மகிமை அடைந்தவர்களின் பேரானந்தம்!
(ஆகஸ்டு 13, 1871-ஆம் ஆண்டு, மெட்ரோபாலிடன் டேபர்நாகிள்-நியூயிங்டன் என்கிற இடத்திலே, கர்த்தருடைய நாளின் மாலையிலே ரெவ. சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அளித்த தியானத்தின்(3499) சாராம்சம்! இது பிப்ரவரி 17வியாழன், 1916ல் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டது)
(மொழிபெயர்ப்பு : விநோதா சுரேந்தர்)
A Sermon (3499), Delivered on Lord’s Day Evening, August 13th, 1871, by REV C H SPURGEON at the Metropolitan Tabernacle, Newington – Published on Thursday, February 17th, 1916.
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை – வெளிப் 7:16
பரலோகத்தைக் குறித்து நாம் அடிக்கடி சிந்தித்துப் பார்ப்பதில்லை. உலகவாழ்க்கையின் மிகப்பெரும் சாபம் இது. உலகவாழ்க்கையில் நம்மைக் கட்டியிருக்கின்றதான கயிறுகளை அவிழ்த்து நாம் விடுதலை பெற வேண்டுமானால், பரலோகத்தோடு நமக்கு இருக்கின்ற இணைப்பை அதிகமாக வலுப்படுத்திக் கொண்டால்தான் முடியும். வரப்போகின்ற உலகத்தைக் குறித்து நீங்கள் அதிகமாக சிந்திப்பீர்களானால், இந்த உலகத்தைக் குறித்ததான உங்கள் சிந்தனையானது குறைந்து போகும். அதைக் கற்பனை செய்து பார்ப்பதால், நாம் இவ்வுலகில் நஷ்டம் அடைந்ததாக நினைக்கிற காரியங்களிலிருந்துகூட ஆறுதல் அடைய வழியுண்டு. இவ்வுலகிலிருந்து நம்மை விட்டு பிரிந்து போனவர்களினிமித்தமாகவும் நாம் ஆறுதல் பெறமுடியும். இங்கிருந்து போனவர்களுக்கு அது நன்மையாக மாறிப் போயிற்று. அதனால் நாமும் மகிழ்ச்சியடைலாம். கிறிஸ்துவுக்குள்ளாக மரித்துப் போனவர்கள் ஒருபோதும் அழிந்து போவதில்லை என்கிற தைரியத்தைக் காட்டிலும் சிறந்த ஆறுதல் வேறு எதுவுமில்லை. அவர்கள் உயிர் துறக்கவில்லை, அதற்கு பதிலாக முழுமையான ஜீவனைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு இங்கிருக்கும் சகல துயரங்களிலிருந்தும் நீங்கி, நமது கற்பனைக்கும் எட்டாததான அளப்பரிய ஆனந்தத்தை அங்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். துயரத்தில் இருக்கிறவர்களே! முத்துக்கள் பதிக்கப்பட்ட பரலோகத்தின் வாசலை நோக்கிப் பார்த்து உங்கள் இருதயங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். தங்கள் மீட்பரின் சிங்காசனத்தண்டையில் எப்பொழுதும் சூழ்ந்திருக்கின்றவர்களைப் பார்த்து ஆறுதல் அடையுங்கள்.
பரலோகத்தைப் பற்றி அதிகமாக நினைப்பது, நமது ஜாக்கிரதை உணர்ச்சியையும் தூண்டிவிடக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை நான் அதை இழந்து போய்விடுவேனோ? அதை இழந்து போகாதபடிக்கு நான் என்ன செய்ய வேண்டும்? பரலோகம் ஒரு சாதாரண விஷயமாக இருந்தால், நான் அதை அடையாமல் போனாலும் அதனால் பெரிய இழப்பில்லை. ஆனால் அதைக் குறித்து நாம் அறிந்திருப்பது அதன் உண்மை நிலையில் பாதிகூட இல்லை. கொஞ்சம் அறிந்திருப்பதே இவ்வளவு மகிழ்ச்சிகரமாகத் தென்படுமானால், அதை அடைந்தே தீரவேண்டும் என்கிற உறுதியோடு நமது அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு தேவன்தாமே நமக்கு ஊக்கத்தை அருளிச் செய்வாராக. எகிப்திலிருந்து வந்த இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்காமல் வழியிலேயே மரித்துப் போனதுபோல நாமும் ஆகிவிடாமல் அந்தப் பரம இளைப்பாறுதலில் பிரவேசிக்கப் போவதை நிச்சயப்படுத்திக் கொள்வோமாக. இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, கடவுளுடைய ஜனங்கள் அடையப்போகிற பரமஇளைப்பாறுதலைக் குறித்து அடிக்கடி தியானிப்பதைக் காட்டிலும் அதிக நன்மை தரக்கூடிய தியானங்கள் வேறு எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். ஆகவே, உங்களுடைய சிந்தனைகளை மேல்நோக்கி, அந்த பொன்னான வீதிகளின் பக்கமாக சற்றுத் திருப்புங்கள் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வசனத்திலுள்ள (1)பரிசுத்தவான்களின் பேரானந்தத்தைக் குறித்து முதலாவதாக தியானிப்போம். (2)அந்த பாக்கியத்தை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பதைக் குறித்து அடுத்தபடியாகப் பார்ப்போம். (3)கடைசியாக, அதன் மூலமாக நாம் என்ன பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம் என்பதையும் பார்க்கலாம்.
1. பரிசுத்தவான்கள் அடைந்துள்ள பேரானந்தம்!
அவர்கள் அடைந்துள்ள பேரானந்தத்தின் முழுநிலைமையும் இங்கே நமக்கு அறிவிக்கப்படவில்லை. பிரயோஜனமற்ற சில விஷயங்களிலிருந்து அவர்கள் பெற்றுள்ள விடுதலையைக் குறித்து இந்த வசனம் நமக்கு அறிவிக்கிறது. இரண்டு மூன்று தீங்கான விஷயங்களை இவ்வசனத்தில் காண்கிறோம். முதலாவதாக நமக்குள்ளேயே இருக்கின்றதான சில அசௌகரியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை”. அதாவது இவர்கள் தங்களுக்குள்ளிருந்து புறப்படுகின்ற அசௌகரியங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக அவர்களுக்கு வெளியிலிருந்து வருகின்றதான அசௌகரியங்கள் – “வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை” – ஒரு வசனத்தில் ஆவிக்குரிய கருத்தை காண வேண்டுமென்பதற்காக, அது இயல்பாகவும் வெளிப்படையாகவும் கூறுகின்ற கருத்துக்களை விலக்கி விட்டு, வேறு அர்த்தம் கண்டுபிடிக்க நாம் சிரமப்பட வேண்டியதில்லை. ஆகவே முதலில் இதில் எளிமையாக காணப்படுகின்ற கருத்தை நாம் எடுத்துக் கொள்வோம். பரலோகத்தில் அவர்களுக்கு ஒரு மகிமையான சரீரம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பரலோகத்தில் உணவு, நீர் இவைகளுக்குத் தேவை இருக்குமா என்பதைக் குறித்து நமக்கு வசனம் கூறவில்லை. ஆகவே அதைக் குறித்து நாம் பேசப்போவதில்லை. இருந்தாலும் அவர்களுக்கு உணவுத் தேவை இருக்குமானால் அது சந்திக்கப்படும் என்பதை வசனம் நமக்கு கூறுகிறது – “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவதண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்”. எதிர்காலத்தில் என்ன தேவைகள் ஏற்பட்டாலும் அதைக் குறித்து கலக்கம் கொள்ள வேண்டிய நிலமை அவர்களுக்கு இல்லை. இங்கே, இவ்வுலகத்திலே, பசியுள்ள ஒரு மனிதன், “நான் எதை சாப்பிடுவது?” என அங்கலாய்க்க வேண்டியதாயிருக்கிறது. தாகமுள்ளவனும் “நான் என்னத்தைக் குடிப்பேன்”? எனத் தேடுகிறான். நாம் அனைவருமே, “எதை உடுத்துவது?” என கவலை கொள்கிறவர்களாயிருக்கிறோம். ஆனால் மறுஉலகத்திலோ இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இடமேயில்லை. அவர்களுக்கு வேண்டியவைகள் எல்லாம் அங்கு தாராளமாக கிடைக்கும். கடவுளுடைய ஜனங்கள்கூட இவ்வுலகில் பட்டினியை அனுபவிக்கிறார்கள். கடவுளின் ஒரே பேறான குமாரன், சகலத்திற்கும் அதிகாரியானவர்கூட, இங்கே பசியாயிருந்தார். இந்தவிதமான பாடுகளில் ஒருவன் கிறிஸ்துவோடு பங்குபெற வேண்டியவனாக இங்கு இருந்தால் அதைக் குறித்து அவன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடவுளின் மக்கள் இங்கே தாகமாயிருக்க வேண்டியதாயிருக்கிறது – அவர்களுடைய ஆண்டவரும் “தாகமாயிருக்கிறேன்” என்றாரே. அவர் அனுபவித்த பாடுகளில் எதையேனும் நீங்களும் அனுபவிக்க நேர்ந்தால், கடவுளின் ஜனமாகிய நீங்கள் அதைக் குறித்து ஆச்சரியம் கொள்ளாதீர்கள். பரலோகத்திலே அவரைப் போலவே இருக்கப் போகிற ஜனங்கள் இங்கே பூலோகத்திலேயும் தமது தலைவரைப் போலவே இருக்க வேண்டுமல்லவா? ஆனால், பரலோகத்திலோ தரித்திரம் இல்லை, வேதனையான சூழ்நிலையை உருவாக்கக்கூடிய விபத்துக்கள் இல்லை, “இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, தாகமடைவதுமில்லை”.
சரீரசம்பந்தமாக நாம் இந்தக் காரியங்களை ஆராய்ந்து பார்த்ததையும் தவிர்த்து, இதை மனது சம்பந்தமாகவும் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. நமது மனதும் ஓயாமல் பசிக்கும் தாகத்துக்கும் ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வுலகில் பலவிதமான பசிகளும் தாகங்களும் காணப்படுகின்றன. அவைகளில் சில தீமையானவை, சில தீங்கில்லாதவை. உலகில் அநேக மனிதர்கள் சொத்துக்களின் மீது தீராத பசியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். பொருளாசை உடையவனை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. “தா, தா” என்கிறதான அட்டையை ஒருபோதும் திருப்தி செய்ய முடியாது. இம்மாதிரியான பசி பரலோகத்தில் ஒரு போதும் இருக்காது, இருக்கவும் முடியாது. ஏனென்றால் அங்கு சகலமும் பரிபூரணமாக நிறைந்து காணப்படுவதால் இவ்வித தேவை எழ வாய்ப்பில்லை. தேவனுடைய சிங்காசனத்துக்கு அருகாமையில் இருந்து, அவருடைய மகிமையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இருக்கும் சந்தோஷத்தின் அளவற்ற நிலைமையில் அவர்களுக்கு வேறு எந்தவிதமான தேவைகளும் இருக்கப் போவதில்லை. தங்களுக்குத் தேவை என அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே அங்கு அவர்களுக்குப் பரிபூரணமாக கிடைத்திருக்கும். அவர்களுடைய பொக்கிஷங்களுக்குக் குறைவேயிராது. அவர்கள் விரும்புகின்ற பொக்கிஷம் எதுவும் அவர்களுக்கு மறுக்கப்படுவதில்லை. இவ்வுலகிலே பல மனிதர்கள் புகழின் மீது பசிதாகமுடையவர்களாயிருக்கிறார்கள். தாங்கள் விரும்புகின்ற புகழை அடைந்துகொள்ள அவர்கள் எவ்வளவாகப் பாடுபடுகிறார்கள்! தங்களுக்குத் தடையாக வருகின்ற யாவற்றையும் உடைத்து நொறுக்கி அதை அடைந்து கொள்ளுகிறார்கள். தங்களுடைய குறிக்கோளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்கிறார்கள். புகழை அடைவதற்காக சாகவும் துணிகிறார்கள். ஆனால் பரலோகத்தில் இந்தவிதமான பசிதாகங்களுக்கு இடமில்லை. ஒருகாலத்தில் புகழை அடைவதற்காக மிகவும் ஆசைப்பட்டவர்கள்கூட இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டபின் தங்களுடைய ஆசைகளை அற்பமானதாக எண்ணுகிறார்கள். அவர்களுடைய அற்ப ஆசைகளுக்கு பரலோகத்தில் என்ன இடமிருக்கப் போகிறது? தங்களுடைய கிரீடங்களை அவர்கள் கழற்றி, தங்களை மீட்ட இரட்சகருடைய பாதத்தில் வைத்துவிடுவார்கள். பரலோகத்தில் அவர்கள் தங்களுடைய வெற்றிக் கொடியை சுமந்து செல்வார்கள். ஆனால் அந்த வெற்றிக்கு ஆட்டுக்குட்டியானவரும், அவரது மரணமும்தான் காரணம் என்பதை அறிவித்துக் கொண்டே செல்வார்கள். ஆட்டுக்குட்டியானவருக்குக் கிடைக்கும் புகழில் அவர்களுடைய ஆத்துமா மகிழ்ந்திருக்கும். ஆட்டுக்குட்டியானவர் அடையும் கீர்த்தியினால் அவர்களுடைய ஆவியானது நித்தியத்துக்கும் மனதிருப்தியடைந்திருக்கும். புகழை வேண்டி அவர்கள் இனி ஒருபோதும் பசியோ தாகமோ அடையமாட்டார்கள். இன்னொரு வகையான பசிதாகம் அன்பை நாடி நிற்பது! அன்பு செலுத்தவும், அன்பு செலுத்தப்படவும் மனித இதயமானது எப்போதும் தாகத்துடன் இருக்கிறது. “காதல்” என்று தற்போது வழங்கி வருகிறதான அன்பைக் குறித்து நான் இங்கு குறிப்பிடவில்லை. தோழமையையும் நேசத்தையும் விரும்பி நாடுகின்றதான உணர்வைக் குறித்து சொல்லுகிறேன். யாரையாவது நாடிப் பற்றிக் கொள்வதற்கு மனித மனது எப்போதும் விரும்புகிறது. நாம் அப்படியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியாகத்தான் வாழுகிறோம். மனிதர்கள் சேர்ந்துதான் வாழவேண்டும். நாம் தனித்திருக்க முடியாது. தன்னுடைய மனதின் துயரங்களை யாராவது கேட்க மாட்டார்களா என அநேகருடைய மனது தேடித் திரிகிறது. தங்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்கு கருணையுள்ள ஆள் இல்லாததால் அநேக மனிதர் புத்திசுவாதீனமற்றவர்களாகக்கூட ஆகிவிடுகிறார்கள். தங்கள் நம்பிக்கைக்குரியவர்களைத் தேடி அலைகின்ற பசிதாகமுடைய ஆத்துமாக்கள்தான் எத்தனை ஏராளம்! ஆனால் இந்தவிதமான பசியும்தாகமும் மேலோகத்தில் அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய நேசம் முழுவதும் தங்களுடைய மீட்பரை மட்டுமே நோக்கியதாக இருக்கும். பூலோகத்தில் வாழும்போது அவர் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையானது பரலோகத்திலும் தொடர்ந்து நிலைத்திருக்கும். அவரே அவர்களுடைய இருதயத்தின் ஆண்டவர், மனதை ஆளுபவர். அவரில் அவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள். அவரால் அணைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இனி ஒருபோதும் அன்பைத் தேடி அலையும் பசிதாகமுடையவர்களாகக் காணப்படமாட்டார்கள்.
அறிவை அடையும்படிக்கு பசியோடும் தாகத்தோடும் தேடி அலைகிற இளம்பிராயத்தினர் எத்தனை பேர்! பூலோகத்தின் கடந்த காலத்து சரித்திரங்களை அறிந்து கொள்வதற்காக எவ்வளவாக முயற்சிக்கிறார்கள்! தத்துவசாஸ்திரத்தை ஆராய்ந்து அதில் கரை காண முயற்சிப்பவர்கள் எவ்வளவு பேர்! அறிவு! அறிவு! அறிவு! மனித மனது அறிவை அடையும்படி வாஞ்சித்து அலைகிறது. ஆனால், மேலோகத்திலோ அவர்கள் இருக்கிறவண்ணமாகவே அறிந்து கொள்வார்கள். மேலோகத்தில் அவர்கள் எல்லாவற்றையும் அறிகின்றதான சர்வஞானத்தை அடைவார்கள் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் கடவுள் ஒருவர் மாத்திரமே சகலத்தையும் அறிந்த சர்வஞானியாக இருப்பார். ஆனால் அதன் குடிமக்களோ தாங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறவற்றை மாத்திரம் அறிந்து கொண்டு அதில் திருப்தியாக இருப்பார்கள். மிகுந்த கஷ்டப்பட்டு அறிவைத் தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் அங்கு இருக்காது. அறிவைப் பெற்றுக் கொள்ளுவதில் அங்கேயும் படிப்படியான முன்னேற்றம் இருக்கலாம். ஞானி ஒருவன் தினமும் மேலும் மேலும் ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறவனாகக் காணப்படலாம். ஆனால், மனதை வருத்தி, கசக்கிப் பிழிந்து அறிவை அடைய வேண்டியதான பசிதாகம் அங்கே இருக்காது. அவர்கள் இனி பசியடையார், இனி தாகமும் அடையார். என்ன ஆசீர்வாதமான இடம் அது! மனிதனின் அலைபாயும் மனது அங்கே ஆழ்கடலைப் போன்ற அமைதியைப் பெற்றுக் கொள்கிறது. அழிந்து போகின்ற காரியங்களுக்காக கடுமையாக உழைத்தும் திருப்தியைப் பெற்றுக் கொள்ளாத மனிதனுடைய தாகமுள்ள ஆவியானது, ஆசீர்வாதம் நிறைந்த அந்நாட்டிலே, தூதர்களின் அப்பத்தினாலே திருப்தி செய்யப்பட்டு, கர்த்தரால் வருகின்ற பரிபூரண நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும்.
இவை மாத்திரமல்ல, நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட வசனமானது, நிச்சயமாக ஆவிக்குரிய பசிதாகங்களைப் பற்றியும் குறிப்பிடுவதாக இருக்கிறது. “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்”. இந்தவிதமான பசிதாகத்தை நாம் வாஞ்சிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இந்தவிதமான பசிதாகம் யாருக்கு அதிகமதிகமாக இருக்கிறதோ அவர்கள் அதிகமான கிருபையை பெறுவார்கள் என்பதற்கு அது அடையாளமாக இருக்கிறது. பூலோகத்திலே பரிசுத்தவான்கள் ஆவிக்குரியபிரகாரமான பசியையும் தாகத்தையும் உடையவர்களாக இருப்பது மிகவும் நல்லது. ஆனால், பரலோகத்திலோ அந்த ஆவிக்குரிய பசியும் தாகமும் பரிபூரணமாக நிறைவுசெய்யப்படும். இன்னும் சிலர் இங்கே பரிசுத்தம் அடைவதில் பசிதாகத்தோடிருக்கிறார்கள். என்னிலுள்ள எல்லா தீமைகளும் நீங்கி முற்றிலுமாக பரிசுத்தம் அடைவதற்கு நான் எதைக் கொடுத்தாலும் தகும். பாவத்தில் விழப்பண்ணுகிற கண்களைக்கூட நான் பரிசுத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இழந்துவிடத் துணிகிறேன். நாவினால் பாவம் செய்வதைக் காட்டிலும் ஊமையனாக இருந்துவிடுவதில் எனக்கு சம்மதம். பாவத்தில் விழப்பண்ணுகிறதான என்னுடைய எல்லா அவயவங்களையும் சந்தோஷத்தோடு கடவுளுக்கு ஒப்புவித்துவிட ஆவலாயிருக்கிறேன். பரிசுத்தத்தின்மேல் பசிதாகமுடையவர்களாயிருப்பவர்கள் சகலத்தையும் விட்டுவிட மனதாயிருப்பார்கள். ஆனால், பரலோகத்திலோ இந்தவிதமான பசிதாகம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் தங்கள் பிதாவின் சிங்காசனத்துக்கு முன்பாக குற்றமற்றவர்களாக காணப்படுவதினால்தான். இதை நினைக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா? பரிபூரணமுள்ளவர்களாக காணப்படுவதே பரலோகத்தின் இயல்பாக இருக்கிறது. பாவத்தின் வேராகிலும், கிளையாகிலும் எதுவும் அங்கே காணப்படுவதில்லை. நம் சரீரத்திலும் ஓர் இம்மியளவு பாவம்கூட தென்படாது. கறைதிரை முதலானவை ஒன்றுமில்லாமல் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டவர்களாக அங்கு காணப்படுவோம். நமது ஆண்டவரைப் போலவே முற்றிலும் பரிசுத்தமுள்ளவர்களாக இருப்போம். இவ்வுலகத்திலே நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாக இருப்பது நன்மையான காரியம்தான். இரட்சிப்பின் நிச்சயத்தை அடைவதில் அநேகர் பசிதாகத்தோடு இருக்கிறார்கள். தாங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கையோடிருக்கும் அவர்கள் அதற்கான நிச்சயத்தைப் பெற்றுக் கொள்வதில் பசிதாகத்தோடு இருக்கிறார்கள். ஆனால், இவ்வுலகத்தைக் கடந்து அக்கரை சேர்ந்தபின் “நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா?” என்கிற பசிதாகம் அவர்களில் காணப்படாது. அங்கே தமது இரட்சகரை அவர்கள் முகமுகமாக தரிசித்திருப்பார்கள். அவரைத் தேடி அலைகிறவர்களாக இருக்க மாட்டார்கள். அவருடைய அன்பின் கடலிலே மூழ்கித் திளைத்திருப்பார்கள். இடைவிடாமல் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிற அவர்களுக்குள் சந்தேகத்தின் கேள்விகள் எழாது. பூலோகத்திலே இயேசுக்கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதற்கு விசுவாசிகள் பசிதாகத்தோடு இருக்கிறார்கள். ஒரு கனப்பொழுதாகிலும் அவர் தமது முகத்தை நமக்கு மறைத்துக் கொண்டால், “என் ஆத்துமா இராக்காலங்களில் உம்மை வாஞ்சிக்கிறது”? என கலங்கித் தவித்துப் போகிறோம். பரிசுத்தஆவியினால், தேவனுடைய அன்பை நமது உள்ளங்களில் திரும்ப அனுபவிக்காதவரைக்கும் நாம் திருப்தியடைவதில்லை. ஆனால் பரலோகத்தின் நிலமை அப்படியில்லை. அங்கே மேய்ப்பர் எப்போதும் தம் மந்தையோடே இருக்கிறார். மேலோகத்தின் ராஜா எப்போதும் தமது பிரஜைகளோடு இருக்கிறார். அவருடைய இடைவிடாத பிரசன்னத்தினால் அவரைத் தேடி அலைகிறதான பசிதாகம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுப் போகிறது. இருதயமானது முற்றிலுமாக பரிசுத்தமாக்கப்பட்டுவிட்டபடியால், உள்ளுக்குள்ளிருந்து வருகின்ற உணர்வுகள் தூய்மையாக இருக்கிறது. ஆகவே, அவைகள் விசுவாசிகளுக்கு பேரானந்தத்தை அளிப்பதாகவே இருக்கிறது.
நமக்கு வெளியிலிருந்து வரக்கூடிய தீங்குகளைக் குறித்து இப்போது சற்று சிந்திப்போம். நாம் பாலஸ்தீனா தேசத்திலே பயங்கரமான வெயிலின் உஷ்ணத்திலே வசித்துக் கொண்டிருக்கிறவர்களாக இருந்தால், “வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை” என்கிற வாக்கைக் குறித்து மிகவும் ஆனந்தப்படுகிறவர்களாக இருப்போம். இதன் உள்ளான அர்த்தம் என்னவெனில் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்கள் வெளியிலிருந்து வருகின்ற எந்தத் தீமையினாலும் பாதிப்படைய மாட்டார்கள் என்பதே. அதை அப்படியே உள்ளபடி எடுத்துக் கொள்ளுங்கள். மகிமையடைந்த பரிசுத்தவான்களை பரலோகத்திலே இருக்கின்ற எந்த காரியமும் அசௌகரியத்துக்கு ஆளாக்காது. பரிசுத்தவான்கள் முற்றிலுமாக மகிமை அடைந்திருக்கிறபடியால் எதுவும் அவர்களை பாதிக்காது என நாம் எண்ண வேண்டும். பூலோகத்திலே சூரியன் மாத்திரமல்லாது பலவிதமான கஷ்டங்களும் துயரங்களும் நம்மைத் தகிக்கிறது. பரிசுத்தவான்கள் என்னவிதமான பாடுகளையெல்லாம் இங்கு கடந்து போயிருக்கிறார்கள்! பலருக்கு சரீரத்தில் பலவிதமான உபாதைகள் இருந்திருக்கிறது. இடைவிடாத நோயினால் தொந்தரவுகள்! அநேக பரிசுத்தவான்கள் இவ்வுலகில் சிறிது காலமாவது சரீரப் பாடுகள் இல்லாமல் ஓய்ந்திருக்க முடிந்ததில்லை. தேவனுடைய பிள்ளைகளில் இன்னும் பலர் வேறுவிதமான பாடுகளோடு ஓயாமல் போராடியிருக்கிறார்கள். ஏழ்மையினால் துன்புற்றிருந்திருக்கிறார்கள். பலர் கடுமையாக பாடுபட்டு உழைக்க வேண்டியதாக இருந்தது. இருந்தாலும் அவர்களுக்கு பற்றாக் குறையான ஆகாரமும், நைந்து கிழிந்துபோன உடைகளுமே இருக்கும்படியான துன்பங்களுக்குள்ளாக கடந்துபோகும்படி தேவன் குறித்திருந்தார். குழந்தைப் பருவத்திலே ஏழ்மையை அனுபவித்தவர்களின் துயரமானது கடும் உஷ்ணமாக அவர்களைத் தகித்தது. இன்னும் சில விசுவாசிகள் தங்களுக்கு அருமையானவர்களை அடுத்தடுத்து பறிகொடுத்த துயரத்துக்குள்ளாகியிருந்தார்கள். ஓ! விதவைகளின் நிலமை எவ்வளவு துயரமானது! தகப்பனில்லாத பிள்ளைகளின் துயரம் எவ்வளவு ஆழமானது! பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரின் துக்கம் எவ்வளவு பெரிது! சிலவேளைகளில் தேவனுடைய அம்பானது அடுத்தடுத்து நம் மீது பாய்ந்து துயரத்தை ஏற்படுத்துகிறதோ என எண்ணத் தோன்றும் அளவிற்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மேலும் ஏதாவது பாக்கி இருக்கக் கூடுமோ என நினைக்கும்படியாக துன்பங்கள் தொடருகிறது. இதெல்லாம் இவ்வுலகில் நாம் சந்திக்கிற பிரச்சனைகளின் உஷ்ணத் தாக்கங்கள். சில பிள்ளைகள் நன்றிகெட்டத்தனமாக நடந்து பெற்றோரை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். இறந்து போன பிள்ளைகளினால் ஏற்படும் துயரத்தைக் காட்டிலும் பக்தியற்ற பிள்ளைகளால் ஏற்படும் துயரம்தான் பெற்றோருக்கு மிகவும் அதிகமாக இருக்கும் என நான் கருதுகிறேன். முடிந்து போன சிலுவையைக் காட்டிலும் சுமந்து கொண்டிருக்கிற சிலுவைதான் அதிக பாரமானது. பெற்றோருக்கு அவமானத்தைக் கொண்டுவரும் வகையில் வாழுகின்ற பிள்ளைகளினால் பெற்றோர் அடைகிற துயரம்தான் எவ்வளவு பெரியது! இவன் பிறந்தபோதே இறந்து போயிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும் என்று பெற்ற தாயையே எண்ண வைக்கிற விதத்தில் வாழுகின்ற பிள்ளையால் ஏற்படுகின்ற துக்கம் மகா கொடியது. இந்தவிதமான துக்கங்களையெல்லாம் நீங்கள் சீக்கரமாகக் கடந்து போய்விடுவீர்கள். “வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை”. அங்கு ஏழ்மை இல்லை, வியாதி இல்லை, இறப்பு இல்லை, நன்றிகெட்டதனம் இல்லை – இவை போன்ற தீமை எதுவும் அங்கே இல்லை. தங்கள் துயரத்திலிருந்து அவர்கள் நித்தியத்துக்கும் ஓய்ந்திருப்பார்கள்.
இன்னும் வேறுவிதமான உஷ்ணங்களையும் நாம் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது சோதனைகளின் வடிவத்தில் வருகிறது. ஓ! கடவுளுடைய ஜனங்களுக்கு சரீரத்தில் வந்த சோதனைகள் எவ்வளவாய் இருக்கிறது! தேவன் மாத்திரம் தமது மிகுந்த கிருபையினால் குறுக்கிட்டு அநேகந்தரம் அவர்களை சோதனைகளுக்கு விலக்கியிராவிட்டால் அதினால் பிடிக்கப்பட்டுப் போயிருப்பார்களே! அவர்களும் சோதிக்கப்பட்டார்கள். சிலவேளைகளில் அவர்கள் குடும்பத்தாரே அவர்களுக்கு விரோதியாக இருந்திருக்கிறார்கள். பலவிதமான சூழ்நிலைகளினால் சோதனைக்குட்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தடுமாறி விழக்கூடிய நிலமைக்குப் போயிருக்கிறார்கள். பிசாசினாலும் அவர்கள் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாத்தானின் மறைமுகமான சோதனைகளுக்குத் தப்பிப்பது கடினம். அவன் தனது பொல்லாத விஷ அம்புகளை எய்யும்போது அது விசுவாசியை பயங்கரமாகத் தாக்கும். ஓ! இவ்விதமான பயங்கரத் தக்குதல்களை சமாளித்த நம்மில் பலர், இவ்வுலகைக் கடந்து அக்கரைக்கு சென்றபின் எப்படியாக நிம்மதிப் பெருமூச்சு விடுவோம்! பூலோகத்திலே நம்மைத் தாக்கின அந்த நாயானது, நரகத்தின் அக்கினியிலே நம்மைப் பார்த்துக் குரைக்கக்கூட இயலாமல் கிடப்பதைக் கண்டு நகைப்போமல்லவா? அவனிடமிருந்து நாம் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டிருப்போம். இங்கே அவன் நம்மைப் பட்சித்துப் போட வகை தேடிக் கொண்டிருப்பதால் இங்கு நாம் கவலையோடிருக்கிறோம். ஆனால், பரலோகத்திலோ அவனால் நம்மைப் பட்சிக்க முடியாது. ஆகவே நாம் கவலையற்றிருப்போம். சோதனையாகிய “வெயிலாகிலும் உஷ்ணமாகிலும்” அங்கு நம் மேல் படுவதில்லை. சோதனைகளை அனுபவித்து வந்த ஜனங்கள் அங்கு மிகவும் சந்தோஷத்தோடு இருப்பார்கள்.
உபத்திரவங்களாகிய உஷ்ணமானது அநேக பரிசுத்தவான்களைத் தகித்து வந்திருக்கிறது. கடவுளுடைய ஜனங்கள் இந்தவிதமான சோதனைக்குள்ளும் உட்படுத்தப்படுகிறார்கள். அநேக பாடுகளின் வழியாக நடந்து வந்து அவர்கள் பரலோகராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தவான்களின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறவர்கள் பரலோகத்தில் இல்லை. குற்றஞ்சுமத்துகிறவர்கள் இல்லை. திரும்பவும் துன்பப்படும்படியாக அவர்கள் அங்கு உபத்திரவங்களை சந்திப்பதில்லை. எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியதான உஷ்ணமும் அவர்களை அங்கு தகிப்பதில்லை. இவ்வுலகிலேகூட நாம் கவலைப்பட வேண்டியது அவசியமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், கடவுளுடைய ஜனங்களில் அநேகர் பலவிதமான கவலைகளுக்குள்ளாகி அதனால் பாதிப்படைந்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று இக்கூட்டத்தில் அமர்ந்து, “பரலோகத்தில் இருப்பது எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்!” எனப் பாடினவர்களில் சிலபேரின் எண்ணமெல்லாம் தங்களுடைய வியாபாரத்தைக் குறித்தும், வீட்டைக் குறித்தும் கவலையோடிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கே நாங்கள் பரலோகத்தைக் குறித்துப் பிரசங்கித்து உங்கள் கவனத்தை மேல்நோக்கித் திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில்கூட. சில குடும்பப் பெண்களின் கவனமானது வீட்டுக் காரியங்களில் செய்ய மறந்தவைகளைக் குறித்தோ அல்லது சாவியை எங்கே வைத்தோம் என்பதைக் குறித்தோ அலைபாய்ந்து கொண்டிருக்கலாம். கவலைப்படுவதற்கு நாம் பல காரணங்களைக் காட்டிக் கொண்டு புதிது புதிதான கவலைகளை தொடர்ந்து கண்டுபிடிக்கிறவர்களாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் நாம் ஒரு வசனத்தை மறந்துவிடுகிறோம் -“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்து விடுங்கள்”. மோட்சத்திலோ கவலைக்கே இடமில்லை. “இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, இனித் தாகமடைவதுமில்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை” ஓ! மனிதர்களே, அங்கு கடலில் செல்லுகிற வியாபாரக் கப்பல்கள் இல்லை. அறுப்பும் விதைப்பும் இல்லை. வெயிலையோ மழையையோக் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. ஓ! பெண்ணே, அங்கு நீ கவலைப்பட்டு பராமரிக்க வேண்டிய குழந்தைகள் எதுவுமில்லை. பிள்ளையின் வியாதியினிமித்தமாக நீ அங்கலாய்க்க வேண்டிய நிலமையில்லை. ஒருபோதும் பிரிந்து போகாத ஒரு பெரிய குடும்பத்திலே நீயும் அங்கத்தினளாக இருப்பாய். கடவுளுடைய குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக நாம் அங்கே நிரந்தரமாக சேர்ந்து வாழுவோம். நித்திய காலத்துக்கும் ஆசீர்வதிக்கப்படவர்களாய் பேரானந்தத்தை அனுபவித்திருப்போம்.
பரிசுத்தவான்கள் அடையப் போகிறதான பேரானந்தத்தைக் குறித்து நாம் விரிவாகப் பார்த்தோம். இப்போது அவர்கள் எவ்வாறு அந்த நிலமைக்கு வந்தார்கள் என்பதை சற்று ஆராய்வோம்:-
2. எவ்வாறு அப்பாக்கிய நிலையை அடைந்தார்கள்?
அவர்கள் பூலோகத்திலே மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தததால் அப்பாக்கிய நிலையை அடைந்தார்கள் என்று நாம் கூறமுடியாது. ஏனென்றால் வசனம், “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்” என்று கூறுகிறது. பரலோகத்திலே ஆனந்தத்தை அனுபவிப்பவர்களில் அநேகர் பூலோகத்திலே வருத்தங்களையும் சோதனைகளையும் அனுபவித்து வந்தவர்களாகவே காணப்படுவார்கள். ஆகவே இப்போது வருத்தத்தையும் சஞ்சலத்தையும் அனுபவிக்கிற ஆத்துமாக்களே, இதை நினைத்து உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுடைய சொந்த நற்குணத்தினாலே அங்கு வந்திருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே “தோய்த்து வெளுத்தவர்கள்” என்று காண்கிறோம். அவர்களுடைய வஸ்திரங்கள் வெளுக்கப்பட வேண்டியதாக இருந்தது. எப்போதும் கறையில்லாதவர்களாக அவர்கள் வாழ்ந்திருக்கவில்லை. அவர்களிடத்தில் குற்றங்குறைகள் இருந்தன. தங்களிடம் ஏதோ தகுதி இருந்தபடியினால் அவர்கள் மோட்சத்தை அடைந்திருக்கவில்லை. கடவுளுடைய கிருபையின் ஐசுவரியத்தை அடைந்திருந்தார்கள். அவர்கள் அங்கு வந்தது எப்படி? அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மூலமாக அங்கு வந்தார்கள் என்பதே முதலாவது காரணம். வெயிலும் உஷ்ணமும் அவர்கள் மீது படாதபடிக்கு ஆட்டுக்குட்டியானவர்தாமே அவைகளைத் தம் மீது ஏற்றுக் கொண்டார். தேவனுடைய உக்கிர கோபாக்கினையாகிய தீர்ப்பானது நமது மீட்பரின் மீது செலுத்தப்பட்டது. அது அவரைத் தகித்து எரித்தது. துயரத்திலும் அங்கலாய்ப்பிலும் அவரை விழுங்கிப் போட்டது. நமது மீட்பர் அந்தப் பாடுகளை ஏற்றுக் கொண்டபடியால் நமக்கு இனி அந்தப் பாடுகள் இல்லை. பரலோகத்தைக் குறித்த நமது நம்பிக்கையானது கிறிஸ்துவின் சிலுவையில் இருக்கின்றது.
மீட்பரானவர் தமது இரத்தத்தை சிந்தினார் என்பதே அவர்கள் பரலோகத்தை அடைந்ததற்கு இரண்டாவது காரணமாயிருக்கிறது. தங்கள் வஸ்திரங்களை அதிலே தோய்த்து அவர்கள் வெளுத்தார்கள். விசுவாசமானது அவர்களை மீட்பரோடு இணைத்தது. அவர்கள் அதிலே வெளுத்திருக்காவிட்டால் அவர்கள் சுத்தமாகியிருக்க மாட்டார்கள். கடவுள் அருளிச் செய்திருப்பவைகளை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளாவிட்டால் யாருமே மோட்சத்திற்கு வரமுடியாது. நீங்கள் என்ன நிலமையில் இருக்கிறீர்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருக்கிறீர்களா? கிறிஸ்துவே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறாரா? அப்படி இல்லையென்றால் நீங்கள் மோட்சத்திற்கு வருவதில் என்ன நிச்சயமிருக்கிறது? அங்கே வருபவர்கள் மிகுந்த ஆனந்தத்தை அடைவார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது. வெயிலோ உஷ்ணமோ இவர்கள் மீது படப்போவதில்லை. ஏனென்றால் சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவர்தாமே இவர்களோடேகூட இருப்பார். கிறிஸ்துவை தரிசித்து அவர் சமூகத்தில் இருக்கிறவர்கள் துக்கமாயிருக்கக்கூடுமோ? இயேசு தம்மையே முழுவதுமாக அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பதே அவர்களுடைய ஆனந்தத்துக்குக் காரணமாயிருக்குமல்லவா?
அதையும் தவிர்த்து அவர்கள் தேவனுடைய அன்பையும் அனுபவிப்பார்கள். ஏனென்றால், “தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்” என்று அந்த அதிகாரத்தின் கடைசி வசனம் சொல்லுகிறது. இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது, இயேசுவின் பிரசன்னம் அனுபவிக்கப்படுகிறது, கடவுளின் அன்பு முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது – இவைகளே மீட்கப்பட்டவர்கள் பரலோகத்திலே பேரானந்தத்தை அனுபவிப்பதற்கான காரணங்கள். இவைகள் நமக்குப் போதிக்கும் காரியங்கள் யாவை என்பதை ஆராய்ந்து இந்த தியானத்தை முடிப்போம்:-
3. நாம் கற்றுக் கொள்கிற பாடங்கள் யாவை?
பரலோகத்தில் காணப்படுகின்ற பேரானந்தமாவது, அதை அடையும்படிக்கு நாமும் ஏங்கித் தவிக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பரலோகத்தை அடைய வாஞ்சிப்பது மிகவும் நல்ல காரியமே. ஆனால், பூலோகத்திலே நாம் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தப்பிப்பதற்காக அதை வாஞ்சிக்கக் கூடாது. அதன்காரணமாக இவ்வுலகத்தை விட்டு சீக்கிரமாகப் போய்விட வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருப்பது சோம்பேறித்தனம் – அது கடமையை செய்ய மனதில்லாமையைக் காட்டுகிறது – ஆனால் இயேசுக்கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அங்கே நானும் இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பானது, மகிமையானது. பிள்ளைகள் பள்ளி முடிந்ததும் வீடு போகவேண்டுமென வாஞ்சிப்பார்களல்லவா? சிறைபிடிக்கப்பட்டவன் விடுதலையை நாடுவானல்லவா? அந்நிய தேசத்திலே பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கிறவனுக்கு தனது சொந்த நாட்டுக்குப் போக விருப்பம் இருக்குமல்லவா? புதிதாக திருமணமான மணப்பெண் தன் கணவனைப் பிரிந்து சிலகாலம் இருக்க நேர்கையில் மீண்டுமாக அவன் முகத்தைக் காண ஆசைப்படுவாள் அல்லவா? பரலோகத்துக்கு செல்வதைக் குறித்து உங்கள் மனம் ஆசைப்படவில்லையென்றால், நீங்கள் அந்த உலகத்திற்கு உரியவர்தானா என்பது சந்தேகத்துகிடமானது. பூலோகத்தில் உள்ள விசுவாசிகளாக, நீங்கள் பரலோகத்துப் பரிசுத்தவான்களின் சந்தோஷத்தை ருசித்துப் பார்த்திருந்தால் உங்கள் முழு உள்ளத்தினாலும் கீழ்கண்டவாறு பாடுவீர்கள்:-
“நான் பெரிதும் விரும்புகின்ற,
பரிசுத்தவான்களின் இருப்பிடமான
மேலான எருசலேமை அடைய
எனது ஆவி வாஞ்சிக்கிறது!”
இப்படியாக நீங்களும் வாஞ்சிக்கலாம்.
அடுத்தபடியாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, நீங்கள் அதை அடையும் வரைக்கும் பொறுமையாக இருப்பதே. நீங்கள் போய் சேருகின்ற இடமானது மிகவும் உன்னதமான இடமாயிருக்கிறபடியால், வழியில் சந்திக்கிற கஷ்டங்களைக் குறித்து சோர்ந்து போகாதிருங்கள். நாம் பாடுகிற ஒரு பாடலை நீங்கள் அறிவீர்கள்:-
“பாதை கடினமாக இருக்கலாம். ஆனால் தூரம் அதிகமில்லை.
எனவே,
நம்பிக்கையோடும் உற்சாகமூட்டும் பாடல்களோடும் அதைக் கடப்போம்”.
குதிரையில் சவாரி செய்பவன் அதன் கடிவாளத்தை வீடு நோக்கித் திருப்பும்போது, அது எவ்வளவு உற்சாகத்துடன் செல்கிறது! ஒருவேளை நீங்கள் அதை முன்னதாகவே சற்றுப் பழக்கப்படுத்தியிருக்க வேண்டும். வீட்டுக்குச் செல்கிறோம் என்கிற உணர்வு அதற்கு வந்தவுடனேயே காதுகளை உயர்த்திக் கொண்டு அது தனது பாதையிலே மிகவும் விரைவாக செல்வதைக் காண்பீர்கள். நமக்கும் அந்தக் குதிரையைக் காட்டிலும் அதிகமான உணர்வு இருக்க வேண்டும். நமது எண்ணமானது பரலோகத்தை நோக்கித் திருப்பப்பட்டிருக்கிறது. நாம் சென்று அடையவேண்டிய துறைமுகத்தை நோக்கி நமது சுக்கான் திருப்பப்பட்டுள்ளது. அது வீடு நோக்கிய பயணம்! வழியில் காற்று அகோரமாக வீசலாம். ஆனால் சீக்கிரத்திலே நாம் அந்த மகிமையான இல்லத்திலே இருப்போம். அங்கே நமக்குக் கஷ்டம் ஏற்படுத்துகிற ஒரு சிறு அலையும் இராது. திராட்சைத் தோட்டக்காரர் அங்கே பூலோகத்தின் அருமையான கனிகளுக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே நீயும் பரலோகத்தின் பொக்கிஷங்களைப் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கலாம். நீ கண்ணீரோடே விதைப்பாய். சந்தோஷத்தோடே அறுப்பாய். அவர் உனக்கு ஒரு அறுவடையை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். விதைப்பும் அறுப்பும் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை என்று பொய்யுரையாதவராகிய தேவன் சொல்லியிருக்கிறார். இங்கே அவைகள் ஒழிந்து போகவில்லை. ஆகவே மேலோகத்திலும் அவை ஒழிவதில்லை. இங்கே பூலோகத்திலே விதைக்கிறவர்களாகிய உங்களுக்கு மேலோகத்திலே அறுப்பாகிய பலன் உண்டு.
நாம் முதலாவதாகக் கற்றுக் கொண்ட பாடம், மேலோகத்தைக் குறித்து அதிக வாஞ்சையோடு இரு என்பது. அடுத்தபடியாக, அதற்காகப் பொறுமையோடு காத்திரு. உனக்காக அவர் குறித்திருக்கும் நேரம் வரைக்கும் காத்திரு எனப் பார்த்தோம். அடுத்தபடியாக நாம் பார்க்கப் போவது, விசுவாசத்தில் அதிகமதிகமாக வளருதல். பரலோகத்தில் பிரவேசிக்கிறவர்கள் தங்களுடைய வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்ததினாலேயே அங்கு காணப்படுகிறார்கள். அவருடைய இரத்தத்தினால் மென்மேலும் பரிசுத்தம் அடைந்து, அதிகமான விசுவாசத்தையும் அடைந்து கொள்ள பாடுபடுங்கள். நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் விசுவாசம் இருக்கிறதா? இருக்குமானால் அதுவே பரலோக மேன்மையை அடைவதற்குரிய திறவுகோலாயிருக்கிறது. ஆனால் “எல்லா மனிதரிலும் விசுவாசம் காணப்படவில்லை” என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா? நீங்கள் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா? இன்னொரு வகையில் சொல்வதானால் நீங்கள் அவரில் மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? கீழ்கண்டவாறு உங்களால் பாடமுடியுமா?:-
“வெறுங்கையாய் உம்மிடம் வருகிறேன்
உமது சிலுவையை நம்பிப் பற்றிக் கொள்கிறேன்
நிர்வாணியாய், உம்மிடம் ஆடை பெற வருகிறேன்
நிர்பந்தன் நான். உமது கிருபையை நாடுகிறேன்
அழுக்கான நான், உமது நீரூற்றண்டை வருகிறேன்
கழுவியெடும் மீட்பரே, இல்லையெனில் அழிவேனே”
மோட்சத்தில் உங்களைக் கொண்டு சேர்க்கும்படியாக விசுவாசத்தில் வளருங்கள்.
நாம் எடுத்துக் கொண்ட வசனம் இன்னுமொரு பாடத்தையும் கற்றுத் தருகிறது – பூலோகத்திலே மோட்சத்தைக் காண யாராவது விரும்புகிறீர்களா? எனக் கேட்டால் பல பேர் “ஆம்” என்று சொல்லுவீர்கள். பூலோகத்திலே மோட்சத்தை எவ்விதத்தில் காண்பது என்பதை நமது வசனம் கூறுகிறது. பரலோகத்தில் உள்ளவர்கள் காண்பது போலவே நீங்களும் காண்பீர்கள். முதலாவதாக நீங்கள் இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமறக் கழுவப்படுங்கள். அது, பூலோகத்திலேயே உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. “எல்லா புத்திக்கும் மேலான செய்வ சமாதானத்தை” அது உங்களுக்குக் கொடுக்கிறது. சினிமா தியேட்டர்களிலும், நடன அரங்குகளிலும், நவநாகரீக இடங்களிலும்தான் மோட்சானந்தத்தை அனுபவிக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஒருசிலருக்கு அதுவே மகிழ்ச்சி தருகின்ற மோட்சமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கடவுளால் நேசிக்கப்படுகிறவர்களாக இருந்தால் அது உங்களுக்கு மோட்சமாக இருக்க முடியாது. உங்களுடைய வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோயுங்கள். அப்போது உங்களுக்கு இங்கேயே மோட்சம் ஆரம்பமாகும்.
அடுத்ததாக நமது வசனத்தோடு சம்பந்தப்பட்டதாக நாம் பார்ப்பது, மோட்சானந்தத்தை அனுபவிக்கிறவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை சேவிக்கிறார்கள். நீங்கள் பூலோகத்திலேயே மோட்சத்தை அனுபவிக்க வேண்டுமானால் இரவும் பகலும் அவருக்கு சேவை செய்யுங்கள். முதலாவது உங்களுடைய வஸ்திரங்களை அவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்த பின்பு, அதை அணிந்து கொண்டவர்களாக வெளியில் சென்று அவருக்காக இரவும் பகலும் தொடர்ந்து உழையுங்கள். சோம்பேறிக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமாக இருப்பதில்லை. ஆவிக்குரிய காரியங்களை ஜீரணிக்காத கிறிஸ்தவர்கள் பலர் சந்தேகமுடையவர்களாகவும், பயம் பிடித்தவர்களாகவும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இளைஞனே, ஒரு சமயத்தில் நீ பெற்றிருந்த ஒளியையும் சந்தோஷத்தையும் இழந்தவனாக பயத்தோடும் சந்தேகத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? சகோதரனே அவைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி உழைப்பாயாக. பனிப்பிரதேசங்களில், உடல் உஷ்ணம் அடைய வேண்டுமானால் நெருப்புக்கு முன்னால் அமர்ந்தால் மாத்திரம் போதாது. உடலை வருத்தி உழைக்க வேண்டும். உடற்பயிற்சி ஆரோக்கியமான உஷ்ணத்தை சரீரத்திற்கு அளிக்கிறது. பனிப்பொழிவின் மத்தியிலும் “நான் ஏதாவது செய்து கொண்டிருப்பேன்” என்று ஒருவர் கூறுகிறார். ஒரு கை சோர்ந்துவிட்டாலும் மறுகையினால் உழைக்கலாம். நான் அதிகமான உழைத்ததினால் சோர்ந்துவிட்டேன் என்று கூறாதே. கிறிஸ்துவுக்காக அதிகமாக உழைத்ததின் காரணமாக தங்களை மரணத்திற்கும்கூட ஒப்புக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. கிறிஸ்துவுக்காக கடினமாக உழையுங்கள். இரவும் பகலும் அவருக்கு சேவை செய்வது பரலோகத்தில் வாழ்கின்ற பரிசுத்தவான்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே பூலோகத்திலும் அவருக்கென ஓயாமல் பணி செய்து வாழ்பவர்களுக்கும் அது மகிழ்ச்சியையே அளிக்கும். உங்களால் செய்யக்கூடிய யாவற்றையும் செய்யுங்கள்.
கிறிஸ்துவோடு இங்கேயே ஐக்கியப்படுவது மோட்சத்தை அனுபவிக்க மற்றொரு வழியாகும். அந்த வசனங்களை மீண்டுமாகப் படித்துப் பாருங்கள் – “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார் . . . இவர்களை மேய்த்து . . . நடத்துவார்”. ஓ! நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், கிறிஸ்துவுக்கு அருகாமையில் வாழுங்கள். ஏழையின் வீட்டில் கிறிஸ்து வசித்தாரானால் அவன் ஏழையேயில்லை. கிறிஸ்து அருகாமையில் இருந்தாரானால் வியாதிப்படுக்கையும் கஷ்டமானதாக இராது. “அவன் படுக்கையை நான் மாற்றிப் போடுவேன்” என்று அவர் சொல்லியிருக்கிறாரல்லவா? இயேசுக்கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்ளுங்கள். அப்போது எந்த சூழ்நிலையாலும் பாதிப்படையாமல் இருப்பீர்கள். மழை பெய்து கொண்டிருக்கும்போதுகூட, “இதுவும் நல்ல சீதோஷணந்தான்” என்று கூறின ஒரு மேய்ப்பனைப் போல நீங்களும் இருப்பீர்கள். “இதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கூறின அந்த மேய்ப்பனிடம், “அது எப்படி?” என்ற கேள்வி கேட்கப்பட்டபொழுது, “இது என் தேவனுக்குப் பிடித்திருக்கிறது. அவருக்கு எதெல்லாம் பிடிக்குமோ அது எனக்கும் பிடிக்கும்” என பதில் கூறினான். ஒரு கிறிஸ்தவர், “நான் தேவனிடமாக மனந்திரும்பிய நாளிலிருந்து எந்த நாளும் எனக்குக் கெட்ட நாளாக இருந்ததில்லை” என்று கூறினார். “கிறிஸ்து என்னுடைய மீட்பராக இருக்கிறபடியால் எல்லா நாட்களுமே எனக்கு நல்ல நாட்கள்தான்” என்றார். உன்னுடைய ஆசைகள் யாவும் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கையில், உனக்கு எதன் மீதும் பசிதாகம் இல்லாத நிலையில், கிறிஸ்து உனக்கு அருகாமையிலே இருப்பதை உணருகையில் பரலோகத்தை நீ பூமியிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்பது உனக்குத் தெரிகிறதா? அப்படியானால் பரலோக வாழ்க்கையை இங்கேயே வாழத் தொடங்கிவிடு. “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” என்று வசனம் கூறுகிறது. உலகத்தில் நாம் வாழவேண்டிய விதமாவது, இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே பரலோகத்தை நோக்கிப் பார்த்தவர்களாக வாழ வேண்டும் என்பது அநேகருடைய கருத்து. அது நல்ல வழிதான். அதைக் காட்டிலும் சிறந்த வேறொரு வழியை நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் பரலோகத்தில் வாழ்ந்து கொண்டு, பூலோகத்தை நோக்கிப் பார்க்கிறவர்களாக வாழுங்கள். “எங்கள் குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது” என்று கூறிய அப்போஸ்தலன் அதை உணர்ந்தவராகத்தான் கூறுகிறார். பூலோகத்தில் இருந்து பரலோகத்தை நோக்கிப் பார்த்தவர்களாக வாழ்வதும் நல்லதுதான். நமது மனதை பரலோகத்திற்கு ஒப்புவித்தவர்களாக, பூலோகத்தை நோக்கிப் பார்த்து வாழ்வது அதைவிட சிறந்தது. இந்த இரகசியத்தை நாம் கற்றுக் கொள்வோம். கர்த்தர் நம்மை அதில் வழிநடத்துவாராக. நமது விசுவாசம் பலமடையும்போது, அன்பு அதிகரிக்கும்போது, நம்பிக்கை பிரகாசமடையும்போது, நாமும் வாட்ஸ் என்கிற கவிஞரோடு சேர்ந்து இப்படியாகப் பாடலாம்:-
“கிருபையைப் பெற்ற மனிதர்கள்
பூலோகத்திலேயே மகிமை ஆரம்பமாவதை உணர்ந்தார்கள்!
வானுலகத்துக் கனிகள், விசுவாசத்தினாலும் நம்பிக்கையினாலும்
பூவுலகிலேயே தோன்றுவதை கண்டுகொண்டார்கள்
இந்த மகிமையில் பங்குபெறும் சிலாக்கியத்தை கர்த்தர் உங்களுக்கு அருளியிருக்கிறார். இயேசுக்கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படியாக அந்தப் பேரானந்தத்தின் வாசல் எப்போதும் உங்களுக்குத் திறந்திருப்பதாக – ஆமேன்.