Skip to content

கள்ளத் தீர்க்கதரிசிகள் (மத்தேயு 7:15, 16a)

(False Prophets Mt 7:15, 16a)

By D. Martyn Lloyd-Jones

Tr. ஞான பக்தமித்திரன்

கள்ளத் தீர்க்கதரிசிகள் (மத்தேயு 7:15, 16a)

இந்த தியானத்தில் நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டியது, மத் 7:15-20 வசனங்களில் அடங்கிய மாபெரும் கருத்தை ஆசிரியர், இந்த ஒரே தியானத்தில் உள்ளடக்க முடியாததினால், பெரும்பான்மையான கருத்தை இதில் கூறிவிட்டு, அதன் தொடர்ச்சியாக “மரமும் அதன் கனியும்” என்ற தலைப்பில் இன்னொரு சிறிய தியானத்தையும் எழுதியிருக்கிறார். இந்த இரண்டையும் ஒரே கட்டுரையாக எழுதியிருந்தால் நலமாயிருக்குமே என்று சிலர் என்னைப்போல் கருதலாம்; ஆனால் சற்று ஆழ்ந்த சிந்தனைக்கப்புறம், இந்த ஆசிரியர் இப்படி பிரித்திருப்பதுதான் சரி என்று எனக்குப் படுகிறது. இப்படிப்பட்ட பாகுபாட்டினால் இதில் நம் ஆலோசனைக்குக் கொண்டுவந்திருக்கும் கருத்தை சற்று விவரமாகவும் ஆழமாகவும் படித்து, விளங்கி, நம் ஆவிக்குரிய ஜீவியத்தில் பயன்படுத்திக்கொள்ள இது அதிக உதவியாக இருப்பதை நான் உணருகிறேன். இதில் அடங்கிய கருத்துக்கள் அதிர்ச்சி தரும்படியான மாபெரும் சத்தியங்களாயிருப்பதால், இதை அவசரப்படாமல், நிதானமாகப் படித்து, விளங்கிக்கொள்வது, இரட்சிப்பின் பாதையில் முழு கவனமாகவும் பயத்தோடும் நடுக்கத்தோடும் நடப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது என்னுடைய உறுதியான எண்ணம்.

இங்கு நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும் இரண்டு வசனங்களும், இதைத் தொடர்ந்து இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து வசனங்களுமே, ஒரு மாபெரும் கருத்தை, அல்லது ஆவிக்குரிய ஜீவியத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அதிமுக்கியமானதொரு செய்தியை அறிவிப்பதாகவும், இவற்றை நாம் சரிவர விளங்கிக்கொள்வதில் ஆண்டவர் மிகுந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதையும் தெளிவாய்த் தெரிகிறது. அந்த பெரிய கருத்து, நமக்கு ஏற்கனவே விவரமாக விளக்கப்பட்டபடி, ‘இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிற வழியாய் உட்பிரவேசித்தல்’ என்பதுதான். அது ஒன்றுதான் ஜீவனுக்குப் போகிற வாசல் என்றும் அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் அதிகமானவர்களாய் இருக்கமாட்டார்களென்றும் வசனத்தின்படி தெரிந்து கொண்டோம். இந்த கருத்தை நாம் நன்றாக விளங்கிக்கொண்டோமா என்பதில் ஆண்டவர் அதிக அக்கறையும் ஆர்வமுமாக இருப்பதாகத் தெரிகிறது. 13ம் வசனத்தில் ஜீவனுக்குப் போகிற வழி அது ஒன்றுதான் என்பதைக் கூறிவிட்டு, அதன் தொடர்ச்சியான இந்த வசனங்களில், அந்த இடுக்கமான வாசல் வழியாக போகிறவர்கள் சந்திக்கவிருக்கும் சில ஆபத்துகள், இடையூறுகள், தடைகள் முதலிய சிக்கல்களைக் குறித்து விவரிக்கிறார் அன்புள்ள ஆண்டவர். ஜீவனுக்குப் போகும் வழி வேறு இல்லாததாலும், இந்த ஒரே வழியில் செல்பவர்கள் தாங்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துகளில் மாட்டிக்கொண்டு தடம் புரண்டு போய்விடக் கூடாதே என்ற கரிசனையில் இவைகளைக் குறித்து எச்சரிக்கிறார். ஜீவனுக்குப் போகும் வழி ஒன்றேதான், அது இடுக்கமான பாதையாகத்தான் இருக்கும் என்று கூறி அந்த வழியில் சந்திக்கவிருக்கும் அநேக ஆபத்துகளை எப்படி சமாளிப்பது என்றும் விளக்கிக் கூறுகிறார். இதில் நாம் கவனிக்க வேண்டியது சத்திய வசனத்தை மிக கவனமாக படிப்பது மட்டும் போதாது; அதிலுள்ள அழகும் ஞானமுமான விவரிப்புகளைக் குறித்து இன்பமடைவதும் போதாது; இதை பாராமல் படித்து மற்றவர்களுக்கு சொல்வதுமட்டும் போதாது; இவை யாவுங்கூட சிறப்பானதாக இருந்தாலும், அவற்றை தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் உபயோகிக்காவிட்டால், இடுக்கமான வாசல் வழியாகப் பிரவேசித்து அதில் முன்னேறிக்கொண்டு போவது என்பது வெறும் மனோபாவனையாகப் போய்விடும். இதை ஒருநாளும் மறந்துவிடக்கூடாது.

இந்த விதத்தில், இந்த மலைப்பிரசங்க உபதேச முடிவில் ஆண்டவர் வலியுறுத்துகிறார். முதலில், ஆபத்துகளைக் குறித்து இரண்டு விதங்களாகப் பிரித்துக் காட்டுகிறார். அதன் பின்பு அவைகளில் அடங்கியுள்ள ஆபத்துகளை எப்படி விளங்கிக்கொள்வது என்று அறிவுறுத்துகிறார். அதை விவரித்தபின் அதை எப்படி சமாளிப்பது என்பதையும் விளக்கிக்காட்டியபின் முடிவாக, சுற்றிவளைத்துப் பேசாமல் நேரடியாக இரண்டுவித வீட்டைப் பற்றிய காட்சியை அவர்கள் முன் கொண்டுவருகிறார். ஒன்று மணலின் மேல் கட்டப்பட்டது, மற்றொன்று கற்பாறையின்மேல் கட்டப்பட்டது. ஆகமொத்தத்தில் இந்த நான்கு பாடங்கள் (கள்ளத்தீர்க்கதரிசி, மரமும் கனியும், கர்த்தாவே! கர்த்தாவே!, வீட்டு அஸ்திவாரம்) அனைத்திலும் ஒரு பொதுவான கருத்து, அதில் சரியானது, தவறானது என்று கண்டுபிடிக்கும் விதம் இப்படியாக இந்த ஏழாம் அதிகாரம் முழுவதிலுமே திரும்பத்திரும்ப கூறிவிளக்கிக் காட்டுகிறார். அப்படி இருந்தும் தனித்த ஜீவியத்தில் பரிசுத்தத்தையும், பரிசுத்த வளர்ச்சியில் முன்னேற்றத்தையும் நாம் அதிகம் காணமுடிகிறதில்லை. இதற்குக் காரணம் இக்காலத்து சுவிசேஷ பிரசங்கிகளில் குறைபாடுகள்தான்; எல்லாம் வல்ல தேவன் நமக்கான காரியங்கள் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார் என்பதும், முடிவில் நமக்கு வசனத்தைக் கொடுத்த கர்த்தரே நம்முடைய நியாயாதிபதியாகவும் நமக்கு முன் நிற்கப்போகிறார் என்ற உண்மையை பெரும்பாலும் மறந்துபோவதும் இக்குறைபாடுகளில் அடங்கியுள்ளன.

முடிவில் நாம் நியாயத்தீர்ப்பை சந்தித்தாக வேண்டும் என்ற கருத்தை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே போகிறார். அந்த நியாயத்தீர்ப்பும் மேம்பூச்சானதாக இராது. ஏனெனில் நியாயந்தீர்ப்பவர் இருதயத்தை சோதித்தறியக்கூடியவர். தவிர நியாயத்தீர்ப்பு பூரணமாக இருக்கும் என்பதும், அதன் விளைவுகள் எத்தகையது என்பதும் ‘இடுக்கமான வழி’யைக் குறித்த 13, 14ம் வசனங்களின் மூலம் கூறிவிட்டார். நியாயத்தீர்ப்பின் கடுமையும், அதே சமயம் மக்கள் மேல் உள்ள கரிசனையும், அன்பும் அவருக்கு இருப்பதால் அவர் இந்த உபதேசத்தைத் திரும்பத்திரும்ப, பல விதங்களில் விளக்கிக் கூறுகிறார். கவலையீனமும், மறந்துவிடும் தன்மையும் மனிதருக்கு இருப்பதை அறிந்துதான், அவர்கள்மேல் இருக்கும் கரிசனையினால், இவ்விதங்களில் சொல்லிக் கொடுக்கிறார். அகலமான பாதையில் போவது செளகரியமாகவும் சுலபமாகவும் இருப்பதால் அதின் வழியாய் போகத்தான் அநேகர் விரும்புவார்கள். ஆனால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும் அழிவை நோக்கித்தான் அவ்வழி செல்லும் என்ற எச்சரிப்பை அவர் கொடுத்தும், அதை கவனிப்பவர்கள் சொற்பமானவர்களே என்பதையும் தீர்க்கதரிசனமாகக் கூறுகிறார். ஆனாலும் இதை மக்கள் கவனிக்காமல் போனால் அதை என்னென்று சொல்லுவது!

இது நிற்க, இந்த தியானத்தைத் தொடர்ந்து கவனிப்போம். இப்போது நமக்கு திரும்பவும் எச்சரிப்பாக இரண்டு ஆபத்துகளை நம்முன் கொண்டு வருகிறார் – ஒன்று கள்ளத்தீர்க்கதரிசிகள், இரண்டாவது ஒரு மரத்தை, அதன் கனியின் தன்மையை அறியாமல் எடைபோட்டுவிடும் ஆபத்து. இதில் முதலாவது கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்த எச்சரிப்பை எடுத்துக்கொள்வோம். இவர்களால் வரக்கூடிய ஆபத்து கொஞ்ச நஞ்சமில்லை. அஜாக்கிரதையாக இருந்தால் அவியாத நித்திய அக்கினிக் கடல் வரை கொண்டு சேர்த்துவிடும் ஆபத்து இதில் தொக்கி நிற்கிறது. ஆகவேதான் அவர்களைக் குறித்து “உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று வசனத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இதைக் குறித்து விளங்கிக்கொள்ள பின்வரும் காட்சியை நம் கண்முன் வைக்க வேண்டும். இடுக்கமான வாசலைக் குறித்த பிரசங்கத்தை ஆண்டவருடைய வாயிலிருந்து கேட்ட மக்களில் சிலரோ, பலரோ கீழ்ப்படிதலோடு இடுக்கமான வாசலை நோக்கிப் போவார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஆண்டவர் இந்த பயங்கர கள்ளப் போதகர்களைக் குறித்த எச்சரிப்பைக் கொடுக்கிறார்: “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்” வச.15 ஏன் இந்த சமயத்தில் என்ற கேள்வி எழலாம். ஏனெனில், இந்த இடுக்கமான வாசலில் நுழையும் இடத்தில்தான் இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் தங்கள் வேட்டைக்கு ஆள் கிடைக்குமா என்று தேடி காத்து நிற்பார்கள். இவர்கள் தினசரி அலுவலகமே இந்த இடுக்கமான வாசலின் வெளிப்புறந்தான். இவர்களிடம் தப்பித்தவறி மாட்டிக்கொண்டவன் பிழைப்பது அரிது. ஆகவேதான் இவர்களிடம் மாட்டிக்கொள்ளாத வண்ணமாக, முன்எச்சரிக்கையாக பல காரியங்களை இந்த தியானத்திலே படிக்கப்போகிறோம். இப்போது நமக்குத் தெரிய வேண்டியது (1) இவர்கள் யார்? (2) இவர்களைக் கண்டு பிடிக்க முடியுமா? (3) முடியுமானால் எப்படி? இந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்போம்.

கள்ளத்தீர்க்கதரிசிகளின் அடையாளங்கள்:

இவர்களின் அடையாளங்களைக் குறித்து கிறிஸ்தவத்தில் இரண்டு விதமான அபிப்பிராயங்கள் இருந்து வருகிறது. முதல் வகை: இவர்களைக் கண்டுபிடிப்பது இவர்களுடைய பிரசங்கத்தில்தான். இவர்கள் வேதாகமத்தில் இருப்பதை தவறுதலான அர்த்தங்கள் கொடுத்து, அவர்களுக்கு இரட்சிப்பின் பாதையை குழப்பி அவர்களை இரட்சிப்பின் பாதையில் செல்லாமலிருக்கச் செய்வது. இரண்டாவது வகை: இவர்கள் நன்றாக உணர்ந்தோ, அல்லது தங்களையும் அறியாமலோ மாய்மாலமாக வாழும் பிரசங்கிமார். இவர்கள் வேதாகமத்தின்படி பிரசங்கம் செய்தாலும் இவர்கள் இரட்சிப்புக்குள் வந்தவர்களில்லை. இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய கல்வியினாலும் மற்ற திறமைகளினாலும் சபைகளை நடத்தும் நிலைமை ஏற்படக்கூடும். இவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாக செயல்படும் நிர்ப்பந்தம் ஏற்படலாம். இவர்களால் அந்த சபைக்கு பேராபத்து ஏற்படும்.

ஆனால் இந்த இரண்டுமே நாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இரண்டிலுமே சில உண்மைகள் இருந்தாலும் இரண்டிலும் சில தவறுதல்களும் இருக்கக்கூடுமென்று நான் நினைக்கிறேன். ஆகவே இவை இரண்டையுமே நிராகரித்து நான் நினைப்பதைக் கூறுகிறேன்:- இந்தக் கள்ளப்போதகர்களை இவர்களுடைய உபதேசத்திலிருந்து கண்டுபிடிப்பது கஷ்டம். ஏனெனில் இவர்கள் தவறுதலான பிரசங்கங்கள் பிரசங்கித்தால், அதைக் கண்டுபிடிக்கத் தெரியாத அவ்வளவு மதியீனமானவர்கள் சபையில் அதிகம்பேர் இருப்பது மிக அரிது. அப்படிப்பட்ட பிரசங்கிமார் ஒரு சபையில் அதிக காலம் நீடிக்கவும் முடியாது. இவர்கள் ஆட்டுத்தோலை போர்த்தியவர்கள். அப்படியானால் இவர்கள் சுலபமாக அடையாளங் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருப்பவர்கள். இவர்கள் பேசுவது, மக்கள் ஏமாந்துபோகும் வகையில்தான் இருக்குமென்று நாம் சிந்திக்க இடமுண்டு. 2 பேதுரு 2:1ல் இவர்கள் “தந்திரமாய் நுழைவார்கள்” என்றும், “கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி” என்றிருப்பதால் இவர்களைக் கண்டுபிடிப்பது லேசான காரியமாக ஒருபோதும் இருக்க முடியாது. அவர்கள் வசனத்தில் மிக தேர்ச்சிபெற்ற மேதாவிகளைப் போல்தான் இருப்பார்கள் “ஆட்டுத்தோலை போர்த்தி இருப்பார்கள்” என்று கூறப்பட்டிருப்பதாலும் “தந்திரமாய்” என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டிருப்பதாலும் இவர்களை அவ்வளவு சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம் என்ற மனக்கோட்டையை முதலாவது விட்டுவிட வேண்டும். கள்ளப்போதகங்களை இவர்கள் வாயிலிருந்து அவ்வளவு லேசாக கேட்டுவிட முடியாது.

சிலர் நினைப்பதைப்போல் இவர்கள் வாழ்க்கை முறையும் ஒழுங்கற்றதாக இருக்கும் என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதையும் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியாதபடிதான் இருக்கக்கூடும்.

ஆகவே இவைகளை ஆழ்ந்து சிந்திக்கும்போது, இவர்களைக் குறித்து நாம் எதிர்பார்க்கக்கூடியது, இவர்கள் பலவகைகளிலும் போற்றத்தக்கதான நிலையில்தான் இருப்பார்கள். இவர்கள் பிரசங்கம் வசீகரமாகவும் கிறிஸ்தவ இறையியலில் (doctrine) குறைவில்லாமலும் இருக்கும். பல விதங்களிலும், கோணங்களிலும், பார்க்க, கேட்க விரும்பப்படத் தகுந்தவர்களாக இருப்பார்கள் என்பதில்  சந்தேகமிராது. இவர்கள் உபயோகிக்கும் மொழி, சொற்றொடர்கள் யாவிலும் எந்தக் குறையும் இல்லாமல் சமாளித்துக்கொள்ளும் திறமை இவர்களுக்கு இல்லாவிட்டால் “ஆட்டுத் தோலை போர்த்தியிருப்பதான” விவரிப்பு வசனத்தில் இருக்காது. இவர்களைத் தப்புக்கணக்கு போட்டுவிடும்படியான அடையாளங்களை லேசில் கண்டுபிடித்துவிட முடியாதது.

அப்படியானால் இவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாதா என்ற கேள்விக்குப் பதில்: கண்டுபிடிக்க முடியும், ஆனால் அது  வெகு சுலபமான காரியமாயிருக்காது என்ற பதில் கொடுக்கலாம். அப்படியானால் எப்படி என்ற கேள்விக்கு பதில்: அவர்களை இரண்டு படிகளில் (two steps) கண்டுபிடித்துவிடலாம். இதை விளங்கிக்கொள்ள முதலாவது வசனத்தை ஆராய்வோம்: வ-16ல் “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்பதை கவனமாக சிந்தித்துப் பார்த்தால், அவர்களுடைய கனியாகிய பிரசங்கத்தின் மூலமாகவும், அவர்கள் வாழ்க்கை முறையையும் கவனித்துப்பார்த்தால் அவர்களின் உண்மை நிலையை அறிந்துகொள்ளலாம். ஒருவனுடைய போதிக்கும் விதமும், வாழ்க்கை முறையும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாக இருக்குமாதலாலும், அவர்கள் கனிகளினால் என்று கூறியிருப்பதாலும் இவை இரண்டையும் இணைத்துப் பார்க்க முடியும்; அப்படிப் பார்க்கும்போது அவர்களுடைய உண்மை நிலையை கண்டுபிடிக்க வழியிருக்கும் என்று தெரிகிறது. ஆனால் சற்றுமுன் அவர்களுடைய போதனையில் எந்த அடையாளமும் கண்டுபிடிக்க இயலாது என்று பார்த்தோமல்லவா; அப்படியானால் இது முரண்பாடாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அப்படியல்ல அவர்கள் போதனை பல விதங்களில் பிழையில்லாது தோன்றினாலும் அவர்கள் உண்மை நிலையைக் கண்டுபிடிக்க ஒரேயொரு வழி இருக்கிறது. இதை வேறு விதமாக கூறினால், அவர்களின் போதனையில் எந்த கள்ளப்போதகமும் (heresy) கண்டுபிடிப்பது கடினம். அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்தியிருப்பதால் அவ்வளவு லேசாக அவர்கள் இயற்கை நிலையைக் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால் அவர்கள் போதனையிலிருந்து மட்டுந்தான் அவர்களை கண்டுபிடிக்க முடியுமென்றால் இது ஒரு புதிராகத்தான் இருக்கிறது. ஆனால் இது உண்மையான ஆடாக இராததினால் இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இல்லாமல் இருக்காது. அந்த கோணத்தில் பார்க்கும்போது ஒரு ஆவிக்குரிய அனுபவம் நிறைந்த விசுவாசியால் மட்டும் அதை கண்டுபிடித்துவிட முடியும். இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளால் முடியாத காரியம் என்று ஒன்று இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம் (ஒரு கழுதை சிங்கத்தோலை போர்த்தி சிங்கம் மாதிரி தோன்றினாலும், இதால் சிங்கம் போன்று கர்ச்சிக்க முடியாதல்லவா. அவ்விதமே) இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளால், இடுக்கமான வாசலில் பிரவேசிப்பதை ஆதரித்து பேச இயலாது. அது ஒன்றுதான் இவர்களின் சுயரூபத்தைக் கண்டுபிடிக்க வழி. இடுக்கமும் வழி நெருக்கமுமான பாதையில் போகும் அவசியத்தை வ.14 இவர்களால் ஒருநாளும் பேச இயலாது. இதை ஒரு சொற்றொடரில் கூறவேண்டுமானால், இவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் என்பதில் இவர்கள் சுய நிலையை (ஓநாய்கள் என்பதை) காண இயலாது. ஆனால் இவர்கள் என்ன சொல்லமாட்டார்கள் என்பதில்தான் இவர்களுடைய சுயரூபத்தைக் காணமுடியும். இவர்கள் சொல்லும் காரியங்களில் அநேக அருமையும் பெருமையுமான சத்தியங்கள் அடங்கியிருக்கும் அதைக் கொண்டு எல்லோருடைய போற்றுதலையும் பெற்றுக்கொள்ளுவார்கள். ஆனால் ஆவிக்குரிய இன்றியமையாத சிலவற்றை இவர்கள் சாமர்த்தியமாக, போதிக்காமல் விட்டுவிடுவார்கள். இதிலே இவர்களின் வஞ்சனையான சுயரூபத்தைக் கண்டுபிடித்துவிடலாம். இதில் முக்கியமானது, “இடுக்கமும் வழி நெருக்கமுமான பாதையில் செல்லும்” அவசியத்தை இவர்கள் ஒரு நாளும் பேசமாட்டார்கள்.

மற்றபடி இவர்களுடைய வேதாகம பாண்டித்துவமும், வசீகரமான சொற்பொழிவுகளும், சபையில் பெரும்பாண்மையோரின் மனப்போக்குக்கு ஏற்ற விதங்களில் இருப்பதால், எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெறுவதுமல்லாது அநேக விதங்களில், இப்படிப்பட்ட போதகர்களை தேடிப்பிடிக்க ஆவலாக இருக்கும் விதத்தில் இவர்கள் நடந்துகொள்ளுவார்கள். எண்ணிறந்தவைகளில் இவர்களுடைய ஓநாய் உருவம் தெரியவே தெரியாது. இவர்களுக்கு அநேக சபைகளில் நல்ல வரவேற்பு இருக்கும். புராதன சபைகளானாலும் சரி, தற்காலத்துக்கு ஏற்றபடியான வழக்க பழக்கங்களுள்ள சபைகளானாலும் சரி, சுவிசேஷ சபைகளானாலும் அதற்கு ஏற்றாற்போல வசீகரமாக பேச்சிலும் நடத்தையிலும் நடந்துகொள்ளுவார்கள்.

அப்படியானால் இடுக்கமும் வழி நெருக்கமுமான பாதையென்றால் என்ன என்ற கேள்வி, இந்த நிலையில் அநேகருக்கு ஏற்படுவது இயற்கையே. அதையும் இங்கு நன்றாக விளங்கிக்கொள்ளுவோம். இதை விளங்கிக்கொள்ள 2 பேதுரு 2:1 வசனத்தை முதலில் கவனிப்போம் “கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள் . . . “ என்றிருக்கிறது. “ஜனங்களுக்குள்ளே” என்பது பழைய ஏற்பாட்டின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் நடுவே கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அதில் ஒரு உதாரணம் எரே 6:14ல் இப்படி எழுதியிருப்பதைக் காணலாம். “சமாதானமில்லாதிருந்தும் சமாதானம், சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்”. இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் எரேமியா போன்ற உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு அநேக விதங்களில் இடையூறாக இருந்து வந்திருக்கிறார்கள். பொய்யான தீர்க்கதரிசனங்கள் கூறி மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர்.

அவ்விதமே மக்களுக்கு பொய்யான, மாய்மாலமான ஆறுதல்கள் கூறி, அவர்கள் அழிந்துபோகும்படி செய்தனர். இவர்கள்தான் ஆட்டுத்தோலினால் தங்களை மறைத்துக்கொண்டு ஓநாய்களாக செயல்பட்டார்கள் என்பதற்கு அடையாளமாக இருந்திருக்கிறார்கள். இது பழைய ஏற்பாட்டின் காலத்தில் மட்டுமல்லாது இக்காலத்திலும் நடந்து வருகிறது என்பதைத்தான் பேதுரு அப்போஸ்தலன் அந்த நிருபத்தின்மூலம் மக்களை எச்சரிக்கிறார். இதைத்தான் மத்தேயு 7:15ல் படிக்கிறோம்.

எந்த விதத்தில் இவ்வித பயங்கர ஆபத்து இக்காலத்திலும் நடைபெறுகிறது என்பதை இங்கு விவரிக்கிறேன். இவர்கள் பிரசங்கிக்கையில் எந்த இறையியலும் (doctrine) இல்லாது, வேதாகமத்திலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதை சொற்சாதுர்யத்தோடும் மற்றவர்கள் பரவசப்படும்படியாகவும் பேசுவார்கள். இவர்கள் இறையியல் சாஸ்திரத்திலும், மற்ற கல்லூரிபடிப்பிலும் பட்டங்கள் பெற்றவர்களாயிருப்பதால் இவர்களை லேசில் சந்தேகிக்க முடியாது. “என் ஜனத்தின் காயங்களை மேற் பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” என்று குறிக்கப்பட்டிருப்பதற்கிணங்க, இவர்கள் தங்களை சந்தேகிக்கப்படாத வகையில், போதனையிலும் தங்கள் நடத்தையிலும் ஜாக்கிரதையுள்ளவர்களாக நடந்துகொள்ளுவார்கள். ஆனால் இவர்கள் தங்கள் போதனைகளில் மட்டுமல்லாமல் நடத்தையிலும் கள்ளத்தீர்க்கதரிசிகளாகத்தான் இருப்பார்கள். நடத்தையைக் குறித்த விளக்கங்களை இவர்களுடைய போதனைகளைக் குறித்த எச்சரிப்புகளுக்குப் பின் விவரிப்போம், விசேஷமாக “மரமும் கனியும்” என்ற தியானக் கட்டுரையில்.

இவர்களுடைய போதனையில் பரிசுத்தம், பரிசுத்தபாதையில் முன்னேற்றம் இவைகளைப் பற்றி விளக்கம் இருக்காது. கடவுளின் அன்பை பற்றியும், மற்றவர்களை அதிகம் பாதிக்காதவகையிலான பொதுவான காரியங்களைக் குறித்தும் மிகவும் திறமையாகவும் மற்றவர்கள் கவனத்தைக் கவரக்கூடிய வகையிலும், மக்களுக்கு ஏற்றவாறு பேசுவதிலும் வல்லவர்களாயிருப்பார்கள். கடவுளின் உக்கிர கோபம், நியாயத்தீர்ப்பு, பாவத்தின் அகோரம் முதலிய காரியங்களைக் குறித்து சிறிதும் பேசமாட்டார்கள். இவற்றை இவர்கள் மறுப்பார்களா, அல்லது இதிலே இவர்கள் நம்பிக்கையற்றவர்களா என்று கேட்போமானால், அதற்கு பதில்: அப்படியல்ல, இவர்கள் இறையியல் (doctrine) கல்வியில் மிகவும் தேர்ச்சிபெற்றவர்களல்லவா, ஆகவே யாரும் இதில் இவர்களை சந்தேகிக்கமாட்டார்கள். ஆனால் அவைகளைக் குறித்து பேசாமல் இருந்துவிடுவார்கள். கடவுள் அன்புள்ளவர், அவரை நாம் முழுமனதாலும், ஆத்துமாவாலும் அன்புகூர வேண்டும் என்பதான போதனைகளில் குறை வைத்துக்கொள்ளாததால், இவர்களை கள்ளத்தீர்க்கதரிசி என்று யாரும் சந்தேகிக்கமாட்டார்கள். இவர்கள் போதிப்பதில் ஒன்றும் வசனத்திற்கு விரோதமாய் இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் மக்கள் இவர்கள் சுயரூபத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் ஜனங்களை இரட்சிப்பின் பாதையில் நடத்த அத்தியாவசியமான அநேக காரியங்களை லாவகமாக விட்டுவிடுவார்கள். இரட்சிப்புக்கடுத்த எந்த முக்கிய காரியங்களையும் தெரிந்திருந்தும் அதை சொல்லத் தவறுவது கள்ளப்போதகத்துக்கு சரிசமானமானது என்று தெரிய வேண்டும்.

இப்படிச் செய்வதில் இவர்கள் பேர்போனவர்களாக இருப்பதால்தான் இவர்களை ஆட்டுத்தோலினால் தங்களை மறைத்துக்கொண்டிருக்கும் ஓநாய்கள் என்று கர்த்தர் அழைக்கிறார். இப்படி இவர்கள் மறைத்துப் போதிப்பதால் இவர்கள் போதனைகள் கேட்கும் மக்களுக்கு எழுப்புதலாக இருக்கும்; ஆனால் அது அவர்களை அழிவுக்கு நடத்தும் வழியாகும். போதகர்கள் மக்களை நீதியின் பாதையில், பரிசுத்தத்திற்கடுத்த பாதையில் நடத்த ஏற்பட்டவர்கள்.

இந்த கள்ளப்போதகர்கள், மனிதன் மாற்ற இயலாத நித்தியமான நிலையை நோக்கிப்போகிறான், அதற்கு ஆயத்தம் செய்துகொள்ளும் காரணத்தினால்தான் இவ்வுலகில் அவன் ஜீவிப்பது, இதில் தவறிவிட்டால், அவன் இவ்வுலக முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் அவனுக்கு இவ்வுலகில் ஜீவிப்பதில் எந்த பயனும் இல்லை என்பதான போதகங்கள் அநேகருக்கு கேட்க இன்பமாயிராததால், அது போன்ற போதகங்களை ஜனங்கள் முன்பு ஒருபோதும் கொண்டுவர மாட்டார்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் கடவுளின் நியாயத்தீர்ப்பைப் பற்றியாவது கடவுளின் உக்கிர கோபாக்கினை என்பதைக் குறித்த போதனையையாவது யாரும் பேசக் கேட்டதில்லை. ஏன்? இது, கேட்க செளகரியமாக இராது. ஆனால் இது வேதாகமத்திலுள்ள முக்கிய போதனைகளில் ஒன்றாகும் அல்லவா. அதைப் பற்றிய விவரம் மக்களுக்கு தெரிய வேண்டாமா? இவர்கள் பேச விரும்பாத இன்னொரு போதனை பாவத்தைப்பற்றியும் பாவத்தின் வஞ்சனை; அளவுகடந்த பாவமுள்ளதாகும் பாவம் (the exceeding sinfulness of sin) ரோமர் 7:13 முதலியன.

சிலுவையைப்பற்றி இவர்கள் பேசுவது என்ன? அதைக்குறித்து சிலாகித்துப் பேசுவார்கள். கண் கலங்கும்படி பேசுவார்கள். கல்வாரி மலைதனில் அவர் பட்ட துயரங்கள் பற்றி அவர்கள் வருணிப்பு அவர்களுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. மொழிபெயர்ப்பாளரின் விளக்கம் (இதில் மயங்கி தங்கத்தில் சிலுவை செய்து கூட மக்கள் அணிகலமாக அணிந்துகொள்ளுவார்கள்.) ஆனால் கிறிஸ்தேசுவின் கிருபாதார பலியின் தன்மை, மக்களின் பாவத்தை பாவமில்லாத தேவகுமாரன் சுமந்து நமக்காக பாவமாகி நமக்கு வர வேண்டிய தண்டனையை தன் பிதாவினிடமிருந்தே தானே ஏற்றுக்கொண்டது, அவர் இந்த விதத்தில் தன்னை தியாகம் செய்யாதிருந்தால் நம்முடைய பாவங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படாமல் நாம் யாவரும் என்றும் அவியாத அக்கினிக்கடலில் போய் சேர்ந்திருக்க வேண்டியது முதலிய காரியங்களை விளக்கி, மக்கள் பாவத்தை அருவருத்து தள்ளவும் பரிசுத்த பாதையில் செல்ல அவர்களை ஊக்கப்படுத்தும் போதகமும் அவர்களிடமிருந்து ஒரு நாளும் வராது.

இரட்சிப்புக்கடுத்த முக்கியமான படிகளான விசுவாசம், மனந்திரும்புதல் இவைகளைப் பற்றியும் பேரளவிற்கு சொல்வார்களேயொழிய அப்படியென்றால் என்ன, உண்மையான மனந்திரும்புதலுக்கும் தவறுதலான மனந்திரும்புதலுக்கும் வித்தியாசமென்ன என்பது போன்ற விளக்கங்கள் போதிக்கமாட்டார்கள். இயேசுவை, கிறிஸ்து என்று பிசாசுகூட விசுவாசிக்குமே, அப்படியிருக்க, அதற்கும் இரட்சிப்புக்கான விசுவாசத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதைப் போன்ற போதகம் ஒரு நாளும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

இரட்சிப்புக்கடுத்த விசுவாசமில்லாமல் இரட்சிக்கப்படவே முடியாதே; அவ்விதமே இரட்சிப்புக்கடுத்த மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் எப்படி கடவுளிடம் தஞ்சம்புக முடியும்! ஆனால் இவர்கள் அவைகளைப்பற்றி வல்லமையாகப் பிரசங்கம் பண்ணுவதான தோற்றமிருக்குமே தவிர, அது மக்களை ஒரு நாளும் இரட்சிப்புக்கான பாதையில் நடத்தாது. ஆகவேதான் அவர்களை ஆட்டுத்தோலை போர்த்தின ஓநாய்கள் என்று விஸ்தரிக்கிறார் ஆண்டவர். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம் (இப்படிப்பட்ட கள்ளத்தீர்க்கதரிசிகளிடமிருந்து நான் தப்பித்தது கடவுளின் அளவுகடந்த கிருபை. ஆனால் பலர் ஏமாற்றப்பட்டது நான் கண்கூடாகக் கண்ட காட்சி. இது என்னுடைய பழையகாலத்து அனுபவம்) அப்படிப்பட்ட கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு இப்போதும் குறைவில்லை.

பியூரிடன் என்ற மாபெரும் விசுவாசிகள் இருந்த காலத்தில் இவ்விதம் நடந்திருக்க முடியாது. அல்லது ஜார்ஜ் வொயிட் ஃபீல்ட், ஜான் வெஸ்லி, ஜோனதான் எட்வர்ட்ஸ் முதலியோர் இரட்சிப்பு அடைந்த காலத்தில், கடவுளின் நியாயத்தீர்ப்பைக் குறித்து அவர்கள் வேதாகமத்தில் படித்து குலைநடுங்கிப் போனார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. இப்போது இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளால் அதைக்கேட்க ஒரு இன்பப் பொழுதுபோக்காகப் போய்விட்டது. ஃபேரி டேல்ஸ் (Fairy tales) கதைகள் போன்று இவைகள் கூறப்படுகின்றன. மோட்சப் பிரயாணம் கதையை எழுதிய ஜான் பன்யன் போன்ற அநேக விசுவாசிகள் அவர்கள் மனந்திரும்பிய காலத்தில் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் மனம் உடைந்து சோகமாயிருந்தார்கள் என்று படிக்கிறோம்.

மனந்திரும்புதல் என்றால் ஒரு பாவி கடவுள் முன் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது, தேவன் தன்னை எவ்வளவு அருவருப்பான பாவியாய் காண்பார், மன்னிப்பு பெறாவிட்டால் கடவுளின் உக்கிர கோபாக்கினைக்கு அவன் பங்காகியிருக்க வேண்டுமே என்று எண்ணுகையில் வார்த்தைக்கடங்காத அதிர்ச்சியும் மன நெகிழ்ச்சியும் அவனுக்கு ஏற்படுகிறது. மொழி பெயர்ப்பாளரின் விளக்கம் (“நீ அடிக்கிற மாதிரி காட்டு, நான் அழுகிறமாதிரி நடிக்கிறேன்” என்ற கதையாக மனந்திரும்புதல் என்பது இவர்கள் சொல்லிக்கொடுப்பது!) இப்படிப்பட்ட நிலையை உருவாக்குவதில் இந்த கள்ளப்போதகர்களுக்கு யாரும் நிகரில்லை. இப்படிப்பட்ட இவர்களுடைய போதகத்தைக் கேட்டு, 1 யோவான் 2:15ல் கூறியிருக்கிற பிரகாரம் ஒருவன் “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்” என்ற போதனையின்படியோ அல்லது, “தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்” என்பது போன்ற போதகத்தின்படியோ செய்கிறவர்களாக யாரையும் காணமுடியுமா? ஒருபோதும் ஆகாது. இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளால் யாரையும் அவ்வித மனநிலைமைக்கு கொண்டுவர ஒருபோதும் முடியாது.

முடிவாக, இப்படிக் கூறலாம். இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் இடுக்கமான வாசல் வழியாகச் செல்லும் அத்தியாவசியத்தை ஒருபோதும் வற்புறுத்தமாட்டார்கள். ஆனால் அவ்வழியாய் போகாத ஒருவனும் இரட்சிக்கப்பட முடியாதே. பரிசுத்தம், பரிசுத்த பாதையில் முன்னேறுவது போன்ற போதனை இவர்களிடம் ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது. இந்த கள்ளப்போதகர்களுக்கு உண்மையான பரிசுத்தம் என்றால் என்னவென்று தெரியாது. தெரியுமோ தெரியாதோ அவர்கள் அதைக்குறித்து ஒருநாளும் போதிக்கமாட்டார்கள். அவர்களுக்கு பரிசுத்தம் என்பது ஒரு சில பாவங்கள் செய்யாதிருந்தால் போதுமானது, மோட்சம் சென்றுவிடலாம் என்பதுதான் இவர்கள் போதனையாயிருக்கும். மற்றபடி 1 யோவான் 2:15, 16ல் கூறியிருக்கிறபடி “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாமிசத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல. அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” என்பது போன்ற போதனைகள் இவர்களுடைய பிரசங்கத் திட்டத்தில் இராது. “பரிசுத்தம் என்பது சுலபமாக நாமே ஏற்படுத்திக் கொண்ட சில ஒழுங்குகளில் இருந்தால் போதுமானது; தேவன் அன்புள்ளவர், அவருக்குத் தெரியும் நம்முடைய பெலவீனங்கள். ஆகவே இவைகளைக் குறித்து கவலை வேண்டாம். இயேசுக் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டால் போதும், அவர் நம்மை கைவிடமாட்டார்” என்பது போன்ற போதனைதான் இவர்களுடையது. இவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், இவர்களால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.” இதுதான் கேட்டுக்குப்போகிற வாசல், வழி விசாலமுமாயிருக்கிறது; அதன் வழியாகப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்”. இந்த விசாலமான பாதையில் தங்களையுமறியாமல் போக வைக்கும் திறமை படைத்தவர்கள்தான் இந்த ஆட்டுத்தோலை போர்த்தியிருக்கும் ஓநாய்களைப் போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள்.

தற்சோதனை செய்துகொள்ளல் இவர்கள் சோதனையில் இராது. அப்படி செய்வது தவறு என்றும்கூட போதிக்கப் பார்ப்பார்கள். “இயேசுவையே நோக்கிப் பார்; உன்னைப் பார்க்காதே” என்று அடிக்கடி சொல்லிக்கொடுப்பார்கள். ஆகவே ஆண்டவர் எச்சரிப்பாக சொல்லிய அநேக தற்சோதனைக்கடுத்த காரியங்களை விட்டுவிடுவார்கள்.

இது மற்றவர்களை குறை கூறுவதைப் போல் இருக்கலாம். அதேசமயம் அன்பாக, சாதுவாக பேசுபவர்களெல்லாம் பரிசுத்தவான்களென்று எடுத்துக்கொள்வதும் ஆபத்தில் முடியும்.

இடுக்கமான வாசலில் பிரவேசிப்பதின் அவசியத்தைத் தவிர இவ்வித கள்ளத்தீர்க்கதரிசிகளின் போதகத்தில் மயங்கி, நம்மையுமறியாமல் விசாலமும் கேட்டுக்குப் போகிற வழியில் போய்கொண்டிருக்கிறோமா என்பதையும் தெய்வ வசனத்தின் அடிப்படையில் நம்மை நாமே தற்சோதனை செய்துகொள்ளத் தவறக்கூடாது.

____________________________________

மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘False Prophets Mt 7:15, 16a’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 22 of Vol 2 (pp. 497-506), from: “Studies in the Sermon on the Mount”  By Dr. D. Martyn Lloyd-Jones.
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.

%d bloggers like this: