Skip to content

தன்னையறியாத மாய்மாலம் (மத்தேயு 7:21-23)

Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran

Unconscious Hypocrisy (Matthew 7:21-23)

இதில் கூறப்பட்டிருக்கும் வசனங்களின் கருத்தை மிக கவனமாக சிந்திப்போமாக. இதில் கர்த்தரானவர், “என்னை நோக்கி ‘கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் (பரலோக ராஜ்ஜியத்தில்) பிரவேசிப்பதில்லை” என்ற எச்சரிப்போடு இந்த பாகத்தை ஆரம்பிக்கிறார். இந்த உபதேசம் இயேசுக்கிறிஸ்துவை அறியாத அஞ்ஞானிகளுக்குக் கூறப்படவில்லை. மாறாக, இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை வேதாகமத்தின் வாயிலாக பிரசங்கிக்கும் போதகர்களை குறிப்பிட்டதாகத்தான் இருப்பது தெளிவாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பிரசங்கிமாரின் விஸ்தரிப்பு இதில் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் பொய்யான எந்த காரியங்களையும் சொன்னதாகவும், செய்ததாகவும் தெரியவில்லை. ஏனெனில் இதில் கூறப்பட்ட அனைத்தும், நியாயாதிபதியாக தங்கள் முன் நிற்கும் இயேசுக்கிறிஸ்துவினிடமே கூறுகின்றனர். அவர்கள் இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தினது, அற்புத அடையாளங்களைச் செய்தது யாவும் உண்மையே. அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று ஆண்டவர் கூறவில்லை. ஆனாலும் அவர்களை “அக்கிரமச் செய்கைக்காரரே” என்று குறிப்பிடுகிறார். இதைக் கேட்க அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இதையும்விட பயங்கரமாக இருப்பது இந்த நிலைமையை, காட்சியை, நியாயத்தீர்ப்பின் நாளில்தான் காணப்போகிறோம். இருந்தபோதிலும் இவற்றை முன்கூட்டியே நம் அனைவருக்கும் எச்சரிப்பாகக் கூறியிருப்பது அவருடைய மிகுந்த கிருபையே. இப்படிப்பட்ட எச்சரிப்பு இல்லாமல் திடீரென்று நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைவது அவர் சித்தமில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. அதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா. கேட்கக் காதுள்ளவர்கள் கேட்கக்கடவர்கள் என்ற தோரணையில் கூறப்பட்டிருக்கும் இந்த எச்சரிப்பை நன்றாகக் கேட்டும் கூட அநேகர் இப்படிப்பட்ட துர்அதிர்ஷ்டமான நிலையில் இன்னும் ஊழியம் செய்வதானால் அதைக்குறித்து என்னென்று கூறுவோம்!

இந்த முக்கியமான போதனையிலிருந்து நாம் கவனிக்க வேண்டிய பாடம் என்னவென்றும் அவற்றை நாம் எப்படி பிரயோகப்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்றும் இந்த தியானத்தில் சிந்திப்போம். மற்றொரு தியானத்தில் இடுக்கமான வாசல் வழியாக போக வேண்டிய அவசியத்தைக் குறித்தும், அதில் ஆண்களும் பெண்களும் கவனிக்க வேண்டிய முக்கியமான கருத்துக்களைப் பற்றிய எச்சரிப்புகளையும் அறிந்துகொண்டோம். அதைப் போன்று இந்த தியானத்திலும், மேலே குறிக்கப்பட்ட மூன்று வசனங்களின் மூலம் அநேக முக்கிய கருத்துக்களையும் எச்சரிப்புகளையும் நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறார் ஆசிரியர்.

உதாரணமாக 22ம் வசனத்தில் “அநேகர் அந்நாளில் என்னிடம்” என்று ஆரம்பித்து, அவர்களிடம் கூறப்போவதை முன்கூட்டியே நமக்கு எச்சரிப்பாக ஆண்டவர் கூறியிருக்கும் காரியத்தைக் குறித்து நாம் ஏனோதானோவென்றிருக்க இயலாது. இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள், ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக “சிலர்” என்று குறிப்பிடாமல், “அநேகர்” என்று ஆண்டவர் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கத் தவறக்கூடாது. இதிலிருந்து, தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் ஆபத்து ‘அநேகருக்கு’ ஏற்படும் என்பதும், அந்த நிலை அவர்களை என்றென்றும் அவியாத அக்கினிக்கடலுக்குத் தள்ளிவிடும் அபாயம் அதில் தொங்கி நிற்கிறது என்ற உண்மையும் இதில் தெளிவாக இருப்பதை காணவும். அறியாமையினால் தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அநேகத்தை இந்த மலைப்பிரசங்க இறுதியில் கூறிக்கொண்டே போகிறார் ஆண்டவர். அவ்வித சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வீட்டை மணலின்மேல் கட்டும் புத்தியீனமான மனிதனைப் பற்றிய எச்சரிப்பும் இத்தகையதே. இப்படியாக ஒன்றல்ல, பல உதாரணங்களை ஆண்டவர் கூறிக்கொண்டுபோவதை கவனிக்கும்போது ஒவ்வொரு விசுவாசிக்கும் நடுக்கம் ஏற்பட வேண்டும். மலை பிரசங்கத்தில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இவ்வித எச்சரிப்புகளைக் காணலாம். உதாரணமாக மணவாளனுக்கு எதிர் கொண்டு போகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளைக் குறித்த உவமையிலும் தன்னைத்தான் ஏமாற்றிக்கொண்டு பெருத்த துயரத்தை சந்திக்க நேர்ந்த ஐந்து மதியீனமான கன்னிகைகளைக் குறித்த எச்சரிப்பும் இந்த சந்தர்ப்பத்திற்குப் பொருந்தும்.

இன்னும் ஒரே ஒரு உதாரணத்தை சேர்த்துக்கொள்ளக் கூடுமானால், இது, முதல் உதாரணத்தில் கூறப்பட்டிருப்பது போல், நியாயத்தீர்ப்பின் நாளில் நடக்கப்போகும் ஒரு காட்சியை சித்தரிக்கிறது. இது மத்தேயு 25:31-46ல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள், கடைசி காலத்தில், நியாயத்தீர்ப்பின்போது, அநேகருடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இவைகளை நம்முடைய நன்மையைக் கருதி, அன்புள்ள இரட்சகர் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். இவைகளை நாம் நன்றாக விளங்கிக்கொண்டு, இவைகளில் நமக்கு எச்சரிப்பாகக் குறிப்பிட்டிருக்கும் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல், ஆவிக்குரிய புத்திசாலித்தனத்தோடு அவருடைய வருகைக்கு தகுந்த ஆயத்தம் செய்து கொள்வோமாக.

இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் கூறும் எச்சரிப்பும் இந்த சந்தர்ப்பங்களை சுருக்கமாக விவரிக்கிறது: “அவனவன் வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும்” (1 கொரி 3:13). இவ்வளவு எச்சரிப்புகளுக்கிடையேயும், சிலர் முரட்டு மனமுள்ளவர்களாக “நான் எதற்க்கும் பயப்படமாட்டேன்; சிலர் இப்படித் தான் பயமுறுத்திக் கொண்டேயிருப்பார்கள்; நான் யாதொன்றுக்கும் கவலைப்படாமல் என் ஊழியத்தை தொடர்ந்து செய்வேன்” என்ற மனப்பான்மையோடு இருப்பார்கள். ஆனால் ஒன்று நிச்சயம்; கடைசி காலத்தில், அதாவது நியாயத்தீர்ப்பின் நாளில், அநேகர் தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக அநேக காரியங்கள் நடப்பதை கண்கூடாகப் பார்க்கப் போகிறார்கள்.

ஒருவன் தன் இரட்சிப்பைக் குறித்து உறுதியாயிருப்பது தவறல்ல, உறுதி இல்லாதவன் வளர்ச்சியற்றவனாக இருக்கும் அபாயம் இருக்கிறதல்லவா. ஆகவே அந்த உறுதியைக் குற்றப்படுத்தவில்லை. அந்த உறுதி எந்த அடிப்படையில் இருக்கிறது என்பதற்குத்தான் தற்சோதனை அவசியம் என்று வற்புறுத்துகிறார் ஆசிரியர். ஒரு ஆற்றில் இறங்குபவன் மண்குதிரையில் தன் நம்பிக்கையையும் உறுதியையும் வைத்திருப்பதை போற்றத்தகுந்ததாகக் கருதலாமா? வசனம் நமக்கு எச்சரிப்பது என்னவெனில் ஒருவன் “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று சொல்லுகிற நிலைமையில் திருப்தியடைந்து விடமுடியுமா? இதை தவறுதலாக விளங்கிக்கொள்ளும் அபாயத்தை முதலில் விளக்கிக்கொள்ள வேண்டும். இயேசுக்கிறிஸ்துவை கர்த்தர் என்று விசுவாசியாதவனும், அறிக்கையிடாதவனும், ஒருநாளும் மோட்ச ராஜ்யத்தை அடைய முடியாது என்ற உண்மையை இங்கு நாம் மறுக்கவில்லை. ஆனால் “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று சொல்லுகிறவனெல்லாம் மோட்சம் செல்ல தகுதியடைந்துவிட்டான் என்று எண்ணுவது மூட நம்பிக்கை என்பதைத்தான் எல்லா துதி தோத்திரங்களுக்கும் உரித்தான கர்த்தரே இந்த சந்தர்ப்பத்தில் திட்டமும் தெளிவுமாக எடுத்துரைக்கிறார். இதைத்தான் அன்போடும் கரிசனத்துடனும் இங்கு விளங்க வைக்கிறார். நன்றாகத் தெரிந்தே கள்ளப்போதகத்தில் ஈடுபட்டிருப்பவர்களைக் குறித்து நாம் கவலையோ அக்கறையோ எடுப்பதில் ஒரு பயனுமில்லை.

ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தங்களையும் அறியாமல் ஆவிக்குரிய பிரகாரமான மாய்மாலத்தில் ஈடுபட்டிருக்கும் அவல நிலையில் இருப்பவர்களை, தூங்குபவனை தட்டி எழுப்புவது போல், அவர்கள் உணரப்பண்ணும்படி இந்த எச்சரிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய ஊழியம் வெளிப்பார்வைக்குப் போற்றத்தக்கதாக இருந்திருக்கிறது. அநேகர் இவர்களை பெரிய போதகர்களாகக் கருதியிருந்திருப்பதால், அந்த அடிப்படையில் இவர்கள் தங்களை தற்சோதனை செய்துகொள்ள தவறிவிட்டார்களா அல்லது வேறு எந்த காரணத்தினாலோ தங்கள் இரட்சிப்பையே இழந்துபோகும் நிலைமையில் கடைசி வரையில் இருந்து, நியாயத்தீர்ப்பின் நாளில், “உங்களை அறியேன்; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்ற மரண தீர்ப்பை கேட்கும் பயங்கர நிலைமையை அடைந்தார்களா என்பதுதான் பெரிய கேள்வியாக நம் கண்முன் நிற்கிறது.

தற்சோதனை
புதிய ஏற்பாட்டில் தற்சோதனைக்காக அநேக உவமைகளும் போதனைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை ஜெப சிந்தனையோடு தியானம் செய்தால், வேதாகமத்தில் நமக்கு எச்சரிப்புக்காக கொடுக்கப்பட்ட அநேக ஆபத்துகளை தவிர்க்கலாம்; அதற்காகத்தானே அவைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவேதான் ஆவிகளை சோதித்தறியுங்கள் (1 யோவான் 4:1) என்றுகூட எச்சரிக்கை செய்யப்படுகிறோம். இதை ஞாபகத்தில் வைத்து தவறுதலான போதகங்கள் எவை என்று நாம் ஆராய்ந்து பார்ப்பது ஆண்டவரின் சித்தமாயிருக்கிறது.

தவறுதலான போதகங்கள்
போதனைகள் இயேசுக்கிறிஸ்துவை சம்பந்தப்படுத்தியிருந்தாலும், அது தனித்தும் மொத்தத்திலும் வேதாகமரீதியில் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். உதாரணமாக “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது இரட்சிக்கப்படுவாய்” என்று பிரசங்கம் பண்ணிவிடுவது சுலபமாயிருக்கலாம். அதின் கருத்தை உண்மையோடும் ஆவியோடும் விளங்கிக்கொண்டார்களா என்று கவனிக்க வேண்டாமா? அப்படி விளங்கிக்கொள்ள தவறிவிட்டால், அது அவன் ஆத்துமத்தையே பாதிக்கும் அல்லவா? இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தை சம்பந்தப்படுத்திவிட்டால் இரட்சிப்பு கிடைத்துவிடும், வேறு எந்த விளக்கங்களும் அவசியமில்லை என்றரீதியில் பிரசங்கங்கள் செய்வது முறையா? கிறிஸ்தேசுவின் சுவிசேஷத்தில், மற்ற அநேக மதங்களில் இருப்பதுபோல் மந்திர, தந்திர, மாய்மாலங்கள் சிறிதும் இல்லையல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக பிரசங்கிப்பவனுக்கு மறுபிறப்பின் அனுபவம் இருக்கிறதா என்றும் தெரிய வேண்டும்; அதற்கான அடையாளங்கள் தன்னுடைய தினசரி ஜீவியத்தில் இருக்கிறதா என்று பிரசங்கிப்பவனும் தற்சோதனை செய்து பார்க்க வேண்டும்; பிரசங்கத்தை கேட்கிறவர்களும் பிரசங்கிக்கிறவனின் ஆவியை சோதித்தறிய வேண்டுமல்லவா?

தவறுதலான தற்சோதனை
தற்சோதனை செய்துகொள்வதில் ஆர்வமில்லாமல் இருப்பது நல்ல அடையாளமில்லை. சிலபேர் தவறுதலாக யோசனை கூறுவது: “உன்னைப் பார்க்காதே! இயேசுக்கிறிஸ்துவைப் பார். நியாயப்பிரமாணத்துக்கு மரித்து விசுவாசத்தினாலும் கிருபையினாலும் நீதிமானாயிருக்கும் நீ பாவத்தைக் குறித்துக் கவலைப்படாதே.” என்று கூறி தற்சோதனையை தவிர்க்க முயல்வார்கள். ஆனால் வசனம் என்ன கூறுகிறது? “நாம் அவரோடு (இயேசுக்கிறிஸ்துவோடு) ஐக்யப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்” (1 யோவான் 1:6) என்றிருக்கிறதல்லவா? ஆகவே தற்சோதனையில் ஆர்வமில்லாத மனநிலைமையை தவிர்க்க வேண்டும்.

தற்சோதனை இன்பமாயிராது
நமக்கு இன்பமில்லாதவைகளில் ஆர்வமில்லாதிருப்பது இயற்கையே. ஆனால் ஆவிக்குரிய விஷயத்தில் தற்சோதனையை விலக்கமுடியாத விதியாக (rule) அனுசரிக்க வேண்டும். ஆண்டவருடைய ஊழியத்தை எதற்காகச் செய்கிறோம் என்று தற்சோதனை செய்து பார்க்க வேண்டும். மேலும், தற்சோதனையை உண்மையோடும் நடுநிலைமையோடும் செய்யாவிட்டால், தற்சோதனையில் எந்த பயனும் அடைய முடியாது. நியாயத்தீர்ப்பைச் சந்திக்கும் நாமே நம்மை சரியான பிரகாரம் சோதித்துக் கொண்டால் நியாயத்தீர்ப்பின்போது ஏமாற்றமடையத் தேவையிராது. தற்சோதனை, அவரவர் சந்தர்ப்பம், நிலைமைகளுக்குத் தகுந்த வண்ணம், ஜெபத்தோடும், நடுநிலையோடும், கவனத்தோடும் செய்ய வேண்டியது. அச்சமயம், தற்சோதனையில் சோதித்தறிய வேண்டிய கேள்விகளில் ஒன்று, தான் ஊழியம் செய்வதின் பிரதான நோக்கம், ஒருவேளை அது தங்களுடைய இன்பமான பொழுதுபோக்குக்காக இருக்கக்கூடுமா, இன்னும் ஒருவேளை அதினால் தங்களுக்குக் கிடைக்கும் கௌரவத்திற்காக, அல்லது இன்னும் பல அனுகூலங்களுக்காகவும் கூடவா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இதிலும், சற்று இன்பமடைவது என்பது மட்டில் தவறு இருக்க வேண்டியதில்லை; இதினால் கௌரவம் கிடைப்பதினாலும் தவறல்ல. ஆனால் மனிதன் பாவத்தில் விழுந்த காரணத்தினால் எந்த நல்ல காரியங்களானாலும், ஒரு விசுவாசி அவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால், அவனிலுள்ள பாவ நிலையும், அவனுடைய சுற்றுப் புறமான உலகமும், கர்ச்சிக்கிற சிங்கம் போல் சுற்றித்திரியும் சாத்தானும், அதை மாசுபடச் செய்ய முடியும், கூடுமானால் அதை பாவமாக கர்பந்தரிக்க முயற்சி செய்யவும்கூடும், (யாக்கோபு 1:15). ஆகவே இவ்வித நிலைகளினால் அவன் ஆத்துமா மாசுப்படாமல் பாதுகாக்க ப்படவும், தவறக்கூடிய நிலைகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ளவும், தற்சோதனை இன்றியமையாதது. தவிர இரவும் பகலும் ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களுடைய நேரக் குறைவினால் தங்களுடைய சொந்த ஆவிக்குரிய வளர்ச்சியில் போதுமான அக்கறை காட்டாதிருக்கும் ஆபத்தும் இவ்வித தற்சோதனையின் மூலம் தவிர்க்க வழி செய்யும். தங்கள் சுய நலத்திற்கும் தங்களுடைய பொழுதுபோக்குக்கும் ஊழியத்தில் ஈடுபாட்டோடு அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடும் பழக்கத்திலிருப்பவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமும், அதின் காரணமாக சரீர நோய்களும் அவர்களுக்கு ஏற்பட்டு அதிக துயரத்தைக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தும். இப்பேர்ப்பட்ட பல தொந்திரவுகளையும் ஆவிக்குரிய பேராபத்துகளையும், தற்சோதனை நிவர்த்தி செய்யும்; விசேஷமாக அறியாமையினால் தன்னையே ஏமாற்றிக்கொண்டு, தவிர்க்கக் கூடிய பேராபத்துகளில் மாட்டிக்கொள்ளாதிருக்க இது உதவும்.

இப்படி தற்சோதனை செய்கையில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய காரியம் இங்கு குறிப்பிடத்தகுந்தது. தற்சோதனையில் மனசாட்சி, தன்னிலுள்ள ஒரு குற்றத்தை உணரும்போது, கண்டுபிடித்த குற்றத்தை களைந்து போட மனதில்லாது, குற்றமனப்பான்மையை சரிக்கட்ட, ஏதாவது ஒரு போற்றத்தக்கதான இன்னொரு ஊழியத்தையோ ஒரு நல்ல காரியத்தையோ செய்ய ஏவுதல் செய்யும். இப்பேர்ப்பட்ட சோதனை பலருக்கு ஏற்படுவது உண்டு. இவ்வித மதியீனமான செய்கையால் கடவுளை சமாதானம் செய்துவிடலாம் என்று எழும் சோதனையில் விழுந்துவிடக்கூடாது. உதாரணமாக கடவுள் அமலேக்கியரை முழுவதுமாக ஒழித்துக்கட்டும்படி கூறிய கட்டளையை சவுல் ராஜா எப்படி ஆண்டவர் கூறிய பிரகாரம் செய்யாமல், தன் சுய சித்தத்தின்படி அரைகுறையாக அதை செய்துவிட்டு, ஆண்டவரை ஏமாற்றப் பார்த்தார் என்ற பயங்கர உதாரணம் சாமுவேல் தீர்க்கதரிசன புத்தகத்தில் படித்து ஆச்சரியப்படுகிறோம், அதிர்ச்சியும் அடைகிறோம். இன்னுமொரு உண்மையும் இந்நிலையில் அறிந்துகொள்ள வேண்டியது, தவறுதலான வழிகளில் செய்யும் எந்த ஊழியமும் அதன் முடிவு போற்றத்தக்கதாக இருந்தாலும் கடவுள் அதை அருவருக்கிறார். அதாவது எந்த நல்ல காரியங்களும் அது எவ்வளவு போற்றத்தகுந்ததாக இருந்தாலும் அதை நிறைவேற்ற உபயோகித்த தவறுதலான வழிமுறைகள் அதற்கு ஈடு செலுத்த முடியாது என்ற உண்மை ஆணித்தரமாய் நம் இருதயத்தில் பதிய வேண்டும்.

கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் நாளை சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டியவன், அவருடைய வார்த்தையை மிக கவனத்தோடு கேட்பது மட்டுமல்லாது அவைகளின்படி நடப்பவனாகவும் இருக்க வேண்டும். அந்த வார்த்தையோடு வாதாடுவதை விட்டுவிட வேண்டும். அதை சாமர்த்தியமாக சமாளிக்கப் பிரயாசைப்படும் எத்தனத்தையும் கைவிட வேண்டும். அவருடைய வார்த்தையை பயத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக்கொண்டு ஒளிவுமறைவின்றி நிறைவேற்றுவது ஒவ்வொரு விசுவாசியின் குறிக்கோளாய் இருக்க வேண்டும். உதவிக்கு பரிசுத்த ஆவியானவரை நாடு; உன் சுய புத்தியையும் சாமர்த்தியத்தையும் நாடவே நாடாதே. இதன் பொருட்டு உனக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாதே.

வேதாகமத்தின் போதனைகள்தான் நம்மை நடத்த வேண்டும் என்ற விதியை பெயரளவில் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் அவற்றை கடைபிடிக்க பலர் பின் வாங்குகின்றனர். பல சபைகளில் இன்றும் காண்கிறோம், ஓய்வு நாளை எத்தனைபேர் ஆவியோடும் உண்மையோடும் ஆசரிக்கிறார்கள்? இவ்விதமே 1 தீமோ 2:11-15ல் பெண்கள் உபதேசம் செய்வதை தடுக்கும் விதியை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதை சமரசமாகவும் தவறுதலாகவும் விளக்கம் கொடுத்து அதை மறைமுகமாக மீற எடுக்கும் பிரயாசத்தை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கர்த்தருடைய வார்த்தையோடு வாதாடுவதை அறவே விட்டுவிட வேண்டும்.

தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் அறியாமைக்கு மற்றொரு காரணம் நமக்கும் கிறிஸ்துவுக்கும் இருக்க வேண்டிய இணைப்பின் முக்கியத்தை (ரோமர் 6:1-6) உணராதிருக்கும் ஆபத்தான நிலை. தேவாதி தேவன், கிறிஸ்துவையே மனுமக்களை நியாயந்தீர்க்கும் நியா(யா)திபதியாக நியமித்திருக்கிறார். “நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை” என்ற பயங்கர தீர்ப்பை அளிக்கப்போவது வேறு யாருமில்லை, இந்த வசனங்களை கடைபிடிக்கக் கொடுத்தவரும், நியாயாதிபதியாக வரப்போகிறவருமான கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே. அறிவேன்/அறியேன் என்ற பதங்கள் மிகக் கடுமையானது. அவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கமுடியாது. ஆனால் இங்கு அறியேன் என்று கூறுவதில் இருந்து, “உங்களால், எனக்குத் தெரியாமல் ஒன்றையும் மறைக்க முடியாது; உங்களை எனக்கு நன்றாகத் தெரியுமாதலால், நீங்கள் மனோபாவனை செய்து கொண்டிருக்கிற பிரகாரம் என்னுடைய சபையைச் சேர்ந்தவராக உங்களை நான் கருதவில்லை” என்ற அர்த்தத்தில்தான் சொல்லுகிறார். இந்த உண்மையை ஒருவன் அறியாதிருந்தானானால் அது மிகப் பரிதபிக்கத்தக்கதான ஒரு காரியமாய் இருக்கும்.

ஒரு மனிதனின் தன்மையை அவனுடைய இருதயத்திலிருந்து அளவிடும் தேவன் ஒருவனின் வெளிப்பி(ர)காரமான கிரியைக் கண்டு திருப்தி அடையப்போவதில்லை. எவன் தன்னை ஒட்டுமொத்தமாக ஆண்டவரிடம் ஒப்புக்கொடுக்கிறானோ அவனிடந்தான் அவருடைய இணைப்பு இருக்கிறது. “உங்களை அறியேன்” என்று சொல்லப்படப்போகிற ஊழியர்கள், தங்களுடைய ஊழியங்களில் கர்த்தருடைய நாமத்தை உபயோகித்தாலும், அவர்கள் தங்களை தாங்களே திருப்தி செய்து கொண்டார்களே யொழிய, கர்த்தர் மகிழ்ச்சியடையும்படியான காரியங்களைச் செய்ய தவறியதால், தங்கள் ஊழியத்தின் பலனை இழந்தது மட்டுமல்லாமல் தங்கள் இரட்சிப்பையே இழக்க நேரிட்டது. இவைகளுக்கெல்லாம் காரணம் தங்களை அடிக்கடி தற்சோதனை செய்துகொள்ளத் தவறிய காரணத்தால்தான். ஏராளமான எச்சரிக்கைகள் கர்த்தருடைய வேதத்தில் இருந்தும், தங்களையே ஏமாற்றிக்கொண்டு பாவத்திலிருந்தும் சோதனைகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் வழி வகைகளைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர்.

____________________________________

மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘Unconcious Hypocrisy, Mt 7:21-23’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 25 of Vol 2 (pp 526-535), from: “Studies in the Sermon on the Mount”  By Dr. D. Martyn Lloyd-Jones
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: