Skip to content

1. இளைஞர்களுக்கு அறிவுரை கூற காரணங்கள்

இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS

1. இளைஞர்களுக்கு அறிவுரை கூற காரணங்கள்

இளைஞர்களுக்கென ஏன் விசேஷமாக அறிவுரை கூற வேண்டும்? அதற்கு சில காரணங்களை நான்
வரிசைப்படுத்திக் கூறுகிறேன்.

i) வெகுசில இளைஞர்களே கடவுளை அறிந்திருக்கிறார்கள்

வெகுசில இளைஞர்களே மதஉணர்வு உடையவர்களாயிருக்கிறார்கள் என்கிறதான துயரப்படுத்தும் உண்மையை நாம் மறுக்க முடியாது.

யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், பொதுவாகவே இதைச் சொல்லுகிறேன். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அழகுள்ளவன், அழகில்லாதவன், பட்டணத்தான், கிராமத்தான் இப்படியாக யாரை எடுத்துக் கொண்டாலும் அதில் வித்தியாசமில்லை. ஒரு சில வாலிபரே ஆவியினால் நடத்தப்படுகிறார்கள் என்பதை நான் கவனிக்கும்போது அதிர்ந்து போகிறேன். ஜீவனுக்குப் போகிறதான குறுகிய பாதையில் நடக்கிற இளைஞர்கள் வெகு சொற்பமே; பரலோக காரியங்களில் ஒரு சில வாலிபருக்கே நாட்டம் இருக்கிறது; ஒருசில வாலிபரே தங்கள் சிலுவையை எடுத்துக் கொண்டு அனுதினமும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவைகளை நான் மிகவும் துக்கத்தோடு கூறுகிறேன். ஆனால் கடவுளின் பார்வையில் இதுதான் உண்மையான நிலையாயிருக்கிறது.

இளைஞர்களே, இந்த உலகத்தில் நீங்கள்தான் பெருவாரியான எண்ணிக்கையில் நிறைந்து காணப்படுகிறீர்கள். நீங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால் அதை அறியாமல் இருக்கிறீர்கள். உங்கள் ஆத்துமா எங்கே இருக்கிறது? அது என்ன நிலமையில் காணப்படுகிறது? இதற்கு விடை காண நாம் யாரிடம் கேட்டுப் பார்த்தாலும் ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது. என்ன பரிதாபம்!

ஒரு உண்மையான சுவிசேஷ ஊழியனை அணுகி நாம் சில கேள்விகளைக் கேட்டு அவர் என்ன
சொல்லுகிறார் எனப் பார்ப்போம். சபையில், கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்ள ஆவலுடன் வருகின்ற திருமணமாகாத வாலிபர்கள் எத்தனை பேர்? கிருபைக்குரிய காரியங்களில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யார்? ஞாயிறு ஆராதனைக்கு ஒழுங்காக வராதவர்கள் யார்? யாரை வாராந்தர ஜெபக்கூட்டங்களுக்கும், வேதபாட வகுப்புகளுக்கும் வர வைப்பது மிகவும் கடினமானது? வேதபாடங்கள் நடக்கையில் சரியாக கவனிக்காமல் இருப்பது யார்? தனது சபையிலுள்ள எந்தக் கூட்டத்தாரைக் குறித்து போதகர் மிகவும் கவலையாயிருக்கிறார்? யாருடைய இருதயத்தை அவர் மிகவும் ஆராய்ந்து அறிய வேண்டியதாயிருக்கிறது? தனது மந்தையில் எந்த ஆடுகளை அவர் சிரமப்பட்டு நடத்த வேண்டியதாயிருக்கிறது? யார் அடிக்கடி எச்சரித்து, கடிந்து கொள்ளப்பட வேண்டிய நிலமையில் இருக்கிறார்கள்? மேய்ப்பனுக்கு மிகுந்த துயரத்தையும், மனசோர்வையும் அளிப்பது யார்? யாருடைய ஆத்துமாவைக் குறித்து பயமும், நம்பிக்கையற்ற நிலையும் ஏற்படுகிறது? இவ்வளவு கேள்விகளுக்கும் அந்த உண்மையான ஊழியன் “வாலிபர்களைக் குறித்துதான்” என்றே பதில் சொல்வார்.

சபைக்கு வந்து கொண்டிருக்கிற பெற்றோரிடமும் சில கேள்விகளைக் கேட்கலாம். உங்களுடைய
குடும்பத்தில் உங்களுக்கு மிகுந்த துக்கத்தையும் துயரத்தையும் தருவது யார்? யாரை மிகவும் கவனமாக
பார்க்க வேண்டியதாயிருக்கிறது? யார் உங்களை மனச் சோர்வடையச் செய்வது? சரியான பாதையிலிருந்து யார் முதலில் வழிவிலகிச் செல்வது? எச்சரிப்புகளையும், புத்திமதிகளையும் கேட்பதில் கடைசியாக இருப்பது யார்? ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உள்ளாக யாரைக் கொண்டு வருவது கடினமானது? துணிகரமான பாவங்களுக்கு உடன்படுவது யார்? தங்களுக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வது யார்? நல்ல நண்பர்களைத் துயரப்படுத்துவது யார்? வயதானவர்களுக்கு வெறுப்புண்டாக்குவது யார்? நரை மயிரை துயரத்தோடு குழியில் இறங்கப் பண்ணுவது யார்? இவை எல்லாவற்றிற்கும் “இளைஞர்கள்தான்” என்கிற பதிலே கிடைக்கும்.

காவல்துறை, நீதிபதிகள் போன்றோரிடம் சில கேள்விகள் கேட்போம். குடிப்பழக்கம் பெரும்பாலும் எந்த வகுப்பினரிடையே காணப்படுகிறது? சட்டத்தை மீறுபவர்கள் எந்த வயதில் அதிகமாக காணப்படுகிறார்கள்? கூட்டங்களைத் தூண்டிவிட்டு கலகம் விளைவிப்பதில் முன்னோடியாய் இருப்பவர்கள் எந்த வயதினர்? குடி, சட்டத்தை மீறுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், அத்துமீறுதல், திருட்டுத்தனம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போகிறவர்களில் எந்த வயதினர் அதிகமாகக் காணப்படுகின்றனர்? எந்த வயதினரை மிகவும் விழிப்போடு கவனிக்க வேண்டியதாயிருக்கிறது? இதற்கும் வாலிப வயதினரைத்தான் என்கிற விடையே கிடைக்கும்.

சற்று வசதியான குடும்பங்களிலே என்ன நிலமை காணப்படுகிறது எனப் பார்ப்போம். ஒரு பணக்கார
குடும்பத்திலே உள்ள மகன்கள் தங்கள் நேரத்தையும், பணத்தையும், சரீரபெலத்தையும் சிற்றின்பங்களிலே ஈடுபட்டு வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே உள்ள மகன்கள் தங்களுடைய வருங்காலத்தைக் குறித்து எண்ணாமல், தங்களுக்கென ஒரு தொழில் திறமையை வளர்த்துக் கொள்ளாமல், தங்கள் வாழ்வின் பொன்னான காலங்களை சோம்பேறித்தனமாக போக்கிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே சொந்தமாகத் தொழில் இருந்தாலும், அதை அபிவிருத்தி செய்ய முயற்சிக்காமல் ஒரு பொழுதுபோக்காக ஏனோதானோவென செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்திலே மகன்கள் தவறான நண்பர்களோடு சேர்ந்து கொண்டு சூதாட்டங்களில் ஈடுபட்டு, கடனாளியாகி, நல்ல நண்பர்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்போ, பணமோ, பதவியோ இவர்களை கட்டுப்படுத்த முடியாதது என்ன பரிதாபம்! கவலை குடிகொண்டுள்ள தகப்பன்மார், மனம் உடைந்து போன தாய்மார், துயரத்தில் ஆழ்ந்துள்ள சகோதரிமார் எத்தனைபேர்! அவர்கள் கூறும் சோகக் கதைகள்தான் எத்தனை ஆயிரம்! பெரும்பாலான குடும்பங்களில், ஒரு மகனோ, அல்லது சகோதரனோ, மாமா பிள்ளையோ, அத்தை பிள்ளையோ தங்களைக் கெடுத்துக் கொண்டு, அனைவருக்கும் துயரத்தை உருவாக்கிய வாலிபனைக் குறித்துக் கூறும் நிலை காணப்படுகிறது.

பணக்கார குடும்பங்களில் முள்ளாக காணப்படும் வாலிபர்கள் இருப்பது மிகவும் சகஜமாயிருக்கிறது. குடும்ப சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாக இதுமாதிரி வாலிபர்கள் இருக்கிறார்கள். பணமிருந்தாலும் எப்போதும் அவர்களைக் குறித்த கவலையும் துயரமும் உடையவர்களாக குடும்பத்தார் வாழ வேண்டியதாயிருக்கிறது. வாலிபப் பிராயத்தினராலேதானே பெரும்பாலும் இம்மாதிரியான பிரச்சனைகள் உண்டாகின்றன?

இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவது? இவையெல்லாம் உண்மைதானே? நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்ப்பவைதானே? உண்மையை மறைக்க முடியுமா? நிதரிசனமான காரியங்களாகிய இவை எல்லா திசைகளிலிருந்தும் நம் கண் முன்னாலே வந்து நிற்கிறதே. இல்லையென மறுக்க முடியுமா? எவ்வளவு பயங்கரமான நிலை இது! ஒவ்வொரு இளைஞனையும் நான் பார்க்கும்போது, இவன் கடவுளுக்கு விரோதமாக இருப்பானோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை. அகலமான பாதையில் போய்க் கொண்டிருக்கிறானே, அழிவுக்குப் போகும் பாதையில் இருக்கிறானே, மோட்சத்திற்கு பிரவேசிக்க பாத்திரவானாக இல்லையே. இவ்வளவு உண்மைகள் எனக்கு முன்பாக நிற்கும்போது, என்னால் இளைஞர்களுக்கு புத்தி சொல்லாமல் இருக்க முடியுமா? நான் ஏன் இவர்களுக்கு புத்திகூறுகிறேன் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவும் வேண்டுமா?

ii) மரணமும் நியாயத்தீர்ப்பும் வருகிறது

அடுத்தபடியாக, மரணமும், நியாயத்தீர்ப்பும் மற்றவர்களுக்கு மாத்திரமல்ல, இளைஞர்களுக்கு முன்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதை எல்லோருமே மறந்து போனது போல நடந்து கொள்கிறார்கள்.

இளைஞனே, ஒரே தரம் மரிப்பதற்காக நீயும் நியமிக்கப்பட்டிருக்கிறாய். ஒருவேளை நீ இன்று பலசாலியாகவும் ஆரோக்கியமானவனாகவும் காணப்படலாம். ஆனால் உனது மரணநாளும் மிகவும் அருகிலேயே இருக்கலாம். வயதானவர்களைப் போலவே இளைஞர்களும் நோயில் விழுவதை நான் கண்டிருக்கிறேன். வயதானவர்களுக்கு மாத்திரமல்ல, இளைஞர்களுக்கும் நான் அடக்க ஆராதனை நடத்தியிருக்கிறேன். கல்லறைகளிலே உன்னைக் காட்டிலும் வயதில் குறைந்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். குழந்தைப் பருவத்திலும், வயதுமுதிர்ந்தும் இறப்பவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலும் 13 முதல் 23 வரையுள்ள பருவங்களில்தான் அதிகமான மரணம் நிகழ்கிறதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நீயோ, நான் இப்போது ஒன்றும் சாக மாட்டேன் என்கிற நிச்சயமுடையவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

ஆவிக்குரிய காரியங்களை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சாலமோன் கூறுவதை நினைவில் வை: “நாளைய தினத்தைக் குறித்து பெருமை பாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே” (நீதி 27:1). கடினமானவைகளை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய கிரேக்க தளபதி ஒருவன், தனக்கு எழுதப்பட்ட கடிதத்தைப் படிப்பதை தள்ளிப் போட்டான். அடுத்தநாளில் அவன் கொலை செய்யப்படப் போவதைக் குறித்து எச்சரித்து எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவன் உரிய நேரத்தில் படிக்காமல் போனதால், அடுத்தநாளைப் பார்க்காமலே இறந்து போனான். நாளைய தினம் சாத்தானுடையது. ஆனால், இன்றைய தினமோ கர்த்தருடையது. நாளைக்கு செய்யலாம் என நீ திட்டமிட்டிருக்கும் ஆவிக்குரிய காரியங்கள், தீர்மானங்கள் ஆகியவை எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் சாத்தான் அதைக் குறித்து கவலைப்படுவதில்லை. “நாளைக்கு”, “பிறகு” போன்ற எண்ணங்கள் தோன்றிவிட்டாலே, சாத்தானுக்கு குஷிதான். ஆகவே இவ்விஷயங்களில் சாத்தானுக்கு சற்றும் இடங்கொடாதிருங்கள். “இல்லை, சாத்தானே, நான் நினைத்ததை இன்றைக்கே, இப்போதிலிருந்தே செயல்படுத்த ஆரம்பிப்பேன்” என்று உறுதியாக சொல்லுங்கள். எல்லா மனிதர்களும் முற்பிதாக்களைப் போல நீடுழி வாழ்வதில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபைப் போன்ற வாழ்க்கை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அநேகம் பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு முன்பாகவே மரிக்க நேரிடுகிறது. தாவீதின் இரண்டு அருமையான குமாரர்கள், தாவீதுக்கு முன்பாக மரித்துப் போக நேர்ந்தது. யோபு தனது பத்து பிள்ளைகளையும் ஒரே நாளிலே பறி கொடுக்கும்படியாக ஆனது. கடவுள் உங்களுக்கு என்ன குறித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. சீக்கிரமாக மரணம் நேரிடுவதாக இருக்குமானால், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போடுவதால் பலன் ஒன்றுமில்லை. செய்வதை, சிந்திப்பதை உடனடியாக செய்ய வேண்டும்.

பொருத்தமான காலம் வரும்போது இவைகளைப் பற்றி சிந்தித்துக் கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அத்தேனே பட்டணத்தாரும், பேலிக்ஸும் பவுலின் பிரசங்கத்தைக் கேட்டபோது இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்(அப் 24:10-25; 17:32 ). இன்னொரு சமயம் கேட்கிறோம் என்றார்கள். ஆனால் அப்படியொரு காலம் அவர்களுக்கு வராமலேயே போய்விட்டது. நாளைக்கு நேரம் கிடைக்கும் என்பது போன்ற தோற்றத்தை நரகம் ஏற்படுத்துகிறது. சமயம் இருக்கும்போதே காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். நித்தியத்துக்குரிய எந்த காரியத்தையும் தள்ளிப் போடாதிருங்கள். ஆத்துமா ஆபத்திலிருக்கும்போது அலட்சியமாக இருக்காதீர்கள். ஒரு ஆத்துமா இரட்சிப்பை அடைவதென்பது சாதாரணமான காரியம் அல்ல. வாலிபராக இருந்தாலும், வயோதிபராக இருந்தாலும் எல்லோருக்கும் அந்த பெரிதான இரட்சிப்பு அவசியமானதாக இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் பிறக்க வேண்டியதாக இருக்கிறது. எல்லோரும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியது மிகவும் அவசியம். எல்லோரும் பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமடைய வேண்டியது அவசியம். இவைகளைக் குறித்து சிந்தித்து, இவைகளை அடைந்து கொண்டவனே மிகவும் சந்தோஷமான மனிதன். கடவுளின் பிள்ளையாகிவிட்டோம் என்கிற நிச்சயத்தை பரிசுத்தஆவியினாலே தன் உள்ளத்தில் பெறும் வரைக்கும் அவன் சும்மா இருக்க மாட்டான்.

இளைஞர்களே, உங்கள் காலம் குறுகியது. உங்கள் வாழ்நாள் ஒரு நிழலைப் போல மறைந்து போய்விடும். புகையைப் போல காணாமல் போகும். உங்கள் வாழ்க்கை ஒரு சரித்திரமாக மாறிப் போகும். உங்கள் சரீரம் வெண்கலத்தினால் ஆனதல்ல. “இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்; வாலிபரும் இடறி விழுவார்கள்” என்று ஏசாயா(40:30) கூறுகிறார். உங்கள் பெலனெல்லாம் ஒரு நொடியிலே உங்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்படலாம். அதற்கு பெரிய பிரயத்தனம் தேவையில்லை; ஒரு சின்ன தடுக்கி விழுதல், ஒரு காய்ச்சல், கட்டி அல்லது காயம் – இவை போதும். பிறகு கல்லறையிலே புழு உங்களைத் தின்கிற நிலைமை வெகுவிரைவில் வந்துவிடும். மரணத்திற்கும் உங்களுக்கும் இடையே ஒரு படி இருக்கின்றது. உங்கள் ஆத்துமா தன்னை உருவாக்கியவரிடம் மறுபடியும் போகும். இன்று இரவிலே உன் ஆத்துமா உன்னிடமிருந்து எடுக்கப்படும்(லூக் 12:20). உலகத்தார் போகிற வழியிலே நீங்கள் விரைந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒருநாளிலே நீங்கள் இந்த உலகத்திலே இல்லாமலே போய்விடுவீர்கள். உங்கள் உலகவாழ்வு நிச்சயமானதல்ல. உங்களுடைய மரணமும், நியாயத்தீர்ப்பும் நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் பிரதானதூதனுடைய எக்காள சத்தத்தைக் கேட்பீர்கள். வெள்ளைசிங்காசனத்தின் முன்பாக நியாயத்தீர்ப்படைவதற்கு நிற்பீர்கள்(வெளி 20:11). “மரித்தோர்களே, எழுந்திருங்கள். நியாயத்தீர்ப்படைய வாருங்கள்” என்கிற சத்தம் தன் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருப்பதாக ஜெரோம் என்கிறவர் கூறியது போல அந்த அழைப்புக்கு நீங்களும் கீழ்ப்படிய வேண்டிய காலம் வரும். “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்“(வெளி 22:7) என்று நியாயாதிபதியே கூறுகிறார். இப்படியிருக்கையில், வாலிபர்களே என்னால் எப்படி உங்களுக்கு புத்தி கூறாமல் இருக்க முடியும்? உங்களை விட்டுவிட துணிய மாட்டேன்.

ஓ! இளைஞர்களே, நீங்கள் எல்லோரும் பிரசங்கியின் வாக்கியங்களை மனதுள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வையுங்கள்: “வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு. உன் வாலிபநாட்களில் உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட. ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி” (பிர 11:9). காரியம் இப்படியிருக்கையில் எந்த மனிதனாவது அலட்சியமாகவோ, கவலையற்றோ இருக்க முடியுமா? உலகவாழ்க்கையே போதுமானது என நினைத்து, மரிப்பதற்கு ஆயத்தமில்லாமல் இருப்பவர்களைப் போன்ற முட்டாள்கள் யாரும் கிடையாது. வருங்காலத்தைக் குறித்த, மனிதனுடைய விசுவாசமற்ற தன்மை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏசாயா மிகவும் தெளிவாக இதை தீர்க்கதரிசனமாக முன்உரைத்திருக்கிறார்: “எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?” (ஏசா 53:1). இயேசுக்கிறிஸ்துவும் அதையே குறிப்பிடுகிறார்: “மனுஷகுமாரன் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” (லூக் 18:8). தேவனுடைய நியாயாசனத்திலே உங்களில் அநேகரைக் குறித்து கர்த்தர், “அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள்” என்று கூறுவாரோ என நான் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் வெகுசீக்கிரமாக இந்த உலகத்தை விட்டு கடந்துபோய், விழித்தெழும்போது, மரணமும் நியாயத்தீர்ப்பும் உண்மையாகவே இருக்கிறதே என்பதை காலம் கடந்து உணர்ந்து கொள்வீர்களோ என அஞ்சுகிறேன். இவைகளினிமித்தமாகவும் உங்களைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்.

iii) இளைஞர்களின் தற்போதைய நடவடிக்கையே அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது

மூன்றாவதாக, இப்பொழுது இளைஞர்கள் வாழுகின்றதான வாழ்க்கை முறையே அவர்களுடைய எதிர்காலத்தை எல்லாவகையிலும் நிர்ணயிப்பதாயிருக்கிறது. ஆனால் அதை அவர்கள் மறந்து போனது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவனுடைய முழுவாழ்க்கையையும் விதைக்கும் காலம் வாலிபவயது. அவனுடைய சொற்பஜீவிய காலத்தை ஒழுங்குபடுத்துவது வாலிபவயது. அவனுடைய வாழ்க்கை சரித்திரத்தை திசைதிருப்புவதும் வாலிபவயதே.

விதையைக் கொண்டு நாம் மரத்தின் தரத்தை நிர்ணயிக்கலாம். பூக்கும் நிலையிலேயே பழங்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதைக் கணிக்கலாம். வசந்தத்தைப் பார்த்து அறுப்பு எப்படியிருக்கும் எனக் கூறலாம். காலையில் மேகமூட்டத்தைக் கொண்டு அந்த நாளின் வானிலையை கூறலாம். ஒருவனுடைய வாலிபவயதின் குணாதிசயங்களைக் கொண்டு, பெரும்பாலும் அவன் முதிர்ச்சியடைந்த நிலையில் இப்படித்தான் இருப்பான் என்பதைத் தீர்மானிக்கலாம்.

இளைஞர்களே, ஏமாந்து போகாதிருங்கள். வாலிபநாட்களை சிற்றின்பங்களிலும் கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு, சற்று வயது வந்தபிற்பாடு கடவுளிடம் வந்து அவருக்குப் பிரியமாக நடந்து கொள்ளலாம் என்று நினைக்காதிருங்கள். வாழ்வின் ஆரம்பகாலத்தை ஏசாவைப் போல களியாட்டுகளில் ஈடுபட்டுவிட்டு, மரிக்கும் தறுவாயில் யாக்கோபைப் போல பக்தனாக மாறிக் கொள்ளலாம் என ஒருபோதும் கனவு காணாதீர்கள். அப்படி நீங்கள் நினைப்பது கடவுளையும் உங்கள் ஆத்துமாவையும் கேலி செய்வது போலாகும். வாலிபநாட்களின் பெலனையும், வல்லமையையும் உலகத்துக்கும் சாத்தானுக்கும் கொடுத்துவிட்டு, பெலனற்றுப் போகும் முதிர்வயதில் எஞ்சியிருக்கும் மிச்சமீதிகளை ராஜாதிராஜனுக்குக் கொடுக்கலாம் என நீங்கள் நினைப்பது எவ்வளவு அறிவீனம்? அப்படி ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நீங்கள் முடிவில்தான் உணருவீர்கள்.

கடைசியில் மனந்திரும்பிக் கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறீர்கள். கடவுளின் உதவி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். மனந்திரும்புதலும், விசுவாசமும் கடவுள் அருளும் ஈவுகள். வெகுநாட்களாக அவர் அதை உங்களுக்கு கொடுப்பதற்காக வைத்துக் கொண்டிருந்தபோதும், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாதபடியினால் அவர் அதை இனி கொடுக்க மாட்டார். நீ என்னிடம் வந்தால் உடனடியாக நான் உனக்கு உண்மையான மனந்திரும்புதலை அளிக்க இருக்கிறேன்; ஆனால் அதே சமயத்தில் நீ காலதாமதம் செய்துகொண்டேயிருப்பாயானால் அதை அடையாமலேயே போவாய் என கடவுள் எச்சரிக்கிறார். தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிற பாவியை, அவன் நம்பிக்கை இழந்து போகாதபடிக்கு, கடைசி தருணமாயிருந்தாலும் மன்னித்து இரட்சிக்கிற சிலாக்கியத்தை தான் கொண்டிருப்பதைக் காண்பிப்பதற்காக சிலுவை மரத்திலே மனந்திரும்பிய கள்ளனை உதாரணத்திற்கு மன்னித்துக் காண்பித்தார். ஆனால் அப்படி மன்னிக்கப்பட்டது ஒரே ஒருவன் மாத்திரந்தான் என்பதை எல்லாருக்கும் எச்சரிக்கையாகவும் வைத்திருக்கிறார். கடைசிதருணத்தில் மன்னிக்கிற உரிமையைக் கடவுள் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி மன்னிக்கப்படும் பாக்கியத்தை நீ அடைவாய் என்பது என்ன நிச்சயம்? “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை . . . அவர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார்” (எபி 7:25). இதை எழுதிய அதே பரிசுத்தஆவியானவர்தான் இந்த எச்சரிப்பையும் கூறுகிறார் என்பதை கவனியுங்கள்:”நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்க மாட்டோம் என்கிறீர்கள். நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என்ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன் “(நீதி 1:24-26).

உனக்கு இஷ்டமானபோது கடவுளிடம் வந்துவிடலாம் என்பது சுலபமான விஷயமல்ல. தேவபக்தனாகிய ஒரு ஆர்ச்பிஷப் கூறினார்: “பாவத்திற்குப் போகிற வழி என்பது மலையிலிருந்து இறங்குவது போன்றது. ஒருவன் நிறுத்தவேண்டுமென விரும்பினாலும் அது கட்டுப்படாமல் அவனை வெகுசுலபமாக இறக்கத்திற்கு கொண்டுவந்து விடும்”. பரிசுத்தகாரியங்களில் ஆர்வமும், திடஉறுதியும் அவ்வளவு இலகுவாக வந்துவிடுவதில்லை. அவை அந்த நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரரைப் போன்றதல்ல, போ என்றால் போய்விடுவதும், வா என்றால் வந்துவிடுவதும் அல்ல(மத் 8:5). அது யோபு 39:9ல் காணப்படுகிற காண்டாமிருகத்தைப் போன்றது; உன்னிடத்தில் பணிந்து வர சம்மதிக்காது. அவைகள் உன் சத்தத்துக்குக் கீழ்ப்படியாது. உன் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளாது. நித்தியத்திற்குரிய காரியங்களில் இப்படிப்பட்டவை உனக்கு சம்பவித்துவிடாதபடிக்கு வாலிபனே எச்சரிக்கையாயிரு.

நான் ஏன் இவைகளையெல்லாம் சொல்லுகிறேன்? பழக்கவழக்கங்கள் நம்மை அடிமைப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதால் சொல்லுகிறேன். இளமையில் நல்ல பழக்கவழக்கங்களைப் பழகிக் கொள்ளாதவர்களை பிறகு மாற்றுவது மிகவும் கடினம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். முதுமையில் தங்களை மாற்றிக் கொள்வது மிகவும் அரிதாகும். பழக்கவழக்கங்கள் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. இருதயத்திலே பாவம் தனது கூட்டைக் கட்டிக் கொள்ள நீ அனுமதித்தாயானால் அதை எவ்வளவு விரட்டினாலும் உன்னைவிட்டுப் போகாது. பழக்கங்கள் இயற்கை சுபாவமாகவே மாறிப்போய்விடுகின்றன. அவை முப்புரி நூலைப் போன்றவை. எளிதில் அறாது. எரேமியா தீர்க்கதரிசி அழகாகச் சொல்லுகிறார்:”எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும்” (13:23). தீயபழக்கவழக்கங்கள் மலையின் அடிவாரத்தை நோக்கி ஒடுகின்ற பாறையைப் போன்றது. எவ்வளவு தூரத்திற்கு அது ஓடுகின்றதோ அவ்வளவுக்கு அதன் வேகம் அதிகரிக்கிறது; கட்டுப்படுத்த முடியாதபடிக்கு தறிகெட்டு ஓடுகிறது. மேலும் அவை மரங்களைப் போன்றவை. வெகுநாட்களாக இருக்கும் பழக்கவழக்கங்கள் நல்ல வைரம் பாய்ந்த மரத்தைப் போன்று உறுதியோடு இருக்கும். தேக்கு மரம் சிறிய செடியாக இருக்கும் போது ஒரு சிறுவன்கூட அதை எளிதில் பிடுங்கிவிட முடியும். ஆனால் அதுவே நாள்பட வளர்ந்து பெரிய மரமாகும்போது நூறு பலசாலிகள் சேர்ந்தால்கூட அதை அசைக்க முடியாது. அதுபோலத்தான் பழக்கவழக்கங்களும். எவ்வளவு நாள்பட அவை ஒருவனிடத்தில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அது அசைக்கப்பட முடியாமல் உறுதியோடு விளங்கும். அவைகளை நீக்கிப் போடுவது சுலபமல்ல. தீயபழக்கவழக்கங்கள் பாவத்திற்குத் தீனி போட்டு வளர்க்கின்றன. பாவத்தை முதலில் செய்யும்போது, அது பயத்தை மெதுவாக நீக்கிவிடுகிறது. இருதயத்தை கடினப்படச் செய்கிறது. மனசாட்சியின் எச்சரிப்பின் குரலை மழுங்கச் செய்கிறது. பாவத்தை மேலும் செய்யும்படிக்கு நம்மைத் தூண்டிவிடுகிறது.

இளைஞர்களே, நான் உங்களை மிகவும் அதிகமாக பயப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம். நான் பார்த்தது போன்ற வயோதிகர்களை நீங்கள் சந்தித்தால் அப்படி நினைக்க மாட்டீர்கள். செத்தவர்களைப் போன்று உணர்ச்சியற்றவர்களாக, வறண்டு போனவர்களாக, இரக்கமற்றவர்களாக, செத்தவர்களாக, கடினப்பட்டுப் போனவர்களாக வாழ்வின் விளிம்பிலே அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய ஆத்தும காரியங்களைக் குறித்து நீங்கள் ஏனோதானோவென இருக்க முடியாது. நல்ல பழக்கமோ, தீயபழக்கமோ அது நாள்தோறும் உங்கள் ஆத்துமாவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொருநாளும் நீங்கள் ஒன்று தேவனுக்கு அருகாமையிலே கிட்டிச் சேர்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது அவரைவிட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். மனந்திரும்பாமல் கடந்து போகின்ற ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கும் பரலோகத்திற்கும் இடையிலுள்ள சுவர் உயரத்திலும் அகலத்திலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆழமானதும் அகலமானதுமான மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுக் கொண்டே போகிறது. பாவத்திலேயே தொடர்ந்து தரித்திருப்பது எவ்வளவு கடினமான பாதையை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் குறித்து பயந்து நடுங்குங்கள். இப்போதே தகுந்த வேளை! கொடிதான நாட்கள் வந்து உங்களை எதுவும் செய்யவிடாதபடிக்கு இன்றே செயல்படுங்கள். வாலிபநாட்களிலே நீங்கள் கர்த்தரைத் தேடிக் கண்டடையாவிட்டால், நீங்கள் ஒருபோதும் அவரை கண்டுபிடிக்காதபடிக்கு உங்கள் பழக்கவழக்கங்களே மிகவும் வலிமை பெற்று உங்கள் ஆத்துமாவை மேற்கொண்டுவிடும்.

இவைகளைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்.
iv) இளைஞர்களைக் கெடுத்துப் போட சாத்தான் தீவிரமாயிருக்கிறான்

நான்காவதாக, வாலிபர்களின் ஆத்துமாக்களை அழித்துப் போட சாத்தான் விசேμத்த தீவிரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களோ இதை உணராமல் இருக்கிறார்கள்.

உங்களை விட்டு வைத்தால், நீங்கள் அடுத்த சந்ததியையாவது கடவுளுக்குள் கொண்டுவர வேண்டுமென முயற்சிப்பீர்கள் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆகவே, அந்தந்த காலத்துக்கு ஏற்ப புதிய உத்திகளை தயாரித்து உங்களை தன்வசப்படுத்திக் கொள்ளுகிறான். அதன் சூழ்ச்சிகளைக் குறித்து நீங்கள் அறியாமலிருக்கக் கூடாது.

தனது அதிபுத்திசாலித்தனமான தந்திரங்களை சாத்தான் வாலிபப் பருவத்தினர் மீது பிரயோகிக்கவே முயற்சிப்பான். உங்கள் இருதயத்தை தன்வசப்படுத்தும்படிக்கு அவன் தன்னுடைய தந்திரமான வலைகளை மிகவும் கவனத்தோடு பின்னுகிறான். அதற்குள் தனது மிகவும் உசிதமான துணிக்கைகளைப் போட்டு உங்களை கவர்ந்திழுக்க வகை செய்கிறான். மிகுந்த ஞானத்தோடு தனது சோதனைகளாகிய விஷங்களை கவர்ச்சிகரமான காரியங்களுக்குள் மறைத்து வைத்து, தனது கடையை கவர்ச்சிகரமானதாக உங்கள் முன்னாலே விரிக்கிறான். சாத்தானுக்கு மிகவும் விருப்பமான ஆத்துமாக்கள் வாலிப ஆத்துமாக்கள்தான். கர்த்தர்தாமே சாத்தானைக் கடிந்து கொண்டு உங்களை அவன் வலையில் சிக்காமல் விடுவிப்பாராக.

இளைஞர்களே, சாத்தானின் கண்ணிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். உங்கள் கண்களில் எதையாவது தூவி விட்டு, நீங்கள் உண்மையைப் பாராதபடிக்கு உங்கள் மனதைக் குருடாக்க வல்லவன். நல்லவைகளைக் கெட்டதென்றும், தீயவைகளை நல்லதென்றும் உங்களை நம்பப் பண்ணுவான்(ஏசா 5:20). பாவத்திற்கு நல்ல கலர் சாயம் பூசி, அதைக் கவர்ச்சிகரமானதாக தோன்றப் பண்ணி, பாவத்தையே நீங்கள் நேசிக்கும்படியாக மாற்றிவிடுவான்(2கொரி 11:15). உண்மையான பக்தியை மாற்றிப்போட்டு, மதத்திற்குத் தவறுதலான விளக்கங்களைக் கொடுத்து, அதை கேலிச்சித்திரமாக்கி, உங்களை மதத்தையே வெறுக்கும்படியாக செய்துவிடுவான். பொல்லாதவைகளில் அதிக இன்பம் இருப்பது போல காண்பிப்பான், ஆனால் அதிலுள்ள விஷத்தன்மையை நீங்கள் காணாதபடிக்கு மறைத்துவிடுவான். சிலுவையின் பாதையை மிகவும் கடினமானதாக உங்கள் கண்களுக்கு முன்பாகக் காண்பித்து, அதினால் அடையக்கூடிய நித்தியமான கிரீடங்களை மறைத்துவிடுவான். தனக்கு சேவை செய்தால், சகல இன்பத்தையும் உங்களுக்குத் தருவதாக, கிறிஸ்துவிடம் சொன்னது போலவே உங்களிடமும் கூறுவான்(மத் 4:8). ஒருவிதமான தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொள்ளச் செய்து(2தீமோ 3:5), பக்தியின் உண்மையான வல்லமையை மறந்துவிடுவதற்கு சாத்தான் உங்களுக்கு உதவியும் செய்வான். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், ‘இப்போதே கடவுளுக்கு சேவை செய்ய என்ன அவசரம், வாழ்க்கையை அனுபவி, சற்று வயதானபிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என உங்களுக்கு யோசனை கூறுவான். ஆனால் வாழ்வின் இறுதிகட்டம் வந்தபிறகோ, ‘இனி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, காலதாமதம் ஆகிவிட்டது’ எனக் கூறி உங்களைப் பார்த்து நகைப்பான். வாலிபர்களே, ஏமாந்து போகாதிருங்கள்.

இந்த பயங்கரமான எதிரியிடமிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாதிருக்கிறது. உங்களுடைய அறியாமையை எண்ணிதான் நான் மிகவும் கலக்கமுறுகிறேன். உங்களை சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கிற ஆபத்தான பள்ளங்களையும், வழுக்கிவிழக்கூடிய சறுக்கலான இடங்களையும், கண்ணிகளையும் அறியாதவர்களாக குருடரைப் போல வாழ்க்கைப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்(லூக் 6:39)

உங்களுடைய எதிரி மிகவும் வல்லவன். அவன், “உலகத்தின் அதிபதி” என அழைக்கப்படுகிறான்(யோவா 14:30). இயேசுக்கிறிஸ்துவின் ஊழியகாலம் முழுவதும் அவரை எதிர்த்துக் கொண்டேயிருந்தான். ஆதாம் ஏவாளை ஏமாற்றி, அவர்களை விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும்படியாக செய்து, அதன்மூலமாக உலகத்துக்குள் பவத்தை வரவழைத்துவிட்டான்(ஆதி3). தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவராகிய
தாவீதைக்கூட சோதனைக்குட்படுத்தி, தாவீது தனது வாழ்நாளில் இறுதிபகுதியை முழுவதும் சஞ்சலத்தோடே கழிக்கும்படியாக செய்துவிட்டான்(2சாமு 11:2). கர்த்தராலே தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவையும் சோதனைக்குட்படுத்தி, கர்த்தரை மறுதலிக்கும்படியாகப் பண்ணிவிட்டான்(மத் 26:69). இந்த விரோதியை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்.

உங்கள் எதிரி ஓயாதவன். அவன் தூங்குவதே இல்லை. எவனை விழுங்கலாமோ என ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிற கர்ஜிக்கிற சிங்கத்தைப் போல வகைதேடி சுற்றித்திரிகிறான்(1பேது 5:8). எப்போதும் பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித் திரிந்து கொண்டே இருக்கிறான்(யோபு 1:7). உங்களுடைய ஆத்துமாவைக் குறித்து நீங்கள் வேண்டுமானால் அலட்சியமாக இருக்கலாம்; ஆனால் அவன் அப்படியில்லை. உங்கள் ஆத்துமாவைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள ஓயாமல் பாடுபடுகிறான். தன்னைப் போலவே நீங்கள் ஒவ்வொருவரும் அதிகக் கேடான நிலையை அடைய வேண்டுமென விரும்பி, உங்களை அவனுடையவனாக்கிக் கொள்ள முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். இந்த சத்துருவைக் குறித்து குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.

உங்களுடைய எதிரி தந்திரமானவன். ஏறக்குறைய ஆறாயிரம் வருஷங்களாக அவன் மனிதர்களுடைய இருதயத்தை ஆராய்ந்து கொண்டேயிருக்கிறான். ஆகவே இவ்விஷயத்தில் அவன் மிகுந்த அனுபவசாலி என்பதை மறந்துவிடாதீர்கள். மனிதஇருதயங்களை நன்கு விளங்கிக் கொண்டிருக்கிறான் – இருதயத்தின் பலவீனங்கள், தந்திரமானபுத்திகள், முட்டாள்தனங்கள் யாவும் சாத்தானுக்குத் தெளிவாகவே தெரியும். மனிதஇருதயங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய விதவிதமான சோதனைகளை அவன் ஏராளமாக உண்டுபண்ணுகிறான். அவனுக்கு மறைவான எந்த இடத்திலும் நீங்கள் போய் ஒளிந்து கொள்ள முடியாது. பெரிய பட்டணங்களுக்குப் போங்கள், அவன் அங்கேயும் இருப்பான்; அல்லது பாலைவனத்திற்கே போங்கள், அவன் அங்கேயும் இருப்பான். குடிகாரர்களின் மத்தியிலும், பரியாசம் பண்ணுகிறவர்களின் மத்தியிலும் நீ போய் உய்கார்ந்திருந்தால் அவன் உனக்கு அங்கேயிருந்து உதவிகள்கூட செய்வான். ஆலயத்திலே போய் பிரசங்கத்தைக் கேட்க உட்கார்ந்திருக்கும்போதுகூட, உனது கவனத்தைத் திசைதிருப்பும்படியாக அங்கேயும் வருவான். இந்த விரோதியைக் குறித்து இகழ்வாக எண்ணிவிட முடியுமா?

இளைஞர்களே, இந்த விரோதியைக் குறித்து நீங்கள் சற்றும் நினைத்துப் பார்க்காவிட்டால்கூட, அவன் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறான். உங்களை அழித்துப் போடுவதையே அவன் குறியாகக் கொண்டு, மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய போராட்டத்திற்கு வெகுமதியாக உங்களைப் போன்ற வாலிபர்களின் ஆத்துமாவையே எதிர்பார்த்து உழைக்கிறான். ஒன்று நீங்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் அல்லது அவருடைய சாபத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிந்திருக்கும் அவன், உங்களைத் தன்னுடைய ராஜ்ஜியத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக பலவிதமான உபாயதந்திரங்களை உங்கள் வாழ்வின் ஆரம்பகாலம் முதலே செய்ய ஆரம்பித்துவிடுகிறான். விளையும் பயிரை முளையிலேயே கிள்ளிவிட்டால் தனக்கு வேலை மிகவும் சுலபமாக முடிந்துவிடும் என்பதை நன்றாக அறிந்து கொண்டிருப்பவன் சாத்தான். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனுடைய கண்கள் திறக்கப்பட்டதுபோல உங்களுடைய கண்களும் திறக்கப்படுமானால் எவ்வளவு நன்மையாயிருக்கும்!(2ராஜா 6:13-17). உங்களுடைய சமாதானத்தைக் குலைத்துப் போடுவதற்கு சாத்தான் என்னென்ன திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கக் கூடுமானால் எவ்வளவு நல்லது! நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, என்னால் உங்களை எச்சரிக்காமல் இருக்க முடியாது. உங்களை எச்சரிக்காமல் இருக்கத் துணியமாட்டேன். உங்களை சாத்தானின் பிடியில், வஞ்சகத்தில் விடமாட்டேன். நான் உங்களை எச்சரிக்கத்தான் வேண்டும். நான் உங்களுக்கு புத்தி சொல்லத்தான் வேண்டும்.

v) வரப்போகும் வருத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அறிவுரை தேவை

நீங்கள் அடையப் போகிற துயரத்திலிருந்து உங்களை காப்பாற்றி, தேவனுக்குரியவர்களாக்க வேண்டுமானால் உங்களுக்கு புத்தி சொல்லத்தான் வேண்டியதாயிருக்கிறது.

பாவமானது அனைத்து துயரங்களையும் பிறப்பிக்கிறது. வாலிபவயதில் ஒருவன் செய்கிற பாவந்தான் ஒருவனுக்கு அளவிடமுடியாத துயரங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. வாலிபப்பிராயத்தில் முட்டாள்தனமாக செய்த காரியங்கள், வீணாகக் கழித்துப் போட்ட நேரங்கள், செய்த தவறுகள், அவன் கொண்டிருந்த தவறான நட்புகள், ஆத்துமத்திலும் சரீரத்திலும் தனக்குத்தானே அவன் வருவித்துக் கொண்ட கேடுகள், சந்தோஷமாக இருப்பதற்குக் கொடுக்கப்பட்ட தருணங்களை தூக்கியெறிந்தது, உபயோககரமான வாய்ப்புகளை அலட்சியப்படுத்தியது இவையெல்லாம் ஒரு மனிதனுடைய மனசாட்சியை அவனுடைய வாழ்நாளின் இறுதிப்பகுதிகளில் மிகவும் குத்துகிறது. அதனால் அவன் உள்ளத்தில் கசப்புகள் நிறைந்த வயோதிபனாக காணப்படுகிறான். கடந்துபோன தனது வாழ்க்கையை எண்ணி அவமானத்தினாலும் வெட்கத்தினாலும் தன்னைத்தானே கடிந்து கொள்ளுகிறவனாக வாழ்நாளின் எஞ்சிய பகுதிகளை கழித்துப் போடுகிறான்.

வாலிபநாட்களில் செய்த தவறுகளினாலே பலவித நோய்களுக்கு ஆளாகி உடல்நலக்குறைவு ஏற்பட்டதைக் குறித்து சிலமனிதர்கள் உங்களுக்கு சொல்லக்கூடும். எலும்புகள் வரைக்கும் வியாதியின் கடூரம் தாக்கி, வாழவே வெறுத்துப் போனவர்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாலிபவயதின் சரீரபெலத்தையெல்லாம் வீணாக்கியதால் இப்போது பலமிழந்து, வெட்டுக்கிளியைக்கூட தூக்கியெறிய முடியாத பலவீன நிலையில் அவர்கள் காணப்படுவர். வயதாவதற்கு முன்னாலேயே அவர்களுடைய கண்களின் பார்வை குன்றிவிடுகிறது. அவர்களுடைய பெலனெல்லாம் அற்றுப் போகிறது. வயதாவதற்கு முன்னாலேயே பலம் இழந்துபோய், தங்கள் சரீரம் அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு கலக்கமடைவார்கள்.
இப்படியான கசப்பான பாத்திரத்திலே பானம் பண்ணும்படியான நிலமையை அவர்களே வருவித்துக் கொண்டார்கள்.

சோம்பேறித்தனத்தினால் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்து சிலபேர் உங்களுக்குச் சொல்லக் கூடும். படிப்பதற்குக் கிடைத்த பொன்னான காலத்தை அவர்கள் அலட்சியப்படுத்திவிட்டார்கள். தங்களுடைய மனதும் இருதயமும், அறிவையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்ள பக்குவமாயிருந்த காலத்திலே அதை அடைந்து கொள்ளாமல் வாலிபநாட்களை, காலத்தை வீணாகக் கழித்தார்கள். இப்போது காலம் கடந்துவிட்டது. இப்போது உட்கார்ந்து படித்துக் கற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை; நேரம் கிடைத்தாலும் கற்கின்ற வலிமை போய்விட்டது. இழந்து போன காலங்களை என்ன கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது. இதுவும் கசப்பான பானமாக இருக்கிறது.

சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தவறியதால் ஏற்பட்ட துயரங்களைக் குறித்து இன்னும் சிலபேர் சொல்லக்கூடும். அதன்காரணமாக அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமாக துயரப்பட நேர்ந்ததை காணலாம். அவர்கள் தங்கள் சுயஇஷ்டத்தின்பிரகாரம் தங்கள் பாதையை வகுத்துக் கொண்டார்கள். யாருடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்கவில்லை. தவறானவர்களோடு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கவழக்கங்கள் அவர்களுடைய சந்தோஷத்தையே அழித்துவிட்டது. தங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு தொழிலை அல்லது வாழ்க்கையை சிலர் தேர்ந்தெடுத்திருக்கலாம். அதை இப்போதுதான் உணருகிறார்கள். காலம் கடந்த பிறகுதான் அவர்கள் தெளிவாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இப்போது தெரிந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியாத சிக்கலான நிலமை உருவாகிவிட்டதே. ஓ! இதுவும் ஒரு கசப்பான பானமாக இருக்கிறது.

இளைஞர்களே, இளைஞர்களே, நீங்கள் வாலிபவயதின் இச்சையினால் பாரமடையாமல், சமாதானமுள்ள மனசாட்சியை உடையவர்களையிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவைகள் உங்கள் இருதயத்தை மிகவும் ஆழமாகக் காயப்படுத்திவிடுமே. மனிதனின் உற்சாகத்தையே கொன்றுவிடக்கூடிய கொடிய விஷமுடைய அம்புகளல்லவா அவை! ஆத்துமாவை ஊடுருவக்கூடிய இரும்பு அவை! உங்களைக் குறித்து நீங்களே இரக்கம் பாராட்ட வேண்டியதாயிருக்கிறது. கர்த்தரை வாலிப நாட்களிலேயே தேடுங்கள். அப்போதுதான் அநேகம் கசப்பான கண்ணீர்களைத் தவிர்க்கலாம்.

இந்த உண்மையை யோபு அறிந்திருந்தார். “மகா கசப்பான தீர்ப்புகளை என் பேரில் எழுதுகிறீர். என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப் பண்ணுகிறீர்”(யோபு 13:26) என்று அவர் சொல்லுகிறார். அதைப் போலவே அவருடைய நண்பர் சோப்பாரும் சொல்லுகிறார்:”அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக் கொள்ளும்”(யோபு 20:11).

தாவீதும் இதை உணர்ந்திருந்தார். கர்த்தரிடம் அவர் வேண்டுகிறார்:”என் இளவயதின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினையாதிரும்”(சங் 25:7).

இதை நன்றாக உணர்ந்திருந்த பெஷா(Beza) என்கிற ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதி தமது உயிலில் இவ்வாறு எழுதி வைத்திருந்தார்:”கடவுளின் பெரிதான கிருபையால் 16 வயதிலேயே, உலகத்திலிருந்து கடவுளுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டதையே நான் மிகப் பெரும் சொத்தாகக் கருதுகிறேன்”.

நீங்கள் போய் எந்த விசுவாசியிடமும் கேளுங்கள். அவர்களும் இதைப் போலத்தான் கூறுவார்கள். “ஓ!நான் என்னுடைய இளமை நாட்களை மீண்டுமொரு முறைகூட வாழுவேன்”. “நல்லவேளையாக நான் இளமைகாலத்தை ஒழுக்கத்தோடு செலவிட்டேன்”, நான் என்னுடைய வாழ்நாளின் ஆரம்பத்திலே தீய பழக்கவழக்கங்கள் என்னை அணுகிவிடாதபடி பாதுகாத்துக் கொண்டேன்”. ஆரம்பத்தை அவர்கள் சரியாகத் தொடங்கினபடியால்தான் அவர்களால் விசுவாச வீரர்களாக வாழமுடிகிறது என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்.

இளைஞர்களே, முடிவிலே வருத்தம் அடையாதபடிக்கு உங்களைக் காப்பாற்ற விரும்புகிறேன். வாழ்நாள் முடிந்தபின்தான் நரகம் எவ்வளவு கொடிதானது என்கிற உண்மை தெரியவரும். தகுந்த காலத்திலே புத்தியடைந்து கொள்ளுங்கள். இளமையில் விதைப்பதை முதுமை அறுவடை செய்யும். உங்கள் வாழ்க்கையிலேயே அருமையான பருவத்தை தீயவைகளுக்குக் கொடுத்துவிட்டு அதன்காரணமாக முதுமையில் அவதிப்படாதிருக்க நாடுங்கள். நீதியின் விதைகளை விதையுங்கள். உங்கள் இருதயமாகிய நிலத்தை உழுது பண்படுத்துங்கள். முட்களை அகற்றிப் போடுங்கள். முட்களுக்கிடையே உங்கள் விதை வளராது.

பாவம் இப்போது உங்களுக்கு மிகவும் சிறியதாகத் தோன்றலாம்; உங்கள் வாயிலிருந்து சுலபமாக வரும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் நாட்கள் போகப் போக நீங்கள் அதைத் திரும்பத் திரும்ப சந்திக்க நேரிடும். அதன் வல்லமை அதிகமதிகமாக கிரியை செய்யத் தொடங்கும். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அது உங்களை வந்து தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருக்கும். நாள்பட்ட காயங்கள் ஆறாத ஆழமான வடுக்களை ஏற்படுத்திவிடும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ஈரமான இடத்திலே பதிந்த மிருகங்களின் காலடித் தடங்கள் அழியாத தடயங்களை ஏற்படுத்தியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வியக்கிறார்கள் அல்லவா? அதுபோல, காலங்கள் பல மறைந்து போனாலும் இளமையில் செய்த பாவத்தின் அடிச்சுவடு நினைவில் மறையாது நின்று மிகுந்த துயரத்தைக் கொடுக்கும். அதிலிருந்து தப்புவதற்காக உங்கள் வாலிபநாட்களை காத்துக் கொள்ளுங்கள்.

அனுபவங்கள் பாடம் கற்பிக்கிறது என்பது ஒரு வழக்கச் சொல். தீமையான அனுபவங்களின் மூலமாக நீங்கள் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்ளாதபடிக்குத் தப்ப வேண்டுமென்றிருக்கிறேன். தொடர்ந்து பிடிக்கின்ற இளவயதின் பாவங்களுக்கு விலகியோடித் தப்பித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு புத்திசொல்லுவதற்கு இதுதான் கடைசி காரணம்.

%d bloggers like this: