இடுக்கமான வாசல் வழியாகப் பிரவேசித்தல் (மத்தேயு 7:13-14)
Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran
The Narrow Way (Matthew 7:13-14)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுக்கிறிஸ்து யார், அவருடைய விவரங்கள் என்ன என்பது போன்ற விளக்கங்களை முதலாவது தெரிந்து கொள்வது அவசியம். இவர் தேவாதி தேவனின் ஒரே பேறான குமாரன்; வான லோகத்திலிருந்து இப்பூலோகத்திற்கு பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்டவர்; எதற்காகவென்றால், அவர் ஏற்படுத்திக்கொண்டு வரும் பேரின்பமும் மகிமையும் நிறைந்த மோட்ச லோகத்திற்கு குடிமக்களாக இந்த பூலோகத்திலுள்ளவர்களை அழைப்பதற்காகவே. அப்படி அழைக்க வந்த தேவகுமாரன் தன்னுடைய ஆளுகையின் கீழ் இருக்கப்போகிற மோட்ச ராஜ்யம் எப்படிப்பட்டது, அதில் குடியேறும் மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், அப்படி இருக்க வழிதான் என்ன என்பது போன்ற விவரங்களை தான் அழைப்பிக்கும் மக்களுக்கு திட்டமும் தெளிவுமாக எடுத்துரைக்கிறார். இந்த மோட்ச ராஜ்யத்தின் தன்மையைக் குறித்து கேட்கும் மக்களுக்கு ஒன்றும் மறைபொருளாயிருக்கக் கூடாது என்பது அவருடைய விருப்பம்; ஏனென்றால் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்களை அங்கு கூட்டிச் செல்ல மாட்டார்.
பாவ உலகிலேயே பிறந்து வளர்ந்த மக்களுக்கு மோட்ச லோகம் ஒரு மாபெரும் வித்தியாசமாக இருக்கப்போகிறது. அங்கு பாவமும், பிசாசும் அதன் வஞ்சனையான யாதொன்றும் இல்லாமலிருக்கும் என்பது மட்டும் அல்லாமல், அங்கு கண்ணீரும், கவலையும், பிரிவும், மரணமும் மற்ற எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாதது மட்டும் அல்லாமல், அது பரிசுத்த தேவனின் இருப்பிடமாகவும் இருப்பதால், அந்த இடம் தெய்வீக ஒளியும், பரிசுத்த அழகும், பேரானந்தமுமான நிலையும் கொண்டதாகவும் இருக்கும். அப்படிப்பட்டதான அங்குள்ள அந்த உன்னத நிலை, மனித சிற்றறிவுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதொரு அனுபவமாயிருக்குமென்பது, இயேசுவானவர் அதைக்குறித்து விவரிப்பதிலிருந்து தெரிகிறது. அப்படிப்பட்ட ஒப்புயர்வற்ற அந்த இடத்திற்கும் அதற்கு முற்றிலும் எதிர்மாறாக, பல விதங்களிலும் மாசுபட்ட இவ்வுலகத்திற்கும் உள்ள வித்தியாசம் சொல்லில் அடங்காது. இவற்றை விளங்கிக் கொள்வதும் எளிதல்ல.
இவற்றை உணர்ந்து விளங்கிக் கொள்வது மட்டுமல்லாமல் அங்கு செல்ல ஆவலும் ஏற்பட வேண்டுமானால், தேவனின் பெரிதான கிருபையும், பெலனும் இருந்தால் மட்டுந்தான் கூடும். அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெற தேவனிடம், அவருடைய குமாரன் மூலமாக அணுகினால் மட்டுந்தான் கூடும். அப்படி அணுகி அதற்கு அங்கீகாரம் பெற்ற மக்களுக்கு அவர் கூறும் யோசனையும் வழிவகைகளும் ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது.
அவர் கூறும் யோசனைகளையும், வழி வகைகளையும் கவனமாய்க் கேட்போம்:
“இந்த உலக மக்களை திருத்த முடியாது; அவர்கள் பிசாசின் வழிகளில்தான் பிடிவாதமாகப் போய் கொண்டிருப்பார்கள். நீ அவர்களை விட்டு, அவர்கள் மத்தியில் வசிக்காமல், தனி இடத்திற்குப் போய் விடு” என்று கூறவில்லை! அதற்கு மாறாக அவர் கூறுவது: தங்கள் வாழ் நாட்களை இந்த அழிந்துபோக இருக்கும் உலகையும் இவ்வுலகை ஆளுகை செய்யும் பிசாசையும் நம்பி வாழும் மக்களின் மத்தியில்தான் நீ வாழ வேண்டும். அவர்கள் உன் வாழ்க்கையின் வித்தியாசத்தை கவனிக்கத்தக்கதாக அவர்களுக்கு நல்ல முன் மாதிரியாகவும், கடவுளின் பரிசுத்த தன்மையை இவ்வுலகில் பிரதிபலிக்கும் கருவியாக இருக்கவும், ஆனாலும் அவர்களோடு நெருங்கிப் பழகாமல், தாமரை இலை தண்ணீரைப்போன்று பட்டும் படாமல் நடந்துகொண்டு, இப்பூலோகத்தில் வாழ்ந்தாலும், மனதில் தாங்கள் பரலோக வாசிகள் என்கின்ற உண்மையை மறந்துவிடாதவர்களாகவும் வாழ தேவ குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து அறிவுறுத்துகிறார். இதைத்தான் மத்தேயு 5:14ல் “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; . . . . நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் எடுத்துரைக்கிறார். இவ்விதமாக சிலபேராவது இயேசுக்கிறிஸ்துவின் உண்மையான சீஷராக வாழ்வதால் மட்டுந்தான் இவ்வுலக சமுதாயம் இதுகாரும் உருக்குலைந்து கெட்டழிந்துபோகாமல் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோமாக.
பெரும்பாலான மக்கள் நினைப்பது, கிறிஸ்தவனாய் இருப்பதற்கும் அப்படி இல்லாதிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று. ஆனால் அப்படி எண்ணுவது கிறிஸ்துவின் போதனைக்கு முற்றிலும் முரணானது. மாறாக, ஒரு கிறிஸ்தவனாக இருப்பதென்பது ஒரு எளிதான காரியமில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருப்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது. ஆகவேதான் சுவிசேஷத்தில், கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பமே இடுக்கமான வாசல் வழியாகத்தான் என்று கூறப்பட்டிருக்கிறது. இதைத்தெளிவாக விளங்கிக்கொள்வது மிக முக்கியம்.
அப்படி இடுக்கமான வழியென்றால் என்னவென்று தெரியாமல் சிலர் அவர்களுக்கு இஷ்டமான வழியிலேயே சென்று கொண்டு, அதையே இடுக்கமான வழி என்று மனோபாவனை செய்து கொள்வதும் உண்டு. இதில் தெரிய வேண்டியது என்னவென்றால், இந்த வழியாகச் செல்ல வேண்டுமானால், தொடக்கத்திலேயே அவர்கள் விரும்பும் அநேக பொருள்களை அவர்கள் எடுத்துச்செல்ல இயலாது; அதை வெளியே விட்டுவிட்டு தனியாகத்தான் அந்த வழியில் நுழைய முடியும்; ஒரு விதத்தில் இது ஒரு சுழல் கதவுள்ள கிட்டி வழியாக (wicket) செல்வதைப் போன்றது; அவ்வித வழியில் ஒருவர் ஒருவராகத்தான் நுழைய முடியும். மூட்டை முடிச்சுகளை எடுத்துச் செல்ல முடியாதபடி வழி குறுகலாக இருக்கும். நம்மோடு கூட எடுத்துச்செல்ல கூடாதவைகளில் பலவற்றில் சில, ஒரு கூட்டமாகச் செல்லமுடியாது; உலகப்பிரகாரமான வழக்க பழக்கங்களை விட்டுவிட வேண்டியிருக்கும். இது சம்பந்தமாக உனக்குத் தெரிய வேண்டியது: நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமானால் ஒரு அபூர்வமான மனிதனாக மாற வேண்டியிருக்கும்; சிலருடைய தோழமையை விட்டுவிட வேண்டியிருக்கும்; பலர் உன்னை ஒரு வித்தியாசமும், தனிப்பட்டதுமான மனிதனாக எண்ண நேரிடும். தவிர, உனக்கு அருகாமையிலேயே ஒரு சௌகரியமான அகண்ட பாதையில் கிறிஸ்தவர்கள் என்ற பேரிலேயே ஏராளமான மக்கள் போய்க்கொண்டிருப்பதை நீ கவனிக்கமுடியும். இடுக்கமான வழியாகப்போக தீர்மானம் செய்தவர்களுக்கு இந்த நிலையை தவிர்க்க முடியாது.
தவிர, நீ கூட்டத்தில் ஒருவன் இல்லை; நீ ஒரு தனிப்பட்ட மனிதன்; கர்த்தருடைய பார்வையில் மிக விசேஷித்தமானவன் அப்படியிருக்க சிறிதும் கவலைப்படாதவன் என்பதான உறுதி உன்னிடம் இருக்க வேண்டும். பெரும்பாலானோருடைய வழக்க பழக்கங்களில் ஈடுபட்டிருப்பது இயற்கை. ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் விழிப்படைந்தவனுக்கு ஏற்படும் மாறுதல்களில் ஒன்று அவன் மனநிலை. முதல் முறையாக அவன் தனக்குள் சொல்லிக்கொள்வதாவது “நான் ஒரு உயிருள்ள ஆத்துமா; என்னுடைய ஜீவியத்திற்கு நான் பொறுப்பாளி.” ஒரு கிறிஸ்தவனாய் மாறின ஒருவனுக்கு தோன்றும் முதல் எண்ணம் அவன் உலக ஜனத்திரளில் ஒருவன் இல்லை. தான் ஒரு தனிப்பட்ட மனிதன். இதற்குமுன் தன் தனித்துவத்தை (individuality) இழந்து கூட்டத்தில் ஒருவனாக இருந்த அவனில் இப்போது ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தனித்து நிற்கும் தைரியமும் பொறுப்பும் அவனில் ஏற்பட்டிருக்கிறது. தவிர, தன்னுடைய ஆத்துமா காப்பாற்றப்படுவதின் அவசியமும் அவசரமும், தான் அடைய இருக்கும் நித்திய நிலைக்கு ஆயத்தம், இந்த உலக வாழ்வு அநித்தியம், இதை நம்பி வாழ்வது பயித்தியம் என்பதுபோன்ற உணர்வு பெற்றவனாகிறான். அது மட்டுமல்லாது தன்னுடைய பழய நிலையிலிருந்து விடுபட வேண்டிய வழிவகைகளை தேட முற்படுகிறான். அவ்வழிகளில் முக்கியமானதும் சற்று கடினமானதுமான காரியங்களில் சில, பெரும்பான்மை மக்களின் பழக்க வழக்க அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுதலும் தன் ஜீவியத்திற்கு கடவுளிடம் கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்பை முதல் தடவையாக உணருதலுமாகும். அப்போதுதான் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இடுக்கமான வாசலைத்தவிர வேறு வழியில்லை என்ற உண்மை புலப்படும்.
இந்தக் கட்டுபாடுகளுக்கு உடன்படுவது இயற்கையாக ஒருபோதும் ஏற்படாது. இவற்றில் எதுவும் யாரும் விரும்பத்தக்கதாக இராது. இந்த வாசல் வழியே செல்பவர்கள், உலக பழக்க வழக்கத்தை மட்டுமல்லாது தன்னுடைய பழைய மனிதனையும் (ரோமர் 6:6) விட்டுவிட்டு செல்ல வேண்டியிருக்கும்; இந்த கிட்டி வழி (wicket) ஒருவருக்குமேல் இடம் கொடாததினால்.
ஆகவேதான் இயேசுவானவர் கூறியது, “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” லூக்கா 9:33 இதிலிருந்து கிறிஸ்தவ ஜீவியம் எளிதானது அல்ல என்று தெரிந்துகொள்ள வேண்டும். “அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்தான்” என்று அவர் கூறியிருப்பது (மத் 7:14) இதை இன்னுமாக உறுதிப்படுத்துகிறது.
வாழ்க்கையில் அசாதாரணமானதொரு காரியமோ, ஒரு உயர்ந்த குணத்தை அடைய வேண்டுமென்ற ஆவலோ என்று எடுத்துக்கொண்டால் அதற்கு விருப்பத்தையும் அக்கறையும் காட்டுபவர்கள் அதிகம் பேர்கள் இருக்க மாட்டார்கள். இது, ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒரு உன்னதமான வழி, அல்லது எத்தனம் என்று கூறும்படியாக உள்ளது. அது இடுக்கமான வழியாகத்தான் இருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது இடுக்கமான வழியாகத்தான் இருக்கும் என்பதற்கு இன்னும் சில காரணங்களைக்கூட சொல்லலாம்; கிறிஸ்தவ ஜீவியத்தில், பாடுகள், துன்பங்கள், வீணாக பழி சுமத்தப்படல், கஷ்டங்களைப் பொறுத்தல், பலவித சோதனைகளை மேற்கொள்ளுதல் முதலான ஏராளமான பொறுப்புகள் நிறைந்தது. எப்போதும் வேத வாசிப்பு, தியானம், கவனம், இவைகளில் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
கர்த்தரும், நம்மை பாவத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் மட்டும் காப்பாற்ற இங்கு வரவில்லை. நம்மை பரிசுத்த ஜீவியம் செய்ய வைக்கவும், (தீத்து 2:14ல் எழுதியிருக்கிற பிரகாரம்) நம்மை, “தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மை சுத்திகரிக்கும்படிக்கும் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” என்று பார்க்கிறோம்.
இப்படியிருக்க இந்த ஜீவ பாதையில் செல்வதற்குரிய வழிவகைகளையும் கர்த்தர் நமக்கு கிருபையாக கொடுத்தருளியிருக்கும்போது அந்த வழியாய் நாம் செல்ல ஆவலும் எழுப்புதலுமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது ஒரு அருமையான நிலையை கண்டுகளிக்க ஆண்டவர் அருளும் அழைப்பு அல்ல. இரட்சிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இலக்கை நோக்கி கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் செல்ல, கடவுள் அருளும் போதிப்பு (A call to action). இதை சரிவர நிறைவேற்ற ஆவலும் மன உறுதியும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது – ஒரு கடினமான பாதையை கடந்து செல்லும் பொறுப்பு, ஒரு எல்லையை அடைய வேண்டும் என்ற மன உறுதி முதலியன இல்லாமல் இந்த செயலில் இறங்க முடியாது. சிலர், சுவிசேஷத்தை ஏதோ ஒரு புதுமையான காரியத்தை கேட்டறியும் ஆவல்போன்று (curiosity) கேட்கலாம். அது பிரயோசனம் இல்லாத ஏட்டுச் சுரக்காயாகத்தான் போய்விடும். இதில் உண்மையாக ஈடுபட விரும்புகிறவர்கள் தங்களை தற்சோதனையாக கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் இந்த இடுக்கமான பாதை வழியாக செல்லும் மன உறுதி எனக்கு இருக்கின்றதா? இந்த குறிக்கோளை மையமாகக் கொண்டு என் வாழ்க்கை நடந்தேறுமா? இதில் அனுசரிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை என்னால் பின்பற்ற முடியுமா? நான் எடுக்கும் முடிவுகளும் நான் வாழும் விதமும், நான் செல்ல இருக்கும் இடுக்கமான பாதைக்கு ஏற்றதாக இருக்குமா? இவ்விதமான கேள்விகளை சந்திக்க வேண்டுமானால், தெளிவும் திட்டமுமான மனவுறுதி இருக்க வேண்டும்.
“இது கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரு ஒழுங்கு, இதற்கு என்னைக் கட்டுப்படுத்துவதுதான் இயேசுக் கிறிஸ்துவின் சித்தம். ஆகவே துணிந்து செயலில் இறங்கிவிட்டேன்; எது என்னவானாலும் வந்தது வரட்டும்.” என்ற எண்ணமும் துணிச்சலும் ஏற்படுவதுதான் முதல் படி (first and primary step). “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்”, இதற்குக் காரணம் என்ன? ஏனென்றால் இதை நாடி தேடுகிறவர்கள் அதிகமானவர்கள் இல்லை. இதைக் கண்டுபிடிக்க முதலாவது, தேட வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது, பொதுவானவற்றிலிருந்து பிரத்தியேகத்திற்கு செல்லத்தெரிய வேண்டும் (Learn to proceed from general to the particular). ஆவிக்குரிய ஜீவியத்தில் நான் காணும் மிக பயங்கரமான காரியங்களில் ஒன்று என்னவென்றால் கடவுளுக்கடுத்த செய்திகளை கேட்டு, தியானித்து, விளங்கி, அதன் பின் அதைக்குறித்து எந்த அக்கறையும் எடுக்காமல் விட்டுவிடுவது. இதற்குக் காரணம் பெரும்பாலும், சத்தியத்தையும் அதில் கூறப்பட்டிருக்கும் கடமைகளை செய்ய மனதிருந்தாலும், அதை நடைமுறையில் கொண்டுசெலுத்த தேவையான திட்டங்களை செயல்படுத்தும் வழி வகைகளையும் தேடிப்பிடித்து செய்யும் அளவிற்கு அக்கறையோ பொறுமையோ இல்லாமை. அப்படி தேடிப்பிடிப்பதுதான் அந்த இடுக்கமான வழியின் ஒரு முக்கிய அம்சம். அதைக்கண்டுபிடிப்பது சுலபம் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, அப்படி அதைத் தேடிப்பிடிப்பதே சற்று கடினமானதாகவும் இருப்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. உன்னைக் குறித்து, உன்னுடைய நிலமை, உன் போக்குவரத்து, செயல்பாடுகள் இவைகளை மிக உண்மையோடும் நேர்மையோடும் உனக்குள்ளேயே யோசித்து உறுதியான முடிவுக்கு வர வேண்டும். பலர் தங்கள் ஜீவியத்தின் பாதையை ஒரு குறிப்பிட்ட வரம்புகளுக்குக் கொண்டுவரத் தெரியாமல் மனம்போல் போய்க் கொண்டிருப்பதற்கு காரணம், இந்த இடுக்கமான வாசலை சரிவர கண்டு பிடிக்கத்தவறியதாலேயே. உலகப் பிரசித்தி பெற்ற அநேக தேவ ஊழியர்களுடைய ஜீவிய சரித்திரத்தைப் படித்துப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். அவர்கள் எப்படி இந்த இடுக்கமான வாசலை கண்டு பிடிக்க அநேக நாட்கள் கடுமையாக யோசித்து, அதை கண்டுபிடித்து, அந்த வழியாக சோர்வடையாமல் சென்று வெற்றி வாகை சூடப்பட்டார்கள் என்பது தெளிவாகும். மிகப் பிரசித்தி பெற்ற மார்டின் லூத்தருடைய ஜீவிய சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், கத்தோலிக்க மடத்தில் ஒரு சிறிய அறையில் வேர்வை சொட்ட, உபவாசத்திலும், தியானத்திலும் அநேக நாட்கள் செலவிட்டார் என்று படிக்கிறோம். இவ்விதமே ஜார்ஜ் வொயிட் ஃபீல்ட், ஜான் வெஸ்லி, ஜோனத்தான் எட்வர்ட் முதலியவர்களும். இவர்கள் தங்களுக்கடுத்த இடுக்கமான வழிகளை தேடிப் பிடித்தனர். முதலில் அவர்களுக்கு தாங்கள் செல்ல வேண்டிய வழி எதுவென்று தெரியாமல் தவித்தனர். பல நாட்கள் சிந்தனைக்குப் பிறகுதான் அவர்கள் திக்கு தெரியாமல் போய்க் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் விடாமுயற்சியோடு கவனமாகத்தேடி அந்த இடுக்கமான வழியைக் கண்டுபிடித்தனர். அதை கண்டுபிடித்ததுமல்லாமல் அந்த வழியில் பிரவேசிக்கத் தயங்கவில்லை. நீ அதில் பிரவேசிக்குமுன் அதைத் தேட வேண்டும், தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
அதற்கு அடுத்தபடி என்ன? அந்த வழியில் பிரவேசித்த பின்னர், அதில் செல்ல உன்னை ஒப்புக்கொடு. அதன்பின் உனக்குள் இப்படி பேசிக்கொள்: “நான் கர்த்தருடைய பிள்ளை, அப்படியானால் நான் ஒரு விசேஷித்த ஆள் (மனிதன்/மனுஷி). நான், சுற்றிலும் நடமாடும் ஆட்களைப் போல் இல்லை நான் தெய்வீக (கடவுளின்) குடும்பத்தைச் சேர்ந்தவன். கிறிஸ்து எனக்காக மரித்தார். அந்த கிருபாதாரப் பலியின் மூலம் என்னை இந்த இருளின் ராஜ்யத்திலிருந்து தேவாதி தேவனின் ராஜ்யத்தின் குடிமகனாக/ மகளாக மாற்றிவிட்டார். நான் மோட்சவாசி; தற்காலிகமாக இவ்வுலகத்தில் இருக்கிறேன். இது சாத்தான் இருக்கும் இடம்; அந்த சாத்தான் என்னை வஞ்சிக்க எத்தனிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மோட்சத்தின் குடிமகனாக மாறிவிட்ட நான் அதற்குப் பயப்படத் தேவையில்லை. நான் இந்த இடுக்கமான வாசல் வழியாக கிறிஸ்துவை தொடருகிறேன்.” இப்படியாக அடிக்கடி உனக்குள் சொல்லிக்கொள். தொடர்ந்து முன்னேறு அப்படி செய்வாயானால், நீ இடுக்கமான வாசல் வழியாக செல்வதை உணர்ந்து கொள்ளுவாய்.
இப்படிப்பட்டதொரு வழியைத் தேடிப்பிடித்து அதின் வழியாகத்தான் நாம் செல்ல வேண்டும் என்று நமக்கு ஒரு கட்டளையாகக் கொடுத்தாலும் (ஏன், நம்மை சிருஷ்டித்த எல்லாம்வல்ல தேவனுக்கு நமக்கு கட்டளைகள் பிறப்பிக்க உரிமை இல்லையா? அது நமக்குத் தெரியாமலில்லை), நமது மேல் அன்பும் அக்கறையுமுள்ள தேவன், தன் குமாரனை மனித வடிவாக இந்த உலகிற்கு அனுப்பினார். நமக்காக இங்கு வந்த தேவகுமாரன், நம்முடைய பலவீனங்களை அறிந்து பிரதான ஆசாரியராக நமக்காக பிதாவிடம் பரிந்துபேசும் அன்புள்ள கர்த்தராக நம்மை வழிநடத்துகிறார். அப்படி, நமது இரட்சிப்புக்காக வந்த கர்த்தர் நம்மை அதிகார தோரணையாக நடத்தாமல் மோட்ச லோகம் சேர அப்படிப்பட்ட இடுக்கமான வழி வழியாகத்தான் போகவேண்டும் என்று கூறினாலும் அப்படி கூறுவதற்கு காரணங்களையும் காட்டுவது அவரது அளவுகடந்த அன்பையும் அவருக்கு நமக்குமேல் இருக்கும் கரிசனையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது சம்பந்தமாக அவர் கூறுவதை கூர்ந்து கவனிப்போம். என்ன கூறுகின்றார் என்றால், “இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்” தவிர, அதோடு அவர் கூறுவது, “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்.” ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றி தோல்வி இந்த ரகசியத்தை விளங்கிக்கொள்வதில்தான் இருக்கிறது என்று இப்போது தெரிகிறது.
அப்படியென்றால், எதினால், எப்படி என்பவைகளை ஆராய்வோம். இதற்குக் காரணம், மக்கள் இவ்வுலகில் ஜீவிக்க இரண்டு வித ஜீவியம் அவர்கள் முன்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏதேனும் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும். ஒன்று விசாலமானது, மற்றொன்று இடுக்கமும் நெருக்கமுமானது. இந்த இரண்டு வித வழிகளைக் குறித்த விவரங்கள் நமக்குத் தெளிவாய் தெரிந்துவிட்டால் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுலபமாய் அறிந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த உலக வாழ்க்கையிலும் இதன் பழக்க வழக்கங்களிலும் சயாமிஸ் இரட்டைக் குழந்தைகள் மாதிரி (Siamese twins) பிரிக்க முடியாதபடி ஒட்டிப் பிறந்திருக்கிறோம். ஆனால் நமக்கு திட்டமும் தெளிவுமாக கிறிஸ்து சொல்லிக் கொடுப்பது, அப்படி பிரிக்கப்படாமல்போனால் அழிந்து போவது நிச்சயம். ஒரு சிறிய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோம் – ஏழு நாளில் ஒரு நாளை கடவுளுக்கடுத்த காரியங்களிலும் அவரை ஆராதிப்பதிலும் செலவிட வேண்டுமென்பது நாலாம் கற்பனை. ஆனால் இந்த சிறிய விதியை இவ்வுலகத்தில் இருக்கும்வரை கடைபிடிக்க மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் அதைக் கைக்கொள்ள முடிவெடுத்து கைக்கொண்டால், அதே நாளில் உலகமக்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்று காண ஆச்சரியமும் அது எவ்வளவு அவலட்சணமுமாய் தெரிகிறது என்றும் விளங்குகிறது. இவர்கள்தான் கேட்டுக்குப்போகிற விரிவும் விசாலமுமான பாதையில் போகிறவர்கள். நீயும் ஒரு காலத்தில் அவ்வழியாய் போய்கொண்டிருந்ததை இப்போது நினைவுகூறுகையில் அதைக்குறித்து வெட்கப்படும்படியாக இருக்கிறது. அவைகளின் முடிவு மரணம் என்று ரோமர் 6:21ல் பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். நீ ஒரு கிறிஸ்தவனாக மாறிவிட்டதால் இதை விளங்கிக்கொள்கிறாய். இந்த உலக மக்கள் சென்றுகொண்டிருக்கும் போக்கைப்பார்த்தால் எவ்வளவு அறிவீனமாய், எதிர்காலத்தைக் குறித்து யாதொரு கவலையுமில்லாமல் அன்றாடகமாக தங்கள் மனதுக்கு வந்த மாதிரி இயங்கிவருகிறார்கள் என்று தெரிகிறது.
மிக பிரசித்திபெற்ற விஞ்ஞானிகள், தேசத்தலைவர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் முதலியோரின் வாழ்க்கை சரித்திரத்தைப் பார்த்தால், இவர்களில் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் மரித்துப்போனவர்களுக்கு அவர்கள் முடிவு, சடுதியாக, நினையாத பிரகாரம் வந்ததை தெரிந்துகொள்ளலாம். எதிர்காலத்திற்கு எந்த ஆயத்தமும் இல்லாமல் மறைந்துபோனார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவும். இந்த நிலை நமக்கு ஏற்படக் கூடாது.
நமக்கு இப்போது தெளிவாகத் தெரிய வேண்டிய உண்மை, நமக்கு விவரிக்க இயலாத அளவிற்கு அதிகமான அழகிய மறு வாழ்வு ஒன்று கொடுக்க தேவன் ஆவலாக இருக்கிறார். அங்கு கண்ணீர் கவலை, கஷ்டம் யாதொன்றும் சிறிதும் இல்லாத ஆனந்த வெள்ளம். அங்கு மரணமோ, பிரிவோ கிடையாது. அப்படிப்பட்டதொரு எதிர்காலத்திற்கு முன்னோடியாகத்தான், அதற்கு ஆயத்தமாகத்தான், இந்த இடுக்கமான வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடுக்கமான வழி, உனக்கு ஏற்பட்ட மறுபிறப்பின் அனுபவத்தோடு ஆரம்பிக்கிறது. நீ இப்போது கிறிஸ்துவில் ஒரு புது சிருஷ்டிப்பு; வாழ்க்கைமுறை மாறிவிட்டது; புது விருப்பங்கள், புது எண்ணங்கள் இப்படியாக பழைய நிலை மாறிவிட்டது. இதில் முன்னேறுகையில் அருமையும் பெருமையுமான ஒரு புது வாழ்வு உன்னில் ஏற்பட்டுவிட்டது. பல கஷ்டங்கள், பல ஏமாற்றங்கள் உன் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும், உனக்கு கடவுள் அருளப்போகிற சொல்லுக்கடங்காத மகிமையும் ஆனந்தமும் நிறைந்த அந்த இடத்தை உன்னிடமிருந்து யாராலும் எடுத்துப்போட முடியாது; இந்த வாழ்க்கைமுடிவோடு அது உன்னைச் சேரும்; அதில் நீ போய் சேரப்போகிறாய். பேதுரு அப்போஸ்தலன் அதை விவரிப்பதுபோல் அது “அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவான ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாக்குவது” 1 பேதுரு 1:4.
இந்த இடுக்கமான வழியேதான் நாம் பிரவேசிப்பது நமக்கு ஏற்றது என்று இரட்சகர் நமக்கு அதை சிபாரிசு செய்வதற்கு மற்றுமொரு காரணம், நாம் இப்போது சென்று கொண்டிருப்பது விரிவும், விசாலமுமான பாதை. இது எப்படித் தெரியும் என்று கேட்டால், இரட்சகர் நமக்குத் தெளிவாக தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நாம் இப்போது கேள்விப்படும் இருவித வழிகளைத்தவிர வேறு எந்த வழியும் உலகில் இல்லை என்ற முக்கியமான உண்மையையே. வேறு விதமாய் சொல்வோமானால் இடுக்கமான வழியாக செல்லாத அனைவரும் திட்டமும் தெளிவுமாக விசாலமான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கின்றனர்; ஏனென்றால் வேறொரு பாதை இல்லவே இல்லை இருந்திருந்தால் இரட்சகர் சொல்லியிருப்பார். ஆனால் அவர் சொல்லவில்லை. ஆகவேதான் இதை நம் உறுதியாக நம்பலாம். விசாலமான பாதை வழியாக செல்பவன் அவ்வழியைப் பற்றி அறியாமலிருந்தானானாலும், இடுக்கமான வாசல்வழியாகப் போகிறவனுக்கு அது தெரியாமலிருக்க வழியில்லை; ஏனென்றால் அது இடுக்கமாக இருப்பதாலும், அதில் போவது சௌகரியமாக இல்லாமலிருப்பதினாலும்.
இடுக்கமான வாசல் வழியாகப்போக ஏதாவது ஒரு ஈர்ப்பு (attraction) இருக்க வேண்டாமா? அப்படி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது என்று அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். அது என்ன? அது வழியாகப்போய் வெற்றி வாகை சூடி திரும்பியவரும் இந்த பாதையை நமக்கு அழுத்தந்திருத்தமாக சிபாரிசு செய்பவருமான இயேசுக்கிறிஸ்து, நம் இரட்சகர். அப்படிப்பட்டதொரு உத்திரவாதம் சிறிதேனும் விசாலமான பாதையைக்குறித்து கிடையாது. தவிர, இந்த இடுக்கமான பாதை வழியாக உலகிலேயே நீ ஒருவன்தான் தன்னந்தனியாக போய்க்கொண்டிருப்பதாக எண்ண வேண்டாம். அப்படி வசனத்தில் கூறப்படவில்லை. அதற்கு மாறாக ஆவிக்குரிய பிரகாரமான பல வீரர்கள் அதின் வழியாய் போயிருக்கிறார்கள், இன்னமும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். என்னவொன்று, அவர்கள் அதிகமான பேர்களாயிருக்கமாட்டார்கள். ஆனாலும் அதை தெரிந்தெடுத்து அதின் வழியாய் போகிறவர்கள் சிலராவது இருப்பார்கள் என்று வசனம் உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலான ஈர்ப்பு இயேசுக்கிறிஸ்து நம்மை வழிநடத்தும் கருவியாக அந்த வழியே நமக்குமுன்போகிறார். ஆகவேதான் “நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம்” என்று ஒரு பாட்டில் பாடுகிறோம்.
இந்த தியானத்தை முடிக்குமுன் சில முக்கிய கருத்துக்கள் நம்மனதிலே தெளிவாக இருப்பது அவசியம். உதாரணமாக நமக்கு ஐயமற தெரிய வேண்டியது 1) உலகில் சிலராவது மாசற்ற விதமாக பிறந்திருக்க முடியுமா என்ற கேள்விக்குப்பதில் (Having been born in innocency and neutrality), 2) யாராவது அவர்களாக தங்கள் சொந்த சித்தத்தின்படி இதில் ஏதாவதொரு வழியை தெரிந்தெடுத்து அதின் வழியாக செல்லக்கூடுமா என்பது.
இதற்கு பதில் வேதாகமத்தில் இருக்கிறது. என்னவென்றால், யாதொருவரும் பாவமில்லாமல் பிறக்கவில்லை (இயேசுவானவர் ஒருவர்தவிர) மற்ற அனைவரும் பிறவியிலேயே பாவத்தினால் கடவுளின் கோபாக்கினையின் பிள்ளைகளாகத்தான் பிறக்கிறார்கள். அதாவது, அனைவரும் விசாலமான பாதையில் போகிறவர்களாகத்தான் பிறக்கிறார்கள். ஆகவேதான் யோவான் 1:12, 13ல் “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு (கடவுள்) அதிகாரம் கொடுத்தார்.” என்றிருக்கிறது. தவிர, அவர்கள் அனைவரும் “தேவனால் பிறந்தவர்கள்” என்றிருக்கிறது. இதையும் தவிர இயேசுக்கிறிஸ்து பாவிகளை இரட்சிக்கும்பொருட்டு கிருபாதார பலியாக தன்னை ஒப்புக்கொடுத்து மரித்ததினாலும், அதை விசுவாசிப்பதினாலுமே ஒருவன் பாவமன்னிப்பு பெற்று நீதிமானாகக்கூடும் என்ற உண்மை வேதாகமத்தில் தெளிவாக இருப்பதால் ஒருவனும் தன் முயற்சியினால் இரட்சிக்கப்பட முடியாது என்பது தெளிவாகிறது.
இவைகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு விடை கண்டுபிடிக்கலாம்:-
நான் இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிப்பதினால் என் இரட்சிப்பை பெற்றுவிட முடியாது. நான் இரட்சிப்பு பெற்ற காரணத்தினால் மட்டுந்தான் அந்த இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிக்கிறேன். அப்படி நான் செய்வது, நான் இரட்சிப்பு பெற்றதற்கு மற்றவர்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்.
ஜென்ம சுபாவமான மனிதன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளமாட்டான். தவிர மாமிச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. ஆகவே அது இடுக்கமான பாதையை விரும்பாது. ஆனாலும் ஒருவன் இடுக்கமான வாசல் வழியே பிரவேசிப்பதின் மூலம், கிறிஸ்தவனாக முடியாது; அவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் மட்டுந்தான் இடுக்க வாசலில் பிரவேசிக்க முடியும்.
இதையும் தவிர நாம் சிந்திக்க வேண்டிய சில காரியங்களாவன: நாம் பரிசுத்தத்தில் குறைவுபட்டவர்களாயிருப்பதால் (உதாரணமாக, பொறுமைக்குறைவு, கோபம் வந்துவிடுவது முதலிய பலவீனங்கள் காரணமாக) நாம் இன்னும் விசாலமான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகமோ கவலையோ மனதை வாதிக்கக்கூடும். நீ இடுக்கமான வாசல் வழியாக பிரவேசித்திருப்பதற்கு அடையாளத்திற்கு கீழ்க்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவாய் என்பதைப் பொறுத்திருக்கிறது.
1) இந்த பாதையை (இடுக்கமான) இன்னதென்று அறிந்து நீயே தேர்ந்தெடுத்தாயா?
2) இந்த பாதையில் தொடர்ந்து நடக்க உன்னை ஒப்புக்கொடுத்தாயா?
3) இப்படிப்பட்ட பாதையில் நடக்க நீ விருப்பப்பட்டு இதில் பிவேசித்தாயா?
4) இப்படிப்பட்ட வழியில் நடக்க உனக்கு ஆவலும், பசியும் தாகமும் இருந்ததா?
இவை அனைத்திற்கும் “ஆம்” என்ற விடை இருக்குமாயின், சந்தேகம் இல்லாமல் இந்த இடுக்கமான பாதையில்தான் நீ போய்க்கொண்டிருக்கிறாய் என்பது உறுதி.
இதில் உனக்குத் தெரிய வேண்டிய இன்னொரு காரியம், நீ இடுக்கமான பாதையில் போய்க்கொண்டிருப்பதால், பாவத்தில் விழாத ஒரு நிலை ஏற்பட்டுவிடும் என்று எண்ணி விடக்கூடாது. நீ பரிசுத்த பாதையில் போய்கொண்டிருந்தாலும் பாவத்தில் விழ நேரிடலாம். ஆனால் என்ன ஒன்று நிச்சயமாய் கூறமுடியுமென்றால், இடுக்கமான வாசல் வழியே செல்பவன் அதைக்குறித்து மிகவும் துக்கப்பட்டு, மனந்திரும்பி, கர்த்தரிடம் அறிக்கையிட தவறமாட்டான். அவரும் அவன் பாவங்களை மன்னித்து அவனை சுத்திகரிப்பதற்கு உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
____________________________________
மொழி பெயர்ப்பு விவரம்:
This article “The Narrow Way (Matthew 7:13-14)” translated by Gnana Bhaktamitran includes excerpts from 1) The Strait Gate and 2) The Narrow Way, Chapters 21 & 22 of Vol 2 (pp 476-496), from: “Studies in the Sermon on the Mount” By Dr. D. Martyn Lloyd-Jones
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.