Skip to content

கலியாணவிருந்துக்கு அழைத்த உவமை

(பிப்ரவரி 12, 1871ஆம் ஆண்டு, மெட்ரோபாலிடன் டேபர்நாகிள் சபையில், கர்த்தருடைய நாளில் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அளித்த தியானத்தின்(0975)  சாராம்சம்)

Translation into Tamil by Vinotha Surendar

The Parable of the Wedding FeastSermon (No. 975) delivered on February 12th, 1871 by C. H. SPURGEON, at the Metropolitan Tabernacle, Newington

“பரலோகராஜ்ஜியம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான். அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து, நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும்  கொழுத்த ஜந்துக்களும் அடிக்கப்பட்டது. எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்” மத் 22:2-4

இந்த உவமையின் முழு பாகத்தையும் தியானிப்பதற்கு இப்போது இயலாது. அந்த உவமையின் ஆரம்ப காட்சிகளை மாத்திரம் நாம் இப்போது தியானிப்போம். இதை தியானிப்பதற்கு முன்பாக நாம் கடவுளுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏன் தெரியுமா? அளவிடவே முடியாத அளவுக்கு ஞானமுள்ளவராகிய கடவுள், ஞானத்தில் பூஜ்ஜியமாகிய நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, நமது நிலைக்கு இறங்கி வந்து, உவமைகளின் மூலமாக நமக்கு விளங்க வைக்க முயற்சிக்கிறாரே. அதை நினைத்து நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா! அவரது ராஜ்ஜியத்தைக் குறித்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பலவித கோணங்களில் உவமைகளாக அதை நமக்கு அறிவிக்கிறார். மனிதர்களிலே அறிவுஜீவியாக இருக்கிற சிலபேர், தங்கள் கருத்துக்களை எளியவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, தங்களையே தாழ்த்தி அவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூறுவதைக் காணும்போது நாம் அவர்களின் அன்பைக் குறித்து பாராட்டுகிறோம். எல்லையில்லாத ஞானமுள்ள தேவன், அறியாமையும், மந்தபுத்தியும் கொண்டிருக்கிற நம்மிடம் வானத்திலிருந்த இறங்கி வந்து, பக்கத்தில் உட்கார்ந்து சிறுபிள்ளைகளுக்குச் சொல்லுவது போல உவமைகளாக விளக்கிச் சொல்லப்பார்ப்பதை நாம் உணர்ந்து கொண்டோமானால் அவரது அளவற்ற அன்பையும் உணர்ந்து வியந்துதான் போவோம். ஒரு கல்லூரிப் போராசிரியர் தமது மாணாக்கர்களுக்கு வகுப்பறையில் தத்துவசாஸ்திர பாடங்களை உயர்ந்த நடையில் விளக்கிவிட்டு, வீட்டுக்குச் சென்றதும் தமது குழந்தையிடம் அதன் வயதுக்கும் புரிந்து கொள்ளும் திறமைக்கும் ஏற்றவிதத்தில் அதனிடம் பேசும்போது, அதில் அவரது அன்பு விளங்குமல்லவா. எல்லையற்ற ஞானக்கடலாகிய கடவுளுக்கு முன்பாக சேராபீன்களெல்லாம் கைகட்டி பணிந்து கொண்டிருக்கையில், அதனினும் ஈனப்பிறவிகளாகிய பாவமானிடராகிய நாம் இரட்சிப்பின் வழியை விளங்கிக் கொள்ள வேண்டுமே என்கிற ஆதங்கத்தோடு அவர் உவமைகளின் மூலமாக மானிடரிடம் பேசுகையில் இதுவல்லவா அன்பு என நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். சிறு குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்வதற்காக நாம் படங்களைக் காண்பித்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்கள் இருதயத்தில் பதிய வைக்க முயற்சிக்கிறோம். அதுபோலவே, தேவனும் பலவிதமான உவமைகள், கதைகள், நிகழ்ச்சிகள், உதாரணங்களைக் கொண்டு நமது கவனத்தை ஈர்த்து, பரிசுத்தஆவியானவரின் மூலமாக நமக்குத் தெளிந்த புத்தியை அருளப் பார்க்கிறார். அவரது குரலுக்கு மலைகளெல்லாம் அதிரும். இருந்தாலும் நம்மிடம் பேசும்போது அவர் மெல்லிய குரலிலே பேசுகிறார். நாம் மரியாளைப் போன்று அவர் பாதத்தில் அமர்ந்து அவர் கூறுவதைக் கற்றுக் கொள்ள முயற்சிப்போம். கற்றுக் கொள்ளுகிறதான ஆவியை அவர் ஒவ்வொருவருக்கும் அருளுவாரானால், அதுவே அவரது மனதை அறிந்து கொள்வதற்கு முதலாவது படியாக இருக்கும். யாரெல்லாம் சிறுபிள்ளைக்கொத்த மனதோடு கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்கனவே தேவன் கற்றுத்தர ஆரம்பித்துவிட்டார் என்று அறிந்து கொள்ளலாம். ஆகவே நாமும் தேவன் இந்த உவமையின் மூலமாக கற்றுத் தருவதை சுறுசுறுப்போடு விளங்கிக் கொண்டு, கற்றுக் கொண்ட காரியங்களை நமது வாழ்க்கையின் மூலமாக காட்டுவோமாக. நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தோமானால்  ஞானத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என உணர்ந்து கொள்ளலாம். இயேசுக்கிறிஸ்துவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதே, கடவுள் கூறுவதை விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கும்

இந்த உவமையை விளங்கிக் கொள்வதற்கு நாம் குறிப்பாக ஒருசில காரியங்களின் மீது நமது கவனத்தை செலுத்துவோம். முதலாவதாக, அந்த ராஜாவைக் குறித்து சற்று சிந்திப்போம் – அவர் முக்கியமானதொரு நோக்கத்தைக் கொண்டவராக இருக்கிறார். தனது குமாரனின் கலியாணத்தில் தனது குமாரனை மிகவும் கனப்படுத்த விரும்பங் கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர் எவ்வளவு தயாளத்தோடு செயல்படுகிறார் என்பதை பார்ப்போம். அவர் ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணினார். அநேகரை அழைத்தார். குமாரனை வேறு எவ்வளவோ விதங்களில்கூட கனம் பண்ணலாம் என்றாலும், அவர் இந்த விதத்தையே தெரிந்து கொண்டார். ஏனென்றால் அதன் மூலமாக அவரது தயாளகுணம் நன்றாக பிரசித்தமாகிறது அடுத்தபடியாக, அவர் இவ்வளவு தயாளத்தோடு தயாரித்த திட்டத்தை நிறைவேறவிடாமல் செய்யப்பண்ணுகின்றதான தடங்கலையும் நாம் அதிக விசனத்தோடு ஆராய்வோம். அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வரவில்லை. இவ்வளவு ஐசுவரியமுள்ள ராஜாவின் விருந்துக்கு எந்த தடங்கலும் ஏற்பட வழியேயில்லை. விருந்துக்காக அவர் தமது செல்வத்தை கணக்கின்றி செலவிட்டிருந்தார். ஆனால் இதுவோ வித்தியாசமானதொரு தடங்கல். எளிதில் நீக்க முடியாத கடினமானதொரு தடங்கல். அழைக்கப்பட்டவர்கள் வர மனதில்லாதிருந்தார்கள். அடுத்தபடியாக, அந்த ராஜா மிகுந்த தயாள மனப்பான்மையோடு அந்த தடங்கலை நீக்குவதற்கு மாற்றுத் திட்டம் தயாரித்ததையும் நாம் ஆராய்வோம். – அவர் வேறு ஊழியர்களை அனுப்பி விருந்துக்கு வாருங்கள் என்று மீண்டுமாக அழைப்பிக்கிறார். இந்த மூன்று வசனங்களை ஆழமாக ஆராய்ந்து மேற்கூறிய காரியங்களை தெளிவாக விளங்கிக் கொண்டோமானால் அதுவே இந்த தியானத்திற்குப் போதுமானதாக இருக்கும்.

1. மிகப்பரந்த பிரதேசத்தை ஆளுகின்றதான வல்லமை பொருந்திய ஒரு ராஜா உன்னதமானதொரு திட்டம் வகுத்தார். அவர் ஒரு மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். ஏனெனில், பட்டத்து வாரிசாகிய அவரது குமாரன் தனக்கொரு துணைவியைக் கொள்ளப் போகிறார். அந்த திருமண வைபவத்தில் தனது மகனை மிகவும் அதிகமாகக் கௌரவிக்க அந்த ராஜா ஆசைப்படுகிறார். பூலோகக் காட்சியிலிருந்து இப்போது நீங்கள் பரலோகக் காட்சிக்கு உங்கள் மனதைத் திரும்புங்கள். பிதாவாகிய தேவனுக்கு உன்னதமானதொரு நோக்கம் இருக்கிறது. அது தமது குமாரனை மகிமைப்படுத்துவதே. “பிதாவைக் கனம் பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணுவதே” அவருடைய சித்தமாயிருக்கிறது(யோவா 5:22). பிதாவின் குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து, தெய்வீகத் தன்மையோடு ஏற்கனவே கனம்பொருந்தியவராகத்தான் இருக்கிறார். கடவுளின் தூதர்கள் எல்லாரும் அவரைத் தொழுது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மகிமை பரலோகத்தையே நிரப்பியிருக்கிறது. சிருஷ்டிப்பின் போது அங்கே அவரும் செயல்படுவது அவருக்குரிய மகிமையை விளங்க வைக்கிறது. பூரணமகிமை பொருந்தியவராகவே அவர் இருக்கிறார். “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது”. வெளிச்சம் உண்டாகக் கடவது என அவர் ஒரு வார்த்தை கூறியவுடனே வெளிச்சம் பாய்ந்து வந்து சகலத்தையும் நிரப்பிற்று. மலைகள் உண்டாகக் கடவது என்கிற சொல் அவர் வாயினின்று பிறந்தவுடனே வானளாவிய மலைகளும் ஏற்பட்டன. தண்ணீர்களை சிருஷ்டித்தார். அவை ஓடக்கூடிய வழிகளைக் கட்டளையிட்டார். அவற்றிற்கு ஒரு எல்லையையும் குறித்தார். ஆதியிலேயே இருந்தவரான வார்த்தையாகிய கடவுளுக்கு எந்த மகிமைக்கும் குறைவில்லை. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். அவர் எல்லாவற்றிற்கும் முந்தியே இருக்கிறவரானதால், சகலமும் அவருக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்காரணமாகவும் அவர் புகழப்படத்தக்கவராயிருக்கிறார். சகலத்தையும் தாங்குகிறதான முக்கியமானதொரு ஸ்தானத்தை அவர் வகிக்கிறவராயிருக்கிறார். பரலோகத்தின் திறவுகோலும், மரணம், பாதாளம் ஆகியவற்றின் திறவுகோல்களும் அவர் வசத்திலிருக்கிறது. அதிகாரமும் ஆட்சியுரிமையும் அவர் தோள்களின் மீது இருக்கிறது. அவருடைய நாமம் ஆச்சரியமானது. எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை உடையவராக அவர் இருக்கிறார். வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுள்ள சகல முழங்கால்களும் அந்த நாமத்துக்கு முன்பாக முடங்கும். சகலத்திற்கும் மேலான கடவுள் அவர். அவர் எப்பொழுதும் ஸ்தோத்தரிக்கப்படுகிறவர். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமான அவருக்கு அண்டசராசரங்களும் துதியை ஏறெடுத்துக் கொண்டேயிருக்கும். அவ்வளவு மகிமையைக் குமாரன் ஏற்கனவே உடையவராகத்தான் இருக்கிறார்.

ஆனாலும் இன்னொரு உறவின் அடிப்படையில், மனுக்குலத்திற்கு முன்பாக தன்னை அடையாளங்காண்பிக்க குமாரனானவர் சித்தங்கொண்டார். மனிதகுலத்தை இரட்சிக்கும் மணவாளனாக தான் ஆகின்ற பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். அவர் ஏற்கனவே சகலவிதங்களிலும் மகிமை பொருந்தியவர்தாம். இருந்தாலும், பெருந்தன்மை வாய்ந்த அவர் இருதயத்தின் நோக்கமானது, அவருக்கிருக்கின்ற இரக்கத்தை நமக்குத் தெளிவாக விளங்கப்பண்ணுகிறது. அவருடைய வல்லமையைக் காட்டிலும் அவரது இரக்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆகவேதான் அவர் மனிதசாயலைத் தரித்துக் கொண்டு, மனிதர்களின் பாவத்திற்குரிய தண்டனையை அவர்கள் அடையாதபடிக்கு, அதற்குண்டான பிராயச்சித்தத்தை தாம் ஏற்றுக் கொண்டு மனிதர்களை மீட்க சித்தங்கொண்டார். தனது குமாரன் ஒரு இரட்சகராக கனமடைய வேண்டும் என்பதை பிதா விரும்புகிறார். குமாரனாக அவர் ஏற்கனவே மிகுந்த கனமுடையவராகத்தான் இருக்கிறார். ஆனால், தனது குமாரன் ‘இரட்சகர்’ என்கிற ஸ்தானத்தில் கனமடைய வேண்டும் என்பதைப் பிதா ஆதிகாலம் முதலே திட்டமிட்டிருந்தார். அவரே இரட்சகர் என்பதை உறுதிப்படுத்துகிறதான விழாதான் இந்த விருந்து. இந்தப் புதிய உறவை கனப்படுத்துகிறதற்கான விருந்துக்குதான் பிதா அழைப்புவிடுக்கிறார். கிறிஸ்து சபையோடு கொள்கின்ற ஆவிக்குரிய உறவை கனப்படுத்தும் வகையில்தான் சுவிசேஷவிருந்து பிதாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அது ஒரு ராஜரீக விருந்தாக இருக்கிறது.

சகோதரரே, இதை நான் ஒரு முக்கியமான விருந்து என்று சொல்வதற்குக் காரணம், பிதாவின் பார்வையில் அது மிகமிக முக்கியமான விஷயமாயிருக்கிறபடியால் நமக்கும் அது முக்கியமான நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டுமல்லவா! குமாரனை மகிமைப்படுத்துவதில் நாம் அதிக சந்தோஷத்தைக் காண்பிக்க வேண்டும். உலகில் எந்த ராஜ்ஜியமாக இருந்தாலும், அங்கு நடக்கின்ற ராஜபரம்பரைத் திருமணங்களில் அதன் பிரஜைகள் அதிக ஆர்வமும் முக்கியத்துவமும் காண்பிப்பார்கள். மிகவும் மகிழ்ச்சியோடு அவற்றைக் கொண்டாடுவார்கள். இங்கு நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்ற கலியாண விருந்து ராஜாதிராஜாவுடையது. அவரது குடிமக்கள் விசேஷித்தவிதத்தில் அதைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். நமது நிமித்தமாகத்தான் இந்த விசேஷமான வைபவமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் நாம் இன்னும் அதிகமதிகமாக சந்தோஷமும், நன்றியும் உடையவர்களாக இருக்க வேண்டும் அல்லவா? இந்த மகத்துவமான ராஜாதிராஜாவின் கலியாணஐக்கியம் யாரோடு? தேவதூதர்களுடனா? இல்லை. அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அது, மனிதசந்ததியாரோடு அவர் கொள்ளப்போகிற ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. அவர் ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைக்கொடுத்தார் என வசனத்தில் காண்கிறோம். பரலோகத்தின் கர்த்தரானவர், மனிதசந்ததியை பாவத்தின் வீழ்ச்சியிலிருந்து மீட்கும்பொருட்டாக, தனது உன்னத நிலைமையிலிருந்து தாழ பூமிக்கு இறங்கி, மனிதனாக அவதரித்ததைக் குறித்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டாமா? பரலோகத்தின் தேவசேனைகள் யாவரும் அந்த சம்பவத்தைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். என்றாலும் அவர் வந்தது நமக்காக என்பதினால் நாம்தான் அவர்களிலும் அதிகமாக சந்தோஷப்பட வேண்டும் அல்லவா? தாம் தேவனுக்கு சமமாக இருந்தாலும் அதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர்களுடன் ஒன்றாயிருக்கும்படிக்கு, மனிதசாயலைத் தரித்துக் கொண்டவராக பூமியில் அவர் வந்ததே நமது மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இயேசுக்கிறிஸ்து, சபையோடு உடன்படிக்கை செய்து கொள்வதற்காகவும், தனது மணவாட்டியாகிய சபையை மீட்பதற்காக சபையுடன் ஒரே சரீரமாயிருக்கும்படியாகவும், மறுமையிலே அவரோடுகூட சிங்கானத்தில் அமரத்தக்கதாக சபையை மகிமைப்படுத்தும்பொருட்டாகவும் அவர் பூமியிலே மானுடனாக வந்து அவதரித்ததைக் குறித்து மானுடராகிய நாமல்லவா அதிகமாக பூரித்துக் களிகூற வேண்டும்! தூங்குகிறவர்களே, விழித்துப் பாருங்கள்! “என் மகிமையே விழி, வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்”(சங் 57:8 ) என ஆவியில் கூறி களிப்படையக்கூடிய சந்தர்ப்பம்  இதைக் காட்டிலும் வேறு என்ன இருக்கக்கூடும்? ராஜாவின் வீட்டு விருந்துக்கு தாங்கள் அழைக்கப்பட்டிருப்பதை நினைத்து, மகிழ்ச்சியோடும், களிகூறுதலோடும் வரவேண்டியதற்குரிய காரணங்கள் அந்த அழைக்கப்பட்டவர்களுக்கு ஏராளமாக இருக்கிறதே. அதேவிதமாக, இயேசுவின் சுவிசேஷஅழைப்புக்கு சந்தோஷத்தோடு உடன்பட்டு, துரிதமாக வரவேண்டியதற்கு நமக்கும் ஏராளமான காரணங்கள் இருக்கிறதல்லவா!

தவிரவும், நமது மீட்பராகிய இயேசுக்கிறிஸ்து எத்தகைய ராஜரீக பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தேவாதிதேவனுடைய குமாரனாகிய அவரும் தேவனாகவே இருக்கிறார். அவரைக் கனப்படுத்தும்படிக்கு நாம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோமா? ஆம், அவரைத் தவிர்த்து வேறு யார்தான் கனத்திற்குரியவராக இருக்கக்கூடும்? நம்மை சிருஷ்டித்தவரும், நம்மைப் பாதுகாப்பவருமாகிய அவரையே நாம் மகிமைப்படுத்தி, கனப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். சகல கனத்திற்கும் மரியாதைக்கும் உரியவராகிய அவரை கனப்படுத்த மறுக்கின்றவர்கள், வேண்டுமென்றேதான் அவருக்குக் கீழ்ப்படியாமலிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கர்த்தருக்கு சேவை செய்வது மோட்சானந்தமாகவல்லவா இருக்கும்! அவருடைய மகிமை வானபரியந்தம் எட்டுகிறதே. அவரே என்றென்றும் சதாகாலங்களிலும் புகழப்படத்தக்கவராயிருப்பாராக. வாருங்கள் நாம் எல்லோரும் போய் அவரைத் தொழுது கொள்ளுவோம். நாம் கடவுளின் கட்டளைகளுக்கு முழுமனதோடும் கீழ்ப்படிவோம் – அதனால் குமாரனல்லவோ கனமடைவார்.

அதையுந்தவிர்த்து, ‘இம்மானுவேல்’ என்கிற ஸ்தானத்தில் வந்த அவருடைய பணியை நினைத்துப் பாருங்கள். தேவன் நம்மோடிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு மகிமைக்குரியவர் என்பது விளங்கும். கடவுளின் ஒரே பேறான குமாரனாகிய அவருடைய புகழ் உலகமெங்கும் பரவி பிரஸ்தாபமடைய வேண்டும் என்பதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம். இப்போது, இம்மானுவேலாக நாம் அவரைக் காண்பதோ, ஒரு மனிதஅவதாரமாக, நமது சகோதரனாக, நமது எலும்பின் எலும்பும், மாம்சத்தில் மாம்சமும் கொண்டவராக. நம்மைப் போலவே சகலவிதங்களிலும் அவரும் சோதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பாவத்திலும் விழாதவராக, பாவத்தினால் கறைபடாமல் அதை மேற்கொண்ட ஒரே மனிதனாக அவரை அடையாளங்காண்பது நமக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? இரண்டாம் ஆதாமாக மனிதகுலத்திற்கே தலைவராக இருக்கின்ற அவரை மகிமைப்படுத்தாமலும் கனப்படுத்தாமலும் இருக்க முடியுமா? கடவுளின் சிங்காசனம் இருக்கின்ற ஸ்தலத்திற்கு நம்மை உயர்த்திய அவரை நாம் மகிமைப்படுத்த வேண்டுமல்லவா?

அவருடைய குணாதிசயங்களையும் நினைத்துப் பாருங்கள். அவரைப் போல யாராவது இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்களா? அவருடைய தெய்வீக குணாதிசயங்களைப் பற்றி இப்போது நான் குறிப்பிடப் போவதில்லை. அதைக் கூறினோமானால், அவரை விழுந்து நமஸ்கரிக்கக்கூடிய காரணங்கள் ஏராளமாக இருக்கும். அவருடைய மானுட அம்சத்தில் இருக்கின்ற குணாதிசயங்களையே இப்போது நினைத்துப் பாருங்கள். ஓ, எவ்வளவு மனதுருக்கம் நிறைந்தவர், எவ்வளவு இரக்கம் நிறைந்தவர், அதே சமயத்தில் பரிசுத்த வைராக்கியமும் உடையவர்; பாவிகளின் மீது எவ்வளவு அன்புடையவர், அதே சமயத்தில் சத்தியத்தின் மீதும் மிகுந்த அன்புடையவர் அவரை விரும்பாத மனிதர்கள்கூட அவரை வியந்து நோக்கினார்கள். அவரை ஏற்க விரும்பாத இருதயங்கள்கூட, அவருடைய வாழ்க்கையைக் குறித்துப் படித்து அறிந்தபின் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைக் காண்கிறோமே. ‘ஆயிரங்களுள் சிறந்தவரும், மிகவும் நேசிக்கப்படத்தக்கவருமாய்’ இருக்கிற அவரை நாம் புகழ்ந்து ஸ்தோத்தரிக்க வேண்டும். மனிதர்களில் தலைசிறந்தவரும், தூதர்களால் ஒப்பிடக்கூடாதவருமாகிய அவரைக் குறித்து புகழ வேண்டிய சந்தர்ப்பங்களில் நாம் மௌனமாயிருப்போமானால் அது அவருக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும். ராஜாவின் குமாரனாகிய அவருடைய கலியாணத்திற்கு மணவாட்டியானவள் ஆயத்தமாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்தக் கலியாணவிருந்தை நினைக்கும்போதெல்லாம் கைதட்டி ஆர்ப்பரியுங்கள்.

அவர் நிறைவேற்றி முடித்த பணிகளையும் நினைத்துப் பாருங்கள். ஒரு ராஜ்யத்தை ஆளுகின்ற இளவரசனை கனப்படுத்தும்பொழுது அவர் ஆற்றிய வீரதீரச் செயல்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து அவரைப் புகழுவார்கள். பரலோகத்தின் இளவரசனாகிய இயேசுக்கிறிஸ்து நமக்காக செய்திருக்கும் காரியங்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டுமல்லவா? அவர் நமக்காக என்ன செய்தார் என்பதைவிட, நமக்காக அவர் என்ன செய்யவில்லை என்கிற கோணத்தில் சிந்திப்போமானால், நம் அனைவருடைய பாவங்களும் அவர் தோளின் மீது ஏற்றி வைக்கப்பட்டபோது. அதை உதறித் தள்ளாமல் அவ்வளவையும் சுமந்துகொண்டு அவர் நகரத்திற்குப் புறம்பே சென்றார். அங்கு அவைகளையெல்லாம் முற்றிலுமாக ஒழித்துவிட்டார். நமது சத்துருக்கள் யாவரும் அவருக்கு விரோதமாகச் சென்றார்கள். நமது நிமித்தமாக அவை யாவற்றையும் யுத்தகளத்தில் அவர் சந்தித்து, அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டார். கடைசி சத்துருவாகிய மரணத்தையும் அவர் வென்று மேற்கொண்டார். அதனால் மிகவும் பலவீனமான மனிதன்கூட, “மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்று அவர் மூலமாகக் கேட்கக்கூடிய சிலாக்கியத்தை நமக்காக சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். அவரே மோட்சத்தின் கதாநாயகன். அண்டசராசரங்களின் ஆராவாரத் தொனிகள் முழங்க, அவர் தமது பிதாவண்டைக்குத் திரும்பச் சென்று அவரது வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். நமக்காகப் போர்புரிந்தவரும், நமக்காக வெற்றிசிறந்தவருமாகிய அவரை புகழ்ந்து ஸ்தோத்தரிக்க நமக்கு ஆவல் எழவேண்டுமல்லவா? நமது உள்ளத்திலிருந்து இடைவிடாமல் முழுபெலத்தோடும் அவரைத் துதித்து ஸ்தோத்தரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ராஜகிரீடத்தைக் கொண்டு வந்து அவர் சிரசில் வைப்போம். அவரை அறிந்திருக்கிறோம் என்று கூறிக்கொள்ளுகிற யாவர் மீதும் விழுந்த கடமையல்லவா அது? மனிதகுலம் முழுவதும் அதை உணர்ந்து அவரைத் துதிக்க வேண்டுமல்லவா? கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருக்கின்ற யாவரும் அவருடைய கலியாணவிருந்தை நினைத்து சந்தோஷங்கொண்டாட வேண்டுமல்லவா? ராஜாவின் மைந்தனுக்குத் திருமணம் என்றால் ராஜகுமாரன் எவ்வளவாக கொண்டாடப்பட வேண்டும்! அவருக்கே சகலமேன்மையும் கனமும் அளிக்கப்படுவதாக. ராஜா என்றென்றும் வாழ்வாராக. ஸ்திரீகள் தம்புரோடும் நடனத்தோடும் களிப்புடன் அவரை வரவேற்பார்களாக. இசைக்கலைஞர்கள் இனியபாடல்களினால் அவரைத் துதிப்பார்களாக. ‘ஒசன்னா, ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்’ என்று நாசியில் சுவாசமுள்ள யாவும் அவரை ஓயாமல் புகழ்ந்து ஸ்தோத்தரித்த வண்ணமாகக் காணப்படுவதாக.

2. இரண்டாவதாக தேவன் தமது உன்னதமான திட்டத்தை மிகவும் உன்னதமான முறையிலே செய்து முடித்தார். ஒரு ராஜாவின் குமாரனுடைய திருமணத்தில் அந்த மணமகன் கனமடைய வேண்டுமானால் அதை எந்தவிதத்தில் செய்தால் சரியாக இருக்கும்? நாகரீகமற்ற ராஜ்ஜியங்கள் மிகப் பெரிய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், என்ன பரிதாபம்! அதை முறையற்ற விதங்களிலே செயல்படுத்துகிறார்கள். மனிதர்களைக் கொலைசெய்து, நரபலி கொடுத்து அதில் ஆனந்தக் களிப்படைகிறார்கள். இன்றும்கூட அவ்வித காட்டுமிராண்டித்தனம் காணப்படுகின்ற பிரதேசங்கள் உண்டு. நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கட்டி வைத்து, கொலை செய்து அதில் சந்தோஷமடைகிறார்கள். கொடூர பிசாசுகள் போல செயல்பட்டு தங்கள் குமாரருக்கு மரியாதை செய்வதாக அந்த இராட்சதர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள். பரலோகத்தின் ராஜாவாகிய பரமபிதாவின் குமாரனைக் கனப்படுத்துவதற்கு ஒரு சொட்டு இரத்தம்கூடத் தேவையில்லை. அவருடைய இரக்கத்தை மறுதலிப்பவர்களை அழிப்பதால் குமாரன் கனமடைந்துவிட மாட்டார். தமது குமாரன் கனமடையவேண்டுமென்பதற்காகவே அவர் ஜனங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறர். அவருடைய இரக்கத்தின் காரணமாக குமாரன் கனமடைய வேண்டுமேயழிய, அவருடைய கோபாக்கினையினால் அல்ல. அவருடைய திருமணத்தில் இரத்தம் சம்பந்தப்படுவதாக இருக்குமானால் அது குமாரனுடைய சொந்த இரத்தமேயல்லாமல் வேறு இரத்தம் சிந்துவதால் அல்ல. மனிதகுலத்தை வேரறுப்பது அவருக்கு சந்தோஷத்தைத் தராது. ஏனென்றால் அவர் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறார். மனிதர்களின்பேரில் பிரியம் வைத்தவராக இருக்கிறார். பல ராஜ்ஜியங்களில் ராஜதிருமணம் நடக்கவிருக்கையில் ஜனங்களின் மீது புதிதாக வரிவசூலிக்கப்பட்டு பணம் சேகரிக்கப்படும். இளவரசியாக வருபவரிடமிருந்து ஏராளமாக வரதட்சணைகூட வாங்கப்படும். வசதிபடைத்த பெண்வீட்டாரும் அதை சந்தோஷத்தோடு கொடுப்பார்கள். ஆனால், பரலோகத்தின் ராஜா மனிதர் நடக்கிற பிரகாரமாக நடப்பதில்லை என்பதை இந்த உவமையிலிருந்து அறிகிறோம். தனது குமாரனுக்காக அவர் எதையுமே ஜனங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தான் அவர்களுக்கு செய்யப்போகிற காரியங்களினாலே அந்த திருமணம் சிறப்புடையதாக நடக்க வேண்டுமென அவர் செய்கிறாரேயழிய யாரிடமும் எதுவும் அவர் கேட்கவில்லை. அவர்களுக்காக அவர் பல நன்மையனவைகளை தயார் செய்து வைத்திருக்கிறார். அவர் கேட்பதெல்லாம் மனதார விருந்துக்கு வாருங்கள் என்பதுதான். சந்தோஷத்தோடு வந்து குமாரனை கனம் பண்ணுங்கள். பரிமாறும் வேலைகூட செய்ய வேண்டியதில்லை. வந்து, அவர் அளிக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைந்தவர்களாக சந்தோஷப்படுங்கள் என்பதே அவர் எதிர்பார்ப்பது.

திருமணவிருந்தின் மூலமாக தேவன் தமது குமாரனைக் கனப்படுத்துகின்றதான உன்னதமானதொரு திட்டத்தை நீங்கள் இங்கே காண்கிறீர்கள். விருந்தின் நோக்கம் என்னவென்பதை மாத்யூ ஹென்றி என்பவர் குறிப்பிடுவதை கவனியுங்கள்: “விருந்தானது சிநேகத்துக்காகவும், சந்தோஷப்படுதலுக்காகவும் செய்யப்படுகிறது. திருப்தியடைவதற்காகவும், ஐக்கியத்துக்காகவும் செய்யப்படுகின்றது”. சுவிசேஷத்திலும் அப்படித்தான் நடக்கிறது. அன்பிற்கான அழைப்பு அது. பாவியே, நீ திரும்பவும் வந்து பிதாவோடு ஒப்புரவாகும்படிக்கு அழைக்கப்படுகிறாய். அவர் உனது பாவங்களையெல்லாம் நிச்சயமாகவே மன்னிப்பேன் என வாக்குறுதி கொடுக்கிறார். உன் மீது அவர் தமது கோபத்தை காண்பிக்க மாட்டார். அவருடைய குமாரனின் மூலமாக வந்து அவரோடு ஒப்புரவாகு. அப்படி வருகின்ற பாவிக்கும் கடவுளுக்கும் இடையில் அன்பு உருவாகிறது. சந்தோஷமும், களிப்பும், மகிழ்ச்சியும் ஆத்துமாவில் ஏற்படுவதற்காக அவர் அழைப்புவிடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து, அவர் மூலமாக கடவுளிடம் வருகின்றவர்களின் உள்ளத்தில் சமாதானம் பூரணமாக நிரப்பப்படும். அந்த சமாதான நதியிலிருந்து எழும்புகின்ற மகிழ்ச்சி அலைகள் தங்கள் கைகளைக் கொட்டி ஆரவாரிக்கும்.

உன்னதமான தேவன் தமது குமாரனை மகிமைப்படுத்துகிறதான விஷயத்துக்கு தமது ஜனங்களை அழைப்பதைக் குறித்து விசனப்படத் தேவையில்லையே. அதற்காக சந்தோஷமல்லவா அடையவேண்டும்! கல்வாரி சிலுவையில் மரித்த இயேசுவை விசுவாசித்து, ஜீவனை அடைவதற்காக அவர் விடுக்கிற அழைப்பைக் குறித்து அலுத்துக்கொள்ளாமல், அதற்காக ஆவலோடும் மகிழ்ச்சியோடும் வரவேண்டும். மேலும், விருந்தானது விருந்தினரை திருப்தி செய்வதற்காகவே கொடுக்கப்படுகிறது. பசியோடும் தாகத்தோடும் இருக்கிற மனிதன், கிருபையின் ஆசீர்வாதங்களால் பூரண திருப்தியடைவான். மனிதகுலத்தின் தேவைகள் யாவையும் சுவிசேஷமானது பூர்த்தி செய்வதாயிருக்கிறது. கடவுளிடம் இரக்கம் பெற்றுக் கொண்டிருக்கிற எந்த ஆத்துமாவுக்கும் அதன் தேவைகளில் யாதொரு குறைவும் ஏற்படாது. நாம் அவரால் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம். கழுகைப் போல பலமுடையவர்களாக ஆவோம். “நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்”. இந்த ஆசீர்வாதங்கள் யாவற்றிற்கும் மேலாக மற்றுமொரு மகத்தான ஆசீர்வாதத்தை நாம் மகுடமாக சூட்டிக் கொள்ளுகிறோம். அது, நாம் பிதாவோடும் அவரது குமாரனோடும் சுவிசேஷத்தின் மூலமாக ஐக்கியப்பட ஆரம்பிப்பதாகும். கிறிஸ்துவின் மூலமாக நாம் திரித்துவக் கடவுளோடு தொடர்புகொள்கிறோம். கடவுள் நமக்கு பிதாவாக ஆகிறார், அவரது அன்பின் இருதயத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு அல்ல, நமக்கே இயேசுவானவர் தம்மை வெளிப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் வழிநடத்துதலும் நமக்கு கிடைக்கிறது. அந்த உறவு, தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது போல நெருக்கமாக இருக்கிறது. அல்லது யோவானுக்கும் இயேசுக்கிறிஸ்துவுக்கும் இருந்தது போல நெருக்கமாக ஆகிறது என்றும் கூறலாம். நாம் வானத்தின் அப்பத்தை புசிக்கிறவர்களாகவும், சுத்தமான தண்ணீரைப் பருகுகிறவர்களாகவும் திருப்தியை அடைகிறோம். பரலோகத்தின் விருந்துக்கு நாம் அழைத்துவரப்பட்டு, கர்த்தரின் இரகசியங்களெல்லாம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுளோடு உள்ள நெருங்கிய ஐக்கியத்தை உணர்ந்து கொண்ட இருதயம் அவர் முன்னிலையில் மெழுகாக உருகுகிறது. மிகுந்த இரக்கத்தையும் தயவையும் அவர் நமக்குக் காண்பிக்கின்றார். விலையேறப்பெற்றதான விருந்தையல்லவா அவர் நமக்காக தயாரித்திருக்கிறார் ஓ, பாவியே உன்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கான உயர்ந்ததொரு நிலைமைக்காக அவர் உன்னை அழைக்கிறார். நித்திய நித்தியமாக உனக்கு வேண்டியவைகளை அவர் தமது குமாரனின் மூலமாக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். எந்தவிதமான பணமோ பொருளோ கொடுக்காமல், இலவசமாகவே அவைகளைப் பெற்றுக் கொள்ளும்படியாக உன் முன்னதாக அவர் வைத்திருக்கிறார். இதற்கு நீங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள்?

விருந்து செலவு முழுவதும் அவருடையது என்பதை நான் ஏற்கனவே உங்களுக்குக் கூறினேன். மிகவும் விலையுயர்ந்ததான விருந்து அது. எருதுகளும், கொழுத்தவைகளும் அடித்து ஆயத்தமாக்கப்பட்ட விருந்து. அவைகளில் ஒன்றாகிலும் அழைக்கப்பட்டவர்களின் மந்தையிலிருந்தோ, கடைகளில் இருந்தோ பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல. சுவிசேஷத்திற்காக மிகப் பெரும் விலைக்கிரயம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த மகத்தான விசேஷத்துக்காக கிறிஸ்துவின் இருதயம் முற்றிலுமாக வார்க்கப்பட்டு, கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் கிரயமாக செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பாவியோ அதற்கு ஒரு கிரயமும் செலுத்த அவசியமில்லை – பணமோ, தகுதிகளோ, நற்குணமோ, ஆயத்தங்களோ எதையுமே அவர் பாவிகளிடம் எதிர்பார்க்கவில்லை. நீ இருக்கிறவண்ணமாகவே அவரிடம் வா. விருந்துக்கு வர உனக்கு ஒரெயரு தேவைதான் இருக்கிறது. அந்த ஒரே தேவையாகிய கலியாண வஸ்திரத்தையும் அவரே உனக்குத் தருகிறார். இலவசமாகத் தருகிறார். நீ இருக்கின்றவண்ணமாகவே வந்து, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக அழைக்கிறார். நீ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, அவரிடம் வந்து அவருடைய பரிபூரணத்திலிருந்து பெற்றுக்கொள். ஏனென்றால், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்”. கலியாணவிருந்துக்கு உங்கள் பங்காக எதையும் கொடுக்கும்படி அவர் கேட்கவில்லை. அளவற்ற இரக்கத்தினால் அவர் அளிக்கும் அந்த தெய்வீகவிருந்தில் விருந்தினராக வந்து பங்கேற்கும்படியாக அவர் அழைக்கிறார்.

விசுவாசித்துப் பெற்றுக் கொண்டவர்களுக்கு சுவிசேஷமானது எவ்வளவு மகிமையுள்ளதாகத் தென்படுகிறது! ராஜதிருமணங்களுக்கு அழைக்கப்படுவது மிகவும் விசேஷமானதாகும். பிரதமமந்திரி போன்ற பெரியமனிதர்களின் இல்லத்திருமணங்களுக்கு நம்மை அழைத்தார்களானால் அதை நாம் எவ்வளவு கௌரவத்திற்குரியதாக நினைப்போம்! நமது வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக அதை எண்ணுவோம். இந்த உவமையிலுள்ள ஜனங்களும் அப்படிப்பட்டதான ஒரு திருமணத்திற்குத்தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். ராஜகுமாரனின் திருமணம் என்பது வாழ்வில் ஒரேயரு முறைமட்டுமே வரும் நிகழ்ச்சி. தவிரவும் அதற்கு எல்லாரையுமே அழைக்க மாட்டார்கள். அதில் பங்குபெற்றவர்கள் யாவரும், ‘என்ன ஒரு நேர்த்தியான திருமணம். நானும் அதற்குச் சென்றிருந்தேன். வெகுவிமரிசையாக நடந்தேறியது’ என்று வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இவ்வளவு விமரிசையான திருமணத்தை அநேகர் தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டார்கள். நல்ல உணவுவகைகளும், பெரியமனிதர்களின் சகவாசமும், விமரிசையான நிகழ்ச்சிநிரல்களும் இதற்கு முன்னதாக அவர்கள் அனுபவித்தேயிருந்திருக்க மாட்டார்கள். சகோதரர்களே, சுவிசேஷத்தை ஏற்றுகொள்வதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு மேலானது வேறு எதுவுமில்லை. அவனுடைய விசுவாசம் இயேசுக்கிறிஸ்துவை மகிமைப்படுத்துகையில், இயேசுக்கிறிஸ்துவும் அவனை கனப்படுத்துவார். ராஜாவின் குமாரனாக இருப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இங்கு பாருங்கள், கடவுளின் குமாரனுடைய திருமணவிருந்துக்கு வருகிறவர்கள் யாவரும் கடவுளுடைய குமாரர்களாகவே ஆகிவிடுகிறார்கள். அவருடைய சகல மகிமையிலும் பங்குபெறக்கூடிய சுதந்திரவாளிகளாக கருதப்படுகிறார்கள். இப்பேர்பட்ட மகிமையான விதத்தில் தனது குமாரனுடைய திருமணவிருந்தை நடத்த பிதா தீர்மானித்திருக்கையில் மனிதர்கள் எதனால் அதை உதாசீனம் செய்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. விருந்தினர்களை சகலவிதத்திலும் கனப்படுத்தி, அன்புகாட்டும் இவ்வித அழைப்பை எதனால் ஏற்க மறுக்கிறார்கள்? ஆயத்தம் செய்யப்பட்ட விருந்தோ மிகவும் அதிகமான விலைக்கிரயமுடையது. ஆனால், விருந்தினருக்கோ அது இலவசமாக அளிக்கப்படுகிறது. விருந்தினரை அதிகமாக கௌரவிக்கக்கூடியது. இருந்தாலும் இதை ஏற்க மறுக்கும் அறிவீனத்திற்குக் காரணம் என்ன? புதுப்பிக்கப்படாத, பாவத்தில் மூழ்கியுள்ள இருதயந்தான் காரணமோ? பாவத்தினால் விலகிநிற்கின்ற இருதயந்தான் காரணமோ? மோசேயின் நியாயப்பிரமாண கற்பலகைகளுக்கு இஸ்ரவேலர் எதிர்த்து வாழ்ந்ததைக் காட்டிலும், இரக்கத்தினாலும் கிருபையினாலும் அழைக்கின்ற தேவனுக்கு ஜனங்கள் புறமுதுகு காட்டி விலகுவதைக் குறித்துதான் நான் அதிகமாக ஆச்சரியப்படுகிறேன். உன்னதமானவைகளும், நித்தியமானவைகளுமான வெகுமதிகளைப் புறக்கணித்து மனிதன் வாழுகின்ற நிலையைக் குறித்து என்னவென்று சொல்லுவது! கடவுளின் நியாயத்திற்கு எதிர்த்து நிற்பது குற்றம். ஆனால் அவருடைய இரக்கத்தையே புறக்கணிப்பதைக் குறித்து என்ன சொல்லுவது? இந்தவிதமான நன்றிகெட்டதனத்தை குறிப்பிடுவதற்கு ஒரு புதிய வார்த்தையைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் போலும். பயப்படத்தக்கவரான கடவுளை எதிர்த்து நிற்பதே மகாமுட்டாள்தனமாகும். இரக்கத்தில் ஐசுவரியவானாகிய கடவுளின் குணாதிசயத்தை அலட்சியப்படுத்திவிட்டு செல்வது அதைவிட எவ்வளவு பெரிய அறிவீனமாக இருக்கும்! தெய்வீக நன்மைகளைப் பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் அதனின்று விலகி ஓடுவது பாவத்தின் உச்சகட்ட நிலையைத்தான் காண்பிக்கிறது. இதை நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கடவுளின் குமாரனை மகிமைப்படுத்த வேண்டிய ஏவுதல் எனக்குள் ஏற்படுகிறது. இதை தியானிக்கின்ற உங்களுக்கும் அழைப்புவிடுக்கின்றேன். வாருங்கள், கலியாணவிருந்துக்கு வாருங்கள். அவருடைய கிருபைகளைப் பெற்றுக் கொண்டு அவரை மகிமைப்படுத்துங்கள். அவருடைய நீதிக்கு முன்பாக உங்களுடைய நீதியை வைப்பது அவரை மகிமைப்படுத்தாது, உங்கள் கிரியைகள் ஒன்றுக்கும் உதவாது. அவருடைய இரத்தத்துக்கு ஒப்பாக உங்கள் மனந்திரும்புதலை வைத்தீர்களானால் அதுவும் அவரை மகிமைப்படுத்தாது. பாவிகளே, உங்கள் பாவநிலையை உணர்ந்தவர்களாக அவரிடம் வாருங்கள். உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், அவர் இலவசமாகத் தருகின்ற இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவரை விசுவாசிப்பவர்களின் பாவமன்னிப்பிற்காக அவர் சிந்தின இரத்தத்தின் பலாபலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

அழைக்கப்பட்டவர்களை அழைத்துவரச் சென்ற ஊழியக்காரர்கள், அவர்கள் வர மனதில்லாதிருந்த நிலையைக் கண்டு ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போயிருந்திருப்பார்கள். ராஜா எவ்விதமாக விருந்தை தயாரித்திருந்தார் என்பதை அந்த ஊழியர்கள் பார்த்திருந்தார்கள். கொழுத்த மாடுகளையும், சுவையான பதார்த்தங்களையும், அவை தயாரிக்கப்பட்ட நேர்த்தியையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு அந்த ராஜாவையும் நன்றாகத் தெரியும். அவருடைய குமாரனையும் நன்றாக அறிவார்கள். ராஜா ஆயத்தம் பண்ணின விருந்து எவ்வளவு மகிழ்ச்சிகரமானது என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அதை அலட்சியம் பண்ணி அவரவர் தங்கள் தங்கள் அலுவல்களுக்கு சென்றபோதும், அந்த ஊழியர்கள் ஆவலோடு திரும்பத் திரும்ப அவர்களை அழைத்தார்கள். நன்மை செய்ய நினைக்கின்ற ராஜாவுக்கு எதிராக அவர்கள் ராஜதுரோகிகளாக நடந்துகொள்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார்கள். முதலில் அந்த ஊழியர்களுக்குக் கோபங்கூட வந்திருக்கும். அதன் பிற்பாடு இப்பேர்பட்ட ராஜதுரோகிகளுக்கு என்னவிதமான தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து அவர்கள் மேல் பரிதாபமும் ஏற்பட்டிருக்கும். தங்களுடனேயே வசிக்கின்றவர்களாகிய அந்த மற்ற பிரஜைகள், தங்களுடைய முட்டாள்தனத்தினாலே நல்லதொரு வாய்ப்பை தவறவிடுகிறார்களே என்று அந்த ராஜாவின் ஊழியர்கள் மிகவும் வருத்தமும் அடைந்திருப்பார்கள். நானும்கூட என் ஆத்துமத்திலே இவ்விதமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகிறேன். ஓ, தேவனே, நீர் அருமையாக இந்த சுவிசேஷத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். இங்குள்ள யாரும் அதை அலட்சியம் பண்ணாதிருப்பார்களாக. அதன் காரணமாக உமது குமாரனையும் உம்மையும் அவமரியாதைக்குட்படுத்திவிடுவார்களே. சபையின் மணவாளனாகிய உமது குமாரனை நீர் மகிமைப்படுத்துகின்ற திட்டத்தில் இவர்கள் யாவரும் களிகூருவார்களாக. அவர்கள் மனப்பூர்வமாக வந்து, நீர் ஏற்படுத்தியிருக்கின்ற கலியாணவிருந்தில் பங்கெடுத்து உம்மையும் குமாரனையும் மகிமைப்படுத்துவார்களாக.

3. தியானத்தின் அடுத்தபகுதிக்கு நாம் செல்லுவோம். இது அந்த சந்தோஷமான கலியாணவிருந்துக்கு சற்று நேரம் தடையை ஏற்படுத்தியதான காரியம். அதை நாம் துக்கத்துடன் சற்று ஆராய்வோம்.

அந்த ராஜா மனதுக்குள் பெரிய திட்டம் போட்டு வைத்திருந்தார். “நான் மிகப் பெரியதான ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணுவேன். அதற்கு மகா திரளான ஜனங்களை அழைப்பேன். அவர்கள் வந்து என் ராஜ்ஜியத்தின் சகல நன்மைகளையும் அனுபவிக்கட்டும். அதன் மூலமாக நான் என் மகனை எவ்வளவாக நேசிக்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். வருகின்ற விருந்தினர் அனைவருக்கும் இந்த திருமணமானது, இனிமையான நல்ல எண்ணங்களை அவர்கள் வாழ்நாள் முழுவதுக்கும் தருவதாயிருக்கும்”என்று தீர்மானித்திருந்தார். இப்படி ஒரு விழா நடக்கப் போகிறதென்பதை அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஜனங்களை அழைத்துமிருந்தார். அந்த நேரம் வந்தபோது, அவர்களை அழைத்துவரும்படி தமது ஊழியக்காரரை அனுப்பினார். அந்த ஊழியக்காரர் கண்டது என்ன? அவர்கள் வர மனதில்லாதிருந்தார்கள். வரஇயலாதவர்களாயிருந்தார்கள் என வேதம் கூறவில்லை. அவர்களுக்கு வர மனதில்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சாக்குபோக்கு கூறினாலும், அவர்களுக்கு வரமனதில்லை என்பதுதான் உண்மை. ராஜாவின் உன்னதமான நோக்கத்திற்கு இங்கு ஒரு பெரிய தடை ஏற்படுகிறது. ராஜா தனது அதிகாரத்தை உபயோகித்து அவர்களை இழுத்து வந்து பந்தியில் அமர வைக்க முடியாதா? முடியும். ஆனால் அது அவருடைய உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றுவதாயிருக்காது. அடிமைகளாக யாரும் தனது ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதை அவர் விரும்பவில்லை. கட்டாயப்படுத்தி திருமணவிருந்தில் அமர வைப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி செய்வதால் ராஜாவுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது? ஒன்றுமில்லை. ராஜாங்கத்தின் பிரஜைகளுக்கு, அரண்மனையில் விருந்தினராக வந்து அமரக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ராஜா கொடுக்கிறார். அவர்கள் சந்தோஷத்தோடு வருவதே அவ்விழாவுக்கு பெருமை சேர்ப்பதாயிருக்கும். ஆனால் அவர்களுக்கோ வர மனதில்லை. ஏன்? ஏன் அவர்களுக்கு வர மனதில்லை? இதற்குரிய விடையானது இன்னொரு கேள்விக்கும் பொருத்தமானதாக இருக்கும். நீங்கள் ஏன் வந்து இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்க மாட்டோம் என்கிறீர்கள். பலபேருக்கு இந்த முழு சம்பவமுமே மிகவும் அலட்சியமானதாக இருக்கும். ராஜாவைக் குறித்தோ அவருடைய குமாரனைக் குறித்தோ யாருக்கும் அக்கறை இல்லை. அரசாங்கத் திருமணம் என்பது பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டது. நாங்களோ சாதாரண மக்கள். வயலுக்குப் போகிறோம். விவசாயம் செய்கிறோம். வேலியடைக்கிறோம். வியாபாரிகளாக இருந்தால் கொடுக்கல் வாங்கல் செய்து ரசீது  கொடுக்கிறோம். அரண்மனையைப் பற்றியோ, ராஜா, அவர் மைந்தன், அவர் மணவாட்டி, திருமணம், விருந்து – இதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன என்று அவர்கள் நினைப்பது போல இருக்கிறது. திருமணவிருந்து ஒரு நல்ல காரியந்தான், ஆனால் அதற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை எனக் கூறுவது போல இருக்கிறது அவர்களின் போக்கு. நம்மில் அநேகரும் இப்போதும் இதே விதமான சிந்தை கொண்டவர்களாகத்தான் இருக்கிறோம். எவ்வளவு வேலை எனக்கு இருக்கிறது. இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க என்னால் முடியுமா எனக் கூறுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். எங்கள் அலுவல்களை கவனிக்கவே நேரம் போதவில்லை. மதசம்பந்தமான காரியங்களுக்கு எந்த நேரத்தை செலவிடுவது என நினைப்பவர்கள் ஏராளம். இத்தகைய அறிவீனத்துக்கு கர்த்தர் இரங்குவாராக. இதுதான் சுவிசேஷம் சந்திக்கின்ற மிகப்பெரிய தடை. தமது குமாரனை கனம்பண்ணுகிறதான உன்னதமானதொரு திட்டத்தை கடவுள் வகுத்திருக்கிறார். ஆனால் மனிதனின் மனதோ அதை உணர்ந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதுதான் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை துரோகிகள். அதனால்தான் அவர்கள் விருந்துக்கு வர மனதில்லாதவர்களாக இருந்தார்கள். ராஜாவின் சந்தோஷத்தில் அவர்களுக்கு விருப்பமில்லை. மற்றவர்கள் ராஜாவைப் புகழந்து மகிமைப்படுத்துவதை கேட்கவும் அவர்களுக்கு விருப்பமில்லை. விருந்துக்கு வராமல் இருப்பதன் மூலமாக அவர்கள் ராஜாவை அவமானப்படுத்துகிறார்கள். ராஜாவாக இருந்தால் என்ன? அவர் குமாரனாக இருந்தால் எங்களுக்கென்ன? என்கிற மனப்பான்மை அவர்கள் செயலிலே தெரிகிறது. ராஜாவின் அழைப்பை நிராகரிப்பதின் மூலமாகத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். “அவர் ராஜாவாக இருப்பதாலோ, அல்லது அவருடைய குமாரன் என்பதாலோ, நாங்கள் என்ன செய்துவிட முடியும்? அவரைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் முக்கியஸ்தர்கள்தான் விழாவினை சிறப்பிப்பார்கள். விருந்து நன்றாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆசையாகத்தானிருக்கும். ஆனால், எங்களுடைய ஆர்வத்தை அடக்கிக் கொள்வதின் மூலமாக நாங்கள் எங்கள் சுயகௌரவத்தை காப்பாற்றிக் கொள்வோம். நாங்கள் அதற்கு எதிர்த்து நின்று அவ்விருந்துக்குப் போகாமலிருப்போம் எனத் தீர்மானம் பண்ணிக் கொள்கிறோம்” என்பதே அவர்களுடைய மனநிலையாக இருக்கிறது. இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்காத நீங்களும், அவிசுவாசத்தினால் உங்களை சிருஷ்டித்தவருக்கே விரோதமாக இப்படிப்பட்ட எண்ணமுடையவர்களாகத்தான் இருக்கிறீர்கள். அண்டசராசரங்களையும் ஆட்சிசெய்கின்ற உன்னதமானவருக்கு விரோதமாக செயல்படுகின்ற துரோகிகளாக இருக்கிறீர்கள். பணிந்து வழிபட வேண்டிய அவருக்கு விரோதமாக கலக மனப்பான்மை கொண்டிருக்கிறீர்கள். “மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்” ஆனால், நீங்களோ அறிவில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கிறீர்கள். பரலோகத்தின் தேவனை அறியாமல் நடந்து கொள்ளுகிறீர்கள்.

அவரிடம் வர மறுப்பது ராஜாவையும் அவருடைய குமாரனையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். இயேசுவின் தெய்வீகத்தன்மையையும், அவருடைய பரிகார பலியையும் விசுவாசியாதவர்கள் அவரை மறுதலிக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள மனதில்லாமல் இருக்கிறார்கள். இயேசுவின் தெய்வீகத்தையும், பிதாவின் ஒரே பேறான குமாரன் அவர் என்பதையும் உணர்ந்து அவரை மதிக்காதவர்களைக் காட்டிலும் கடினஇருதயமுள்ள எவரும் இருக்க முடியாது. “குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள். கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்”. அவர்கள் வரமனதில்லாதிருந்தார்கள் என்பதில் அவர்களுடைய அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது. ராஜாவின் அழைப்பை லேசானகாரியமாக எண்ணிவிட்டார்கள். அவர்களின் அலட்சியபுத்தியை ஆராய்ந்து பார்த்தோமானால் அதில் ராஜதுரோகமும், குமாரனை கனப்படுத்த இஷ்டமில்லாமல் இருப்பதும் புலப்படும்.

அவர்களுள் சிலபேருக்கு அந்த விருந்தின்மீதே வெறுப்பு இருந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அவ்வளவு பெரிய ராஜாவின் விருந்து என்பது பிச்சைக்காரர்களுக்குப் போடும் சாப்பாடு போல இருக்காது என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், அது ஒன்றும் எங்களுக்குத் தேவையில்லை என்பதுபோல அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள். சுவிசேஷம் எங்களுக்கு விளங்கவில்லை எனக்கூறி எத்தனை பேர் அதை வெறுக்கிறார்கள் தெரியுமா? அப்படிக் கூறுபவர்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்களானால் அவர்கள் சுவிசேஷத்தை ஒழுங்காகப் படித்திருக்கவே மாட்டார்கள். கிருபை என்கிற சத்தியத்தை உணர்ந்திருக்கவே மாட்டார்கள். சுவிசேஷத்தை தூஷித்துக் குறை சொல்லுகிற மனிதனைக் காண்பீர்களானால், அவன் ஒன்றுமறியாத மூடனாயிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அவன் சுவிசேஷத்தை நன்றாகப் படித்து, பாரபட்சமில்லாமல் யோசிக்கக் கூடியவனாக இருந்தால், சுவிசேஷத்தை அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டாலுங்கூட, அதன் மேன்மையை எண்ணி வாயடைத்துப் போவான்.

எனது அருமை நண்பர்களே, இந்தக் கலியாணவிருந்தானது உங்களுக்கு மிகவும் அவசியமானதொன்றாகும். ஏன் தெரியுமா? அது உங்கள் கடந்த காலத்திற்கு மன்னிப்பை வழங்குகிறது, நிகழ்காலத்தில் உங்களைப் புதுப்பிக்கிறது, எதிர்காலத்தில் உங்களை மகிமைக்குள் கொண்டுசெல்லுகிறது. இதில் கடவுள் நமக்கு உதவியாயிருக்கிறார், குமாரனானவர் வழிநடத்துகிறார், பரிசுத்தஆவியானவர் நமக்குப் போதிக்கிறார். பிதாவானவரின் அன்பு நம்மை சந்தோஷப்படுத்துகிறது, குமாரனின் திருரத்தம் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது, மரித்தவர்களாயிருந்த நம்மை பரிசுத்தஆவியானவர் உயிர்ப்பிக்கிறார். சுவிசேஷம் அறிவிக்கிற நன்மைகளில் ஒரு நன்மையும் உங்களுக்குக் குறைவுபடாது. அவரது அழைப்பை ஏற்று நீங்கள் விசுவாசத்தோடு அவரிடம் வருவீர்களானால் இயேசுக்கிறிஸ்துவானவர் மகிமைப்படுவார். இங்கேதான் தடைகள் வருகிறது. மனிதர் அவரிடம் வர மனதில்லாமல் இருக்கிறார்கள். நம்மில் சிலபேர் நினைக்கலாம், ஒருவேளை சுவிசேஷத்தை இன்னும் வேறுவிதமாக சொன்னால் கேட்பார்களோ – அவர்கள் மனமாற்றம் அடையக்கூடியவிதத்தில் நம்மால் சொல்லக்கூடுமோ என்ற சிந்தனைகள் தோன்றலாம். சுவிசேஷத்தை வெளிப்படையாகவும், எளிதாகவும் கூறுவதைத் தவிர்த்து வேறு எப்படிக் கூறினாலும் எக்காலத்திலும் பலன்கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் பரிசுத்தஆவியானவரின் உறுதியான அழைப்பு மாத்திரமே ஒருவனை கிறிஸ்துவிடம் கொண்டுவரும். அதுவரைக்கும், “எங்களால் கேள்விப்பட்டவைகளை விசுவாசிப்பவன் யார்”? என்கிற வியாகுலம் ஊழியர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும். தமது எஜமானனுக்காக உண்மையான ஊழியம் செய்துவருகின்ற ஊழியக்காரருங்கூட, கற்பாறைகளில் விதைக்கிறேனோ, முளைக்காத இடங்களில் விதையைத் தெளிக்கிறேனோ என்கிற அங்கலாய்ப்போடுதான் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றுவார்கள். உலகத்தில் வந்த மாபெரும் பிரசங்கியானவர் சொல்லுகிறதைக் கவனியுங்கள்: “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை”. அந்தோ பரிதாபம்! எத்தகைய இரக்கம் அலட்சியப்படுத்தப்படு, பரலோகராஜ்ஜியமே உதாசீனப்படுத்தப்படுகிறது!

4. அடுத்தபடியாக நாம் பார்க்க வேண்டியது, தமது திட்டத்திற்கு வந்த தடையை அந்த ராஜா எவ்வாறு கையாளுகிறார் என்பதை. அதை, பெருந்தன்மையான மறுஅழைப்பு என்கிற வார்த்தைகளினாலே விவரிக்கலாம். ராஜாவின் குமாரனின் திருமணம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. அதற்காக அநேகருக்கு அழைப்பும் அனுப்பப்பட்டிருந்தது. ராஜவழக்கத்தின்பிரகாரம், விழா நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஆகவே, அழைப்பைப் பெற்றவர்கள்  அதைக் குறித்து எங்களுக்குத் தெரியாது என்று கூற வழியேயில்லை. இருந்தும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். இரண்டாம் முறையாக ராஜா தமது ஊழியரை நேரில் அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொல்லியபோதும் அதைத் துணிகரமாக நிராகரித்தார்கள். அந்த ராஜா என்ன செய்தார்? உடனடியாக ஆட்களை அனுப்பி, அவர்களை அழித்துப் போட்டாரா? இல்லை. அவர் பல கோணங்களில் அவர்கள் மறுப்புக்கு காரணம் என்னவாயிருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்தார். “ஒருவேளை, அழைக்கச் சென்ற எனது ஊழியர்களை அவர்கள் வேறு யாரோ என தவறாக எண்ணியிருப்பார்களோ? அல்லது ஒருவேளை கலியாண நாள் இதுதான் என்பதை மறந்திருப்பார்களோ? அல்லது ஊழியர்கள் சொன்னது மிகவும் சுருக்கமாக இருந்ததினால் அதன் செய்தியை விளங்கிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது ஏதாவது காரணங்களால் என்னையேகூட தற்காலிகமாக புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். மீண்டும் யோசித்துப் பார்த்தார்களானால், இவ்வளவு கடினமாகவும் நன்றிகெட்டதனமாகவும் இருந்திருக்க வேண்டியதில்லையே என்பதை ஒருவேளை உணர்ந்து கொண்டு கலியாணவிருந்துக்கு வருவதற்கு அவர்கள் பிரியப்படலாம். என்னுடைய விருந்திற்கு வராமலிருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? கலியாணத்திற்கு வந்து என் குமாரனை கௌரவிக்காதபடிக்கு என் குமாரன் அவர்களுக்கு செய்த தீமைதான் என்ன? மனிதர்களுக்குத்தான் விருந்து விழாக்கள் என்றால் பிரியமாயிற்றே. அதிலும் குமாரனை கௌரவிக்கிற அற்புதமான விருந்து இது – இதற்கு வருவதற்கு அவர்களுக்கு ஏன் மனதில்லை? நான் நடந்தவைகளை மறந்து மறுபடியுமாக முதலிலிருந்து ஆரம்பித்துப் பார்க்கிறேன்” என்கிறவிதமாக அவர் சிந்தனை செய்தார். இந்த செய்தியைக் கேட்கிறவர்களே, கடவுள் உங்களுக்கும் அநேகம் முறை இதற்கு முன்னதாக அழைப்பை அனுப்பியிருக்கிறார். நீங்களோ கேட்க மனதில்லாமல் இயேசுக்கிறிஸ்துவை நிராகரித்திருக்கிறீர்கள். உங்களுடைய இருதயக்கடினத்தையும், அலட்சியத்தையும் பொருட்படுத்தாதவராக மீண்டும் ஒருமுறை இன்றைக்கு என் மூலமாகவும் அவர் உங்களை அழைக்கிறார். குமாரனின் கலியாணவிருந்துக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறார். அவருடைய பொறுமையானது சாதாரணமானதல்ல. உங்களுக்கு நன்மை ஏற்பட வேண்டுமென்பதற்காக உங்களது பழைய அலட்சிய போக்கைப் பொருட்படுத்தாது, தொடர்ந்து உங்கள் மீது அவர் காண்பிக்கிற இரக்கம் விலைமதிக்க முடியாதது.

அந்த ராஜா இன்னொரு முறை அழைப்பை அனுப்புகிறார் – “எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள்” என்று சொல்லியனுப்பினார். இந்த முறை வேறு ஊழியக்காரர்களை அனுப்பியதை நீங்கள் கவனிக்கலாம். “அப்பொழுது வேறு ஊழியக்காரரை . . அனுப்பினான்”. ஆம் நானும் சிலவேளைகளில் நினைக்கிறேன், ஒருவேளை என்னுடைய பரமபிதா வேறு ஊழியர்களை உங்களிடம் பேசும்படிக்கு இந்த பிரசங்க மேடைக்கு அனுப்பினாரென்றால் நீங்கள் கேட்க மனதாகி, இரட்சிக்கப்படுவீர்களோ என்று. அப்படியிருக்குமானால், நான் இப்போதேகூட மரித்துவிட ஆயத்தமாயிருக்கிறேன். உங்களில் சிலருக்கு என்னுடைய பிரசங்கம் அலுப்பைத் தருவதாக இருக்கலாம். நானும் பலவிதமான மாற்றங்களைக் கொடுத்து உங்களுக்கு பிரசங்கிக்கப் பார்க்கிறேன். குரலிலும், உதாரணங்களிலும் வேறுபாடுகளை உண்டாக்கி எப்படியாவது உங்களை தேவனிடத்திற்கு வரச் செய்யமுடியுமா என முயற்சிக்கிறேன். ஒருவரையே அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பது அலுப்பைத் தருவதாக இருக்கலாம். நான் பிரசங்கிக்கும் விதம் ஒருவேளை உங்களது ஆத்துமத் தேவைகளை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அப்படியிருக்குமானால், பிதாவே உமது அடியானை ஒரு பொருட்டாக எண்ணாமல் இவர்களுக்கு வேறு ஊழியக்காரரைத் தந்தருளும் என நான் வேண்டிக் கொள்கிறேன். அதனால் சிலர் இரட்சிக்கப்படுவார்களானால் அதுவே விரும்பத்தகும் காரியமாகும். ஆனால், உங்களில் சிலருக்கோ, நான் ஏற்கனவே வேறு ஊழியக்காரனாகத்தான் இருக்கிறேன். உங்களிடம் ஏற்கனவே பிரசங்கித்திருந்தும் இரட்சிப்பின் பாதைக்கு உங்களைத் திருப்ப முடியாமற்போன மற்ற ஊழியர்களைக் காட்டிலும் நான் எவ்விதத்திலும் சிறந்தவனல்ல. இருந்தாலும் சிலருக்கு நான் இரண்டாம் முறையாக அனுப்பப்பட்டிருக்கும் ஊழியக்காரன். “இயேசுக்கிறிஸ்துவிடம் வாருங்கள், அவருடைய பரிகார பலியின் மீது நம்பிக்கை வையுங்கள், அவரை விசுவாசியுங்கள், அவரையே நோக்கிப் பார்த்திருந்து ஜீவனைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று நானும் அழைக்கின்ற இந்த அழைப்புக்கு செவிகொடுங்கள். முன்னதாக உங்களிடம் அனுப்பப்பட்ட ஊழியர்களும் இதையேதான் சொன்னார்கள். ஒருவேளை நான் அழைக்கும்விதம் சற்று வித்தியாசமானதாக இருக்கலாம். இப்போதாவது கேட்டு உணர்வடையுங்கள்.

அடுத்தபடியாகப் பாருங்கள், அந்த ராஜா சொல்லியனுப்பிய செய்தியிலும் சற்று வித்தியாசம் இருக்கிறது. முதலாவது மிகவும் சுருக்கமான செய்தியையே அவர் தமது ஊழியர் மூலமாக சொல்லியனுப்பினார். மனிதருடைய இருதயம் சரியான பக்குவத்தில் இருக்குமானால் சுருக்கமான செய்தியே போதுமானது. மனிதரின் மனப்பக்குவம் ஏற்றவிதத்தில் இருந்தால், வாருங்கள் என்கிற சொல்லே போதுமானது. அவர்களுக்கு அதிக உபசரணையான வார்த்தைகள் தேவையிருக்காது. ஆனால், அவர்களுடைய இருதயம் சரியானபிரகாரமாக இல்லாதபடியினாலே,     அதிகமான வார்த்தைகளை உபயோகித்து விவரமாக சொல்லியனுப்ப வேண்டியதாக இருந்தது. “இதோ, என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும், கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது. எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள்” என்று அவர்களுக்கு விவரமாக சொல்ல வேண்டியதாக இருந்தது. பாவிகளை கிறிஸ்துவிடம் வரவழைப்பதற்கு மிகவும் சிறந்த வழி, சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துச் சொல்லுவதே. இரட்சிப்பின் திட்டத்தை மாத்திரம் எடுத்துச் சொல்வது சிலபேரை கிறிஸ்துவிடம் வழிநடத்த போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்கு செய்யப்பட்ட ஆயத்தங்களைப் பற்றியும், அதன் மகா மேன்மையைப் பற்றியும், அது இலவசமாகவே கிடைப்பதைக் குறித்தும் விவரமாக எடுத்துக் கூறுவது சிலபேரை ஈர்க்கலாம். சிலருக்கு, “நீ இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்போது இரட்சிக்கப்படுவாய்” என்கிற ஒரே வார்த்தையே போதுமானதாக இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே பக்குவப்பட்டுள்ள அவர்களது இருதயம், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்”? என கேட்கிறதான நிலமையிலே இருக்கிறது. சிலரையோ கலியாண விருந்தின் கொழுமையான பதார்த்தங்களைக் கூறி அவர்களை கவர்ந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நாங்கள் சுவிசேஷத்தை உங்களுக்கு முழுவதுமாகத்தான் பிரசங்கிக்க வேண்டியதாக இருக்கிறது, ஆனாலும், அவருடைய கிருபையின் ஐசுவரியங்களை எங்களால் முற்றிலுமாக எடுத்துக்கூற இயலாது. பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் அவர் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் அவர் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. உங்கள் பாவங்களையும் உங்கள் சிந்தனைகளையும் விட்டுவிட்டு அவர் புறமாகத் திரும்புங்கள். அவர் உங்களை முற்றிலுமாக மன்னிப்பார். நீங்கள் கெட்டகுமாரனைப் போல மனந்திரும்பி பிதாவின் சமூகத்தைத் தேடி வந்தீர்களானால், அவர் உங்களைத் தனது அன்பின் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அன்போடு முத்தமிடுவார்.  சுவிசேஷமானது அன்பினாலாகிய நதியைப் போன்றது. அது அன்பின் பெருங்கடலாகும். அது வானளாவிய அன்பு, அண்டசராரங்களைக் காட்டிலும் பெரிதான அன்பு. சுவிசேஷம் அன்பினால் நிறைந்தது. பாவிகளின் மீது கடவுள் காண்பிக்கும் கிருபையை வார்த்தைகளால் கூறவே முடியாது. எந்த பாவமும், அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும், இரத்தக் கறை படிந்து சிவப்பானதாக இருந்தாலும், சபிக்கப்பட்டதாய் இருந்தாலும் அவரால் மன்னிக்க முடியாத பாவமே இல்லை. சிலுவையில் அறையப்பட்டவரான அவருடைய குமாரனை நீங்கள் நோக்கிப் பார்ப்பீர்களானால், உங்களுடைய சகல பாவங்களும் தேவதூஷணங்களும் உங்களுக்கு மன்னிக்கப்படும். அவரிடம் மன்னிப்பு உண்டு. இயேசுக்கிறிஸ்து மனந்திரும்புதலை அளித்து பாவமன்னிப்பைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு நீங்கள் பெற்றுக் கொள்ளப்போகிற சந்தோஷத்துக்கும் சமாதானத்துக்கும் அளவேயில்லை. நீங்கள் மோட்சானந்தத்தை பூமியேலே அநுபவிப்பீர்கள். பரலோகத்தின் சந்தோஷம் உங்களுக்குக் கிடைக்கும். மெய்யான தேவன் உங்களுக்குக் கடவுளாக இருப்பார். இயேசுக்கிறிஸ்துவின் நண்பனாவீர்கள். நித்தியமான ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

ராஜா கடைசியாக சொல்லியனுப்பிய செய்தியில் மிகவும் மென்மையான அழைப்பு தொனிப்பதை கவனியுங்கள். அவர்களுக்குக் கொஞ்சமாவது மனசாட்சியில் பெருந்தன்மை இருந்திருக்குமானால், அது அவர்களுடைய இருதயத்தை அசைத்திருக்க வேண்டும். அந்த ஊழியர்கள் என்னவிதமாக அவர்களை மீண்டுமாக அழைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் எப்படி கூறவில்லை என்பதை முதலில் சிந்தித்துப் பார்ப்போம். “உடனே வாருங்கள், இல்லையென்றால் விருந்தைத் தவறவிட்டு விடுவீர்கள் – வாருங்கள், இல்லையானால் ராஜாவுக்குக் கோபம் வந்துவிடும் – வாருங்கள், வாருங்கள், இல்லையென்றால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது” என்றெல்லாம் அவர்கள் கூறவில்லை. நான் அதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு ஒரு கருத்துத் தோன்றுகிறது. நான் தவறாக நினைப்பேனென்றால் ஆண்டவர் என்னை மன்னிப்பாராக. அந்த ஊழியர்கள் அவர்களை அழைத்தவிதம் எப்படியிருக்கிறதென்றால், அந்த ராஜாவானவர் ஏதோ பரிதாபத்துக்குரியவர் என்பது போலவும், இவர்கள் வராவிட்டால் அவருக்கு அவமானமாகிவிடும் என்பது போலவும் அந்த ஊழியர்கள் அவர்களைத் திரும்பத் திரும்ப அழைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் எப்படி சொல்லுகிறார்கள்? – “என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது.   கலியாணத்திற்கு வாருங்கள்” என்று கெஞ்சுவது போலிருக்கிறது. ஆனால் நாம் காண்பது என்ன? ஒருவரும் வரவில்லை. அந்த ராஜாவோ வாருங்கள், வாருங்கள் என அழைக்கிறவராக காணப்படுகிறார். சிலசமயங்களிலே சுவிசேஷத்தில் சில வசனங்களைக் கவனிக்கும்போது, நாம் இரட்சிக்கப்படுவதால் கடவுளுக்கு ஏதோ நன்மை ஏற்படுவதுபோல அவர் அழைப்பதைக் காண்கிறோம். நம் மீது அவருக்கு எவ்வளவு அன்பிருந்தால், மனுஷர் பேசுகிற பிரகாரமாக நமக்காக அவர் பேசுகிறார். நம்மால் அவருக்கு என்ன லாபம்? நாம் அழிந்து போனோமானால் அதனால் அவருக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? ஒரு தகப்பன், தனது பிள்ளை திரும்பவும் வீட்டிற்கு வரவேண்டும் என ஏங்குவது போல அவர் சுவிசேஷங்களில் தன்னைக் காண்பித்துக் கொள்கிறார். சர்வவல்லவராகிய அவர், தம்மோடு நாம் ஒப்புரவாக வேண்டுமென கெஞ்சிக் கொண்டு நிற்பது போலத் தன்னை வெளிப்படுத்துகிறார். நமது நிலைமைக்குத் தன்னையே அவ்வளவு வளைத்து இறங்குகிறார். ஒரு வியாபாரியைப் போல, “ஓ தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள். பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” எனக் கூவி அழைக்கிறார். இயேசுக்கிறிஸ்து எருசலேமைப் பார்த்து அழுதபோது, அவர் தனக்காகவும் அவர்களுக்காகவும் அழுதார் என்பதை கவனித்திருக்கிறீர்களா? “நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்” என அங்கலாய்க்கிறார். தனக்கு நேர்ந்துவிட்ட துன்பம் போல கடவுள் தீர்க்கதரிசியின் மூலமாகப் புலம்புகிறார்: “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப் போல வைப்பேன்?” தீர்க்கதரிசிகளின் மூலமாக உரைக்கும் பிதா, பிள்ளைகள் அடையும் நஷ்டம் ஏதோ தனக்கே வந்த நஷ்டம் போல காண்பிக்கிறார். பாவியாகிய ஒருவன் மரிப்பது அவனுக்கு மாத்திரமல்ல, தனக்கும் நஷ்டமே என்கிற ரீதியில் அவர் உணர்ச்சியைக் காட்டுவதாகத் தெரிகிறது. தேவனுடைய சுவிசேஷம் நிராகரிக்கப்படும்போது உங்களுக்கே அவர் மீது பரிதாபம் தோன்றுகிறதல்லவா? இயேசுவின் சிலுவை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதை நோக்கிப் பார்ப்பவர்கள் ஒருவரும் இல்லையா? இயேசு மரித்திருக்கிறார் – அவர் மரணத்தினால் வரும்  இரட்சிப்பு மனிதருக்கு தேவையில்லையா? ஒ, கர்த்தாவே, வேறு எதுவும் எங்களை உம்மிடம் ஈர்க்கவில்லையென்றாலும், நீர் அழைத்தும், நாங்கள் வராத காரணத்தால் நீர் கேவலப்பட்டுப் போய்விடக்கூடாது என்கிற காரணத்துக்காவது நாங்கள் உம்மிடம் வருகிறோம். உன்னதமானவரே, நாங்கள் மனமகிழ்ச்சியோடு வருகிறோம். வந்து நீர் எங்களுக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருப்பவைகளில் பங்கு பெறுகிறோம். ஏழைப் பாவிகளாக உம் முன் வந்து, நீர் தரும் இரக்கங்களைப் பெற்றுக் கொண்டவர்களாக, குமாரனை மகிமைப்படுத்துவதற்கு வருகிறோம்.

கிறிஸ்து, பாவிகளையும் அறுவெறுக்கத்தக்கவர்களையும் தன்னை கனப்படுத்துவதற்காகத் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆகவே சகோதர, சகோதரிகளே, அவரில் அன்புகூறுவதாகக் கூறுகிற நீங்களும் அவரை அதிகமாகக் கனப்படுத்துங்கள். ஏனென்றால் உலகம் ஒருபோதும் அவரை கனப்படுத்தப் போவதில்லை. அவரிடம் அழைத்து வரப்பட்டு, பந்தியில் இருக்கிறவர்களாகிய நீங்கள்  மிகுந்த மகிழ்ச்சியோடு அவரைப் பாடித் துதியுங்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்றபிறகு இன்னும் அவரிடம் வராதவர்களை நினைத்துப் பார்த்து அவர்களுக்காகத் தேவனிடம் விண்ணப்பம் செய்யுங்கள். அவர்களுக்கு தேவன் தெளிந்த புத்தியைத் தந்து, அவர்களுடைய மனதை மாற்றி, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்ய வேண்டுமென பிரார்த்தியுங்கள். இந்த செய்தியைக் கேட்டு இருதயத்தில் மென்மையாக அவருடைய கிருபையினால் தொடப்பட்டிருப்பவர்களாகிய மற்றவர்கள் அவரிடம் வந்து கலியாணவிருந்தில் பங்கெடுக்குமாறு நான் அழைக்கிறேன். அவர் கூறுகிற நற்செய்தியானது மிகவும் உன்னதமானது – விருந்து மிகவும் பிரமாதமானது. அவர் மகிமையின் ராஜா – அவர் மிகவும் நல்லவர். நம்மை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கிற மணவாளனும் மிகவும் அருமையானவர். எல்லாமே மிகவும் அருமையானவைகள் – இன்று உங்களுக்கு அனுப்பப்படுகிற அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக அவரிடம் வருவீர்களானால் அவர் உங்களையுங்கூட உன்னதமான சிருஷ்டியாக மாற்றுவார். “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்”. “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்போது இரட்சிக்கப்படுவாய்”. தமது அருமைக் குமாரனின் நிமித்தமாக தேவன்தாமே தமது ஆவியானவரை அனுப்பி, இந்த அழைப்பை பயனுள்ளதாகச் செய்வாராக. ஆமேன்

%d bloggers like this: