Skip to content

மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது? பாகம் – 1

(நவம்பர் 25, 2007ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)

Translation into Tamil by Vinotha Surendar

You Must Be Born Again: What Happens in the New Birth? Part -1 delivered on November 25, 2007 By John Piper

யோவா 3:1-10
யூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? என்றார்.

மறுபடியும் பிறத்தலைக் குறித்த ஒரு தொடர்தியானத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். யோவா 3:3ல் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன்” என்று இயேசுக்கிறிஸ்து நிக்கொதேமுவிடம் கூறுகிறார். அவ்வார்த்தையை சொல்லும்போது அதை அவர் நம் எல்லோருக்குமாக சேர்த்துதான் சொல்லுகிறார். நிக்கொதேமுவுக்கு மாத்திரம் விசேஷமாக அதை அவர் கூறவில்லை. நீங்களும் நானும்கூட மறுபடியும் பிறந்தாலொழிய தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமுடியாது. மறுபடியும் பிறவாவிட்டால் நாம் இரட்சிக்கப்பட முடியாது; கடவுளின் குடும்பத்தில் பங்குபெற முடியாது, மோட்சத்திற்கும் செல்ல முடியாது. அதற்கு மாறாக நாம் நரகத்திற்குத்தான் போகிறவர்களாக இருப்போம்.

மிகுந்த பக்தி வைராக்கியம் நிறைந்த யூத மதத்தலைவர்களாகிய பரிசேயரில் நிக்கொதேமுவும் ஒருவர். அப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் இயேசுக்கிறிஸ்து, மத் 23:15, 33 ஆகிய வசனங்களில், “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். . .  சர்ப்பங்களே, விரியன் பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்?” என்று கூறுகிறார். ஆகவே, நாம் தியானிப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கும் இந்த விஷயம் சாதாரணப்பட்டதல்ல, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நித்தியஜீவனுக்குட்படுவோமா இல்லையா என்பது மறுபிறப்பாகிய இந்த காரியத்தில்தான் தொக்கி நிற்கிறது. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காண மாட்டான்”

மறுபிறப்புகலக்கத்தை ஏற்படுத்துகிறது

சென்ற தியானத்திலே, நாம் எதற்காக இந்த தொடர் தியானத்தை ஆரம்பித்தோம் என்பதைக் குறித்தும், இது சம்பந்தமாக நமக்கு என்னவிதமான கேள்விகள் எழக்கூடும் என்பதைக் குறித்தும் ஆராய்ந்தோம். இந்த தியானத்திலே நாம் சந்திக்கவிருக்கிற கேள்வி: மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்பதாகும். அதற்கு பதிலளிப்பதற்கு முன்னதாக, இந்த தியானத்தை கேட்பவர்களின் மனநிலையைப் பற்றி எனக்கு உண்டாயிருக்கிற கவலையைக் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தொடர் தியானங்கள் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் நன்றாக கவனித்துப் பார்த்தோமானால் அது மீண்டும் மீண்டுமாக கலக்கத்தை ஏற்படுத்துவது போலவே இந்த தியானங்களும் அநேருக்கு இருக்கக் கூடும். அதற்கு குறைந்தபட்சம் மூன்று காரணங்கள் இருக்கலாம்:

1. நம்முடைய மிகவும் மோசமான நிலமை

கடவுளுடைய உயிர்ப்பிக்கிறதான கிருபை செயல்படாதபட்சத்தில், நமது ஆவிக்குரிய நிலமை நம்பிக்கையற்றதும், நமது குணங்கள் மோசமானதாகவும், நாம் குற்றவாளியான நிலைமையிலுமே இருப்போம் என்பதை மறுபிறப்பைக் குறித்த இயேசுவின் உபதேசம் சுட்டிக் காண்பிக்கிறது.  நம்மில் மறுபிறப்பு ஏற்படுவதற்கு முன்பாக நாம் ஆவிக்குரியவிதத்தில் மரித்தவர்களாக இருந்தோம். சுயநலமும், எதிர்த்து நிற்கிறதுமான குணங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். நியாயத்தின்படி நாம் கடவுளுக்கு முன்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவும், அவருடைய கோபாக்கினைக்கு ஆளானவர்களாகவும் இருந்தோம். இயேசுக்கிறிஸ்து நம்மிடம் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொல்லுகையில், நமது தற்போதைய நிலமையானது உணர்வற்றதும், கெட்டுப் போனதும், குற்றமுள்ளதுமாகிய மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார். நமது வாழ்வில் கடவுளின் பெரிதான கிருபை இல்லாமல், நம்மிடம் இருக்கிற குறைபாடுகளைக் குறித்து கேட்டு அறிந்து கொள்ள விரும்ப மாட்டோம். ஆகவே, நீங்கள் மறுபடியும் பிறந்துதான் ஆகவேண்டும் என்று இயேசுக்கிறிஸ்து கூறுவதைக் கேட்டு நாம் கலக்கமுறுகிறோம்.

2. நாமாகவே மறுபிறப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத தன்மை

மறுபிறப்பில் நமக்குள் ஏதோ நிகழ்கிறதே தவிர, நாமாகாவே எதுவும் செய்துகொள்வதல்ல என்கிற உபதேசம் நமக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. யோவா 1:13 இக்கருத்தை வலியுறுத்துகிறது. “இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” அனைவரும் தேவனுடைய பிள்ளைகள் என்று அவ்வசனம் அறிவிக்கிறது. பேதுருவும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. .  அவர், . . தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1பேது 1:3,4). மறுபிறப்பை நாமாக ஏற்படுத்திக் கொள்வதில்லை, தேவனே அதை ஏற்படுத்துகிறார். நம்மில் ஏதேனும் நன்மை காணப்படுமானால் அது நாம் மறுபடியும் பிறந்ததனால் ஏற்பட்டிருக்கிற விளைவேயழிய, நாம் செய்த நன்மையே நமது மறுபிறப்புக்குக் காரணம் என்று கூற முடியாது. மறுபடியும் பிறப்பதென்பது நமது கையில் இல்லை என்பது இதனால் விளங்குகிறது. மறுபடியும் பிறத்தல் நமது கட்டுப்பாட்டில் இல்லை. எதுவும் செய்யவியலாத நமது நிர்பந்தமான நிலையையும், வேறு யாரையோ அதற்கு சார்ந்திருக்க வேண்டியதான நிலமையையும் இது சுட்டிக் காண்பிக்கிறது.

ஆகவே, இது நமக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் மறுபடியும் பிறவாவிட்டால் பரலோகராஜ்ஜியத்தைக் காண முடியாது என்கிற எச்சரிப்பைப் பெற்றிருக்கிறோம். அதே சமயத்தில் நாமாகவே நம்மில் மறுபிறப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. இது மிகுந்த கலக்கத்தை உருவாக்குகிறது.

3) மறுபிறப்பில் கடவுளுக்கே முழு உரிமை இருப்பது நமக்கு அனுகூலமாக இல்லை

மறுபிறப்பைக் குறித்த இயேசுவின் போதனை நமக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதற்கு மூன்றாவது காரணம், அதில் கடவுளுக்கே முழு சுதந்திரமும் இருக்கிறது என்கிற உண்மையை அது நமக்கு காண்பிக்கிறது. அதையுந்தவிர்த்து, நமது சுயநலம் மற்றும் எதிர்த்து நிற்கிற குணங்களின் காரணமாக நாம் ஆவிக்குரியவிதத்தில் மரித்தவர்களாகக் காணப்படுகிறோம். சுபாவத்தின்படி நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருக்கிறோம்(எபே 2:3). நமது கீழ்ப்படியாத குணம் மிகவும் ஆழமாக நம்மில் பதிந்திருப்பதால் நம்மால் சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் மகிமையைக் காணவோ, அதை நேசிக்கவோ இயலாமல் இருக்கிறது (2கொரி 4:4). இப்படியிருக்க, நாம் மறுபிறப்பை அடைய வேண்டுமானால் அதற்கு தேவனையே முழுவதுமாக சார்ந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆவிக்குரிய பிணங்களாக இருக்கிற நாம் செய்கிற கிரியைகளைக் கொண்டு அவர் நம்மை உயிர்ப்பிக்க சித்தங் கொள்வதில்லை. மாறாக, அவர் நம்மை உயிர்ப்பித்திருக்கிறபடியினால்தான் நாம் நற்கிரியை செய்யக் கூடியவர்களாக ஆகிறோம். அநேகருக்கு இந்த விஷயமானது ஆரம்பத்தில் கலக்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கிறது.

எனது நோக்கம்: உங்களை திடப்படுத்தி, இரட்சிப்பிற்குள் நடத்துவதே தவிர கலக்கமூட்டுவதல்ல

ஆகவே, நான் இந்த தொடர் தியானத்தை ஆரம்பிக்கையிலேயே இது பலருக்கு எவ்வளவு கலக்கத்தை விளைவிக்கும் என்பதை அறிந்தவனாகத்தான் ஆரம்பிக்கிறேன். ஓ! நான் எவ்வளவு ஜாக்கிரதையுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். இளகிய மனதுள்ள ஆத்துமாவுக்கு, தேவையில்லாத துயரத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அதே சமயத்தில் வெறும் நற்குணங்களையும் பக்தியையும் ஆவிக்குரிய வாழ்க்கையாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நான் விரும்பவில்லை. எனக்காக தயவு செய்து ஜெபியுங்கள். இந்நாட்களில் நான் நித்தியத்துக்குரிய ஆத்துமாக்களை கையாளுவதாக உணருகிறேன். இருந்தாலும் அவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை எனக்கு இல்லை என்பதை அறிந்திருக்கிறேன். கடவுளுக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு.  எபே 2:4-5 அவர் கூறுவதை அவர் நடப்பிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்”. கிறிஸ்துவானவர் சத்தியத்தினாலே எங்கே உயர்த்தப்படுகிறாரோ அங்கே தேவன் தமது உயிர்ப்பிக்கிற கிருபையை மிகவும் அதிகமாகப் பெருகச் செய்வதில் விருப்பங் கொள்கிறார். ஆகவே, இந்த தொடர் தியானமானது உங்களை வெறுமனே கலக்கப்படுத்தி விட்டுவிடாமல், உங்களைத் திடப்படுத்தி ரட்சிப்புக்குள் நடத்தும் என்பதே என்னுடைய நம்பிக்கையாக இருக்கிறது.

மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது?

நாம் இந்தக் கேள்விக்கு வருவோம். மறுபிறப்பில் என்னதான் நிகழ்கிறது? இதற்குரிய விடையை நான் மூன்று தலைப்புகளில் விவரிக்கவிருக்கிறேன். அதில் இரண்டை இந்தத் தியானத்திலும் மூன்றாவதை அடுத்த தியானத்திலும் பார்க்கலாம். 1) மறுபிறப்பில் புதுவிதமான பக்தியை அல்ல, புதிய வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறோம். 2) மறுபிறப்பில், இயேசுக்கிறிஸ்துவிலுள்ள தெய்வீகத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்ல, உங்களில் ஏற்பட்டிருக்கும் தெய்வீகத்தை அனுபவித்தல் ஏற்படுகிறது. 3) மறுபிறப்பில் உங்கள் பழைய சுபாவமானது முன்னேற்றமடைவதில்லை, மாறாக உங்களுக்குள் ஒரு புதிய சுபாவம் சிருஷ்டிக்கப்படுகிறது. உங்களுடைய இயல்பு மன்னிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியினால் ஒரு புதிய சுபாவம் உங்களுக்குள் ஏற்படுகிறது. இவைகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1) புதுவித பக்தி அல்ல, புதிய வாழ்க்கை!

மறுபிறப்பில் என்ன நிகழ்கிறதென்றால், அதில் ஒரு புதிய பக்தி மார்க்கத்தையல்ல, புதிய வாழ்க்கையைப் பெறுகிறோம். யோவா 3ஆம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களை வாசியுங்கள். யூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நிக்கொதேமு என்பவன் யூதருக்கு அதிகாரியாகவும், பரிசேயனாகவும் இருந்தான் என்பதை யோவான் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறார். பரிசேயர்கள், யூதர்களுக்குள் மிகுந்த பக்தி வைராக்கியம் உடையவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவனிடம்தான் இயேசுக்கிறிஸ்து 3ஆம் வசனத்தில் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். 7ஆம் வசனத்தில் இன்னும் நேரிடையாகவே  “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்றும் சொல்லுகிறார். யோவான் சொல்வதில் ஒரு விஷயம் என்னவென்றால், நிக்கொதேமு எவ்வளவுதான் பக்தியாக இருந்தாலும், பரிசேய நீதியைக் குறித்து எவ்வளவுதான் கற்று அறிந்திருந்தாலும், அவைகளை எவ்வளவு வைராக்கியமாகக் கடைப்பிடித்திருந்தாலும் மறுபடியும் பிறப்பதென்பது தவிர்க்க முடியாத தேவை என்கிறார். உண்மையில் சொல்லப் போனால் அவைகள் யாவுமே மறுபிறப்புத் தேவை என்பதைதான் சுட்டிக் காண்பிப்பதாக இருக்கின்றன.

நிக்கொதேமுவுக்கும் உங்களுக்கும் எனக்கும் என்ன தேவையென்றால், ஒரு பக்தி மார்க்கமல்ல, புதிய ஜீவனாகும். பிறப்பு என நாம் குறிப்பிடுகையில் ஒரு புதிய ஜீவன் உலகத்திற்குள் பிரவேசிப்பதையே குறிப்பிடுகிறோம். ஒருவிதத்தில் பார்த்தால் நிக்கொதேமு உயிருடன் இருப்பது போலத்தான் தோன்றுகிறார். அவர் சுவாசிக்கிறார், சிந்திக்கிறார், உணருகிறார், செயல்படுகிறார். அவர் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதன். ஆனால், இயேசுக்கிறிஸ்துவோ அவரை இறந்தவராகக் காண்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நிக்கொதேமுவில் ஆவிக்குரிய ஜீவன் இல்லை. ஆவிக்குரிய விதமாக அவர் பிறவாத நிலையில் இருக்கிறார். அவருக்குத் தேவையானது உயிர். மிகுந்த பக்தி வைராக்கியமோ, பக்திக்குரிய நடவடிக்கைகளோ அல்ல.  அவைகள் அவரிடம் ஏராளமாகவேக் காணப்படுகிறது.

இயேசுக்கிறிஸ்து லூக் 9:60ல் கூறிய வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கும். இயேசுவைப் பின்பற்றுவதைத் தள்ளிப்போடும் விதமாக, தனது தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் எனக் கூறிய இளைஞனிடம் இயேசு என்ன கூறுகிறார்? “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்” என்கிறார். அதாவது, சரீரப்பிரகாரமாக மரித்துப் போனவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடக்கம் பண்ணப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் ஆவிக்குரியபிரகாரமாக மரித்த நிலையிலுள்ளவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அந்த மரித்தோரை அடக்கம் செய்யலாம் என்கிற அர்த்தத்தில் இயேசு கூறுகிறார். இன்னொரு விதமாக சொல்வோமானால், உயிருள்ளவர்கள் போல நடமாடிக் கொண்டிருக்கிற அநேகர் மரித்த நிலையில் இருக்கிறார்கள் என்று இயேசு நினைக்கிறார். இயேசு கூறிய கெட்ட குமாரன் உவமையில்கூட, அந்த தகப்பன், “என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்” என்று கூறுவதைக் காண்கிறோம்(லூக் 15:24).

நிக்கொதேமுவுக்கு பக்திமார்க்கம் தேவையில்லை; உயிர்தான் தேவைப்பட்டது – ஆவிக்குரிய உயிர் தேவையாயிருக்கிறது. மறுபிறப்பில் என்ன நிகழ்கிறதென்றால், முன்பு இல்லாததான புதிய ஜீவன் ஒருவனில் உருவாகிறது. புதிய பிறப்பில் புதிய ஜீவன் உருவாகிறது. புதியஜீவன் என்பது பக்தி நடக்கையாலோ அல்லது ஒழுக்கத்தாலோ அல்லது நாமே தீர்மானித்துக் கொள்வதாலோ வருவதல்ல. உயிரைப் பெற்றுக் கொள்வதான காரியமே இது. மறுபிறப்பில் என்ன நிகழ்கிறதென்பதை விவரிக்கும் முதலாவது காரியம் இது.

2. தெய்வீகத்தை நம்மில் உணருதல், ஊர்ஜிதப்படுத்துதல் மாத்திரம் அல்ல

மறுபிறப்பில், இயேசுக்கிறிஸ்துவிலுள்ள தெய்வீகத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்ல, உங்களில் ஏற்பட்டிருக்கும் தெய்வீகத்தை அனுபவித்தலும் ஆரம்பமாகிறது. 2ஆம் வசனத்தில், நிக்கொதேமு, “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன்  இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான்” என்றார். இன்னொருவிதமாகச் சொன்னால், நிக்கொதேமு, இயேசுவில் அற்புதமான தெய்வீக செயல்களைக் காண்கிறார். அதன் காரணமாக, இயேசுக்கிறிஸ்து தேவனிடமிருந்து வந்தவர் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறார். இயேசு, தேவனுடைய கிரியைகளைச் செய்கிறவராய் இருக்கிறார். இயேசு அதற்கு, “என்னைக் குறித்து நீ காண்கிற இவ்வுண்மைகளை பாலஸ்தீனாவிலுள்ள யாவரும் அறிந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று பதில் கூறவில்லை. அதற்கு பதிலாக, “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். இல்லையானால், நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டீர்கள்” என்கிறார்.

அற்புத அடையாளங்களைப் பார்ப்பதும், அவைகளைக் கண்டு ஆச்சரியப்படுவதும், அற்புதங்களை நடப்பிக்கிறவர்களைப் பார்த்து அவர் கடவுளிடமிருந்து வந்தவர் என மெச்சிக் கொள்வதும் ஒருவரையும் இரட்சிக்காது. அற்புத அடையாளங்களினால் விளைகின்ற ஆபத்துக்களில் இதுவும் ஒன்று. அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கு உங்களுக்கு ஒரு புது இருதயம் தேவையில்லை. அவைகளைக் கண்டு வியந்து போற்றுவதற்கு, பாவத்தில் விழுந்து போன பழைய இருதயமே போதுமானதாக இருக்கிறது. பாவத்தில் விழுந்த பழைய மனுஷ சுபாவமானது, அற்புதம் செய்பவரை கடவுளிடமிருந்து வந்தவராக ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்கிறது. பிசாசுங்கூட இயேசுக்கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்திருப்பதையும், அவர் அற்புதங்கள் செய்வதையும் அறிந்து வைத்திருந்தான்(மாற் 1:24). இயேசு, நிக்கொதேமுவிடம், தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, அற்புதங்கள் செய்கிறவராக நீ என்னைக் காண்பது பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் திறவுகோல் அல்ல என்கிறார்  “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”.

இன்னொருவிதமாகச் சொன்னால், இயேசுக்கிறிஸ்துவிலுள்ள தெய்வீகத் தன்மையை அடையாளங் கண்டுகொள்வது மாத்திரமல்ல விஷயம், உங்களுக்குள்ளாக தெய்வீகத்தை அனுபவிப்பதே காரியமாகும். மறுபிறப்பென்பது இயற்கையானது அல்ல, அது தெய்வீகமானது. உலகத்தில் ஏற்கனவே இருக்கின்ற காரியங்களை வைத்து அதைக் கணக்கிட முடியாது. மறுபிறப்பிலுள்ள தெய்வீகத்தன்மையை 6ஆம் வசனம் விவரிக்கிறது: “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்”. நமது இயல்பு மாம்சத்துக்குரியது. தேவனுடைய ஆவியானவரே நம்மில் மறுபிறப்பை ஏற்படுத்துகிற தெய்வீக நபராக இருக்கிறார். இதை இயேசுக்கிறிஸ்து மீண்டுமாக 8ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார்: “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்திற்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்”. ஆவியானவர் இந்த உலகத்தின் இயற்கைத் தன்மையோடு சம்பந்தப்பட்டவரல்ல. அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர். அவர் தெய்வீகமானவர். அவர் கடவுளாகவும் இருக்கிறார். மறுபிறப்பு ஏற்படுவதற்கு அவரே காரணகர்த்தாவாக இருக்கிறார்.

ஆகவே, நிக்கொதேமுவிடம் இயேசு சொல்லுகிறார், என்னிலுள்ள தெய்வீகத்தை உணர்ந்து கொள்வது மாத்திரம் மறுபிறப்பல்ல, உனக்குள் ஏற்பட்டிருக்கிற தெய்வீக மாற்றத்தை நீ அனுபவிப்பதே மறுபிறப்பாகும் என்கிறார். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். இயற்கையின் விதிகளின்பிரகாரமாக அல்ல, தெய்வீக வழிமுறையின்படியாக மறுபடியும் பிறத்தல் வேண்டும். கடவுளுடைய ஆவியானவர் உன் மீது வந்து, உனக்குள் புதிய ஜீவனைத் தோற்றுவிக்க வேண்டும்.

அடுத்த தியானத்திலே நாம் 5ஆம் வசனத்தை எடுத்து ஆராய்வோம்: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”. இவ்விடத்திலே தண்ணீரும் ஆவியும் எதனைக் குறிக்கிறது? மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்று அறிந்து கொள்வதற்கு அது எவ்விதத்தில் நமக்கு உதவியாக இருக்கும்?

இயேசுவே ஜீவன்

இன்றைக்கு, இத்தியானத்தை முடிக்கையில் நான் மிகவும் முக்கியமானதொரு காரியத்தைக் கூறி முடிக்க விரும்புகிறேன். பரிசுத்தாவியின் மூலமாக மறுபடியும் பிறத்தலுக்கும், இயேசுவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக நித்தியஜீவனைப் பெற்றுக் கொள்ளுதலுக்கும் உள்ள சம்பந்தத்தைக் காண்பிக்க விரும்புகிறேன். நாம் இதுவரைக்கும் பார்த்தது, பரிசுத்த ஆவியானவரின் தெய்வீகமான கிரியையினால் மறுபிறப்பில் என்ன நிகழ்ந்தது என்பதை. அதுவரைக்கும் இருந்திராத ஆவிக்குரிய ஜீவன் அப்போது அவனுக்குள் ஏற்படுகிறது என்பதைப் பார்த்தோம். இயேசுக்கிறிஸ்து அதை மீண்டுமாக யோவா 6:63ல் கூறுகிறார்: “ஆவியே உயிர்ப்பிக்கிறது. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது”

யோவான் சுவிசேஷம் இன்னுமொரு காரியத்தையும் தெளிவுபடுத்துகிறது. அதாவது, பரிசுத்தஆவியானவர் கொடுக்கின்ற ஜீவன் இயேசுக்கிறிஸ்துவே. வேறுவிதமாக சொல்வதானால், பரிசுத்தஆவியானவர் கொடுக்கிற ஆவிக்குரிய ஜீவனை, இயேசுக்கிறிஸ்துவோடு சம்பந்தப்படுத்தி மாத்திரமே கொடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துவோடு நாம் இணையும்போது மாத்திரமே தெய்வீகமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஆவிக்குரிய உயிரை பெற்றுக் கொண்டதை அனுபவிக்கிறோம். இயேசு, யோவா 14:6ல் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்கிறார்.  மேலும் யோவா 6:35லும் “ஜீவ அப்பம் நானே” என்கிறார். யோவா 20:31ல் யோவான் அப்போஸ்தலன், “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” என்கிறார்.

இயேசு இல்லாமல் ஜீவன் இல்லை

இயேசுவோடு தொடர்பும், அவர் மேல் விசுவாசமும் இல்லையென்றால் ஒருவனுக்கு ஆவிக்குரிய உயிரும் இல்லை, நித்திய ஜீவனும் இல்லை. இயேசுவின் மேலுள்ள விசுவாசத்திற்கும், மறுபிறப்புக்கும் உள்ள சம்பந்தத்தைக் குறித்து சொல்லுவதற்கு நமக்கு நிறைய காரியங்கள் இருக்கிறது. இப்போதைக்கு நாம் கீழ்கண்டவாறு கூறுவோம்: மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவோடு உயிருள்ளவர்களாக இணைக்கிறார். கிறிஸ்துவே ஜீவன். கிறிஸ்துவே உயிர் தருகிற திராட்சைச் செடியாக இருக்கிறார். நாம் அதன் கிளைகள்(யோவா 1:1). மறுபிறப்பின்போது நம்மில் புதிதான ஆவிக்குரிய உயிர் தெய்வீகத்தினால் உருவாக்கப்படுகிறது. அது இயேசுக்கிறிஸ்துவிடம் ஏற்படுத்துகிற இணைப்பினால் சிருஷ்டிக்கப்படுகிறது. வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற இயேசுக்கிறிஸ்துவிடம் பரிசுத்தஆவியானவர் நம்மை இணைக்கிறார். அதுதான் மறுபிறப்பில் நிகழுகிற முக்கியமான காரியமாக இருக்கிறது. நம்முடைய இருதயத்தில் இயேசுக்கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் உயிர்பெறுவதே நமது பக்கம் நடைபெறுகிற காரியமாக இருக்கிறது. இவ்விதமாகவே நாம் மறுபிறப்பை உணருகிறோம். ஆவிக்குரிய உயிர்பெறுதலும், இயேசுவில் விசுவாசமும் ஒரே நேரத்தில் நம்மில் செயல்பட ஆரம்பிக்கிறது. மறுபிறப்பினால் விசுவாசம் பெறுவது சாத்தியமாகிறது. ஆவிக்குரிய ஜீவனானது விசுவாசத்தை உயிர்பெறச் செய்கிறது. அந்த விசுவாசத்தின் மூலமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. ஆகவே இயேசுக்கிறிஸ்துவின் மேல் விசுவாசம் இல்லாமல் ஆவிக்குரிய உயிர்பெறுதல் என்பது கூடாத காரியம். எனவே நாம் ஒருபோதும் மறுபிறப்பையும், இயேசுவின் மேல் அடையும் விசுவாசத்தையும் பிரிக்கவே கூடாது. மறுபிறப்பில் கடவுளின் பங்காக நடைபெறும் காரியம், அவர் நம்மை இயேசுவோடு இணைக்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். மறுபிறப்பில் நமது பங்காக, நாம் அந்த இணைப்பை இயேசுக்கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் உணருகிறோம்.

மறுபிறப்பையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் ஒருபோதும் பிரிக்கக் கூடாது

யோவான் இவற்றை எப்படி இணைத்துக் கூறுகிறார் பாருங்கள்: “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”(1யோவா 5:4). தேவனால் பிறப்பது — உலகத்தை ஜெயிக்கும். நமது விசுவாசம் —  உலகத்தை ஜெயிக்கும். ஏனென்றால் நாம் தேவனால் மறுபடியும் பிறந்திருக்கிறோம் என்பதை விசுவாசத்தின் மூலமாகவே உணருகிறோம்.

1யோ 5:11-12 வசனங்களில் யோவான் கூறுவதை கவனியுங்கள்: “தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது என்பதே அந்த சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. ஆகவே யோவா 6:63ல் இயேசுக்கிறிஸ்து, “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” என்று கூறும்போதும், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று குறிப்பிடும்போதும் அவர் என்ன சொல்லுகிறாரென்றால்: மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர் நம்மை இயேசுக்கிறிஸ்துவோடு, விசுவாசத்தின் மூலமாக, தெய்வீகமாக இணைத்து நமக்கு புதிய ஆவிக்குரிய வாழ்க்கையை கொடுக்கிறார் என விளக்குகிறார். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்துவே ஜீவனாக இருக்கிறார்.

ஆகவே, யோவான் 3ஆம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து கூறின இரண்டு கருத்துக்களையும் ஒருபோதும் பிரிக்காதீர்கள்: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான்”(வச.3); “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்”(வச.36).

“Copyright 2011 John Piper.  Used by permission. www.desiringGod.org

%d bloggers like this: