Skip to content

மலைப்பிரசங்க வியாக்யானத்தின் முடிவுரை (மத்தேயு 7:28, 29)

Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran

Conclusion: Studies in the Sermon on the Mount (Matthew 7:28-29)

“இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப் போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” மத் 7:28,29.

இந்த மலைப்பிரசங்கத்தின் கடைசி இரண்டு வசனங்களில், இந்த பிரபல பிரசங்கத்தைக் கேட்ட மக்கள், அதைக் கேட்டபின் என்ன நினைத்தார்கள் என்பதை இந்த சுவிசேஷத்தை பரிசுத்த ஆவியானவரின் உதவியால் எழுதிய ஆசிரியர் இப்படி குறிப்பிட்டிருப்பது, சொல் சுருக்கமாகவும் பொருள் பெருக்கமாகவும் இருப்பதை நாம் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்லாது இதைப் படிக்கும் யாராயிருந்தாலும், பிரமிக்கத்தக்க இந்த பிரசங்கம் அவர்கள் மனதில் எவ்விதம் கிரியை செய்ய வேண்டும் என்ற கருத்தை அறிந்து கொள்ளவும் இந்த இரண்டு வசனங்கள் நமக்கு ஒரு சிறந்த வாய்ப்பை அருளிச்செய்கிறது.

எந்த புத்தகத்தின் இறுதியிலும் எழுத்தாளர்களால் எழுதப்படும் ஒரு முடிவுரை போன்று இந்த இரண்டு வசனங்களையும் கருதிவிடக் கூடாது. இவை இரண்டும் மிக, மிக ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த வசனங்கள்; நாம் கவனமாக தியானிக்க வேண்டிய வசனங்கள்; இது பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு (ஏவப்பட்டு) எழுதப்பட்டவை என்பதான காரியங்கள் தெளிவாகத் தெரிகிறது. இதை வேறு விதமாய்க் கூறப்போனால், இதைக் கேட்ட மக்களின் அபிப்பிராயம் எத்தகையது என்றும் அதன் வாயிலாக நாம் அறிந்துகொள்ளும் உண்மைகள் என்னவென்பதும் இந்த வசனங்கள் மூலம் தெரிந்துகொள்ள இது உதவுகிறது. அவற்றில் முக்கியமானது, இந்த பிரசங்கத்தை விட இந்த பிரசங்கம் செய்தவரை கவனிக்க இது ஏவுகிறது. அதாவது, “இதுவரை இந்த பிரசங்கத்தைக் கேட்டீர்கள்; இப்போது நீங்கள் இந்த பிரசங்கத்தை செய்தவர் (அதாவது இந்த பிரசங்கத்தின் ஆசிரியர்) யார் என்று கவனிக்கப்போகிறீர்கள்” என்று கூறுவதைப்போல் இருக்கிறது இந்த வசனங்கள்.

இந்த பிரசங்கத்தில் அநேக சிறப்பான போதனைகளும், இறுதியில் ஆண்டவர் அன்புடனும் கரிசனையுடனும் கூறும் அநேக எச்சரிப்புகளும் அடங்கியிருக்கிறது. மேலும் தங்களையே ஏமாற்றிக்கொள்ளும் பயங்கர சோதனைகளை சரிவர கவனிக்காமல், இந்த பிரசங்கத்தின் அருமை, பெருமைகளை சிலாகித்து பேசுவதோடு நிறுத்திக்கொண்டு, அவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்காதவர்கள் மோட்சத்தையே இழந்து போகும் நிலைமையை சந்திக்க நேரிடும் என்ற முக்கியமான உண்மையும் இதில் இருப்பதை மறந்து போகக்கூடாது. தவிர, நியாயத்தீர்ப்பின் நாளில், நாம் நம்பியிருக்கும் அனைத்து ஆதரவுகளும் ஒரு நொடிப்பொழுதில் நம்மை விட்டு எடுபட்டுப் போகும் நிலை ஏற்படும் என்பது போன்ற முக்கியமான பல உண்மைகளையும் நம் ஞாபகத்திற்கு கொண்டு வரும் எத்தனங்களும் இந்த பிரசங்கத்தில் நிறைந்திருப்பதைக் காணலாம்.

இந்நிலையில் பலருக்கு ஏற்படக்கூடிய ஒரு கேள்வி: இந்த பிரசங்கத்தை இந்த அளவிற்கு வாழ்க்கையில் கடைபிடிப்பது அவ்வளவு முக்கியமா என்பது.

இந்த கேள்விக்குக்கூட விடை இப்போது நாம் தியானிக்கப்போகும் இந்த இரண்டு வசனங்களில் அடங்கியிருக்கிறது. இன்னும் தெளிவாகக் கூறுமிடத்து, இந்தப் பிரசங்கம் செய்தவர் யார் என்பதில் அடங்கியிருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. இதை சற்று ஆராய்வோம். இந்த மலைப்பிரசங்கத்தை தியானிக்கையில் இது, வெறுமனே நீதி நெறி போன்ற நற்குணங்களுக்கு ஏதுவான அநேக போதனைகள் என்பவைகளோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. அவைகள் முக்கியமானவை அல்ல என்று கூறவில்லை. மாறாக, அவைகள் வெகு முக்கியமானவை என்பதைப் பற்றி யாதொரு சந்தேகமுமில்லை. ஆனால் அவற்றைப் பார்க்கிலும் முக்கியமானது இவற்றைக் கூறிய ஆசிரியர், கர்த்தராகிய இயேசுவானவர் என்ற மாபெரும் உண்மையேயாகும்.

இதைக் கூறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதலாவது, இந்த பிரசங்கத்தைச் செய்த ஆசிரியர் யார் என்பது. அந்த காரணத்தினால்தான் புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் முழுவதுமே ஒப்பு உயர்வு அற்றது என்று கருத வேண்டியிருக்கிறது. உலகிலுள்ள புகழ்பெற்ற அனைத்து புத்தகங்கங்களிலும் அதில் கூறியிருக்கும் கருத்துக்கள் தான் முக்கியமானது. ஆனால் இந்த ஒரு புத்தகத்தில் மட்டுந்தான் அதன் ஆசிரியரையும் இவருடைய போதனைகளையும் பிரிக்க இயலாது. ஆனால் பிரித்துதான் ஆக வேண்டும் என்றால் இந்த ஆசிரியர்தான் போதனைகளுக்கும் மேம்பட்டவர் என்று கருத வேண்டும். ஆகவேதான், இந்த அதிகாரத்தின் கடைசியில் கூறப்பட்டிருக்கும் இரண்டு வசனங்களும் இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இரண்டாவது காரணம், பின்வரும் கேள்விகளை யாராவது கேட்டால்:- இந்த பிரசங்கத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இவற்றை என் வாழ்க்கையில் கடைபிடிப்பது அதிமுக்கியமா?: இவை அனைத்திற்கும் பதில், ஏனென்றால் இதைக் கூறியவர் யார் என்பதால்; இதை கூறியவர் யார் என்று நிச்சயமாகத் தெரியாவிட்டால் இந்த பிரசங்கத்தில் கூறிய அளவிற்கு இதை யாரும் கடைபிடிக்க ஊக்கமுடையவர்களாயிருக்க மாட்டார்கள். மாறாக, இதைக் கூறியவர் வேறு யாருமில்லை, இவர் தேவாதி தேவனின் ஒரே பேறான குமாரன் என்று தெரிந்தால் இந்த போதனைகளுக்கு கொடுக்கும் முக்கியமே அலாதி, ஒப்புயர்வற்றது; இது தேவாதி தேவனின் திருவாய்மொழி, ஆகவே இதைக் கூட்டவோ குறைக்கவோ யாராலும் ஒருக்காலும் முடியாது என்பது திட்டமும் தெளிவுமாக தெரிந்துவிடுகிறது.

இவ்விஷயத்தில் சிலர் பயங்கர தவறான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்: அதாவது புதிய ஏற்பாட்டு போதனைகளையும் ஆண்டவரையும் பிரித்து சிந்திப்பது; இது மிகவும் தவறு. ஏனெனில் ஆண்டவர் எப்போதும் தன்னை நோக்கும்படி செய்கிறார்; விசேஷமாக இந்த மலைப்பிரசங்கத்தில் இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சிலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம்: மலைப்பிரசங்கத்தைப் பாருங்கள், எவ்வளவு தெளிவாகவும் விளங்கக்கூடியதாகவும் இருக்கிறது; இதில் சிலுவை, கிருபாதார பலி முதலிய விளங்க கஷ்டமான போதனைகள் யாதொன்றும் இல்லை என்பது போன்று விமர்சனம் செய்து வேதாகமத்தில் அனுபவமில்லாதவர்களுக்கு இடறுதல் ஏற்படுத்துகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இப்படிப்பட்டவர்கள் மலைப்பிரசங்கத்தை கவனமாகவும் தெளிவாகவும் படிக்காததினாலேயே. மலைப்பிரசங்கத்தில், ஆண்டவர் தன்னை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுவதை கவனிக்கத் தவறக் கூடாது. அதன் முக்கிய கருத்து என்னவென்று தெரிய வேண்டும்.

மலைப்பிரசங்கம் முழுவதிலுமே ஒருவித அடிப்படை சத்தியம் (basic statement) அடங்கியிருக்கிறது. இதை மத்தியமாக (foundation) வைத்துதான் மற்ற அனைத்து போதனைகளும் ஏற்படுகின்றன என்ற உண்மையை விளங்கிக்கொள்வது முக்கியம். மலைப்பிரசங்கம் முழுவதுமே, நல் நடத்தை, ஒழுங்கு முறைகள் என்று எண்ணிவிடுவது அறியாமையே தவிர வேறல்ல. இந்த உண்மையை நாம் விசேஷமாக தியானிக்கும் இவ்விரண்டு வசனங்களை ஆழ்ந்து கவனித்தால் விளங்கும்.

இந்த பிரசங்கத்தில் ஆண்டவர் தன்னை அடிக்கடி சுட்டிக் காட்டுவதைக் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். இதை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. ஆகவேதான் இந்த பிரசங்கத்தை கேட்ட மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதை கவனிக்கும்போது அவர்கள் அவருடைய “போதனையை (doctrine)க் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அவர் ”வேதபாரகரைப்போல் போதிக்காமல் அதிகாரமுடையவராய்ப் பேசினார்” என்றிருக்கிறது.

இந்த காட்சியை சற்று கவனிப்போம். இங்கு இயேசுவை நோக்கிப் பார்ப்பதைவிட இன்பமானது ஒன்றுமில்லை.

[மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்: எபிரேயர் 12:1(l)ல் “இயேசுவை நோக்கிப்பார்த்தல் (ஆங்கிலத்தில் “looking unto Jesus”) என்ற சொற்றொடரில், தேவாதி தேவனின் ஒரே பேறான குமாரனை நோக்கிப் பார்த்தல் என்பதில் எவ்வளவு ஆழமான சத்தியம் அடங்கியிருக்கிறது என்று நமக்குத் தெரியும். இந்த அர்த்தத்தில்தான் ஆசிரியர் இயேசுவை நோக்கிப் பார்ப்பதில் உள்ள இன்பத்தை இங்கு எடுத்துரைக்கிறார் என்பது என்னுடைய அபிப்பிராயம்.]

இயேசுக் கிறிஸ்துவோடுள்ள நமது ஐக்கியம் சரி இல்லையென்றால் வேதாகமத்திலுள்ள எந்த போதனையும் நமக்கு விளங்காது. வேதாகமத்திலுள்ள எந்த போதனையை எடுத்துக்கொண்டாலும், அதன் சரியான உட்கருத்து தெரிய வேண்டுமானால் இயேசுவானவரைப் பற்றிய அறிவும் (ஓர் அளவிற்காவது) அவரோடு சம்பந்தம், உறவு (relationship) இருக்க வேண்டும். இயேசுவானவரை நோக்கிப்பார்ப்பது என்பதில் இந்தக் கருத்து அடங்கியிருக்கிறது. பரிசுத்த தேவ சுதன் மலையில் ஓரிடத்தில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி ஒரு மாபெருங் கூட்டம் கூடி அவருடைய பாதபடியில் அவர் சொல்லுவதை மகா ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர் யார்? அவர்கள் பார்வையில், முப்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு வாலிபன், மர ஆசாரித் தொழில் செய்து வந்த ஒருவர், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் எந்த கல்லூரியிலோ அல்லது கமாலியல் போன்ற ஒரு பேராசிரியரிடம் பாடம் கற்றுக் கொண்டவரல்ல. பரிசேய அந்தஸ்து இல்லாதவர். ஆனால் இவர் பேசுவதைப் பார்த்தால், அவர்களுக்கு தெரிந்து யாரும் இப்படிப்பேசி அவர்கள் எக்காலத்திலும் கேட்டதில்லை. ஜனங்கள், அதுவும் திரளான ஜனங்கள், இவர் பேசி பொழிந்து தள்ளுவதை  வாயடைத்துப்போய் கேட்கிறார்கள். எங்கும் நிசப்தம். அங்கு காணும் காட்சி இது.

இதே காட்சி நம்மை எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம். வசனத்தில் “ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்றிருக்கிறது. ஏன் ஆச்சரியப்பட்டார்கள்? நமக்கு அந்த ஆச்சரியம் இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது. ஏன் ஆச்சரியப்பட்டார்கள் என்று பார்க்கும்போது, அவர் வேதபாரகரைப் போல், “அதில் அப்படி எழுதியிருக்கிறது, இதில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது” என்று ஓயாமல் நியாயப்பிரமாணத்தைக் குறித்த வியாக்யானத்தை கிளிப்பிள்ளை பாடமாக கூறிக்கொண்டே போகவில்லை. மோசே சொல்லிக்கொடுத்த நியாயப்பிரமாணத்தின் போதகத்தை பற்றி ஏராளமான வியாக்யானங்களை வேதபாரகர் படித்து வைத்திருந்தனர். ஆனால் இயேசுவானவர் அந்த வியாக்யானங்களை சிறிதுகூட குறிப்பிடவில்லை.

இவர் மோசேயின் நியாயப்பிரமாணத்தை குறை சொல்லவேயில்லை. ஆனால் அவைகளைக்குறித்து தானே அதிகாரபூர்வமாக வியாக்யானம் செய்வதைக் குறித்துதான் ஆச்சரியப்பட்டார்கள். அந்த வியாக்யானங்களையும் சுற்றி வளைத்துப் பேசாமல், நான் சொல்லுகிறேன் என்று அதிகாரதோரணையாக கூறும்போது, அந்த வியாக்யானங்களும் மிகவும் ஞானமும் ஆழமுமான கருத்துக்களோடு கூடியிருந்ததாலும் அது அவர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆச்சரியத்தை அளித்தது. தவிர, அவர் கூறும் ஒவ்வொன்றும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற பழமொழிக் கொப்ப, திட்டமும் தெளிவுமாக இருந்தது. உதாரணமாக “ஆவியில் தரித்திரர் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று கூறும்போது, தான் அப்படி கருதுவதாக, அல்லது அப்படியிருக்க வாய்ப்புண்டு என்பதுபோல் பேசாமல். பரலோகத்திலேயே இருந்து அனுபவப்பட்ட மாதிரி, பளிச் பளிச்சென்று, ஆணி அடித்த மாதிரி பேசினார். இதுமாதிரி ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அவர் பேசிக் கொண்டுபோகிறார். அவற்றை கேட்டவர்களை இது அதிர்ச்சியடையும்படி செய்தது.

ஆனால் இவைகளைவிட, அவர் தன்னை சுட்டிக்காட்டி பேசியதுதான் அவர்களை மிகவும் திகைக்க வைத்தது. அவர் கூறியதில் அவர்களுக்கு அளவு மீறிய திகைப்பை ஏற்படுத்தியதில் சில உதாரணங்களை கவனிப்போம். ஐந்தாவது அதிகாரத்தில், உதாரணமாக, “. . . . இப்படி பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்வதாவது . . .” (மத் 5:27, 28) என்று கூறி பரிசேயர் ஏற்கனவே சொல்லிக்கொடுத்திருந்த வியாக்யானத்தை அதிகார தோரணையாக திருத்தஞ்செய்கிறார். இப்படி செய்ய இதுவரை ஒருவராவது துணிந்தது கிடையது. [மொழிபெயர்ப்பாளரின் குறிப்புரை: இவருடைய துணிகரமான போதகத்தை அநேக வேதபாரகர் பரிசேயர், ஏற்கனவே பலமுறை எதிர்க்க பிரயாசைப்பட்டு தோற்றுப்போனதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். இவர் கன்னா பின்னாவென்று பேசி, மிகுந்த படிப்பாளிகளான பரிசேயர், வேதபாரகரை சமாளிக்கமுடியாது. இவரை பேச்சில் சிக்க வைக்க பல தடவை முயற்சிகள் செய்யப்பட்டது நமக்குத் தெரியும். அந்த முயற்சிகளில் ஒன்றாவது வெற்றியடையவில்லை. மேலும் நியாயப்பிரமாண அறிவில் இவர் முன் யாரும் நிற்க முடியாது. இவ்வுண்மைகள் நம் மனதில் இருக்க வேண்டும். இவர் ஒரு தனித்த, சிறிய கும்பலில் இப்படி பேசவில்லை. திரளான மக்கள், அதில் பலர் பெரிய அறிவாளிகளாகவும் இருந்திருப்பார்கள். இங்கு யாரும் உளறிப்பேசி இந்தக் கும்பலை அதுவும் யூதர்கள் அடங்கிய கூட்டத்தாரை சமாளிக்க முடியாது. இந்தப் பின்னணியில் இந்தக் காட்சியை கவனித்தால்தான் இந்த வியாக்யானத்தை விவரிக்கும் ஆசிரியர் கூற விரும்பும் கருத்தை சீரானபடி விளங்கிக்கொள்ள முடியும்.]

ஆண்டவர் இங்கு, மக்களுக்கு விளங்கவைக்க பிரயாசைப்படும் உண்மை என்னவென்றால், மோசே மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்த நியாயப்பிரமாணம் கடவுளால் ஏற்பட்டது; அதில் ஒரு குறைவும் இருக்க வழியில்லை; ஆனால் அதின் உட்கருத்தை மக்கள் உணரவில்லை. தவிர, வேதபாரகரும் பரிசேயரும், அதற்குரிய வியாக்யானத்தை, வெளிப்பிரகாரமான கிரியைகளில் அடக்கிவிட்டார்கள். இதை ஆண்டவர் வண்மையாகக் கண்டிக்கிறார். உதாரணமாக விபசாரம் என்ற பாவத்தை எடுத்துக்கொண்டால், அதை ஒருவன் தன் கிரியையில் நடப்பிக்காவிட்டால் அவன் பாவம் செய்யவில்லை என்று பரிசேயர், வேதபாரகர் திருப்தியடைந்தார்கள்; ஏனெனில் அப்படித்தான் அவர்கள், போதனை செய்தனர். ஆனால் இருதயத்தைப் பார்க்கக்கூடிய தேவன் ஒருவனின் வெளிப்படையான கிரியையைக் கொண்டு மட்டும் அவன் குணத்தை நிர்ணயிக்கமாட்டார் என்று ஆண்டவர் இங்கு அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். இவ்விஷயத்தில் இவர், நியாயப்பிரமாணத்தின் உண்மையான கருத்தை முதல் முறையாக விளக்கும் மாபெரும் ஆசிரியராக அவர்கள் முன்பு தோன்றுகிறார். தான் கூறும் இந்த வியாக்யானந்தான் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் சரியான கருத்து என்று சற்றும் தயக்கமில்லாமல் அவர்கள் முன்னிலையில் கூறுகிறார் முப்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு கலிலேய வாலிபன்! இதுமட்டுமல்லாது, இந்நிலையில், யூதர்களின் உயிர் நாடியைப்போல் அவர்கள் கருதும் இந்த நியாயப்பிரமாணத்தின் அதிபதியாக தன்னைக் காண்பிக்க அவர் சிறிதும் தயங்கவில்லை: “ஆனால் நான் சொல்லுகிறேன்” என்று அதிகாரப்பிரகாரமாக அவர் கூறுகையில் அதைக்கண்டு வாயடைத்துப்போய் அவரை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். ஆனால் இதையும் விட அவர்களை அதிர வைத்தது, அவர் கூறினது, “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, . . .” இந்தக் கூற்றின் உட்கருத்து விளங்குகிறதா? இதில், தான் யார் என்பதை ஒரு விதமாக வெளிப்படுத்துகிறார். இந்த சொற்களோடு சேர்த்து அந்த இரண்டு வீடுகளைப்பற்றிய உடல் சிலிர்க்கும் உதாரணத்தை கொண்டுவரும்போது தனக்குள்ள பிரத்தியேகமான அதிகாரத்தை அவர்கள் முன்பு சற்றும் தயக்கமின்றி வெளிப்படுத்துகிறார்.

ஏதோ ஒரு சமயம் தன்னைப்பற்றி, பட்டும் படாமலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக மறைமுகமாக கூறினார் என்று நினைக்க சற்றும் இடமில்லை. மிகத்தெளிவாக, எவ்வித ஒளிவு மறைவுமின்றி தான் யார் என்பதை அவர்களுக்குக் கூறிக்கொண்டே போகிறார் என்பதை உங்களால் கிரகிக்க (உணர) முடிகிறதா? நான் அவைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்; அவற்றை வரிசைப்பிரகாரம் கவனிப்போம். ஐந்தாம் அதிகாரம் முதல் பதினொன்று வசனங்கள் முடிந்ததும் அவர் கூறுவதை கவனியுங்கள். “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்”. இது, சொல்லுக்கடங்காத பிரமிக்கத்தகுந்த கூற்று என்பது உங்களுக்கு விளங்குகிறதா? கவனியுங்கள்: “நான் கூறிய இந்த போதகத்தின் நிமித்தம்” என்று கூறினாரா? அல்லது, “இந்த போதகத்தை நீங்கள் கைக்கொள்ளுவதினிமித்தம் வேதனைக்குள்ளானால்”, என்று கூறினாரா அல்லது “மரித்துப்போகும்படி நேரிட்டால்” என்று கூறினாரா? அல்லது “என் பிதாவாகிய தேவனின் நிமித்தம் இந்த அந்த வேதனைக்குள் அகப்பட்டால் நீங்கள் பாக்கியவான்கள்” என்று குறிப்பிட்டாரா? இல்லை. நன்றாக கவனியுங்கள், அவர் கூறியது “என் நிமித்தமாக” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். சிலர் அறிவீனமாகக் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்: ஆஹா, இந்த மலைப்பிரசங்கம் எவ்வளவு சிறப்புள்ளதாக, அநேக சத்தியங்கள், விலை மதிக்க முடியாத போதனைகள் இதில் அடங்கியிருக்கிறது! பாருங்கள் என்று சிலர் கூறுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். இவைகளையும் தவிர சிலர் அதிகமாக விமர்சிக்கும், “ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால், உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்ற போதனைக்கும் முன்னதாக “தன்னிமித்தம் துன்பப்பட, ஒரு வேளை உயிரையும் தியாகம் செய்ய நேரிட்டாலும் அதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று அவர் கூறியதை அவர்கள் சுநாசமாக கவனியாமல் விட்டுவிடுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த அறியாமையை என்னென்று சொல்லுவது! இவை யாவையும் தவிர, இவற்றை கூறியவர் யார் என்று உணர்ந்துகொள்ளாத அறியாமை சொல்லுக்கடங்காததாகும்.

இதுமட்டுமல்ல, இன்னும் அநேக கவனிக்கத்தகுந்த காரியங்கள் இதில் இருப்பதை ஆசிரியர் சொல்லக் கேட்போம். ஆண்டவர் மேலும் சொல்வதாவது: “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”, “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (5:13, 14). இதன் உட்கருத்து விளங்குகிறதா? இதை விவரித்து சொல்வதானால் ஆண்டவர் கூறுவது, “உங்களில் யாராவது என்னுடைய சீஷராக, என்னை பின்பற்றுகிறவர்களாக இருந்து, என்னிமித்தமாக துன்பப்படவும், எனக்காக உயிரையும் தியாகம் செய்யவும் ஆயத்தமாகவிருப்பவர்கள், என்னுடைய இந்த போதகத்தை கவனத்தோடு கேட்டு, அவற்றை இந்த உலக முழுவதும் பறைசாற்ற ஆவலுள்ளவர்களாயிருந்தால் நீங்கள், இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள். இதன் தாற்பரியந்தான் என்ன? இதுதான் ஆவிக்குரிய மறுபிறப்பின் போதகம் (the doctrine of re-birth). இந்த போதகத்தை வெறுமனே கேட்டு இந்த போதகத்தின் அருமை பெருமைகளை விவரித்துக்கொண்டு அதோடு நின்றுவிடுபவர்கள் அல்ல; இதை உள்ளூரக் கேட்டு, விளங்கி, இதை மற்றவர்களும் கேட்க வேண்டுமே என்ற கரிசனையோடும் அக்கறையோடும் உலகிற்கு அறிவிக்க முற்படுவார்களாகிய நீங்கள் இந்த பூமிக்கு “உப்பு மாதிரி அல்ல, வெளிச்சம் மாதிரி அல்ல” மாறாக, நீங்கள் உப்பாகவே அல்லது உலகின் வெளிச்சமாகவே மாறிவிடுகிறீர்கள் என்ற கருத்து இதில் இருப்பது கவனிக்கத்தக்கது. இதில் ஒரு ஆழமான போதனை இருப்பதை கவனிக்கவும். உலக அறிவால் விளங்கிக்கொள்ள முடியாத ஆவிக்குரிய ஐக்கியம், இயேசுக்கிறிஸ்துவோடு அவருடைய உண்மையான விசுவாசிகளுக்கு ஏற்படுதலும், அதன் காரணமாக அவருடைய பரிசுத்த குணம் அவர்களுக்குள் கொடுக்கப்படுதலும் (the doctrine of the mystical relationship to and union of His people with Him; He dwelling in them and imparting His nature to them). இயேசுவின் இந்த கூற்றும், இவ்விதம் சொல்லுக்கடங்காத ஒரு உன்னதமானதொன்றாகும். இந்த இடத்தில் இயேசுவானவர் தன் தெய்வீகத்தை தெளிவாக அறிவிக்கிறார். அப்படியானால், இவர்தான் இரட்சிக்க, பூலோகத்திற்கு வந்த மேசியா (கிறிஸ்து) என்பது தெளிவாக வேண்டும். இவரைத்தான் யூதர்கள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்தனர்.

[மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: ஒரு ஜெர்மானிய ஞானப்பாட்டில் கூறியிருக்கிறபடி

1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

“மீட்போம்” என்ற வாசகம்

பிசகாமல் ஆண்டவர்

மீட்பரை அனுப்பினார்.

2. முற்பிதாக்கள் யாவரும்

தீர்க்கதரிசிகளும்

சொல்லி ஆசைப்பட்டது

வந்து நிறைவேறிற்று.]

இந்த வெகு விசேஷமான இரண்டு கூற்றுகளையும் (உப்பாகவும், வெளிச்சமாகவும் மாறுவது) சற்று உன்னிப்பாகக் கவனிப்போம். இதைக்கேட்ட நமக்குங்கூட, இந்த யூதர்களுக்கு எழுந்த கேள்வி மாதிரி, அவரைக் குறித்து இப்படி கேட்கத் தோன்றுகிறது: இப்படி பேசிக்கொண்டு போகும் இந்த மனிதன் யார்? நம்மை பூமிக்கு உப்பாகவும் உலகிற்கே வெளிச்சமாகவும் மாற்றக்கூடிய சக்தி உள்ள இந்த மனிதன் யார்? இக்கேள்விகளுக்கு பதில் கூறுவது மாதிரி 5:17ல் அவர் கூறுவது: “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, (அவைகளை) நிறைவேற்றுகிறதற்கே நான் வந்தேன்” இந்த வசனத்தை பல கோணங்களில் பார்க்க வேண்டும். முதலாவது “நான் வந்தேன்” என்று கூறும் கூற்று. இதிலிருந்து, அவர் தன்னையும் தன்னுடைய ஜீவனையும் உலகிலுள்ள அனைத்து மக்களையும் விட வேறுபட்டவராக அவர்கள் முன் நிறுத்துகிறார். அடுத்தபடியாக, “நான் பிறந்தேன்” என்று கூறாமல் “நான் வந்தேன்” என்று கூறுகிறார். அப்படியானால் எங்கிருந்து இவர் வந்தார் என்ற கேள்வி எழுகிறது. இவர் உலகில் பிறந்தது மாத்திரமல்லாது, இவர் எங்கிருந்தோ வந்தமாதிரி கூறுவது கவனிக்கத்தக்கது. இவர் நித்தியத்திலிருந்து வந்திருந்திருக்கிறார் (from eternity) அதாவது மோட்ச லோகத்திலிருந்து வந்திருக்கிறார். அதையும் தவிர பிதாவாகிய தேவனின் மடியிலிருந்து வந்தவர் (யோவான் 1:18). மேலும் நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அவர் வருகையைக் குறித்து அறிவித்திருந்தன. ஒரு உதாரணத்தை மட்டும் குறிப்பிடுவோமானால் “என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அவர் செட்டையின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்” மல் 4:2 என்ற தீர்க்கதரிசன வசனம் யூதர்களுக்கு நன்றாகத் தெரியும். பிரசங்கம் செய்யும் இந்த ஆச்சரியவிதமான மனிதன். “நான் வந்தேன்” என்று தன்னைக்குறித்துச் சொல்வது அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அவர்கள் தாங்க இயலாத வியப்பு அடைந்து, “இவர் என்ன இப்படி கூறுகிறாரே! இவர் யார்? நாம் கேள்விப்பட்டபடி இவர் மரவேலை செய்யும் ஒரு தச்சன் அல்லவா? தவிர, நம்மை போலவே இருக்கிறாரே பார்ப்பதற்கு! ஆனால் அவர் பேசுவதைப் பார்த்தால் ஒரு சாதாரண மனிதனைப்போன்று தோன்றவில்லையே! “நான் இங்கு வந்தேன்” என்று வேறு அடிக்கடி கூறுகிறார்! வேறு ஒரு இடத்திலிருந்து இந்த பூலோகத்திற்கு வந்த மாதிரி அல்லவா இவர் பேசுகிறதைப் பார்த்தால் இருக்கிறது. நானும் பரம பிதாவும் ஒன்று என்று இவர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்” என்றெல்லாம் எண்ணி குழப்பமும், ஆச்சரியமும் நிறைந்து இருக்கின்றனர் இந்த யூதர்கள் நிறைந்த மாபெரும் கூட்டத்தார். இந்த நிலைமையைக் குறித்து இப்போது பலர் என்ன நினைக்கிறார்கள்? இப்போதுங்கூட இந்த மலைப்பிரசங்கத்தைக் குறித்து, பலர் இது சமூக ஒழுங்கு முறை, உலகநீதி என்றெல்லாம் விமர்சனம் செய்வதைக் குறித்து என்னென்று சொல்வது! மிகவும் விசனிக்கத்தக்க காரியமே தவிர வேறு என்ன செய்ய முடியும்! இந்த நிலை அல்லது இந்த சந்தர்ப்பத்தை கவனித்துங்கூட, இவர் மெய்யாகவே தேவனிடத்திலிருந்து இங்கு வந்திருக்கும் தேவ குமாரனே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று உணர முடியாவிட்டால், அப்படிப்பட்டவர்களுடைய நிலைமை மிகவும் பரிதபிக்கப்படத்தக்கதாகும்.

பழைய ஏற்பாட்டு பக்தர்களில் ஒருவர்கூட நியாயப்பிரமாணத்தை பூரணமாகக் கைக்கொண்டதாக வேதாகமத்தில் ஒரு இடத்திலும் நாம் படித்தது கிடையாது. அப்படியிருக்க மனித வடிவில் தோன்றும் இவர் இவ்வளவு பெரிய கூட்டத்தார் மத்தியிலிருந்துகொண்டு (ஒரு தனி இடத்தில் ஒரு சிறு கூட்டத்தாரிடையே அல்ல) அவர் கூறுவது, “இந்த நியாயப்பிரமாணத்தை (நான் இந்த இடத்தில் வியாக்யானம் செய்யும் அந்த அளவிற்கு, அதாவது இருதயத்திலிருந்து, வெளிப்படையான கிரியையில் மட்டுமல்ல) நான் கைக்கொள்ளுவேன். அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பென்கிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நியாயப்பிரமாணத்தை தட்டிக்கழிக்க, அல்லது அதை ஒழித்துக்கட்ட நான் வரவில்லை; அதை பூரணமாக என் ஜீவியத்திலேயே நிறைவேற்றுவேன்” என்று சவால்விட்ட மாதிரி அவர் கூறுகையில், பவுல் அப்போஸ்தலன் கூறிய பிரகாரம் அவரே (கிறிஸ்துவே) நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது? வேறு விதமாகக் கூறுமிடத்து, இயேசுவானவர் கடைசிவரை நியாயப்பிரமாணத்தை தன் ஜீவியத்தில் நிறைவேற்றினதும் அல்லாமல், இதை நிறைவேற்ற ஒருக்காலும் முடியாத சகல பரிசுத்தவான்களின் சார்பாகவும் அவர் அவற்றை நிறைவேற்றி, அவரே (இந்த இயேசுக்கிறிஸ்துவே) ”தேவனும் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயினார்”, 1 கொரி 1:31. இப்படி, இவர் பாவிகளை இரட்சிக்கும் பொருட்டு, அவர்களுக்குரிய மரண தண்டனையும் தானே தன்மீது வலிய ஏற்றுக்கொண்ட அந்த கிருபாதார பலியின் ஒப்புயர்வை வர்ணிக்க யாராலும் எக்காலத்திலும் முடியவே முடியாது.

இப்படிப்பட்ட போதகம் நிறைந்த இந்த மலைப்பிரசங்கத்தில், ஆவிக்குரிய போதகம் இல்லை, இது பொதுவான உலக நீதியைப் புகட்டும் சமூக நல நூல் என்பதுபோல் விமர்சனம் செய்வதின் மதியீனத்தை என்னவென்று சொல்வது! தேவனுடைய வார்த்தை மாமிசமாகி கிறிஸ்தேசுவாக இவ்வுலகத்தில் அவதரித்து, அவரை விசுவாசிக்கும் பாவிகளுக்காக, கிருபாதார பலியாக மரித்த மாபெரும் சத்தியம் இந்த மலைப்பிரசங்கத்தில் அடங்கியிருக்கிறது என்பதை அவர்கள் உணரமுடியாத காரணத்தால்தான் இவ்வித குழப்பம் மனிதருக்குள் இன்னமும் இருந்துவருகிறது.

இவருடைய அபூர்வமான மற்றுமொரு கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. மத்தேயு 7:21ல் “. . . என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை” என்ற வசனத்தை கவனமாகப் பார்க்கும்போது, அதை இயேசுவானவர் வெகு சாதாரணமாகக் கூறிக்கொண்டு போகிறார். ஆனால் அதில் மிகுந்த அதிர்ச்சி தரும் விஷயங்கள் அடங்கியிருப்பது உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? தன்னை, ஜனங்கள் “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று அழைப்பதை குறிப்பிடுகிறார். தன்னை “கர்த்தாவே” என்று இப்போது சிலராவது அழைக்கிறார்கள். அது அந்த ஜனத்தாருக்கு நன்றாய்த் தெரியும். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளில் இப்படிச்சொல்லப் போவதை சற்றும் தயக்கமில்லாமல் அவர்களிடம் கூறுகிறார். “கர்த்தாவே” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று இக்காலத்து மக்களைவிட அந்த யூத ஜனத்தாருக்கு தெளிவாகத் தெரியும். இது பரலோகத்திலிருக்கும் யெகோவா தேவனை அழைக்கும் சொல். நியாயத்தீர்ப்பின் நாளில் “என் பிதாவை நோக்கி, கர்த்தாவே, கர்த்தாவே, என்று கூறுவீர்கள்” என்று இயேசுவானவர் அந்த மலைப்பிரசங்கத்தின் போது கூறவில்லை. அவர் கூறுவது இப்படியாக தன்னை நோக்கிக் கூப்பிடுவார்கள் என்று கூறுகிறார். அது மட்டுமல்லாமல் தான் உலகத்தை நியாயந்தீர்ப்பவராக அங்கு காட்சியளிப்பார் என்று அவர் சொல்வதைக் கேட்டு அவர்கள் திகைப்படைந்தார்கள். இதோடும் நிறுத்திக்கொள்ளாமல், அந்நாளில் “உங்களை அறியேன்! அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று அவர்களிடம் சொல்லுவேன் என்று வேறு கூறுகிறார். ஒரு சாதாரண மனிதனைப்போன்று தோன்றும் இந்த பிரசங்கம் செய்யும் வாலிபன் உலக நியாயாதிபதியாக நியாயந்தீர்ப்பின் நாளில் காட்சியளிக்கப்போகிறார் என்ற உண்மை, அன்று அவர் சொற்பொழிவை கேட்ட யூத ஜனத்தார் மட்டுமல்லாது, உலகில் பிறந்த சகல மக்களுக்கும் எச்சரிப்பாக எழுதப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

அன்று அவர் போதகத்தைக் கேட்ட மக்கள் அவர் போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் என்று பார்க்கிறோம். அவர்களது இந்த மனநிலைக்கு மேல் என்ன நடந்தது என்று வேதத்தில் குறிப்பொன்றும் இல்லை. எதினால் இப்படி ஆச்சரியப்பட்டார்கள் என்று மட்டும் எழுதப்பட்டிருக்கிறது. எதினால்? அவர் வேதபாரகரைப் போல் போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்தபடியாலும், அவர் அடிக்கடி தன்னையே குறிப்பிட்டு பேசியதாலும்.

இந்த யூத மக்கள் இவருடைய போதகத்தைக் கேட்டு ஆச்சரியமாவது பட்டார்கள். அந்த உணர்வுகூட இல்லாத அநேகர் இக்காலத்திலும் இருக்கிறார்கள். சொல்ல நாவு கூசுகிறது, நம்மில் யாரும் அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாதிருப்பார்களாக. அப்படியே அவரைக் குறித்து ஆச்சரியப்படக் கூடுமானாலும் அதில் யாதொரு பயனுமில்லை. இந்த பிரசங்கத்தைச் செய்தவர் வேறு யாருமில்லை, தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவே என்று விளங்கினாலொழிய பயனொன்றும் இல்லை.

ஏன் இங்கு வந்தார்? ஏன் இந்த பிரசங்கத்தை செய்தார்? புதியதொரு நியாயப்பிரமாணத்தை ஏற்படுத்த அல்ல. மோசேயின் நியாயப்பிரமாணத்தை எப்படி அனுஷ்டிப்பது என்று சொல்லிக் கொடுப்பதற்காகவும் அல்ல. [கடவுள் பயத்தோடு நான் கூறிக்கொள்வது] நியாயப்பிரமாணத்தை இயேசுவானர் கூறிய புது விளக்கப்படி அநுசரிப்பது மோசேயின் நியாயப்பிரமாணத்தைவிட பன்மடங்கு முடியாத காரியம் என்பதைத் தவிர, மோசேயின் நியாயப்பிரமாணத்தைக்கூட ஒரு விசுவாசியாகிலும் கடைபிடிக்க முடியவில்லை என்பதை ஏற்கனவே இந்த தியானத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படி இருக்க, இந்த மலைபிரசங்கத்தின் சாராம்சந்தான் என்ன என்ற கேள்விக்கு கீழ்கண்ட விடை கொடுக்கலாம்: இயேசுவானவர் இதன் மூலம் அனைத்து மக்களும் உணர விரும்புவது என்னவென்றால், எந்த மனிதனும் தன்னுடைய சுயமுயற்சியினால் இரட்சிப்பை அடைந்துவிட முடியும் என்ற எண்ணத்தை வண்மையாகக் கண்டிக்கிறார். நாம் அனைவரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்துபோய்விட்டதால், நம்முடைய ஜீவிய காலம் முடிவு வரை எவ்வளவு பிரயாசைப்பட்டாலும் நம்மால் நீதிமானாகிவிட முடியவே முடியாது. மேலும் பரிசேயர் இந்த நியாயப்பிரமாணத்தை மேம்பூச்சாக அர்த்தப்படுத்தி தங்களை நீதிமான்களாய் ஆக்கிக்கொள்ளப் பிரயாசைப்பட்டார்கள். இது ஆவிக்குரிய காரியம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. பவுல் அப்போஸ்தலன் பின்னால் ஒரு காலத்தில் கூறிய, “முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்த போது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர் கொண்டது, நான் மரித்துப்போனேன்” (ரோமர் 7:9) என்ற உண்மையை பரிசேயர் அறியாத அறிவீணராயிருந்தார்கள். வேறு விதமாய் சொல்லப்போனால், நாம் அனைவரும் கடவுள் சந்நிதியில் சபிக்கப்பட்ட பாவிகளாய் நிற்பதைத்தவிர வேறு வழியில்லை. நம்மை நாமே ஒரு நாளும் இரட்சித்துக்கொள்ள முடியவே முடியாத நிலையில் இருக்கிறோம். ஆகவே இரட்சிக்கப்பட ஒரே வழி, மறு பிறத்தல் அடைதல் (to be born again – spiritual regeneration) ஒன்றுதான். நம்முடைய இயற்கை குணம் மாறி புதிதாய் ஆவியானவரால் மறுபடியும் பிறத்தல் வேண்டும். இந்த மாற்றத்தை அடைய மனிதரால் ஒருக்காலும் முடியாது. ஆகவேதான் இக்காரியத்தில் மனிதருக்கு (பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு) உதவி செய்யத்தான் தான் இவ்வுலகிற்கு வந்திருப்பதாக இந்த மாபெரும் பிரசங்கத்தில் வலியுறுத்துகிறார். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதை தெளிவாக விளக்கிக்காட்டி அவ்வித பரிசுத்தத்தை அடையும் வழியையும் தெளிவாகக்காட்டுகிறார். இந்த மலைப்பிரசங்கத்தில் ஐந்தாம் அதிகாரம் முதல் 11 வசனங்களை முதலில் எடுத்துக்கூறி, அவரால் பரிசுத்தப்படுத்தப்பட்ட மக்கள் (மோட்ச வாசிகள்) எப்படி இருப்பார்கள் என்று காட்டிவிட்டு, அதன் பின்வரும் வசனங்களில், அப்படி பரிசுத்தமாக்கப்பட்ட மக்கள் எப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதை விஸ்தாரமாக விளக்கிக் காட்டுவதுதான் ஆண்டவர் பிரசங்கித்த மலைப்பிரசங்கத்தின் சாராம்சமாகும்.

வேறு விதமாய்க் கூறினால், இந்த மலைப்பிரசங்கம் ஒரு உண்மையான கிறிஸ்தவன் வாழும் முறையை விஸ்தரிக்கிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு தன் சுய சக்தியினால் கடவுள் முன்பு நீதிமானாக ஒரு நாளும் நிற்க முடியாது என்று தெரியும். ஆனால் அவன் நீதிமானாக இல்லாமல் கடவுளை சந்திக்கவும் முடியாது. ஆகவேதான் அவன் பரிசுத்த ஆவியை கர்த்தருடைய பெரிதான கிருபையால் பெற்றிருக்கிறான். இந்த பரிசுத்த ஆவியின் ஈவு (gift) ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. இதைப் பெற்ற அனைவரும் கடவுளால் வகுக்கப்பட்டதும் அங்கீகாரம் செய்யப்பட்டதுமான குணாதிசயங்களை உடையவர்களாய் இவ்வுலகில் திகழ்வார்கள். பாவமே இல்லாதவர்களாக இவ்வுலகில் வாழ இயலாவிட்டாலும் பாவத்தை மேற்கொள்ளக்கூடிய பலத்தை கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட பரிசுத்த ஜீவியத்தின் மூலம் (through the sanctification process) வாழ் நாள் முழுவதும் பெற்றுக்கொண்டு வாழ்கின்றனர். இந்த நிலையை உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிவார்கள். இதில் எந்த வித குழப்பமும் இருக்கத் தேவையில்லை. யோவான் முதல் நிருபத்தில் எழுதியிருப்பதுபோல “தேவனால் பிறந்த எவனும் பாவத்தைத் தொடர்ந்து செய்யான்” (does not continue the practice of sin). அவன் மலைப்பிரசங்கத்தில் விவரித்திருப்பதைப்போல் குணாதிசயங்களை அடைய ஆரம்பிப்பதை அவனே உணர முடியும். அதில் வெற்றி காணுவது லேசாக இல்லாதிருந்தும் அவ்விதம் நடக்க மிகுந்த பிரயாசை எடுப்பான், தன்னுடைய சுய முயற்சியால் மட்டுமல்லாது பரிசுத்த ஆவியின் உதவியையும் எப்போதும் நாடினவனாக இருப்பான். நீதியின் மேல் பசியும் தாகமுமுடையவனாக விளங்குவான். இதில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு ஊக்கத்தோடு முன்னேறிக்கொண்டு போவான்.

மலைப்பிரசங்கத்தின் நோக்கம் இதுவே. இந்த மாபெரும் பொக்கிஷமாகிய மலைப்பிரசங்கத்தின் போதனையை நமக்கு கொடுத்திருப்பது தேவ குமானே. அவர் ஒரு புத்தம் புதிய மனித சமூகத்தை மோட்சலோகம் கொண்டு செல்ல இதை நமக்கு அருளியிருக்கிறார். இவர் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராக இருக்கும் பொருட்டு தேவனால் அனுப்பப்பட்டவர். இவர்தான் கடைசி ஆதாமுமானவர். இவர் கடவுளின் புதிய மனிதன். இவருக்குச் சொந்தமான எல்லா விசுவாசிகளும் இவரைப்போல் மாறிக்கொண்டு போகிறவர்களாக இருப்பார்கள். இந்தப் பிரசங்கம் ஆச்சரியமும் அதிசயமுமானதொன்றாகும்.

இந்த மாபெரும் சத்தியத்தை நமக்கு அருளிச்செய்த ஆண்டவருக்கு எல்லா துதி ஸ்தோத்திரமும் உரித்தாகும். நம்முடைய பாவங்களைப் போக்க அவர் கிருபாதார பலியாக மரித்தார். “நாம் சகோதரரிடம் அன்பு கூருகிறபடியால், மரணத்தை விட்டு ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்” இவைகளையும் தவிர, நாம் அவருக்குச் சொந்தமாகிவிட்டோம் என்ற உண்மை நமக்கு நீதியின்மேல் எப்போதும் பசியும் தாகமும் இருப்பதால் தெளிவாகிறது. இப்படிப்பட்ட பற்பல அனுபவங்கள் மெய்யான விசுவாசிகளுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) ஏற்படும் காரணம் தேவன் அவர்களை சதா காலங்களிலும் வாழும் நித்திய மகிமைக்கு (மோட்ச ராஜ்யத்திற்கு) ஏற்றவர்களாக்க பரிசுத்த ஆவியானவர், இந்த உலக வாழ்க்கை முற்றுபெறுமுன், நம்மில் கிரியை செய்கிறார். இந்த வாழ்க்கையில் ஒருவனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது முற்றிலும் மறைபொருளாக இருந்தாலும் ஒன்று மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறது; அதுதான் அவனுடைய மரணம். இதனுடைய நிச்சயத்தைக் குறித்து யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை. அதே சமயம் மரணத்திற்குப்பின் நியாயத்தீர்ப்பு என்ற நிகழ்ச்சி இருப்பதைக் குறித்தும் வேதாகமத்தில் தெளிவாகப் படிக்கிறோம். இந்த இரண்டும் ஒவ்வொரு விசுவாசிக்கும், அவனை ஒரு அழியாத அருமையான அழகான மோட்ச வாழ்க்கைக்கு பக்குவப்படுத்தும் வகையில் அவன் மனதில் உறுதியாக இருக்கும். விசுவாசிகளாகிய நம்மைத் திடப்படுத்தும் இந்த நம்பிக்கையைத்தான் பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறார்: “அதினிமித்தம் நான் இந்தப்பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” 2 தீமோ 1:12.

மரண வெள்ளம் பொங்கினும்,

என் மாம்சம் சோர்ந்து போயினும்,

நியாயத்தீர்ப்புக் காலத்தில்,

எக்காள சத்தம் கேட்கையில்,

அஞ்சேன் என் மீட்பர் நீதியே

அநீதன் என்னை மூடுமே;

நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,

வேறஸ்திபாரம் மணல்தான்.

____________________________________

மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘Conclusion, Mt 7:28-29’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 30 of Vol 2 (pp 575-585), from: “Studies in the Sermon on the Mount”  By Dr. D. Martyn Lloyd-Jones.
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.

%d bloggers like this: