பாவத்தை ஒழித்துக்கட்டுவது (மத்தேயு 5:29-30)
Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran
Mortification of Sin (Mt 5:29, 30)
நாம் பாவத்தை மகா அருவருப்போடும், அதை அறவே ஒழித்துக்கட்ட வேண்டிய அவசியத்தை உணரும் வகையிலும் காண கர்த்தர் விரும்புகிறார். இதில் இரண்டாவதாக கூறப்பட்டிருக்கும் கருத்தை (அதாவது பாவத்தை ஒழித்துக்கட்டுவதைக் குறித்து) இந்த தியானத்தில் ஆராய்வோம். “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதை பிடுங்கி எறிந்துபோடு” என்று கூறப்பட்டிருக்கும் போதனையில் கர்த்தர் மூன்று காரியங்களை ஒரே நேரத்தில் கற்றுக்கொடுக்க ஆவலாய் இருக்கிறார். ஒன்று, பாவத்தின் பயங்கரப் பண்பு, மற்றொன்று பாவம் ஒரு மனிதனை எவ்வளவு பயங்கர விளைவுக்குக் கொண்டுபோகக்கூடும், மூன்றாவது அப்படிப்பட்ட குணம் படைத்த பாவத்தை நாம் ஒழித்துக்கட்டத் தவறினால் அது நம்மையே ஒழித்துக்கட்டிவிடும் என்பதாகும்.
கர்த்தர், “கண்ணைப் பிடுங்கி எறிந்துபோடு” என்று கூறும் யோசனையை அவர் மிக ஆழ்ந்த கருத்தோடு சொல்வதை கவனிக்கத் தவறக்கூடாது. இதை விளங்கிக்கொள்ள என் யோசனை பின்வருமாறு:- ஒரு மனிதன் மிக அதிகமாக மதிக்கும் சாதனம் தன்னுடைய கண். இதை ஆண்டவர் உதாரணமாக எடுத்துக் கொண்டு, அவன் தன் கண்ணையே இழக்கத் தயாரானால் அதற்கு ஒரு தகுந்த முகாந்திரம் இருக்க வேண்டுமல்லவா; அந்த முகாந்திரத்தை அவனுக்கு விளங்கப்பண்ணுகிறார். அது அவனுக்கு தெரியாமலிருந்தால், மற்றவர்கள் யாராவது தெளிவுபடுத்தினாலொழிய அதைத் தெரியாமலுமிருக்கலாம் அல்லவா.
இங்கு கர்த்தர் நமக்கு விளங்க வைப்பது என்னவென்றால், ஒரு மனிதன், தன்னுடைய கண்ணுக்கொப்பான எந்த அருமையான ஒரு பொருள் இருந்து, அந்த பொருளே அவனை பாவத்தில் சிக்கவைக்கக் காரணமாய் இருக்கும் பட்சத்தில் அவன் அதை எறிந்துபோட தயங்கக்கூடாது என்பதுதான் இதன் கருத்து. ஆனால் அப்படி செய்வது அவனுக்கு சிறிதும் லேசான காரியமாக இராது என்பதும் தெளிவாகிறது. இது ஆண்டவருக்குத் தெரியும். ஆனால் அப்படி செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று ஆண்டவர் கூற வேண்டுமானால், அதிலிருந்து நமக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால், பரிசுத்தம் எந்த அளவிற்கு முக்கியம் என்பதும், பாவம் நம்மை எந்த பயங்கர நிலைக்குக் கொண்டுபோகவல்லது என்பதையும் ஆண்டவர் நமக்கு இங்கு சொல்லிக்கொடுக்க முயற்சிக்கிறார் என்பதே.
அப்படியானால் நாம் பாவத்தைக்குறித்து என்ன செய்யலாம் என்பதை இப்போது தியானிப்போம். பாவம் என்பது நாம் செய்யும் கிரியையில் மட்டும் இல்லை; நாம் பாவத்தில் விழுந்த காரணத்தினால், நம்முடைய இருதயத்திலேயே ஏற்பட்டிருக்கும் தீய சக்தி ஒன்று நம் இருதயத்திலேயே அநேக பாவ விபரீதங்களை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதைப் பற்றிய அறியாமை, பாவத்தின் தன்மையைக் குறித்து நமக்குள்ள அரைகுறையான அறிவு, பரிசுத்தம் என்றால் என்ன என்பதைக் குறித்து சரியாக விளங்கிக்கொள்ளாத காரணம், இவையெல்லாம் ஒருங்கே சேர்ந்து நம்முடைய பரிசுத்த வளர்ச்சிக்கு (Progress in) ஒரு பெரும் இடையூறாக இருந்துகொண்டுவருகிறது. இவ்வித பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் சாத்தான் பல கள்ளப் போதகங்களை, (பணப் புழக்கத்தில் கள்ள நோட்டு இடையூறு நடு நடுவே ஒரு தேசத்தின் பொருளாதார நிலையை சீர்குலைய செய்யப் பார்ப்பதுபோல்) ஏற்படுத்தும் ஆபத்து ஏற்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சபைக்குள்ளே இடை இடையே தலைதூக்கும் கள்ளப்போதகங்களில் ஒன்று ஆன்டிநோமியநிசம் (antinomianism) என்று பெயர் கொண்டது. (அதாவது இரட்சிப்புக்கு விசுவாசம் இருந்தால் போதுமானது; பாவத்தைக்குறித்து அதிகக் கவலைப்படத் தேவையில்லை; விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; கிருபையினால் இரட்சிக்கப்பட்ட மக்கள் பாவத்தைக் குறித்து அதிகமாகக் கவலைப்படுவது, விசுவாசக் குறைவினாலேயே) என்ற போதனையைக் கொண்டுவருவது. இதற்கு நேர் மாறான இன்னொரு கள்ளப்போதகம் ‘இரட்சிப்புக்கு பாவமில்லாத ஜீவியம் அத்தியாவசியமானது. கிறிஸ்து இவ்வுலகில் ஜீவித்ததைப்போல் நாமும் ஜீவிக்காவிட்டால் மோட்சம் சேரமுடியாது’ என்ற போதகம்; ஆங்கிலத்தில் இதை “Perfectionist Movement” என்று அழைக்கப்படுகிறது. இவற்றைத் தவிர இன்னும் அநேக கள்ளப் போதகங்கள் சபைகளில் இருந்துகொண்டு வந்திருப்பதற்கு சபை சரித்திரம் சான்றாக இருக்கிறது.
இவை யாவற்றிற்கும் மூல காரணம் வேதாகம அறிவு குறைவும் வசனங்களை சரியாக விளங்கிக்கொள்ளாததுமே. மேலும் நாம் கவனிக்கத் தவறும் இன்னொரு முக்கியமான காரியம் ஒருவனுடைய ஆவிக்குரிய நிலைமையை அவனுடைய வெளிப்படையான கிரியையினால் மட்டுமே நிர்ணயிக்க முடியாது என்பது. அவன் பாவமே செய்யாதவனாக தோன்றினாலும் அவன் பாவ நிலையில்தான் இருக்கிறான் என்பது நமக்குத் தெரிய வேண்டும். பாவ நிலைக்கும், கிரியையினால் வெளிப்படும் பாவங்களுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும். முந்தினது பாவத்தை தூண்டும் கருவியாகவும் மற்றொன்று கிரியையினால் பாவமாய் வெளிப்படுகிறதுமாய் இருக்கிறது. இப்படியிருக்க, பாவத்தை பெரிய பாவம், சிறிய பாவம் என்று தரப்படுத்துவது ஆபத்தானதும் மதியீனமுமாகும். ஒரு விதத்தில் அதிலும் சற்று உண்மை இருக்கலாம் என்று எடுத்துக்கொண்டாலும், அவ்வித பாகுபாடு ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடுமாதலால் அப்படி செய்வதை விட்டுவிட வேண்டும். பாவம், பாவமே, எப்பொழுதும் அது பாவமே. இதைத்தான் நமக்கு விளங்கவைக்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். உதாரணமாக விபசாரம் என்ற பாவத்தை எடுத்துக்கொண்டால், அதில் நமக்குத் தெரிய வேண்டியது, அது கிரியையினால் மட்டும் அல்லாமல் சிந்திப்பதினாலும், இருதயத்தில் ஏற்படும் இச்சையினாலும் பாவமாய் உருவாகிறது. இதைக்குறித்த தாற்பரியத்தை ஆலோசிப்பதில் இப்போது நாம் ஈடுபடுவோம். பாவம் எவ்வளவு பயங்கரமானது என்று தெரிந்துகொண்டோம் ஆகவே எல்லாவற்றையும் தேவனுடைய கோணத்தில் (in terms of the Son of God) ஆலோசிப்போம். அதாவது கர்த்தர் இவற்றை எப்படி காண்கிறார், இவை உலகில் அவருடைய ஜீவியத்தையும், ஊழியத்தையும் எப்படி பாதித்தது என்பதான விவரங்களை தெரிந்துகொள்வது முக்கியமாகும். அந்த விதத்தில்தான் நாம் பாவத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும். அப்படியில்லாமல், நம்முடைய எண்ணத்தின்படி, நம்முடைய நடத்தை, நம்முடைய குணாதிசயம், நம்முடைய மனப்பான்மை போன்றவைகளின் அடிப்படையில் பாவத்தை எண்ணினால், பலர் தங்களை குற்றமற்றவர்கள், நீதிமான்கள் என்று எண்ணிவிடும் ஆபத்து இருக்கிறது. சிலர் “நாங்கள் இந்த அந்த தவறுகளை செய்யவில்லை” என்று திருப்தி அடைந்து, இந்நிலையைக் குறித்து ஆண்டவர் சந்தோஷப்படுவார் என்று தங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் தேவகுமாரன் வானத்திலிருந்து இங்கு வந்ததற்கு மூல காரணமே, அவர்கள் நடப்பிக்கும் பாவங்களுக்காக மட்டுமல்ல, (அவர்கள் தாங்கள் யாதொரு பாவங்களும் செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தாலும்), அவர்கள் தங்களைக் குறித்து எண்ணிக்கொண்டிருக்கும் அந்த நிலையே தவறு என்று கடவுளுக்குத் தெரியுமாதலால், அப்படிப்பட்டவர்களையும் மாற்றி இரட்சிக்கும்படியாகவும், மனிதனுடைய பிறவிநிலையே பாவமாயிருப்பதினால் அதிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டாகவும் இங்கு வந்தார். அதுமட்டுமல்லாது அவர்களுடைய பாவங்களையும், அவர்களுக்கு வரவேண்டிய தண்டனையையும், தானே தன்மேல் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், தன்னைக் கொடூரமாக கொலை செய்யப்படவும் ஒப்புக்கொடுத்து, கிருபாதார பலியாக இரத்தஞ்சிந்தி மரித்து, இவ்விதமாக பாவத்திற்கு பரிகாரம் செய்தார். வேறு எந்தவகையிலும் அவரால் இவற்றை செய்யக்கூடாமலிருந்திருப்பதையும் நாம் உணரவேண்டும். இம் மாபெரிய காரியத்தை செய்யக் காரணமாயிருந்தது கர்த்தரின் பேரன்பே. ஒப்பற்ற கர்த்தரின் இப்பேரன்பே, நாம் பரிசுத்தப் பாதையில் செல்வதற்குரிய ஆவல் நமக்கு ஏற்பட முக்கிய தூண்டுதலாயிருக்க வேண்டியது.
தவிர, இவ்வித பயங்கரமான, படுபாதகமான சம்பவங்கள் இயேசு இரட்சகருக்கு நடந்ததற்கு காரணமாயிருந்தது இந்த அருவருப்பான பாவமே என்ற உண்மை நமக்குத் தெரியும்வரை இந்த பாவத்தைப்பற்றிய வெறுப்பு நமக்கு ஏற்பட முடியாது.
அடுத்தபடியாக நமக்குத் தெரிய வேண்டியது. ஒருவனின் ஆத்துமாவும் அதன் எதிர்காலமுமாகும். இங்கு இந்த ஆசிரியர் ‘ஆத்துமா’ என்ற சொல்லை உபயோகிக்கையில், இதைத் தத்துவ சாஸ்திர ரீதியில் ‘சரீரம், ஆத்துமா, ஜீவன்’ என்பது போன்ற பாகுபாட்டை மனதில் கொண்டுவர வேண்டாம். அப்படிப்பட்ட பாகுபாடு வேதாகமத்தில் தெளிவாக கூறப்படாதிருந்தாலும் அநேக எழுத்தாளர்கள் அதை மிகைப்படுத்தி விவரித்திருப்பதை அநேகர் படித்திருக்கலாம். அதைப் பற்றிய விவரம் வேதாகமத்தில் போதுமான ஆதாரத்தோடு இல்லாத காரணத்தால் அந்த பாகுபாட்டை இங்கு மனதில் கொண்டுவர வேண்டாம். வேதாகமத்தில் ‘ஆத்துமா’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து இடங்களிலும், மனிதனின் மரணத்திற்குப்பின், அவனுக்குக் கிடைக்க இருக்கும் ஒரு அழியாத சரீரத்தைதான் குறிப்பிடுகிறது என்பதை ஞாபகத்தில் வைக்கவும். அந்த அழியாத சரீரத்தைதான் இங்கு ஆசிரியர் ‘ஆத்துமா’ என்று குறிப்பிடுகிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.
இந்த ஆத்துமாவைக் குறித்த போதனையை ஆண்டவர் சொல்லிக்கொடுக்கும்போது மனிதனின் அவயவங்களில் ஒன்றான “கண்ணை” உபயோகிக்கிறார். “உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்றான கண்ணை இழந்து போவது உனக்கு நலமாயிருக்கும்” என்று ஆண்டவர் கூறுகிறார். இதைக் கேட்க அதிர்ச்சி தரும்படியாக இருந்தாலும், இதற்குரிய போதகத்தில், ஒருவனின் ஆத்துமாவைக்குறித்து ஒரு அற்புதமான உண்மையை தெளிவுபடுத்துகிறார். ஆத்துமா மனிதனுக்குள்ள விலைமதிக்கமுடியாத ஈவு. இதற்கு ஒப்பிடத்தக்கதான எதுவும் மனிதனிடம் இல்லை. நித்தியமாய் ஜீவிக்கக்கூடிய தன்மை இந்த ஆத்துமாவில் மறைந்து பொருந்தியிருக்கிறது. இது இல்லாவிட்டால் மனிதன் இல்லை. அந்த அளவிற்கு அது முக்கியம் வாய்ந்தது. இந்த ஆத்துமா, அவனுடைய கண்ணினாலேயே அக்கினிக் கடலில் சதாகாலங்களிலும் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கநேரிட்டால் அந்தக் கண்ணையே பிடுங்கிப்போட அவன் ஒருபோதும் தயங்கமாட்டானல்லவா? அதைத்தான் கர்த்தர் இங்கு சொல்லுகிறார். இக்காலத்து வைத்தியர்கள் வலிக்காமலேயே கண்ணை எடுத்துவிட முடியும்; ஆனால் என்ன பயன்? வலது கண்ணை எடுத்துவிட்டால் இடது கண்ணால் பாவம் செய்யமுடியாதா? அல்லது கண்களே இல்லாவிட்டாலும் பாவத்தை ஒருவனால் மேற்கொள்ளமுடியுமா? முடியாது என்பது ஆண்டவருக்கு தெரியாத காரியம் இல்லை. ஒரு மாபெரும் உண்மையை வலியுறுத்தவே ஒரு உருவக அணியாக (metaphorically) அவர்களுக்கு இதை போதிக்கிறார். இதில் ஆண்டவர் கூற இருக்கும் உன்னதமான உண்மையை நழுவ விட்டுவிடக்கூடாது. இவ்வுலகில் மனிதருக்கு உள்ளும் புறம்பும் அநேக காரியங்கள், கண்களைப்போன்று மிக அருமையானதும், ஒழுங்குள்ளதும், மிக பயனுள்ளதுமாக இருக்கின்றன. அப்படி இருந்தும், அவைகளே, ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது’ என்ற பழமொழிக்கொப்ப, அவன் ஆத்துமாவை நரகத்தில் தள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும் சமயமும் ஏற்படுத்தக்கூடும். அப்படி ஏற்படுத்தும் பட்சத்தில் (அந்த கண்களைப்போல அருமையானது எதுவோ) அது எவ்வளவு அருமையாக அவனுக்கு இருந்தாலும் அதைக்கூட அப்புறப்படுத்தத் தயங்கக்கூடாது என்று மானிடரையே சிருஷ்டித்த கர்த்தரே கூறும்போது அந்த எச்சரிப்பு எவ்வளவு விலையேறப்பெற்றது என்று யூகித்துப்பார்ப்போம். இதைப்போன்ற இன்னொரு ஆச்சரியமான உதாரணத்தையும் ஆண்டவர் உபயோகிப்பதை இங்கு குறிப்பிடுவது ஏற்றதாயிருக்கும். அதாவது, “யாதொருவன் என்னிடம் வந்து, தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரனையும், தன் ஜீவனையும் கூட வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாய் இருக்கமாட்டான்” (லூக்கா 14:26) என்று கர்த்தர் கூறுகிறார். இதன் பொருள் விளங்குகிறதா? அதாவது நமக்கும் தேவனுக்கும் இடையில் எந்த தடைகள் ஏற்பட்டாலும் அவைகளை பல்லி விழுந்த பாலைப்போல தூக்கி எறிந்துவிடு என்கிறார் தேவன். அவை நமக்கு எவ்வளவு விலையேறப்பெற்றதாக இருப்பினும் அதை விலக்கிப்போடத் தவறினால் அது நம் ஆத்துமாவுக்கு, அதாவது நம்முடைய உயிருக்கே உலை வைத்துவிடும். நமக்கு அருமையானவர்களுக்கு நம் உயிரையும் கொடுக்க நாம் தயராக இருக்கலாம். ஆனால் அது வேறு; அந்த உயிரைப் பற்றி இங்கு ஆண்டவர் பேசவில்லை. அவர் இங்கு நமது ஆத்துமாவைப் பற்றி தெளிவுபடுத்துகிறார். ஆத்துமா நரகம் சென்றுவிட்டால் அங்கிருந்து சதாகாலமும் தப்பிக்கமுடியாது. அங்கு அவர்கள் புழு சாகாது, அக்கினி அவியாது. அந்த பயங்கரம் நமக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. ஆகவேதான் அன்புள்ள கர்த்தர் அதிக கரிசனையோடு இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறார். தாய் தகப்பனை நேசிக்கவேண்டும் என்று ஆண்டவர்தானே நமக்கு சொல்லிக்கொடுத்தார். நம் விரோதிகளைக்கூட நேசிக்கவேண்டும் என்று அவர்தானே கற்றுக்கொடுத்தார். இவைகளைக்கூறிய அதே தேவனின் திருவாய் வழியாக இப்படிப்பட்ட உபதேசம் வர வேண்டுமானால் அது எத்தகையது என்று மதிப்பிடக்கூடிய அறிவு நமக்கு இருக்க வேண்டும். உன் ஆத்துமாவையே இழந்துவிடாதே என்று இரட்சகர் கூறும்போது அவருக்கு மனிதர்மேல் இருக்கும் அன்பிற்கும், அக்கறைக்கும் அளவிட முடியுமா?
நாம் அவசரமாக தெரிந்துகொள்ளவேண்டியது, நமக்கு எவ்வளவு அருமையும் பெருமையுமான சாதனங்கள் இருந்தாலும், அவைகள் நம் உயிருக்கே (அதாவது ஆத்துமாவுக்கே) உலை வைக்க முயன்றால் அவைகளால் நமக்கு என்ன பயன்? இப்படி ஏற்பட காரணம் பாவமே என்று ஆசிரியர் ஞாபகப்படுத்துகிறார். இந்த பாவம் ஒரு விஷம் போன்றது. கவனக்குறைவாக இருந்தால் இந்த விஷம் எந்த நல்ல ஈவுகளையும் விஷமாக்க எத்தனிக்கும். பாவம் குறுக்கிடாதவரை அனைத்துக்காரியங்களும் அருமையானதே. தேவன் உண்டுபண்ணின சகலமும் அருமையும் பெருமையுமானதுதான். ஆனால் பாவம் பிறவாதிருக்கும் வரைதான். ஆனால் பாவம் உலகெங்கும் பரவிவிட்டதால் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதன் சாராம்சம்தான் பவுல் அப்போஸ்தலன் தீத்து 1:15ல் லாவகமாக எடுத்துரைக்கிறார். ஆம், நாம் சுத்தமான மனசாட்சியுடன் பிறக்கவில்லையே! அதினாலேயே இப்போது நாம் கவலையோடும் கவனத்தோடும் இவற்றை தியானிக்கிறோம்! கர்த்தர் நமக்கு கிருபையாகக் கொடுத்த ஆத்துமா விலையேறப்பெற்றது என்று இதைப்பெற்றிருக்கும் நமக்கும் தெரிந்திருக்கவேண்டியது; ஆனால் தெரியவில்லையே! அதையும் அவரே இவ்வளவு கரிசனையோடு கற்றுக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. இதைக் கற்றுக்கொள்ளவாவது நாம் ஆர்வமாய் இருக்கவேண்டுமல்லவா! இந்த அரிதிலும் அரிதான பொக்கிஷமாகிய ஆத்துமாவுக்கு எவ்விதத்திலும் தீங்கும் (பங்கமும்) ஏற்படாத வகையில் நம் ஜீவியம் முழுவதையுமே ஒழுங்குபடுத்துவது அத்தியாவசியமல்லவா? ஆகவேதான் அடிக்கடி தற்சோதனையும், இவ்வித எச்சரிப்புகளும் எப்போதும் நம் மனதில் இருக்கும்படியான வசதிகளை செய்துகொள்ளத் தவறக்கூடாது.
இந்த ஆத்துமாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே “கண்” உதாரணத்தை எடுத்திருப்பது எவ்வளவு ஞானமுள்ளதும் ஆச்சரியமுமாக இருக்கிறது என்று பாருங்கள். நமக்கு அருமையான குழந்தைகளை கொஞ்சும்போது “என் பொன்னே” என்று மட்டுமல்ல “என் வைரக்கல்லே” என்றுகூட இல்லை “என் கண்ணே” என்றுதான் அதோடு சேர்த்துக்கொள்ளுகிறோம். அவர் போதிக்கையில் அந்த ஆத்துமா அப்படிப்பட்ட கண்ணையும் விட விலையேறப்பெற்றது என்று அவர் விவரிக்கும்போது அப்போதாவது நமக்கு விளங்கவேண்டியது, அப்படிப்பட்ட ஆத்துமாவை அவனவன் பொறுப்பில் விட்டிருக்கிறார், வேறு என்ன? ஒரு அயலானிடமா அதை ஒப்புக்கொடுக்க முடியும்? ஒருவனுடைய ஆத்துமாவைப்பற்றி அவனுக்கே கவலையில்லை என்றால் என்ன சொல்லுவோம்? மேலும் அதைப் பாழாக்க இரவும் பகலும் பிரயாசைப்படும் பாவத்தினிடமே அவன் தோழமையாய் இருந்தால் அதைக்குறித்து என்ன சொல்லுவோம்?
நாம் இந்த உலகில் வாழும் நோக்கமே இந்த ஆத்துமா பழுதுபடாமல் பார்த்துக்கொள்வதே என்று இதுகாறும் அவனுக்கு விளங்கியிராவிட்டால் அதைக்குறித்து என்ன சொல்லுவோம்? “தருணம் தப்பினால் மரணம்” என்பது பழமொழி. ஆனால் இங்கோ தருணம் தப்பினால் சதாகாலங்களிலும் அக்கினிக் கடலாயிற்றே!
இந்த உலகில் நமக்கு வேறு பொறுப்புகள் இல்லை என்று கூறவில்லை. ஆம், நமக்கு பல பொறுப்புகள் உண்டுதான். ஆனால் தன் ஆத்துமா பேரின்பம் அடைய, முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அதனுடைய நீதியையும் தேடாதவனுக்கு இவ்வுலகில் ஜீவிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. இப்படியிருக்க இந்த விலையேறப்பெற்ற ஆத்துமா, சதாகாலங்களிலும் இருக்கவேண்டிய ஆத்துமா, இதை அலட்சியப்படுத்திவிட்டு, நிச்சயமாக அழிந்துபோகும் பொருளுக்காக அவன் தன் நேரத்தையும், பொருளையும், தன் பெலத்தையும் செலவழித்துக் கொண்டிருந்தால் இதைவிட பரிதபிக்கத் தகுந்த காரியங்கள் ஏதாவது இருக்க முடியுமா? இதை வலியுறுத்துவதற்காகத்தான் கர்த்தர், “ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தனது ஆத்துமாவை இழந்துபோனால் என்ன பயன்?” என்று அங்கலாய்ப்போடு கூறுகிறார் (மத்தேயு 16:26). அதோடு ஒரு அருமையான எச்சரிப்பும் அருளுகிறார். அதாவது “ஆத்துமாவைக் கொல்லவல்லவர்களாயிராமல், சரீரத்தை மட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்,” ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே தள்ள வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத்தேயு 10:28).
இதற்கு அடுத்ததாகத் தெரிய வேண்டிய கருத்து, பாவத்தை எட்டிக்கசப்பாக பகைக்க கற்றக்கொள்ளுதல்; அதாவது நம்மில் வாசமாயிருக்கும் பாவத்தை அழிக்க, ஒழித்துக்கட்ட, என்னென்ன முயற்சிகள் எடுக்க முடியுமோ, அனைத்தையும், வீட்டில் நுழைந்த நல்ல பாம்பை அழிக்க முயல்வதுபோல, காலத்தை வீணாக்காமல் முற்படுவது; வேறுவடிவில் கூறுவோமானால் அதை அறவே சங்காரம் செய்யும் நோக்கத்தோடு திட்டங்கள் வகுத்து ஒரு யுத்தத்தில் எதிரிகளை கூட்டோடு அழிக்க முயற்சி செய்வதைப்போல் முழுமூச்சாக செயலில் இறங்குவது.
இதையடுத்து செய்ய வேண்டிய காரியம், நம் இருதயத்தை பரிசுத்தமாய் இருக்கும்படியாக செய்யவேண்டிய கடமைகளை செய்ய முற்படுதல். சில தவறுதலான கிரியைகளை செய்யாமலிருப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், இருதயத்திலேயே ஏற்படும் இச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படவேண்டும். இருதயத்திலே ஏற்படும் எவ்வித கசப்போ, வெறுப்போ, பொறாமையோ, பொருளாசையோ, பகையோ, அசுத்த எண்ணங்களோ இல்லாமல் அதற்குப் பதிலாக அன்பும், இரக்கமும், பொறுமையும், போதுமென்ற மனமும், சமாதானமும், பரிசுத்த எண்ணங்களும் இருதயத்தை நிரப்பும்படி செய்ய வேண்டும்.
சுவிசேஷ திருச்சபைகளில் இருப்பவர்களில்கூட சிலருடைய மனப்போக்கு சரியில்லை. அவர்கள் தங்களை, “மற்ற சபையினரைப்போல் வேதாகம அறிவில் குறைவானவர்கள் இல்லை; எங்கள் போதக அறிவு அநேக சபைகளைவிட மேம்பட்டது” என்பது போன்ற பெருமையுள்ளவர்களாகவும், தன்னயமான தவறான பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும், ஆவிக்குரிய வளர்ச்சியில் மிகவும் குறைவுபட்டவர்களாய் இருப்பதையும் ஆங்காங்கே காணமுடிகிறது. இவர்கள் உள்ளூர நீதியின் உச்சத்தை அடைந்தவர்கள் மாதிரி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி யாரும் எண்ண முற்பட்டால் அவர்கள், தங்கள் இருதயம் எவ்வளவு பாவம் நிறைந்தது என்ற உண்மையை அறியாதவர்கள் என்றுதான் அர்த்தப்படும். கடைசியாக கவனிக்கப்படவேண்டிய கருத்து, பாவத்தை ஒழித்துக்கட்டுதல் (mortification of sin) என்ற தத்துவம், “உன் வலது கரம் இடையூறாக இருந்தால் அதை வெட்டிப்போடு” என்ற போதனையின் அடிப்படையில் கவனித்து செயல்படவேண்டும். இதை அனுசரித்து வெற்றி பெற்றவர்களில் ஒரு வகுப்பினர் பியூரிட்டன்ஸ் என்று பேர்கொண்ட 17ம், 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் பின் அமெரிக்காவிலும் வசித்த விசுவாசிகள். இந்த போதனையைக்குறித்து ஜான் ஓவன் (John Owen) என்ற பியூரிட்டன் எழுதிய புத்தகம் மிகச் சிறப்பானது. இது நிற்க, பாவத்தை ஒழித்துக்கட்டுதல் என்பதின் தத்துவமாவது என்ன? இதை தவறுதலாக விளங்கிக்கொண்டவர்கள், சரியானபடி விளங்கிக்கொண்டவர்கள் என்று இரு பிரிவினர் உண்டு. ஒன்று, மடாலயங்களில் வசித்து தங்களையே வதைத்துக்கொண்டு, கடவுள் அதைக்கண்டு சந்தோஷமடைவார் என்ற மனப்பான்மையில் ஜீவிப்பவர்கள். இந்த அடிப்படையில் சிலர் அதிக ஆர்வமும், சில சபைகளில் இவைகளை மத்திபமான அளவில் அனுசரிக்கிறவர்களாகவும், மற்றும் சிலர் இதில் சிறிதாவது நம்பிக்கை வைத்து சரீரத்தை ஒடுக்குவது, அதின் வாயிலாக பரிசுத்தம் அடையலாம் என்றும் நினைப்பவர்கள். இது மிகவும் தவறுதலான முறையாகும்.
ஆனால் இதைக்குறித்த சரியான வழி என்ன என்று பார்ப்போம்: வேதாகமத்தில் இதைப்பற்றி கூறியிருக்கும் வசனங்களை நமக்கு முன்வைத்து, அதை கவனமாக படித்து, அவைகளில், அடையாளமாக, அல்லது உருவக அணியாக (metaphorically) சொல்லப்பட்டவைகள் எவை, அதன் அடிப்படையில் அதன் முக்கிய கருத்து என்ன, என்பவைகளை கடவுள் கொடுத்த பொது அறிவைக்கொண்டும், பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தைக் கொண்டும் பகுத்தறிய வேண்டும். அவைகளையும் தவிர, இவைகளை நம் பார்வையில், நம்முடைய தன்னயமான, நமக்கு ஏற்றதாக அதைப் பார்க்காமல், அதை ஏற்கனவே குறிப்பிட்டபடி, இயேசு இரட்சகரின் பார்வையில் அதின் வழிவகைகளை நிர்ணயிக்க வேண்டும். இது சம்பந்தமாக கவனிக்கவேண்டிய முக்கிய வசனங்கள்:
ரோமர் 8:13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; (அக்கினிக்கடல் சென்றுவிடுவீர்கள்) ஆவியினாலே (பரிசுத்த ஆவியானவரின் உதவியினால்) சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
1 கொரிந்தியர் 9:27
மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணும் நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடி, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
இந்த இரண்டு வசனங்களிலும் கோடிட்ட பதங்களை கவனிக்கவும், “அழித்தல்”, “சரீரத்தை கீழ்படுத்துகிறேன்”, இவை இரண்டும், கிரேக்க மூலபாஷையில், ஒரு உக்கிரமான குத்துச் சண்டையில் ஒருவனையொருவன் ஆக்ரோஷமாக குத்திக்கொள்ளும் செயலைக் குறிப்பதாக இருக்கிறது. இருவர் முகமுமே இரத்த விளாறாக இருந்தாலும், அநியாயத்தை அனுபவித்தவனுக்கு வலி ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் அவன் அனுபவித்த அநியாயமும், அதற்கு பழிவாங்குதலுமே அவனுக்கு பிரதானமாய் இருப்பதால். இதை ஆவிக்குரிய வகையில் ஒரு உருவகமாக எடுத்துக்கொண்டு, விலையேறப்பெற்ற தன் ஆத்துமாவையே பாழக்க முயலும், தன்னில் நிலைகொண்டிருக்கும் பாவத்தோடு ஒருவித ஆக்ரோஷத்தோடு ஒரு விசுவாசி போராடுகிறானா என்பதுதான் கேள்வி. இது சம்பந்தமாக பவுல் அப்போஸ்தலன் நமக்கு கொடுக்கும் யோசனைகளில் ஒன்று, ரோமர் 13:14 என்ற வசனத்தில் எழுதியிருக்கிறபடி “துர் இச்சைகளுக்கு இடமாக உன் உடலைப் பேணாதிரு” என்பது. இதையடுத்து கொலோ. 3:5ல் “விபசாரம் அசுத்தம் . . . இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்” என்ற வசனத்தையும் நம் ஜீவியத்தில் அனுசரிக்க கவனம் செலுத்தவேண்டும். அதாவது பரிசுத்த ஆவியானவரின் பெலனும் ஒத்தாசையுடனும் இதை செய்ய முற்பட வேண்டும்.
இதற்கு ஆசிரியர் கூறும் சில வழிகளை ஆராய்வோம். முதலாவது, இதைப்பற்றி தவறான விளங்குதலை விட்டுவிட வேண்டும். அதாவது, தங்கள் உடலையே துறவிகள் போன்று துன்புறுத்திக்கொள்வது. இதைத்தான் பவுல் அப்போஸ்தலன் கொலோ. 2:23ல் வன்மையாகக் கண்டிக்கிறார். ஆனால் அதே சமயம் மாமிச குணத்தை திருப்தி செய்யும் அனைத்து காரியங்களையும் அறவே ஒழித்துக்கட்ட தவறக்கூடாது என்பதையும் அவர் தெளிவாகக் கூறுகிறார். இதை எந்த அளவிற்கு கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு அறிவும், அனுபவமும், கர்த்தருடைய வசனமும், விசுவாச ஜீவியத்தில் தேர்ச்சிபெற்ற பெரியோரின் அறிவுரைகளை பயன்படுத்திக்கொள்வதும் முக்கியம். இது சம்பந்தமாக ஆசிரியர் கூறுவது நம் உள்ளங்களில் ஒரு தீ எரிந்துகொண்டிருக்கிறது. அதன் அருகில் தீப்பிடிக்கும் எண்ணைப் பொருள்களைக் கொண்டுபோகாதே; கொண்டுபோனால் பயங்கரமான விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கிறார். மாம்ச எண்ணத்தை தூண்டும் பத்திரிக்கை செய்திகள், T.V. காட்சிகள், சினிமா படக்காட்சிகள் முதலியன இதற்கு உதாரணங்கள் ஆகும். பலபேர் இவை கல்விக்கும், அறிவு விருத்திக்கும் இன்றியமையாதது என்று வீண் வாதம் செய்வார்கள். ஆனால் கர்த்தர் நமக்கு எச்சரிப்பாக கூறியிருப்பதுபோல் உன்னுடைய ஆத்துமா காப்பாற்றப்பட தேவையான சகல காரியங்களையும் கடைப்பிடிக்க தயங்காதே என்பதாகும். நாம் மிக மிக விரும்புவதும் அருமையானதும் எதுவாகிலும், உன் கண்ணேயெங்கிலும், இன்னும் சொல்லப்போனால், தாய், தந்தை பிள்ளைகளானாலுங்கூட, அவைகள், அவர்கள், உன் ஆத்துமா அக்கினிக்கடலில் எறியப்பட காரணமாயிராமல் பார்த்துக்கொள்வதுமான பொறுப்பை கர்த்தர் நம்மேல் வைத்துவிட்டார். இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது மிக முக்கியம். அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகளென்று எபேசியர் 5:4ல் இருப்பதை மறக்கக்கூடாது. “சிலர், இதையெல்லாம் பார்த்தால் பகுத்தறிவு இழந்த காட்டு சந்நியாசிகள் போன்று” இருக்கும்படி போதிப்பதைப்போல் இருக்கிறதே என்று கருதலாம். ஆழ்ந்து யோசித்தால் அப்படி நீங்கள் நினைக்கும் சந்நியாசிகளுக்கு பரிசுத்தம், சுத்தம், ஒழுங்கு, புத்திசாலித்தனம் இராது. ஆனால் இங்கு நான் உங்களுக்கு யோசனையாய் கூறும் “சந்நியாசம்” அப்படிப்பட்டதல்ல; இது உண்மையான பரிசுத்தத்திலும், கடவுளை வேதாகமத்தின்படி பிரியப்படுத்துவதிலும், அவரை மகிமைப்படுத்தும் கிரியைகளில் ஈடுபட்டதாகவும் இருக்கும். இவைகளை நம் மனதில் கொண்டிருந்தால், எந்த “சந்நியாச”த்தைக் குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதைத் தவிர இவைகளைக் கைக்கொண்டால், நிமிடத்திற்கு நிமிடம் நம் ஆத்துமாவைக் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இராது. நாம் ஒரு இயந்திரம் அல்ல. தேவையான ஒழுங்குகளை அனுதினமும் அனுசரிக்கும் பழக்கத்தை நாமேதான் உண்டுபண்ணிக்கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமான, இந்த ஒழுங்குமுறைக்கு உதவியாக நான் சொல்லக்கூடிய யோசனை பின்வருமாறு:- நமக்கு இரட்சிப்பு இலவசமாகக் கிடைத்தும், அது சம்பந்தமான, அதற்கு தேவையான ஒழுங்குமுறைகளை கைக்கொள்வதே நமக்கு ஒரு பிரச்சனையாக கருதுவோமானால், இந்த இரட்சிப்பு நமக்கு கிடைக்கும்படியாக மோட்சலோகத்திலிருந்து மகா பரிசுத்த தேவனின் யாதொரு பாவமும் அறியாத அவருடைய சுதன், இந்த அருவருப்பான பாவம் நிறைந்த உலகில் (இது அருவருப்பாக பாவ மக்களுக்குத் தோன்றாவிட்டாலும் பரிசுத்த நிலையில் என்றென்றும் இருக்கும் அவருக்குத் தோன்றுமல்லவா) மனிதப் பிறவியை எடுத்து 33 1/2 ஆண்டு காலம் வாழ்ந்து, கற்பித்து, சபையும் வேதாகமும் ஏற்பட எல்லா ஒழுங்குகளும் செய்துமுடித்து, மக்களை பாவத்திலிருந்தும், பிசாசின் பிடியினின்றும், பாவ சரீரத்திலிருந்தும், அக்கினி கடல் ஆபத்தினின்றும் காப்பாற்ற, அவர்களுடைய பாவங்களைத் தானே சுமந்து அவர்களுக்கு வரவேண்டிய தண்டனையையும் தானே தன்மேல் வலிய ஏற்றுக்கொண்டு, கொடூரமான வகையில் கொலை செய்யப்படவும், அவர்களுக்கென்று கிருபாதார பலியாக மரிக்கவும் தன்னையே ஒப்புக்கொடுத்த அந்த சுத்த தியாகத்தை நினைத்தாவது அவர் வகுத்துக்கொடுத்திருக்கும் ஒழுங்குக்கு கட்டுப்படுவோமா? எண்ணிப்பாருங்கள். வேதாகம வார்த்தையின்படி “அவர் நம்மை சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொண்டு தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மை சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (தீத்து 2:14). அவர் நமக்காக பட்ட பாடுகளையும் அவருக்குள்ள அந்த பேரன்பையும் உணரக்கூடுமானால், ஐசக் வாட் என்ற பக்திமான் இயற்றிய ஒரு பாட்டில் வருமாறு “இந்த பேரன்புக்கு, என் ஆவி, ஆத்துமா, எனக்குள்ள சகலத்தையும் அர்ப்பணித்தாலும் அதற்கு ஈடாகாது” என்போமல்லவா!
முடிவாக, இவை அனைத்தையும் நம் கருத்தில் கொண்டுவரும்போது ரோமர் 8:13ல் கூறியிருக்கின்றபடி பரிசுத்த ஆவியானவரின் உதவி இல்லாமல் நம்மால் இதை நடப்பிக்க முடியாது. ஆனால் அவரின் உதவியினால் கொலோ 3:5ல் கூறியிருக்கிற மாமிசத்திற்கடுத்தவைகளை அழித்தால் நாம் பிழைப்போம் – பிலிப்பியர் 2:13ல் கூறியிருக்கிற பிரகாரம் “தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” இது சம்பந்தமாக நம்முடைய பொறுப்பை உணர்ந்து, அவைகளைச் செய்ய ஆர்வமுள்ளவர்களாய் இருந்து, நமக்குள்ளான சுத்திகரிப்பு எவ்வளவு அவசியம் என்று உணர்ந்து, நம்முடைய சரீரத்தின் செய்கைகளை அழிக்க முற்பட்டால், பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெற்றியை அருளுவார். இது நமக்கு கடவுள் அருளிய வாக்குத்தத்தம். ஆகவேதான் பிலிப்பியர் 2:12, 13ல் “எனக்கு பிரியமானவர்களே… இப்பொழுதும் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” என்ற வசனம் எழுதப்பட்டிருக்கிறது. பாவம் எவ்வளவு பயங்கரமும் வல்லமையும் உள்ளது என்று நமக்கு விளங்கினால், அதற்கு மனிதரை அடிமைப்படுத்தும் வல்லமை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தால், அப்போதுதான் நாம் ஆவியில் எவ்வளவு தரித்திரர் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியும். அப்போதுதான் பரிசுத்த ஆவியின் உதவி இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மை விளங்கி பரிசுத்த ஆவியின் உதவியை நாடுவோம். அப்போது, தேவைப்பட்டால் நம் ‘கண்ணைக்கூட’ பிடுங்கிப்போடும் பெலனும் பெறுவோம். ‘அப்போது பூமியில் பாவத்தை உண்டுபண்ணுகிற உங்கள்’ அவயவங்களை அழித்துபோடும் நிலைக்கு வருவோம். அந்த நிலையில் பரிசுத்த ஆவியின் உதவியினால் பரிசுத்த பாதையில் தொடர்ந்து முன்னேறி தேவனை முகமுகமாய்க் காணும் நிலையையும் எய்துவோம்.
மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘The Mortification of Sin, Mt 5: 29-30’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 23 of Vol 1 (pp 213-221), from: “Studies in the Sermon on the Mount” By Dr. D. Martyn Lloyd-Jones
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.
பாவத்தை நாம் ஒழித்துக்கட்டத் தவறினால் அது நம்மையே ஒழித்துக்கட்டிவிடும் என்பதாகும்.
பரிசுத்தம் வேண்டும்
பாவத்தை பற்றி நாம் நல்ல அறிவு வைத்திருக்கவேண்டும்.
சொன்னதற்கு நன்றி
by.Thiyagarajan…
Thanks to God for this article. Praise the Lord!