Skip to content

அளவுகடந்த பாவமுள்ளதாகும் பாவம் (மத்தேயு 5:27-28)

Excerpt from the work of Martyn Lloyd-Jones, selected and translated into Tamil by Gnana Bhaktamitran

The Exceeding Sinfulness of Sin (Matthew 7:27-28)

 

மொழி பெயர்ப்பாளரின் முகவுரை
இது, பாவத்தின் அகோரத்தைக் குறித்த உபதேசமாகும். இதில் குறிப்பிட்டிருக்கும் தலைப்பு (Heading of the Title) இதன் ஆசிரியரே (Dr. லாய்ட் ஜோன்ஸ்) உபயோகித்திருப்பதாகும். இதை ரோமர் 7:13ல் இருந்து (Heading of the Title) எடுத்திருக்கிறார். தமிழில் இந்த தலைப்பு அவர் உபயோகித்திருக்கும் சொற்றொடரையே (KJV) வேதாகமத்தின் அடிப்படையில் கொடுத்திருக்கிறேன். தமிழ் வேதாகம சொற்கள், சொற்றொடர்கள் முதலியவைகளை, சில இடங்களில் (NKJV / ESV) வேதாகம சொற்களின் அடிப்படையில் மாற்றியிருப்பதைக் குறித்து இடறலடையத் தேவையில்லை.

இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் கூறினதாவது, “விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறதாவது: ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்”. இப்படியிருக்க, பரிசேயரும் வேதபாரகருமோ, விபசாரத்தைக் குறிக்கும் கற்பனையை, ஒருவன் நடப்பிக்கும் அந்த கிரியையில் மட்டுமே (The Physical Act) உள்ளடக்கி, அதை மற்றவர்களுக்கும் போதித்து, தங்களை, அந்தக் கற்பனையின்படி குற்றமற்றவர்களாக மனோபாவனை செய்து கொண்டார்கள்.

பவுல் அப்போஸ்தலனும்கூட தன்னைப்பற்றி கூறும்போது, தானும் ஒரு காலத்தில், அவர்கள் எண்ணியபடி தவறுதலாக நினைத்திருந்ததாக ரோமர் 7ம் அதிகாரத்தில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அவர் அதில், “இச்சியாதிருப்பாயாக” என்று கூறும் கற்பனையை நன்றாக உணரும்போதுதான் அது வெளிப்படையாகக் காணக்கூடிய ஒரு கிரியையில் உள்ளடங்கியதல்ல என்பது தெளிவாகிறது என்று குறிப்பிடுகிறார். அதற்கு மாறாக அது வெளியே தெரியாமல் இருதயத்திலேயே ஏற்படுகின்ற ஒரு பாவமாகும் என்பது விளங்குகிறது. ஆகவேதான் பவுல் அப்போஸ்தலன் ரோமர் 7:7ல் “இச்சியாதிருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், ‘இச்சையே பாவம் என்று நான் அறியாமலிருந்திருப்பேனே’ என்று குறிப்பிடுகிறார்.

நியாயப்பிரமாணம் எப்போதுமே “இதயபூர்வமாக”, அல்லது “இருதயத்திலிருந்து” என்பது போன்ற பண்புகளை முக்கியப்படுத்துவதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார். ஆனால் வெளிப்பிரகாரமான தெய்வபக்தியிலும், வெளிப்பிரகாரமானதும் மேம்பூச்சுமான கீழ்படிதலிலுமே ஊறிப்போன அந்த மக்கள் இந்த பண்புகளை முழுவதுமாக விட்டுவிட்டார்கள். ஆகவேதான் இயேசுவானவர் அவர்களை நோக்கி, “நீங்கள் மனிதர் முன்பாக உங்களை நீதிமான்களாய்க் காட்டுகிறீர்கள்; தேவனோ, உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்” என்று கூறினார் (லூக்கா 16:15).

இந்த உதாரணங்களிலிருந்து பவுல் அப்போஸ்தலன் ரோமர் 7:13ல் உபயோகித்திருக்கும் சொற்றொடரான “அளவு கடந்த பாவமுள்ளதாகும் பாவம்” என்று சொல்லப்படுகிற பாவத்தின் அகோரம் என்னவென்பதை அறிந்து கொள்ளலாம். பாவத்தைக்குறித்த இப்படிப்பட்ட உபதேசத்தை இக்காலத்து மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இவர்கள் மனோதத்துவ சாஸ்திரம் (Psychology), அறிவு என்று சொல்லிக்கொண்டு, பாவத்தை, வளர்ச்சியின் ஒரு அம்சம், ஒருவனின் மனநிலை என்பது போன்ற பதங்களை பயன்படுத்தி, அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். ஆனால் என்னுடைய எண்ணமாவது, பாவத்தின் அகோரம் (பயங்கரம்) என்னவென்பதை ஒருவன் தெளிவாக விளங்கிக்கொண்டாலொழிய அவனால் புதிய ஏற்பாட்டின் வாயிலாக விளக்கப்பட்டிருக்கும் இரட்சிப்பு என்ன என்பதை ஒருபோதும் விளங்கிக்கொள்ள இயலாது.

இதை விளங்கிக்கொள்ள இன்னொரு சந்தர்ப்பத்தையும் குறிப்பிடலாம்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் அல்லவா. ஏன் இந்த பயங்கர சம்பவம் நேரிட வேண்டும்? இது நேரிடப்போகிறது என்று அவருக்குத் தெளிவாக தெரிந்திருந்ததும் தவிர, அவர் எருசலேம் போவதை அவருக்கு அருமையான அநேகர் தடுக்க முயற்சித்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ளாமல், அங்கு செல்ல சிறிதும் தயங்கவில்லை. மேலும் அவர் விரும்பினால் தன்னைப் பாதுகாக்க பன்னிரெண்டு லேகியோனுக்கு அதிகமான (அதாவது 72,000க்கும் அதிகமான) தேவதூதர்களை அவர் கட்டளையிட்டிருக்கலாம் மத் 26:53. ஆனால் அப்படி ஏன் அவர் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் அவர் எல்லா நீதியையும் நிறைவேற்றியிருக்க முடியாதல்லவா? சிலுவையில் மரித்தல் என்றால் என்ன? நான் உறுதியாக சொல்லக்கூடியது என்னவென்றால், பாவத்தைக் குறித்த உபதேசத்தை நன்றாக விளங்கிக் கொண்டிருந்தாலொழிய இந்தக் கேள்விக்கு ஒருநாளும் பதில் சொல்ல இயலாது. பாவத்தின் கிரயத்தைக் கொடுக்க வேறு ஒரு வழியும் இல்லை. மோட்ச வாசலைத் திறந்து நம்மை அங்கு அனுமதிக்க அவரைத்தவிர வேறு யாராலும் முடியவும் முடியாது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அநேக கிரேக்க தத்துவ சாஸ்திரிகள் வாழ்ந்திருந்திருக்கின்றனர்; அறிவு புகட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பாவி மோட்சவாசலை எட்டும் வழியை, பிதாவாகிய தேவன், இவ்வுலகிற்கு அனுப்பிய குமாரனாகிய இயேசுகிறிஸ்து ஒருவரைத் தவிர வேறு யாராலும் காட்டியிருக்க முடியாது; அவரும் இதை, தன்னை இவ்விதமாக சிலுவையில் மரித்தல் மூலமாக மட்டுந்தான் செய்யமுடிந்தது. இதோடு நான் பயபக்தியுடன் கூற விரும்புவது, வேறு எந்த வழியாவது இருந்திருந்தால் தேவன் இவ்வித பயங்கரமான கொடுமையை அனுபவிக்க தன் நேசகுமாரனை ஒருக்காலும் அனுமதித்திருக்கமாட்டார்.

இதே மாதிரி விளங்கிக்கொள்ளவேண்டிய மற்றுமொரு முக்கிய உண்மை, ஆவிக்குரிய மறுபிறப்பாகும், (அதாவது ஒரு புதிய சிருஷ்டியாக மாறுவது). சுவிசேஷங்களிலும், நிருபங்களிலும் பல இடங்களில் இவற்றைப்பற்றி எழுதியிருப்பதைக் காணலாம். இவைகளைக்குறித்து விளங்கிக்கொள்ள வேண்டுமானால் பாவத்தைக்குறித்த உபதேசத்தை, புதிய ஏற்பாட்டின்படி விளங்கிக்கொண்டிருக்க வேண்டும். அப்படி விளங்கிக்கொண்டால் மட்டுந்தான், மறுபிறப்பு இல்லாமல், அதன் காரணமாக புதிய இயல்பு (new nature) ஏற்படாமல், ஒரு புதிய இருதயம் இல்லாமல், இரட்சிக்கப்பட முடியாது என்ற உண்மையை உணர முடியும். தங்கள் சுயமுயற்சியில் நம்பிக்கை உடையவர்கள் சுவிசேஷம் இன்னதென்று அறியாதவர்கள். அதற்குக் காரணம், புதிய ஏற்பாட்டின் உபதேசத்தின்படி, பாவம் என்றால் என்ன என்று விளங்கிக்கொள்ளாததும், தங்களை மீறுதல்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாக காணாததுமே.

பாவத்தைக் குறித்த உபதேசமில்லாமல் சுவிசேஷம் பிரசங்கிப்பது அர்த்தமற்றது. அதாவது பாவம் என்றால் என்ன என்று விளங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் பாவத்தில் விழுந்த மக்களுக்கு முதலாவது தெரிய வேண்டியது தேவன் கொடுத்த கற்பனைகளை முழுவதுமாக கைக்கொண்டாலொழிய ஒருபோதும் மோட்சம் செல்ல முடியாது என்ற உண்மை. இதற்கு காரணம், தேவனுடைய மகாபரிசுத்த நிலையே. பாவத்தில் விழுந்த மக்களுக்கு, கடவுள் விதித்த நிபந்தனைகளை அதாவது கற்பனைகள் முழுவதையும் கைக்கொள்ளுவதென்பது முடியாத காரியம் என்பதும் தெரிந்த உண்மையே. இதை நிறைவேற்ற முடியாதவர்கள் சதாகாலங்களிலும் அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள்; அங்கு அவர்கள் புழு சாகாமலும் அக்கினி அவியாமலுமிருக்குமென்று தேவனுடைய குமாரனே கூறுகிறார். நரகத்தைப் பற்றிய போதனைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுகிறிஸ்துவின் போதனையை நிராகரிப்பதற்கு ஒப்பாகும். பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து போதிக்கையில், அந்த பாவம் மனிதனை நரகமாகிய அக்கினிக்கடலுக்குக் கொண்டுசெல்லும் சக்தி உடையது என்று இயேசுகிறிஸ்துவே அழுத்தமாகக் கூறுகிறார்.

இப்படியிருக்க, சுவிசேஷ பிரசங்கத்தில் ஜனங்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகளை தெளிவாக விளங்க வைக்க வேண்டும். முக்கியமாக அவர்களுக்கு தெரியவேண்டியது: கடவுளின் மகாபரிசுத்த நிலை, மனிதனின் மோட்சம் செல்ல முடியாத பாவ நிலை, மோட்சம் செல்ல நிபந்தனையாகக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள முடியாத நிலை, இதன் காரணமாக நரகமாகிய அக்கினிக் கடலில் எறியப்படுவதை தவிர்க்க முடியாத நிர்பந்தமான நிலை முதலியன. தவிர, இந்த குலைநடுங்கும் நிலைக்குக் காரணம், தன் பாவ நிலையே என்ற உண்மையைத் திட்டமும் தெளிவுமாக உணர்ந்த மனிதன்மட்டுந்தான் உண்மையான பிரகாரம் இயேசுக்கிறிஸ்துவின் பாதத்தில் விழுந்து, தன்னைக் காப்பாற்றவும் இரட்சிக்கவும் கெஞ்சி மன்றாடுவான். உண்மையான சுவிசேஷம் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். தவிர, இந்த மனநிலை, ஒவ்வொரு பாவியும், தான், கடவுளிடம் மனந்திரும்புதலுக்கும், அவருடைய ஒரேபேறான பரிசுத்த தேவ குமாரன், அப்படி மனந்திரும்பும் ஒவ்வொரு பாவியின் பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டு, (கிருபாதாரபலியாக மரித்து), அந்தப் பாவியை நீதிமானாக்கும் பொருட்டு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் (ரோமர் 4:25) என்ற உண்மையை விசுவாசிப்பதுமட்டுமல்லாமல் அவருக்கு தன்னையே பூரணமாக ஒப்புக்கொடுக்கும் நிலைக்கும் நடத்தப்பட வேண்டும்.

இவ்விதமாகவே, இந்த பாவத்தைக் குறித்த போதனை, உண்மையான பரிசுத்தமாவது என்ன என்பதின் தாற்பரியத்தையும் விளக்க உதவியாயிருக்கிறது.

இதுவரை நாம் கருத்தில் கொண்ட போதனைகளின் வாயிலாக தெரிந்துகொள்வது, இக்காலங்களில் சுவிசேஷ ஊழியங்கள் எவ்வளவு மேம்பூச்சாக (Superficially) செய்யப்படுகிறது என்பதும், அதேமாதிரி அவர்கள் தங்கள் கருத்தில் கொண்டிருக்கும் பரிசுத்தத்திற்கும் புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பரிசுத்தத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதும் கண்கூடாகக் காண்கிறோம். அறியாமையினாலும், தங்கள் பேச்சு சாமர்த்தியத்தினாலும் தங்களைப் பரிசுத்தமாய் நடப்பவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். உதாரணமாக, விபசாரம் என்ற பாவத்தை எடுத்துக்கொண்டால், அதைக்குறித்த பரிசுத்தம், கிரியையில் மட்டுமல்ல, அது இருதயத்திலும் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும். இது ஏற்கனவே கூறப்பட்ட உண்மை. ஆனால் அதோடு இப்போது கூறவிரும்புவது, நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டுமானால் மிக கவனமும், அடிக்கடி தற்பரிசோதனை செய்தலும் நம்முடைய தினசரி ஜீவியத்தில் பழக்கமாயிருக்க வேண்டும். தவிர, 2 கொரிந்தியர் 13:5ன்படி பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.

பரிசுத்தம் இந்த அளவிற்கு இருக்க வேண்டுமானால், இது நம்முடைய சுய பலத்தால் ஆகிற காரியமே இல்லை என்றும் இதுகாரும் தெரிந்திருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் மட்டுந்தான் இதன் ஆரம்பமும் வளர்ச்சியும் இருக்க முடியும். பாவத்தைப்பற்றிய போதனை நமக்கு முக்கியமாக அறிவுறுத்துவது, நாம் கிறிஸ்துவிடம் தஞ்சம் புகுவதைவிட வேறு வழி இல்லை என்ற உண்மையாகும். கர்த்தருடைய உதவி இல்லாமல், நாம் ஆவிக்குரிய பிரகாரம் எவ்வளவு அபாத்திரரும், பெலவீனருமாய் இருக்கிறோம் என்பதும் தெரியவருகிறது. அந்த நிலையை அடைவதுதான் ஆவியில் தரித்திரர் என்று சொல்லப்படுவது. (மத்தேயு 5:3). இவர்கள்தான் தங்கள் குறைவுகளுக்காக துயரப்படுகிறவர்கள், (மத்தேயு 5:4). இப்படிப்பட்டவர்கள்தான் நீதியில் வளர பசியும் தாகமுமாயிருப்பவர்கள், (மத்தேயு 5:6). இதன் காரணமாகவே இவர்கள் கிறிஸ்துவின்மேல் எப்போதும் நாட்டமுள்ளவர்களாயும், அவரில் நிலைத்திருப்பவர்களுமாயிருப்பார்கள், (யோவான் 15:4).

நாம் இவ்வளவு மோசமான பாவிகளாயிருந்தும், நம்மை மோட்சம் சேர்க்க தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு எவ்வளவு பயங்கர பாடுகள் அனுபவித்திருக்கிறார் என்பதை உண்மையாக உணர்ந்தவன் அவரைவிட அதிகமாக எதையுமே நேசிக்கமாட்டான்; நேசிக்க முடியாது. அவ்விதமாக அவன் மனப்பான்மை மாறாவிட்டால் அதற்கு கீழ்கண்ட அறியாமை மட்டுந்தான் காரணமாயிருக்க வேண்டும்:- பாவத்தின் தன்மை, அதனால் ஏற்படக்கூடிய சொல்லிமுடியாத பிரச்சனைகள், அது பரிசுத்த கடவுளுக்கு முன் எவ்வளவு (தாங்க இயலாத) அருவருப்பானது, அப்படிப்பட்ட பாவநிலையிலிருக்கும் நிர்ப்பந்தமான மனிதனை இரட்சிக்க, தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனையே (இவ்வளவு பயங்கரமான பாடுகளோடு கூடிய) கிருபாதார பலியாக மரிப்பதற்காக இவ்வுலகிற்கு அனுப்ப தயங்காதது, முதலிய உண்மைகள். இவற்றை அறிந்துகொள்வதற்கு பாவத்தைக் குறித்த போதனை தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

சகல அசுத்த எண்ணங்களும் விபசாரம் முதலிய பாவங்களும் ஒருவனுடைய இருதயத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது என்று இயேசுகிறிஸ்துவே நமக்கு தெளிவாக சொல்லிக்கொடுத்திருக்கிறார், (மத்தேயு 15:19). இந்த பாவத்தின் ஒரு வஞ்சனையான தன்மையென்னவென்றால், நீ மனதில் நினைப்பது பாவமில்லை, நீ கிரியையில் பாவம் செய்யாமல் இருந்தால் போதும்; கவலைப்படாமல் திருப்தியாக இரு என்று மனதிற்குள் அவனுக்கு வஞ்சனையான யோசனையைக் கொடுக்கிறது. ஆனால் கிறிஸ்தேசுவோ கூறுவதாவது, “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபசாரம் செய்தாயிற்று” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். தேவ குமாரன் கூறுவதை அலட்சியப்படுத்தலாமா? ஒருபோதும் கூடாது. இது (மத்தேயு 5:28)ல் எழுதியிருக்கிறது. தவிர, மாற்கு புத்தகத்தில், இப்படி மனதினால் பாவம் செய்தால்கூட அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் என்றிருக்கிறது. அங்கு அவர்கள் புழு சாவாமலும், அக்கினி அவியாமலுமிருக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது, (மாற்கு 9:47-48). அப்படியிருக்க, பாவம் எவ்வளவு வஞ்சனையுடன் செயல்படுகிறது என்று அறிகிறோம். சிலபேர் சொல்வதைக் கேட்டிருக்கலாம், “கர்த்தருடைய கிருபையால் நான் தப்பித்துக்கொண்டேன்.” ஒரு வேளை அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம்; ஆனால் மனதிற்குள் பாவம் செய்திருந்தால்? அது மற்றவர்களுக்குத் தெரியாது; ஆனால் கடவுளுக்கு தெரிந்துவிடும் அல்லவா?

இயற்கை சுபாவம் (Instinct) வேறு, பாவ எண்ணம் வேறு. உதாரணமாக பசி ஏற்படுவது இயற்கை சுபாவம். அது தவறல்ல. ஆனால் பெருந்தீனிப் பிசகு. இதேவிதத்தில்தான் எல்லா இயற்கை சுபாவங்களையும் பாவத்திலிருந்து வித்தியாசமாகப் பார்க்க வேண்டும். இவ்விதமே செக்ஸ் (Sex)இம், அது கடவுளால் அருளப்பட்ட இயற்கை சுபாவம். ஆனால் அது எவ்விதமாக மனித இருதயத்தில் பாவமாக பிரதிபலிக்கிறது என்பதையும், அது எவ்வளவு பயங்கர முடிவுக்கு மனிதனை தள்ள வல்லது என்பதையும் மறக்கலாகாது. ஆகவேதான் இயேசுவானவர் உன் கண் உனக்கு இடறலாயிருந்தால் அதை பிடுங்கிப்போடு என்று உருவக அணி தோரணையில் (Metaphorically) கூறுகிறார். கண்ணைப் பிடுங்கிவிட்டாலும் அவன் பாவம் செய்யக்கூடுமென்று அவருக்குத் தெரியாமலில்லை. பாவத்தின் அகோரத்தை தெளிவுபடுத்தவே அவ்விதம் கூறியிருக்கிறார் என்பது யாவருக்கும் தெரியும். நம்மில் யாராவது, தாங்கள் விபசாரம், சூது, வாது, கபடு முதலான பாவங்களில் சம்மந்தப்படவில்லை என்று தங்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தால், அவர்களைக் குறித்து என்ன நினைப்போம்? தங்களுடைய தன்மை இன்னதென்று அறியாதவர்கள், அல்லது அவர்கள் இருதயத்தின் நிர்ப்பந்தமான நிலையை அறியாதவர்கள் என்று கருதுவதைவிட வேறு என்ன சொல்ல முடியும்? மனிதருக்கு முன் பரிசுத்தமாய் காணப்பட்டாலும், அவன் உள்ளூர சொல்லிமுடியாத பாவ அருவருப்பான குணமுடையவன். யார் தன்னைக்குறித்து, “நான் ஆவிக்குரிய பிரகாரம் அசுத்தமானவன், என்னுடைய சுத்திகரிப்புக்கு ஏங்குகிறேன்; என்னை யார் சுத்திகரிக்க முடியும்” என்று அங்கலாய்ப்பு அடைகிறானோ அவன்தான் நீதியின்மேல் பசியும், தாகமும் உடையவன். அவ்விதமான நிலைக்கு அவன் வரும்வரை அவன் நிலைமை மகா பரிதபிக்கப்படத்தக்கது என்றுதான் கருத வேண்டும். ‘தேவனே, இந்த மனிதனுக்கு இரங்கும்’ என்று அவனுக்காக ஜெபிப்பதைவிட வேறு வழி இல்லை.

என்மட்டில் நான் சொல்லக்கூடியது: நான் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்டேன்: என் தேவனும், கர்த்தருமான இயேசுகிறிஸ்து, எந்த பாவமுமில்லாத மகா பரிசுத்தர், என் பாவத்தையும், என் மீறுதல்களையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு எனக்கு வரவேண்டிய தண்டனையையும் அவரே அனுபவித்து, அவர் சிந்திய பரிசுத்த இரத்தத்தினால் என்னை சுத்திகரித்து அவருடைய நீதியையும் எனக்கு தந்தருளினார்; என் மாசுபடிந்த இருதயம் மாற்றப்பட வேண்டுமென்று நான் ஏங்கி விரும்பினபோது எனக்கு ஒரு புது இருதயத்தையும் கொடுக்க சித்தமானார். அதை எனக்கு கொடுப்பதற்காகவே இவ்வுலகில் அவதரித்தார். அதை நான் பெற்றுக்கொண்டேன். என் மனமார்ந்த நன்றி அவருக்கு என்றென்றும் உரித்தாகுக.

“என்னை மீட்க வந்த தேவனே, பிதாவின் ஒரேபேறான சுதனே, உம்மில் நான் ஒரு புது சிருஷ்டியாய் வாழ, என்னை மாற்றும், என் தேவனே, என் கர்த்தாவே.” இதுவே, இதைப் படிக்கும் உங்களுடைய விண்ணப்பமாக இருக்கட்டும்.

____________________________________

மொழி பெயர்ப்பு விவரம்:
This article, ‘The Exceeding Sinfulness of Sin, Mt 5:26-30’ translated by Gnana Bhaktamitran, includes excerpts from Chapter 22 of Vol 1 (pp 204-212), from: “Studies in the Sermon on the Mount”  By Dr. D. Martyn Lloyd-Jones.
Published By: William B. Eerdmans Publishing Co., Grand Rapids Michigan / Cambridge, U. K, One- Volume Edition, Second Edition 1976.

%d bloggers like this: