும், உனது ஆஸ்தியைக் குறித்தும் பெருமை கொள்ளாதே. உன்னையும் உலகத்தையும் குறித்து நீ சரியாக விளங்கிக் கொள்ளாததால்தான் இவ்வித பெருமைகள் ஏற்படுகின்றன. உனக்கு வயது ஏறும்போதுதான் நீ இவைகளை சரியானவிதத்தில் பார்க்கத் தொடங்குவாய்; பெருமைகொள்ள அவசியமேயில்லை என்பதை உணர்ந்து கொள்ளுவாய். அறியாமையும், அனுபவமில்லாமையும்தான் பெருமைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது. அந்த அஸ்திபாரம் அகன்றுவிட்டால் பெருமைகுணம் போய்விடும்.
தாழ்மையுள்ள ஆவியின் விசேஷத்தைக் குறித்து வேதாகமம் நமக்கு எத்தனையோ முறை கூறுகிறது. “எவனாகிலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” (ரோம 12:3) இருக்கும்படியாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. “ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக் கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை “ (1கொரி 8:2) என்று வேதாகமம் எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறது. “. . மனத்தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள்” (கொலோ 3:12) என்று பவுல் கட்டளையிடுகிறார். “மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள் “ (1பேது 5:5) என்று பேதுருவும் குறிப்பிடுகிறார். அநேகருக்கு இது ஒரு கந்தையான ஆடையைப் போலத் தோற்றமளிப்பது என்ன பரிதாபம்!
இந்தக் காரியத்தில் நமது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து விட்டுச் சென்றிருக்கும் மாபெரும் உதாரணத்தை கவனியுங்கள். பெருமைக்கு நேர்எதிரான தாழ்மையைக் காண்பித்தார். அவர் தமது சீஷர்களின் கால்களைக் கழுவினார். “நான் உங்களுக்கு செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்: (யோவா 13:15). மேலும் 2கொரி 8:9ல் “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே “ என்று அவரது தாழ்மையைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல, “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், . . . தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி 2:6-8) என்றும் கூறப்பட்டுள்ளது. பெருமையாயிருப்பதென்பது சாத்தானைப் போலவும், பாவத்தில் விழுந்துபோன ஆதாமைப் போலவும் இருப்பதாகும். அது கிறிஸ்துவைப் போலிருப்பதாகாது. கர்வமுள்ள இருதயம் இயேசுவுக்கு ஒத்ததாக இருக்க முடியாது.
ஞானிகளிலேயே பிரதான ஞானியான சாலமோனை நினைத்துப் பாருங்கள். அவர் தன்னைக் குறித்து எப்படிப்பட்ட அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்: “நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்” (1ராஜா 3:7). தன்னை சிறுபிள்ளையாகவே நினைக்கிறார். ஆனால் அவரது சகோதரனாகிய அப்சலோமுக்கோ வேறுவிதமான ஆவி இருந்தது. தனக்கு நிகர் யாருமில்லை என்கிற கர்வமிருந்தது. “வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் “2சாமு 15:4) என்கிறான். இவனுடைய ஆவி, அவன் சகோதரனாகிய சாலமோனின் ஆவிக்கு முற்றிலும் வேறுபட்டதாய் இருப்பதை கவனியுங்கள். அவனுடைய இன்னொரு சகோதரனாகிய அதோனியாவும், “நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தினான் “1ராஜா 1:5). தாழ்மையே சாலமோனுடைய ஞானத்திற்கு ஆரம்பமாக இருந்தது. தனது அனுபவத்தை அவர் எழுதுகிறார்: “தன் பார்வைக்கு ஞானியாய் இருப்பவனைக் கண்டாயானால், அவனைப் பார்க்கிலும் மூடனைக் குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்” (நீதி 26:12).
வாலிபர்களே, இங்கே குறிப்பட்ட வசனங்கள் யாவையும் உங்கள் இருதயத்திலே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சொந்தக் கருத்துக்களைக் குறித்து அதிக நம்பிக்கையாயிராதீர்கள். மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு, நான் நினைப்பது மாத்திரம்தான் சரி என்கிற எண்ணத்தை அகற்றிப் போடுங்கள். பெரியவர்கள், முக்கியமாக உங்கள் பெற்றோர் கூறும் கருத்து உங்களுடைய கருத்துக்கு எதிராக இருக்குமானால் உங்கள் கருத்தை நம்புவதை விட்டுவிடுங்கள். வயது அனுபவங்களைக் கொடுக்கிறது. ஆகவே அது மரியாதைக்கு உரியதாகும். யோபுவின் புத்தகத்திலே காணப்படுகிற எலிகூ என்பவனின் ஞானம் இவ்விஷயத்திலே காணப்பட்டது: “அவர்கள் தன்னைப் பார்க்கிலும் வயது சென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்” (யோபு 32:4). அதன் பிறகு சொல்கிறான்: “நான் இளவயதுள்ளவன். நீங்களோ விருத்தாப்பியர். ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்ராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன். முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்” (யோபு 32:6,7). அடக்கமும், அமைதலும் இளைஞர்களுக்கு நல்ல ஆபரணங்களாக இருக்கிறது. ஒருபோதும் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படாதிருங்கள். இயேசுக்கிறிஸ்து தமது 12ஆம் வயதிலே அப்படிப்பட்டவராய் இருந்தார். அவரை தேவாலயத்திலே கண்டார்கள். போதகர்கள், ஞானிகளின் நடுவிலே அவர் உட்கார்ந்திருந்தார். “அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்” (லூக் 2:46). உண்மையான புத்திசாலிகள், எப்போதும் கற்றுக் கொள்ளவே விரும்புவார்கள். தாங்கள் அறிந்திருப்பது மிகவும் குறைவானது என்றே அவர்கள் கூறுவார்கள். ஐசக் நியூட்டன் என்கிற மாபெரும் ஞானி, “அறிவாகிய மாபெரும் கடலின் கரையிலே ஒருசில விலையேறப்பெற்ற கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் சிறுவன் நான் ” எனக் கூறுவார்.
இளைஞர்களே, நீங்கள் புத்திசாலிகளைகவும், சந்தோஷமாகவும் இருக்க விரும்பினால், இந்த பெருமை குணத்தைக் குறித்து எச்சரிப்பாயிருங்கள்.
ii) சிற்றின்பங்களில் நாட்டம்
இளைஞர்கள் சந்திக்கும் அடுத்த ஆபத்து, சிற்றின்பங்கள்
இளவயதில்தான் ஆசை இச்சைகள் அதிகமாக செயல்படும். அது, கட்டுக்கடங்காமல் அழுகிற சிறு குழந்தையைப் போல பிடிவாதமாக சிற்றின்பங்களை நாடிப் போகின்ற வயது. வாலிபவயதில்தான் நமக்கு பெரும்பாலும் நல்ல சுகமும் தேகபெலனும் இருக்கும். மரணம் வெகுதொலைவில் இருப்பது போலிருக்கும். இந்த உலக வாழ்க்கையை அனுபவிப்பதுதான் எல்லாமே என்பது போலத் தோன்றும். வாலிபவயதுதான் பெரும்பாலானோருக்கு கவலையற்றதும், பொறுப்புகள் இல்லாததுமான காலமாக இருக்கும். ஆகவே சந்தோஷத்தை நாடிப் போவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்கிற உணர்வை வாலிபருக்குக் கொடுக்க இந்த காரணங்களெல்லாம் உதவியாயிருக்கின்றன. நீ யாருக்கு அடிமை என வாலிபர்களிடம் இன்று கேட்டால், சிற்றின்பங்களுக்கே நான் அடிமை என்பதாக இன்று பலரும் கூறுவார்கள். அதுதான் உண்மையான பதிலாக இருக்கும்.
வாலிபரே, இந்த சிற்றின்பங்களும் மோகமும் என்னவிதமான கனிகளைக் கொண்டுவரும் என்பதையும், அது உங்களுக்கு எப்படியெல்லாம் தீமை செய்யும் என்பதை நான் பட்டியலிட்டால் நேரமே போதாது. கேளிக்கைகள், விருந்துகள், குடி, சூதாட்டங்கள், சினிமாக்கள், நடனங்கள் இவை போன்றவற்றைக் குறித்து நான் சொல்லவும் வேண்டுமா? இவைகளில் சிக்கிக் கொண்டு கசப்பான அனுபவங்களைப் பெற்றவர்கள் கொஞ்சநஞ்சமில்லை. இவைகளெல்லாம் ஒருசில உதாரணங்களே. சிற்றின்பங்களின் அடிப்படையான நோக்கம்: நேரம் போவதே தெரியாமல் உணர்ச்சிவசப்பட வைப்பது, மனதை சிந்திக்கவிடாமல் குழம்ப செய்வது, மாம்சத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் தீனி போடுவது – இவை போன்ற காரியங்கள் உங்களுடைய வாலிப வயதை மிகவும் வலுவாகத் தாக்கக் கூடியவை. சிற்றின்பங்களுக்கு இவை தமது அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. எச்சரிப்போடிருங்கள். “தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராய் இராதேயுங்கள் “ (2தீமோ 3:4) என பவுல் கூறுகிற எச்சரிப்புக்கு செவிகொடுங்கள்,
நான் கூறுவதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உலகத்தின் இச்சைகளோடு நீங்கள் இணைந்திருப்பீர்களானால் அவை உங்களுடைய ஆத்துமாவைக் கொன்றுவிடும். மாம்சத்துக்கும், மனதின் இச்சைகளுக்கும் செவிசாய்த்தீர்களானால், அது நிச்சயமாக உங்கள் மனசாட்சியை கருகிப்போகச் செய்து, கடினமுள்ள இருதயத்தையும் உங்களில் ஏற்படுத்திவிடும். ஆரம்பத்தில் ஒன்றுமே ஆகாதது போலத்தான் தோன்றும். ஆனால் நாளடைவில் அதன் கொடூரங்களைக் காண்பீர்கள்.
பேதுருவும் இதே புத்திமதியைக் கூறுகிறார்: “ஆத்துமாவுக்கு விரோதமாகப் போர் செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகுங்கள்” (1பேது 2:11). சிற்றின்பங்கள் ஆத்துமாவின் சமாதானத்தைக் குலைத்துப் போட்டுவிடும். ஆத்துமாவை பெலன் இழக்கச் செய்து, அதைத் தனக்கு அடிமையாகச் சிறைப்பிடித்துக் கொள்ளும். பவுல் அப்போஸ்தலன் சொல்லுவதை கவனித்துக் கேளுங்கள்: “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகஆராதனையான பொருளாசை இவைகளை பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்” (கொலோ 3:5); “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா 5:24); “நான் என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1கொரி 9:27) என்று பவுல் சொல்லுகிறார். பாவத்திற்கு முன்னதாக, ஆத்துமா, மகிழ்ச்சியோடு சரீரமாகிய மாளிகையில் குடிகொண்டிருந்தது. ஆனால் பாவத்திற்குப் பின்னால் சரீரமானது, கெட்டுப் போய், ஒழுக்கம் குலைந்துவிட்ட நிலையில் இருக்கிறது. அதை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியதாயிருக்கிறது. இப்போது சரீரம் ஆத்துமாவுக்கு உதவியாக இராமல், ஆத்துமாவுக்கு தொந்தரவாயிருக்கிறது. அது ஆத்துமாவை முன்னேறவிடாமல் தடை செய்து கொண்டே இருக்கிறது. மாம்சத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி வைத்திருந்தோமானால் அது நமக்கு சேவை செய்யக்கூடிய நல்ல வேலையாளாக இருக்கும்; ஆனால் மாம்சம் நம்மை ஆளும்படி விட்டுவிட்டோமானால் அது மிகவும் மோசமான எஜமானாக செயல்படும்.
மறுபடியுமாக பவுல் சொல்லுவதை கருத்தில் கொள்ளுங்கள்: “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்” (ரோம 13:14). இந்த வார்த்தைகள்தான் அகஸ்டின் என்கிற மனிதரை அவரது அடங்காத நிலையிலிருந்து மாபெரும் வபக்தனாக மாற்றியது. வாலிபர்களே, இந்த வார்த்தைகள் உங்கள் இருதயத்திலும் கிரியை நடப்பிக்க நான் வாஞ்சிக்கிறேன்.
உலகத்தின் ஆசை இச்சைகளின் மீது நாட்டம் வைத்தீர்களானால் அவை எதுவுமே நிறைவைத் தருவதில்லை என்பதையும், அவை மாயையாக இருக்கிறதென்பதையும் ஞாபகத்தில் வையுங்கள். இவை, வெளிப்படுத்தின தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் வெட்டுக்கிளிகளைப் போன்றவை. அவைகளுக்குக் கிரீடம் போன்றவை கொடுக்கப்பட்டிருந்தாலும், தங்கள் வால்களில் அவைகள் கொடுக்குகளை உடையவைகளாயிருந்தன. வெளித்தோற்றத்தில் பிரமாதமாகத் தோன்றினாலும் உள்ளே கொடிய விஷத்தைக் கொண்டவை. அப்படியே மாயையான காரியங்களும் இன்பம் அளிப்பது போலத் ன்றினாலும் அவை மனிதர்களின் ஆத்துமாக்களை சேதப்படுத்துவதாயிருக்கிறது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல அல்லவா? சுவையாக இருப்பவை எல்லாம் நல்லவை எனக் கூறிவிட முடியாது. தற்காலிகமாகப் பெறும் இன்பங்கள் மெய்யான சந்தோஷத்தைத் தராது.
நீங்கள் போய் உங்களால் ஆன மட்டும் உலக சந்தோஷங்களை அனுபவித்துப் பாருங்கள். ஆனால் அதினால் உங்கள் இருதயத்துக்கு திருப்தி ஏற்படாது. நீதி 30:15ல் காண்கின்ற அட்டையைப் போல, இன்னும் தா, தா என்று திருப்தி இல்லாமல் உள்மனது கதறிக் கொண்டேயிருக்கும். மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது. கடவுள் ஒருவர்தான் அதை நிரப்பக் கூடியவர். சாலமோன் அதை அனுபவித்து உணர்ந்து கொண்டார். உலகஇன்பங்கள் யாவும் மாயையே என்பதை அறிந்து கொண்டார். அது மனதுக்கு சஞ்சலத்தையே உண்டு பண்ணுகிறது. வெளிப்பார்வைக்கு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போல அழகாக இன்பமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் உள்ளேயோ சகலவித அசுத்தங்களும் நிறைந்ததாய், வருத்தத்தையே விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. காலம் கடந்து போவதற்குள் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். உங்கள் கண்களுக்கு இன்பமாகத் தோன்றுகிற காரியங்கள் யாவின் மீதும், “கொடிய விஷம்” என்று எழுதி வையுங்கள். மிகவும் நியாயமான இன்பங்களைக்கூட அளவு மீறாமல் மிதமாகவே அனுபவிக்க வேண்டும். அவைகளில் உங்கள் இருதயத்தைப் பறிகொடுத்துவிட்டீர்களானால், உங்கள் ஆத்துமா அழிக்கப்பட்டுவிடும். எந்த இன்பமும், அதில் பாவம் இல்லை என்பது உறுதியாக்கப்பட்டதானால், அளவோடு உபயோகிக்கப்படலாம்.
அசுத்த காரியங்கள்
இளைஞர்களே, ஏழாம் கற்பனையைக் கொண்டு நான் உங்களை எச்சரிக்காமல் விடமாட்டேன். யாத் 20:14ஐ ஞாபகத்தில் வையுங்கள். “விபசாரம் செய்யாதிருப்பாயாக”. விபசாரம், வேசித்தனம், மற்ற எந்த அசுத்தமும் உங்கள் வாழ்வில் பிரவேசிக்க விடாதிருங்கள். இந்தக் கற்பனையைக் குறித்து மிகவும் தெளிவாக, விவரமாக இளைஞர்களுக்கு சொல்லப்பட வேண்டியது மிகவும் அவசியமாயிக்கிறது என நான் எப்போதுமே நினைப்பேன். தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் இந்த பாவத்தைக் குறித்து பேசியிருப்பதைப் பார்க்கிறேன் – நமது சீர்திருத்த சபைகளில் இந்த விஷயத்தை எவ்வளவாக கையாண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறேன். அநேக இளைஞர்கள் ரூபனைப் போலும், ஒப்னி, பினகாûஸப் போலும், அம்னோனைப் போலும் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது எனது மனசாட்சியின் பிரகாரம் என்னால்
சும்மா இருக்க முடியவில்லை. இந்தக் கற்பனையிலுள்ள பாவத்தைக் குறித்து உலகமானது பேசாமல் ஏன் மெüனத்தைக் கடைப்பிடிக்கிறது என நான் வியந்து போகிறேன். “இளைஞர்களின் பாவம் ” என கருதப்படுகிற இந்த பாவத்தைக் குறித்து எச்சரிக்காமல் இருந்தால் அது தவறும், வேதத்திற்கு விரோதமான செயலுமாக நான் நினைக்கிறேன்.
ஏழாம் கற்பனையை மீறுவது மற்ற எல்லா பாவங்களைக் காட்டிலும் கொடிய விளைவுகளைக் கொண்டுவரும். ஓசியா(4:11) சொல்வது போல, “வேசித்தனமும், திராட்சைரசமும், மதுபானமும் இருதயத்தை மயக்கும் “. ஒரு மனிதன் செய்த எந்த பாவங்களைக் காட்டிலும் இந்த பாவம்தான் ஆழமான என்றும் மறையாத தழும்பை அவனில் ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆயிரக்கணக்கானவர்களை இந்தப் பாவம் விழத் தள்ளுகிறது. கடவுளின் பக்தர்களைக் கூட இந்த பாவம் பதம் பார்த்துவிடுகிறது. லோத்து, சிம்சோன், தாவீது போன்றவர்களையும் இது தீண்டியது நமக்கு பயத்தை வருவிப்பதாய் இருக்கிறது. இந்த பாவத்தை மனிதன் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. இந்த பாவத்தைக் குறித்து சாத்தானுக்கு விசேஷித்த சந்தோஷம் உண்டு. ஏனெனில் சாத்தான் அசுத்த ஆவியாக இருப்பதால் அசுத்த காரியங்களில் சாத்தானுக்கு ஏக சந்தோஷம்.
இளைஞர்களே, நீங்கள் நல்ல வாழ்க்கையை அடைய வேண்டுமானால், “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” (1கொரி 6:18). “இப்படிப்பட்டவைகளினிமித்தமாக கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால் ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளினால் மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்” (எபே 5:6-7). அந்தவிதமான சந்தர்ப்பங்களுக்கு விலகியோடுங்கள். அக்காரியங்களில் உங்களை சிக்க வைக்கும் நண்பர்களை விட்டு விலகுங்கள். உங்களை சோதனைகளில் விழப்பண்ணுகிற இடங்களுக்குப் போகாமல் தவிர்த்துவிடுங்கள். நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து இதுசம்பந்தமாக கூறும் புத்திமதிகளை கவனித்து மனதில் வையுங்கள். “நான் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில்
ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால் அதைத் தறித்து எறிந்து போடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்(மத் 5:28-30). பரிசுத்த யோபைப் போல “கண்களோடு உடன்படிக்கை பண்ணுங்கள்” (யோபு 31:1). அக்காரியங்களைக் குறித்து பேசுவதற்கும் இடங்கொடாதீர்கள். அவைகளின் பெயர் முதலாய் சொல்லக்கூடாத காரியங்களில் இதுவும் அடங்கும். தாரைத் தொட்டால் அது ஒட்டிக் கொள்ளத்தான் செய்யும். அதைக் குறித்த சிந்தனையை மனதில் வளர்க்கக் கூடாது. அவைகளை எதிர்த்து நில்லுங்கள். அவைகளை அழித்துப் போடுங்கள். அந்த பாவம் உங்களைத் தீண்டி விடாதபடிக்கு ஜெபம் செய்யுங்கள். அதற்கு இடங்கொடாதபடிக்கு எதையும் இழக்க தயாராயிருங்கள். மனதிலே கற்பனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் பாவம் வளர்ந்து பெருகும். ஆகவே உங்கள் சிந்தைகளையும் காத்துக் கொள்ளுங்கள். சிந்தையைக் காத்துக் கொண்டீர்களானால், செயல்களையும் காத்துக் கொண்டவர்களாவீர்கள்.
நான் கூறிய இந்த எச்சரிப்புகளையெல்லாம் கவனமாகக் கேளுங்கள். மற்றவைகளை மறந்தாலும், இந்த ஆபத்தைக் குறித்து மறந்து போகாதீர்கள்.
iii) சிந்திக்காத தன்மை
யோசனையற்றவர்களாக இளைஞர்கள் இருப்பது இன்னொரு ஆபத்து
சிந்திக்காமல் இருப்பதுதான் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் நித்தியமாக அழிந்து போகக் காரணம். மனிதர்கள் பின்விளைவை நினைத்துப் பார்ப்பதில்லை; வருங்காலத்தை குறித்து யோசிப்பதில்லை; தங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை; தற்போது தாங்கள் இருக்கிற நிலமை பிற்காலத்தில் என்ன விளைவுகளைக் கொண்டுவரும் என்பதைக் குறித்து ஒருபோதும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள். முடிவில்தான் விழித்துக் கொள்வார்கள். தாங்கள் கெட்டுப் போனதற்குக் காரணம் முன்கூட்டியே சிந்திக்காததுதான் என்பதை மிகவும் தாமதமாகவே உணருவார்கள்.
மற்றவர்களைக் காட்டிலும் இளவயதிலுள்ளவர்களுக்குத்தான் இது மிகவும் ஆபத்தாக முடிகிறது. உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஆபத்துகளை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறபடியால் உங்கள் நடக்கையைக் குறித்து நீங்கள் கவனம் செலுத்துவதில்லை. தெளிந்தபுத்தியையும் நல்ஆலோசனையையும் அடைய பொறுமையற்றவர்களாய், விரைந்து முடிவெடுக்க விரும்பி தவறான முடிவுகளை எடுத்துவிடுவதால் பிற்பாடு மிகுந்த துயரத்துக்குள்ளாகிறீர்கள். அவசரப்பட்ட ஏசா, ஒருவேளை உணவுக்காக தன்னுடைய முதற்பிறப்பின் சுதந்திரத்தை சற்றும் யோசிக்காமல் விற்றுப் போட்டான். பிற்காலத்தில் தனக்கு அது எவ்வளவு அவசியமாயிருக்கும் என்பதை கொஞ்சம்கூட சிந்தித்துப் பார்க்காமல் செயல்பட்டதால் பின்னாளில் அழுது புலம்பி தேடியும் அதை அடையாமற் போனான். இளைஞர்களாயிருந்த சிமியோனும் லேவியும் தங்களுடைய சகோதரி தீனாளுக்காக பழி வாங்குவதாக நினைத்து சீகேமியரைக் கொன்று போட்டார்கள். அது தங்கள் தகப்பனுக்கு எவ்வளவு கஷ்டத்தையும் கலக்கத்தையும் கொண்டுவரும் என்பதைக் கொஞ்சமும் நினைக்காதவர்களாக நடந்து கொண்டார்கள். பக்தனாகிய யோபுவும் தனது பிள்ளைகள் இவ்விதமாகத்தான் சிந்திக்காதவர்களாக நடந்து கொள்வார்களோ என மிகவும் பயந்தார். ஆகவே, அவர்கள் விருந்து செய்கிற நாளெல்லாம் யோபு இப்படியாக செய்வார்: “விருந்து செய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு:ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான். இந்தப் பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான்” (யோபு 1:5).
இந்த உலகத்திலே சற்றும் சிந்திக்காமல் செயலாற்றினால் எதையுமே சரியாக செய்ய முடியாது. அதிலும் சிந்திக்காமல் செயல்படுவதால் நமது ஆத்துமாவுக்கு எந்த நன்மையையும் இல்லை. “யோசிக்காதே” என சாத்தான் நமது காதுகளில் ஓதிக் கொண்டேயிருப்பான். மனம் மாறாத இருதயம், கள்ளவியாபாரி எழுதும் கள்ளக் கணக்குப் புத்தகத்தைப் போன்றது. அது எந்த சரிபார்த்தலுக்கும் உட்படாதது. இதை சாத்தான் நன்றாக அறிந்திருக்கிறபடியால், எங்கே ஒருவன் சிந்திக்கத் தொடங்கினால் தனது ஆத்துமா இருக்கின்ற ஆபத்தான நிலையை சரிபார்த்து விடுவானோ என்பதால் அவனிடம் யோசிக்காதே என சொல்லிக் கொண்டேயிருப்பான். ஆனால் கடவுள் என்ன சொல்கிறார். “உன் வழிகளை சிந்தித்துப் பார்” என்கிறார். நில், கவனி, சிந்தித்துப் பார், ஞானம் அடை. ஸ்பெயினில் ஒரு பழமொழி உண்டு: “அவசரபுத்தி சாத்தானிடமிருந்து
வருகிறது”. சில மனிதர்கள் சிந்தித்துப் பார்க்காமல் அவசரப்பட்டு திருமணம் செய்துவிட்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல, சிந்திக்காமல் செயல்படுபவர்கள் ஒரு நொடியில் தங்கள் ஆத்துமாக்களுக்கு கேடுண்டாக்கிவிட்டு வருடக்கணக்காக அதை சரிப்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாவார்கள். மோசமான வேலைக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் தப்பும் தவறுமாக வேலைகளை செய்துவிட்டு, ஐயோ யோசிக்காமல் செய்துவிட்டேனே என்பார்கள். அதுபோல, சில இளைஞர்கள் அவசரபுத்தியினால் பாவம் செய்துவிடுவார்கள். பிறகு, “ஓ அதைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கவேயில்லையே. அது பாவம் போல எனக்குத் தோன்றவில்லையே” என்பார்கள். பாவம் போலத்
தோன்றவில்லையாம்! பாவம் எப்படித் தோற்றமளிக்கும்? அது உன்னிடம் வந்து, நண்பனே, நான்தான் பாவம் என்று தன்னை அறிமுகப்டுத்திக் கொள்ளுமா? அப்படி சொல்லிவிட்டு வந்ததானால் அதனால் கொஞ்சமாகத்தான் தீங்கு செய்ய முடியும். பாவமானது பயங்கரமாகத் தோற்றமளிக்காது. பாவமானது எப்போதுமே நல்லது போலவும், ரசிக்கத்தக்கதாகவும், ஆசைப்படத்தக்கதாகவும்தான் அதை செய்கிறபோது
இருக்கும். இளைஞர்களே, அறிவடையுங்கள்! ஜாக்கிரதையாயிருங்கள்! சாலமோனுடைய வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்: “உன் கால் நடையை சீர்தூக்கிப் பார். உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக” (நீதி 4:26). எதையும் அவசரப்பட்டு செய்யாமல் சற்று நிதானமாக பகுத்தறிந்து செய். இல்லையென்றால் முடிவு துரிதமாக ஏற்பட்டுவிடும் என ஞானி ஒருவர் கூறினார்.
இளைஞர்களிடம் இப்படியாக எதிர்பார்ப்பது சரியல்ல என சிலர் வாதிடக்கூடும். ஆழமாக சிந்திப்பதற்கு இளைஞர்களுக்கு வயதும் அனுபவமும் போதாது என சிலர் கூறுவார்கள். நான் ஏன் சொல்கிறேனென்றால் காலம் இருக்கிறவிதத்தைப் பார்த்தால் அவர்களுக்கு இருக்கும் ஆபத்துகள் கொஞ்சநஞ்சமல்ல. முட்டாள்தனமான பேச்சுகளும், கேலிப்பேச்சுகளும், கிண்டல்களும், அளவுக்கதிகமான கேளிக்கைகளும், உல்லாசங்களும் நிரம்பியிருக்கின்ற வேளை இது. வாலிபர்கள் சற்று நேரம் சந்தோஷமாயிருப்பது அவசியம்தான். ஆனால் எந்நேரமும் உல்லாச காரியங்களிலேயே பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு புத்திசாலித்தனத்தை ஏற்படுத்துமா? ஞானிகளிலேயே சிறந்தவர் சொல்லுவது என்ன? “விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்க வீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயமோ களிப்பு வீட்டிலே இருக்கும்” (பிரச 7:2-4). வேதாகம கமென்ட்ரி எழுதிய மத்யூ ஹென்றி என்பவர், எலிசபெத் ராணியினுடைய காரியதரிசியாகிய வால்ஷிங்ஹாம் (Walsingham) என்கிறவரைக் குறித்த ஒரு கதையைக் கூறுவார். இந்த காரியதரிசி தனது பணிக்காலம் முடிந்து, பொது வாழ்விலிருந்து ஓய்வுபெற்று, வீட்டிலே இருந்தார். அப்போது அதிக ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார். அவரை சந்திப்பதற்கு அவருடைய நன்பர்கள் வருவார்கள். அவர்கள் அவரைப் பார்த்துவிட்டு, நண்பரே, நீங்கள் முன்புபோல கலகலவென்று இல்லையே. முகத்தில் சந்தோஷம் இல்லாமல், ஏதோ பாரமுடையவராக இருப்பது போல இருக்கிறீர்களே என்ன விஷயம் எனக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார்: “ஆம், நான் உல்லாசமாக இல்லைதான். என்னை சுற்றிலும் இருப்பவர்கள் அதிக பாரத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும்போது நான் மாத்திரம் எப்படி உல்லாசமாக இருப்பது? கடவுள் அதிக பாரத்தோடு நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்; கிறிஸ்து நமக்காக பாரத்தோடு பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்; பரிசுத்தஆவியானவர் பாரத்தோடு நம்மோடு போராடிக் கொண்டிருக்கிறார். வேதசத்தியங்கள் யாவும் அதிக ஆழமானவை. நமது ஆவிக்குரிய விரோதிகளும் நம்மை அழித்துப் போட அதிக பாரத்தோடு உழைத்துக் கொண்டிருக்கின்றன. பாவிகள் நரகத்தில் பாரமான சூழலில் இருக்கிறார்கள். இப்படி நம்மைச் சுற்றிலும் உள்ள காரியங்கள் பாரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கையில் நீங்களும் நானும் பாரமற்றவர்களாக, உல்லாசமாக இருப்பது எப்படி முடியும்?”
இளைஞர்களே, சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும், எங்கே போகிறீர்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அமைதலாக தனிமையில் உட்கார்ந்து சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தோடு நீங்களே பேசிக் கொண்டு அமர்ந்திருங்கள். என்னுடைய எச்சரிப்பை நினைவில் வையுங்கள்: சிந்திக்காத காரணத்தினால் பாழாகி விடாதீர்கள்.
iv) மதத்தை அலட்சியம் செய்யும் போக்கு
மதத்தை அவமதிப்பது இளைஞர்கள் சந்திக்கு மற்றொரு ஆபத்து
இதுவும் இளைஞர்களுக்கே உரியதான விசேஷித்த ஆபத்து. ஜனங்களிலேயே இளைவயதினர்தான் அதிக அளவில் மதநம்பிக்கை அற்றவர்களாகக் காணப்படுவதை நான் காண்கிறேன். கிருபையின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்வதில் இளைஞர்களே மிகக் குறைவானவர்கள். ஆராதனைகளில் பங்கு பெறுவதிலும்,
வேதாகமத்தை எடுத்து வருவதிலும், ஜெபப் புத்தகங்களை உபயோகிப்பதிலும், பாடல்கள் பாடுவதிலும், பிரசங்கங்களைக் கேட்பதிலும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஜெபக்கூட்டங்களுக்கும் வேதபாட வகுப்புகளுக்கு வரத்தவறுவதும், ஆத்துமாவுக்கு உதவியாயிருக்கிற எந்த நிகழ்ச்சிகளுக்கும் வர மனமில்லாமல் இருப்பதும் இளைஞர்களே. இவையெல்லாம் தங்களுக்கு
அவசியமில்லை என வாலிபர்கள் நினைக்கிறார்கள். இதெல்லாம் பெண்களுக்கும் வயோதிகர்களுக்கும் உரியவை. தங்களுக்குரியவை அல்ல என எண்ணுகிறார்கள். தங்கள் ஆத்துமாவைக் குறித்து கவலைப்படுவது அவர்களுக்கு வெட்ககரமாக இருக்கிறது. மோட்சத்தைக் குறித்து எண்ணுவதுகூட அவர்களுக்கு அவமதிப்பாக இருக்கும் போலிருக்கிறது. இதுதான் மதத்தை அலட்சியம் செய்யும் போக்கு ஆகும். இதே மாதிரியான ஆவியை உடையவர்களாகத்தான் பெத்தேலில் இருந்த சிறுவர்கள் எலியா
தீர்க்கதரிசியை கேலி செய்தார்கள். இந்தவிதமான ஆவியைக் குறித்து இளைஞர்களே, எச்சரிக்கையாயிருங்கள். மதமானது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கிமானது அதை நாடிக் கண்டடைவதும்.
பரிசுத்தமான காரியங்களை அவமதிப்பதும் அலட்சியம் செய்வதும், அவிசுவாசத்தை வளர்க்கும். கிறிஸ்தவத்துக்கடுத்த எந்தக் காரியத்தைக் குறித்தும் ஒரு இளைஞன் கேலி பேசி பரிகாசம் பண்ணினானென்றால், அவன் வருங்காலத்தில் மிக மோசமான அவிசுவாசியாக மாறிவிடுவான் என்பதில் சந்தேகமில்லை.
இளைஞனே, நீ உன் மனதை கடினப்படுத்துகிறாயா? மதத்தை அலட்சியம் செய்தால் உனக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பெரும் குழியில் விழுந்து துயரத்துக்குள்ளாவாய் என்பதை உணருகிறாயா? தாவீது கூறுவதை சிந்தித்துப் பார்: “தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்” (சங் 14:1). மதிகெட்டவன், முட்டாள் என அவனைக் குறிப்பிடுகிறார். அவனால் தேவன் இல்லையென சொல்லத்தான் முடிகிறதே தவிர, தான் சொல்லுவதை அவனால் நிரூபிக்க முடியாது. பரிசுத்த வேதாகமம் நமக்கு உண்மையான தேவனை அறிமுகப்படுத்துகிறது. ஒரு புத்தகமானது ஆரம்பம் தொடங்கி, முடிவு வரைக்கும் பிழையே இல்லாமல் இருக்கக் கூடுமானால் அது வேதாகமம் ஒன்றுதான். வேதாகமம் தனது பிழையற்ற தன்மையை பலவிதங்களில் காலங்காலமாக நிரூபித்து வந்திருக்கிறது. எப்பேர்பட்ட விரோதி வந்து அதற்கு விரோதமான காரியங்களைக் கூறினாலும், பிழைகளைக் கண்டுபிடிக்க முயன்றாலும் அதன் உண்மைத் தன்மையை நிரூபித்திருக்கிறது. “கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது” (சங் 18:30) என்று தாவீது கூறுகிறார். வேதாகமம் எத்தனையோ முறை, எத்தனையோ விதங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவுக்கு அதனை சோதித்துப் பார்த்தார்களோ அவ்வளவுக்கு அது கடவுளின் கரம் உருவாக்கியதுதான் என்பதும் அதன் உண்மைத் தன்மையும் தெளிவாக விளங்கிற்று. நீங்கள் வேதாகமத்தை நம்பவில்லையானால் வேறு எதை நம்புவீர்கள்? இல்லையென்றால் அபத்தமான ஏதாவது கட்டுக்கதைகளைத்தான் நம்ப வேண்டியதாயிருக்கும். வேதாகமத்தை கடவுளின் வார்த்தையாக ஏற்றுக் கொள்ளாதவன், இந்த மாதிரியான அபத்தங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வான். நீ வேதாகமத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்கூட அது கடவுளின் வார்த்தையாக இருப்பதால், அதை அவமதிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
வேதாகமத்தில் விளங்கிக் கொள்ள முடியாத கடினமான பகுதிகள் இருக்கிறதே என சில பேர் சொல்லுவார்கள். அப்படி இல்லாவிட்டால் அது கடவுளின் புத்தகமாக இருக்க முடியாதே. அப்படி இருப்பதால் உனக்கென்ன பிரச்சனை? நீ சாப்பிடும் மருந்துகள் உனது உடலில் என்னென்ன காரியங்களை செய்கிறது என்பது உனக்கு விளங்கவில்லை என்பதற்காக மருந்து சாப்பிடாமல் இருக்கிறாயா? மனிதர்கள் என்ன கூறினாலும் சரி, இரட்சிப்புக்கடுத்த காரியங்கள் வேதாகமத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.
சொல்லப்போனால், ஒருவன் வேதாகமத்தை நிராகரிக்கிறான் என்றால் அதற்கு வேதாகமம் விளங்கவில்லை என்பது உண்மையான காரணமாக இருக்காது. இதை நன்றாக நினைவில் வை. மாறாக, வேதாகமத்தை நிராகரிப்பவர்களுக்கு அது நன்றாகவே விளங்கியிருக்கிறது. அது அவர்களுடைய குணங்களைக் கண்டிக்கிறதை அவர்கள் உணருகிறார்கள். அவர்களுடைய பாவநிலையை உணர்த்தி, அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு உரியவர்கள் என்பதை வேதாகமம் சுட்டிக் காண்பிக்கிறது. அதைப் பொறுக்க
மனமில்லாமல், வேதாகமத்தை தவறு என்றும் உபயோகமற்றது என்றும் நம்பும்படியாக தங்கள் மனதை செலுத்துகிறார்கள். ‘தவறுதலான வாழ்க்கைதான் வேதாகமத்தை எதிர்ப்பதற்கு ஒரே காரணம்’ என்று ரோச்சஸ்டர் (Rochester) என்பவர் குறிப்பிடுகிறார். ‘கிறிஸ்தவ சத்தியங்களைத் தங்களுடைய வாழ்க்கையிலே செயல்படுத்த விரும்பாததால்தான் மனிதர்கள் கிறிஸ்தவத்தின் உண்மைத்தன்மையைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்’ என்று ராபர்ட் சவுத் (Robert South) என்பவர் கூறுகிறார்.
இளைஞர்களே, கடவுள் தாம் கூறியவைகளை என்றாவது நிறைவேற்றாமல் விட்டிருக்கிறாரா? இல்லவே இல்லை. அவர் சொல்லியதை செய்கிறவர். அவருடைய வாயின் வார்த்தைகள் நன்மையையே கொண்டு வந்திருக்கின்றன. வெள்ளம் வரும் என அவர் எச்சரிப்பு விடுத்ததை நிறைவேற்றாமல் போனாரா? இல்லை. சோதோம் கொமாராவின் அழிவைக் குறித்ததான தம்து வார்த்தைகளை நிறைவேற்றவில்லையா? அவருடைய வார்த்தைகளை நம்பாத எருசலேமைக் குறித்த வார்த்தைகளை நிறைவேற்றத் தவறினாரா? யூதர்களைக் குறித்து சொல்லப்பட்டவை இதுவரை நிறைவேறவில்லையா? அவர் ஒருபோதும் தமது வார்த்தைகளை நிறைவேற்றத் தவறவே மாட்டார். வேதாகமம் அவருடைய வார்த்தை. ஜாக்கிரதையாயிருங்கள். அவருடைய வார்த்தைகளை அவமதிப்பவர்களின் மத்தியிலே நீங்களும் காணப்படாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
மதத்தைக் குறித்து ஒருபோதும் அவமதித்து சிரிக்காதீர்கள். பரிசுத்தகாரியங்களை கிண்டல் செய்யாதீர்கள். தங்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து கவலையுடையவர்களாய் அதற்காக பாரத்தோடு இருக்கிறவர்களை கேலி செய்யாதீர்கள். யாரை வருத்தம் நிறைந்தவர்களாக நீங்கள் இப்போது காண்கிறீர்களோ அவர்கள் மிகுந்த சந்தோஷ வெள்ளத்தில் திளைத்திருப்பதை காணும் காலம் வரும் – அந்த நேரத்தில் நீங்கள் இப்போது சிரித்த சிரிப்புகளெல்லாம் மாறிப் போய் வருத்தத்தை ஏற்படுத்துவதை உணருவீர்கள். உங்களுடைய கேலி கிண்டல் கும்மாளம் யாவும் இருதயத்தில் மிகுந்த பாரமாக அழுத்துவதை உணருவீர்கள்.
v) மனித அபிப்ராயத்தைக் குறித்த பயம்
மனிதர்களின் கருத்துக்களுக்கு ஒத்துப்போவது இளைஞர்கள் சந்திக்கு மற்றொரு ஆபத்து
மனிதர்களுக்கு பயப்படுதல் கண்ணியை வருவிக்கிறது(நீதி 29:25). இது பெரும்பாலான மக்களுடைய மனதை ஆளுகின்ற வல்லமையைக் கொண்டிருப்பதைக் காண்கையில் பயங்கரமாயிருக்கிறது. அதிலும் முக்கியமாக இளைஞர்களின் மனதை இது அதிகமாக ஆட்சி செய்கிறது. தங்களுடைய சொந்தக் கருத்துக்களை உடையவர்கள் கொஞ்சம் பேராகத்தான் இருக்கிறார்கள். தாங்களாக சுயமாக சிந்திப்பதும் சிலபேர்தான். செத்த மீன்களைப் போல ஆற்றின் போக்கிலேயே அடித்துச் செல்லப்படுபவர்கள் போலத்தான் பலரும் இருக்கிறார்கள். பொதுவாக எல்லாரும் எதை சரியென்று சொல்லுகிறார்களோ அது இவர்களுக்கும் சரியாகப் படும்; மற்றவர்கள் தவறு எனக் கூறுவதை இவர்களும் தவறுதான் என சாதித்துவிடுவார்கள். இந்த உலகத்தில் தாங்களாக சிந்திக்கக்கூடிய சிந்தனாவாதிகள் அதிகம் இல்லை. மனிதர்கள் யாவரும் ஆடுகளைப் போல இருக்கிறார்கள். ஒரு ஆடு போகிற பாதையிலே எல்லா ஆடுகளும் போவது போல, ஒரு தலைவனின் பிறகே கூட்டம்கூட்டமாக செல்லவே விரும்புகிறார்கள். ரோமரின் நாகரீகம் ஓங்கி இருந்தால் எல்லாரும் அதைப் பின்பற்றுவார்கள். அல்லது முகமதியர் நாகரீகம் பிரபலமானால் உடனே அனைவரும் அதற்குத் திரும்பிவிடுவார்கள். உலகோர் போகிற போக்கிற்கு எதிராக சிந்திக்கவோ செயல்படவோ மிகவும் பயப்படுவார்கள். உலகம் என்ன நினைக்கிறதோ அதுதான் அவர்களுக்கு தெய்வ வாக்கு; அதுதான் அவர்களுடைய சட்டம்; அதுவே வேதப்புத்தகம்; அதுவே அவர்களின் கடவுள்.
“என்னுடைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?” என்கிற சிந்தனையே அநேக நல்ல செயல்களை முளையிலே கிள்ளி எறிந்துவிடக் கூடியதாக இருக்கிறது. மற்றவர்கள் பார்ப்பார்களே, சிரிப்பார்களே, கிண்டல் செய்வார்களே என்கிற எண்ணம் பலரை நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ளவிடாமல் தடை செய்கிறது. மற்றவர்களுக்கு பயப்படுவதால் அநேக வேதபுத்தகங்கள் அதை உடையவர்களால் இன்றைக்குப்
படிக்கப்படாமலேயே இருக்கிறது. அதைப் படிப்பது அவசியம் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் “மற்றவர்கள் என்ன சொல்வார்களோ?” என்கிற பயம் அதை தடை செய்கிறது. அநேக முழங்கால்கள் இன்று இரவிலே ஜெபிப்பதற்கு முடங்காமல் இருக்கிறது. “நான் ஜெபிப்பதை என் மனைவியோ, சகோதரனோ, நண்பனோ பார்த்தால் என்ன சொல்லுவார்கள்?” என்கிற பயம் கடவுளிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறது.
என்ன பரிதாபம்! என்ன மோசமான அடிமைத்தனம்! இந்த குணம் எல்லாரிடமும் எங்கும் பரவி நிறைந்திருக்கிறது. “நான் ஜனங்களுக்கு பயந்து அவர்கள் சொல்லைக் கேட்டேன்” (1சாமு 15:24). என்று ராஜாவாகிய சவுல், சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கூறுகிறான். ஜனங்களுக்கு பயந்ததினால் அவன் கடவுளுடைய கட்டளையை மீறி நடந்தான். இன்னொரு ராஜா. அவன் யூதாவின் ராஜா. இவனும் யூதர்களுக்கு பயந்ததினால் தனக்கு எரேமியா தீர்க்கதரிசி கொடுத்த ஆலோசனையின்படி நடக்காமல் போனான். “சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: யூதரின் கையிலே என்னை . . ஒப்புக்கொடுப்பார்களோ என ஐயப்படுகிறேன் என்றான்”.(எரே 38:19). ஏரோது விருந்து பண்ணினபோது நடந்தது என்ன? அவன் தனது விருந்தினர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என பயந்ததினால், தான் செய்கிற காரியம் சரியல்ல என்பது தெரிந்திருந்துங்கூட, யோவான்ஸ்நானகனின் தலையை தட்டிலே எடுத்துவரக் கட்டளையிட்டான். அது பிற்காலத்தில் அவனுக்கு மிகுந்த விசனத்தைக் கொடுத்தது. யூதர்களைப் பகைத்துக் கொள்வதை விரும்பாத பிலாத்து, தான் அநியாயமாகத் தீர்ப்பளிக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும், குற்றமேயில்லாத இயேசுக்கிறிஸ்துவை கொலை செய்யப்பட யூதர்களின் கையிலே ஒப்புக் கொடுத்தான். மனுஷருடைய கருத்துக்களுக்கு பயப்படுகிற இந்த தன்மையை அடிமைத்தனம் எனக் குறிப்பிடாமல் வேறு எப்படி கூறுவது?
இளைஞர்களே, நீங்கள் எல்லாரும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். உங்களுடைய கடமை என்னவென்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்போது, மனிதர்களுடைய அபிப்ராயங்களுக்கு இடங் கொடாதிருங்கள். தீமைக்கு அடிபணிய “முடியாது” என்று சொல்பவன்தான் மிகுந்த துணிச்சல்காரன். யூதாவின் ராஜாவாகிய யோசபாத் என்பவன் நல்லவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் பலவீனனாய் இருந்தான். முடியாது, மாட்டேன் என சொல்வதற்கு
பயந்தபடியினாலே அவன் இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபின் சொற்படியெல்லாம் கேட்டு பலவிதமான ஆபத்துகளில் சிக்கிக் கொண்டான்(1ராஜா 22:4). இளைஞர்களே, தீமையான காரியங்களுக்கு “முடியாது”, “மாட்டேன்” என்று தைரியமாக சொல்லக்கூடிய துணிச்சல்காரர்களாக இருங்கள். மற்றவர்கள் மாதிரி செய்யாவிட்டால் நன்றாக இருக்காதே என்கிற பயம், உங்களை சரியானதை செய்யவிடாமல் ஆக்குவதை
அனுமதிக்காதீர்கள். பாவிகள் உங்களை தீமையான காரியங்களில் ஈடுபட வலியுறுத்தும்போது, மிகுந்த உறுதியோடு அதற்கு சற்றும் இடங்கொடாதிருக்கப் பழகுங்கள். “என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே(நீதி 1:10).
இப்படியாக மனிதருக்கு பயப்படுதல் எவ்வளவு அநியாயமாயிருக்கிறது! அப்படியே அவர்கள் உங்களை விரோதித்துவிட்டாலும் எவ்வளவு காலத்துக்கு அந்த விரோதம் நிலைநிற்கும்? மற்றவர்கள் கூறியபடி நீங்கள் செய்யாமற் போவதால், அவர்களால் உங்களுக்கு என்ன தீங்கு விளைவித்துவிட முடியும்? “நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன?” (ஏசா 51:12,13). இப்படி மனிதருக்கு பயப்படுகிற பயம் என்ன பலன்களை அளித்துவிடப் போகிறது? நீ அவர்கள் கூறியபடி நடந்து விட்டதால் யாரும் உன்னை போற்றிக் கொண்டாடப் போவதில்லை. கடவுளுக்கென்று தைரியமாக வாழ்பவர்களுக்குத்தான் மரியாதை கிடைக்கும். ஆகவே இந்த அடிமைத்தன கட்டுகளை உடைத்தெறியுங்கள். இந்த அடிமைத்தன சங்கிலிகளைக் கழற்றி வீசி எறியுங்கள். நீ மோட்சத்திற்குப் போவதில் விருப்பம் கொண்டிருப்பவன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியாக வாழ்வதைக் குறித்து ஒருபோதும் வெட்கம் அடையாதீர்கள். உங்களை கடவுளின் அடிமையாகக் காண்பிப்பது இழிவானது என எண்ணாதீர்கள். சரியானதை செய்வதற்கு ஒரு போதும் பயம் அடையாதீர்கள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை ஞாபகத்தில் வையுங்கள்: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத் 10:28). கடவுளை மாத்திரம் பிரியப்படுத்த பாருங்கள். அப்போது அவர் மற்றவர்களும் உங்களோடு சமாதானமாக இருக்கும்படி செய்வார். “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்” (நீதி 16:7).
இளைஞர்களே, நல்ல துணிவுள்ளவர்களாயிருங்கள். உலகம் என்ன சொல்லுகிறது, என்ன நினைக்கிறது என்பதைக் குறித்து கவலைப்படாமல் இருங்கள். நீங்கள் எப்போதும் இந்த உலகத்திலேயே இருக்கப் போவதில்லை. மனிதர் உங்கள் ஆத்துமாவைக் காப்பாற்றக் கூடுமா? இல்லையே. கணக்கொப்புவிக்க வேண்டிய அந்த பயங்கரமான நியாத்தீர்ப்பின் நாளிலே மனிதனா உங்களை நியாயந்தீர்க்கப் போகிறான்?
வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல மனசாட்சியையும், மரணத்தில் ஒரு நல்ல நம்பிக்கையையும், உயிர்த்தெழுதலின் காலையிலே சரியான விளைவுகளையும் தரக் கூடியது மனிதர் கையிலா இருக்கிறது? இல்லவே இல்லை. மனிதனால் இவை எதையுமே செய்ய முடியாது. ஆகவே, “நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்கு செவி கொடுங்கள். மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப் போல அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப் போலத் தின்னும்” (ஏசா 51:7,8). கார்டினர் (Col.James Gardiner) என்பவர் கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: “நான் கடவுளுக்கு பயப்படுகிறபடியினால் வேறு யாருக்கும் நான் பயப்பட அவசியமில்லை”. நீங்களும் அவரைப் போலவே இருங்கள்.
இந்த ஆபத்துகளைக் குறித்து எச்சரிப்பாக இருக்கும்படி கூறுகிறேன். அவைகளை மனதில் வையுங்கள். அவைகளை மீண்டும் மீண்டுமாக சிந்தித்துப் பார்ப்பது நன்மையைத் தரும். இவைகள் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். இவைகளை நான் வீணிலே கொடுத்திராதபடிக்கு தேவன்தாமே அதை பயன்படச் செய்வாராக.