Skip to content

தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதலுக்கு அடையாளங்கள் (மத் 7:21-23)

The Signs of Self-deception (Mt 7:21-23)

by Martyn Lloyd-Jones

Tr. ஞான பக்தமித்திரன்

தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதலுக்கு அடையாளங்கள் (மத் 7:21-23)

நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் கூறியிருக்கும் எச்சரிப்புகளைக் குறித்து ஏற்கனவே தியானித்திருக்கிறோம் (மத் 7:21-23). அதன் தொடர்ச்சியாக இன்னும் சில விவரங்களையும் இங்கு கவனிக்கப் போகிறோம். இவ்வளவு விளக்கங்கள் இதற்கு தேவையா என்ற கேள்விக்குப் பதில், இதில் அடங்கியிருக்கும் எச்சரிப்புகளை கவனிக்கத் தவறினால் அதினால் ஏற்படும் ஆபத்துகள் சொல்லி முடியாதவையாயிருப்பதால்தான். ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒரு விசுவாசியின் சகல பிரயாசங்கள், எதிர்பார்ப்புகள், அவன் ஜீவிய காலம் முழுவதும் செய்த பணிவிடைகள் அனைத்தும், இந்த எச்சரிப்புகளை ஏற்ற சமயத்தில் கவனித்து சரி செய்துகொள்ளத் தவறினால், தூள் தூளாய் போய்விடும் நிலை ஏற்படக் கூடும் என்பதால் மட்டுமல்லாது, ஒருவனின் ஆத்துமா மிக மிக வாஞ்சையாக எதிர்பார்க்கும் (ஒன்றேயொன்று; அது மிக்க நன்றே நன்று என்று போற்றப்படும்) ஜீவ கிரீடத்தை பறிகொடுக்க நேரிடும் கொடுமையை தவிர்க்க தவறவே கூடாது என்ற காரணத்தினாலும் இவ்வித நீண்ட விளக்கங்கள் தேவைப்படுகிறது. இது அவசரமும் மிக்க அவசியமுமாக இருப்பது குறித்து சற்று ஆழ்ந்து யோசிக்கும்போது விளங்குகிறது.

நமக்கு தேவன் கிருபையாகக் கொடுத்திருக்கும் ஆத்துமா எவ்வித விலைமதிப்புக்கும் அப்பாற்பட்டது. நாம் இரட்சிப்பைப் பெற்று தேவனுடைய ராஜ்யத்தில் சேருவது அல்லது அதை இழந்துபோகும் நிர்ப்பந்த நிலைமை யாவும் இந்த ஆத்துமாவில் இருக்கிறது. இந்த விலையேறப்பட்ட ஆத்துமா நமக்குக் கிடைத்திருப்பதே ஒரு அபூர்வமான ஆசீர்வாதம். அது கிடைக்க நாம் எந்த பிரயாசையும் எடுக்கவில்லை; இலவசமாக, தேவனால் வழங்கப்பட்டது. இந்த ஆத்துமாவுக்குத்தான் மோட்சத்திலிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. தவிர, இது மோட்சத்தில் இருக்க அனைத்து வசதிகளையும் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுக்கிறிஸ்து மூலம் செய்துமுடித்து, அதன் மூலமாக மோட்சம் சேரும் வழிவகைகளையும் தெளிவாகக் கூறிவிட்டார். வழியில் ஏற்படும் கண்ணிகள் (சாத்தான், உலகம், நம்முடைய மாமிச நிலை இவைகளால் ஏற்படுவது) முதலிய ஆபத்துகளையும் எப்படி தவிர்க்கலாம் என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட ஆபத்துகளைக் குறித்த ஒரு எச்சரிப்புதான் இந்த தியானத்தில் தொடர்ந்து விளங்கிக்கொள்ள  பிரயாசைப்படுகிறோம்.

“. . . இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளராயிருப்பதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” என்று 1 யோவான் 3:3ல் கூறியிருக்கிற பிரகாரம் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? அப்படிக்கொத்த ஆயத்தம் சம்பந்தமாகத்தான் மத்தேயு 7:21-23ல் குறிப்பிட்டிருக்கும் ஆபத்தைத் தவிர்க்க தற்சோதனை அவசியப்படுகிறது.

கிறிஸ்தவ ஜீவியத்தில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடிய அநேக சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நாம் இவைகளில் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஆவிக்குரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ளநேரிடும். மனிதர்களாகிய நாம் தனித்து வாழும் நிலையில் இல்லை. நம்மைச் சுற்றிலும் ஒரு சமுதாயம் இயங்கி வருவது இயற்கையே. இவர்களோடே ஏதாவது ஒருவிதத்தில் நமக்கு சம்பந்தம் இருப்பதுவும் இயற்கையே. ஆனாலும் ‘இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்’ என்ற கட்டளைக்குள் நம்மை கட்டுப்படுத்தும் அவசியத்தை நாம் மறக்கலாகாது. ஆவிக்குரிய ஜீவியத்திலும் நாம் எதிர்த்துப் போராட, “மாமிசத்தோடும், இரத்தத்தோடும் மட்டுமல்லாமல், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்” போராட வேண்டிய அவசியம் இருப்பதால்தான் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை கர்த்தருடைய வசனம் வற்புறுத்துகிறது.

மேலும் கிறிஸ்தவ ஜீவியத்தில், நலமான காரியங்களாகத் தோன்றும் அநேக காரியங்களில், ஆவிக்குரிய பிரகாரமாக பலவிதமான ஆபத்துகள் இருக்கக்கூடும். இந்த எச்சரிப்பு எப்போதும் மனதில் இருக்க வேண்டும். பிசாசும் வெளிச்சத்தின் தூதனைப்போல் வந்து, கடவுளாலேயே நமது நன்மைக்காகக் கொடுக்கப்பட்ட அநேக அருமையான காரியங்களைக் கூட, அதன் மூலமாகவும் நாம் பாவத்தில் விழும்படியான வழிவகைகளை கொண்டுவர எத்தனிக்கும். இவைகளிலும் நாம் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால் விழிப்பும், கவனமும், அடிக்கடி தற்சோதனை செய்துகொள்ளுதலும் அவசியமாக இருக்க வேண்டும். கடவுளுக்குப் பிரியமில்லாத காரியங்களை நம்மை செய்ய வைப்பதில் பிசாசு வெகு திறமைசாலி என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

கடவுள் படைத்த காரியங்களில் தவறு இருக்கிறது என்று கூறவில்லை. ஆனால் அவைகளை தவறுதலான உபயோகத்திற்குக் கொண்டு செல்ல சாத்தான் பிரயாசைப்படும். அப்படிப்பட்ட தவறுதலால் நம்முடைய ஆத்துமாவையே சேதப்படுத்தும் சாத்தானின் சதியைத்தான் ஆபத்தான சூழ்நிலை என்று குறிப்பிடுகிறோம்.

இதை விளக்க சில உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம். ஆவிக்குரிய கூட்டங்கள் என்பதை எடுத்துக்கொள்ளுவோம்; அவை தன்னில்தானே பழுதற்றது. அதினால் அநேகர் ஆவிக்குரிய பயன் அடைந்திருக்கிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அதே காரியத்தை எடுத்துக்கொண்டால், இதில் பங்கெடுப்பது சிலருக்கு, தங்களையறியாமல் இன்றியமையாத ஒரு பழக்கமாய் போய்விடுகிறது. இவர்களுக்கு ஆவிக்குரிய வளர்ச்சியே இருக்காது. ஆனால் இவ்வித கூட்டங்களுக்குச் செல்ல ஆவலாக இருப்பார்கள். இதற்காக பல இடங்களுக்கும் போக ஆவலாய் இருப்பார்கள். இப்படிப்பட்ட கூட்டங்களுக்குத் தவறாமல் போய் பங்கெடுப்பதே ஒரு ஆவிக்குரிய பண்பு என்று நம்பி, இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு, தங்களுக்கு ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாத ஒரு குறைவு மனதிற்கு ஞாபகத்தில் வருவதில்லை. (They will ever be learning but never be learning). இப்படிப்பட்ட கூட்டங்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் நடக்காவிட்டால் அது நடக்கும் வெவ்வேறு இடங்களுக்காவது போக எத்தனிப்பார்கள். அதற்கு வசதி இல்லையென்றால் மிகவும் ஏமாற்றமடைவார்கள். இது ஆபத்தான் நிலை. இந்த நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவன் இருதயத்தின் நிலையைப் பார்க்கிறார், வெளிப்பிரகாரமான ஒழுங்கு முறைகளை மட்டும் ஆசரித்து, பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலில்லாமல் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சியையும் கனியையும் எதிர்பார்க்க முடியாது என்ற முக்கியமான உண்மையை இவர்களுக்கு எப்படி விளங்க வைப்பது? இதில் விவரிக்கப்பட்டிருக்கும் எச்சரிப்பை நன்றாக விளங்கிக்கொண்டு தங்களையே தற்சோதனை செய்துகொண்டால், அது அவர்களை விழித்தெழப்பண்ணலாம்.

ஆத்துமாவை சேதப்படுத்தக் கூடிய, இது மாதிரி இன்னொரு உதாரணம், வியாதி முதலான பிரச்சனைகளிலிருந்து குணமாகும் அற்புத அடையாளங்களில் வரம்புக்கு மீறி நம்பிக்கை வைத்து ஆவிக்குரிய வளர்ச்சியில் பின்னடைந்துபோகும் பரிதாபகரமான நிலைமை. கடவுளால் முடியாத காரியம் ஒன்றுமில்லை; வியாதியஸ்தரை அவரால் குணமாக்க முடியும் என்பதைக் குறித்த சர்ச்சையும் இங்கில்லை.

வியாதியிலிருந்து குணமாகும் செயல்கள் அனைத்திற்குமே கர்த்தருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒருவனுடைய பிரதானமான ஈடுபாடு இவ்வித அனுபவங்களை எதிர்பார்ப்பதும், அனுபவிப்பதுமேவென்றால், அதைக்குறித்து கவலைப்பட வேண்டியதாகத்தான் இருக்கிறது; ஏனெனில் இப்படிப்பட்டவர்களுடைய ஆத்தும வளர்ச்சி சீரானதாக இராது, காரணம் இவர்கள் இவ்வித அனுபவங்களையே எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுமல்லாது அவ்வித அனுபவங்கள் ஏற்படாவிட்டால் மனசோர்வும் ஆவிக்குரிய காரியங்களில் எழுப்புதலும் அற்றுப்போய் இவர்கள் ஆத்துமா சேதமடையும் ஆபத்து ஏற்படும் என்பதால்.

இந்த கட்டத்தில் நம்மை சோதித்துப் பார்த்து, நம்முடைய பிரதான ஆர்வம் அல்லது ஈடுபாடு இயற்கையாக எதில் இருக்கிறது, அது கர்த்தருடைய வசனத்திற்கு முரண்பாடாக இருக்கிறதா என்று கண்டுபிடிக்கக்கூடுமானால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம்முடைய பிரதான ஈடுபாடு எதில் இருக்க வேண்டும் என்றால், நாம் இயேசுக்கிறிஸ்துவில் ஆவிக்குரிய பிரகாரமாக இணைக்கப்பட்டிருக்கிறோமா என்பதுவும் அப்படி இணைக்கப்பட்டிருத்தலின் காரணமான அடையாளங்கள் நம்மில் இருக்கிறதா என்பதும். அப்படியில்லாவிட்டால் அந்தப் பிரச்சனையை நாம் கடவுளிடம் அறிக்கையிட்டுதான் சரிசெய்ய முயல வேண்டுமே தவிர நம்முடைய மனித அறிவினால் அதை சரிசெய்ய இயலாது. அதற்குமாறாக, இவற்றை நம்முடைய சுயபுத்தியினாலும் சக்தியினாலும் சமாளிக்கப் பிரயாசைப்பட்டால் ஆவிக்குரிய காரியங்களில் நம்மையே ஏமாற்றிக்கொள்ளும் பேராபத்தில் இருக்க நேரிடும்.

இதற்கொத்த இன்னும் ஒரு ஆவிக்குரிய ஆபத்து, கிறிஸ்தவ முறைபாடுகள், கிறிஸ்தவ இறையியல் வேறுபாடுகள் (doctrinal differences of churches), தத்துவ சாஸ்திரம் வாயிலாக கர்த்தருடைய வசனத்தை ஆராய்ச்சி செய்தல் (Philosephical explanations of the Word of God) இம்மாதிரி நுண்ணறிவுக்கொத்த காரியங்களில் தங்களுடைய காலத்தையும், சக்தியையும், பணத்தையும் அத்துமீறி செலவழித்து, அவற்றை கடவுளுக்கடுத்த செயல்பாடுகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதி திருப்தியடைந்து ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி இல்லாமல் போவதோடுங்கூட அதைக்குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஜீவித்துவருவது மிகுந்த ஆபத்தான நிலையாகும்.

ஆனால் இவ்வித காரியங்களில் ஈடுபட்டு அநேக பிரயோசனமான விளக்கங்களை விசுவாசிகளுக்கு பயன்படும் வகையில் கண்டுபிடித்துக் கொடுக்கக்கூடிய கல்வியறிவும் வரமும் உடையவர்கள், தங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி தடங்கல் இல்லாத வகையில் இதில் ஈடுபட்டிருத்தலை குறைவாகச் சொல்லவில்லை. ஆனால் இதை மறைமுகமான ஒரு பொழுதுபோக்காகக் கொண்டு, தங்கள் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து ஏனோதானோ வென்றிருப்பதைத்தான் இங்கு நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

சபை சரித்திரத்திலேயும்கூட இவ்வித நிலைகள் சமயா சமயம் ஏற்படுவதுண்டு; ஏற்பட்டு, சபைகளின் ஆவிக்குரிய நிலையை பெரிதும் பாதித்திருக்கிறது. சபை சீரழிந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில் எழுப்புதல் கூட்டங்கள் (Revival meetings) நடப்பதுண்டு. அதினால் அதிக பயன் ஏற்பட்டிருப்பது சரித்திரவாயிலாக தெரிந்து கொள்ளுகிறோம். அதேசமயம், எந்த நல்ல காரியத்திலும் சாத்தான் அதை பாழ்படுத்தப் பார்ப்பதுபோல, அப்போதும் சில விரும்பப்படத்தகாத காரியங்களும் ஏற்படுவதற்கு, இதே சரித்திரமே சாட்சியாக இருந்திருக்கிறது. இவ்வித எழுப்புதல் கூட்டங்கள் முடிந்த கையோடு அப்போது கேட்டறிந்த ஆவிக்குரிய சத்தியங்களைக் குறித்து ஆங்காங்கே, சிந்திப்பதிலும் அவைகளைக் குறித்து வாக்குவாதங்கள் நடைபெறுதலும் இயற்கையே. அவைகளில் தவறு எதுவும் இல்லை. அதினால் அநேகர் பயன் அடைவதும் உண்டு. ஆனால் அச்சமயம் இதைக்குறித்த பிரயோசனமில்லாத வாக்குவாதங்களில் கலந்துகொள்ள சிலருக்கு சோதனை ஏற்படுவதுண்டு. வெறும் வாயிலேயே மெல்லும் பாட்டிக்கு வாயில் சற்று அவுலைப்போட்டால் இன்னும் சந்தோஷமாக மெல்லும் என்பது பழமொழி. இதற்கேற்ப சிலர், தங்கள் நேரத்தையும், பொருளையும், சக்தியையும் இவ்வித வாக்குவாதங்களிலேயே தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிட்டு அதை, தாங்கள் கடவுளுக்கடுத்த காரியங்களில் ஈடுபட்டிருப்பதாகக் கருதி தங்கள் ஆத்துமாவையே சேதப்படுத்திக்கொள்ளும் அறியாமை, தங்களையே ஏமாற்றிக்கொள்ளுவதாகும். இப்படிப்பட்ட சோதனைகளில் விழுந்து பல சபைகளே அழிந்துபோக காரணமாயிருந்திருக்கிறது. இந்தக் கூட்டங்களினால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் ஏற்பட்டது ஒருபுறம் இருக்க, ஆவிக்குரிய வளர்ச்சியற்ற நிலையும் இன்னொரு பக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் intellectual religiosity and spiritual aridity  என்று சொன்னால் தகும். இதற்கு அத்தாட்சியாக, மார்ட்டின் லூத்தர் கொண்டுவந்த மாபெரும் சீர்திருத்தலின் காரணமாக இங்கிலாந்து தேசத்திலும், வட அமெரிக்காவிலும் பியூரிடன் (Puritans) என்ற தெய்வ பக்திநிறைந்த ஒரு வகுப்பார் ஏற்பட்டு, அவர்களால் சபைகளில் ஆவிக்குரிய நிலை உச்ச நிலையில் இருந்தது. தேசங்களும்கூட கடவுளுடைய ஆசீர்வாதங்களோடு வாழ்ந்தன. ஆனால் அதேசமயம் கிறிஸ்தவ இறையியல் காரியங்களில் பயனற்ற தர்க்கங்கள் செய்துகொண்டு ஆவிக்குரிய காரியங்கள் சிறிதும் வளர்ச்சியடையாத பகுதிகளும் அதே சமயம் வியாபித்திருந்திருக்கிறது. இவர்கள் சபைக்கு வெளியில் இருப்பவர்கள் அல்ல. இவர்கள் தங்களை ஆர்வமுள்ள கிறிஸ்தவர்களென்று பாவித்துக்கொண்டு தங்களையே ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களாவார்கள்.

இதுவரை நாம் தெரிந்துகொண்டிருக்கும் அநேக முக்கிய உண்மைகளில் ஒன்று, சாத்தானுக்கும், பாவத்திற்கும் ஒரு சிறிது இடம் கொடுத்தால்கூட, அவைகள், எந்த நல்ல காரியத்தையும் ‘நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல்’ அவமாக்கிவிடும் என்பது. இதற்கு ஆதாரமாக அநேக சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பற்றி சிந்தித்தோம். இப்படிக்கொத்த இன்னும் அநேக உதாரணங்களை நம்முடைய சிந்தனைக்குக் கொண்டுவரலாம். ஆனால் அவற்றுள் சிலவற்றை மட்டும் இதோடு கூறிவிட்டு இந்த தியானத்தை முடிப்போம்.

நான் பலரிடம் காண்கிற இன்னொரு ஆபத்து, இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைக் குறித்து உணர்ச்சிவசப்பட்டுப் படிப்பதிலும், பேசுவதிலும், தர்க்கிப்பதிலும், எல்லையில்லா நேரத்தை செலவிடுவது மட்டுமல்லாது இது சம்பந்தமாக வெளிவரும் புத்தகங்களை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கிப் படிக்கும் ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்கும் அறியாமை. இவற்றை நாம் நன்றாகத் தெரிந்து கொள்வதாலோ அல்லது அவருடைய வருகை வெகுசமீபமாக வந்துவிட்டது என்ற தகவல் வெளியாகிவிட்டது என்பதாலோ ஒருவன் இரட்சிப்புக்கு ஆயத்தமாகிவிட முடியும் என்றும் மனக்கோட்டை கட்டினால் அதன் அறியாமையை என்னென்று சொல்வது! ஒரு கடினமான கல்லூரி பட்டப்படிப்புக்கு அதிலும் உலகப் பிரசித்திபெற்ற பட்டப்படிப்புக்கு ஆயத்தமாகும் ஒரு மாணவன் தன் நேரத்தை பல பாடங்களை கவனமாக படிப்பதிலும், அது சம்பந்தமாக செய்ய வேண்டிய ஆயத்தங்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்துகொண்டு வருவதிலும், அது சம்பந்தமாக தவிர்க்க வேண்டிய அநேக காரியங்களை கவனமாக தவிர்ப்பதிலும், ஈடுபட்டிருப்பதைத் தவிர, இதற்குத் தேவையான சரீர சுக, பெலன் நலன்களையும் கண்காணித்துக்கொள்வதிலுந்தான் தன் நேரத்தை செலவழிப்பான் என்பது யாவரும் அறிந்ததே. அப்படியில்லாமல், அந்த பரீட்சையில் வரக்கூடிய உணர்ச்சிகளையும், கேள்விகள் அதிக கஷ்டமாகிவிட்டால் இருக்கும் மன நிலைகளையும், ஒருவேளை பரீட்சை சுலபமாக இருந்தால் அது எவ்வளவு இன்பமாக இருக்கும் என்பதைக் குறித்தோ அல்லது அந்த பட்டப்படிப்பை முடித்துவிட்டால் என்னமாயிருக்கும் என்கின்ற காரியங்களைக் குறித்து பேசவும் தர்க்கம் செய்யவும் இவனைப்போல அறிவு குறைவுள்ள மாணவர்களைத் தேடிப்பிடித்து அவர்களோடு இப்படிக்கொத்த சம்பாஷணைகளில் ஈடுபட்டு, இந்த ஈடுபாடுகளே பரீட்சைக்கு தான் செய்யும் தகுந்த ஆயத்தம் என்று கருதி தன் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவானானால் அது எப்படியோ அப்படியே தான், தீர்க்கதரிசன புத்தகங்கள், விசேஷமாக எசேக்கியல் 37, 38 அதிகாரங்களைப் போன்றவை, அல்லது தானியேல் புத்தகம் 7-12 அதிகாரங்களில் உள்ளவைகளை படித்துப் படித்து உணர்ச்சிவசப்படுதலும். இதைப் போன்றதுதான், இஸ்ரவேல், எகிப்து, ரஷ்யா அரபி தேசங்களில் நடக்கும் காரியங்களில் அளவுகடந்த ஆவல் காட்டுதலுமாகும். இவைகளைக் குறித்த விமர்சனங்களில் ஆழமான ஈடுபாடு ஒருவனை இரட்சிப்புக்கு வழி நடத்தும் என்று ஒருவன் நினைத்தால், அவனுக்கு இரட்சிப்பைக் குறித்து ஏதாவது அறிவு இருக்கும் என்று எண்ண இடமிருக்குமா? வெளிப்பிரகாரமான நடத்தையினாலே கடவுளின் தயவைப் பெற முடியும் என்று நம்புகிற இதர மதங்களுக்கு இவ்வித இயல்பு வரவேற்கத் தகுந்ததாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்டவர்கள் நியாயத்தீர்ப்பை சந்திக்க முடியாது. ஆனால் தற்சோதனையினாலும், கர்த்தருடைய வேதாகமத்தை சரியான பிரகாரமாக சொல்லிக்கொடுக்கக்கூடிய சபைகளை தேடிப்பிடித்து அவர்களுடைய உதவியினாலும், ஆண்டவரிடம் உருக்கமாக ஜெபிப்பதாலும், தங்களையே அடிக்கடி ஆவிக்குரிய தற்சோதனை செய்துகொள்வதாலுமே, தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் (Self-deception) ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

தன்னையே ஏமாற்றிக்கொள்ளும், இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் இன்னொரு கூட்டத்தார், சமூகத்தொண்டுகளில் அதிகமாக ஈடுபட்டு வரும் சபைகளில் சேர்ந்துகொண்டு சமூகசேவைகளை ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அடையாளமாகக்கொண்டு அதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பர். சமூகத்தொண்டு கிறிஸ்தவத்திற்கு விரோதமானது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் சமூகத்தொண்டுதான் இரட்சிப்பின் மத்தியமானது என்று தவறுதலாக விளங்கிக்கொண்டு, ரோமர் 6:17ல் குறிப்பிட்டிருக்கிற பிரகாரம் “ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு” (அல்லது தீத்து 2:1ல் கூறிய பிரகாரம் ஆரோக்கியமான உபதேசத்திற்கு, வேறு விதமாய் சொன்னால் அப் 20:32ல் கூறியிருக்கிற பிரகாரம் பக்திவிருத்தியடைய வல்லமையுடைய கிருபையுள்ள வசனத்திற்கு தங்களைக் கீழ்ப்படுத்தாமல் ஆகமொத்தத்தில் ரோமர் 8:14ன்படி தேவாவியினால் நடத்தப்பட தங்களை ஒப்புவிக்காமல், தங்கள் மனம்போல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகிறவர்கள், இயேசுக்கிறிஸ்து, நியாயத்தீர்ப்பில் தங்களை மெச்சிக்கொள்வார் என்று கற்பனை செய்துகொள்ளுதல் ஆபத்தில் முடியுமல்லவா!

இப்படியேதான், பல சபைகளிலுள்ள கிறிஸ்தவ இறையியல் (Christian doctrine) அல்லது விசுவாச அறிக்கைகளில் (Various confessions and creeds) சபைக்கு சபை எப்படி வித்தியாசப்படுகிறது என்றும், இதிலுள்ள நுணுக்கமான வித்தியாசங்கள், இவைகளைக் குறித்து வெட்டியோ, ஒட்டியோ தர்க்கங்கள் செய்வதில் இன்பம் அடைவதையும் அளவு மீறிய நேரத்தை இவைகளில் செலவிட்டு இவையாவும் ஆவிக்குரிய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டு தங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தில் திருப்தியும் சமாதானம் நிறைந்தவர்களுமாயிருப்பவர்கள் உண்டு. இவர்களிடம் ஆவிக்குரிய சத்தியங்களைக் குறித்து ஏதாவது பேச்செடுத்தால் வினோதமான வகையில் மௌனமாகிவிடுவார்கள்.

திரும்பி வரமுடியாத ஒரு நித்திய நிலைக்குப் போகப்போகிறோம்; அதற்கு ஆயத்தமாக சிறிது காலந்தான் இருக்கிறது; இதற்காகத்தான் (இதிலே பங்கெடுக்க) விலைமதிக்க முடியாத ஒரு ஆத்துமா நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; இதன் நலமோ, அழிவோ இப்போது நாம் ஜீவிக்கும் காலத்திற்குள் தீர்மானமாகிவிடும் என்பதான அடிப்படை சத்தியத்தைக் குறித்து சிறிதும் அக்கறையோ, கவலையோ இல்லாத, ஆச்சரியமுள்ள அறியாமை நிறைந்த மக்களாய், தங்களையும் கிறிஸ்தவர்களாகப் பாவித்துக்கொண்டு அநேகர் இருக்கிறார்கள். இவர்களுடைய அறியாமையையும் தன்னையே ஏமாற்றிக்கொண்டு வாழும் துர்அதிர்ஷ்டமான மக்களையும் கூடுமானால் விழித்தெழப் பண்ணத்தான் மத்தேயு 7:21-23ல் குறிக்கப்பட்ட எச்சரிப்பை ஆண்டவர் நம் அனைவருக்கும் முன்வைக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய காரியம், மேலே குறிப்பிடப்பட்டவர்கள் வெளிப்படையான பாவமான காரியங்களில் ஈடுபட்டிருக்கவில்லை; வெளி உலகில் தங்கள் நேரத்தை பாவத்திலும், உல்லாசத்திலும் செலவழிக்கவில்லை. ஞாயிறு தோறும் சபை கூடிவருவதில் கலந்துகொள்வதில் குறைவு வைக்கவில்லை, ஆனால் தங்கள் தங்கள் மனதிற்குப்பட்டபடி தங்கள் நேரத்தையும், கடவுளால் கொடுக்கப்பட்ட பல வரங்களையும் கடவுளுக்கு மகிமையாக செலவழிப்பதாக மனோபாவனை செய்துகொண்டு, பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனின் சித்தம் இன்னதென்று கிறிஸ்தேசுவினால் நமக்குக் கிடைத்த வேதாகமத்தைக்கொண்டு அறிந்து செயல்படுவதை விட்டு, தங்கள் சொந்த எண்ணங்களின்படி ஜீவிய காலம் முழுவதும் செலவழித்துவிட்டு நியாயத்தீர்ப்பை சந்தித்துவிட முடியும் என்று தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் அநேகரை தட்டி எழுப்ப இங்கு குறிப்பிட்ட எச்சரிப்பின் வசனங்கள் தற்சோதனைக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் தங்கள் ஆத்தும வளர்ச்சியைக் குறித்து அக்கறையில்லாமல், அல்லது அதற்கு வேண்டிய நேரத்தை ஒதுக்காமல் எதையும் செய்வது தவறு என்பதால் தான் 1 கொரி 9:27ல் நமக்கும் எச்சரிப்பாக “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடி, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்படுத்துகிறேன்” என்று எழுதியிருக்கிறார் பவுல் அப்போஸ்தலன்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு உதாரணம், அமெரிக்காவில் புகழ்பெற்ற வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) என்பவர், அக்காலத்தில் அடிமைகளை வைத்திருத்தல் என்ற கொடுமையை ஒழிக்க பாடுபட்ட மாபெரும் ஊழியர்களில் ஒருவர் ஆவர். அவர் ஒரு சமயம் இதில் மிகக்கடுமையாக ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அவரிடம் ஒரு பெண் தைரியமாக அவரை நெருங்கி “ஐயா, இப்படி இதில் இராப்பகலாக ஊழியம் செய்துவருகிறீர்களே, உங்களிடம் நான் கேட்க விரும்புவது, (நியாயத்தீர்ப்பில் சந்திக்கவிருக்கும் உங்கள் விலையேறப்பட்ட) ஆத்துமா ஒன்று உங்களுக்கிருக்கிறது என்ற ஞாபகம் இந்த வேலை நடுவேயும் வருகிறதா?” என்று கேட்க, அன்னார் அவர்களை பணிவுடன் திரும்பிப்பார்த்து, “அம்மையாரே நான் சற்று மறந்துதான் இருந்திருக்கிறேன்” என்று கூறினார் என்று சரித்திரம் கூறுகிறது. அவர் என்ன நினைத்து இப்படிக் கூறியிருந்தாலும் அந்த மாது கேட்ட கேள்வி மிக ஞானமுள்ளதுதான் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இந்த தியானத்தின் முடிவாக நாம் கவனிக்க வேண்டியது கர்த்தருடைய நாமத்தில் நாம் எதை செய்தாலும் அதை ஆவிக்குரிய பிரகாரமாக செய்கிறோமா, அல்லது உலக ஞானப்படி அவைகளை செய்கிறோமா என்பதை அடிக்கடி நம்மை தற்சோதனை செய்துகொள்ளுதல் மிக அவசியமானது என்பதே.

____________________________________

மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘The signs of self-deception, Mt 7:21-23’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 25 of Vol 2 (pp 536-545), from: “Studies in the Sermon on the Mount”  By Dr. D. Martyn Lloyd-Jones.
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: