Dr. லாய்ட் ஜோன்ஸ்
ஆசிரியரைப் பற்றிய குறிப்பு
இவர் ஐக்கிய நாட்டின் ஒரு பகுதியான வேல்ஸ் நாட்டில் பிறந்து, மருத்துவ தொழிலுக்கு படித்து செயிண்ட் பர்தலமேயூ மருத்துவமனையில் பயிற்சி பெற்று, பேர்போன ஹோர்டன் என்ற பிரபல மருத்துவருக்கு உதவி மருத்துவராக பணியாற்றியவர். Dr. ஹோர்டன் என்பவர் ‘பிரபு’ (Lord) என்ற அரசாங்க பட்டம் பெற்றவர். லாய்ட் ஜோன்ஸ் 1927 ஆம் ஆண்டு மருத்துவத்தொழிலை விட்டுவிட்டு கர்த்தருடைய முழுநேர ஊழியராக மாறினார்.
இவர் செய்த ஊழியங்களில் பிரதானமானது, பக்கிங்ஹாம் கேட் என்ற இடத்திலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சாப்பல் (Westminster Chapel) என்ற ஆலயத்தில் வேதாகம வியாக்கியான போதகராக செய்த சேவையாகும். இவருடைய சேவை உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இவர் ஒரு காலத்தில் பிரிஸ்பிடேரியன் சபையை சேர்ந்தவராக இருந்தாலும் சபை பிரிவினைகளின் எல்லைகளைத் தாண்டி, உலகிலுள்ள சகல சுவிசேஷ சபைகளும் இவரை வேதாகம இலக்கியத்தில் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக கருதும்படியான இடத்தை வகித்தார்.
இவர் எழுதிய பல பேர்போன புத்தகங்களில் இரண்டு என் ஆவிக்குரிய ஜீவியத்தில் பெரிய திருப்பத்தை உண்டாக்கியது. அதற்காக நான் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். அவையாவன: “மலைப்பிரசங்க போதகத்தின் விரிவுரையும்” (Studies in the Sermon on the Mount) மற்றும் “ரோமர் நிருபத்தின் விரிவுரையும்” (Commentary on the Epistle to the Romans, 12 volumes). இந்த புத்தகங்கள் சுலபமாகவும் வேகமாகவும் படிக்க கூடியதாக இல்லை. என் அரசாங்க வேலை ஓய்வுக்கு முன்பாக இவைகளை படிக்க நேரமோ, பொறுமையோ இருந்திருக்காது. தேவனோ, அவருடைய பெரிதான கிருபையினால் எனக்கு வேண்டிய ஆவிக்குரிய ஆகாரத்தை சிறிது சிறிதாக என் வாழ்நாட்கள் முழுவதும் கொடுத்து வந்திருப்பது இப்போதுதான் விளங்குகிறது.
இவர் எழுதிய புத்தகங்களிலிருந்து ஆங்காங்கே சிறிது சிறிதான பாகங்களை, ஆங்கிலத்தில் சரளமாக படிக்க இயலாத கர்த்தருடைய பிள்ளைகளுக்கு, பயன் தரும் வகையில் தமிழாக்கித்தர எத்தனிக்கிறேன். இதோடு நான் கூறவிரும்பும் ஒரு கருத்து, மாபெரும் கருத்துக்களை படித்து இன்புறுவதில் மட்டும் பயன் இல்லை, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்தலே மிக முக்கியம்.
இந்த புகழ்பெற்ற ஆசிரியர் தன் சிறப்பான ஊழியத்தை அநேக ஆண்டுகள் செய்து 1981ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
ஞான பக்தமித்திரன், மொழி பெயர்ப்பாளர், நியூசிலாந்து, மே மாதம், 2011