கற்பாறையா மணலா? (மத் 7:24-27)
Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran
Rock or Sand? (Matthew 7:24-27)
ஆண்டவர் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த எச்சரிப்பில் இரண்டு வித மனிதர்களையும், இரண்டு வித வீடுகளைப் பற்றியும் படித்தோம். இவ்வித உவமானங்களில் நாம் முதலாவதாக கவனிக்க வேண்டியது: அதில் படமாக விவரிக்கப்பட்டிருக்கிற அந்த காட்சியில் நாம் காணக் கூடிய விவரங்கள்; அதன் பின்பு அந்த உவமானங்களில் அடங்கியிருக்கும் ஆவிக்குரிய சத்தியங்களாகும். இந்த விதத்தில்தான் இதைப் படிக்க ஆரம்பித்தோம். இப்போது இதன் தொடர்ச்சியாக இன்னும் சில விவரங்களை கவனிப்போம்.
இது சம்பந்தமாக நாம் இப்போது கவனிக்கப்போவது, கிறிஸ்தவனல்லாத அல்லது பேர் கிறிஸ்தவன் (nominal Christian) ஒருவன் தன்னை ஒரு கிறிஸ்தவனாகப் பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவன் எப்படியிருப்பான்? அவன் தன்மை குணாதிசயங்கள் முதலியன எப்படியிருக்கும்? என்பதான விவரங்களை கவனிப்போம். இதை இரண்டு விதங்களில் விஸ்தரிக்கலாம். ஒன்று பொதுப்படையாக, மற்றொன்று தனிப்பட்ட விதமாக.
பொதுப்படையான விஸ்தரிப்பு:
இவை, நமக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட புத்தியில்லாத மனிதனிடம் நாம் கண்ட அதே குணாதிசயங்கள்தான் இவனிடமும் பார்க்கலாம். இவன்தான் தன் வீட்டை அஸ்திபாரம் இல்லாமல் மணலின்மேல் கட்டினவனுக்கு ஒப்பானவன். இவன் புத்தியில்லாதவன், எதையும் அவசரப்பட்டும், மேம்பூச்சாகவும் செய்பவன். இவன், இறையியல், சபைக்குரிய விசுவாச அறிக்கை இவைகளைக் குறித்து சிறிதும் சிந்தனையில்லாதவன். கிறிஸ்தவத்திலுள்ள கவர்ச்சிகரமானதும் வசதியுமான காரியங்களைக் குறித்து மட்டும் அக்கறைகாட்டுபவன்; ஆனால் எதைக்குறித்தும் யாதொரு சிரமத்தையும் தன்மேல் போட்டுக்கொள்ளமாட்டான். கவனிக்க வேண்டிய விதிகள், ஆழ்ந்த அனுபவங்கள், நல்ல யோசனைகள், இவை போன்ற யாதொன்றிலும் எவ்வித அக்கறையும் விருப்பமும் சிறிதும் இராதவன்; அறிவாளிகள் கூறும் யோசனைகளைக் கேட்டல், தெரியாதவைகளை கற்றுக்கொள்ளுதல் முதலியன குறித்து ஏளனமான மனப்பான்மையுடையவன். இப்படிப்பட்ட குணாதிசயங்களைத்தான் இவன் உடையவனாக இருப்பான்.
இவன் செய்யும் காரியங்கள் எத்தகையதாக இருக்கும் என்று இவனுக்குள்ள குணாதிசயங்களிலிருந்து நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.
தனிப்பட்ட விதமான விஸ்தரிப்பு:
இவன் கலப்படமில்லாத சுயநலக்காரன். எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கக் கூடும் என்று திட்டமிட்டுக்கொள்ளும் குணாதிசயம் படைத்தவன். தவிர, எதிலும் உழைப்பு இல்லாமல், அலுப்பு இல்லாமல் சுலபமாகக் காரியங்களைச் செய்துகொள்ள முடியுமா என்பதைக் குறித்து திட்டமிட்டுக்கொள்ளுவான். இப்படிப்பட்ட மனநிலையில் இவன் ஊறிப்போய் இருப்பதினால்தான், சுவிசேஷத்தைக் குறித்த போதனையில் எதையும் ஆழ்ந்து சிந்திப்பது என்பதை இவன் அகராதியில் காண முடியாது.
இரண்டாவதாக, எந்த போதனையிலும் அவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும் அம்சங்களை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்திக்கொள்ளுவான். உதாரணமாக கடவுளின் அன்பு என்ற அம்சம் அவனுக்கு அதிகப்பிடித்தமானது. ஆனால் கடவுளின் நியாயம், நீதி என்பதான அம்சங்களை விட்டுவிடுவான். அவ்விதமே கடவுளின் பரிசுத்தம், நீதி முதலியவைகளை கவனிக்கமாட்டான். உதாரணமாக யோவான் 3:16 வசனத்தை எடுத்துக்கொண்டால் “இவ்வளவாக அன்புகூர்ந்தார்” என்பது மட்டுந்தான் அவன் மனதில் தங்கும். ஆனால் அதில், அதை ஆண்டவர் நியமித்திருக்கும் நியமனத்தின்படி பிரயோகப்படுத்தாத மக்களுக்கு ஏற்படக்கூடிய பயங்கர அழிவைக்குறித்த அம்சம் சிறிதும் அவன் கண்ணுக்குப்படாது. கடவுளின் உக்கிர கோபம் என்ற அம்சத்தில் ஒரு துளியும் அவன் காதில் போட்டுக்கொள்ளமாட்டான்.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்: வேதாகமத்தை நாம் தியானிக்கையில், அந்த வசனங்களை வெகு கவனமாகப் படித்தோமா? நம்மை முழுவதுமாக தற்சோதனை செய்யும்படியாக அதை உபயோகித்தோமா என்பது போன்ற விவரங்களில் கவனம் செலுத்தினாலொழிய, வேத வாசிப்புகளில் யாதொரு பயனும் இராது. நம் கருத்தில்கொண்ட இந்த மனிதன் தன்னை குத்திக்காட்டும் வசனம் எதுவானாலும் அதை அவன் ஜாக்கிரதையாக விட்டுவிடுவான். தனக்கு திருப்தியும், உற்சாகமும் தரும் வசனங்கள் மட்டுந்தான் அவன் கவனத்திற்கு வரும். பாவத்தைக் குறித்த இறையியலை (doctrine of sin) அவன் தெரிந்து கொள்ள ஒருபோதும் விரும்பமாட்டான், ஏனெனில் அது அவன் மனதை வெகுவாகப் பாதிப்பதால். கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற மிகவும் விரும்புவான். ஆனால் கடவுளை விரும்பமாட்டான். செளகரியமாக வாழ விரும்புவான்; ஆனால் கிறிஸ்துவின் குணம் தனக்கு இருக்க வேண்டும் என்ற ஆவல் சிறிதும் இல்லாதவன். மணலின்மேல் வீட்டைக்கட்டின புத்தியில்லாதவனைப் போன்று, அந்த வீட்டை அவசர அவசரமாகக் கட்டி முடித்து அதில் கவலையில்லாமல் வசிக்க ஆசைப்பட்டவனைப் போன்று அலுப்பு இல்லாமல் எதையும் அனுபவிக்க ஆசைப்படும் மனிதனாக இவன் இருப்பான். தன்னுடைய ஜீவியத்தில், எதையும் தன்னுடைய நோக்கம், தன்னுடைய திட்டம், தன்னுடைய செளகரியம், தனக்கு ஏற்ற விதிமுறைகள் முதலியவற்றை பின்பற்றினதாகவே அமைத்துக்கொள்ளுவான். மற்றவர்களின் புத்திமதிகளைக் குறித்து எரிச்சல் அடைவானே தவிர அவற்றை உபயோகித்துக் கொள்ளமாட்டான். இப்படிப்பட்ட மனநிலையை உடையவன் ஒரு உறுதியான வீட்டை ஒருநாளும் கட்டமுடியாது.
இதற்கு மாறாக, ஒரு உண்மையான கிறிஸ்தவனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை இப்போது சற்று கவனிப்போம். சுருக்கமாய்ச் சொல்லப்போனால் “பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனே” என்று கூறினால் மிகையாகாது. ஆனால் இதை கிரியைகளினாலே நீதிமானாகுதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவனும் தன்னுடைய கிரியையால் நீதிமானாக முடியாது என்று தெரிந்திருக்க வேண்டும். ஒரு உண்மையான கிறிஸ்தவன் மலைப்பிரசங்கத்திலுள்ள புத்திமதிகளை கடைபிடித்துவிட முடியும் என்று நினைக்கமாட்டான். ஏன்?
ஏனென்றால் மலைபிரசங்கத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருக்கும் வசனங்கள் அவைகளை அனுசரிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதால், மலைப்பிரசங்கத்தின் கருத்தை மொத்தத்தில் எடுத்தக்கொள்ளவேண்டும். உதாரணமாக “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்ற வசனத்தை எடுத்துக்கொண்டால், ஒருவன் வாழ்நாள் முழுவதும் முயற்சிசெய்தாலும் அது அவனால் கடைபிடிக்க முடியாது. அவ்விதமே முதல் பத்து வசனங்களிலுள்ள கருத்துக்களும். ஆகவேதான் கிரியையினால் நீதிமானாகுதல் என்ற கருத்தை இங்கு கொண்டுவரக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் அந்த அதிகாரம் கடைசியில் “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்” என்ற கட்டளையை நம்மில் யாராவது கைக்கொள்ளக் கூடுமா?!
அப்படிப்பட்ட உபதேசத்தை எதிர்பார்த்தால், அது புதிய ஏற்பாட்டு முழுக்கருத்தையுமே பொய்யாக்கிவிடும். நம்மால் இவற்றை ஆசரிக்க முடியாததால்தான் தேவன் தன்னுடைய குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பி, நாம் செய்ய வேண்டிய இக்காரியங்களை அவர் நமக்காகச் செய்யச் செய்தார். ரோமர் 3:20ல் எழுதியிருக்கிற பிரகாரம் “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” ஒருவனின் ஜீவியத்திற்குள் பாவமேயில்லாத பூரணபரிசுத்தத்தை அடைவது என்பது வேதாகமத்தில் கூறப்படவில்லை. தவிர, “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்” 1 யோவான் 1:8 என்ற வசனத்தையும் மறந்துவிடக்கூடாது.
அப்படியென்றால் நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? யாக்கோபு இதை சொற்சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். “கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது”, யாக்கோபு 2:26. விசுவாச ஜீவியமென்பது கவலை கஷ்டங்களில்லாத சுலபமானதொன்று என்றும் நினைத்துவிடக் கூடாது. இந்த இரண்டு நிலைகளுக்குமுள்ள வித்தியாசமென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். கிரியை இல்லாதது என்பது, “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறது. நான் என் மனது, வாக்கு, நடத்தைகளில் கர்த்தருக்கு கீழ்ப்படிகிறவனாக இருந்தாலொழிய அது பிரயோசனம் இல்லாத (அர்த்தமற்ற) மாய்மாலமான வெளிவேஷமாகிவிடுகிறது; விசுவாசத்தின் அறிகுறியான கிரியை இல்லாத, பிரயோசனமில்லாத செத்த விசுவாசமாகப் போய்விடுகிறது.
உண்மையான விசுவாசம் உயிருள்ளது; அப்படிப்பட்ட விசுவாசம் அதைக்கொண்டுள்ள மனிதனின் தன்மையையும் அதன் பலனாகிய அவன் செய்யும் கிரியைகளிலும் பிரதிபலிக்கிறது. விசுவாசம் இங்கு இரு விதங்களில் செயல்படுகிறது. அதாவது அந்த மனிதனின் வெளித்தோற்றத்தை மட்டுமல்லாமல் அவன் பேசும் பேச்சையும் அவனுடைய நடத்தையையும், அவன் இருதயத்தின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு மனிதனின் வெளித்தோற்றத்திற்கும், அவனுடைய பேச்சு, நடத்தைக்கும், அவனின் மனநிலைக்கும் பிரிக்க முடியாத நெருங்கிய சம்பந்தம் இருப்பதைக் காணலாம்.
உயிருள்ள விசுவாசம் ஒரு விசுவாசியின் முழு தோற்றத்தையும் (whole personality), (அறைகுறையான தோற்றத்தையல்ல), வெளிப்படுத்துவதாக இருப்பதைக் காணலாம். இதைச் சுருங்கச் சொல்வோமானால், யோவான் அப்போஸ்தலன் எழுதிய முதலாம், இரண்டாம் நிருபங்களில் எழுதியிருக்கிற பிரகாரம், “அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்.” (1 யோவான் 1:6). மேலும், “அவரை அறிந்திருக்கிறோமென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான். அவனுக்குள் சத்தியமில்லை.” (1 யோவான் 2:4). ஆண்டவர் சொன்னதுதான் மேற்கூறிய வசனத்தில் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுகிறவனெல்லாம் மோட்ச ராஜ்யம் செல்ல முடியாது” என்று சொன்னார் அல்லவா? பின் யார்தான் போகக்கூடும் என்ற கேள்விக்கு விடையாக அவர் கூறியது, நாம் ஏற்கனவே படித்த பிரகாரம், “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே”யன்றி வேறு யாரும் அங்கு செல்ல முடியாது என்று திட்டமும் தெளிவுமாகக் கூறிவிட்டார். மேலும் தீத்துவுக்கு எழுதின நிருபத்தில், எதற்காகக் கர்த்தர் தம்மைத்தாமே (கிருபாதார பலியாக) ஒப்புக்கொடுத்தார் என்று கவனிக்கும்போது, “நற்கிரியைகளைச் செய்யவும் பக்தி வைராக்கியமுள்ளவர்களாக்கவும் (அதற்கென்றே) அவர் நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாக்கி நம்மை சுத்திகரிக்கும்படிக்காகத்தானே என்று பார்க்கையில், இப்படி வெளித்தோற்ற கிறிஸ்தவர்களால் அவரை சந்திக்க முடியுமா என்று பார்க்க வேண்டாமா? இவ்வசனங்களையும் தவிர எபேசியர் 4:24இலும் 1 தெசலோ 4:7இலும் நாம் என்ன பார்க்கிறோம்? “தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்” என்கின்ற உண்மை தெளிவாக இருக்கிறதல்லவா? இங்கு நாம் பார்க்கும் புத்தியுள்ள மனிதனுக்கும் புத்தியில்லாத மனிதனுக்குமுள்ள வித்தியாசம், புத்தியில்லாத மனிதனுக்கு கர்த்தரின் மலைப்பிரசங்கம் பிடிக்காது. அது சம்பந்தமான போதனைகளை சிறிதும் விரும்பமாட்டான். இப்படியும் ஒருவன் இருக்கக்கூடுமா என்று நினைக்கத் தோன்றுகிறதா? அப்படிப்பட்டவனைத்தான் அஸ்திபாரமில்லாமல் மணலின்மேல் வீட்டைக் கட்டின மனிதனாக கர்த்தர் நமக்கு முன் நிறுத்துகிறார். வெளிப்பிரகாரமாக தன்னைக் கிறிஸ்தவனாக மற்றவர்களுக்கு காண்பித்துக்கொள்ளும் பழக்கமுடையவர்களில் சிலர் மலைப்பிரசங்கத்தைப் பற்றி மேன்மைபடுத்தி பேசக்கூட கற்றிருப்பார்கள். ஆனால் அந்த போதகத்தை ஒருநாளும் தங்கள் வாழ்க்கையில் அநுசரிக்க சிறிதும் விரும்பமாட்டார்கள்.
ஆனால் இதற்கு மாறாக, உண்மையான கிறிஸ்தவன் இந்த மலைப்பிரசங்கத்தை வெகு கவனத்தோடு படித்து தியானிப்பான். இங்கொன்றும், அங்கொன்றுமாக சில வசனங்களை மட்டுமல்லாது அதிலுள்ள முழு போதகத்தையுமே மிகுந்த பயபக்தியோடு படிக்கவும், தியானிக்கவும் அவைகளை எவ்விதம் தன் வாழ்க்கையில் பிரயோகப்படுத்தலாம் என்று ஆவலோடும் கவலையோடும், ஜெபத்தோடும் சிந்திப்பவனாக இருப்பான். கர்த்தருடைய வசனம் தன்னை குற்றப்படுத்துகையில் அதை தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுவான். அவை அவனை ஆவிக்குரிய விதத்தில் சுத்திகரிக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு நிரம்ப இருக்கும். “எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்த்தான் காணும்” என்பதை நன்றாக அறிவான். ஆனால் பிற்காலத்தில் அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் என்ற உண்மையை நன்றாக அறிவான். வேறு விதமாகச் சொல்லக்கூடுமானால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்குகிறவனாகவும் தன்னை முழுவதுமாக அதற்கு தாழ்மைப்படுத்துகிறவனாகவும் இருப்பான். வசனம் தன்னைக் குற்றப்படுத்தும்போது, “என் அபாத்திரத் தன்மையை எண்ணும்போது நான் கடவுள் சமுகத்தில் என்னை மிகுந்த குறைவுள்ளவனாகக் காண்கிறேன், தேவரீர் என்னில் கிருபை கூறும்” என்று கூறும் மனப்பான்மையில் தன்னை தாழ்மைப்படுத்துவான். அவன் நீதியின்மேல் பசியும் தாகமுமுள்ளவனாக இருப்பான். வசனம் ஒருவனை பாவமேயில்லாத பரிசுத்தனாய் இரு என்று கூறாமல், அவ்வித பரிசுத்த நிலையை அடைய பசியும் தாகமும் இருக்க வேண்டுமென்றுதான் கூறுகிறது என்பதை கவனிக்கத் தவறக்கூடாது.
ஒரு உண்மையான விசுவாசி நியாயப்பிரமாணத்தில் கூறியிருக்கும் கற்பனைகள் நியாயமானதே என்று அறிந்துகொள்கிறான். பரிசுத்தம் கிரியையில் மட்டும் இல்லை; அது அவன் இருதயத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை அவன் விளங்கிக்கொள்கிறான். பின் வருமாறு கருத்துள்ள பாடல்களை பாட அதிகம் விரும்புவான்:-
நீர் பட்ட வாதை யாவும் என் பாவ பாரமே.
இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே.
இதோ, நான் என்றுஞ்சாகத் தக்கவன் என்கிறேன்,
ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.
Tr. J. Ph. Fabricius 1791 P. Gerhandt 1676
இவ்வுலகில் உன் ஜீவியம் முடிவதற்குள் முழு பரிசுத்தத்தையும் நீ அடைய முடியாது என்பது உனக்குத் தெரியும். ஆனால் உன் ஆவலும் விருப்பமும் அதை நோக்கியே இருக்கும். இதை அடைய உன் ஜீவிய காலமுழுவதும் பரிசுத்த ஆவியானவரின் உதவியை தொடர்ந்து நாடிக்கொண்டேயிருப்பாய். இதுதான் நீ கொண்டிருக்கும் விசுவாசத்தின் சாராம்சம். இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவன் புத்தியுள்ளவன், தன் வீட்டை கற்பாறையின்மேல் கட்டினவனுக்கு ஒப்பாவான். அப்படிப்பட்டதான வீடு கட்டப்படவில்லையானால் அந்த கட்டிடம் நிலைநிற்காது.
இந்த விசுவாசத்தோடு இயேசுக்கிறிஸ்துவை பின்பற்று. நீ பரிசுத்தம் பெற அவர் உன்னை நடத்துவார். “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே”.
மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்
இந்த தியானக் கட்டுரையில் விசேஷமாக முதல் பக்கத்தில் ‘இறையியல்’ (Theology), “விசுவாச அறிக்கை” (Confession of Faith) என்ற இரண்டு பதங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் டாக்ட்ரின் (Doctrine) என்ற ஒரு பதமும் உங்கள் கவனத்திற்கு வரலாம். இப்பதங்களுக்கு சிலருக்கு விளக்கங்கள் தேவைப்படலாம். அப்படி தேவைப்பட்டவர்களுக்கு பயன்படும் விதத்தில் சில விவரங்களை இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.
ஐரோப்பிய மொழிகளில் இவைகளை விவரிப்பது சுலபம். ஆனால் மற்ற மொழிகளில் இவ்வார்த்தைகளுக்கு பொருத்தமான பதங்கள் கண்டுபிடிப்பது வெகு கஷ்டம். அப்படிப்பட்ட பதங்களே அந்த மொழிகளில் உருவாகவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில் விஞ்ஞானம், கணிதம், சரித்திரம் முதலிய பாடங்களுக்கு தமிழ் மொழி கண்டுபிடிக்கப்பட்ட பாடு எவ்வளவு என்று 1940ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.
ஐரோப்பிய மிஷ்னரிமார்கள் இந்த விஷயத்தில் செய்த மாபெரும் தொண்டு இந்திய கிறிஸ்தவர்கள், விசேஷமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தமிழ் நாட்டினர் ஒருநாளும் மறக்க முடியாது. இது வேதாகம மொழிபெயர்ப்பு வரை (Bible translation). இதைத் தவிர சபைகள் சாத்தானின் சதியினால் நூற்றுக்கணக்காகப் பிரிந்து நிற்கின்றன. இவைகளில் சில தமிழ்நாட்டிற்கு வந்தது. இப்படி சபைகள் பிரிந்து செயல்படும் நிலையில் மக்களுக்கு போதிக்கையில் இவைகளை விளக்கிக்கூறுவதற்கு விசேஷித்த பதங்கள் தேவைப்படுகிறது. அவற்றுள் மூன்று பதங்களைத்தான் இந்த விளக்க ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இவற்றின் ஆங்கில பதத்தை மேலே கோடிட்டு காட்டியிருக்கிறேன். இவற்றின் தமிழ் தொழிபெயர்ப்பு பல விதங்களில் உபயோகிக்கப்படுகிறது. இதைக் குறித்து வாதாட அவசியமில்லை. ஆனால் அந்த பதங்களின் மூலம் என்ன விளங்கிக்கொள்ள வேண்டுமென்று மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.
(1) Doctrine, டாக்ட்ரின்: இதை சில சமயங்களில் இறையியல் என்றும், சில சமயங்களில் விசுவாச அறிக்கை என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த சொல் வேதாகமத்திலும், சபைகளுக்கடுத்த விவாதங்களிலும் அதிகமாகக் காணலாம். ஆனால் இவ்விரண்டு இடங்களிலும் இப்பதம் ஒரேவிதமாக உபயோகிக்கப்படுத்தப்படவில்லை. இப்பதம் வேதாகமத்தில் பல இடங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை concordance என்ற அகராதியில் காணலாம். பைபிள் சம்பந்தப்பட்டவரை டாக்ட்ரின் என்ற பதம், போதனை போதித்தல் என்ற கருத்தில்தான் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் சபைக்கான விவாதங்களில் இதன் உபயோகம் சற்று வித்தியாசமானது. உதாரணமாக திரித்துவத்தைக் குறித்தோ, அல்லது கர்த்தருடைய இராப்போசனத்தில் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் சபைப்பிரிவுகளில் வித்தியாசப்படுகிறதினால் இவற்றைக் குறித்த போதனைகளோ, அல்லது பாவத்தைக் குறித்து நிருபங்களில் நாம் காணும் போதனை என்ன என்பதைக் குறித்தோ விளக்கம் செய்ய doctrine என்ற சொல் வெகுமுக்கியமானது. இவற்றை விளக்கிக் கூற அநேக வசனங்களும் அதற்கான விரிவுரைகளும் (விளக்கங்கள்) தேவைப்படும். இவைக்காண தனித்தனி போதகங்களின் கோர்வையை doctrine டாக்ட்ரின் என்று கூறலாம். உதாரணமாக doctrine of Sin, doctrine of Lord’s Supper, doctrine of Trinity (பாவத்தைக்குறித்த doctrine, இராப்போசனத்தைக் குறித்த டாக்ட்ரின், திரித்துவத்தைக் குறித்த டாக்ட்ரின்) என்று குறிப்பிடும்போது குழப்பமடையத் தேவையில்லை.
(2) Theology (இறையியல்) பைபிள் கல்லூரியில் படிக்கும்போது, பல பாடங்கள் படிப்பார்கள். அவைகளில் சில பாடங்களைக் குறிக்கும் சொல்லை மட்டும் உதாரணமாக இங்கு குறிப்பிடுகிறேன்.
வசனங்களை வியாக்யானம் செய்வதில் கவனிக்க வேண்டிய விதிகள் Hermeneutics;
பிரசங்கங்கள் செய்வதில் கவனிக்க வேண்டிய விதிகள் Homiletics;
பரிசுத்தாவியைக் குறித்து போதகம் Pneumatology இப்படியாக ஏராளமான பாடங்கள் உண்டு. இவை அனைத்தையும் சேர்த்து Theology (இறையியல்) என்று பெயரிடப்படுகிறது.
(3) Confession of Faith) விசுவாச அறிக்கை: சபைப் பிரிவுகளில் ஒவ்வொரு சபையும் தாங்கள் நம்பும் டாக்ட்ரின்களின் வேத வசன ஆதாரங்களைக் கொண்டதான தொகுப்பு. இது சபைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள இன்றியமையாதது.
____________________________________
மொழி பெயர்ப்பு விவரம்:
This article “Rock or Sand? (Matthew 7:24-27)” translated by Gnana Bhaktamitran includes excerpts from Chapter 27 of Vol 2 (pp 556-564). From: “Studies in the Sermon on the Mount” By Dr. D. Martyn Lloyd-Jones
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.