மரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20)
(“The Tree and the Fruit” Mt 7:15, 20)
By D. Martyn Lloyd-Jones
Tr. ஞான பக்தமித்திரன்
மரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20)
“கள்ளத் தீர்க்கதரிசி” என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே படித்த தியானத்தில் மேற்குறிப்பிட்ட வசனங்களைக் குறித்தே இதற்கு முன் நாம் தியானத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். அந்த தியானத்தில், இந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் தங்கள் உண்மை நிலை வெளியே தெரியாதபடி ஆட்டுத்தோலால் தங்களை மறைத்துக் கொண்டு வருவார்கள் என்றும் அதன் உள்ளான அர்த்தம், அவர்களிடையே நயமாகத் தோன்றக்கூடிய ஒரு தத்துவம் (the element of subtlety) இருக்கும் என்பதையும் விவரமாகப் படித்தோம். பலருக்கு இது ஒரு கடினமான பகுதியாக இருக்கக்கூடும், காரணம், இதே அத்தியாயத்தில் முதல் இரண்டு வசனங்களில் “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள், ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” என்று ஆண்டவர் எச்சரித்திருப்பதினால். ஆனாலும் நாம் தியானிப்பதற்கு எடுத்துக்கொண்ட வசனங்களும் நம்முடைய ஆண்டவரே கூறியிருப்பதால் நாம் இவற்றை தகுந்த விதத்தில் சந்தித்தாக வேண்டும்.
நம் ஆண்டவர் கூறியிருக்கும் சில காரியங்களைக் குறித்து இந்த கள்ளப் போதகர்களுக்கு சந்தோஷமாயிருக்காது. உதாரணமாக “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று பரிசேயரைக் குறித்து ஆண்டவர் சொல்லிருப்பதைக் குறித்து அவர்களுக்கு சற்று மனத்தாங்கல்தான் இருக்கும்; நாம் மற்றவர்களைக் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் வசனத்தில் கூறியிருக்கிற பிரகாரமாகத்தான் எதையும் கேட்கவும், விளங்கிக்கொள்ளவும், செய்யவும் வேண்டும். அதே சமயம் மற்றவர்களை குற்றப்படுத்துவதையும், நாம் எரிச்சலடைவதையும் தவிர்க்க வேண்டும், இதையும் மறந்துவிடக் கூடாது. இப்போது நாம் மலைப்பிரசங்கத்தைக் குறித்த உபதேசத்தை தியானித்துக் கொண்டு வருகிறோம். அதை மிகுந்த நேர்மையோடும் நடுநிலைமையோடும் சிந்திக்க வேண்டும். அப்படி செய்கையில் நாம் சில நியமனங்களை ஏற்படுத்திக்கொள்வதை (setting up a standard) தவிர்க்க முடியாது. அதன்படிதான், மற்றவர்கள் மட்டுமல்ல, நாமும் நியாயந்தீர்க்கப்படுவோம் என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
கர்த்தர் இங்கு கூறுவது, கள்ளத் தீர்க்கதரிசிகள் அவர்களுடைய கனிகளினாலே அறியப்படுவார்கள் என்று. மேலும் அவர் கூறுவது, நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்பதாகும். இந்த கூற்றை (statement)ஐ கவனிப்பதற்கு முன்னதாக இதில் உபயோகித்திருக்கும் “கெட்ட” என்ற அடைமொழி (adjective) இந்த சந்தர்ப்பத்தில் எதைத் தெரியப்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். “கெட்ட மரம்” என்று (“corrupt tree”) K J V மொழி பெயர்ப்பிலுள்ள ஆங்கில சொற்றொடரை குறிப்பதாக இருக்கிறது. இந்த இடத்தில் கெட்ட மரம் என்பது கெட்டுப்போன, சீக்குபிடித்த, உளுத்துப்போன மரத்தைக் குறிக்கவில்லை. அப்படிப்பட்ட மரங்களில் கனி என்று சொல்லும் அளவிற்கு கனி இராது. இந்த விவரத்தை கவனிக்கத் தவறிவிட்டால் ஆண்டவர் இதில் முக்கியப்படுத்தும் ஒரு காரியத்தை முழுவதுமாக இழந்துபோவோம். இது, இந்த தியானக் கட்டுரையின் ஆரம்பத்தில் “நயமாகத் தோன்றக்கூடிய ஒரு தத்துவம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தத்துவத்திற்கு இது ஒரு உதாரணம். இதிலே ஆண்டவர் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருவது, ஒரே மாதிரியே தோன்றும் இரண்டு மரங்களில் ஒன்றின் கனி மற்றொரு மரத்தின் கனிக்கு வித்தியாசமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் மரத்திற்கும் கனிக்கும் வித்தியாசமான அடைமொழி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் இரண்டிற்குமே ‘கெட்ட’ என்ற ஒரே சொல்லே உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. இந்த இடத்தில் ‘கெட்ட’ என்ற சொல்லினால் விவரிக்கப்பட்டிருக்கும் கனி ‘கெட்டுப்போன’ என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது; மாறாக, மட்டமான ருசியுள்ள, அல்லது அவ்வளவு விரும்பப்படத்தக்கதாக இல்லை என்ற அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தக் கனி, பார்வைக்கு விரும்பப்படும்படியான தோற்றம் உள்ளதாக இருந்தது. இங்கு ஆண்டவர் நம் கவனத்திற்குக் கொண்டுவரும் காரியம் என்னவென்றால் இரண்டு விதமான மரங்கள்; பார்க்கையில் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவைகளின் கனியும்கூட பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தோன்றவில்லை. ஆனால் அவைகளிலிருந்து கிடைக்கும் கனிகளின் தரம் மிகுந்த வித்தியாசமுள்ளதாக இருக்கிறது. ஒரு மரத்தின் கனி உபயோகிக்க விரும்பப்படத்தக்கது ஆனால் மற்றொன்று விரும்பப்படத்தக்கதல்ல. இந்த உதாரணத்தைக் கொண்டு உன்னதமானதொரு உண்மையை விளங்கிக்கொள்கிறோம். இந்த கருத்தை மனதில் கொண்டு, நம்முடைய வாழ்க்கையில், நாம் நடந்துகொள்ளும் விதம், நம் குணாதிசயங்கள் முதலியவைகளைப் பற்றிய விவரத்தை இங்கு கவனிப்போம்.
மொழி பெயர்ப்பாளரின் விளக்கம்
மரம், அதன் கனி என்ற உதாரணத்தை கர்த்தர் எடுத்துக்கொண்டது ஒரு ஆச்சரியமும், மிக உன்னதமுமான விளக்கமாகும். மிக அருமையான பழங்களை ஒரு மரத்தில் கட்டி வைப்பதல்ல. ஒரு சரியான மரம் சரியான கனியை தன்னைப்போல் கொடுக்கும். அந்த மரத்தின் குணாதிசயம் அதன் வேரிலிருந்து ஏற்படுகிறது. ஆகவே ஒரு கிறிஸ்தவனின் தன்மையை விளக்கிக்கூற வேறு எந்த உதாரணமும் இதற்குப் பொருந்தாது.
இதில் மிக ஆபத்தான நிலை, சிலர் தாங்களாகவே சில பண்புகளை சேர்த்துக்கொண்டு தங்களை கிறிஸ்தவர்களென்று நினைத்துக்கொள்ளுதல். கிறிஸ்தவம் செயற்கை முறையால் வருவதில்லை. இது இயற்கையாக ஏற்படுவது. அப்படி ஏற்பட்டால்தான் கிறிஸ்துவின் சாயல் நம்மில் ஏற்படும்; ஏற்பட்டு வளர்ச்சியுமடையும்.
இங்கு, ஆண்டவர் ஒரு தனிப்பட்ட மனிதனைக் குறித்துதான் இந்த முழு உபதேசத்திலும் பேசுகிறார். ஒருவன் எப்படி பேசுகிறான், எப்படி ஜீவிக்கிறான் என்பதில் இல்லை விஷயம்; அவன் வெகு அருமையாக போதிக்கலாம், ஜீவிக்கலாம், இருந்தாலும்கூட அவன் இரட்சிக்கப்பட்டவனாக இல்லாமலுமிருக்கலாம். இப்படி இருப்பவனைத்தான் கள்ளப்போதகன் என்று குறிப்பிடுகிறார்.
இப்படிப்பட்டவனாலே திருச்சபைக்கு மிகுந்த கேடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று சபை சரித்திரம் கூறுகிறது. பல, பல உதாரணங்களைக் கொண்டு கர்த்தர் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறார். இந்த உண்மையைத் திட்டமும் தெளிவுமாக கடைசி நேரத்திற்குள் சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால் மோசம் போய்விட நேரிடும். என்னதான் செய்ய வேண்டும்? என்று கேட்குமிடத்தில், ஆண்டவரின் பதில் ஆணித்தரமானது. அதாவது ஒரு உண்மை கிறிஸ்தவன், அவன் உள்ளத்திலும் அவன் சுபாவத்திலும் ஒரு புது சிருஷ்டிப்பாக மாற்றம் அடைகிறான். இதுதான் மறுபிறப்பின் தத்துவம். அப்படிப்பட்ட மறுபிறப்பின் அனுபவமில்லாத எவனொருவனின் ஊழியமும் அது எவ்வளவு மகத்துவமாயிருந்தாலும் அதை கடவுள் ஏற்றுக்கொள்ளுவதில்லை.
இந்த சமயம், “கர்த்தாவே! கர்த்தாவே!” என்ற உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோம். “உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்பார்கள். இதில் கர்த்தர் என்ன சொல்லித்தருகிறார் என்று விளங்கிக்கொண்டோமா? இங்கு ஒரு ஊழியன் கர்த்தருடைய நாமத்தில் மாபெரும் ஊழியங்கள் செய்திருக்கிறான். அவன் சரியான விதத்தில்தான் பிரசங்கங்கள் செய்திருக்கிறான். இவனைக் கள்ளப்போதகன் என்று அப்போது யாரும் சொல்லவில்லை. ஆனால் இவன் கள்ளப்போதகனாய்த்தான் இருந்திருந்திருக்கிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதேபோன்று, அப்படிப்பட்டவனின் போதகத்தில் மட்டுமல்லாமல், அவனுடைய ஜீவியத்திலும் அவன் குணாதிசயத்திலும் நடக்கக்கூடும். இந்த விதத்தில் கிறிஸ்தவம் ஒரு ஒப்பு உயர்வற்ற மதம். இதில் ஒன்றில்தான் ஒருவனின் பண்பு அவன் இருதயத்தைப் பொறுத்திருக்கிறது என்ற ஆச்சர்ய விதமான உண்மை தெரிகிறது. வேதாகமத்திலும் (Bible) ஒருவனின் உள்ளான மனநிலை அவன் இருதயத்திலிருந்து தெரியும் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தவிர அந்த மனநிலை நிச்சயமாக அவனில் வெளிப்படும்; அதை அவன் மறைக்க முடியாது. ஆனாலும், அவன் கள்ளப்போதகனாயிருந்தால் அவனின் உள்ளான, இரட்சிக்கப்படாத நிலையை மறைக்கப் பார்ப்பான். அதை மற்றவர்களால் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருப்பதற்கு முக்கிய காரணம் அவன் வேதாகமத்தில் கூறியிருப்பதற்கு விரோதமாக ஒன்றும் பேசமாட்டான். ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு அடுத்த சில முக்கிய காரியங்களை அவன் நாசூக்காக சொல்லாமல் இருந்துவிடுவான். இதிலிருந்துதான் அவன் கள்ளத்தீர்க்கதரிசி என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதை ஏற்கனவே படித்திருக்கிறோம். ஆனால் இந்த தியானத்தில் நாம் தெரிந்துகொள்வது, இந்த விதத்திலே, அவன் பேச்சில் மட்டுமல்லாமல் அவன் ஜீவியத்திலும் இவ்விதமே அவன் செய்வான். இதில் நமக்குத் தெரிய வேண்டியது, ஒருவனுடைய கொள்கையையும் அவன் ஜீவிக்கும் விதத்தையும் பிரிக்க முடியாது.
சிறிது நாளைக்கு ஏமாற்றலாம். வெளிவேஷம் அதிக நாள் செயல்படாது. 17ம், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பியூரிடன்ஸ் என்ற பக்திநிறைந்த கூட்டத்தார் இவ்விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பார்களாம். இவ்வித மாய்மாலக் கிறிஸ்தவர்களை இவர்கள் எப்படியோ கண்டுபிடித்துவிடுவார்களாம். அவர்களை “தற்காலிக விசுவாசிகள்” என்று அழைப்பார்களாம்! இவ்வித சம்பவங்கள் சமயா சமயங்களில் நடக்கும் எழுப்புதல் கூட்டங்களின் போது ஏற்படுவதுண்டு. எழுப்புதல் கூட்டங்களில் பரவசமடைந்து விசுவாசிகளாய் மாறி, சிறிது காலத்தில் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.
நல்ல கனியென்றால் என்னவென்பதை சற்று கவனிப்போம். இதை மற்றவர்களிடம் மட்டுமல்லாமல் நம்மையும் தற்சோதனை செய்து பார்க்க வேண்டும். இப்படியாக இதில் ஈடுபடும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது, பல கள்ளப்போதகர்கள் இடுக்கமான வாசலின் அருகே இருந்துகொண்டு திசை திருப்பப் பார்ப்பார்கள். “அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம், அகலமான பாதை வழியே சென்றால் தவறில்லை என்று ஊக்கப்படுத்துவார்கள். இவர்களை கண்டுபிடித்து இவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். அல்லது மோசம்போக நேரிடும். ஒரு விதத்தில் கிறிஸ்தவத்திற்கு பயங்கர ஆபத்து கிறிஸ்தவத்திற்கு விரோதமாய் செயல்படும் உலக மக்கள் இல்லை; அதற்குமாறாக, கிறிஸ்தவர்களைப்போல் தங்களை பாவித்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் நடமாடும் இவ்வித கூட்டத்தில் இவர்களும் சேர்ந்து செயல்படுவதே. தற்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு இடஞ்சலாக இருப்பவர்கள், இந்த உலகமக்களைப் போல் மாறிக்கொண்டு போகும் பேர்க்கிறிஸ்தவர்களே என்று கூறினால் மிகையாகாது. கிறிஸ்தவம் அதிகமதிகமாக சீர்குலைந்து போய்க்கொண்டிருப்பதற்கு காரணமே இப்படிப்பட்டவர்கள்தான். இதை “நாசூக்கான நயவஞ்சகம் என்று கூறலாம்.” இதை கண்டுபிடிக்க நாசூக்கான சில சோதனைகள்தான் பிரயோகப்படுத்த வேண்டும்.
இந்த சோதனைகள் இரண்டு விதம், (1) “பொதுப்படையானது” (2) “பிரத்தியேகமானது” என்று எடுத்துக்கொள்ளலாம். முதலாவது, பொதுப்படையானதை எடுத்துக்கொள்வோம்.
தன்னை ஒரு கிறிஸ்தவனாகப் பாவித்துகொண்டு இருப்பவனை எடுத்துக்கொள்வோம். அவன் நம் கவனத்தைக் கவரக்கூடிய எந்த தவறுதலான காரியத்தையும் சொல்ல மாட்டான். தவிர ஒரு ஒழுங்கு நிறைந்த வாழ்க்கை வாழ்பவனாகவும் காணப்படுவான். கிறிஸ்தவனல்லாத ஆனால் மிகவும் நல்ல பழக்க வழக்கமுள்ள இன்னொருவனையும் இவனோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒருவன் கிறிஸ்தவனாக தன்னை சொல்லிக்கொள்கிறவன், இன்னொருவன் கிறிஸ்தவனே இல்லை. ஆனால் இருவரும் ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளவர்கள். இவர்களில் வெளிப்படையாக யாதொரு வித்தியாசமும் இல்லாதவர்களாய்த் தெரிகிறது. இவர்களை எப்படி வித்தியாசப்படுத்துவது? சிலபேர் இயற்கையாக பிறவியிலேயே பல ஒழுங்குகளை உடையவர்களாயிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டால், அது கிறிஸ்தவமாகாது.
இன்னொரு சோதனை: ஒருவனின் நடத்தை (conduct), அவன் கொண்டிருக்கும் சில கொள்கைகளினாலா அல்லது அவனுடைய இயற்கையான நிலையினாலா என்ற கேள்விக்குப் பதில்: கடவுள் இல்லை என்கிறவர்களும்கூட மிக அருமையான ஜீவியம் செய்கிறார்கள். இவர்களை “அருமையான அஞ்ஞானிகள்” என்று அழைக்கலாம். இந்த “அருமையான அஞ்ஞானிகளுக்கும்”, கிறிஸ்தவர்களாக நடிப்போருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே இரட்சிப்புக்குப் புறம்பேயுள்ளவர்கள். ஆனால் இவர்களின் பிறவிக்குணமே மாறிப்போய், கிறிஸ்துவில் இவர்கள் புது சிருஷ்டிப்பாக இருந்தால்தான் இவர்களை மெய்யான கிறிஸ்தவர்கள் என்று கூறமுடியும்.
இந்த நிலையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியம், நாம் மற்றவர்களை குற்றமாய் பார்க்க ஆரம்பித்துவிடக் கூடாது. அது கர்த்தருக்கு விரோதமான பாவம். இதில் நாம் முக்கியமாக இந்த சோதனைகளை நம்மை நாமே தற்சோதனையாக செய்துகொள்வதே நல்ல முறையாகும். ஆனால் நாம் ஏமாந்துபோய்விடாமல் இருக்கும் ஒரு காரணத்திற்கு மட்டுந்தான் இவ்வித சோதனைகளை மற்றவர்களுக்கு உபயோகிக்கலாம்.
இந்த விதமாய் மாய்மாலக் கிறிஸ்தவர்களைக் கண்டுபிடிக்கும் இன்னொரு வழி, இவர்கள் இடுக்கமான வாசல் வழியாக செல்லமுடியாதவர்களாக இருப்பார்கள். மற்றபடி எந்த தவறுதலான பழக்க வழக்கங்களாலும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் உலகத்தை வெறுத்தவர்களாகவும் இருக்க முடியாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் இயற்கை குணம் மாறி, இவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக ஒரு புது சிருஷ்டியாகவும் இருக்கமாட்டார்கள். தன்னுடைய இயற்கை குணங்கள் அவை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அது கடவுள்முன் “அழுக்கான கந்தைபோல்தான் (ஏசா 64:6) இருக்கிறது” என்பதை இவர்கள் உணர்ந்திருக்கமாட்டார்கள். இப்படி தங்களுக்குள்ளாகவே, தங்களை தாங்களே கிறிஸ்தவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கை நிரந்தரமாக இராது. அவர்களுக்கு பாவத்தின்மேல் வெற்றியிராது. அவர்களால் இடுக்கமான வாசல் வழியாக போக முடியாது. உலக மனப்பான்மைக்கு எதிர்த்து ஜீவிக்கவும் முடியாது. ஆகமொத்தத்தில் தெளிவாக விவரிக்கக் கூடாத ஒரு ஆவிக்குரிய, பரிசுத்தத்திற்கடுத்த குறைவு இவர்களுக்கு இருக்கும்.
இதை வேறு விதமாக விஸ்தரிக்கக்கூடுமானால், இவர்களிடையே மலைப்பிரசங்க ஆரம்பத்தில் கூறப்பட்டிருக்கும் ஆவியில் எளிமை, பாவத்தைக் குறித்து துயரப்படுதல், சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், சமாதானம் பண்ணுதல், இருதயத்தில் சுத்தம் முதலியன இராது. இவை உண்மையான, மறுபிறப்பின் அனுபவம் அடைந்த கிறிஸ்தவனுக்கு மட்டுந்தான் இருக்க முடியும். ஒரு புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவனுக்கு, அடக்கம், அமைதி, மனத்தாழ்மை முதலியன இருப்பதைக் காணலாம். அவனுக்கு மூர்க்கத்தனமான, முரட்டுத்தனமான, தன்னடக்கமில்லாத குணங்கள் இருக்காது. கர்த்தருக்குள் மகிழ்ச்சி இவனில் இருப்பதைக் காண முடியும். பவுல் அப்போஸ்தலனைப்போல் “இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரி 5:4) என்று சொல்லிக்கொள்ளும் மனப்பான்மையில் இருப்பான். கொச்சைத்தமிழில் நாம் அடிக்கடி மற்றவர்கள் சொல்வதை கேட்டிருப்பதைப்போல் ‘பந்தா’ பண்ணும் மனப்பான்மை சற்றும் இல்லாதவன். சதா கடவுளுக்கடுத்த காரியங்களிலும், கர்த்தருடைய வசனங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவனாகவும் ‘இருக்கும் இடம் தெரியாமல் இருப்பான்’ என்ற வகையில் அமைதியுடன் இருப்பவனாகவுமுள்ள புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவனின் பண்பை இந்த மாய்மால கிறிஸ்தவனிடம் ஒருபோதும் பார்க்க முடியாது.
முடிவாக, நாம் வெகுவாக விரும்ப வேண்டிய குணம், நமக்கு தெய்வீக சுபாவம் ஏற்படவும், நம்மில் நல்ல கனி ஏற்படவும் இப்படிப்பட்ட காரியங்களில் அக்கரையும் ஆர்வமும் உடையவர்களாய் இருத்தல். இப்பேர்ப்பட்ட பண்புகள் மறுபிறப்பின் அனுபவம் ஏற்பட்டால் மட்டுந்தான் கிடைக்கும். இவற்றை நாமே ஏற்படுத்திக்கொள்ள இயலாது. மரம் நல்லதாக இருந்தால்தான் அதன் கனி நல்லதாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
____________________________________
மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘The Tree and the Fruit Mt 7:15, 16a’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 23 of Vol 2 (pp. 507-515), from: “Studies in the Sermon on the Mount” By Dr. D. Martyn Lloyd-Jones.
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.